Sunday, September 13, 2009

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" - 27 [குடிமை]


"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" - 27 [குடிமை]

'மன்னாரைக் கண்டோ' எனக் கேட்டுக்கொண்டே நாயர் கடைக்குள்
நுழைந்தேன்.
'ஆ! வரு நேரந்தன்' எனச் சொல்லி ஒரு டீயை என் பக்கம் நீட்டினார் நாயர்!
சொல்லி வைத்தாற்போல் அங்கு வந்து சேர்ந்தான் மயிலை மன்னார்!
அவன் முகத்தைப் பார்த்தவுடனேயே ஏதோ பிரச்சினை எனப் புரிந்தது!
என்ன என்பதுபோல் அவனைப் பார்த்தேன்.
ஒன்றும் சொல்லாமல், என் கையில் இருந்த டீயை வாங்கி உறிஞ்சினான்.
'இப்ப இதைக் குடிக்கறதுல உனக்கு ஏதும் ஆட்சேபணை இருக்கா சங்கர்'
என்றான்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை!
'நாம என்ன அப்படியா பழகிகிட்டிருக்கோம் மன்னார்? எதுக்கு இப்படி ஒரு
கேள்வி?' என சற்றுக் குழப்பத்துடனேயே கேட்டேன்.

'அதில்லேப்பா! இன்னிக்கு ஒரு வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கே காப்பி
கொண்டுவந்து குடுத்தாங்க! கையில குடுக்காம, பக்கத்துல வைச்சாங்க!
அப்பவே ஒருமாரியா இருந்திச்சு. குடிச்சதுக்கப்புறமா, அதும்மேல தண்ணி
தெளிச்சிட்டு உள்ளே எடுத்துகினு போனாங்க! இத்தினிக்கும் நான் போன வூடு
ஒரு ஐயர் வூடு கூட இல்லை! எனக்கு வெறுத்துப் போச்சு! வர்ற வளியுல
பாத்தா, ஒரு சாதி ஊர்வலம்! அதுல இருந்தவன் பேசினதையெல்லாம்
வேற கேட்டுத் தொலைச்சேன். அதான் டென்சனா இருக்கேன்!' என்றான்.

சட்டென எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது!
'திருவள்ளுவர் காலத்துலியும் இந்த சாதி, குலமெல்லாம் இருந்துச்சா மன்னார்?'
எனக் கேட்டேன்.
மன்னாரின் முகம் மலர்ந்தது.
ஒருவித நமுட்டுச் சிரிப்புடன் என்னைப் பார்த்து, 'ம்ம்.இருந்துச்சே! அவரும்
இதைப் பாடியிருக்காரே குறள்ல. சொல்றேன் எளுதிக்கோ! ஆனா, ஒரு
கண்டிசன்! நான் சொல்லி முடிக்கற வரைக்கும் நடுவுல இன்னா, ஏதுன்னு கேள்வி
கேக்கக்கூடாது. நம்ம ஐயனா இப்படில்லாம் பேசறாருன்னு வாயைப் பொளக்கக்
கூடாதுசரியா' எனப் பெரிதாக ஒரு பீடிகை போட்டான்.
'சரி, ஏதோ வில்லங்கமாத்தான் சொல்லப்போறான்' என நினைத்த நான்
ஆவலுடன் நோட்டுப்புத்தகத்தைப் பிரித்தேன்.

இனி வருவது, குறளும், அதற்கு மயிலை மன்னாரின் விளக்கமும்!

'அதிகாரம் - 96 "குடிமை"

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு. [951]

நல்ல தரமான சாதியில, அதான் ஒரு ஒசந்த கொலத்துல பொறந்தவங்கிட்டதான்
இன்னார்னு பாராட்டாத பாகுபாடு இல்லாத நடுவு நிலைமையும், 'ஐயோ, இது
செஞ்சா தப்பாப் போயிறுமே'ன்ற ஒரு வெக்கமும் இருக்குமாம். தாழ்ந்த
கொலத்துல பொறந்தவன் இதுக்கெல்லாம் அஞ்சவே மாட்டானாம். இன்னா
பண்ணினாலும் தான் பண்றதுதான் சரின்ற ஒரு திமிரும், எது பண்ணினாலும்
அதுக்காவ துளிக்கூட வெக்கமே படாத கொணமும் மண்டிக் கிடக்கும்னு
ஆரம்பிச்சு வைக்கறாரு ஐயன் இந்த அதிகாரத்தை! இதுலேர்ந்து இன்னா
தெரியுது? அவர் காலத்துலியும் இந்த சாதி, கொலம்லாம் இருந்திருக்குன்னு.
இப்ப அடுத்ததைப் பார்ப்போம்!

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். [952]

மேல சொன்ன ரெண்டு கொணத்தோட இன்னொண்ணையும் சேர்த்து இதுமாரி
ஒசந்த கொலத்துல பொறந்தவங்களை இன்னும் தூக்கி வைக்கறாரு ஐயன்!
நல்லா ஒளுக்கமா இருப்பாங்களாம்; பொய்யே பேசாம உண்மையை மட்டும்
பேசுவாங்களாம்; இன்னா காரியம் செஞ்சாலும் அதுல ஒருமாரி வெக்கம்
கூடவே கலந்திருக்குமா! நல்ல காரியம் செய்யறாங்களா, இதுனால நம்மளை
அளவுக்கதிகமாப் புகள்ந்துருவாங்களோ, இல்லைன்னா இது ஒரு கெட்ட
காரியமாச்சே, இதையெல்லாம் நாம் செய்யக்கூடாதேன்னு ரெண்டுபக்கமும்
வெக்கப்பட்டுகிட்டே நல்ல பண்போட நடந்துப்பாங்களாம். ஆரு? இந்த
ஒசந்த கொலத்துல பொறந்தவங்க!

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு. [953]

மூணு இப்ப நாலாவுது! ஒரு ஏளை வர்றான்னு வைச்சுக்க. அவனைப்
பார்த்தவொடனேயே இந்த மேல்சாதிக்காரன் மூஞ்சியில ஒரு சந்தோசம்
தெரியுமாம்! வந்தவனை உக்கார வைச்சு 'இன்னாப்பா எதுனாச்சும்
சாப்ட்டியான்னு அன்பா விசாரிப்பாங்களாம்! அடுத்தாபல, ஒனக்கு இன்னா
வோணும்னு கேட்டுத் தெரிஞ்சுகிட்டு, தன்னால முடிஞ்சதைக் கொடுத்து
அனுப்புவாங்களாம். 'போடா! போக்கத்த பயலே! பேமானி! பொளைக்க
வக்கில்லாதவனேன்னுல்லாம் எடுத்தெறிஞ்சு பேச மாட்டாங்களாம் இதுமாரி
ஒசந்த சாதியில பொறந்தவங்க! இன்னா அப்டிப் பாக்கறே! நான் சொல்லலை,
ஐயன் தான் இப்பிடில்லாம் சொல்றாரு. ம்ம்.. மேல போவோம்!

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர். [954]

இதுமாரி மேல்சாதியில பொறந்தவங்ககிட்ட கோடி கோடியாப் பணம் குமிஞ்சு
கெடந்தாலும், தன்னோட குடிப்பெருமை கெட்டுப்போற மாரியான காரியங்கள
மறந்துபோயிக்கூட செய்ய மாட்டாங்களாம்! பணம் இருக்கேன்ற கருவம்
துளிக்கூட இல்லாம அடக்கமா இருப்பாங்களாம்.

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இலர். [955]

சரி, பணம் இருக்கற ஆளுங்க அப்பிடிப் பண்ணுவாங்கன்னா, அப்ப பணம்
இல்லாதவங்க இன்னா பண்ணுவாங்க? இதுக்கும் பதில் வைச்சிருக்காரு ஐயன்!

காலங்காலமா இதுமாரி மேல்சாதில பொறந்து வளந்து வர்ற இது மாரியான
ஆளுங்க, ஒண்ணுமே இல்லாத ஏளையாப் போனாக்கூட, அவங்ககிட்ட
துட்டே இல்லாமப் போனாக்கூட, மேல சொன்ன அந்த நாலு கொணங்களை
மட்டும் விட்டுக் கொடுக்காமக் காப்பாத்துவாங்களாம்! ஏன்னா, அவங்க பொறந்த
சாதி அதுமாரி! அந்தச் சாதியில பொறந்தவங்களுக்கு இந்த மாரி நல்ல
கொணமெல்லாம் விட்டே போவாதுன்னு ஐயன் உறுதியாச் சொல்றாரு.

சலம்பற்றிச் சார்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார். [956]

முந்தி சொன்ன அல்லாக் குறளையும் சேர்த்துவைச்சு இதுல சொல்றாரு ஐயன்!
இந்தமாரி நல்ல ஒசந்த குடியில பொறந்தவங்க தங்களோட குலப்பெருமை
இன்னா ஏதுன்னு நல்ல ஒணர்ந்து, அதை மீறித் தப்புத்தண்டாவா எந்த ஒரு
காரியமும் செய்ய மாட்டாங்களாம். அவ்ளோ நல்லவங்க இவங்கள்லாம்!

