Saturday, June 24, 2006

" முருகனருள் முன்னிற்கும் -- 1"

" முருகனருள் முன்னிற்கும் -- 1"


வலைப்பூ நண்பர்களே!

இந்தத் தலைப்பில் எவ்வாறு என் அன்பு முருகன் என்னோடு எப்போதும் என் வாழ்க்கையில் "கூடி இருந்து குளிர்வித்தான்" என்பதனைச் சொல்லலாம் என இருக்கிறேன்.

சிறியது, பெரியது என்னும் வேறுபாடெல்லாம் அவனுக்குக் கிடையாது, அதெல்லாம் நமக்குத்தான் என்பதனை உறுதி செய்யும் நிகழ்வுகள் இவை.

இன்று காலை நடந்த நிகழ்வு ஒன்றே, இதற்கு வித்திட்டது.

இந்தப் பதிவுகளில், உரைநடை, கவிதை இருவகையிலும் கலந்து சொல்லலாம் எனவும் எண்ணியிருக்கிறேன்.

படிப்பதோடு, இதுபோன்ற உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால், மிகவும் மகிழ்வேன்.

இனி, மேற்கொண்டு பீடிகை எதுவும் போடாமல் நிகழ்வுகளுக்குச் செல்வோமா?
_____________________________________________________________________________________


நேற்று வேலைக்கு வழக்கம் போலச் சென்றேன்.

போனவுடன் ஒரு மருத்துவக்குழு கூட்டம் இருந்ததால், அன்றைய 'நாட்பணிகளை' [appointments] கவனிக்க மறந்து போனேன்.

10 மணி அளவில், எனது அறைக்கு வந்தவுடன், செயலர் நினைவு படுத்தினார், இன்று என்னுடன் பணி புரிவோருடன் 11 மணிக்கு வெளியில் மதிய உணவு அருந்த செல்லவேண்டியிருக்கிறது என்று!

அவசர அவசரமாக பாக்கெட்டைத் தடவினால், 'வாலெட்டை' மறந்து வைத்து விட்டு வந்தது தெரிந்தது.

சக மருத்துவர் ஒருவரிடம் ஒரு 20 டாலர் கடன் வாங்கிகொன்டு எப்படியோ மானத்தைக் காப்பாற்றிக் கொண்டேன்!

மறுநாள் திருப்பித் தருகிறேன் என்று வேறு வாகளித்திருந்தேன் அந்த நண்பரிடம்!

திரும்பி வந்து, தற்செயலாக, கணினியில் எனது வங்கிக் கணக்கைப் பார்த்தபோது ஒரு உன்மை முகத்தில் அடித்தாற்போல் தெரியவந்தது, கணக்கில் 35 டாலர்களே இருக்கிறது என்பது!

இவ்வளவு குறைவான நிலையில் என் கணக்கு இருந்ததில்லையே எனக் குழம்பினேன்.

அப்போதுதான் நினைவுக்கு வந்தது, எனது இரு மகளகளும் அவசரத்தேவையெனக் கேட்டுக் கொண்டதால், இரு பெருந்தொகைகளை சில தினங்களுக்கு முன் மாற்றியிருக்கிறேன் என்பது!

சரி, எப்படியாவது, அதிலிருந்து ஒரு 20 டாலரை மட்டும் எடுத்து நண்பருக்குக் கொடுத்துவிடலாம் எனத் தேறுதல் செய்து கொண்டேன்.

இன்று காலை, கிளம்பும் போது, என் மகன் 'அப்பா, ஒரு 20 டாலர் 'gas money'[இதற்கு தமிழ்ச் சொல் என்ன?! குமரன், ஜி.ரா., பொன்ஸ் ப்ளீஸ்]] வேண்டும் என்று கேட்டு வைத்தான்.

இருக்கிற 20 டாலரை அவனுக்குக் கொடுப்பதா, இல்லை வாக்களித்தபடி நண்பருக்குக் கொடுப்பதா என ஒரு போராடம்!

சரி, இரு வருகிறேன், நான் ஏ.டி.எம் மெஷினுக்குச் சென்று வந்து தருகிறேன்' எனச் சொல்லிவிட்டு, வழக்கம் போல, 'முருகா! காப்பாத்து!' என ஒரு வேண்டுதலைப் போட்டு விட்டு, வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் தானியங்கிப் பொறி [ATM machine]-க்கு என் வண்டியை எடுத்துச் சென்றேன்.

அந்த சந்தில் திரும்பும் போது, ஒரு வயதான [சுமார் 80 இருக்கும்] ஒரு மூதாட்டி ஒரு வாக்கரைத் [Walker] தள்ளியபடி குறுக்கே கடந்தார்.

அவருக்காக நான் ஒரு முழுமையான நிறுத்தம் செய்த போது, திரும்பி என்னைப் பார்த்து கனிவுடன் சிரித்து, 'மே காட் ப்லெஸ் யூ' எனச் சொல்லிச் சென்றார்.

மனதுக்கு இதமாக இருந்தது.

வங்கி அட்டையை உள்ளே தள்ளி ஒரு 20 டாலரை வெளியில் எடுத்தேன்.

கூடவே அதற்கான ரசீதையும் கக்கியது மெஷின்.

சரி, மீதி 15 டாலர்தானே இருக்கப் போகிறது என்ற அவநம்பிக்கையுடன் பார்த்த எனக்கு மயக்கம் போடாத குறை!

மீதி இருப்பு நாலாயிரத்துச் சொச்சம் எனக் காட்டிச் சிரித்தது அந்த ரசீது!

எப்படி இது நிகழ்ந்திருக்க முடியும், என் சம்பளம் 30-ம் தேதி தானே பதியும், என் மனைவியின் சம்பளமும் 25-ம் தேதிதானே என மண்டையைக் குடைந்து கொண்டிருந்தபோது, சட்டென்று நினைவுக்கு வந்தது!

இன்று தேதி 23, வெள்ளிக்கிழமை.

நாளையும், அதற்கு அடுத்த நாளும் விடுமுறை நாட்கள் என்பதால், என் மனைவின் சம்பளம் நேற்று இரவே, 22-ம் தேதி அன்றே பதிந்திருக்கிறது!

பிறகென்ன!

மறுபடியும் அட்டையை நுழைத்து, தெம்பாக ஒரு 200 டாலரை வெளியிலெடுத்து, வீட்டிற்கு வந்து, மகிழ்வுடன் மகனுக்கும் பணத்தைக் கொடுத்து, நண்பரின் கடனையும் திருப்பிக் கொடுத்து,.....

எல்லாம் இனிதே முடிந்தது!

அந்த மூதாட்டி.....!?

அவரது கனிவான ஆசிச் சொற்கள்!?

வேறு யார்?!

என் அப்பன் முருகன் தான் !

"ஆதாளியை ஒன்று அறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ?
கூதாள! கிராதகுலிக்கு இறைவா!
வேதாளகணம் புகழ் வேலவனே !"
[கந்தர் அநுபூதி; பாடல் 38]

'கூதாள மலரை அணிந்தோனே!
வேடர்குல வள்ளியின் தலைவனே!
பேய்களும் துதிக்கின்ற வேலவனே!
வீண் பேச்சுக்ளைப் பேசுபவனும்,
நன்மைஒன்றும் அறியாதவனும்,
தீயவனும் ஆகிய அடியேனையும்
ஒரு பொருட்டாக எண்ணி நீ என்னை
ஆட்கொண்ட விதத்தை எப்படி உரைப்பேன்!'

*************************************************************************************

Read more...

Tuesday, June 20, 2006

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்"



அன்பு வலைப்பூ நண்பர்களே!
வணக்கம்.
ஆத்திகம் எனத் தலைப்பு வைத்தும், இன்னும் ஒரு பதிவும் அது பற்றிப் போடவில்லையே என ஒரு குறை மனத்தில் இருந்து கொண்டே வந்தது!
நண்பர்கள் குமரனும், இராகவனும், செல்வனும் வேறு திரும்பத் திரும்பச் சொல்லி வந்தனர்!
திருப்புகழுக்குப் பொருள் சொல்லேன் எனவும் சொன்னார்கள்!
திருப்புகழுக்கு பொருள் சொல்லுவது என்பதை விடுத்து, அப்பொருள் வருமாறு எளிய நடையில், கவிதையாகச் சொல்லலாம் என ஒரு கருத்து பதிந்தது, மனத்தில்!
ஆகவே, 'அவன் அருளாலே, அவன் தாள் வணங்கி' முழு முதற்கடவுளாம் விநாயகனின் திருப்புகழோடு இதனைத் தொடங்குகிறேன்.
குற்றம், குறை எதுவானாலும், நடை கடினமாக இருந்தாலும், உடனே சொல்லி என்னைத் திருத்துமாறும் பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
வாரம் ஒரு பதிவிடலாம் என எண்ணுகிறேன்.
அருணகிரிநாதர் தாள் வாழ்க!
முருகனருள் முன்னிற்கும்!

1. கைத்தல நிறைகனி... [விநாயகர் துதி]


ராகம்: நாட்டை
தாளம்: ஆதி

தந்தன தனதன தந்தன தனதன
தந்தன தனதன......தனதான

.......பாடல்......

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக.....னடி பேணிக்

கற்றிடு மடியவர்பு த்தியி லுறைபவ
கற்பக மெனவினை..... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்பு ய....மதயானை

மத்தள வயிறனை உத்தமிபு தல்வனை
மட்டவிழ் மலர்கொடு...... பணிவேனே

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய......முதல்வோனே

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த......அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிரமணி படும்
அப்புன மதனிடை.....இபமாகி

அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள்.....பெருமாளே.

.....விளக்கம்.....

//கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக.....னடி பேணிக்//


இருகைகளில் நானேந்தி மனமுவந்துஅளிக்கின்ற
பழம், அப்பம், பொரி அவல் இவையனைத்தையும்,
துதிக்கையால் வாரி விருப்பமுடன் உண்ணுகின்ற
வேழமுகத்தானின் திருவடியை மிக விரும்பி,

//கற்றிடு மடியவர்பு த்தியி லுறைபவ
கற்பக மெனவினை..... கடிதேகும்//


இறைநூலைக் கற்கின்ற அடியவரின் சித்தத்தில்
நிறைவாக நீங்காது வாழ்கின்ற தெய்வமே!
குறைவின்றித் தருகின்ற கற்பகத் தருவே!- என
நிறைவாக உனை வாழ்த்த, வினையெல்லாம் விரைந்தோடும்.

//மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்பு ய....மதயானை//


ஊமத்தை மலருடனே, பிறைநிலவும் சடை தரித்த
அழிக்கின்ற தொழில் செய்யும் சிவன் மகனும்,
போருக்குச் செல்கின்ற வலுவான தோளுடையவனும்,
மதயானை போல்கின்ற பலத்தினை உடையவனும்,

//மத்தள வயிறனை உத்தமிபு தல்வனை
மட்டவிழ் மலர்கொடு...... பணிவேனே//


மத்தளம் போலொரு பெரு வயிறு படைத்தவனும்,
உத்தமியாம் பார்வதியாள் செல்வனாம் கணபதியை
தேன் துளிர்த்துப் பூத்திருக்கும் புதுமலர் கொண்டு
நானிங்கு வணங்கிப் பதமலர் பணிவேனே!

//முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய......முதல்வோனே//


இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழின் நூல்வகையை
பயில்வதற்கு மனமிரங்கி, மலைகளிலே முதன்மையான
மேருவென்னும் மாமலையில், முதன்முதலில் எழுதிவைத்த
மூத்தவனே! முதன்மையானவனே! முழுமையானவனே!

//முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த......அதிதீரா//


நின்னை வணங்காமல், திரிபுரத்தை அழிக்க எண்ணி
போர்புரிய விரைந்துசென்ற சிவனாரின் திருத்தேரின்
முன்னச்சு முறிந்து, பொடிப்பொடியாய் போகச் செய்த
தன்நிகரில்லா வீரனே! தீரனே! சூரனே!

//அத்துய ரதுகொடு சுப்பிரமணி படும்
அப்புன மதனிடை.....இபமாகி//


தினைப்புனத்தில் குறத்தியினைத் தேடிச்சென்று
அவள்மீது மையல்கொண்டு மனம் வருந்தி
நடைநடையாய் நடந்து சென்ற தம்பியாம்
சுப்பிரமணியன் துயர் தீர ஆனையாய் முன் தோன்றி.

//அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள்.....பெருமாளே.//


குறமகளைப் பயமுறுத்தி சிறியவனிடம் செல்லவைத்து
எதிர்த்து வந்த அனைவரையும் திறத்தாலே வெருளவைத்து
அப்போதே அங்கேயே அவளை இளையவனுக்கு மணம் முடிக்க
அருள் செய்த பெருமகனே! பெரியவனே! பெருமாளே!

Read more...

Saturday, June 17, 2006

"ஆறு மனமே ஆறு!"

ஆறு மனமே ஆறு!


ஆறு மனமே ஆறு!--அந்த
சுகாவின் கட்டளை பாரு!
ஆறுமுகன் சோதரனாம்
ஆனைமுகன் அருளாலே
ஆருக்கும் தெரியாத
ஆறு நிகழ்வுகள் கேளு!

"ஆறு"தல் அளித்த ஆறு!

1. நினைவறியாக் காலத்தே
நினைவாகத் தான் வந்து
நித்தமெனைத் தாலாட்டி
நித்திரையில் ஆழ்த்திவைத்து
நிலாச்சோறு காட்டி எனை
நேசமுடன் வளர்த்த தாய்!

2. நான் போகும் வழியினையே
நன்றாகக் காட்டி என்னுடன்
நோகாமல், நொடியாமல்
நெடுந்தூரம் துணை வந்து
நான் வளர்ந்த காலத்தில்
நில்லாமல் சென்ற என் தந்தை!

3. சாயாமல், சரியாமல்
பாய்கின்ற மனத்தினையே
பேயாகிப் போகாமல்
தாயாக தந்தையாக
நேயனாகத் துணை வந்த
சாயிபாபாவுக்கு வந்தனம்!

4. காலத்தின் கோலத்தால்
பாழாகவிருந்தவெனை
மாளாத் துயரினின்று
மீளச்செய்து வழிகாட்டி
காலமெல்லாம் களிப்புடனே
வாழச்செய்த என் மனையாள்!

5. நன்மக்கட்பேறே நலமென்று
மண்மகனாம் வள்ளுவனும்
அன்றே சொல்லியதுபோல்
இன்பத்தை நான் சுவைக்க
இன்றெனெக்கு வாய்த்திட்ட
நன்மக்கள் நான்கு பேர்!

6. தாயகம் தாண்டி
தனிவழியே வந்தவெனை
தயங்காமல் தாங்கிக்கொண்ட
அயல்நாட்டு மண்ணின்
பெயரறியாப் பல மனிதரை
வியந்து ஒரு பெருவணக்கம்!

"ஆறு" பெருமைகள்

1. என் போல இங்கொருவன்
என் தொழிலை எடுத்தாண்டு
என் பேரைச் சொல்லியெனை
இன்பமுறச் செய்யானோ
என எண்ணிய தந்தையின்
மனமகிழ நான் முடித்த
மருத்துவப் படிப்பு!

2. கண்டவர்கள் பலரெனினும்
காமுற்றது சிலரெனினும்
காதலித்ததுஒரு பெண்ணை!
கரம் பிடித்ததும் அவளையே!
களிப்போடு பலகாலம்
கழித்ததுவும் நிறைவன்றோ!

3. பெற்றவர் ஈன்றதோ ஒன்பது பேர்!
மற்றவருக்கிடையே நான் "ஆறாவது"!
நற்றவ வானினும் நனிசிறந்தவரும்
உற்றவரைப் பிரிந்து சென்றதினால்
பெற்றவன் அன்று போனது இந்த
சிற்றவன் மடியினில்! என் சொல்வேன்!

4. செய்யும் தொழிலைச் சிறப்புறச் செய்து
ஐயம் இன்றி அரும்பணி ஆற்றி
வையம் போற்ற வளமுடன் வாழ்ந்து
கையில் வந்ததை பையினில் வைக்காமல்
உய்யும் வழியாய் மற்றவர்க்கீன்று
தெய்வம் நினைந்து வாழ்ந்திடும் வாழ்க்கை!

5. பிறந்த நாட்டிலும்
புகுந்த நாட்டிலும்
பண்ணும் தொழிலைப்
பண்புறச் செய்து
பயனுற வாழும்
பரிமள வாழ்க்கை!

6. ஒருவாசகம் எனச் சொல்லும்
திருவாசகத் தேனினையே
இசைவாசகமாய்ப் போட
இசைஞானியும் இசைந்தபொது
பணவாசகமாய் அதற்க்குதவ
"பணநாட்டு"ரசிகர்களை
பணவுதவிசெய்யவைத்து
தமிழன்னைக்கு மகுடமென
திருவாசகத்தை உலகுக்கு உரைத்தது

"ஆறு"தல் சொன்ன ஆறு நூலகள்!
1. உலகப் பொதுமறையாம் திருக்குறள்
2. உண்மைக்காட்சியான் கம்பனின் காவியம்
3. உறுதுணையாய்வந்திடும் சித்தார்த்தா
4. உள்ளத்தை அள்ளும் சிலப்பதிகாரம்
5. உசுப்பிவிடும் ஸ்டெயின்பெக்கின் 'தி விண்டெர் ஆஃப் அவர் டிஸ்கண்டென்ட்
6. உன்மத்தமாக்கிடும் ரூமியின் காவியம்

"ஆரது" போறது!

1. பச்சோந்தி
2. முகமூடி
3 மாயவரத்தான்
4. முத்து தமிழினி
5. சிவபாலன்
6. துளசி கோபால்

இவர்கள் அனைவருமே நான் மிக ரசிக்கும், மதிக்கும், விரும்பும் பதிவாளர்கள்!
இன்னும் பலருண்டு!
அவர்களை ஏற்கெனவெ அடுத்தவ்ர்கள் அழைத்துவிட்டார்!
இவர்களின் ஆர்வமும், திறமையும் யாருக்கும் குறைந்ததல்ல1
வருவார்கள் என நம்புகிறேன்.
தனி மடல் அனுப்பி அழைக்க வேண்டுமா எனத் தெரிந்தவர் யாராவது சொல்லுங்களேன்!

பொறுமையுடன் இதுவரை படித்து வந்தீர்களெனில்,......
நன்றி! கோடானு கோடி நன்றி!!

Read more...

Tuesday, June 13, 2006

"விடைகொடு விடலைப் பருவமே"

நாமும்தான் முயன்று பார்ப்போமே என
தேன்கூட்டுப் போட்டியினின் தலைப்பதனை
ஒட்டியே ஒரு கவிதை புனைந்திங்கு
நானும்தான் வரைந்துள்ளேன்!
உள்ளன்பு கொண்டோரே!
ஒருவார்த்தை செப்பிடுவீர்!



"விடைகொடு விடலைப் பருவமே"


"விடைகொடு விடலைப் பருவமே"
அல்லது,
"விட்டுப் போகிறேன் விடலைப் பருவமே"
எனச் சொன்ன நாளை எண்ணி
காலச்சுவட்டில் தேடிப் பார்க்கிறேன்!

அரும்பாமல் அரும்பி நின்ற
மிருதுவான பூனை மீசையை
திரும்பத் திரும்ப சவரம் செய்து
முறுக்காக முளைத்த நாளா?

பாடம் படிக்கும் சாக்கில்
மாடிப்படியடியில் அவளறியாமல்
பதுங்கிச் சென்று ஒளிந்து நின்று
பார்ப்பதை மறந்த நாளா?

வீட்டிற்கு வந்தவுடன்
வயிற்றுக்கு என்னவென்று
விரட்டலாக தாயை வெருட்டி
வருத்தியதை நிறுத்திய நாளா?

மாலைஎனும் நேரமே மனமகிழத்தான் என்று
நாளையெலாம் வீணாகக் கழித்து நின்ற பொல்லாத
வேளையினைத் தள்ளிவிட்டு நேரத்தில் வீடுவந்து
காலலம்பி நீறணிந்து திகைக்க வைத்த நாளா?

காசுபணம் பிடுங்கவென்றே படைத்தது போல் எண்ணி
பாசமுடன் ஒருநாளும் பார்க்காமல் புறக்கணித்த
ஆசையான தந்தையிடம் அருகிலே சென்றமர்ந்து
மாசச்சம்பளத்தை பெருமையுடன் அளித்த நாளா?

எதுவென்று எண்ணி எண்ணி புரியாமல் நிற்கையிலே
பட்டென்று பொறியில் தட்டியது ஒரு நினைவு!
பெற்றவளின் அருகமர்ந்து அவள் மடியில் தலை சாய்த்து
அவள் கையை வருடியபடி 'அவளைப்' பற்றி சொன்ன நாள்!

தலை உயர்த்திப் பார்த்தபோது,
கனிவுடன் எனை நோக்கி
'பெரிய மனுசன் ஆயிட்டே' எனப்
பாசமுடன் சிரித்தாளே, அந்த நாள்!

Read more...

Friday, June 09, 2006

//நீ எனக்குச் சொல்//

//நீ எனக்குச் சொல்//



உன்னுடன் இருந்த நேரங்களை
நினைத்திங்கே பார்க்கையிலே
ஒன்றெனக்குப் புரிந்தது!
நீ ஒரு யானை!!

ஆம்!
உருவத்தைக் காட்டிப்
பழிக்கிறேனெனச் சொல்லாதே!
உனக்கே தெரியும்
நீ பிடியல்ல, கொடியென்று!

இருப்பினும் உன்னை
யானையெனச் சொன்னதுவும்
ஏனென்று கேட்கிறாயா?
சொல்லுவேன் கேள்!

உன்னுடன் இருந்த
ஒவ்வொரு மணித்துளியும்
ஆனந்தம்! ஆனந்தம்!

உனைப் பிரிந்து
உன்நினைவைச் சுவைக்கும்
ஒவ்வொரு நொடியும்
ஆனந்தம்! ஆனந்தம்!

இப்போது சொல்!
நீயும்,யானையும்
ஒன்றன்றோ!!

இருந்தாலும்
ஆயிரம் பொன்!
மறைந்தாலும்
ஆயிரம் பொன்!

நீ உணர்வதும்
அதுதானே!!
நீ எனக்குச் சொல்!

Read more...

Thursday, June 08, 2006

"அனுபவி ராசா அனுபவி!"

"அனுபவி ராசா அனுபவி!"

ஒரு தத்துவவாதியின் உளறல்கள்!!

கே: இந்த இருதய சம்பந்தமான பயிற்சிகள் வாழ்நாளை அதிகரிக்க உதவும் என்கிறார்களே? உண்மையா?

ப: இப்ப, ஒவ்வொருத்தரோட இதயத்துக்கும், இவ்வளவு துடிப்புதான்னு ஒரு கணக்கு பண்ணி இருக்குது! அவ்ளோதான்! சும்மனாச்சிக்கும், பயிற்சி, அது. இதுன்னு டைமை வேஸ்டு பண்ணாதே! அல்லாம் ஒரு நாளைக்குத் தேஞ்சுதான் பூடும்!
வெரசபடுத்தறேன்னு எக்ஸைஸ் பண்றது ஒண்ணும் வேலைக்கு ஆவாது!
இது எப்ப்டி இருக்குன்னா, என்னோட காரோட லைஃபை, வேகமா ஓட்றதால, ஜாஸ்தி பண்றேங்கற மாதிரித்தான்!

நெறைய நாளு உசுரோட இருக்கணுமா.... போய் நல்லாத் தூங்கு!

கே: இந்தக் கவிச்சிய வுட்டுட்டு, நெறய பழம், காய்கறில்லாம் சாப்பிடலாமா?

ப: நீ கொஞ்சம் நெதானமா யோசிக்கக் கத்துக்கணும்! இப்ப, ஒரு மாடு இன்னா சாப்டுது? புல்லும், தவிடும் , வைக்கோலும்! இதெல்லாம் இன்னா? காய்கறி! அப்ப்டீன்னா, மாட்டுக்கறின்றது, இந்தக் காய்கறிங்களை ஒரு ஸ்பெஷலான மொறையில, ஒன் ஒடம்புக்குள்ளே அனுப்பற ஒரு வித்தை. அவ்ளோதான்!

காய்கறி வேணாம்; தானியம்தான் வேணுமா? கோழிக்கறி சாப்பிடு!

கே: இந்தத் 'தண்ணீ' எல்லாம் கொறைக்கணும்னு சொல்றாங்களே.....?

ப: கூடவே கூடாது! ஒயினு பளத்துலேர்ந்து தயாராவுது! ப்ராந்தி, ஒயினை வடிகட்டி வர்றது! அதாவது, ஒயின்ல இருக்கற தண்ணியைக் கூட எடுத்துட்டு சுத்தமாக் கொடுக்கறாங்க! பியர் கூட என்ன? பார்லிலேந்து பண்றது!

குடி மகனே... குடி!

கே: என்னோட ஒடம்பு/கொளுப்பு விகிதத்தை எப்படி கணக்கு போடறது?

ப: நல்லா கவனி! ஒடம்புன்னு ஒண்ணு இருந்தா, கொயுப்புன்னு ஒண்ணு இருந்தே தீரும்! அப்போ, ஒன்னொட விகிதம் ஒண்ணுக்கு ஒண்ணு! .....சரியா! ரெண்டு ஒடம்பா இருந்தா, ரெண்டுக்கு ஒண்ணு!

புரிஞ்சுக்கினியா?!!

கே: எண்ணையில பொரிச்சது ஒடம்புக்குக் கெடுதல்னு சொல்றாங்களே... அதப்பத்தி உங்க கருத்து?

ப: இவ்ளோ நேரம் நான் சொன்னதை நீ கேட்டுக்கினு இருந்தியா, இல்லை எங்கியாவது தூங்கப் பூட்டியா? எதுல பொரிக்கிறாங்க அல்லாத்தையும்? வெஜிடபிள் ஆயில்லதானே? இன்னும் கொஞ்சம் வெஜிடபிள் சேந்தா நீ கொறஞ்சா பூடுவே?

கே: நீச்சல் பளகினா, ஒடம்பு வாகா இருக்கும்னு சொல்றங்களே...?

ப: நீச்சல்னாலே ஒடம்பு வாகாயிடும்னா, போயி திமிங்கலத்தை பாரு! அப்பால வந்து சொல்லு, நீச்சல் நல்லதா, கெட்டதான்னு! வேலயப் பாத்துக்கினு போவியா!

வந்துட்டான்... பெருசா!

நல்லா நெனப்புல வெச்சுக்கொ!
இந்த ஒடம்பு ஒரு நா கல்லறைக்குப் போகப்போவுது! அப்டி போறச்சே, நல்லா கட்டுமஸ்தா கொண்டுபோயி இன்னா லாபம்? நல்லா அனுபவி, இந்த பாடியை நல்லா யூஸ் பண்ணு! போகும்போது, 'ஐய்ய்ய்யா... இன்னா சொகமா இருந்துச்சுப்பா'ன்னு செம சவுண்டு வுட்டுக்கினு போய்ச் சேரு!

நா வர்ட்டா!

அப்பால, எதுனாச்சும் டவுட்டு இருந்தா வந்து கேளு!

சரியா!!

Read more...

Wednesday, June 07, 2006

வேறொன்றும் நானறியேன் பராபரமே!

வேறொன்றும் நானறியேன் பராபரமே!


பதிவொன்று போட்டிங்கு பல நாளும் ஆயாச்சு!
எதுவென்று தெரியாமல் எந்நாளும் நெனைச்சாச்சு!
இதுவா அதுவெனவே பலகாலம் யோசிச்சு
பொதுவாக ஒரு பதிவு போடவென முடிவாச்சு!

அரசியலைப் பேசயிங்கு அதிகம்பேர் இருக்கின்றார்!
சமையலைப் பற்றியோ தினமிங்கு பதிவுண்டு!
உள்குத்து வெளிக்குத்து ஓராயிரம் பதிவுண்டு!
தெள்ளுதமிழ் விளக்கம் சொல்ல குமரனும் இங்குண்டு!

கூடவே அவர் துணையாய் ஜிராவும் தினமுண்டு!
தன்வழியே போகின்ற வெட்டியானின் ஞானமுண்டு!
சுகமாகக் கவிதை சொல்ல சுகாவுடன் பலருண்டு!
பல்சுவையில் பரிமாற சுரேஷின் பதிவுமுண்டு!

யார் எங்கு போனால் எமெக்கென்னவென்றே
ஊர் ஊராய்ச் சென்றிங்கு அனவரையும் கலாய்க்கவென்றே
அனுமனின் பேர்சொல்லும் அழகான நாமக்கல்லின்
சிபியாரின் துணையின்றி தமிழிங்கே மணப்பதேது!

ஆணிங்கு அரசோச்சும் காசியாரின் தமிழ்மணத்தில்
நானிங்கு நிற்கின்றேன் எனச் சொல்லி சதிரடிக்கும்
பொன்னான தமிழ்மகளாம் பொன்ஸாரின் தமிழ்மணக்க
நம்மையெல்லாம் நகைச்சுவையில் நிரப்பிடும் பதிவுமுண்டு!

இன்னுமிங்கு பலருண்டு, எடுத்தியம்ப நேரமில்லை!
பண்ணுகின்ற பணியதனை பாட ஒரு வாயுமில்லை!
என்னயிங்கு எழுதுவது என்றெண்ணிப் பார்க்கையிலே
ஒண்ணுமிங்கு தோணவில்லையென குசும்பாரும் சொல்லிவிட்டார்!

ஆகையினால் நண்பர்களே! நானிங்கு முடிவு செய்தேன்!
வாகாக ஒரு கருத்து என்மனதில் தோணும்வரை
சீராகப் பின்னூட்டம் போடுவதேயல்லாமல்
வேறொன்றும் நானறியேன் பராபரமே!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP