Friday, September 18, 2009

"உன்னைப்போல் ஒருவன்" - திரை விமரிசனம் [சுடச்சுட!!]


"உன்னைப்போல் ஒருவன்" - திரை விமரிசனம் [சுடச்சுட!!]




ரஜினி படங்களுக்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் போய், சும்மா ரசித்துவிட்டு மட்டும் வருவது என் வாடிக்கை.
அதே சமயம் கமல் படங்களுக்கு அதில் எதிர்நேராய்!
'இந்தப் படத்துல என்ன பண்ணி சொதப்பிடுவாரோ; தான் ஒரு ஜீனியஸ்ன்றதுக்காக எப்படியெல்லாம் கதையை மாத்திக் கெடுத்துருவாரோன்ற ஒரு பயம் எப்பவும் அடிவயித்தைக் கலக்கிகிட்டே இருக்கும்!
'வெட்னெஸ்டே'ன்ற ஹிந்திப் படத்தை வைச்சு "உன்னைப்போல் ஒருவன்" எடுக்கறாருன்னதும் எனக்கு ஜுரமே வந்திருச்சு!

தீவிரவாதத்தை ஒரு சாதாரணக் குடிமகன் எப்படி எதிர்கொள்ள முடியும் என்கிற மிக அருமையானதொரு கருத்தை இந்தப் படத்தில் சொல்லியிருப்பாங்க.
நஸுருதீன் ஷா வின் பிரமிக்க வைக்கும் நடிப்பு; அதற்குச் சவாலாக விளங்கும் போலீஸ் கமிஷனர் பாத்திரம், அந்த நிருபர், உதவிக் காவல்துறையினர் என ஒட்டுமொத்தமாக திறம்பட விறுவிறுப்பு குறையாமல் எடுக்கப்பட்ட படம் அது.

அதனால், இன்று இரவு 9 மணிக்குத் திரையிடுகிறார்கள் என்றவுடன் முதல் காட்சிக்கே ஆஜராயிட்டேன்.
இன்றும், நாளையும் வேலைநாள் என்பதால் அதிகக் கூட்டமில்லை. ஒரு 25 பேர்தான் அரங்கில்!
இதுவே 'எந்திரன்' ரிலீஸ்னா எப்டி இருக்கும் தியேட்டர் என யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்!

நேரடியாகப் படம் துவங்கியது.
அதிக மாற்றங்கள் செய்யாமல், அதிகமாகச் சொதப்பாமல் அந்த விறுவிறுப்பு சற்றும் குறையாமல் எடுத்ததற்காக முதலிலேயே கமலுக்கு ஒரு 'சபாஷ்'!

இதன் முக்கியக் காரணம் மோஹன்லால் என்னும் அற்புதமான நடிகரின் சவாலான நடிப்பு.
கடைசிக் காட்சியைத் தவிர தனது உணர்ச்சி மிகுந்த நடிப்பைக் காட்ட கமலுக்கு இதில் வாய்ப்பே இல்லை என்பதை நன்கு புரிந்த மோஹன்லால் காட்சிக்குக் காட்சி வெளுத்து வாங்கியிருக்கிறார்!
குண்டுவெடிப்பு பற்றிய தகவல் கிடைத்ததும் எடுக்கின்ற துரிதமான நடவடிக்கைகள், தலைமைச் செயலருடன் பேசும்போது காட்டும் அலட்சியம், நடக்கப்போவதைப் பற்றிய தெளிவான ஒரு அறிவு என பின்னிப் பெடலெடுத்திருக்கிறார்! அவருக்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
மற்ற நடிகர்களும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து அளவோடு நடித்திருக்கின்றனர்..... குறிப்பாக அந்த இரு துணைக் காவலதிகாரிகள்!

ஏற்கெனவே ஹிந்திப் படத்தைப் பார்த்தவர்களுக்கு இதில் புதிதாக ஏதுமில்லை.... மோஹன்லாலின் நடிப்பைத் தவிர.
ஆனால், இதுபோன்ற படங்களைக் கண்டிப்பாகப் பார்த்திராத தமிழக மக்களுக்கு இது ஒரு திருப்புமுனைப் படம் எனச் சொல்லலாம்.
சொல்லப்போனால், இது தமிழ் ரசிகர்களுக்கு கமல் விடுத்த மறைமுகச் சவால் எனலாம்!

'இந்தக் காலத்துல நம்ம ஆளுங்க நேரா ஒரு கதை சொன்னா எங்கே பார்க்கறாங்க?
ஒரு காதல் கதை, அதுல ரெண்டு குத்துப்பாட்டு, மூணு சண்டை, கொஞ்சம் செண்டிமெண்ட்டு, வடிவேல்/விவேக் காமெடி இதெல்லாம் இல்லைன்னா படம் ஓடாது எனச் சொல்லிவரும் திரையுலகினர் சரியா, ....இல்லை,....தமிழ் ரசிகர்களை அவர்கள் துல்லியமாக எடை போட்டிருக்கிறார்களா என்பதை நிருபிக்கும் பொறுப்பைக் கமல் தமிழ் ரசிகர்களுக்கு விடுத்திருக்கிறார் என அடித்துச் சொல்லுவேன்!

ஹிந்திப் படத்தை அப்படியே தமிழ் ஒலி கொடுத்துகூட கமல் வெளியிட்டிருக்கமுடியும்.
அப்படிச் செய்யாமல், நல்ல நடிகர்களைப் பொருத்தமாகத் தேர்வுசெய்து, காமெடி, சண்டை, பாட்டு என்றெல்லாம் சோதிக்காமல், மிகச் சிறந்த தமிழ்த் திரைப்படத்தை அவர் கொடுக்க முன்வந்ததற்காகவே இதை ஒரு வெற்றிப்படமாக்கச் செய்வது ஒவ்வொரு தமிழ் திரைப்பட ரசிகரின் கடமை என எனக்குப் படுகிறது.

குறைகள்????
இருக்கின்றன!

முதலமைச்சர் பாத்திரத்தில் கலைஞரே நடித்திருப்பதுபோலத் தோன்ற வைத்திருக்கிறார் கமல்!...... குரல் வழியாக!
ஆனால், அதுதான் படத்தின் ஒரே காமெடி ட்ராக்! தவிர்த்திருக்கலாம்!
லக்ஷ்மியின் பாத்திரப் படைப்பு சரியாக வடிவமைக்கப் படவில்லை!
ஸ்ருதியின் இசை வெட்னெஸ்டே படத்திலிருந்து துளியும் மாறவில்லை!
கமலே எழுதிப் பாடிய ஒரே ஒரு பாடல் 'டைட்டிஸ்' போடும்போதும், 'க்ரெடிட்ஸ்' போடும்போதும்! சொல்லும்படியா ஒன்றுமில்லை!
நஸுருஷீன் அளவுக்கு கமலின் நடிப்பு இல்லையென்றே எனக்குப் பட்டது.

ஆனால், இதையெல்லாம் தவிர்த்து நான் முன்சொன்ன காரணத்துக்காகவே இதை ஒரு வெற்றிப் படமாக்கினால், மேலும் தரமான திரைப்படங்கள், வழக்கமான ஃபார்முலாவிலிருந்து மாறி வரக்கூடும் என்னும் நம்பிக்கையை இந்தப்படம் விதைத்திருக்கிறது.
அதைச் செயலாக்கச் செய்வது தமிழ் ரசிகர்கள் கையில்!

தொடக்கத்தில் ரஜினியை இதில் இழுத்திருந்தேன்... காரணமாகவே தான்!
ஒரு தரமான 'ரீ-மேக்' படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதை ரஜினி
கமலின் இந்தப் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளணும்! குசேலன் கொடுமை நினைவில் வந்து தொலைத்தது!

ஆக மொத்தம் 'உன்னைபோல் ஒருவன்'......

.... இதுவரையில் இல்லை!

தரமான தமிழ்ப்படங்கள் வேண்டுமென விரும்பும் எல்லாரும் அவசியம் பாருங்க மக்கா.... திரையரங்கில்!
***********************************************************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP