Tuesday, October 23, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 23

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 23

முந்தைய பதிவு இங்கே!

அத்தியாயம். 21.


"காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்." [1227]'உங்க தலைவர் ரொம்ப நல்ல மாதிரியாத்தான் இருக்காரு!' என கந்தன் தன் அபிப்பிராயத்தைத் தெரிவித்தான்.

'ஆமா தம்பி, எனக்கே ஆச்சரியமாஇருந்திச்சு. அவர் எப்பவுமே இப்படிப் பேசினவரு இல்லை.ரொம்பக் கறாரான ஆளு அவரு. என்னமோ
நாட்டு நடப்புத்தான் அவரை இப்படிப் பேச வெச்சிருக்குன்னு நினைக்கறேன். உங்க நேரம் நல்ல நேரம்னும் நெனைக்கறேன். சரி வாங்க போலாம்'
என்றபடியே நடந்தான் காத்தான்.

'ஆமா, அதென்னா போறப்ப உங்க தலைவரு எதுவோ சொன்னாறே! ஆங்! பொண்ணுங்களோட பேசக்கூடாதுன்னு. அதென்ன சட்டம்?'
என ராபர்ட் சிரித்தபடியே வினவினான்.

'அதுங்களா! எங்க ஊருல இப்படி ஒரு கட்டுப்பாடு இருக்குங்க. பெத்தவங்க அல்லது சொந்தக்காரங்க யாரும் இல்லாதப்ப, எந்த ஒரு ஆம்பளையும்,
இன்னோரு பொண்ணோட தனியா பேசக்கூடாது. இதுல, இங்க ரொம்ப கண்டிப்பா இருப்போமுங்க.
நீங்களும் பாத்து நடந்துக்கோங்க' என்றான் காத்தன்.

ராபர்ட் கந்தனைப் பார்த்துச் சிரித்தபடி கண்ணடித்தான்!

'இவருகிட்ட சித்தருங்களைப் பத்திக் கேளு' எனத் தூண்டினான் ராபர்ட்.

'இங்க சித்தருங்க நடமாட்டம் இருக்கறதாப் பேசிக்கறாங்களே. அது உண்மையாங்க?' எனத் தயங்கியபடியே கேட்டான் கந்தன்.

'என்னது? சித்தரா? அப்படீன்னா ஆருங்க? நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருப்பேனுங்க. எனக்கு அப்படி ஆரையும் தெரியாதுங்க. நான் இப்பல்லாம் அதிகமா வெளியில போறதில்லை. என் பொண்ணை வேணா கேட்டுப் பாக்கறேன். அதுதான் அடிக்கடி கொல்லிமலைப் பக்கமெல்லாம் போயிட்டு வரும்.' என்றான் காத்தான்.

ராபர்ட்டுக்கு சற்று ஏமாற்றம். இருந்தாலும் விடவில்லை.

இதை வேறுவிதமாய் கையாளணும் என நினைத்து, 'அப்போ உங்களுக்கெல்லாம் நோய் நொடின்னா, யாருகிட்ட மருந்து வாங்கி சாப்பிடுவீங்க?'
எனக் கேட்டான்.

'அடே! இவன் எவ்வளவு புத்திசாலி!' என வியந்தான் கந்தன். 'சித்தருங்களுக்கு நோயைக் குணப்படுத்தற சக்தி இருக்குன்றதை எப்படி நாசூக்கா
கேக்கறான்'.

காத்தான் சொன்ன பதில் அவனது மகிழ்ச்சியை உடனே அழித்தது!

'நோவு நொடில்லாம் எங்களுக்கு வராது சாமி. அப்பிடியே வந்தாலும், எங்க குலதெய்வத்துக்கு ஒரு பூசை போட்டு வேண்டிகிட்டா எல்லாம்
சரியாயிடும்! மருந்து மாத்திரைல்லாம் சாப்பிடறதே இல்லை. அம்மை ஊசி போடறேன்னு வந்தவங்கள்ல்லாம் ஓடியே போயிட்டாங்க!'

சொல்லிவிட்டுச் சிரித்தபடியே, தன் குடிசையை அடைந்தான் காத்தான்.

'பொன்னி, கொஞ்சம் குடிக்கத் தண்ணி கொண்டுவாம்மா!' எனக் குரல் கொடுத்தான்.

'அவங்கள்லாம் போயிட்டாங்களாப்பா!' எனக் கேட்டபடியே ஒரு அழகிய இளம்பெண் வெளியில் வந்தாள்.

விருந்தாளிகளைப் பார்த்ததும், வெட்கத்துடன் உள்ளே செல்லத் திரும்பியவளை, 'கொஞ்சம் நில்லும்மா!' என்ற தந்தையின் குரல்
தடுத்து நிறுத்தியது.

'இவங்களுக்கு கொல்லிமலையப்பத்தி ஏதோ தெரியணுமாம். நீதான் அடிக்கடி அங்கே போவியே! உனக்குத் தெரிஞ்சதைச் சொல்லு.'

'என்ன தெரியணுமாம்?' என்றாள் பொன்னி.

அவளை நிமிர்ந்து பார்த்த கந்தனுக்கு உலகமே ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றது!

அவளது கரிய விழிகளையும், உதட்டோரம் எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடுவேன் என்பது போல் நின்ற இளம் புன்னகையையும், வாளிப்பான உடலையும் பார்த்த நேரத்தில், இந்த உலகத்திற்கே பொதுவான ஒரு உணர்ச்சி அவனுள்ளே சுரந்தது.

அப்படியே அவனை ஒரு இனம்புரியா ஆனந்தத்தில் ஆழ்த்தியது.

இது நிகழ்பருக்கு மட்டுமே சட்டெனப் புரியும் ஒரு மொழி!

காதல்!

ஒரே அலைவரிசையில் சந்திக்கும் இரு ஜோடி விழிகளுக்கு நடுவே பரிமாறப்படும் ஒரு உலக மொழி.

எழுத்துகள் கிடையாது! ஒலிவடிவம் கூடக் கிடையாது!

பொன்னி இப்போது அந்தப் புன்னகையை தன் ஈர உதடுகளில் தவழவிட்டாள்!
அதுவே ஒரு நல்ல சகுனமாகத் தெரிந்தது கந்தனுக்கு.

தன் வாழ்நாளில் இதுவரை தனக்குத் தெரியாமலேயே தேடிக்கொண்டிருந்த ஒன்று இதுதான் என ஐயமில்லாமல் புரிந்தது!

இந்த நல்ல சகுனமே இனி தன் வாழ்நாள் கனவுகளை நிறைவேற்றப் போகும் ஒரு தூண்டுகோல் எனவும் நிச்சயமாகப் பட்டது கந்தனுக்கு!

இதற்கு விளக்கங்கள் தேவையில்லை. நீக்கமற நிறைந்திருக்கும், எப்போதுமாய் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பிரபஞ்சம், காலங்களைக்
கடந்து இருப்பது போலவே, இதுவும் எப்போதும் இருந்து வருகிறது.

தன் வாழ்க்கையின், வாழ்நாள் முழுதுக்குமான ஒரே பெண் என்னும் பேருரு இப்போது தன் முன்னே நின்று கொண்டிருப்பதாய் உணர்ந்தான்.

அவளுக்கும் இது புரிந்துவிட்டது எனவும் ஒரு உள்ளுணர்வு அவள் சிரிப்பின் வழியே அவனுக்குச் சொன்னது!

செல்லியோடு பலமுறை பேசியிருந்தபோதெல்லாம் தோன்றாத ஒரு உணர்வு இப்போது தன்னுள் பரவியதைத் தெரிந்து மிகவும் சந்தோஷமாக
இருந்தது அவனுக்கு.


......"மேலே இருக்கற ஒரு சக்தி எல்லாருமே ஜெயிக்கணும்னுதான் விரும்புது. மனுஷன்தான், இந்த வெற்றியை சரியாப் புரிஞ்சுக்காம,
திசை மாறிப் போயிடறான்."..........

தங்கமாலை அணிந்த பெரியவர் ஒருவர் அவனிடம் சொன்னது சட்டென நினைவுக்கு வந்தது!

அந்த சக்திதான் இப்போது இவளை எனக்குக் காட்டியிருக்கிறது! அவளுக்கும் இதைப் புரிய வைத்திருக்கிறது.
காதல் என்னும் ஒரு உணர்வினால் எங்கள் இருவரையும் தொட்டு ஆசீர்வதித்திருக்கிறது !

'எல்லாம் விதிப்படியே நடக்கும்!' அண்ணாச்சி சொன்னது காதில் கேட்டது!

'என்ன அப்படியே வெச்ச கண்ணை வங்காம பாக்கறீங்க! என்ன தெரியணும் உங்களுக்கு கொல்லிமலையைப் பத்தி?' என்ற குறும்புக் குரல்
அவனை இவ்வுலகிற்கு இட்டு வந்தது!

[தொடரும்]
*************************************

"காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலரும்இந் நோய்." [1227]

அடுத்த அத்தியாயம்

22 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் Thursday, October 25, 2007 8:55:00 PM  

//சொல்லிவிட்டுச் சிரித்தபடியே, தன் குடிசையை அடைந்தான் ராபர்ட்//

காத்தான் என்று இருக்கணுமோ?

வடுவூர் குமார் Thursday, October 25, 2007 8:57:00 PM  

ஆஹாங்! வந்திடுச்சி,ஆசையில் ஓடி வந்தேன்..
கந்தன் பாடப்போகிறானா?
ராபர்ட் நல்லாத்தான் கொக்கி போடுகிறார்.

இலவசக்கொத்தனார் Thursday, October 25, 2007 9:20:00 PM  

அட மாமல்லபுரத்து புதையலைப் பார்க்க போடான்னு சொன்னா இவன் கொல்லி மலைப் புதையலை இல்ல பார்த்து ஜொள்ளு விட்டுக்கிட்டு இருக்கான். அதுவும் பெண்களோட பேசக் கூடாதுன்னு கண்டிஷன் போட்ட பின்னாடி. சரியாப் போச்சு.

VSK Thursday, October 25, 2007 11:28:00 PM  

//காத்தான் என்று இருக்கணுமோ?//

ஆமாங்க!
மாத்திட்டேங்க!
இதுக்குத்தான் ஒரு டீச்சர் வேணும்ன்றது!
:))

VSK Thursday, October 25, 2007 11:30:00 PM  

//கந்தன் பாடப்போகிறானா?
ராபர்ட் நல்லாத்தான் கொக்கி போடுகிறார்.//

அதை விட நீங்களே நல்லாப் பாடுறீங்க, திரு.குமார்!
கந்தன் பாட்டா? ராபர்ட் கொக்கியா?
விரைவில் வெள்ளித்திரையில் காண்க!
:)0

VSK Thursday, October 25, 2007 11:33:00 PM  

//ஜொள்ளு விட்டுக்கிட்டு இருக்கான். அதுவும் பெண்களோட பேசக் கூடாதுன்னு கண்டிஷன் போட்ட பின்னாடி. சரியாப் போச்சு.//


அதானே!
போய் ஒரு தட்டுங்க கொத்ஸ் இந்தக் கந்தனை!

எப்படியெல்லாம் அலையறான்; அலைக்கழிக்கறான்!
:))

நாமக்கல் சிபி Friday, October 26, 2007 12:28:00 AM  

வழியில கந்தனுக்கு காதல் வேறயா?

அது சரி! எல்லாத்தையும் கடந்துதான ஆகணும்! ஒரு வேளை இது கந்தனுக்கு வைக்கப் படுற சோதனையோ?

:)

VSK Friday, October 26, 2007 12:49:00 AM  

//ஒரு வேளை இது கந்தனுக்கு வைக்கப் படுற சோதனையோ?//

இது சோதனைய, சாதனையா, இல்லை வேதனையா என திங்களன்று பார்ப்போம் சிபியாரே!
:))

மங்களூர் சிவா Friday, October 26, 2007 12:55:00 AM  

//
அட மாமல்லபுரத்து புதையலைப் பார்க்க போடான்னு சொன்னா இவன் கொல்லி மலைப் புதையலை இல்ல பார்த்து ஜொள்ளு விட்டுக்கிட்டு இருக்கான். அதுவும் பெண்களோட பேசக் கூடாதுன்னு கண்டிஷன் போட்ட பின்னாடி. சரியாப் போச்சு.

//
//
அது சரி! எல்லாத்தையும் கடந்துதான ஆகணும்! ஒரு வேளை இது கந்தனுக்கு வைக்கப் படுற சோதனையோ?
//
Repeatey....

வல்லிசிம்ஹன் Friday, October 26, 2007 1:25:00 AM  

சோதனையா இருக்க முடியாது:))
துணைக்குத்தானே பொன்னி வந்து இருக்கா.
அதனால் இனிமேல் சுறுசுறுப்பாகவேலைகள் நடக்கும். காதலி கண் செய்யும் மாயங்களைத் தான் பாரதியார் அவ்வளவு சொல்லி இருக்காரே.

சித்தர்கள் அங்கே உலவும்போது அவர்களுக்கு வேறு மருந்தே வேண்டாமே.
இப்போ இருக்கிற சித்தர் கூடப் பத்திரிகயில் வந்தார் சமீபத்தில்.

Anonymous,  Friday, October 26, 2007 3:14:00 AM  

ನಮಸ್ತೆ ಜಿ !
ಉಳ್ಳೆ ಕಥೆ, ಸೇನ್ನಾಹಿಥ್ಥೆ

தி. ரா. ச.(T.R.C.) Friday, October 26, 2007 12:43:00 PM  

காதல்!

ஒரே அலைவரிசையில் சந்திக்கும் இரு ஜோடி விழிகளுக்கு நடுவே பரிமாறப்படும் ஒரு உலக மொழி.

எழுத்துகள் கிடையாது! ஒலிவடிவம் கூடக் கிடையாது
ஆஹா புதிய கோணத்தில் உருவான புதுமை விளக்கம் காதலுக்கு.

cheena (சீனா) Friday, October 26, 2007 1:47:00 PM  

//அவளது கரிய விழிகளையும், உதட்டோரம் எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடுவேன் என்பது போல் நின்ற இளம் புன்னகையையும், வாளிப்பான உடலையும் பார்த்த நேரத்தில், இந்த உலகத்திற்கே பொதுவான ஒரு உணர்ச்சி அவனுள்ளே சுரந்தது.//

//இது நிகழ்பருக்கு மட்டுமே சட்டெனப் புரியும் ஒரு மொழி!

காதல்!

ஒரே அலைவரிசையில் சந்திக்கும் இரு ஜோடி விழிகளுக்கு நடுவே பரிமாறப்படும் ஒரு உலக மொழி.

எழுத்துகள் கிடையாது! ஒலிவடிவம் கூடக் கிடையாது!
//

புன்னகையையும் காதலையும் யாருமே இப்படி வர்ணித்தது கிடையாது.

பொன்னி தான் வழி காட்டும் சித்தரா ??

ஆத்திகப் பதிவினில் காதல் முதல் முறையாகத் தலை தூக்குகிறது. காதல் இல்லையேல் தமிழ் இல்லை. எனவே வரவேற்கிறோம்.

VSK Saturday, October 27, 2007 12:12:00 AM  

//அது சரி! எல்லாத்தையும் கடந்துதான ஆகணும்! ஒரு வேளை இது கந்தனுக்கு வைக்கப் படுற சோதனையோ?
Repeatey....//

இது சோதனையா, சாதனையா, இல்லை வேதனையா என திங்களன்று பார்ப்போம் ம. சிவா அவர்களே!!
:))

VSK Saturday, October 27, 2007 12:14:00 AM  

//சோதனையா இருக்க முடியாது:))
துணைக்குத்தானே பொன்னி வந்து இருக்கா.
அதனால் இனிமேல் சுறுசுறுப்பாகவேலைகள் நடக்கும். காதலி கண் செய்யும் மாயங்களைத் தான் பாரதியார் அவ்வளவு சொல்லி இருக்காரே.//

எவ்வளவு அழகாச் சொல்றீங்க வல்லியம்மா!
வானில் ஏறி விண்ணையும் சாடுவோம்
காதல் பெண்டிரின் கடைக்கண் பார்வையிலே!
:))

கந்தன் என்ன பண்னப் போறான்னு பார்க்கலாம்!:)

VSK Saturday, October 27, 2007 12:15:00 AM  

//ஆஹா புதிய கோணத்தில் உருவான புதுமை விளக்கம் காதலுக்கு.//

அதை உங்க வாயால[ எழுத்தால:))] கேக்கறது ரொம்பவே சந்தோஷமாஇருக்கு திரு. தி. ரா. ச. !
நன்றி!

VSK Saturday, October 27, 2007 12:17:00 AM  

//புன்னகையையும் காதலையும் யாருமே இப்படி வர்ணித்தது கிடையாது.

பொன்னி தான் வழி காட்டும் சித்தரா ??//

எழுதுகையில் எனக்கே பிடித்த வரிகளில் இதுவும் ஒன்று, திரு. சீனா!
தமிழ் போற்றும் காதலைப் போற்றும் உங்கள் பண்புக்கு நன்றி!

நாகை சிவா Saturday, October 27, 2007 1:54:00 AM  

நவரசங்களையும் உங்க நாவலில் கொண்டு வருவீங்க போல....

காதல் - அழகாய் வர்ணித்து உள்ளீர்கள்...


காதலை விட கடமை முக்கியம் என்ற கழுட்டி விட்டு வீடுவீங்களா.. வரும் வாரங்களில்....

Geetha Sambasivam Sunday, October 28, 2007 6:53:00 AM  

இது நிகழ்பருக்கு மட்டுமே சட்டெனப் புரியும் ஒரு மொழி!

காதல்!

ஒரே அலைவரிசையில் சந்திக்கும் இரு ஜோடி விழிகளுக்கு நடுவே பரிமாறப்படும் ஒரு உலக மொழி.

எழுத்துகள் கிடையாது! ஒலிவடிவம் கூடக் கிடையாது!

"கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச் சொற்கள்
என்ன பயனும் இல!" :)))))))))))

VSK Sunday, October 28, 2007 9:18:00 AM  

//நவரசங்களையும் உங்க நாவலில் கொண்டு வருவீங்க போல....//

நவரசங்களும் அடங்கியதுதானே வாழ்க்கை நாகையாரே!

VSK Sunday, October 28, 2007 9:21:00 AM  

//"கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச் சொற்கள்
என்ன பயனும் இல!" :)))))))))))//

வள்ளுவன் சொல்லாதது எதுவுமில்லை என்பதற்காகத்தான் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு குறளோடு துவங்குகிறது, தலைவி!

நாகை சிவா Monday, October 29, 2007 2:03:00 AM  

என்ன தலைவா.. இன்னிக்கு இன்னும் போஸ்ட் வரல...

என்ன ஆச்சு.. வேலை அதிகமா?

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP