"நவநாயகியர் நற்றமிழ்மாலை" 6,7& 8
"நவநாயகியர் நற்றமிழ்மாலை" 6,7& 8
1&2 3,4&5
இன்று அடுத்து மூன்று நாயகியரின் தரிசனம்! அடுத்தடுத்து இடுவதன் காரணம், அனைவரும் சீக்கிரமே முழு மாலையயும் அன்னைக்கு அணிவித்து மகிழவே!
6. காத்யாயனி மாதா:மாயாவுலகினில் மக்களைக் காத்திட மகிழ்வுடன் அருளிடும் மலைமகளே
ஓயாவுலகினில் நீயே இரங்கி மகளாய்ப் பிறந்திட வந்தவளே
தாயே தனக்கு மகளாய் வந்திடத் தவம்புரிந்தவர்க்கு அருளியவளே
காத்யாயனர்க்கு மகளாய்ப் பிறந்து காட்டினில் வாழ்ந்திட்ட துர்க்கையளே!
காத்யாயனியாய் மஹிஷனை அழித்திடக் கருணைகொண்டிட்ட வனமகளே
வாளும் கமலமும் இடக்கரம் தாங்கி சிம்மத்தில் அமர்ந்திடும் சூலியளே
அபயமும் அருளும் வலக்கரம் தாங்கி மூவரும் போற்றப்போர் புரிந்தவளே!
நவநாயகியரில் ஆறாம்நாளின்று காத்யாயனியின் தாள் பணிந்தேன்! [6]
7. காலராத்ரி மாதா:
கோரபயங்கரி கரியநிறத்தினி கண்டவர்நடுங்கிடும் காளியளே
தலைவிரிகோலமாய்க் கழுதையிலேறிக் கொடியரை விரட்டிடும் சூலியளே
கண்களைப் பறித்திடும் மின்னொளிவிளங்கிடும் மாலையைக்கழுத்தினில் அணிந்தவளே
விண்ணுயர்நின்று வீணரைச் சாய்த்திட வேகமாய் வந்திடும் துர்க்கையளே!
காலராத்ரியெனும் பெயரினைக் கொண்டு காலத்தை வென்றிட்ட மாயவளே
முட்கதை, கத்தியை இடக்கைகள் கொண்டு அருளும் அபயமும் அளிப்பவளே
வெளிவிடும் மூச்சினில் தீச்சுவாலையுடன் கழுதையில் வலம்வரும் முக்கண்ணளே
நவநாயகியரில் ஏழாம்நாளின்று மஹாகாலராத்ரி தாள் பணிந்தேன்! [7]
8. மஹாகௌரி மாதா:
சிவனைச்சேர்ந்திடச் சீரியதவம்செய்து ஊசிமுனையினில் நின்றவளே
தவத்தினில் மகிழ்ந்திட்ட சிவனைக் கண்டு களிப்புடன் சென்றே அணைத்தவளே
சிவனே நடுங்கிடும் கரியவுருவினை மேனியில்கொண்டு எழுந்தவளே
கங்கையின் புனிதம் கருநிறம்கரைத்திட பூரணவொளியான துர்க்கையளே!
எருதுமேலமர்ந்து சூலம் டமரு கைகளிலேந்தி வெண்ணிற ஆடை உடுத்தவளே
என்றுமிளமையாய் எட்டுவயதினளாய் இன்னல்கள் தீர்த்திடும் தூயவளே
அசுரரை அழித்திட அனைவர்க்கும் அருளிய அஷ்டமஹாதேவி துர்க்கையளே
நவநாயகியரில் எட்டாம்நாளின்று மஹாகௌரிமாதா தாள் பணிந்தேன்! [8]
***********************
[நவநாயகியர் உலா நாளை நிறைவுறும்!]
ஜெய்தேவி துர்கா! ஜெய்தேவி துர்கா! ஜெய்தேவி துர்கா!