"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 29
"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 29
முந்தைய பதிவு இங்கே!
27.
"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்." [380]
மறுநாள் பொழுது விடியும் முன்னரே, கையில் ஆயுதங்களோடு, ஒரு ஐம்பது காட்டுவாசிகள் காட்டுக்குள் ஊடுருவி மறைந்தனர்.
சற்று நேரம் பொறுத்து, அரிவாள், கம்பு தாங்கிய ஒரு கூட்டம்... சுமார் இருபது பேர் அடங்கிய ஒரு கூட்டம்.... காட்டுக்குள் நுழைந்தது.
பதுங்கிப் பதுங்கி வந்த அவர்கள், மரங்களுக்கு இடையே மறைந்து மெதுவாக முத்துராசாவின் வீடு நோக்கி நகர்ந்தனர்.
காட்டுவாசிகள் இவர்களை மறைந்திருந்தபடியே கவனித்தனர்.
இந்தக் கூட்டம் தலைவரின் வீட்டுக்குள் நுழையப் போகும் வேளையில், திடீரென காட்டுவாசிகள், 'ஓ' வென பெருத்த சத்தமிட்டபடி, சொல்லி வைத்தாற் போல், இவர்களைச் சூழ்ந்துகொண்டு தாக்கினர். அவர்களின் தலைவன் உட்பட அனைவரும் சுற்றி வளைக்கப் பட்டனர்.
மீசையை நீவியபடி, முத்துராசா வெளியில் வந்தார்.
'எவண்டா எங்க ஊருக்குள்ள வந்து எங்களைத் தாக்கறது? என்னா தைரியண்டா உங்களுக்கு? யார்றா அவன்?' எனக் கோபமாக அவர்களைப்
பார்த்து கத்தினார். கையில் அகப்பட்ட ஒருவன் கன்னத்தில் 'பளார்' என ஒரு அறையும் விட்டார்.
' ஐயா! எங்களை மன்னிச்சிருங்க! நாங்க சண்டைக்காரங்க இல்லீங்க. கீழே நடக்கற சண்டையால, எங்க குடும்பம்லாம் பசி பட்டினியில தவிக்குதுங்க. பயந்து போயி, மலையடிவாரத்துல பதுங்கிட்டோமுங்க. காட்டுக்குள்ள வந்தா எதனாச்சும் சாப்பாடு கிடைக்குதோன்னு பாக்க வந்த எடத்துல, கண்ணுல பட்ட பெரிய வீட்டைக் குறி வைச்சு வந்திட்டோமுங்க. எங்களை மன்னிச்சு விட்டிருங்கய்யா!' என அவர்களில் ஒருவன் முன் வந்து கதறினான்.
'அதுக்கு ஒழுங்கு மரியாதையா வந்து கேட்டிருக்கலாமில்ல. இப்படியா கம்பு கத்திங்களோட வர்றது? காட்டுவாசிங்கன்னா ஒண்ணும் தெரியாதவங்கன்னு நினைச்சீட்டீங்களா?' என ஒருவன் ஆவேசப்பட,
அவனைக் கையமர்த்திவிட்டு உடனிருந்தவர்களிடம் சிறிது நேரம் ஆலோசனை செய்த பிறகு, அவர்களுக்கு சோறு போட்டு, கையில் கொஞ்சம் பொருட்களும் கொடுத்து, பத்திரமாகக் கீழே அனுப்பி வைக்க உத்தரவிட்டு கந்தனை அழைத்து வரச் சொல்லி ஆளனுப்பினார் முத்துராசா.
'நீ சொன்னபடியே நடந்திடுச்சு. நீ பேசாம எங்களோட இங்கியே இருந்திரு. பூசாரி கூட சொல்லிட்டாரு. அவருக்குத் துணையா, அவர்கிட்டேருந்து இன்னும் கொஞ்சம் கத்துகிட்டு, நீயும் எங்களோடவே இருந்திறலாம். என்ன நா சொல்றது?' என்றார்!
பக்கத்தில் இருந்தவர்களும் அதை ஆமோதிப்பது போல தலையாட்டினர்!
கந்தன் அவரைப் பார்த்துச் சிரித்தான்!
'எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்க. ஒரு முடிவு பண்ணிட்டு சொல்றேன். எனக்கும் முடிக்க வேண்டிய காரியங்க இருக்கு.' என்று தன் குடிசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
'மதியம் சாப்பாடு உனக்கு இங்கதான். மறக்காம வந்திரு!' தலைவரின் குரல் பின்னாலிருந்து கேட்டது!
--------------------
சாப்பிட்டு முடித்து, ஒரு குட்டித் தூக்கம் போட்ட பின், மாலை ஆனது,. எவரிடமும் சொல்லாமல், கந்தன் தெற்குப் பக்கமா நடக்கத்
தொடங்கினான். பொன்னி கண்னில் படக்கூடாது என மனதுக்குள் வேண்டிக் கொண்டான்.
வெள்ளைப் பாறையைத் தாண்டி நடந்த பின்னர், எப்படிப் போவது என சில நொடிகள் தயங்கினான்.
இருள் மலையில் கவியத் தொடங்கி விட்டது.
பறவைகள் தங்கள் கூடுகளில் சென்று மடங்கின. தூரத்தில் ஏதோ ஒரு மிருகத்தின் குரல் கேட்டது. கந்தனுக்குப் பயம் தொற்றியது.
திரும்பி விடலாமா என யோசித்தான்.
'நான் இங்கே இருக்கேன்' என ஒரு குரல் கேட்டது.
குரல் வந்த திசை நோக்கி திரும்பினான்.
ஒரு மரக்கிளையின் மீது உட்கார்ந்தபடி தன் தாடியை நீவி விட்டுக் கொண்டே சிரித்தார் சித்தர்.
'உன்னோட விதிதான் உன்னை இங்கே கொண்டு வந்திருக்கு' என்றார், மேலும்.
'கீழே சண்டை நடக்குது. இங்கேயும் இப்ப வந்திருச்சு. நான் எங்கே போக முடியும்? அதான் இங்கே, உங்ககிட்ட வந்திட்டேன்' எனப்
பதிலுக்குச் சிரித்தான் கந்தன்.
'என் பின்னால வா' எனச் சொல்லியபடியே மரத்திலிருந்து குதித்த சித்தர், வேக வேகமாக நடக்க ஆரம்பித்தார்.
சட்டென்று பார்வைக்குத் தெரியாத ஒரு குகையின் வாசலருகே வந்த சித்தர், அவனை உள்ளே செல்லும்படி கை காட்டினார்.
மரங்களுக்கும், மலைப்பாறைகளுக்கும் இடையே இருந்த அந்தக் குகையின் வாசல் சிறியதாக இருந்தாலும், உள்ளே நல்ல விசாலமாக இருந்தது.
ஒரு அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.ஒரு மூலையில், ஒரு மான் தோல் விரிக்கப் பட்டிருந்தது. ஓலைச் சுவடிகள் ஒரு ஓரத்தில் அடுக்கி
வைக்கப் பட்டிருந்தன.
'எதுக்காக என்னை வரச் சொன்னீங்க?' என்றான் கந்தன், குகையினொரு ஓரத்தில், கைகளைக் கட்டிக் கொண்டு.
'வா, வா! இப்படி வந்து உட்கார்! மரியாதையெல்லாம் மனசுல இருந்தாப் போதும்!' என அவனை அன்புடன் அழைத்தூ உட்காரவைத்துவிட்டு,
'நீ வரப் போறேன்னு எனக்குத் தெரியும். உனக்கு உதவி செய்யணும்னு எனக்கு உத்தரவாயிருக்கு! '
'உங்களை எதிர்பார்த்துகிட்டு இருக்கறது நானில்லை. அது, அந்த வெள்ளைக்காரரு.. ராபர்ட். அவர்தான் ஏதோ ரஸவாதம் உங்ககிட்ட கத்துக்கணும்னு அலையறாரு !'
'அவனுக்கு நான் வேற வேலை கொடுத்திருக்கேன். அவன் அதைச் செஞ்சுகிட்டிருக்கான். அவன் நேரம் வர்றப்ப, நான் அவனைப் பாத்துப்பேன்.
இப்ப இது உன்னோட நேரம்' என்றார் சித்தர்.
'அப்படீன்னா?' எனப் புரியாமல் விழித்தான் கந்தன்.
'ஒரு ஆளு எதையாவது தீவிரமா விரும்பினான்னா, அவனுக்கு இந்த உலகத்துல இருக்கற சக்திங்கள்லாம் ஓடிவந்து உதவி செய்யும்' எனச்
சொல்லிச் சிரித்தார் சித்தர்.
தங்க மாலை அணிந்த ஒரு கிழவர் எப்போதோ சொன்ன வாசகங்கள் கந்தன் முன் நிழலாடின.
'ஓ! அப்போ நீங்க எனக்கு அந்தப் புதையலை எடுக்க உதவி பண்ணப் போறீங்களோ? ' என நம்பிக்கையில்லாமல் கேட்டான் கந்தன்.
'தப்புக் கணக்கு போடாதே! உனக்கு என்ன வேணும்னு உனக்கு ஏற்கெனவே தெரியும். எந்தப் பக்கமாப் போகணும்னு மட்டும் நான் காட்டப் போறேன்.'
கந்தன் கட கடவெனச் சிரித்தான்.
'எனக்கு என்ன வேணும்னு எனக்குத் தெரியும். என்னோட புதையல் எனக்குக் கிடைச்சாச்சு. கையுல பணம் இருக்கு. முத்துராசா என்னை இங்கியே
இருக்கச் சொல்லிட்டாரு அவருக்கு குறி சொல்ற ஆளா. எனக்குப் பிடிச்ச சில விசயங்களும் இங்கியே இருக்கு. இனிமே நான் எங்கியும் போகணுமா என்ன?'
என்றான் கொஞ்சம் அலட்சியமாக.
அருகே இருந்த ஒரு தட்டிலிருந்து ஒரு கிழங்கை எடுத்துக் கடித்தான்.
'வாயிக்குள்ள எது போவுதுன்றது முக்கியமில்ல; என்ன வார்த்தைங்க வெளியுல வருதுன்றதுதான்' என ஒரு சுவடியைப் புரட்டியபடியே
சொன்னார் சித்தர்.
'இங்கே ஒண்ணும் வேலை இருக்கறதா எனக்குத் தெரியலை. எதுக்காக என்னை இங்க வரச் சொன்னீங்கன்னும் புரியலை. அப்ப நான் கிளம்பறேன்' எனச் சொல்லியவாறே கந்தன் எழுந்தான்.
'உட்காரு அங்கேயே!' சித்தரின் குரல் அவன் உள்ளே சென்று அவன் நாடி நரம்பையெல்லாம் உலுக்கியது. மந்திரத்தால் கட்டுண்டவன் போல்
அப்படியே உட்கார்ந்தான் கந்தன்.
'பசிக்குதுன்னா இங்க இருக்கறதை சாப்பிட்டுட்டு படு. நாளைக்குக் காலையில கிளம்பறதுக்குத் தயாரா இரு.' எனச் சொல்லிவிட்டு, வெளியே
சென்றார் சித்தர்.
'என்ன நடக்குது எனக்கு. இடம் தெரியாம வந்து மாட்டிகிட்டோமோ!' என யோசித்தபடியே, உறக்கத்தில் ஆழ்ந்தான் கந்தன்.... ஒன்றும் சாப்பிடாமலே!
*****************
அடுத்த அத்தியாயம்
26 பின்னூட்டங்கள்:
என்னங்க, அவனே கண்டுபிடிக்கணுன்னுதானே ஐடியா? இப்போ சித்தர் இவனை பலாத்காரமா எங்கயோ அனுப்பறாரு. அது என்ன நியாயம்?
என்னங்க கொத்ஸ்! சரியாப் படிங்க சித்தர் என்ன சொன்னார்ன்னு!
//உனக்கு என்ன வேணும்னு உனக்கு ஏற்கெனவே தெரியும். எந்தப் பக்கமாப் போகணும்னு மட்டும் நான் காட்டப் போறேன்.'//
:))
என்ன ஏதுன்னு தெரியாம கந்தன் அலட்சியப்படுத்தினது இப்பத்தான் எனக்கு விளங்குது!:)
//'வாயிக்குள்ள எது போவுதுன்றது முக்கியமில்ல; என்ன வார்த்தைங்க வெளியுல வருதுன்றதுதான்' //
இதான் இங்கே கவனிக்கணும்.
முக்காலே மூணு வீசம் தொல்லைகள் வார்த்தைகளைக் கட்டாததால்தானே வருது.
வெறும் வாயைக்கட்டி என்ன பியோசனம்?
Present
'ர'விட்டுப்போச்சு.(-:
//வெறும் வாயைக்கட்டி என்ன பியோசனம்?//
பிரயோசனம்:-)
//வெறும் வாயைக்கட்டி என்ன பியோசனம்?//
அதானே!
வழி காட்டுறேன்னு சொல்லி இப்ப மிரட்டவும் ஆரம்பிச்சிட்டாரா அந்த வாத்தியாரு!
////வெறும் வாயைக்கட்டி என்ன பியோசனம்?//
பிரயோசனம்:-)//
'ர' இல்லாமலும் புரிந்தது டீச்சர்!
:))
'marked' Mr.anony!
பிரம்ம சித்தரும் வந்து சொல்லிட்டார் டீச்சர்!
அப்புறம் என்ன?
:))
//வழி காட்டுறேன்னு சொல்லி இப்ப மிரட்டவும் ஆரம்பிச்சிட்டாரா அந்த வாத்தியாரு!//
புரியாத பசங்களை வேற என்ன பண்றது, சிபியாரே!
சாம, தான, பேத தண்டம்!
:)
கந்தன் விருப்ப பட்டு தான் அங்க வருகிறான்
சித்தரை பார்த்தபிறகு ஏன் அப்படி நடந்து கொண்டான்
கொஞ்சம் குழம்புது
இது வரை ஒழுங்கா இருந்த கந்தனுக்கு ஏன் இப்படி புத்தி பிசகறது.
மனம் போற போக்கெல்லாம் போக வேண்டாம். சித்தர் பேச்சைக் கேட்டு ஒழுங்கா புதையலைத் தேடச் சொல்லுங்க சார்:))
இடுப்பில காசு இருந்தா அசப்பில ஒரு வர்த்தை வரும்னு ஒரு பழமொழி இருக்கும்.
இவனுக்குப் பொன்னியையும்,முத்துராசாவையும்
பார்த்ததும் புத்தி மாறிவிட்டதே,.
அட டா... கந்தனை பசியோட படுக்க வச்சுட்டிங்களே..
VSK Ayya,
kadhai romba viru viruppa pogudhu. kanmunnadi nadakkura maadhiri irukku. pramadham... neenga dhinamum ezhudhalaame!
- vaseegara
//சித்தரை பார்த்தபிறகு ஏன் அப்படி நடந்து கொண்டான்
கொஞ்சம் குழம்புது//
முந்தைய தினம் வருகிறேன் என ஒப்புக்கொண்ட போது, கந்தனின் நிலை வேறு! மறுநாள் அவன் சொன்ன குறி பலித்து அதனால் ஒரு வேலையும் கிடைத்துவிட்டது; இனி பொன்னியின் அருகிலேயே இருக்கலாம் என்ற நிலை வந்தபோது, அவன் மனம் லட்சியத்திலிருந்து வழுக்குகிறது.
அதனால்தான் அவ்வளவு அலட்சியம்.
சில தாற்காலிகத் தேவைகள் பூர்த்தியானதுமே, நாம் நம் கனவை மறந்துவிடுகிறோம் என்பதைக் காட்டும் நிகழ்வு இது, வளர் அவர்களே!
ஆஹா! இப்போதுதான் 'வளர்' அவர்களுக்கு பதில் சொல்லி வருகிறேன்.
இங்கு நீங்கள் சிறப்பாக அதையே சொல்லியிருக்கிறீர்கள்!
நன்றி வல்லியம்மா!
:))
குழப்பமாயிருக்கும் போது, பசியெல்லாம் எடுக்காது... அப்படியே எடுத்தாலும் சாப்பிடப் பிடிக்காது, நாகை நண்பரே!:))
வாரம் 5 நாள் வருகிறதே, 'வசீகரா' இந்தத் தொடர்!
சனி, ஞாயிறுகளில் பலருக்கு கணினிப்பக்கம் வர முடியாது.
எனக்கும் அடுத்த வாரப் பதிவுகளை ஒழுங்கு பண்ண சற்று அவகாசம் கிடைக்கிறது!
பாராட்டுக்கு நன்றி!:))
//'உட்காரு அங்கேயே!' சித்தரின் குரல் அவன் உள்ளே சென்று அவன் நாடி நரம்பையெல்லாம் உலுக்கியது. மந்திரத்தால் கட்டுண்டவன் போல்
அப்படியே உட்கார்ந்தான் கந்தன்//
SK
என்னங்க இது
சித்தர் இப்படி குரலால கட்டிப் போடறாரு!
//எந்தப் பக்கமாப் போகணும்னு மட்டும் நான் காட்டப் போறேன்//
காட்டப் போறாரா?
இல்லை காட்டமாக் காட்டப் போறாரா? :-)
சரி, எதுவா இருந்தாலும் கந்தனுக்கு அனுபவம் தானே! கனவ்ய் மெய்ப்படணும்-னா சும்மாவா?
மதுரைல நெறைய பொன் கெடைச்சது. ஆனா அத விட்டுட்டு லேசா வர முடிஞ்சது. கொல்லிமலைல ஒரேயொரு பொண் கெடைச்சது. அத விட்டுட்டுப் போக முடியலையாக்கும்...அதான் சித்தர் வந்து வெரட்டுறாரு...
//கனவ்ய் மெய்ப்படணும்-னா சும்மாவா?//
எத்தத் தின்னா பித்தம் தெளியும்!
பித்தம் தெளிய மருந்திருக்குது!
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா!
:))
உங்க பின்னூட்டத்தைப் படித்ததும் உடனே என் மனைவியிடம் கூவினேன்!....
'இதுக்குத்தான் ஒரு ஜி.ரா. வரணும்ன்றது!
பொன், பெண் இரண்டையும் எப்படி கம்பைன் பண்ணிட்டாருன்னு!
நன்றி, நண்பரே!
ப்ரசண்ட் சார்.
பின்னூட்டங்களும் அதற்கான தங்களின் பதில் பின்னூட்டங்களும் அருமை.
'வாயிக்குள்ள எது போவுதுன்றது முக்கியமில்ல; என்ன வார்த்தைங்க வெளியுல வருதுன்றதுதான்'
"நா காக்க " - குறளாசானின் குறளுக்கு இவ்வளவு எளிமையாக யாரும் இது வரை பொருள் கூறியதில்லை. அருமையான விளக்கம் தத்துவமாக கூறப்படுகிறது.
கதையின் அனைத்துப் பகுதிகளிலும் தத்துவங்கள் வாரி இறைக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தையும் ஒன்றாக ஒரு பதிவில் இட வேண்டும் - தக்க விளக்கங்களுடன்.
கதையோடு கூறிய-இணைந்த தத்துவங்கள் தனியே பதிவாகக் கூறினால் புரியுமா ? - பார்க்கலாம்.
எல்லாம் மன்னார் இருக்கற தைரியம் தான், திரு. சீனா!
நீங்க சொன்னதுக்கப்புறமா, அந்தக் குறளையே இதுக்கு தலைப்புக் குறளா இட்டிருக்கலாமோ என்ற எண்ணம் வருகிறது.
மிக்க நன்றி.
உங்கள் அனைவரின் பின்னூட்டங்களும் இந்தத் தொடருக்கு வலிமை சேர்க்கின்றன என்றால் அது மிகையில்லை.
Post a Comment