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. [957]

எதுக்காக இப்பிடி இவங்கள்லாம் நடக்கறாங்க? அப்பிடி நடக்கலைன்னா
இன்னா ஆவும்? பவுர்ணமி அன்னிக்கு வானத்துல முளு நிலா பாக்கறேல்ல?
அதுல இன்னா தெரியுது? வெள்ளைவெளேர்னு நிலா! அதுக்கு நடுவுல இங்கியும்,
அங்கியுமா கறுப்பா, திட்டுத்திட்ட சில புள்ளிங்க! நிலாவை விட அந்தப்
புள்ளிங்கதான் பளிச்சுன்னு கண்ணுக்குப் படுது இல்லியா? அதுமாரி, இந்தமாரி,
மேல்சாதிக்காரங்க எதுனாச்சும் தப்புத்தண்டாவா பண்ணினா, அதான் மொதல்ல
மத்தவங்க கண்ணுல பட்டு உறுத்தும்ன்றதை நல்லாத் தெரிஞ்சு வைச்சிருப்பாங்க
இவங்கன்னு ஐயன் சொல்றாரு.

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும். [958]

சரி, இதுமாரி மேல்சாதியில பொறந்த ஒருத்தங்கிட்ட அபூர்வமா இதுமாரி
கொணம் இல்லாமப் போவுதுன்னு வைச்சுக்க! ஆனா, அவனோ, தான் இன்ன
சாதிக்காரன்னு ஊருல, ஒலகத்துல தன்னைச் சொல்லிக்கறான்னா, அவன்
அந்த சாதிக்காரனே இல்லைன்னு புரிஞ்சுக்கோன்னு எச்சரிக்கை பண்றாரு!
இதுமாரி வேசம் போடறவந்தான் இந்தக் காலத்துல ரொம்பவே ஜாஸ்தி!
இவனுங்களைல்லாம் அடையாளம் கண்டுபிடிக்க இந்தக் குறளு ரொம்பவே
ஒத்தாசையா இருக்கும் நம்மளுக்கெல்லாம்!

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். [959]

இப்ப ஒரு விதையை பூமியில நடறே! அது நல்ல வளமான பூமின்னா, மொளைச்சு
வர்ற அந்தச் செடி நல்லா பூரிப்பாக் காட்டிரும். அதுவே ஒரு சொத்தை பூமின்னா, செடியும் நோஞ்சானாத்தான் இருக்கும் ரைட்டா? அதேமாரி, ஒர்த்தன் வாயிலேர்ந்து வர்ற வார்த்தைங்களை வைச்சே இவன் இன்னா கொலத்துல, சாதில பொறந்திருக்கான்னு கண்டுபுடிச்சிரலாமாம்!

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு. [960]

இவ்ளோ நேரம் இப்பிடி இந்த மேல்சாதி ஆளுங்களைப் பத்தி சொன்ன நம்ம
ஐயன் இதுல ஒரு பொடி வைச்சு அல்லாத்தியும் புட்டுப் புட்டுக் காமிச்சிடறாரு!

ஒர்த்தனுக்கு நல்லது நடக்கணும்னா, அவங்கிட்ட ஒரு அச்சம், பயம், தப்பு
பண்ணக்கூடாதேன்ற வெக்கம் இருக்கணும். அப்பத்தான் அப்பிடில்லாம் செய்யாம இருப்பான்.

அதேபோல, நீ மேல்சாதிக்காரன்னு சொல்லிக்கணுமா? நல்ல குடியில
பொறந்தவன்னு காட்டிக்கணுமா, என்னோட கொலம் ஒசந்த கொலம்னு
பெருமை பாராட்டனுமா, மொதல்ல அல்லார்கிட்டயும் பணிஞ்சு, அடக்கமா
இருக்கக் கத்துக்கோ! அதுதான் மேல்சாதி, அதுதான் நல்ல குடி, அதுதான் ஒசந்த கொலம்!

மத்தபடி, நீ பாப்பானா, செட்டியாரா, மொதலியாரா, நாடாரா, இல்லை,
தாழ்ந்த சாதியான்றதுல்லாம் இங்க மேட்டரே இல்லை! அடுத்தவன்கிட்ட எவன் பணிவா நடந்துக்கறானோ, அவந்தான் மேல்சாதிக்காரன்னு 'டமார்'னு ஒரு குண்டைப் போட்டு முடிக்கறாரு ஐயன்! இன்னா கில்லாடி பாரு இவரு' எனச் சொல்லிச் சிரித்தான் மன்னார்!

ஆரம்பத்தில் சற்று குழப்பமாக இருந்த நானும் இப்போது ஒரு தெளிவு பெற்ற
நிம்மதியுடன், மன்னாரைப் பணிவுடன் வணங்கிக் கொண்டேன்!
சிர்ப்பின்னும் மாறாமல் என் தோள்மீது கைபோட்டு 'சங்கீதா' நோக்கி என்னை
அழைத்துச் சென்றான் மயிலை மன்னார்!
***********************************************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP