Thursday, August 25, 2011

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 25

"'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 25"
24

'இந்த தமாஷ் இன்னும் தொடருதா மன்னார்?' என வினவினேன்.


'முருகனோட பேசற பாணியை மாத்தலை! ஆனா, அதைக் கொஞ்சம் வேற விதமாச் சொல்லிக் காமிக்கறாரு அருணகிரியாரு.


போன பாட்டுல கொஞ்சம் ஜாஸ்தியாவே முருகனைச் சீண்டிட்டோமோன்னு பதைக்கறாரு .
'நான் இன்னா யோக்கியம்னு முருகனைப் பத்தி அப்படி சொல்லப்போச்சு? அவுரு செய்யறதும் நான் செய்யறதும் ஒண்ணாயிருமா'ன்னு ஒரு அச்சம் வருது இவுருக்கு.


ஆத்தரத்துல இன்னால்லாம் சொல்லிட்டோம்னு நடுங்கறாரு. சொன்னது தப்புன்னு புரியுது! அதுல வந்ததுதான் இப்ப வரப்போற பாட்டு.' என மன்னார் என்னைப் பார்க்க நானும் பாடலைப் படித்துக் காட்டினேன்.


கூர்வேல் விழிமங் கையர்கொங் கையிலே
சேர்வே னருள்சே ரவுமெண் ணுமதோ
சூர்வே ரொடுகுன் றுதொளைத் தநெடும்
போர்வே ல புரந் தரபூ பதியே.



கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல புரந்தர பூபதியே

"கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ"

'ஒன்னியப் போயி வள்ளி காலுலியே விளு[ழு]ந்து கெடக்கறியேன்னு சொன்னேனே! என்னோட யோக்கியதை இன்னான்னு தெரியுமா?


எப்பப் பாரு, பொம்பளைங்க பின்னாடியே அலைஞ்சு அவங்களோட மாருலியே வுளு[ழு]ந்து கெடக்கற நாதாறி நானு! அவங்களோட கூரான வேலு மாரி க்கீற கண்ணுங்களைப் பார்த்ததுமே அப்பிடியே மாருல சரிஞ்சிடறேன். இன்னாத்த சொல்றது?


நீ அந்த இச்சா சக்தியோட காலுல கெடந்தாலும் ஒன்னோட பக்தருங்களுக்கு அருள் பண்ண மறக்கறதே இல்லை!


ஆனா, நானு?.............
ஒன்னோட அருளு வோணும்னு நெனக்கறதுகூட இல்லை!


இதுல நான் ஒன்னோட என்னை 'கம்ப்பேர்' பண்ணி பேசிட்டேனே!ன்னு இவுருக்கு மனசுல உறுத்துது!


ஒன்னோட அருளை நெனைக்காம எப்பவும் பொண்ணுங்க பின்னாடியே சுத்தற நானும், இன்னா பண்ணினாலும் தன்னோட அடியாருங்களை மறக்காத நீயும் எப்பிடி ஒண்ணாயிற முடியும்? ஒன்னியப் போயி இன்னான்னமோ சொல்ட்டேனேன்னு இந்த வரியுல சொல்லாம சொல்றாரு!

"சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும் போர் வேல புரந்தர பூபதியே"

வேற ஆரோட 'கம்ப்பேர்' பண்ணலாம்னு யோசிக்கறாரு. ஒடனே, இப்பிடி பொண்ணுங்களோட கண்ணுங்களை வேலுன்னு சொன்னதுமே அவுருக்கு இன்னொண்ணு ஞாபகத்துக்கு வருது!


சூரனோட கொலத்தையே பூண்டோட அறுத்த முருகனோட வேலு!


ஒரு நாளா, ரெண்டு நாளா?
பத்து நாளைக்கு ஒரு பெரிய சண்டை தொடர்ந்து போட்டு, ஒர்த்தொர்த்தரா... தாரகன், சிங்கமுகன், பானுகோபன், சூரன்னு அல்லாரையும் சேர்த்து முருகனோட வேலு அந்தச் சூரனோட கொலத்தையே அளி[ழி]ச்சுது!
ஆருக்காகன்னு கொஞ்சம் யோசிக்கறாரு அருணையாரு!


அந்தப் புரந்தர பூபதிக்காவ, ,,.... தேவேந்திரனுக்காக, அவனைக் காப்பத்தறதுக்காவத்தான் இத்தினியும் பண்ணினாருன்னு புரியுது அவுருக்கு!


புரந்தரன்னா இந்திரன்!


மனசுல கொஞ்சம் தெம்பு வருது!


இந்திரன் பண்ணாத அட்டூளி[ழி]யமா? அவன் பாக்காத பொண்ணுங்களா?
அப்பிடி இருந்தாலுங்கூட, அவனுக்கும் அருள் பண்ணறதுக்காவ, தன்னோட வேலை வைச்சு ஒரு நீண்ட சண்டை போட்டுக் காப்பாத்தின குகன், ஏதோ ஒண்ணு ரெண்டு பொண்ணுங்க பின்னாடி சுத்தினதுக்காவ, நம்மளை கைவுட்டுருவாரா, இன்னான்னு ஒரு தெகிரியம் பொறக்குது!


முருகனோட தன்னை வைச்சுப் பாக்கறது தப்பு! நம்ம நெலைமைக்கு நம்மளை இப்போதைக்கு இந்திரனோட வைச்சுப் பாக்கறதுதான் சரின்னு வெளங்குது அருணையாருக்கு!


இப்பிடில்லாம் ஒண்ணை நெனைச்சு, அதைப் பாட்டுலியும் சொல்றதுக்கு இவுரை வுட்டா வேற ஆரால முடியும் சொல்லு!' என மௌனமானான் மயிலை மன்னார்!


ஆதரவுடன் அவன் தோளில் கை வைத்து மார்போடு அணைத்துக் கொண்டேன்!
********
[தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP