Thursday, May 11, 2006

"கலைஞருக்கு ஒரு வாழ்த்துப்பா!"

"கலைஞருக்கு ஒரு வாழ்த்துப்பா"!>



மத்திய அரசுப் பதவி
ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு,
மாநிலங்களில், மாறி, மாறி,
மாநிலக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்து
சுயமரியாதை இன்றி சுகித்து வாழும்
காங்கிரஸை துணைக்கொண்டு,
ஐந்தாம் முறையாக அரசு காணப் போகும்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருக்கு
திறந்த ஒரு வாழ்த்துமடல் இதோ!!

'அளகேசா! ஆண்டது போதாதா?
மக்கள் மாண்டது போதாதா?"
எனச் சொல்லி ஆட்சியைப் பிடித்தீர் அன்று!

'கூலி உயர்வு கேட்டார் அத்தான்!
குண்டடி பட்டுக் கொன்றார் அவரை'
எனக் கூவி மக்களின் அனுதாபத்தைப் பெற்று
ஆட்சியில் அமர்ந்தீர் அன்று!

"ரூபாய்க்கு மூன்று படி அரிசி" எனக்
கூசாமல் பொய் சொல்லி
குற்ற உணர்ச்சியே இல்லாமல் ஆட்சிக்கு வந்தீர் அன்று!

கிட்டத்தட்ட நாற்பதாண்டு காலமாய்
'நண்பர் இருவர்' உங்களுக்கிடையே
செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலமாய்
மாறி, மாறி தன்சுகம் மட்டுமே கண்டீர்கள்!

பருவம் அடைந்த பதினெட்டு வயதுப்
பாவைஅவளைப் பல பேர் சேர்ந்து
பாவியவள் கற்பை சூறையாடிய
கதைதான் நினைவுக்கு வருகிறது

'நம்மையெல்லாம் இழிவு செய்தான்
நாமதற்கு துணை நில்லோம்
நல்லதேசெய்வோம்' எனச் சொன்ன உமை
நம்பி நல்வாக்கு தந்திட்ட நலிந்தோரை - அட!
நாளெல்லாம் நினைக்க வேண்டாம்!- அவருக்கு
நலம் செய்ய மறந்திடலாமோ?!
நாடு போற்ற வேண்டாமா நல்லவரே!

நாலிருபது ஆண்டுகள்
நாநிலத்தில் இருந்து விட்டீர்!
ஈரிருபது ஆண்டுகள்
இம்மண்ணை ஆண்டு விட்டீர்!
ஓரிருபது ஆண்டுகள்
மத்தியிலும் பார்த்துவிட்டீர்!

இன்றைக்கு மீண்டும் உமை
பதினோராம் முறையாகத்
பரிவுடன் தேர்ந்தெடுத்து,
ஐந்தாம் முறையாக
ஆட்சிக் கட்டிலிலேற்றி
அழகு பார்த்து மகிழ்கிறார்
எம் இனிய தமிழ்மக்கள்
நீர் சொன்ன இலவசங்களை நம்பியே!

இத்தனைக் காலம் செய்ய மறந்ததை
இனிவரும் நாளிலேனும்
இனிதே செய்து,
இனிய தமிழகத்தை '
இன்பமுற வாழ வைக்க
இன்னுமொரு சந்தர்ப்பம்
இனிமேலும் வாய்க்காது
என்பதனை உணர்ந்து நீரும்,

நன்முறையில் ஆட்சி செய்து
நல்ல பெயரும் வாங்கி
நலமுடன் வாழ்ந்திடவே
நான் வாழ்த்துகிறேன்
நன்னாளாம் இன்று!

Read more...

"கேப்டனுக்கு ஒரு கடிதம்!"

"கேப்டனுக்கு ஒரு கடிதம்!"

திரு. விஜய்காந்த், எம்.எல்.ஏ, அவர்களுக்கு,
வணக்கம்.
முதலில் எனது உளங்கனிந்த பாராட்டுகளைப் பிடியுங்கள்!

இந்தத் தேர்தலில் நீங்கள் சாதித்தது நிறையவே!

கட்சி ஆரம்பித்த ஆறு மாத காலத்தில் ஒரு பொதுத்தேர்தலை துணிவுடன் சந்தித்தது!

யாருடனும் கூட்டு இல்லை என மக்களிடத்தில் சொன்னது போலவெ, 232 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது!

தமிழகமெங்கும் 40000கி. மீ.க்கும் மேல் சுற்றி வந்து நாட்டு மக்களிடம் உங்களது புதிய அடையாளத்தை நிலை நிறுத்தியது!

இரு கழகங்களும் ஆட்சிப் பொறுப்பினின்றும் அகல வேண்டும் எனக் கூவி, கிட்டத்தட்ட நாற்பதாண்டு காலமாக யாரும் சாதிக்காத ஒன்றை செய்து காட்டியது!

பழம் தின்று கொட்டை போட்ட பழுத்த அரசியல் தலைவர்கள் கூட, பாதுகாப்பான தொகுதி தேடி பதுங்கி ஓடும் களத்தில், தைரியமாக பா. ம. க.வின் கோட்டையிலேயே நின்று, போட்டியிட்டு, திறமையான பிரச்சாரம் செய்து, வென்றும் காட்டியது.

தான் சொல்லி வந்த 'இரு கழக ஏகபோக ஆட்சியை' ஒழித்துக் கட்டி, முதன்முறையாக கூட்டணி ஆட்சி வர, பெரும் பங்கு ஆற்றியது!

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!

வெற்றிக்களிப்பில் நின்றிருக்கும் இந்நேரத்தில் தங்களிடம் சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்.

1. இந்த வெற்றியின் மூலம் மாற்றத்தை விரும்பும் மக்களும் நம் மண்ணில் இன்னும் இருக்கிறார்கள் என்னும் கருத்து உறுதிப்படும் நேரத்தில், இதனைத் தீவிரமாக்க, ஆக்கபூர்வமாக என்ன செய்யப் போகிறீர்கள்?

2. 'மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று இரந்தழைப்பார் இங்கில்லை' என்பதற்கேற்ப, பல பேர் உங்கள் கட்சியில் சேர வரக்கூடும். கவனமாகத் தெரிவு செய்வீர்கள் என நம்பலமா? இல்லை, எல்லாரையும் சேர்த்துக்கொண்டு நீர்த்துப் போவீர்களா?

3. யார் எப்படி சொன்னாலும், உங்கள் தொகுதி மக்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைத்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தந்திருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றாமல், நல்ல முன்னுதாரணமாய் செயல்படும் உத்தேசம் உண்டா?

4. எம்.எல். ஏ. என்பது ஒரு பொறுப்பான பதவி. அதற்குத் தேவையான விதி முறைகள், நெளிவு சுளிவுகள் இவற்றை வேகமாகக் கற்றுக் கொள்வது, இபோதைக்கும், பின்னாலும் உதவும் என்றறிந்து, செயல் படுவீர்களா?

5. தனியே ஆட்சி செய்வது வேறு; கூட்டணிகட்சியாக பங்கு வகித்து, சலுகைகள் பெறுவது வேறு, ஆனால், கூட்டணித் தலைமைக் கட்சியாக இருந்து ஆட்சிப் பொறுப்பை நடத்துவது வேறு என்பது இன்னும் சில நாட்களில் புரியப்போகும் நிலையினில், விரைவிலேயே அடுத்த தேர்தல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கும் என்பதை உணர்ந்து, கட்சியை பல்வேறு மட்டங்களிலும், மாவட்டங்களிலும் வளர்க்க ஆவன செய்வீர்களா?

6. இல்லை, மற்ற தேமுதிக வேட்பாளர்கள் எல்லாம் தோற்ற நிலையில் துவண்டு போவீர்களா?

7. இதுவரை நடத்தி வந்த, நகர்த்தி வந்த செயல்களெல்லாம் நன்கு நடந்திருக்கும் நிலையில், சில பல அனுபவமும், அறிவும் மிக்க ஆற்றலுள்ள இளைஞர் கூட்டத்தை வளர்த்துக் கொள்வீர்களா?

8.ஒரு சீட்டுதான் என்றாலும், அதனை வென்ற முறையில் தனித்துவம் காட்டிய நீங்கள், இந்த வெற்றி ஃபார்முலாவை திறம்பட இன்னும் விரிவு படுத்துவீர்கள் என நம்பலாமா?

9. மீண்டும் படங்களில் நடிக்கும் உத்தேசம் உண்டா?

இவையெல்லாம், மாற்றம் வேண்டுமென விரும்பும் ஒரு தமிழனின் கேள்வி!
அதுவே நான் உங்களை தனியனாக[இங்கும் தனிதான்!] இந்த இணையத்தில் ஆதரித்ததின் நோக்கம்!

உங்கள் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பேன்!

மென்மேலும்,வெற்றிக்கனிகள் குவிய எனது வாழ்த்துகள்!

நன்றி.

வணக்கம்.

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP