Wednesday, March 21, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 57 [51-2]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 57 [51-2]

51. [2]

‘கரீட்டாத்தான் பாயிண்ட்டைப் பிடிச்சிருக்கே நீ’ என என்னைப் பார்த்துச் சொன்னபடியே தொடர்ந்தான் மயிலை மன்னார்!

உருவாத் தெரியுற ஒண்ணுதான் உருவமே இல்லாத அருவமா மாறும்! இப்ப மொதல்ல முருகன்னா இவந்தான்னு நீ நெனைச்சுக்கினு தியானம் பண்றேன்னு வையி! ஒரு சமயத்துல, அந்த உருவமே அளிஞ்சுபோயி, ஒண்ணுமே இல்லாமப் பூடும்! நீயும், முருகனும் ஒண்ணாக் கலந்திருவே! இல்லாங்காட்டிக்கும், இவந்தான் நாம பாத்த அந்த உருவம்ன்ற நெனைப்பே ஒனக்கு இல்லாமப் போயிரும்! அப்ப, அந்த டயத்துல, உரு எது? அரு எது?ன்னு ஒனக்கே புரியாத ஒரு நெலை ஒனக்குள்ள வந்து முட்டிக்கும்,

அதாங்காட்டிக்கு, திருவருளே குருவா வரும். எதுத்தாப்புல நிக்கற குருவே ஒனக்கு திருவருளாத் தெரியும்!~
இந்த நெலைதான் அநுபூதி!

இத்தப் புரிய வைக்கறதுக்குத்தான் இத்தினி ஒதாரணமும் சொல்லிப் படுத்துறாரு அருணகிரியாரு!

ஏன்னா, அவுருக்குப் புரிஞ்சிருச்சு!

குருவா எதுத்தாப்புல வந்து நிக்கறான் முருகன்!
குருவா வந்தவனே திருவாவும் தெரியுறான்!

குருவா?, திருவா? உருவா? அருவா?ன்னு புரிஞ்சும் புரியாமலும் ஒரு நெலையுல ஒரு செகண்டு தத்தளிக்கறாரு அருணகிரியாரு!

ஆனாக்கண்டிக்கு, ஒடனே முருகன் தெளிய வைச்சிர்றாரு. .
அநுபூதின்னா இன்னான்னு புரிஞ்சிருது இவுருக்கு!

மத்தவங்களைப் போல இல்லாம, ஏதோ நமக்குக் கிடைச்சுதேன்னு அனுபவிச்சிட்டுப் போயிடற மனசு வரலை அவுருக்கு!

இந்த நிமிசத்த, இந்த அனுபவத்தை, அப்பிடியே சொல்லிறணுமேன்னு துடிக்கறாரு அந்தப் பெரியவுரு!
அதான் இப்பிடி வார்த்தையா வந்து வுளுது!

இதுக்குத்தான் ஒதாரணமா பலதும் சொல்லிக் காட்டுறாரு!

எப்பிடி ஒரு பூவுலேர்ந்து வர்ற மணம், ….. வாசனையைப் பிரிச்சு ஒணர முடியாதோ, அப்பிடித்தான், இந்த உருவும், அருவும்னு சொல்றாரு.

சரி, இது ஒனக்குப் புரியலைன்னு வைச்சுக்கோ… ஏன்னா, சில பூவுங்க அளகா இருக்கும், ஆனாக்காண்டிக்கு, வாசம் இல்லாம இருக்கும். சிலதுல செம வாசனை வரும் ஆனா, அளகா இருக்காது!

அதுக்காவத்தான், அடுத்தப்புல அந்த மணி, ஒளி ஒதாரணத்தக் காட்றாரு!
அது சரி, எத்தினிப் பேருக்கு மணியப் பத்தித் தெரியும்னு ஒரு நெனைப்பு ஒடனியே அவருக்குள்ளாறத் தோணுது!

ரொம்ப ஏளைபாளைங்க இந்த பொன்னு, மணி இத்தெல்லாம் பாத்திருங்க மாட்டாங்கள்ல! அதான் அவரோட கருணை உள்ளம்.!
எப்பிடியாச்சும் சொல்லி அல்லாருக்கும் வெளங்கவைச்சிறணும் இந்த நிமிசத்தைன்னு தவிக்கறாரு!

இதெல்லாம் ஒரு கனவு மாரி!
ஒரே ஒரு செகண்டுதான் தங்கும் !
அந்த நொடியைப் பிடிச்சுக்கணும்!
அத்த வுட்டா, அப்பாலிக்கா அது எப்பிடி இருந்திச்சுன்ற நெனைப்புக் கூட தங்காது!

அந்த செகெண்டை, அந்த அனுபவத்தை, அந்த அனுபூதியை சொல்லத் தவிக்குற ஒரு மனசோட வெளிப்பாடுதான் இந்தக் கடைசிப் பாட்டு!

அத்த நெனைப்புல வைச்சுக்கினு இந்தப் பாட்டைப் படிச்சா, அத்தினியும் கொஞ்சமாவது புரியலாம் .

அத்த வுடு! இப்ப அதுக்காவ இன்னா சொல்ல வராருன்னு பாப்பம்.

சாமின்னு ஒண்ணு இருக்குன்னு நம்பாதவனும் இருப்பான்.
பூ இருக்கற பக்கமே போகாதவனும் இருப்பான்.
பொன்னு, மணியைப் பாக்காத ஆளுங்களும்கூட இருப்பாங்களே! அவங்களுக்குல்லாம் இன்னாத்தச் சொல்லி இத்தப் புரிய வைக்கறதுன்னு நெனைக்கறாரு!

அது ஒண்ணுதான் அவுருக்கு இப்ப நெனைப்பு முச்சூடும்!
‘டக்’குன்னு ஒரு நெனைப்பு தோணுது அவுருக்கு!

இந்த ஒலகத்துல பொறந்த அல்லாருக்குமே தெரிஞ்ச ஒரு ஒதாரணத்தக் காட்டிப் பாடறாரு.

முட்டை சாப்படறவன்லேர்ந்து, முளு சைவமா க்கீற அல்லாருக்குமே தெரிஞ்ச ஒண்ணைச் சொல்லிப் புரியவைக்கப் பாக்கறாரு!

அதான் அந்த ‘கருவாய், உயிராய்!

கருவிலேர்ந்துதான் உசிரு வருது......... உசிரு வந்தாத்தான் கருவுக்கே மதிப்பு.!
அப்பிடியாப்பட்ட ஒண்ணுதாண்டா இதுன்னு கூவுறாரு!

சரி, அதுவும் புரியலைன்னா, இன்னொண்ணும் சொல்றேன்னு ‘கெதியாய், விதியாய்'னு சொல்லிக் காட்றாரு.

சாமியை நம்பாதவங்கூட, கெதியையும், விதியையும் நம்புவான்றதப் புரிஞ்சவரு அருணகிரியாரு.

இப்ப மொதல்லேர்ந்து பாரு.

உருவாய்னு ஆரம்பிச்சு, விதியாய்னு முடிக்கறாரு!

நம்பறவன், நம்பாதவன், இருக்குன்னு சொல்றவன், இல்லைன்னு சொல்றவன்னு அத்தினிப் பேருக்குமே இந்த அனுபவத்தைச் சொல்லிறணும்னு தவிக்கற அவரோட நல்ல மனசு ஒனக்குப் புரிய வரும்!

அதெல்லாம் சர்த்தான்! இத்தினியும் சொல்லிட்டு, இன்னும் அந்தக் கடைசி வரிக்கு வரலியேன்னுதானே பாக்கறே!’ எனச் சிரித்தான் மயிலை மன்னார்!

'ஆமாம் மன்னார்!' என ஆவலுடன் எல்லார் குரல்களும் ஒருசேர ஒலித்தன!

[தொடரும்…..முடிவைத் தேடி!]
**************
தொடர்ந்து படித்து ஆசிகூறும் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்! அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP