Monday, December 21, 2009

"தேங்காப்பாலு... மாங்காப்பாலு!"

"தேங்காப்பாலு... மாங்காப்பாலு!"


இந்த மாதிரி சமாச்சாரமெல்லாம் சுட்டுப் போட்டாலும் எனக்கு வராது என்பதால், வழக்கம் போல மன்னாரைத்தான் தொந்தரவு செய்ய வேண்டியிருந்தது! காலையில்தான், ஒரு குறளைப் பற்றிக் கேட்கப்போய், கோபமாகத் திட்டி அனுப்பியிருந்தான் என்றாலும், வேறென்ன செய்வது என அவனைத் தேடிப் போனேன்!

மாலை நேரம்! நாயர் கடை வாசலில் ஒரு ஸ்டூலின் மீது அமர்ந்துகொண்டு, ஒரு பீடியை வலித்தபடி, மாலைத் தினசரி ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தவன் முன்னே சென்று நின்றேன்!

'அடடே! வாப்பா சங்கரு! இன்னா காலையில பேசினதுக்கு கோவமா எம்மேல?' என அவன் கேட்டதும், எதையுமே மனதில் கொள்ளாத அவனது பாங்கை நினைத்து வியந்தபடியே, 'கோபம்னா இப்பத் தேடிகிட்டு வருவேனா?' எனச் சிணுங்கினேன்.

'ம்க்கும்! இதுக்கெல்லாம் ஒண்ணும் கொறைச்சலில்லை! சும்மா வரமாட்டியே! இன்னா சமாச்சாரம்? இப்ப ஆரு இன்னா கேட்டாக்க?' எனச் சொல்லிச் சிரித்தான்.

மௌனமாகக் கையிலிருந்த தாளை அவனிடம் நீட்டினேன்.

'அத்தெல்லாம் வேணாம்! நீயே படி அதுல இன்னா எளுதிருக்குன்னு' எனச் சொல்ல, நானும் படித்தேன்.


1. தாவாரம் இல்லை, தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி

2. மாங்காய்ப் பால் உண்டு மலை மேல் இருப்பார்க்கு
தேங்காய்ப் பால் ஏதுக்கடி குதம்பாய் தேங்காய்ப் பால் ஏதுக்கடி

3. செத்தாரைப் போலத் திரியும் மெய்ஞானிக்கு
கைத்தாளம் ஏதுக்கடி - குதம்பாய் கைத்தாளம் ஏதுக்கடி

4. பட்டணம் சுற்றிப் பகலிலே திரிவோர்க்கு
முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய் முட்டாக்கு ஏதுக்கடி.

'இதுக்கெல்லாம் அர்த்தம் வேணுமாம் என்னோட நண்பர் ஒருவருக்கு' என்றேன்.

'கொதம்பைச் சித்தர் பாட்டுல்ல இது!' என்றவன், சற்று நேரம் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு, கண்ணைத் திறந்து, என்னைப் பார்த்து,

'இதுல அந்த ரெண்டாம் பாட்டுத்தான் கொஞ்சம் கஸ்டம்! மத்ததெல்லாம், அப்பிடியே படிச்சாலே கொஞ்சம் புரிஞ்சிரும். அதுனால, மொதல்ல அதுக்குச் சொல்றேன், கேட்டுக்கோ' எனச் சொல்லத் தொடங்கினான்.

'சித்தருங்க பாசையில, ரெண்டு சமாச்சாரத்தை அமிர்தம்னு சொல்லுவாங்க! ஒண்ணு வெளியில கிடைக்கற அமிர்தம்; இன்னொண்ணு உள்ளாலியே சுரக்குமாம்!
இந்த வெளியில கிடைக்கறதுக்குப் பேரு தேங்காப்பாலு! தேங்காயில இருக்கற
கொளுப்பை எடுத்துட்டுக் கடயற பாலுக்கு இந்தப் பேரு. நம்ம வள்ளாலாரு சாமி இத்த 'புறப்புற அமிர்தம்'னு சொல்லுவாரு. இத்த மட்டுமே சாப்பிட்டுகிட்டு உசிரு வாளுவாங்க சித்தருங்கல்லாம்.

தேங்காப்பாலு கதை இதாச்சா! இப்ப மாங்காப்பாலுக்கு வருவோம்!

வாசி யோகம்னு ஒரு பயிற்சி இருக்குன்னு சித்தருங்க சொல்லி வைச்சிருக்காங்க!
மூச்சு வுடறதக் கட்டுப்படுத்தி, சுளுமுனைன்னு சொல்ற இடத்துல அதை நிறுத்தி பயிற்சி பண்றதை அப்பிடி வாசின்னு சொல்லுவாங்க! இதப் பத்தி தெரிஞ்சுக்கணும்னா, ஒரு சரியான குருகிட்ட போய் கத்துக்கணும் நீ! அதான் ஒனக்கு ஒருத்தர் இருக்காரே! அவருக்குத் தெரியும் ஒனக்கு சொல்லணுமா, வேண்டாமா, அப்பிடி சொல்லணும்னா, அத்த எப்ப சொல்லணும்னு
அல்லாமே தெரியும் அவருக்கு! இப்ப அதில்ல இங்க பிரச்சினை!

விசயத்துக்கு வருவோம்!
இப்பிடி வாசியைக் கட்டி, தியானம் பண்ணிப் பண்ணி, அசைவே இல்லாம நிக்கற நிலை ஒருத்தனுக்கு வந்திச்சுன்னா, அப்போ, புருவத்துக்கு மத்தியில, ஒரு ஜோதி தெரிய ஆரம்பிக்குமாம். அப்ப, அவனோட உள்ளுக்குள்ள, ஒரு அமுதம் சுரக்குமாம்! அதான் இந்த மாங்காப்பாலு.!

இத்தச் சாப்பிட்டவனுக்கு சாவைப் பத்தின பயம் போயிரும்! 'மரணமில்லாப்
பெருவாழ்வு'ன்னு வள்ளலாரு சொல்றதும் இதைத்தான்! அதுக்கப்புறம், சாப்பாடு கூடத் தேவைப்படாது அவனுக்கு! அந்தத் தேங்கப்பாலு கூட அவனுக்கு இனிமே வேணாம்!
அத்தத்தான் அந்த ரெண்டாவது பாட்டுல, மாங்காப்பாலு சாப்ட்டவனுக்கு, தேங்காப்பாலு ஏதுக்கடீன்னு கொதம்பையைப் பார்த்து பாடறாரு சித்தர்! வெளங்கிச்சா?
வெளங்கலைன்னா, இதுக்கு மேல என்னால ஒண்ணும் பண்ண முடியாது! ஓடு, ஒன்னோட குருவாண்டை!' எனச் சொல்லி நிறுத்தினான்.

இப்ப ஓடிட்டா, மீதிப் பாட்டுக்கு விளக்கம் கிடைக்காதேன்னு, 'ம்ம்' எனப்
புரிந்ததுபோலத் தலையாட்டினேன்!
************

என் மனநிலையைப் புரிந்தவன்போல், மன்னார் ஒரு நமுட்டுச் சிரிப்பை
உதிர்த்துவிட்டு மேலே தொடர்ந்தான்!

'இன்னொண்ணு சொல்லணும். வாசின்னா குதிரைன்னு அர்த்தம்! மூச்சுக்காத்து மூலமா இந்தக் குதிரையைக் கட்றதுக்குப் பேருதான் வாசி யோகம். இனிமே மத்ததெல்லாம் பாக்கலாம்.

தாவாரம் இல்லை, தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி?

மொதப்பாட்டுல, தாவாரம் இல்லேன்னா ஒனக்கு ஒரு வீடு இல்லைன்றாரு! அந்தக் காலத்துல வீடு கட்றப்ப, தாவாரம் இல்லாம ஒரு வீடும் இருக்காது! வெளியிலேர்ந்து வர்றவங்கல்லாம், அக்கடான்னு ஒரு துண்டை விரிச்சு அதுல படுத்துக்குவாங்க. மேலேருந்து வெட்டவெளிக் காத்து சும்மா ஜிவ்வுன்னு பிச்சிக்கும்! சாப்பாடு ஒரு நூறு பேருக்கு ஒக்கார வைச்சுப் போடலாம்! சுருக்கமா சொல்லப்போனா, பிறத்தியாருக்கு ஒதவுற ஒரு எடம் வீட்டுலியே அதான்னு சொல்லலாம்.

இப்பல்லாம், ஆரும் தாவாரம் வைச்சு வூடு கட்றதில்லை! ஒதவி பண்ணனுன்ற
நெனைப்பே கொறைஞ்சு போச்சே! எப்பிடி அவன் தாவாரம் வைச்சு வூடு கட்டுவான்!
ஆனாக்க, அதில்ல இதுல சொன்னது!

"தா"ன்னா துன்பம், கஸ்டம்னு அர்த்தம். 'வாரம்'னா பங்கு போடறது! அடுத்தவங்களோட கஸ்டத்துல நாமளும் பங்கு எடுத்துக்கறதுதான் தாவாரம்! அத்தப் பண்ணாம, சும்மனாச்சுக்கும் தேவாரத்தை, அதாவது, சாமிப்பாட்டுங்களை மட்டுமே பாடிகிட்டு இருந்தியானா, ஒனக்கு மோட்சம் கிடக்காதுன்னு தீர்மானமா சொல்றாரு சித்தரு! 'பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்' னு கண்ணதாசன் பாடுவாரே, அதான் இது!


இன்னும் சுளுவாச் சொல்லணும்னா, எளுத வேண்டிய பரிட்சைக்கு ஒண்ணுமே படிக்காம, பிள்ளையாருக்கு நூறு தேங்கா ஒடைக்கறேன்னு வேண்டிக்கறாங்களே, அவங்களுக்கெல்லாம் ஒரு பதிலாக் கூட, இந்தப் பாட்டை எடுத்துக்கலாம்!


அடுத்தது மூணாவது!
செத்தாரைப் போலத் திரியும் மெய்ஞானிக்கு
கைத்தாளம் ஏதுக்கடி - குதம்பாய் கைத்தாளம் ஏதுக்கடி?

இந்தக் கட்சி மீட்டிங்லல்லாம் பார்த்திருப்பியே! ஆளாளுக்குப் பேசிகிட்டே இருப்பாங்க! திடீர்னு ஒர்த்தன் வந்து, மைக்கைப் பிடிச்சுகிட்டு,' இதோ நம்ம தானைத் தலைவர் வராரு'ன்னு ஒரு சவுண்டு வுடுவான். அவ்ளோதான்! கூட்டமே எளுந்து நின்னு, கையைத் தட்டிகிட்டு, 'தலீவா. தலீவா'ன்னு கோஷம் போடும்! அவரு பேசறப்ப, வார்த்தைக்கு வார்த்தை கைதட்டி குஜால் ஆவாங்க!

ஆனாக்க, அல்லாத்தியும் ஒணந்தவனுக்கு, இதுல்லாம் லச்சியமே இல்லை! விடுதலை ஆனவன்னா இன்னா? அல்லாம் செத்துப் போனவன்னு அர்த்தம்! செத்துப் போறதுன்னா உசிரை வுடறது இல்லை! அல்லா நெனைப்பையும், ஆசையையும் தொறந்தவன்னு பொருளு! அப்பிடியாப்பட்ட ஆளை இந்த வாள்க, ஒளிக கோஷம்லாம், கைத்தட்டல்லாம் ஒண்ணுமே பண்ணாதுன்றதை இதுல சொல்றாரு.

இப்பக் கடோசி பாட்டு!
பட்டணம் சுற்றிப் பகலிலே திரிவோர்க்கு
முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய் முட்டாக்கு ஏதுக்கடி?

ஆரும் பார்த்திடக் கூடாதேன்னு, பதுங்கிப் பதுங்கிப் போறவந்தான் முட்டாக்குப்
போட்டுகிட்டு, இருட்டுலியும் மூஞ்சியை மறைச்சுகிட்டுப் போவான்! அல்லாத்தியும் தொறந்தவனுக்கு, எப்பவுமே வெளிச்சத்துலியே இருக்கறவனுக்கு அதெல்லாம் எதுக்குன்றாரு. ரெண்டாவது பாட்டுல சொன்னதுபோல, வாசிக் குதிரையைக் கட்டி, உள்ளுக்குள்ளாலியே ஒரு ஜோதியைப் பார்த்தவனுக்கு, எப்பவுமே வெளிச்சந்தான்! எப்பவுமே பகல்தான்! ஐயா சுத்தறதும் பெரிய பட்டணம்! சாமியே இருக்கற பெரிய பட்டணம்! அப்பால இன்னாத்துக்கு அவரு முக்காடுல்லாம் போட்டுக்கினு, தான் ஒரு சாமியாருன்னு காட்டிகிட்டுத் திரியணும்? ஆரும் வந்து கை தட்றதுக்கா? இல்லேன்னா,
தேவாரம், பிரபந்தம் படிக்கறதுக்கா? அவருதான் விடுதலையாகி, ஜோதியில நிக்கறாரே! முக்காடெல்லாம் தேவையில்லைன்றாரு. அதெல்லாம் ஒன்னிய, என்னியப் போல ஆளுங்க போடறது! அவருக்குத் தோதுப்படாது!'

எனச் சொல்லி என்னைப் பார்த்துச் சிரித்தவன், 'இதுக்கெல்லாம் இன்னுமே ஆளமாப் பொருள் இருக்கும்! சொல்றவங்க வந்து சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்வாங்க! ஒனக்கு இது போறும்' எனச் சொல்லி, நாயரிடம் இரண்டு 'டீ'க்கு ஆர்டர் கொடுத்தான் மயிலை மன்னார்!

தெரியாத நாலு விசயத்தைக் கற்றுக் கொண்டோமே, அதையெல்லாம்விட, மயிலை மன்னாருடன் நல்லபடியாக இன்றையப் பொழுது இனிமையாகக் கழிந்ததே என்னும் திருப்தியோடு மானசீகமாக 'இறுகப் பற்றியவனை' வணங்கிக் கொண்டேன்!
எதிரே இருந்த கபாலீச்வரர் கோயிலில் மணி ஓங்கி ஒலித்தது!
********************

Read more...

Wednesday, December 16, 2009

அ.அ. திருப்புகழ் - 36 "ஏது புத்தி ஐயா எனக்கு"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - 36 "ஏது புத்தி ஐயா எனக்கு?"


திருத்தணி வாழ் முருகப் பெருமானைப் புகழ்ந்து அமைந்திருக்கும் இந்தப் பாடலைப் படித்தவுடன் என் மனதில் தோன்றிய முதல் எண்ணம் இதுதான்!
அருணகிரிநாதர் மகா குறும்புக்காரர்!

மிக மிக எளிய, படித்தாலே எவராலும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு பாடலை இயற்றிவிட்டு, சந்தத்தில் அதனைப் போடும் போது, இங்குமங்குமாய்ப் பல இடங்களில் கூட்டிச் சுருக்கி, ஏதோ ஒரு கடினமான பாடல் போலத் தோன்றுமாறு இதனை அருளியிருக்கிறார்!
பொருள் விளக்கம் என ஒன்றுகூட இப்பாடலுக்கு அநேகமாகத் தேவையிருக்காது! பதம் பிரித்தபின், வெகு எளிதாகப் புரியும் பாடல் இது!
முதலில் பாடலையும், பின்னர், அதனைப் பதம் பிரித்தும் பார்க்கலாம்!



தான தத்தன தான தத்தன

தான தத்தன தான தத்தன

தான தத்தன தான தத்தன ...... தந்ததான

......... பாடல் .........

ஏது புத்திஐ யாஎ னக்கினி

யாரை நத்திடு வேன வத்தினி

லேயி றத்தல்கொ லோஎ னக்குனி ...... தந்தைதாயென்


றேயி ருக்கவு நானு மிப்படி

யேத வித்திட வோச கத்தவ

ரேச லிற்பட வோந கைத்தவர் ...... கண்கள்காணப்


பாதம் வைத்திடை யாதே ரித்தெனை

தாளில் வைக்கநி யேம றுத்திடில்

பார்ந கைக்குமை யாத கப்பன்முன் ...... மைந்தனோடிப்


பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்

யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ

பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது ...... சிந்தியாதோ


ஓத முற்றெழு பால்கொ தித்தது

போல எட்டிகை நீசமுட்டரை

யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே


ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்

மான்ம ழுக்கர மாட பொற்கழ

லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே


மாதி னைப்புன மீதி ருக்குமை

வாள்வி ழிக்குற மாதி னைத்திரு

மார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளே


மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ

லார்வி யப்புற நீடு மெய்த்தவர்

வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே.


தான தத்தன தான தத்தன

தான தத்தன தான தத்தன

தான தத்தன தான தத்தன ...... தந்ததான

****************

......... பொருள் .........

[வழக்கம்போல் பின் பார்த்து, முன் பார்க்கலாம்! ]

ஓத முற்றெழு பால்கொ தித்தது
போல எட்டிகை நீசமுட்டரை
யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே


ஓதம் உற்று எழு பால் கொதித்தது போல
எண் திகை நீச முட்டரை ஓட வெட்டிய பாநு சத்தி கை எங்கள்கோவே

நீர்கலந்தபாலை நெருப்பின்மீதுவைக்க
அது சூடாகிக் கொதித்து வரும்வேளை
நீர்வற்றிப் பாலெழுந்து பொங்குதல்போல்,
எட்டுத்திசையிருந்தும் ஈசல்போல் அழிந்துபடப்
போர்செய்யவந்த இழிந்த மூடரான அசுரரை
வெட்டிக் கொன்றிட்ட சூரியவொளிபோலப்
பிரகாசிக்கும் சக்திவேலைக் கையேந்திய
எங்கள் தலைவனே!

ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
மான்ம ழுக்கர மாட பொற்கழ
லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே


ஓத மொய்ச்சடை ஆட உற்றுஅமர் மான் மழுக்கரம் ஆட
பொன்கழல் ஓசை பெற்றிடவே நடித்தவர் தந்தவாழ்வே

நீர்பெருகும் கங்கைநதி பொருந்திவரும் சடைமுடியாட
எழிலாகப் பொலிந்திருக்கும் மான் ஒருகரத்திலும்
மழுவென்னும் ஆயுதம் தாங்கிய மறுகரமும் அசைந்தாட
தாளகதி தவறாத நாட்டியத்தால் அசைந்தாடும்
பொன்னாலாகிய வீரக்கழல் இசைந்து ஒலிக்கவும்
ஆனந்த நடனமாடும் சிவனார் தந்த எங்கள்பெருவாழ்வே!

மாதி னைப்புன மீதி ருக்குமை
வாள்வி ழிக்குற மாதி னைத்திரு
மார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளே


மா தினைப்புனம் மீது இருக்கும் மை வாள் விழிக் குறமாதினைத்
திரு மார்பு அணைத்த மயூர அற்புத கந்தவேளே

நம்பிராஜன் தினைப்புனத்தில் கவண்கல் வீசியள்ளும்
மைதீட்டிய வாள்போலும் விழிபடைத்த குறவள்ளியை
அன்புறத் தழுவி மாரணைத்துக் கொள்ளும் மயில்வாகனனே
அளப்பரிய ஆற்றலுடைக் கந்தனெனும் அரசனே!
அனைவராலும் விரும்பப்படுகின்றவரே!

மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ
லார்வி யப்புற நீடு மெய்த்தவர்
வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே.


மாரன் வெற்றிகொள் பூ முடிக் குழலார் வியப்புற
நீடு மெய்த் தவர் வாழ் திருத்தணி மாமலைப்பதி தம்பிரானே.

அழகுக் கடவுளையே வெல்லும் படியான அழகுள்ள மாதர்கள்
மலரிட்டு முடிந்திருக்கும் நீண்ட கூந்தலைக் காட்டியும் கலங்காத
மெய்யான தவம் செய்யும் முனிவர்கள் நிறைந்துவாழும்
திருத்தலமாம் திருத்தணிகை மலைமீது வதியும் தலைவரே!

ஏது புத்திஐ யாஎ னக்கினி
யாரை நத்திடு வேன வத்தினி
லேயி றத்தல்கொ லோஎ னக்கு


ஏது புத்தி ஐயா எனக்கு இனி யாரை நத்திடுவேன்
அவத்தினிலே இறத்தல் கொலோ எனக்கு

இனி எனக்கு என்ன புத்தி சொல்லப் போகிறீர்?
எவரை அண்டி இனி நான் பிழைத்திடுவேன்?
கதியேதுமின்றி வீணே இறந்துபடலே எனக்கு விதித்ததோ?

னி ...... தந்தைதாயென்
றேயி ருக்கவு நானு மிப்படி
யேத வித்திட வோச கத்தவ
ரேச லிற்பட வோ


நீ.. தந்தை தாயென்றே இருக்கவும் நானும் இப்படியே தவித்திடவோ
சகத்தவர் ஏசலில் படவோ

யாருமெனக்கு இல்லையெனில் இதனைப் பொறுக்கலாம்
ஆனால் தந்தையும் தாயுமாய் நீ எனக்கு இருக்கையிலே
இவ்வண்ணம் நான் தவித்தழிதல் தகுமோ?
உலகத்தவர் பழிச்சொல்லுக்கு ஆளாதலும் முறையோ?

ந கைத்தவர் ...... கண்கள்காணப்
பாதம் வைத்திடை யா


நகைத்தவர் கண்கள் காணப் பாதம் வைத்திடு ஐயா

எனைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிப்பவரெல்லாம் காணுமாறு
நின் திருமலர்ப் பாதங்களை என் தலைமீது வைப்பாய் ஐயா!

தே ரித்தெனை
தாளில் வைக்கநி யேம றுத்திடில்
பார்ந கைக்குமை யா


தெரித்து எனை தாளில் வைக்க நீயே மறுத்திடில்
பார் நகைக்கும் ஐயா


அப்படி நீ எனை நின் தாளிணையில் சேர்க்காவிடிலோ
இந்த உலகமே எனைப்பார்த்து எள்ளி நகையாடும் ஐயா!

த கப்பன்முன் ...... மைந்தனோடிப்
பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்
யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ
பார்வி டுப்பர்க ளோ


தகப்பன் முன் மைந்தன் ஓடிப் பால்மொழிக்குரல் ஓலம் இட்டிடில்
யார் எடுப்பது என வெறுத்து அழ பார் விடுப்பர்களோ

பால்மணம் மாறாப் பச்சிளங்குழந்தை தன்
தந்தை முன்னே சென்று நின்றுகொண்டுத்
தன் மழலைக் குரலெழுப்பி ஓலமிட்டு அழுகையிலே
யார் பெற்ற பிள்ளையோ இது என எவரேனும்
வெறுத்தொதுக்கி விட்டு விடுவரோ?

எ னக்கிது ...... சிந்தியாதோ


எனக்கு இது சிந்தியாதோ ?

[இதுவரை இப்படிப் புலம்பிய அருணையாருக்கு இப்போது சட்டென ஒரு எண்ணம் வருகிறது!
இந்த அடி வரை, திருமுருகனைக் கடிந்து எழுதிய பாடல் போலத் தோன்றிய இது,
இப்போது அருணையாருக்கே ஏற்பட்ட ஞானோதயமாக மாறுகிறது!]


இந்தச் சிந்தனை என் சிந்தையில்
எப்படித் தோன்றாமல் போயிற்று!
வருவான்! முருகன் அருள்வான்!
முருகனருள் முன்னிற்கும்!

[எனக் கூத்தாடுகிறார்! நாமும்தான்!]


அனைவரும் இப்பாடலை தினமும் ஓதி முருகப் பெருமானின் அருளைப் பெறுவோம்!
****************


**** அருஞ்சொற் பொருள் ****

நத்துதல் = பற்றுக்கோடாய் அணுகுதல்
ஓதம் = நீர், தண்ணீர்
நீச = இழிந்த
முட்டர் = மூடர்கள்
பானு = சூரியன்
மொய் = பொருந்தியிருக்கும்
மாரன் = மன்மதன்
நீடு = நீண்ட, அதிகமான
தம்பிரான் = தலைவர்
*******************

அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
******************************

Read more...

"மழையாடும் மகிழ்வு வேண்டும்!"

"மழையாடும் மகிழ்வு வேண்டும்!"


காலைநேரக் கூட்டமன்று கூடுதலாய் இருந்தது
வேலைமிக அதிகமெனப் பார்த்ததுமே புரிந்தது

வந்தமர்ந்த நோயாளிகளை ஒவ்வொருவராய்ப் பார்வையிட்டேன்
வயதான கிழவரொருவர் பரபரப்பாய் இருக்கக் கண்டேன்

அருகழைத்து என்னவென ஆதரவாய் விசாரித்தேன்
அவசரமாய்ப் போகவேண்டும் ஒன்பதுக்குள் எனச் சொன்னார்

கைக்காயத் தையல் பிரிக்கும் எளிதான வேலையென்பதால்
மருத்துவரின் அனுமதியுடன் அவர் காயம் கவனித்தேன்

'ஏதேனும் அவசரமோ? ஒன்பதுக்கு என்ன வேலை?' எனக்கேட்டேன்
'மனைவியுடன் சேர்ந்தமர்ந்து காலையுணவு உண்ணும் நேரம்' என்றாரவர்

'காத்திருக்க மாட்டாரோ? பிடிவாதம் மிகவுமோ!' எனச் சீண்டினேன்
'இல்லையில்லை! அவளிருப்பதோர் மருத்துவமனையில்' எனச் சொன்னார்

'கட்டுத்தையல் பிரித்தபடியே, 'உடம்புக்கென்ன?' எனக் கேட்டேன்
'ஆளை மறந்துபோகும் அல்ஸைமெர் நோய்' என்றார் அமைதியாக

'ஆவலை அடக்கமுடியாமல், 'உங்களை மட்டும் நினைவில் கொள்வார்தானே' என்றேன்
'இல்லையில்லை! யாரையுமே அடையாளம் தெரிவதில்லை' வருத்தமுடன் சொன்னார்

'லேசாகத் துளிர்த்த எரிச்சலை அடக்கிக் கொண்டு' 'பிறகேன் அவசரமாம்?எப்படியும்
அவருக்கு உங்களை அடையாளம் தெரியப் போவதில்லை' என்றேன் அசுவாரசியமாக

'ஆனால், எனக்கவளை நன்றாக அடையாளம் தெரியுமே' ஏறெடுத்து எனைப் பார்த்தார்
என்னிருவிழிகளிலும் குபீரெனப் பொங்கியது பெருகிவந்த கண்ணீர்வெள்ளம்!

மேனியெங்கும் சிலிர்த்துப் போச்சு! உடம்பெல்லாம் ஆடிப்போச்சு!
'காதலென்றால் இதுபோல வாய்க்கவேண்டுமெனக்கு' என்னுள்ளில் எண்ணம் தோன்றியது!

காதலென்பது காமமல்ல, கனிவாகப் பேசுவதுமல்ல
நிகழ்கின்ற அனைத்தையுமே அப்படியே ஏற்றிடும் மனப்பாங்கே காதல்

மகிழ்வான தம்பதியர் அனைவருமே எல்லாச்சுகமும் பெற்றவரில்லை
இருப்பது எதுவாயினும் அதனை மகிழ்வாகக் கொள்வாதாலேயே!

வரும்புயலைச் சமாளிக்கத் திட்டம் தீட்டுவதல்ல காதல்
பெயும்மழைநீரில் களித்தங்கு ஆடுவதே வாழ்க்கை!


நான்படித்த பாடமிதைப் பகிர்ந்திடவே இதை வடித்தேன்
வான்புகழும் வாழ்க்கையிங்கு நுமக்கமைய வாழ்த்துகிறேன்!

Read more...

Monday, December 14, 2009

"பிள்ளையார் கதைச் சுருக்கம்!"

"பிள்ளையார் கதைச் சுருக்கம்!"

சமீபத்தில், 'பிள்ளையார் கதை' என ஒரு இடுகையை ஆறு பதிவுகளாக இட்டிருந்தேன். கார்த்திகைக் கார்த்திகைத் தீபம் கழிந்த மறுநாள் தொடங்கி, இருபத்தோரு இழை கரத்தில் கட்டி, இருபது நாட்கள் இந்தக் கதையைப் படித்து, இருபத்தோராம் நாள் இந்த விநாயகர் சஷ்டி விரதத்தை முடிக்க வேண்டும் என்பது மரபு! இந்தக் கதை சுமார் 745 வரிகள் கொண்டது. அதன் சுருக்கத்தை இங்கு அளிக்கிறேன். வருகிற 22-ம் தேதி, குறைந்த பட்சமாக, இதனையாவது படித்து அன்பர்கள் இன்புறுவார்களாக! நன்றி!

"கணபதி எல்லாம் தருவான்!"

"பிள்ளையார் கதைச் சுருக்கம்!"


ஐங்கரன் அருளைப் பாடுதல் இன்பம்

அவன் புகழ் தினமும் கேட்டலும் இன்பம்

பூமியில் மானுட ஜென்மமெடுத்த

உமையைத் திருமணம் சிவனார் புரிந்து



அழகுறு சிவனும் தளர்வுறா உமையும்

கரியுடல் கொண்டு கலந்தது இன்பம்

அதனில் பிறந்த கரிமுகன் தோற்றம்

கொம்பையுடைத்துக் கயமுகன் அழித்திட



அசுரனை மூடிக வாகனம் ஆக்கி

வல்லபை மணந்த கணபதி வணங்கி

ஆவணித் திங்கள் சதுர்த்தி நன்நாளில்

சதுர்த்தி விரதம் நோற்றல் இன்பம்



மகிழ்வுடன் ஆடிய குண்டுக் கணபதி

தோற்றம் கண்டு எள்ளிய மதியிலாத்

திங்களை வெகுண்டு சபித்தல் கண்டு

தேவரும் கார்த்திகை நோற்றதும் இன்பம்


கார்த்திகைக் கார்த்திகைக் கழிந்த பின்னாளில்

இருபத்தோரிழை இன்புறக் கட்டி

ஒருவேளை உண்டி உண்டு ஒருமனத்துடனே

பிள்ளையார் கதையைப் படித்தலும் இன்பம்



தேவகி மைந்தன் உரைத்தது கேட்டு

பாண்டவர் நோற்று வென்றது இன்பம்

அறுமுகன் பிறப்பும் சூரன் முடிப்பும்

அழகு குஞ்சரியை திருமணம் கொண்டதும்



அமராவதியை நீங்கிடல் கேட்டு

அன்னை பார்வதி துயரமடைந்து

பொய்க்கரியுரைத்த மாலினைச் சபித்துப்

பைந்தள் பாம்பாய் கணபதி உறையும்



ஆலின் அடியில் உழன்றிடும் வேளை

கணபதி விரதம் நோற்றதால் மாலும்

தன்னுரு மீண்டதைப் படித்தலும் இன்பம்

சினந்த கவுரியைக் கபாடம் திறக்க



சிவனும் நோற்றுச் சிறந்ததும் இன்பம்

பார்வதி நோற்றுப் பாலனை மீண்டும்

தன்மடி சேர்த்து மகிழ்ந்தது இன்பம்

இலக்கண சுந்தரி இன்னல்படவே



அவளும் நோற்று மகிழ்ந்தது இன்பம்

இன்பம் இன்பம் இனியவன் திருக்கதை

தினமும் ஓதிடச் சேர்ந்திடும் இன்பம்

எல்லாம் தந்திடும் பிள்ளையார்கதை இன்பமே!

"கணபதி எல்லாம் தருவான்!"

Read more...

Tuesday, December 01, 2009

அ.அ. திருப்புகழ் - 35

அ.அ.திருப்புகழ் - 35 'எழுகுநிறை நாபி'


திருக்கழுக்குன்றம் மேவிய திருமுருகனைக் குறித்த பாடல் இது! கார்த்திகைக் கார்த்திகைத் திருநாளில் இதனை இடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! முருகனருள் முன்னிற்கும்!

**** பாடல் ****

எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதி
யிலகுமரன் மூவர் முதலானோர்


இறைவியெனு மாதி பரைமுலையினூறி

யெழுமமிர்த நாறு கனிவாயா


புழுகொழுகு காழி கவுணியரில் ஞான

புனிதனென ஏடு தமிழாலே


புனலிலெதி ரேற சமணர்கழு வேற

பொருதகவி வீர குருநாதா


மழுவுழைக பால டமரகத்ரி சூல

மணிகரவி நோத ரருள்பாலா


மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலை

வளமைபெற வேசெய் முருகோனே


கழுகுதொழு வேத கிரிசிகரி வீறு

கதிருலவு வாசல் நிறைவானோர்


கடலொலிய தான மறைதமிழ்க ளோது

கதலிவன மேவு பெருமாளே.


*****************************


******* பொருள் *******

இந்த அரிய பாடல் திருமுருகனிடம் எதையும் வேண்டாமல் அவனைப் போற்றும் வண்ணம் அமைந்த ஒரு சிறப்புப் பாடல்!எனவே, முதலில் இருந்தே பார்க்கலாம்!

எழுகுநிறை நாபி அரி

பூ, புவ, சுவ, சன, தபோ, மகா, சத்தியமெனும்
ஏழுலகைத் தன்நாபியெனும் வயிற்றிலொரு

பந்தாகச் சுருட்டிய திருமாலும்


பிரமர்

படைத்தல் தொழில் செய்யும் பிரமன்

சோதி

ஒளிமயம் பொருந்திய உருத்திரன்

இலகுமரன்

இம்மூவர்க்கும் மேலான சிவனின் மைந்தன் திருக்குமரன்

மூவர் முதலானோர் இறைவியெனு மாதி
[மூவர் முதலானோர் இறைவி எனும் ஆதி]


மேற்சொன்ன மூவர்க்கும் ஏனைய தேவர்க்கும்
தலைவியாகி சிவனுடன் விளங்கும் ஆதியன்னை


பரைமுலையின் ஊறி எழும் அமிர்தம் நாறு கனிவாயா

உமையவளின் திருமுலையில் எழுந்துவரும் அருள்ஞானப் பாலினை அளவின்றிப் பருகி அதனில் ஊறித் திளைத்து மணக்கும் கனிபோலும் வாயினையுடைய திருக்குமரா!

புழுகொழுகு காழி

வாசனை நிறை புனுகு எங்ஙனும் மலிந்திருக்கும் சீகாழியெனும் திருப்பதியில்

கவுணியரில் ஞான புனிதனென

சைவம் தழைத்தோங்கும் கவுணியர் குலத்தினிலே
திருமுருகன் சொரூபமாய்த் திருஞானசம்பந்தரெனும்

புனிதனாய் அவதரித்து


ஏடு தமிழாலே புனலில் எதிரேற

இணையாக வளராமல் எதிர்த்தொழித்து அழிக்கவெனச்
சைவைத்தை வேரறுக்கும் வஞ்சநெஞ்சம் கொண்டவராய்ச்

சமணரெனும் சமயத்தவர் வாதுசெய்ய அழைத்திருந்தார்

மதுரைக்கு வருகைதந்து சத்திரத்தில் தங்கிவந்த

சம்பந்தர் எதிர்வந்து அனல்வாதம் செய்துவென்று

புனல்வாதம் செய்திடவும் இறையருளால் துணிந்திருந்தார்

ஏடெழுதி வைகையிலே மிதக்கவிட்டுப் பார்த்திடவே

வீணரவர் கொக்கரிக்க, இறையருளை மனம்வேண்டி

'வாழ்க அந்தணர்' எனும் ஏடெழுதி நீரிலிட்டார்

கூடவந்த ஏடெல்லாம் நீரலையில் கொண்டுசெல்ல

இந்தவொரு ஏடுமட்டும் எதிரெழுந்து நின்றதுவே

புனல்வாதம் வென்றதுவே புனிதரிவர் திருவருளால்!


சமணர் கழுவேற பொருத கவிவீர

வீண்வாது செய்திருந்த சமணரெல்லாம் தோற்றுவிட
தோற்றவர்க்கு விதித்தபடி எண்ணாயிரம் சமணரெல்லாம்

கழுமரத்தில் மாளச்செய்து சைவம் தழைக்கச்செய்யக்

கவிப்புலமை வீரம் காட்டிக் காத்திட்ட கவிவீரனே!


குருநாதா

சம்பந்தர் வடிவில் வந்துதித்த குருநாதனே!

மழுவுழை கபால டமரக த்ரிசூல மணிகர விநோதர்

அண்டிவரும் அடியாரின் பாவமெலாம் எரிக்கின்ற
மழுவென்னும் ஆயுதத்தை வலக்கையிலும்

இங்குமங்குமாய்த் துள்ளியோடி அல்லாடும்

மனமென்னும் மானை இடக்கையிலும்

அதிர்ந்துவரும் நாதவொலியால்

படைப்பினை நிகழ்த்திடும் உடுக்கினையும்

இச்சா,கிரியா,ஞானமெனும் மூவகைச்
சக்திகளை
மும்முனையாய்க் கொண்ட
திரிசூலமென்னும் ஆயுதமும்
செருக்குற்றப் பிரமனின்
ஐந்தலையில்
ஓர்தலையைக்
கிள்ளியெறிந்த கோபத்தால்
பாவம்வந்து சேர்ந்ததனால்

கையொட்டிக் கிடக்கும் மண்டையோடும்

மணியும் கைகளில் தாங்கிடும்

அற்புத உருவாம் சிவனாரின்


அருள்பாலா

அருளினால் தோன்றிட்ட சிவபாலனே!

மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலை
வளமைபெற வேசெய் முருகோனே


தன்னை மதியாத் தருக்கினில் கடந்த
பிரமனை அழைத்து ஆரென வினவ

செருக்குடன் "படைப்பவன்" எனவுரைசொன்ன

அயனை யுதைத்துத் தலையினில் குட்டிச்

சிறையினில் தள்ளி அயனவன் வேலையைத்

தானே நிகழ்த்திடப் பிரமனைப் போன்றே

ஒருமுகம், நாற்கரம் மாலை கமண்டலம்

கரங்களில் தாங்கிய பெருமையைப் பெற்ற

முருகப் பெம்மானே!


கழுகுதொழு வேத கிரி

கழுகுவந்து சிவம் தொழுதல்
யுகம்யுகமாய் நடக்குமிடம்


சண்டன், பிரசண்டரெனும்

இருகழுகு கிருதயுகத்தில்


சம்பாதி, சடாயுவெனும்

இருகழுகு திரேதத்தில்


சம்புகுத்தன், மாகுத்தன்

இருகழுகார் துவாபரத்தில்


சம்பு, ஆதியெனும்

இருகழுகார் கலியுகத்தில்


நாடோறும் நாடிவந்து

நண்பகலில் நான்மறையோதி


நல்லுணவு பெற்றுச்செல்லும்

நிகழ்வின்னும் நடக்குமிடம்


கழுகுவந்து பூசித்தலின்

கழுக்குன்றம் எனுமிந்த வேதகிரி


சிகரி வீறு கதிர் உலவு வாசல் நிறை வானோர்
கடல் ஒலியதான மறைதமிழ்கள் ஓது


மலைமுகட்டின் மணிமீது ஒளிபொங்கும் வாசல்முன்
நிறைந்ததொரு கூட்டமாய்
மறையோதும் வானவரும்
அழகுதமிழ்ப் பாடல்சொல்லும்
குரலொலிகள்
கடலலைபோல்
பெருத்தவொலி நிறப்பிவர
வணங்கிநிற்கும் செயல்புரியும்


கதலிவன மேவு

வாழைமரம் பெருகிநின்று தலைவளைத்துக்
குலைதள்ளும்
பெருவனமாய்ப் பொலிந்திருக்கும்
கழுக்குன்றம் தனிலுறையும்


பெருமாளே.

பெருமைமிகு முருகக் கடவுளே!
**********************
அருஞ்சொற் பொருள்:

எழுகு = ஏழு உலகு என்பதின் திரிபு
பரை = மேலான உமாதேவி

நாறு = வாசனை, மணம்

புழுகு = புனுகு என அழைக்கப்படும் வாசனைப் பொருள்

உழை = மான்

டமரகம் = உடுக்கு

விநோதர் = அற்புதமானவர்

அயன் = பிரமன்

கதலி = வாழை

******************
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
**********************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP