Tuesday, October 09, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 13

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 13

முந்தைய பதிவு இங்கே!






11.
"ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்


ஒருவந்தம் கைத்துடை யார். [593]


காலையில் பார்த்த அதே ஓட்டல்காரர்!

அவரைப் பார்க்கவே சங்கடமாயிருந்தது.

'அது... வந்து.... வந்து..இல்ல..வண்டி...' என இழுத்தான்.

சட்டென்று, முகத்தை உயர்த்தி, அவரைப் பார்த்து, 'இங்கே எதுனாச்சும் வேலை இருக்குமா? காசு வேணாம். கூலியா சாப்பாடு கொடுத்தீங்கன்னா போதும்' என்றான்.

ஓட்டல்காரர் ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்தார்.

முகத்தில் ஒரு வேதனை படர்ந்தது.

'மொகத்தைப் பாத்தா, அந்த 2 இட்டலிக்கு அப்புறம், வேற ஒண்ணும் சாப்ட்ட மாரித் தெரியலியே. மொதல்ல வாங்க. வந்து சாப்பிடுங்க. பொறவால மத்தக்கதை பேசிக்கலாம்' என்றார்.

இவரைப் போய் தப்பா நினைச்சோமே என துக்கமாயும் அவமானமாகவும் இருந்தது கந்தனுக்கு.

'இல்லீங்க! பசிக்கலை இப்ப. நா எதுனாச்சும் வேலை செய்யறன் முதல்ல' என்றபடியே தன் பையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, அதில் இருந்த துண்டை எடுத்து, டேபிளைத் துடைக்க அரம்பித்தான்.

'பய சின்னவனா இருந்தாலும், சுயமாரியாதைக்கார பயலாத்தேன் இருக்கேன். சரி, பார்க்கலாம்' என்று நினைத்தபடியே, தனக்குள் சிரித்துக் கொண்டார்.

மீசையை நீவி விட்டபடியே, அவன் வேலை செய்யும் நேர்த்தியைக் கவனித்தார்.

கந்தன், வரிசையாக எல்லா டேபிளையும் துடைத்தான்.

நாற்காலிகளை ஒழுங்காக சரிபடுத்தினான்.

ஓரத்தில் இருந்த விளக்குமாறை எடுத்து, தரையைக் கூட்டினான்.

பின்பக்கம் சென்று, தண்ணீர் எடுத்து வந்து, ட்ரம்மில் நிரப்பினான்.

இலைகளை எடுத்து, குப்பைக்கூடையில் போட்டுவிட்டு, தட்டுகளைக் கழுவி, ஈரம் போக ஒரு சுத்தமான துணியால் துடைத்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தான்.

'பரவாயில்லை! பையன் துடியாத்தேன் இருக்கேன்' என மனதிற்குள் சிலாகித்துக் கொண்டார்.

'நீ செஞ்சதெல்லாம் போறும். வா. கைகால் களுவிட்டு, வந்து சாப்பிடு'' என்று அவர் ஒருமையில் அழைக்க ஆரம்பித்தது, கந்தனுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

நல்ல பசி இப்போது வயிற்றைக் கிள்ளியது.

ஒரு தட்டில் அரிசிச்சோறு வைத்து, நடுவில் குழம்பு விட்டு, ஒரு அப்பளம் வைத்து அவன் முன்னே வைத்தார்.

கந்தன் அவசர அவசரமாக அள்ளித் தின்னத் துவங்கினான்.

'நா அப்பதே சொன்னேன். நீதான் கேக்காம அவன் பின்னாடி போயிட்டே! அவ்ளோ பணத்தை அவங்கிட்ட பொசுக்குனு எடுத்துக் காமிச்சதுமே திக்குனு ஆயிருச்சு எனக்கு. அவன் மூஞ்சியைப் பார்த்ததுமே தெரிஞ்சுது, இவன் நல்லவனில்லேன்னு. இதெல்லாம் இங்கன வெச்சுக்காதேன்னு கண்டிசனா வார்ன் பண்ணினேன். அந்தப் பாவிப்பய என்ன சொன்னானோ, ஏது சொன்னானோ.. நீயும் பொட்டிப்பாம்பா அவன் பின்னாடியே விசுக்குனு போயிட்டே! இப்ப அல்லாத்தியும் தொலைச்சிட்டு வந்து நிக்கறேன்னு நினைக்கறேன். சரிதானே!' என்றார்.




கந்தன் பூம்பூம் மாடு போலத் தலையை ஆட்டினான்.



' ஒன்னியப் பாக்க பாவமா இருக்கு! அது கிடக்கட்டும். என்ன ஏதுன்னு விசாரிக்கலாம் பொறவு. அப்போ, இங்கே வேலை பாக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா நீ?' என்ற ஓட்டல்காரரின் கேள்வி அவனுக்கு அதிர்ச்சியாயிருந்தது.

வாய் நிறைய சோறு இருந்ததால், தலையை வேகமா 'இல்லை, இல்லை' என்பது போல் ஆட்டினான்.

அவசர அவசராமக ஒரு மடக்கு தண்ணீரைக் குடித்துவிட்டு, 'நாளைக்கி வரைக்கும் என்ன வேலைனாலும் குடுங்க செய்யறேன். ரா முளுக்க வேணும்னாலும் செய்யறேன்.
நாளை சாயந்தர வண்டிக்கு சென்னைக்கு போவ துட்டும், கைச் செலவுக்கு பணமும் மட்டும் தந்தா போறும்' என்றான் தீவிரமாக.

மீசைக்காரர் சிரித்தார்.

'ராவா பகலா ஒரு ஆறு மாசம் வேலை செஞ்சியானாத்தான், அவ்ளோ பணம் சேக்க முடியும் ஒன்னால!'

கையில் எடுத்த சோறு அப்படியே தட்டில் அவனையறியாமல் விழுந்தது.

இந்த உலகமே அவன் தலையில் விழுந்தது போல ஒரு உணர்வு!

ஜங்ஷனின் ஆரவாரமெல்லாம் அப்படியே நிசப்தமாகியது.

நம்பிக்கைகள், கனவுகள் எல்லாம் அப்படியே நொறுங்கிப் போய், இந்த விநாடியே செத்துப் போயிட மாட்டோமான்னு இருந்தது.

ஓட்டல்காரர் அனுதாபத்துடன் அவனைப் பார்த்தார்.

காலையில் உற்சாகமாகக் கடையினுள் நுழைந்த அந்தப் பையன், இப்போது எல்லாம் தொலைந்து போன ஒருவனாகத் தன் எதிரில் இருப்பதை உணர்ந்தார்.

'ஒன் சொந்த ஊருக்குப்போறதுக்கு வேணா, ஒரு லாரில அனுப்பி வைக்கறேன் ஒன்னை' எனக் கரிசனத்துடன் சொன்னார்.

கந்தன் எழுந்தான். கற்கள் இருந்த பையை ஒருமுறை தொட்டுப் பார்த்தான்.
ஓட்டல்காரரைப் பார்த்து, உறுதியான குரலில் சொன்னான்.

'இல்லீங்க! ஊருக்கு போவறதா இல்லை! சரி, ஆறு மாசம் இங்கே வேலை பாக்கறேன்!'

பெரியவர் சொன்னது போல, கற்களிடம் கேட்காமல், தானே ஒரு முடிவு எடுத்ததை எண்ணினான்.

பெருமிதம் கலந்த ஒரு புன்னகை தவழ்ந்தது அவன் முகத்தில்.

சற்றுப் பொறுத்து மெதுவாகச் சொன்னான்....

"வெறுமனே ஊருக்குப் போயி புண்ணியம் இல்லை. பத்துப் பதினைஞ்சு ஆடு வாங்கப் பணம் வேணும்!"

[தொடரும்]
**********************************************

அடுத்த அத்தியாயம்

25 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் Thursday, October 11, 2007 9:12:00 PM  

கந்தன் நிலமை இப்படி ஆகிவிட்டதே!!
நினைப்பு மாத்திரம் ஆட்டை விட்டு போக மாட்டேன் என்கிறது!!கந்தனுக்கு.

VSK Thursday, October 11, 2007 9:19:00 PM  

//துளசி கோபால் said...
ம்.....அப்புறம்?//


திங்கள் காலை பார்க்கலாம்!

VSK Thursday, October 11, 2007 9:20:00 PM  

மனம் சோர்ந்து போகும்போது, இருந்ததையாவது மீண்டூம் பெறத்தானே விரும்பும்?
இல்லையா, திரு.குமார்!

jeevagv Thursday, October 11, 2007 10:20:00 PM  

கந்தனுக்கு வாழ்த்துக்கள், கதிர்வேலன் துணை இருக்க. மணி மணியாய் இரு கற்கள் மணிபூரச் சக்ரத்தின் அதிபதியாய் வழி நடத்த.

இலவசக்கொத்தனார் Thursday, October 11, 2007 10:32:00 PM  

சரிதான். அடுத்த ஆறு மாசம், இல்லை சேர்க்க வேண்டியதை இவன் மூணு மாசத்தில் சேர்த்திடுவான், அதனால அடுத்த மூணு மாசம் இங்கதான். அதை வெச்சு ஒரு வாரம் ஓட்டிடுவீங்களா? மெகா சீரியல் ரேஞ்சுக்குப் போவுது மாமே!!!

VSK Thursday, October 11, 2007 10:38:00 PM  

அதாவது, மூலாதாரத்தில் இருந்து ஒரு அக்கினி கிளம்பி, மணிபூரக சக்கரத்துக்கு வந்திருக்கிறது எனச் சொல்ல வருகீர்களா, திரு.ஜீவா!

நல்ல சிந்தனை எனவே சொல்லணும் இதை!

:))

VSK Thursday, October 11, 2007 11:24:00 PM  

//மெகா சீரியல் ரேஞ்சுக்குப் போவுது மாமே!!!//

இது சிறுகதை இல்லை கொத்ஸ்!

கொஞ்சம் பெருசுதான்!

ஆனா, பயப்படாதீங்க!
மெகா சீரியல் ரேஞ்சுக்கெல்லாம் போகாது.
:))

ACE !! Friday, October 12, 2007 1:53:00 AM  

நல்ல கதை.. கந்தனுக்கு இந்த அனுபவம் ஒரு நல்ல பாடமாய் இருக்கட்டும் :)

தி. ரா. ச.(T.R.C.) Friday, October 12, 2007 3:30:00 AM  

Reading but no comments. comments reserved.

நாகை சிவா Friday, October 12, 2007 4:29:00 AM  

மதுரையில் இருக்கும் சில மதுரை வாசம் வீசுமா...

பணம் சேர்க்க ஆறு மாதம்... உண்மை மெல்ல உரைக்கிறது கந்தனுக்கு....

jeevagv Friday, October 12, 2007 11:25:00 PM  

//அதாவது, மூலாதாரத்தில் இருந்து ஒரு அக்கினி கிளம்பி, மணிபூரக சக்கரத்துக்கு வந்திருக்கிறது எனச் சொல்ல வருகீர்களா, திரு.ஜீவா!//
அப்படியேத்தான் ஐயா!
அப்படி மேலேழுப்பும்போது, கூடவே எழுந்தது வரும் பயத்தை போக்கவே, எம்பெருமான், கூரான வேலுடன் 'யாமிருக்க பயமேன்?' என்று அருளாவான் அல்லவா!
அதனாலேயே மணிப்பூர சக்ரத்திற்கு அவனே அதிபதியாம்.

மங்களூர் சிவா Saturday, October 13, 2007 9:31:00 AM  

//
ஆனா, பயப்படாதீங்க!
மெகா சீரியல் ரேஞ்சுக்கெல்லாம் போகாது.
//

:-))

//
ம்.....அப்புறம்?
//
ரிப்பீட்

G.Ragavan Saturday, October 13, 2007 9:49:00 AM  

கந்தன் இப்பொழுதுதான் பக்குவப் படத் தொடங்கியிருகிறான். தன் முடிவைத் தானே எடுக்கும் திறம் வந்திருக்கிறது. ஊருக்குப் போனாலும் புதையலூருக்குப் போனாலும் வெறும் கை முழம் போடாது என்பதும் புரிந்திருக்கிறது. நல்ல தொடக்கம்.

VSK Sunday, October 14, 2007 9:44:00 AM  

//நல்ல கதை.. கந்தனுக்கு இந்த அனுபவம் ஒரு நல்ல பாடமாய் இருக்கட்டும் :)//

நன்றி திரு. 'சிங்கம்லே Ace'!

நம் எல்லாருக்குமே இது ஒரு தெளிவை உண்டுபண்ணும் என நம்புகிறேன்.

VSK Sunday, October 14, 2007 9:45:00 AM  

//அதனாலேயே மணிப்பூர சக்ரத்திற்கு அவனே அதிபதியாம்.//

இப்படியே அடுத்தடுத்து உங்கள் கண்களுக்குத் தெரியும் சக்கரங்களையும் அடையாளம் காட்டுங்கள் திரு. ஜீவா.

VSK Sunday, October 14, 2007 9:48:00 AM  

//ம்.....அப்புறம்?
//
ரிப்பீட்//

இதோ! இன்று முதல் மீண்டும் தொடரும், திரு. ம. சிவா!
நன்றி.

VSK Sunday, October 14, 2007 9:50:00 AM  

// வெறும் கை முழம் போடாது என்பதும் புரிந்திருக்கிறது. //

உள்ளே தெரியும் கருத்துகளை இப்படியே சிறப்பாகச் சொல்லி வாருங்கள், ஜி.ரா.

MSATHIA Monday, October 15, 2007 5:09:00 PM  

இந்த அத்தியாயத்தில் பயங்கர பாலகுமார வாசனை எழுத்து நடையில் :-)

VSK Monday, October 15, 2007 9:11:00 PM  

இதுக்கே இப்படி சொன்னீங்கன்னா, அடுத்த அத்தியாயம் படிச்சதும் என்ன சொல்வீங்களோ, சத்தியா!
:))

வல்லிசிம்ஹன் Tuesday, October 16, 2007 12:42:00 AM  

ஆன்மீக எழுத்து எல்லாத்திலேயும்
எல்லோருடய சாயலும் இருக்கும்.
பகவான்,ஞானம் என்று வரும்போது சிந்தனைகள் வார்த்தைகள் ஒற்றுமையாகத் தெரியலாம்.

ஆனால் கந்தன் தேடுவது என்னைப் பொறுத்தவரையில் புதுமையாகத் தான் இருக்கிறது.

கந்தன் சிரமப்பட்டே முன்னுக்கு வரட்டும். அப்போதுதான் பெருமை

VSK Tuesday, October 16, 2007 9:09:00 AM  

//மதுரையில் இருக்கும் சில மதுரை வாசம் வீசுமா...//

மதுரைக்காரெங்கேதேன் வந்து சொல்லணும் அதை, நாகையாரே!!

VSK Tuesday, October 16, 2007 9:12:00 AM  

//பகவான்,ஞானம் என்று வரும்போது சிந்தனைகள் வார்த்தைகள் ஒற்றுமையாகத் தெரியலாம்.//


அதே! அதே! வல்லியம்மா!
ரொம்ப நன்றி.
நான் எவருடைய நடையையும் பின்பற்ற முயலவில்லை.

இயல்பாகத்தான் எழுத முயற்சித்தேன்.

அவர்களையெல்லாம் படித்திருப்பதால், சில சமயங்களில் அப்படி தோன்ற வாய்ப்பிருக்கு என ஒத்துக் கொள்கிறேன்.

cheena (சீனா) Saturday, October 20, 2007 4:11:00 AM  

பலர் எழுதியதைப் படித்தால், மனம் ஒன்றிப் படித்தால், உடனே நாம் எழுதினால், அவர்களின் தாக்கம் நமது எழுத்துகளில் இருக்கும். தவிர்க்க இயலாது.

ஆறு மாதம் மதுரையில் கதை தொடரும்.

மூலாதாரம்-மணிப்பூர சக்கரம் - புரியவில்லை.இன்னும் நிறையப் படிக்க வேண்டும்.புரிந்து கொள்ள.

சொந்த ஊருக்குத் திரும்புவது என்றாலும் ஆடுகள் வாங்கப் பணம் வேண்டும். ஆக மொத்தத்தில் மதுரை வாசம் தொடரத்தான் வேண்டும்.

VSK Saturday, October 20, 2007 5:34:00 PM  

//பலர் எழுதியதைப் படித்தால், மனம் ஒன்றிப் படித்தால், உடனே நாம் எழுதினால், அவர்களின் தாக்கம் நமது எழுத்துகளில் இருக்கும். தவிர்க்க இயலாது.//

அப்படித்தான் என நானும் எண்ணுகிறேன்.

//ஆறு மாதம் மதுரையில் கதை தொடரும். //

அதற்கு மேலும் ஆகலாம்!:))

//மூலாதாரம்-மணிப்பூர சக்கரம் - புரியவில்லை.இன்னும் நிறையப் படிக்க வேண்டும்.புரிந்து கொள்ள.//

திரு. ஜீவா அற்புதமாக இதன் உள்ளிருக்கும் நிகழ்வுகளை நம் உடலில் இருக்கும் சக்கரங்களோடு ஒப்பிட்டு, கந்தன் படிப்படியாக உயர்வதைச் சுட்டிக்காட்டி இருந்தார்.
அதுதான் இது!

//சொந்த ஊருக்குத் திரும்புவது என்றாலும் ஆடுகள் வாங்கப் பணம் வேண்டும். ஆக மொத்தத்தில் மதுரை வாசம் தொடரத்தான் வேண்டும்.//

சரியாகவே யூகித்திருக்கிறீர்கள் திரு. சீனா!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP