Sunday, May 10, 2009

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" - 25 "நட்பு"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" - 25 "நட்பு"

வடக்கு மாடவீதி களை கட்டி இருந்தது!
வழக்கத்தை விடவும் நல்ல கூட்டம்!
மாலை நேரக் காற்று இதமாக வீசியது!
அக்கினி நட்சத்திர வெயிலிலிருந்து விடுபட மக்கள் கூட்டம் கடைத்தெருவை மொய்த்தது!
'என்ன நாயர்! இன்னும் மன்னாரைக் காணுமே' எனக் கேட்டேன் டீயைச்
சுவைத்தபடியே! பக்கத்தில் பாஸ்கர் மசால் வடையை ஒரு கை பார்த்துக்
கொண்டிருந்தார்!
'வரும்! வரும்! வர்ற நேரந்தான்! அவசரப்படாதே' என வியாபாரத்தைக்
கவனித்தார் நாயர்!
'டக்'கென்று ஒரு ஆட்டோவில் வந்து அலட்சியமாக இறங்கினான்
மயிலை மன்னார்!
'இவன் எனக்கு எவ்வளவு சிறந்த நண்பன்! வேண்டுமெனும் போதெல்லாம்
உடனிருக்கிறானே' என மகிழ்ந்தவாறே அவனைப் பார்த்தேன்!

ஆனால், அவன் என்னைக் கவனிக்காமல், 'நீ பண்றது கொஞ்சங்கூட
நல்லால்லே! சொல்லிட்டேன்! ஆமா! இனிமே இப்பிடி பண்ணினேன்னா
அப்புறம் எங்கைதான் பேசும்! ஃப்ரெண்டாச்சேன்னு பொறுக்கறேன். இதுவே
இன்னொர்த்தனா இருந்தா நடக்கறதே வேற! இன்னா நெனைச்சுக்கினே நீ?' எனத் தன் அருகிலிருந்த கபாலியிடம் கோபமாகப் பேசிக் கொண்டிருந்தான்!

சாதாரணமாக இவனுக்கு கோபம் அவ்வளவா வராதே! எதனால் இந்தக் கோபம் என ஒன்றும் புரியாமல் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தேன்!
'சட்'டென என்னைப் பார்த்தவன், உடனே முகத்தில் ஒரு சிரிப்பை வரவழைத்துக்கொண்டு, கபாலியின் தோள் மீது கை போட்டபடியே, 'நீ எப்போ வந்தே? இன்னா சமாச்சாரம்?' என அன்புடன் வினவியபடியே இரண்டு 'டீ'க்கு நாயரிடம் ஆர்டர் கொடுத்தான்!

'ஜப்பானில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார்! பாஸ்கர்னு பேரு! இப்ப
இங்கே வந்திருக்கார்! அவர் உன்னைப் பார்க்கணும்னு பிரியப்பட்டார்!
அதான் கூட்டி வந்தேன். நல்லா கவிதையெல்லாம் எழுதுவார்!' என
அருகிலிருந்த பாஸ்கரை முன்னுக்கிழுத்தேன்!

'வாங்க சார்! வாங்க! உங்களைப் பத்தி நிறையவே சொல்லியிருக்கான் இவன்! என்னிக்கு வந்தீங்க?' என அன்பாக விசாரித்தபடியே என்ன வேணும் இப்ப? என்பதுபோல் என்னைப் பார்த்தான்!
'நட்பு' அதிகாரத்தை நீ சொல்லிக் கேட்கணுமாம். அதான்!' என்றபடி இழுத்தேன்!

பலமாகச் சிரித்தான் மன்னார்!
'இப்ப கபாலி கையில நான் பேசினதைக் கேட்டீங்க தானே! இதான் நட்பு!
அதுகூட இந்த அதிகாரத்துலதான் வருது! சரி, சரி! சொல்றேன். எளுதிக்கோ!'
என்றபடியே இங்குமங்குமாக நடை போட்டான் மயிலை மன்னார், 'டீ'யைச் சுவைத்தபடி!


இனி வருவது குறளும், மயிலை மன்னாரின் விளக்கமும்!

அதிகாரம் 79- 'நட்பு'


செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு. [781]


எத்தனையோ காரியம் நாம பண்றோம் தெனந்தோறும்! எத்தினியோ புச்சு
புச்சா கண்டுபிடிக்கறாங்க ஒலகத்துல. ஆனா இது அல்லாத்தியும் விட
அருமையான செயல் எதுன்னா ஒர்த்தருக்கொருத்தர் செஞ்சுக்கற நட்புதான்னு ஐயன் சொல்றாரு!
மத்த பொருளுக்கெல்லாம் ஒரு விலை இருக்கும்! ஆனா, இது ஒண்ணுதான்
விலையே இல்லாதது!
இதை மட்டும் சரியாப் புரிஞ்சுகிட்டு செஞ்சிட்டோம்னா, இதைப் போல ஒரு
பெரிய காரியமே இல்லைன்னு புரியும் ஒனக்கு!
அதேமாரி, எதிரிங்க செய்யற காரியத்தைத் தடுக்கறதுக்கும் இந்த நட்பைப்
போல வேற எதுவும் இல்லேன்னும் சொல்லலாம். தனியா இருக்கறதைவிட, கூட நாலு தோஸ்துங்க இருந்தாக்க, எதிர்க்க வர்றவங்கூட ஒரு நிமிசம் யோசிப்பான்ல!
எப்பவும் கூட நிக்கறது இந்த ஃப்ரெண்ட்ஷிப் ஒண்ணுதான்!



நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு. [782]


இந்த நிலாவைப் பார்த்திருக்கேதானே நீ! மாசத்துல பதினைஞ்சு நாளைக்கு
கொஞ்சம் கொஞ்சமா வளந்து ஒரு நாளைக்கி முளுசா இருக்கும்.
அடுத்த பதினைஞ்சு நாளைக்கு படிப்படியா தேய்ஞ்சுபோயி ஒரு நாளு
ஒண்ணுமேயில்லாமப் போயிறும்.
அப்பிடித்தான் சில பேரோட நட்பும்!
நல்ல அறிவோட இருக்கறவர்கூட வைச்சுக்கற நட்பு பவுர்ணமி மாரி வளந்து கிட்டே இருக்கும். பூரணமா இருக்கும்.
ஆனா, அறிவில்லாதவங்கிட்ட வைச்சுக்கற நட்பு தேய்பிறைச் சந்திரன் மாரி,
கொறைஞ்சுகிட்டே வந்து ஒரு நாளைக்கு இல்லாமியேப் போயிறுமாம்!
இதுல ஒண்ணு நல்லா கவனிச்சுக்கோ!
அறிவுன்றது நீ படிச்சதுனால வர்ற அறிவு இல்ல!
படிக்கறதோட பலன் நல்ல குணம்னு பாபா சொல்லுவாரே... அது!
எவ்ளோ படிச்சாலும் நல்ல கொணம் ஒங்கிட்ட இல்லேன்னா, நீ படிச்சதுக்கே பிரயோசனம் இல்ல!
புரிஞ்சுக்கோ!



நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு. [783]


இப்ப ஒரு புஸ்தகத்தைப் படிக்கறே நீ! சரி! இந்தத் திருக்குறளையேன்னு
வைச்சுக்குவோம்!
ஒவ்வொரு தபா படிக்கறப்பவும் ஒவ்வொரு மாரி புரிஞ்சு படிக்கப் படிக்க
செம குஜாலா இருக்கு இல்லியா?
அதுமாரித்தான் இருக்குமாம் நல்ல கொணம் இருக்கற ஆளுங்களோட நீ
வைச்சுக்கற நட்புமுன்னு ஐயன் சொல்றாரு.
ஒவ்வொரு தபாவும் தனித்தனியா ரொம்பவே சந்தோசமா இருக்கும் அந்த அனுபவம்!



நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. [784]

'கபாலிகிட்ட நான் பேசினதைப் பாத்து ஆச்சரியப்பட்டேதானே நீ? இன்னாடா!
இவனுங்க ரெண்டுபேரும் இன்னா தோஸ்த்துங்க! இப்பிடி எரிஞ்சு விளறானே
இந்த மன்னாருன்னு நெனைச்சியா இல்லியா? சும்மனாச்சும், பாத்தப்பல்லாம்
சிரிச்சுச் சிரிச்சுப் பேசறது மட்டும் ஒரு நண்பனுக்கு அளகில்ல. தோஸ்து
எதுனாச்சும் தப்பு பண்றன்னு தெரிஞ்சா, மொத ஆளா நின்னு 'நீ இதுமாரி
பண்றது தப்புடான்னு' சொல்லவும் வோணும். அப்பத்தான் நீ ஒரு உண்மையான தோஸ்து! கபாலி எனக்கு ரொம்பவே வேண்டியவந்தான். அதுனால அவனைக் கண்டிக்கறதுக்கும் எனக்கு உரிமை இருக்கு. இது எங்க ரெண்டு பேருக்குமே நல்லாப் புரியும். அதுனால, எங்களுக்குள்ள பிரசினை இல்லை. வெளங்குதா?'
இதைத்தான் இந்தக் குறள்ல ஐயன் சொல்றாரு.


புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும். [785]


'இப்ப உன்னியே எடுத்துக்குவோம்! நீயும் நானும் ஒண்ணா கொஞ்ச நாளு அஞ்சாங்கிளாஸ் வரைக்கும் படிச்சோம்! அவ்ளோதான்! அதுக்கப்புறம் ஒரு பத்துப் பதினைஞ்சு வருசம் ஒர்த்தர் மூஞ்சியை ஒர்த்தர் பார்த்ததுகூட இல்ல. எதேச்சையா ஒருநாளு இந்தக் குளத்தாண்டை என்னியப் பார்த்தே! 'மன்னாருதானே நீ!'ன்ன ஒடனே 'டக்'குன்னு எனக்கும் 'நம்ம சங்கரு'தான்னு
புரிஞ்சு போச்சு! ரெண்டு பேரும் கட்டிப் புடிச்சுகிட்டோம்! அதுக்கப்புறமும்
கூட, நீ ஒன் வளியில நான் என் வளியில! எப்பவாவது மாசத்துக்கு ஒரு தபா இல்லாட்டி ரெண்டு தபா பாக்கறதோட சரி! ஆனாக்காண்டியும், நாம எப்பப்
பார்த்தாலும் அதே அன்போடதான் பாக்கறோம்; பளகறோம்.'



'இதுலேர்ந்து இன்னா தெரியுது? ஒர்த்தனோட நட்பா இருக்கறதுக்கு
தெனந்தெனம் கட்டிப் பொரளணும்னு அவசியமே இல்ல!
ரெண்டு பேருக்குள்ளியும் எப்ப பார்த்தாலும் ஒரே மாரி அன்புன்ற உரிமை வருதா... அது மட்டுமே போதும்ன்றாரு ஐயன் இந்தக் குறள்ல!


முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு. [786]


பார்க்கறப்ப பல்லெல்லாம் தெரிய சிரிச்சுப்புட்டு போறது மட்டும் உண்மையான நட்பு ஆவாது! நெஞ்சுக்குள்ளேர்ந்து பீரிட்டுக்கினு வரணும் ஒரு உணர்ச்சி!
இவனைப் பார்த்த ஒடனேயே 'ஆஹா'ன்னு ஒரு சந்தோசம் உள்ளுக்குள்ளேர்ந்து வரணுமாம்!
அதான் உண்மையான நட்புன்னு சொல்றாரு ஐயன்!

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு. [787]

நீ ஒரு தப்பான வளியில போறேன்னு எனக்குத் தெரியுதுன்னு வையி.
'சரி! அது ஒன்பாடுன்னு அப்பிடியே விட்டுறாம, உரிமையோட போயி,
'டேய்! நீ பண்றது சரியில்லடா'ன்னு அடிச்சுச் சொல்லணும் நானு! இதைத்தான் நாலாவது குறள்லியும் சொல்லியிருக்காரு. அப்பொறம் ஏன் மறுபடியும் சொல்றாருன்னு கேக்கிறியா? அது அவர் வளக்கம்! சொன்னதையே நல்லா புரியறமாரி ரெண்டு மூணு குறள்ல சொல்வாரு அவரு!



ஆனா, இதுல அத்தோட நிப்பாட்டிக்காம, அதுக்கு மேலியும் ஒரு படி
போயி, அடுத்து இன்னா செய்யணும்னும் சொல்றாரு.


தப்பை எடுத்துச் சொல்றதோட மட்டும் போயிறாம, ஒனக்கு நல்ல வளி எதுன்னும் நான் சொல்லி கூட்டிகிட்டுப் போவணும்.
அப்பிடிப் போறப்ப, அதுனால எதுனாச்சும் கஸ்டம் வந்தா, அப்பிடியே
விட்டுட்டுப் போயிறாம கூடவே நிக்கணும்!


இதுல தெளிவா இருக்காரு ஐயன்!


நல்ல வளியில போவாம நீ அதையே செஞ்சு அதுனால ஒரு தும்பம் வந்தாலும், அப்பவும் கூட நிக்கணும்.

அப்பத்தான் நான் ஒரு உண்மையான நண்பன்னு சொல்லிக்க முடியும்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. [788]


இது அல்லாருக்குமே தெரிஞ்ச ஒரு குறளு! மேடையில, பேப்பர்ல அடிக்கடி இத்த எடுத்து விடுவாங்க நம்ம ஆளுங்க!
பேண்ட்டு போடற இந்தக் காலத்துக்கு இது எவ்ளோ தூரம் பொருந்தும்னு தெரியல!
இருந்தாலும் இன்னும் ரொம்பப் பேருகிட்ட இன்னும் லுங்கி கட்ற வளக்கம்
இருக்கறதால, இப்பவும் இதைச் சொல்லலாம்னு நெனைக்கறேன்!
இடுப்புல கட்டியிருக்கற லுங்கி[!!] அவுர்றப்ப, ஒன்னை அறியாமயே
ஒன்னோட கையி அத்தப் புடிச்சுக்கும்!
அதுமாரி, இருக்கணுமாம் நட்புன்றது!
'அவன் கேக்கட்டுமே'ன்னு வெயிட் பண்ணாம, தோஸ்துக்கு எதுனாச்சும்
ஒண்ணுன்னா, ஒடனே போயி ஒன்னாலானதச் செய்யணும்.
அதான் உண்மையான நட்பு!


நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. [789]

நீ எனக்கு நண்பன்னு நான் சொல்லிகிட்டேன்னா, ஒனக்கு நான் கொடுக்கவேண்டிய எடம் எது தெரியுமா? ஒன்னைப் பக்கத்துல ஒக்கார வைச்சுக்கறதோ, நாயர்கிட்ட டீ, மசால்வடை வாங்கித் தர்றதோ இல்லை.
பின்ன எதுன்னு கேக்குறியா?
எந்த நிலையிலியும் ஒரு மாத்தமுமில்லாம, எப்பவும் இவன் எனக்குன்னு இருப்பான்ற நெனைப்பு வர்ற மாரி, நடந்துக்கணும்
ஒன்னால முடிஞ்சவரைக்கும் அவனுக்கு ஒதவி செய்யப் பாரு.
அவனைத் தங்கறதுக்கு நீ இருக்கேன்னு அவனை நெனைக்க வைக்கற பாரு!...
அதான் ரொம்பவே ஒசந்த எடம்னு ஐயன் அளுத்தந்திருத்தமாச் சொல்லியிருக்காரு!


இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு. [790]

இவ்ளோ செஞ்சதுக்கப்புறம் இன்னொண்ணையும் கவனமாச் சொல்லி
முடிக்கறாரு இந்தக் குறள்ல!
இப்பிடியெல்லாம் உண்மையா இருக்கற ரெண்டு கூட்டாளிங்க, ஒர்த்தரை ஒர்த்தர் 'அட! நான் ஒனக்கு இன்னால்லாம் செய்றேம்ப்பா, நீ இம்மாம் பெரிய
சேக்காளிப்பா! நான் ஒனக்கு ரொம்பவே கடைமைப்பட்டிருக்கேன்'னு ஒரு மரியாதைக்குன்னு பாராட்டாச் சொன்னாக் கூட போச்சு!
அது அந்த நட்புக்கே ஒத்துவராது!
ரொம்பவே கீள்த்தரமாப் பூடும்!
இதெல்லாம் அப்டியே மனசுக்குள்ள மட்டும் இருந்தாப் போறும்!
வெளில காட்டி அந்த நட்பைக் கேவலப் படுத்திராதேன்னு கண்டிசனா சொல்லிடறாரு!

அதுனால, 'ரொம்ப டேங்ஸ்ப்பா'ன்னுல்லாம் சொல்லாம மொதல்ல எடத்தைக் காலி பண்ணு!
கபாலிகிட்ட இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு எனக்கு!' எனச் சொல்லிக் கண்ணடித்தான் மயிலை மன்னார்!

எல்லாம் புரிந்த பாஸ்கர், 'அப்ப நாங்க கிளம்புறோங்க' என மட்டும் சொல்லி எழுந்தார்.
'வெவரமான ஆளுதான் ஒன்னோட தோஸ்து' என்பதுபோல என்னைப்
பார்த்துச் சிரித்துவிட்டு, கபாலி தோளில் கை போட்டபடியே ஆட்டோவில் ஏறினான் மயிலை மன்னார்!


************************************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP