Tuesday, December 01, 2009

அ.அ. திருப்புகழ் - 35

அ.அ.திருப்புகழ் - 35 'எழுகுநிறை நாபி'


திருக்கழுக்குன்றம் மேவிய திருமுருகனைக் குறித்த பாடல் இது! கார்த்திகைக் கார்த்திகைத் திருநாளில் இதனை இடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! முருகனருள் முன்னிற்கும்!

**** பாடல் ****

எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதி
யிலகுமரன் மூவர் முதலானோர்


இறைவியெனு மாதி பரைமுலையினூறி

யெழுமமிர்த நாறு கனிவாயா


புழுகொழுகு காழி கவுணியரில் ஞான

புனிதனென ஏடு தமிழாலே


புனலிலெதி ரேற சமணர்கழு வேற

பொருதகவி வீர குருநாதா


மழுவுழைக பால டமரகத்ரி சூல

மணிகரவி நோத ரருள்பாலா


மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலை

வளமைபெற வேசெய் முருகோனே


கழுகுதொழு வேத கிரிசிகரி வீறு

கதிருலவு வாசல் நிறைவானோர்


கடலொலிய தான மறைதமிழ்க ளோது

கதலிவன மேவு பெருமாளே.


*****************************


******* பொருள் *******

இந்த அரிய பாடல் திருமுருகனிடம் எதையும் வேண்டாமல் அவனைப் போற்றும் வண்ணம் அமைந்த ஒரு சிறப்புப் பாடல்!எனவே, முதலில் இருந்தே பார்க்கலாம்!

எழுகுநிறை நாபி அரி

பூ, புவ, சுவ, சன, தபோ, மகா, சத்தியமெனும்
ஏழுலகைத் தன்நாபியெனும் வயிற்றிலொரு

பந்தாகச் சுருட்டிய திருமாலும்


பிரமர்

படைத்தல் தொழில் செய்யும் பிரமன்

சோதி

ஒளிமயம் பொருந்திய உருத்திரன்

இலகுமரன்

இம்மூவர்க்கும் மேலான சிவனின் மைந்தன் திருக்குமரன்

மூவர் முதலானோர் இறைவியெனு மாதி
[மூவர் முதலானோர் இறைவி எனும் ஆதி]


மேற்சொன்ன மூவர்க்கும் ஏனைய தேவர்க்கும்
தலைவியாகி சிவனுடன் விளங்கும் ஆதியன்னை


பரைமுலையின் ஊறி எழும் அமிர்தம் நாறு கனிவாயா

உமையவளின் திருமுலையில் எழுந்துவரும் அருள்ஞானப் பாலினை அளவின்றிப் பருகி அதனில் ஊறித் திளைத்து மணக்கும் கனிபோலும் வாயினையுடைய திருக்குமரா!

புழுகொழுகு காழி

வாசனை நிறை புனுகு எங்ஙனும் மலிந்திருக்கும் சீகாழியெனும் திருப்பதியில்

கவுணியரில் ஞான புனிதனென

சைவம் தழைத்தோங்கும் கவுணியர் குலத்தினிலே
திருமுருகன் சொரூபமாய்த் திருஞானசம்பந்தரெனும்

புனிதனாய் அவதரித்து


ஏடு தமிழாலே புனலில் எதிரேற

இணையாக வளராமல் எதிர்த்தொழித்து அழிக்கவெனச்
சைவைத்தை வேரறுக்கும் வஞ்சநெஞ்சம் கொண்டவராய்ச்

சமணரெனும் சமயத்தவர் வாதுசெய்ய அழைத்திருந்தார்

மதுரைக்கு வருகைதந்து சத்திரத்தில் தங்கிவந்த

சம்பந்தர் எதிர்வந்து அனல்வாதம் செய்துவென்று

புனல்வாதம் செய்திடவும் இறையருளால் துணிந்திருந்தார்

ஏடெழுதி வைகையிலே மிதக்கவிட்டுப் பார்த்திடவே

வீணரவர் கொக்கரிக்க, இறையருளை மனம்வேண்டி

'வாழ்க அந்தணர்' எனும் ஏடெழுதி நீரிலிட்டார்

கூடவந்த ஏடெல்லாம் நீரலையில் கொண்டுசெல்ல

இந்தவொரு ஏடுமட்டும் எதிரெழுந்து நின்றதுவே

புனல்வாதம் வென்றதுவே புனிதரிவர் திருவருளால்!


சமணர் கழுவேற பொருத கவிவீர

வீண்வாது செய்திருந்த சமணரெல்லாம் தோற்றுவிட
தோற்றவர்க்கு விதித்தபடி எண்ணாயிரம் சமணரெல்லாம்

கழுமரத்தில் மாளச்செய்து சைவம் தழைக்கச்செய்யக்

கவிப்புலமை வீரம் காட்டிக் காத்திட்ட கவிவீரனே!


குருநாதா

சம்பந்தர் வடிவில் வந்துதித்த குருநாதனே!

மழுவுழை கபால டமரக த்ரிசூல மணிகர விநோதர்

அண்டிவரும் அடியாரின் பாவமெலாம் எரிக்கின்ற
மழுவென்னும் ஆயுதத்தை வலக்கையிலும்

இங்குமங்குமாய்த் துள்ளியோடி அல்லாடும்

மனமென்னும் மானை இடக்கையிலும்

அதிர்ந்துவரும் நாதவொலியால்

படைப்பினை நிகழ்த்திடும் உடுக்கினையும்

இச்சா,கிரியா,ஞானமெனும் மூவகைச்
சக்திகளை
மும்முனையாய்க் கொண்ட
திரிசூலமென்னும் ஆயுதமும்
செருக்குற்றப் பிரமனின்
ஐந்தலையில்
ஓர்தலையைக்
கிள்ளியெறிந்த கோபத்தால்
பாவம்வந்து சேர்ந்ததனால்

கையொட்டிக் கிடக்கும் மண்டையோடும்

மணியும் கைகளில் தாங்கிடும்

அற்புத உருவாம் சிவனாரின்


அருள்பாலா

அருளினால் தோன்றிட்ட சிவபாலனே!

மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலை
வளமைபெற வேசெய் முருகோனே


தன்னை மதியாத் தருக்கினில் கடந்த
பிரமனை அழைத்து ஆரென வினவ

செருக்குடன் "படைப்பவன்" எனவுரைசொன்ன

அயனை யுதைத்துத் தலையினில் குட்டிச்

சிறையினில் தள்ளி அயனவன் வேலையைத்

தானே நிகழ்த்திடப் பிரமனைப் போன்றே

ஒருமுகம், நாற்கரம் மாலை கமண்டலம்

கரங்களில் தாங்கிய பெருமையைப் பெற்ற

முருகப் பெம்மானே!


கழுகுதொழு வேத கிரி

கழுகுவந்து சிவம் தொழுதல்
யுகம்யுகமாய் நடக்குமிடம்


சண்டன், பிரசண்டரெனும்

இருகழுகு கிருதயுகத்தில்


சம்பாதி, சடாயுவெனும்

இருகழுகு திரேதத்தில்


சம்புகுத்தன், மாகுத்தன்

இருகழுகார் துவாபரத்தில்


சம்பு, ஆதியெனும்

இருகழுகார் கலியுகத்தில்


நாடோறும் நாடிவந்து

நண்பகலில் நான்மறையோதி


நல்லுணவு பெற்றுச்செல்லும்

நிகழ்வின்னும் நடக்குமிடம்


கழுகுவந்து பூசித்தலின்

கழுக்குன்றம் எனுமிந்த வேதகிரி


சிகரி வீறு கதிர் உலவு வாசல் நிறை வானோர்
கடல் ஒலியதான மறைதமிழ்கள் ஓது


மலைமுகட்டின் மணிமீது ஒளிபொங்கும் வாசல்முன்
நிறைந்ததொரு கூட்டமாய்
மறையோதும் வானவரும்
அழகுதமிழ்ப் பாடல்சொல்லும்
குரலொலிகள்
கடலலைபோல்
பெருத்தவொலி நிறப்பிவர
வணங்கிநிற்கும் செயல்புரியும்


கதலிவன மேவு

வாழைமரம் பெருகிநின்று தலைவளைத்துக்
குலைதள்ளும்
பெருவனமாய்ப் பொலிந்திருக்கும்
கழுக்குன்றம் தனிலுறையும்


பெருமாளே.

பெருமைமிகு முருகக் கடவுளே!
**********************
அருஞ்சொற் பொருள்:

எழுகு = ஏழு உலகு என்பதின் திரிபு
பரை = மேலான உமாதேவி

நாறு = வாசனை, மணம்

புழுகு = புனுகு என அழைக்கப்படும் வாசனைப் பொருள்

உழை = மான்

டமரகம் = உடுக்கு

விநோதர் = அற்புதமானவர்

அயன் = பிரமன்

கதலி = வாழை

******************
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
**********************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP