Monday, February 27, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 51 [47/1]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 51


47. [முதல் பகுதி]

ஆறா றையுநீத் ததன்மே னிலையைப்
பேறா வடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா வுலகங் குளிர்வித் தவனே.


ஆறாறையும் நீத்து அதன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமாறு உளதோ
சீறா வரு சூர் சிதைவித்து இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே.

‘நேத்தே சொன்னதுப்போல, இப்ப விசயம் கொஞ்சம் சீரியஸாகிப் போவுது!

 இதுவரைக்கும் சொன்னதுல்லாம் வேற! இப்ப சொல்றது ரொம்பவே வேற!
அநுபூதின்னா இன்னா? அது கிடைக்கணும்னா, எத்தயெல்லாம் வுடணும்? என்னல்லாம் பண்ணணும்? எப்பிடில்லாம் நடந்துக்கணும்?னு இதுவரைக்கும் சொல்லிக்கினு வந்த இந்தாளு, இப்ப, கொஞ்சம் பூடகமா,.... கொஞ்சம் வெளிப்படையாவே, சொல்லியும் சொல்லாமலும், புரியறவங்க புரிஞ்சுக்கறமாரி, இத்தப் பத்தி சொல்லத் தொடங்கறாரு!

எ[இ]லை மறைவு காய் மறைவான்னு சொல்லுவாங்களே, அத்த இந்தப் பாட்டுல நல்லாவே நாம பாக்கலாம்!
இத்தான்னு சொல்லலை! இது இல்லைன்னும் சொல்லலை! ஆனாக்காண்டிக்கு, அல்லாத்தியும் சொல்லிடறாரு!’ என ஆரம்பித்தான் மயிலை மன்னார்.

சாஸ்திரிகள் நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டார்! நாயர் கண்களை இன்னமும் இறுக்கமாக மூடிக் கொண்டான்! வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. நான் மட்டும் ஒன்றும் புரியாமல், என்ன சொல்றாங்க இவங்க எனும்படியாய், மூவரையும் மலங்க, மலங்கப் பார்த்தேன்!

அன்புடன் என்னைப் பார்த்தபடியே மன்னார் தொடர்ந்தான்.

‘நான் முன்னாடி ஒனக்கு ஒரு தபா சொன்னேனே அது நெனைப்பு க்கீதா? சைவ சித்தாந்தம் பத்தி! அத்த மறுபடியும் எண்ணிப் பார்த்தீன்னா, இதுல சொல்றது சுளுவாப் புரிஞ்சிரும்! இன்ன முளிக்கறே?

“ஆறாறையும் நீத்து”

இத்தத்தான் மொதமொதலா சொல்றாரு அருணகிரியாரு.

ஆறாறுன்னா இன்னா?
ஆறாறு முப்பத்தாறு! இப்பப் புரியுதா?’ எனக் கண்சிமிட்டினான் மயிலை மன்னார்!

‘அட! ஆமாம் மன்னார்! அப்போ அந்த முப்பத்தாறு தத்துவங்களைப் பத்தியும் விளக்கமா சொன்னியே!
ஆன்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் ஏழு, சிவ தத்துவம் ஐந்துன்னு சொன்னியே! இப்ப ஞாபகத்துக்கு வருது!’ எனக் கூவினேன் நான்!

‘பரவால்ல! ஏதோ கொஞ்சமாவது நெனைப்புல வைச்சிக்கினு க்கீறியே! அது வரைக்கும் சந்தோசந்தான்! அந்த முப்பத்தாறைப் பத்தித்தான் இப்ப சொல்ல வராரு அருணையாரு. அந்த முப்பத்தாறுல கடைசியாச் சொன்னது, ‘சிவ’ தத்துவம்! இப்ப சுருக்கமா இன்னொரு தபா சொல்றேன் கேட்டுக்க!

பஞ்சபூதம் அஞ்சு, பஞ்சபுலனுங்க அஞ்சு, பஞ்சப்பொறிங்க அஞ்சு, ஞானேந்திரியங்க அஞ்சு, மனம், புத்தி, அகங்காரம், சித்தமின்னு அந்தக்கரணங்க நாலு, வித்தியா தத்துவம்னு ஒரு ஏளு[ழு], ஆகக்கூடி, முப்பத்தொண்ணு. அதுக்கப்பால, சிவ தத்துவமின்னு ஒரு அஞ்சு!.ஆக மொத்தம் முப்பத்தாறு! ....ஆறாறு!

இதுல கடைசியா வர்றதுதான் சிவம்! இது வந்திரிச்சுன்னா, முளுக்க, முளுக்க ஞானமே நெறைஞ்சு கெடக்கும்!.

ஆனாக்காண்டிக்கு, இதுக்கப்பாலியும் ஒரு ரெண்டு மலம் நம்மைப் பிடிச்சு ஆட்டும்! ஆணவம், கன்மம்னு!

சிவாநுபூதி கெடைச்சதுக்கப்பாலியுங் கூட இந்த ரெண்டும் நம்மை வுடாது! இத்தக் களி[ழி]ச்சுக் கட்டினாத்தான் மெய்யான அநுபூதி கெடைக்குமாம்!

அத்தத்தான், ‘அதன்மேல் நிலையை’ன்னு இங்க சொல்றாரு அந்தப் பெரியவரு! அதுதான் பெரிய ‘பேறு’ன்னும் சொல்றாரு!

பேறுன்னா பெரிய பாக்கியம்னு அர்த்தம்!

அது எனக்கு எப்பிடிக் கிடைக்கும் முருகா? அதுக்கு எதுனாச்சும் வளி[ழி] க்கீதான்னு,… ‘பெரும் ஆறு உளதோ?ன்னு கதர்றாரு அருணகிரியாரு!

ஆறுன்னா வளி[ழி].

நீ சொன்னதப் பிடிச்சுக்கினு, வூடு, சொந்தம், பந்தம், நெனைப்பு, ஆசை, மயக்கம் அல்லாத்தியும் வுட்டுட்டேன் முருகா! நீயே கெதின்னு ஒங்காலையும் புடிச்சுக்கினேன் கந்தா! அப்பவும் நீ எனக்குத் தெரியலியே! நான் இன்னாதான் பண்ணணும்னு நீ சொல்றே! இதுக்கு இன்னாதான் வளி[ழி]ன்னு சொல்லு கொ[கு]மரான்னு கெஞ்சறாரு!

இதான்,… இந்த டெக்னிக்குத்தான் அருணகிரியாரு நமக்கெல்லாம் சொல்லிக் காட்டற ரூட்டு!

தனக்குக் கெடைச்சத, தன்னோட வைச்சுக்கினு மறைக்காம, இத்தத் தேடறவங்களுக்காகவும் சொல்லித் தர்ற நல்ல மனசு! ‘கரவே’ இல்லாத மனசு!

நேத்துக்கூட ஆரோ ‘தனக்குக் கிடைச்ச நல்லத்தயெல்லாம் மத்தவங்களுக்கும் கெடைக்கட்டுமே’ன்னு சொல்றாருன்னு எங்கையுல வந்து சொன்னியே’ அந்த நல்ல மனசு!

தேடறவங்களுக்குக் கெடைக்கும்! புரியறவங்களுக்குப் புரியும்…. புரியட்டும்னு இப்பிடி சொல்றாரு!

முப்பத்தாறியும் கடந்து போனீன்னா, ஒரு பெரிய அனுபவம் ஒனக்காகக் காத்துக்கினு க்கீதுன்றத எவ்ளோ தெளிவா,,…. அதே சமயத்துல பூடகமா.. சொல்லித் தராரு பாரு!

‘ஒரு பத்து நிமிசம்…. தெனமும் ஒரு பத்து நிமிசத்துக்கு காலைலியும், ராத்திரிலியும் ஒனக்குப் பிடிச்ச சாமிய மனசுல நெனைச்சுக்கினு தியானம் பண்ணுன்னு ஒங்காளு சொன்னாருன்னு அன்னைக்கு சொன்னியே! அதுதான் இதுவும்! செய்யிறியோ நீ? .....இல்ல! .....அதான் இப்பிடி இன்னமும் முளி[ழி]ச்சுக்கினு க்கீறே!’ என ஒரு விதமான பரிவுடன் என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்!

ஏதோ ஒரு அணுகுண்டு வந்து என் தலையில் விழுந்தது போன்ற திகிலுடன் அவனை ஏறிட்டு நோக்கினேன்!

என்னைப் பொருட்படுத்தாமல் மேலே தொடர்ந்தான் மயிலை மன்னார்!

‘இப்ப நான் சொன்னது அத்தினியையும் வுட்டுட்டு, இதுக்கும் அடுத்த ரெண்டு வரிக்கும் இன்னா சம்மந்தம்னுதான் நீ கேக்கப்போறே! ஏன்னா, நீ இன்னும் பொஸ்தக அறிவாலியே அல்லாத்தியும் சமாளிச்சிரலாம்னு நெனைக்கறே! தெரிஞ்சுக்க நெனைக்கறது நல்லதுதான்!
ஆனா, நாப்பத்தேளு[ழு]க்கு வந்தாச்சு! இப்பவாவுது புரிஞ்சுக்க ‘ட்ரை’ ப்பண்ணு. இன்னா நான் சொல்றது?’ எனச் சிரித்தான் மன்னார்.

எனது கண்களும் தானாக மூடிக்கொண்டன! காதுகள் மட்டும் மன்னார் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தன.

[அடுத்த பகுதி நாளை வரும்!]
**************
[தொடரும்]

தொடர்ந்து படித்து ஆசிகூறும் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்!
அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP