Tuesday, October 16, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 17

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 17

முந்தைய பதிவு இங்கே!




15.


"விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்." [648]


ராபர்ட் பஸ்ஸில் இருந்த அனைவரையும் ஒருமுறை தலையைத் திருப்பிப் பார்த்தான்.

'நான் எப்படி! இங்கே! இந்த ஊரில்!

எங்கோ, இங்கிலாந்தில் பிறந்த நான் இப்போது இங்கே!

இந்தியாவில் பணி புரிந்து திரும்பிய என் தந்தை.

சென்னை என்னும் ஊரைப் பற்றி என்னிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்.

ஆன்மீகம் என்பதன் முதுகெலும்பே தமிழ்நாடுதான் என சொல்லிகிட்டே இருப்பார்.

யாரோ சித்தர்களாம்.

எல்லாம் தெரியுமாம் அவங்களுக்கு.

யாரோ ஒரு சித்தர், சிவன்மலைன்னு ஒரு ஊருலேர்ந்து வந்தாராம்.

அப்பாவைப் பார்த்ததும், திரும்பிப் பார்த்துச் சிரித்தார்.

'நீ எங்க ஆளு! உன் ஆத்மா எங்களுது! ஆனா உடம்பு அந்நியமாயிடுச்சு! நீ போயிடுவே! ஆனா, உன் பையன் இங்கே வருவான்,...
என்னைத் தேடி' அப்படீன்னாராம்.


டாடிக்கு ஒரே ஆச்சரியம்.

ஏன்னா, அப்போ அவருக்கு கல்யாணமே ஆவலை!

3 வருஷம் கழிச்சி இங்கிலாந்து திரும்பினதும்தான் என் மம்மி ஸ்டெல்லாவோட மேரெஜ் ஆச்சு.

அப்புறம்தான் நான் பொறந்தேன்.

கெமிஸ்ட்ரி மேஜர்.

ஆனா, படிப்புல நாட்டமே இல்லை.

கீழைநாட்டு சிந்தனைகள் பற்றி எப்படியோ ஒரு நாட்டம் பிறந்தது.

சகுனம்.... அப்படீன்னு ஒண்ணு என்னை ரொம்பவே பாதிச்சுது.

இந்த உலகத்துக்குன்னு ஒரு பொது மொழி இருக்குன்னு என் மனசு சொல்லிச்சு.

இதைத் தெரிஞ்சு பேசறவங்க இந்தியாவுல, தமிழ்நாட்டுல,
அதுவும் குறிப்பா ஏதோ ஒரு மலைல இருக்கறதா, உள்மனசு சொல்லிக்கிட்டே இருந்துது.

ஒரு சித்தரை எப்படியாசும் பாக்கணும்னு ஒரு உந்தல்!

எதையும் தங்கமாக்கலாமாமே அவரால!'

கிளம்பிட்டான்!

சென்னையிலே தங்கி, தமிழ் கத்துகிட்டு, சில பேர்கிட்ட ஏமாந்துபோயி, பல புத்தகங்களை வாங்கிப் படிச்சு, அப்புறம், மதுரை வந்து, அங்கே கொஞ்ச காலம் திரிஞ்சு, அலைஞ்சு, கோவிலில் பார்த்த ஒருவர் 'நீ இப்படிப் போ' என அடையாளம் சொல்ல,இப்போ இந்த பஸ்ஸுல!
----------

எத்தனை தடவை படிச்சாலும், இந்தக் கதை புரியவே மாட்டேங்குது!' சலிப்புடன் உரக்கச் சொன்னான் கந்தன்.

பக்கத்திலிருந்த வெள்ளைக்காரன் இதைக் கேட்டான்.

'என்ன புரியல?'

'ஒண்ணுமில்ல! இந்தப் புஸ்தகத்தைச் சொன்னேன்'

சொல்லிக் கொண்டே, பையிலிருந்து இரு கற்களை எடுத்து கையில் உருட்டினான்.

ராபர்ட் துள்ளிக் குதித்தான்.... அவைகளைப் பார்த்ததும்!

'கருப்பு வெள்ளைக் கல்லுங்க!!'

கந்தன் சட்டென அவைகளை மீண்டு பைக்குள் போட்டான்.

'ஒரு ராசா எனக்கு அதைக் கொடுத்தாரு!' சற்று வீராப்பாகச் சொன்னான்.

ராபர்ட், சிரித்தபடியே தன் சட்டைப் பைக்குள் கையை விட்டு எதையோ எடுத்து கையை விரித்தான்.

அவன் கையிலும் இரண்டு கற்கள்.... ஒன்று கருப்பு, ஒன்று வெள்ளை!

'யாருன்னு சொன்னே? ராசா... யூ மீன் கிங்?' என்றான் ராபர்ட்.

'ஒரு ஆடு மேய்க்கறவனுக்கு ராசா வந்து இதைக் கொடுத்தாரான்னு நினைக்கறேல்ல நீ?'

'சேச்சே! அப்படில்லாம் இல்ல! ஆடு மேய்ச்ச ஒருத்தர்தானே பெரிய சித்தரா திருமூலர்னு வந்தாரு.
ஏன், உங்க கண்ணனே ஒரு ஆடு மேய்ச்ச இடையன் தானே!
உன்கிட்ட அவர் பேசினாருன்றதை நான் நம்பறேன்'

ஆச்சரியம் கலந்த குதூகலத்துடன் கந்தன் ராபர்ட்டைப் பார்த்தான்.

'இன்னொண்ணு கூட எனக்குத் தெரியும். உங்க ஊருல சாமி சிலை செய்யணும்னா, ஒண்ணா கருங்கல்லுல, இல்லேன்னா,
சலவைக்கல்லுலதான் செய்வீங்க! கருப்பு இல்லேன்னா வெள்ளைக் கல்லு! அதைத்தான், இந்தப் பெரியவரு ஒரு அடையாளமாச்
சொல்லிருக்காரு.' என்றான் ராபர்ட்.

'இவன் என் பக்கத்துல வந்து உக்காந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு' என நினைத்தான் கந்தன்.

'இப்ப நீ என் பக்கத்துல உக்காந்திருக்கறது கூட ஒரு நல்ல சகுனம் தான்!' எனக் கூவினான் ராபர்ட்!

'ஐயோ! இதையும் சொல்லிட்டானே!' என களிப்பானான் கந்தன்!

'ஆரு சொன்னாங்க உனக்கு சகுனத்தைப் பத்தி?' என ஆவலுடன் கேட்டான்.

'ஆரு சொல்லணும்? உலகத்துல நடக்கற எல்லாமே ஒரு சகுனம்தான். இந்த உலகத்துக்குன்னே ஒரு பொது மொழி இருக்கு. ஆனா,
எல்லாரும் அதை மறந்திட்டாங்க!
அதைத் தேடத்தான் நான் இங்கே வந்திருக்கேன். உங்க ஊருல இருக்கற சித்தருங்களுக்குத்தான் அது தெரியுமாம்.
அப்படி ஒரு ஆளைத் தேடித்தான் நான் வந்திருக்கேன்.'

'நான் ஒரு புதையலைத் தேடிகிட்டு போயிட்டு இருக்கேன்' சொன்னவுடன் அவசரப்பட்டு உளறிட்டோமே என நாக்கைக் கடித்துக் கொண்டான்.

ராபர்ட் அதைக் கவனித்தாற்போல் காட்டிக் கொள்ளாமல், தலையை நிமிர்த்தி, ஏதோ கனவுலகில் மிதந்தவாறே சொன்னான்!

'ஒரு வகையில பார்த்தா, நானும்தான்!' என்றான்.

'சித்தர்னா யாரு?' கந்தன் வினவினான்.

[தொடரும்]
***********************************




அடுத்த அத்தியாயம்

28 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் Wednesday, October 17, 2007 10:07:00 PM  

என்னது இது? எம்புட்டுப் பேருக்கு இந்த மாதிரி ரெண்டு ரெண்டு கல்லு குடுத்து இருக்காங்க? இந்த வெள்ளைக்கார சாமியை சகுனமுன்னு நினைச்சா கூட்டாளியாகிடுவாரு போல இருக்கே!!

வடுவூர் குமார் Wednesday, October 17, 2007 10:08:00 PM  

சித்தர் யாரு?
கேள்வி சுலபமாக தெரிந்தாலும் அதன் ஆழம் அளவிடமுடியாது.
நான் மேட்டூரில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது TNEB யில் வேலைப்பார்க்கும் திரு சத்தியசீலன் என்பவர் இதைப்பற்றி கொஞ்சம் விளக்கியுள்ளார்.அவர் கனவில் மலைப்பாங்கான குகை போல் இடமாம் அதனுள் பலர் யோக நிலையில் வந்துகொண்டிருந்ததாம்.அதை விஜாரிக்கப்போய் திருமலை/திருவண்ணாமலைப் பகுதிகளில் அதே மாதிரி உள்ளது என்று கேள்விப்பட்டாராம்.அதனுள் நுழைவது அவ்வளவு எளிது அல்ல.புரிந்துகொள்வதும் எளிதல்ல..சாமனியர்களுக்கு.

துளசி கோபால் Wednesday, October 17, 2007 10:12:00 PM  

//உன் ஆத்மா எங்களுது! ஆனா உடம்பு அந்நியமாயிடுச்சு!//

இது என்னமோ சத்தியம்தாங்க.

எப்படி இப்படின்னு நான் அதிசயிச்சுப் போயிருக்கேன் பலமுறை.

VSK Wednesday, October 17, 2007 10:53:00 PM  

//எம்புட்டுப் பேருக்கு இந்த மாதிரி ரெண்டு ரெண்டு கல்லு குடுத்து இருக்காங்க? //

இது ஒண்ணும் மந்திரக் கல்லு இல்லீங்க!

சித்தருங்க அச்சிர்வதிச்சுக் கொடுக்கறதுன்னு வைச்சிக்குங்க!

நம் மன நினைவுகளுடைய உந்தலினால், நாம் எடுக்கும் கல் மூலம் ஒரு தெளிவு கிடைக்கலாம்.

ஒரு நம்பிக்கை!

VSK Wednesday, October 17, 2007 10:55:00 PM  

//சித்தர் யாரு?
கேள்வி சுலபமாக தெரிந்தாலும் அதன் ஆழம் அளவிடமுடியாது.//

நல்ல கருத்து, திரு. குமார்.

இவர்கள் இருப்பதே இவர்கள் மூலமாகத்தான் தெரியவரும் எனவும் சொல்லப் படுகிறது.

VSK Wednesday, October 17, 2007 10:59:00 PM  

//எப்படி இப்படின்னு நான் அதிசயிச்சுப் போயிருக்கேன் பலமுறை.//

வாஸ்தவந்தாங்க டீச்சர்.

இங்கும் அதே கதைதான், ....என் வாழ்விலும்!!

VSK Wednesday, October 17, 2007 11:23:00 PM  

//Anonymous said...
Present//

Noted.

நாகை சிவா Thursday, October 18, 2007 3:27:00 AM  

வேகம் பிடிக்குதே... பலே... பலே...

மங்களூர் சிவா Thursday, October 18, 2007 5:11:00 AM  

பஸ் பொறப்பட்டுச்சா இல்லியா??
:-))))))))))

MSATHIA Thursday, October 18, 2007 9:38:00 AM  

\\'இன்னொண்ணு கூட எனக்குத் தெரியும். உங்க ஊருல சாமி சிலை செய்யணும்னா, ஒண்ணா கருங்கல்லுல, இல்லேன்னா,
சலவைக்கல்லுலதான் செய்வீங்க! கருப்பு இல்லேன்னா வெள்ளைக் கல்லு! அதைத்தான், இந்தப் பெரியவரு ஒரு அடையாளமாச்
சொல்லிருக்காரு\\

அட இதுல இப்படி ஒரு சங்கதி பொதஞ்சிருக்கிறது இப்பத்தான் புரியுது. ம்..

வடுவூர் குமார் முடிந்தால் போளூர் அருகில் இருக்கும் பர்வத மலை பற்றி தெரிந்தவர்களிடம் கேட்கவும்.
;-). அதைப்பற்றி எழுதும் அளவுக்கு அறிவும் வயதும் இல்லை எனக்கு. அரைகுறையாய் எழுதி வாங்கிகட்டிக்கொள்வதை விட 'சும்மா இருப்பது சுகம்'

நாமக்கல் சிபி Thursday, October 18, 2007 11:39:00 AM  

//போளூர் அருகில் இருக்கும் பர்வத மலை பற்றி தெரிந்தவர்களிடம் கேட்கவும்//

இந்த மலைக்குப் என் பிரண்டு ஒருத்தர் போய் வந்திருக்கார். மலைப் பயணத்தை வீடியோவாவும் வெச்சிருந்தார்.

இது திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கிறதுன்னு நினைக்கிறேன்.

நாமக்கல் சிபி Thursday, October 18, 2007 11:40:00 AM  

எப்படியோ கந்தனை கொல்லி மலைப் பக்கம் போக விட்டுவீங்க போல இருக்கே!

சேலம் - ராசிபுரம் - சேந்தமங்கலம் - செம்மேடு - கொல்லி மலை.

ஹிஹி. கந்தனுக்கு வழி சொல்லி வைக்கிறேன்! வசதியா இருக்கும்ல!

Anonymous,  Thursday, October 18, 2007 4:51:00 PM  

//ஆன்மீகம் என்பதன் முதுகெலும்பே தமிழ்நாடுதான் என சொல்லிகிட்டே இருப்பார்//
இத்தகைய தெய்வீக முதுகெழும்பை உடைத்து நொறுக்குவத்ற்கு பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும்,
எம் உறவுகளின் அறியாமையை என்னெபது?!.....

//உலகத்துல நடக்கற எல்லாமே ஒரு சகுனம்தான்.//
இப்படியாயின் என்ன என்று விளக்கம் தருவீர்களா?
நன்றி.

கோவி.கண்ணன் Thursday, October 18, 2007 10:04:00 PM  

வீஎஸ்கே ஐயா,

மணி ஆச்சு! சித்தர் தூங்கிறார் போல எழுப்பிவிடுங்கோ !இன்னிக்கு இன்னும் வரலை.
:)

VSK Thursday, October 18, 2007 10:46:00 PM  

//வேகம் பிடிக்குதே... பலே... பலே...//

அப்படீங்களா, நாகையாரே!

நன்றி.
:))

VSK Thursday, October 18, 2007 10:48:00 PM  

//பஸ் பொறப்பட்டுச்சா இல்லியா??
:-))))))))))//

அடுத்த பதிவைப் பாருங்க திரு. ம. சிவா.

பஸ் கிளம்பிருச்சு!
:))

VSK Thursday, October 18, 2007 10:51:00 PM  

//வடுவூர் குமார் முடிந்தால் போளூர் அருகில் இருக்கும் பர்வத மலை பற்றி தெரிந்தவர்களிடம் கேட்கவும்.
;-). அதைப்பற்றி எழுதும் அளவுக்கு அறிவும் வயதும் இல்லை எனக்கு. அரைகுறையாய் எழுதி வாங்கிகட்டிக்கொள்வதை விட 'சும்மா இருப்பது சுகம்'//

நீங்கள் உங்கள் திறமைகளை அடக்கி வாசிப்பதாக ஏற்கெனவே எனக்கு ஒரு புகார் உயர்மட்டத்திலிருந்து வந்திருக்கிறது, திரு. சத்தியா! :)

நீங்களே கூட எழுதலாம்.

வடுவூர் குமார் விவரணையாக ஒரு விஷயத்தைச் சொல்லுவதில் வல்லவர்.
அவரும் எழுதலாம்.
தெரிந்து கொள்ள ஆவலா இருக்கேன்.

VSK Thursday, October 18, 2007 10:53:00 PM  

//இந்த மலைக்குப் என் பிரண்டு ஒருத்தர் போய் வந்திருக்கார். மலைப் பயணத்தை வீடியோவாவும் வெச்சிருந்தார்.//

நீங்களும் பர்வதமலை பற்றிய ஆவலைத் தூண்டிவிடுகிறீர்கள் சிபியாரே!

//ஹிஹி. கந்தனுக்கு வழி சொல்லி வைக்கிறேன்! வசதியா இருக்கும்ல!//

ரொம்பவே வசதியா இருந்ததுங்க! பின்னால் சொல்லுகிறேன்!
நன்றி!

VSK Thursday, October 18, 2007 11:05:00 PM  

////ஆன்மீகம் என்பதன் முதுகெலும்பே தமிழ்நாடுதான் என சொல்லிகிட்டே இருப்பார்//
இத்தகைய தெய்வீக முதுகெழும்பை உடைத்து நொறுக்குவத்ற்கு பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும்,
எம் உறவுகளின் அறியாமையை என்னெபது?!.....//

அவரவர் செய்ய விழைவதை அவரவர் செய்கிறார்கள். எது பல்லனளிக்கிறது என்பது எப்போது தெரியுமோ... எவருக்கும் தெரியாது!

//உலகத்துல நடக்கற எல்லாமே ஒரு சகுனம்தான்.//
இப்படியாயின் என்ன என்று விளக்கம் தருவீர்களா?
நன்றி.//

இதில் விளக்க பெரிதாக ஒன்றும் இல்லை, திரு. அனானி.

இவ்வுலகில் பல நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
எல்லாமும் எல்லார் பார்வையிலும் படுவதில்லை.
அப்படியே பட்டாலும், பலரால் அது கவனிக்கப் படுவதில்லை; உணரப்படுவதுமில்லை.

ஒரு சிலர் இதைப் பார்த்தும் இதன் முக்கியத்துவத்தை கவனிக்காமல் விட்டு விடுகின்றனர்.

வெகுசிலரே இது ஏன் எனக்கு தெரிந்தது எனச் சிந்திக்கின்றனர்.

முதல் சில அத்தியாயங்களில் சொல்லியிருந்தது போல, 'உன்னைச் சுத்தி நடக்கறதை கூர்ந்து கவனி' அப்படீன்னு அந்தப் பெரியவர் சொன்னதை உணர்ந்தால் இதற்கும் விடை கிடைக்க்கலாம்.

நம்மைச் சுற்றி நடக்கின்ற எல்லாவற்றிர்க்குமே ஒரு பொருள் இருக்கிறது, இதைக் கவனிப்பவர்க்கு.

எல்லாருமே கவனிக்க வேண்டுமெனத்தான் 'உலக ஆத்மா' விரும்புகிறது.

ஆனால், இது அதன் கட்டுப்பாட்டில் இல்லை.

இதுதான் எனக்குத் தெரிந்த அளவிற்கான விளக்கம்.

VSK Thursday, October 18, 2007 11:10:00 PM  

//மணி ஆச்சு! சித்தர் தூங்கிறார் போல எழுப்பிவிடுங்கோ !இன்னிக்கு இன்னும் வரலை.
:)//

கொலு வைத்து அழைத்தவர் வீடுகளுக்கு என் மனைவியை அழைத்துச் செல்ல வேண்டி இருந்ததால், அடுத்த பதிவைப் போட சற்று தாமதமாகி விட்டது.

இருப்பினும் அக்கறையாய் நினைவூட்டியதற்கு மிக்க நன்றி, கோவியாரே!

:))

Anonymous,  Friday, October 19, 2007 10:09:00 AM  

//எது பல்லனளிக்கிறது என்பது எப்போது தெரியுமோ... எவருக்கும் தெரியாது!//

இதில் எனக்கும் உறுதியான நம்பிக்கையுண்டு.

//'உன்னைச் சுத்தி நடக்கறதை கூர்ந்து கவனி'//

இதுவே அனைத்து பிரச்சனைகளுக்கு, வித்தாகவும் அமைந்து விடுகிறது
VSK அவர்களே!...

VSK Friday, October 19, 2007 1:50:00 PM  

////'உன்னைச் சுத்தி நடக்கறதை கூர்ந்து கவனி'//

இதுவே அனைத்து பிரச்சனைகளுக்கு, வித்தாகவும் அமைந்து விடுகிறது //

இதில் பிரச்சினை எப்படி வருகிறது தெரியுங்களா?

கூர்ந்து கவனி எனத்தான் சொன்னார்.

நாம் என்ன செகிறோம் என்றால், இதை ஒரு பொது பிரச்சினையாக எடுத்துக் கொண்டு இதற்குத் தீர்வு காண முயல ஆரம்பிக்கிறோம்.

இதுவல்ல நாம் செய்ய வேண்டியது.

கவனித்து, உள்வாங்கி, இதை நமக்கு ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, இதனை நம் வாழ்க்கையில் மட்டுமே கடைப்பிடிக்க முயலவேண்டும்.

நல்லதைப் பார்க்கிறோமா,.. அது போல நாமும் செய்வது, ... கெட்டதைப் பர்க்கிறோமா,.. அதை நாம் செய்யாதிருப்பது.... இதை மட்டும் செய்தால் பிரச்சினைகள் வர சாத்தியங்கள் இல்லை என எண்ணுகிறேன்.
நன்றி.

வல்லிசிம்ஹன் Saturday, October 20, 2007 2:03:00 AM  

உற்றூக்கவனிக்கலாம். ஆனால் ஜட்ஜ்மெண்டலா இருக்கக் கூடாதுனு சொல்றாங்களா..

வினைக்கு எதிர்வினை செய்யாமல் இருப்பதே கடினம்தானே.
சித்தர்களைப்புரிவதும் சிவனைப் புரிவதும் சுலபமில்லை.

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்.

cheena (சீனா) Saturday, October 20, 2007 4:59:00 AM  

சாமி செல செய்யனும்னா கருங்கல் ஆல்லது பளிங்குதான். கருப்ப்பு - வெள்ளை என இரண்டே கற்கள் தான் பயன் படுத்துகிறார்கள். புதிய செய்தி. நன்றி

கதையைக் கூர்மையாகக் கவனித்து வருகிறேன்.

G.Ragavan Saturday, October 20, 2007 9:10:00 AM  

இப்ப எனக்கு ஒன்னு தோணுது. வெள்ளக்கல்லு வெள்ளைக்காரன். கருங்கல்லு கந்தன். நல்ல கூட்டணிதான்.

VSK Saturday, October 20, 2007 5:49:00 PM  

//கதையைக் கூர்மையாகக் கவனித்து வருகிறேன்.//

முதல் பதிவு தொட்டு நீங்கள் இட்டு வரும் பின்னூட்டங்களே அதற்கு சாட்சி!
மிக்க நன்றி, திரு.சீனா!

VSK Saturday, October 20, 2007 5:51:00 PM  

//உற்றூக்கவனிக்கலாம். ஆனால் ஜட்ஜ்மெண்டலா இருக்கக் கூடாதுனு சொல்றாங்களா..//

எதிர்வினையோ, ஜட்ஜ்மெந்தலோ எதுவுமின்றி, அதிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்லமுடியும் நமது மேம்பாட்டுக்கு என மட்டும் சொல்ல விரும்புகிறேன், வல்லியம்மா!

விஜயதசமி வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP