Thursday, February 26, 2009

"உந்தீ பற!" -- 24

"உந்தீ பற!" -- 24பகவான் ரமணரின் "உபதேச உந்தியார்"

[முந்தைய பதிவு]

நானென்னுஞ் சொற்பொரு ளாமது நாளுமே
நானற்ற தூக்கத்து முந்தீபற
நமதின்மை நீக்கத்தா லுந்தீபற. [21]


நான் என்னும் சொற்பொருளாம் அது நாளுமே
நான் அற்றது ஊக்கத்தும் உந்தீ பற
நமதின்மை நீக்கத்தால் உந்தீ பற.


தன்னிலை சார்ந்த 'நான்'எனும் பொருள்
தன்னில் மட்டுமே மகிழ்வினைத் தேடும்

சுற்றம் சார்ந்த 'நான்'எனும் சொல்லோ
சற்று விரிந்து மற்றதைக் கொள்ளும்

இரண்டு சொற்களின் எல்லையும் சிறிதே
அனைத்தும் 'நான்'என உணர்வதே பெரிதே

எனதிலை என்னும் நிலையங்கு வந்திட
எல்லாம் 'நானாய்' ஆகுதல் காணலாம்.இந்தப் பாடலின் பொருளை முற்றுமாக உணர இந்த 'நான்' என்பது என்ன என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆணவத்தின் காரணமாக உணரப்படும் 'நான்' என்னும் சொல், தன்னைப் பற்றியே சிந்தித்திருக்கும்.


இதுவே இன்னும் சற்று விரிந்து தன் உடைமைகள், சுற்றம், நட்பு, நாடு, மொழி என விரிந்து இவற்றையும் இந்த நானுக்குள் சேர்த்து மகிழும்/துன்பப்படும்.
இந்த நிலையிலும், இந்த 'நான்' ஒரு உலகளாவிய பார்வையைக் கொள்வதில்லை.

அவ்வப்போது அப்படிக் கொண்டாலும், வெகுவிரைவாக, தன்னைச் சார்ந்த நானுக்குள் சுருங்கி, அதையும் மீறி, தனக்குள்ளேயே மீண்டும் சுருங்கி வித்தை காட்டும்.

இப்படி மாறி மாறி நிகழ்கின்ற உணர்வுகளால் அலைக்கழிக்கப்படும் 'நான்' ஒரு நிலயான சொல் அல்ல.

அப்படியென்றால் எது உண்மையான 'நான்'?

இயற்கையுடன்/ஈசுவரனுடன் ஒன்றி, எதுவுமே எனது இல்லை என்கின்ற நிலையில் வரும் ஞானத்தால், அஞ்ஞானமாகிய ஆணவம் என்னும் 'நான்' அழிந்து/அழிக்கப்பட்டு, உண்மையான 'நான்' ஒளிரத் தொடங்குகிறது.

உடல், உணர்வு இவற்றால் நிலைபெற்ற உயிர், [ஜீவன்] எப்போதும் இவ்விரண்டைச் சுற்றியே தன் காலத்தைப் போக்குகிறது.
அக்கம் பக்கத்தில் தன்னைப் போன்ற ஜீவன்கள் பல வகைகளிலும் இருப்பதைக் கண்டு தானும், அவையும் ஒன்றே என உணர்வதற்குப் பதிலாக, தன்னை அவற்றிலிருந்து எப்படி வேறுபடுத்திக் காண்பிப்பது என்னும் சிந்தனையிலேயே அவதிப்படுகிறது.

கடலிலிருந்து எழும் அலைகள் யாவும், தாம் கடலிலிருந்துதான் எழும்புகிறோம் என்னும் உணர்வில்லாமல், ஒன்றை விட அடுத்தது பெரியது/சிறியது; வேகம் அதிகம்/குறைவு என எண்ணினால் எப்படி இருக்கும்!
தாம் அனைத்தும் மீண்டும் அந்தக் கடலுக்குள்ளேயே திரும்பவும் சென்று, மீண்டும் எழத்தான் போகிறோம் என்பது புரியாமல் இவை நடத்தும் ஆட்டங்கள்தான் எத்தனை?

இருந்ததும் கடலே எழுந்ததும் கடலே, அலைந்ததும் கடலே, மீண்டும் திரும்புவதும் அந்த அழிவில்லாக் கடலே!

அந்தக் கடலும் நீர் என்னும் ஒரு பொதுப்பொருளின் ஒரு நிலையே!

அலைகளுக்கு, கடலுக்கு காலநேரக் கணக்குகள் உண்டு. நீருக்கு அவை கிடையாது.

அலை, கடல் என உணர்ந்ததெல்லாம் 'நீர்' என்ற ஒன்றில் அடங்கும் எனப் புரிந்தவுடன், இந்த அலை, கடல் என்கின்ற சொற்கள் பொருளற்றுப் போகின்றன. இந்தப் பெயர்களெல்லாம் வெறும் பெயர்கள் மட்டுமே, எல்லாமே நீரின் மாறுபட்ட வடிவங்களே என்னும் பூன்றம், பூரணம் புரிந்து போகிறது!

இந்தப் பூரணம்தான் சென்ற பாடலிலே சொல்லப்பட்டது!

அப்படிப்பட்ட பூரணத்துவத்தை அடைந்தவர், 'நான்' என்ற சொல்லின் பொருள் இன்னதென நன்கு தெளிந்து, எதுவுமே எனதில்லை என்னும் உணர்வே பூரணமான 'நான்' எனப் புரிவார்.

வேதாந்தத்தில் மிக முக்கியமாகக் கேட்கப்படும் 'நான் யார்?' எனும் கேள்விக்கான விடை நாளைய பாடலில்!

"தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்”
*********
[தொடரும்]

Read more...

Wednesday, February 25, 2009

"ரஹமான் சொல்லத் தவறினார்!”

"ரஹமான் சொல்லத் தவறினார்!”தமிழனுக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விதமாக, இசைப்புயல் திரு.ஏ.ஆர்.ரஹமான் இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்று நம் நாட்டுக்கும், தமிழினத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.

விருதுகளை வாங்கும்போது, “எல்லாப் புகழும் இறைவனுக்கே” எனச் சொல்லித் தமிழையும் உலக அரங்கில் ஒலிக்கச் செய்தது எமக்கெல்லாம் மிகவும் பெருமையாக இருக்கிறது.


அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

அதே சமயம், நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஒரு சொல் அவரிடமிருந்து வராததில் எனக்கு மிகப் பெரிய ஏமாற்றம் என இங்கே பதிய விழைகிறேன்.


கோடானுகோடி மக்கள் உலகெங்கிலும் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் கணங்களில், ஒரு தமிழன் என்கிற முறையில் அவர் செய்ய வேண்டிய கடமையிலிருந்து தவறிவிட்டார் எனக் கருதுகிறேன்.

இது போன்ற உலகக் கவனத்தை ஈர்க்கும் நிகழ்வுகளில் துணிச்சலோடு தமது கருத்துகளைச் சொன்ன நிகழ்வுகள், ஒலிம்பிக் போட்டியில் தொடங்கி பல அரங்குகளில் நிகழ்ந்திருக்கின்றன.

அப்படி ஒரு வாய்ப்பு தமிழரான ரஹமானுக்கு வாய்த்தபோது, அவர் அதைச் செய்யாமல் விட்டுவிட்டார்!


எனது மனவருத்தத்தை அவரே இசையமைத்த ‘உயிரே, உயிரே, வந்து என்னோடு கலந்துவிடு’ என்னும் மெட்டில் ஒரு பாடலாக இங்கு அளிக்கிறேன்.

நன்றி.


தமிழே! இசையே! நீ ஏன்செய்யத் தவறிவிட்டாய்
தமிழா! ரெஹமான்! ஏன் ஒருவார்த்தை சொல்லவில்லை!

அமிழ்தாம் தமிழால் நீ அரியணையில் ஏறிநின்றாய்
இனிமைத் தமிழில் நீ இறைவனுக்கு நன்றி சொன்னாய்
[தமிழே! இசையே!]

தமிழ்நாட்டில் பிறந்தாய் தமிழாலே வளர்ந்தாய்
தமிழிசைக்குப் புகழ் சேர்த்தாய்

தமிழ்நாடு தாண்டியும் புகழ்பெருகச் செய்தாய்
உலகுன்னை வாழ்த்துதின்று

நீ ஒரு வார்த்தை தமிழ்கூறி உலகோரைக் கவர்ந்தாய்
அதற்காகப் பாராட்டுவேன்

உலக அரங்கத்தில் தமிழ்மொழியின் இனிமை
உலகோரும் அறியச் செய்தாய்

ஆனால்.... ஆனால்.... நீ ஒரு வார்த்தை சொல்லமறந்தாய்
[தமிழே! இசையே!]


"எம்தமிழரங்கே விதிசெய்த சதியால்
தினந்தோறும் சாகின்றார்

உணவில்லை நீரில்லை உடுத்திடவும் உடையில்லை
இருப்பதற்கோர் இடமுமில்லை

இவர் துயர்தீர உலகோரே குரல்கொடுப்பீர்!" என்று
ஒருவார்த்தை சொல்லி யிருந்தால்

வரும் எதிர்காலம் உன்புகழை தினம் பாடும் அன்றோ
இதுவேனோ புரியவில்லை

அடடா! அடடா! நீ உன் கடமை செய்யமறந்தாய்!


தமிழே! இசையே! நீ ஏன்செய்யத் தவறிவிட்டாய்
தமிழா! ரெஹமான்! ஏன் ஒருவார்த்தை சொல்லவில்லை!

அமிழ்தாம் தமிழால் நீ அரியணையில் ஏறிநின்றாய்
இனிமைத் தமிழில் நீ இறைவனுக்கு நன்றி சொன்னாய்
[தமிழே! இசையே!]

வாழ்த்துகள் திரு ரஹமான்! மேன்மேலும் விருதுகள் உங்களை வந்து சேரட்டும்!!

Read more...

Tuesday, February 24, 2009

"உந்தீ பற!" -- 23

"உந்தீ பற!" -- 23


பகவான் ரமணரின் "உபதேச உந்தியார்"

[முந்தைய பதிவு]

நானொன்று தானத்து நானானென் றொன்றது
தானாகத் தோன்றுமே யுந்தீபற
தானது பூன்றமா முந்தீபற. [20]

நான் ஒன்று தான் அத்து நான் நான் என்ற ஒன்று அது
தானாகத் தோன்றுமே உந்தீ பற
தான் அது பூன்றமாம் உந்தீ பற.


'நான்'எனும் ஆணவம் அழித்திட முனைந்து
உள்ளில் தேடி அதனை அழித்திட

உள்ளில் ஒளிரும் ஓரொளி தானாய்
அதுவாய் எழுந்து அங்கே ஒளிரும்

இதுவே உயரிய உள்ளொளி என்பதை
அதுவே தானாய்த் தெரிதலை உணர்வாய்

'நான் - நான்' என பூரணப் பொருளாய்
ஒளிரும் இதுவே முழுப்பொருள் ஆகும்.


பூன்றம் pūṉṟam
, n. <>

"ஆணவம் அழித்தல் எப்படி?' என்பதை ரமணர் இப்பாடலில் விளக்குகிறார்.

சென்ற பாடலில் சொல்லிய 'நான்' எனும் ஒன்று நாம் அன்றாட வாழ்க்கையில் உணருகின்ற ஒரு ஆணவம்.
'நான் ஒல்லியாக/குண்டாக இருக்கிறேன்' 'நான் ஒரு முட்டாள்/அறிவாளி', 'நான் ஒரு ஏழை/பணக்காரன்' எனப் பலவகையிலும் நம்மை அலைக்கழிக்கும் இந்த 'நான்' நம்மை நேர்வழியில் செல்லவிடாது தடுக்கிறது.

எண்ணங்களாலும், உணர்வுகளாலும் வளர்க்கப்படும் இந்த 'நான்' என்னும் ஆணவத்தைத் தேடிக் கண்டுபிடித்து அழிக்கச் சொல்கிறார் பகவான்.

'எந்தவொரு எண்ணமும், உணர்வும் என்னைப் பாதிக்காத நிலை வந்துவிட்டால், பிறகு எனக்கும் மற்ற ஜடப் பொருட்களுக்கும் என்ன வேறுபாடு?' எனும் நியாயமான சந்தேகம் எழக்கூடும்.

'அப்படியென்றால், நான் இழந்த 'நான்' அடையாளமற்றுப் போய்விடுவேனே' என்னும் ஒரு சந்தேகமும் எழலாம்!

ஆனால், இங்கேயே ரமணர் அதற்கான விடையையும் வைத்திருக்கிறார்!

”நான் இழந்த 'நான்' அடையாளமற்றுப் போகாது!”அழுக்கு நீங்கிய பொன் ஒளிர்வதுபோல்!!


இதுவரையில் எண்ண, உணர்வு அழுக்குகளால் மூடி மறைக்கப்பட்ட 'உண்மையான "நான்"' தானாகப் பிரகாசிக்கத் தொடங்குகிறது!

களிம்பேறிய செப்புப் பாத்திரத்தைப் புளிகொண்டு தேய்த்தாலே போதும்! தானாக செம்பின் ஒளி இயல்பாகவே வெளிப்படும்!

அதே போலத்தான் இதுவும்!

ஆணவம் அழித்ததும், முழுமையான, பூரணமான, பூன்றமான நான் அதுவாகவே இதயத்தில் ஒளிரத் தொடங்கும் என நமக்கெல்லாம் தெம்பூட்டுகிறார் பகவான்!

நிலையில்லாத இந்த பெருமை/சிறுமைகளைத் தருகின்ற ஆணவத்தைத் தருகின்ற 'நான்' என்பதை அழித்தால், நிஜமான, நிலையான 'நான்' உனக்குத் தெரியும் எனச் சொன்னால், எவராது வேண்டாமென மறுப்பார்களோ!

பூரணமான இந்த 'நானே' மெய்யான 'நான்'! காலங்களைக் கடந்தது இது!

ஆனால், இதுவே போதுமா?


இனி வரும் பாடல்கள் இதற்கான விடை பகரும்!

"தெளிவு குருவின் திருமேனி காண்டல்"
****************************************
[தொடரும்]


Read more...

Sunday, February 22, 2009

"உந்தீ பற!" -- 22

"உந்தீ பற!" -- 22

பகவான் ரமணரின் "உபதேச உந்தியார்"

[முந்தைய பதிவு]

நானென் றெழுமிட மேதென நாடவுண்
நான்றலை சாய்ந்திடு முந்தீபற
ஞான விசாரமி துந்தீபற. [19]

நான் என்று எழும் இடம் ஏது என நாடவும்
நான் தலை சாய்ந்திடும் உந்தீ பற
ஞான விசாரம் இது உந்தீ பற.


’நான்’என இங்கே நம்முள் எழுவது
ஏதென சற்றே எண்ணிடும் போது

உரித்திட உரித்திட ஒன்றுமில்லாதுபோகும்
வெங்காயம் போலவே இதுவெனப் புரிந்திட

நானிதைச் செய்தேன் அதனைச் செய்தேனென
செயலினைப் புரிந்து பயனை உணரும்

அதுவல்ல 'நான்'என நன்கே தெளிந்திட
நான் தலைசாய்ந்து ஞானத்தேடல் மேலும்தொடரும் .


திரு. வடுவூர் குமார் உன்னிப்பாகக் கண்டுபிடித்தபடி, பதினேழாம் பாடலில் இருந்து, பகவான் ரமணர் ‘நான்’ என்பதின் தோலை ஒவ்வொன்றாக உரித்துக் காண்பிக்கத் துவங்குகிறார்.

மனம் அழிய முதலில் மனதை ஒருமைப்படுத்தி, எண்ணங்களை
ஒழுங்குபடுத்தி, ‘நான்’ இது’ என்னும் இரண்டுக்குள் குறுக்கி, பின்னர்,
அதையும் சுருக்கி, ‘நான் எனும் எண்ணம்’ என்பதிலிருந்தே எல்லாம் தொடங்குகிறது எனச் சொல்லியவர்,இந்த ‘நான்’ என்பதின் துவக்கம் எங்கே என ஆராயச் சொல்கிறார்.

அப்போது, இந்த எண்ணமும் மறைந்து, ‘நான்’ என்பதே நிலைபெறுகிறது.

பொதுவாக ‘நான்’ என்றாலே ஒரு கர்வம், அஹங்காரம் என்பதே நாம் அனைவரும் அறிந்த ஒரு பொருள்!

’நான்’ என ஒருவர் சொல்லும்போது, அப்படியே அனைவரும் இதை அணுகி ஒரு தவறான கருத்தைப் பொதுவில் கொள்கிறோம்.

வேதாந்தத்தில் இந்த ‘நான்’ வேறு பொருளில் உணரப்படுகிறது.

மனம்,உடல்,புத்தி இவற்றின் விளைவால் ஏற்படும் செய்கையும், அதனால் விளையும் உணர்வுகளுமே ‘நான்’ என இங்கு அறியப்படுகிறது.

‘நானே இந்த உடல்’, ‘நானே இதனைச் செய்கின்றேன்’ என்பது போல.

இந்த ‘நானைத்தான்’ மேலும் அறியத் தூண்டுகிறார் பகவான் ரமணர்.

இதுவே ஞானத் தேடல்!

பதின்மூன்றாம் பாடலில் இதனை வேறு விதமாக, ‘லயம், நாசம்’ எனச் சொல்லி,
எவ்விதமாக மனத்தை ஒடுக்குவது எனக் காட்டியது இனி மேலும் ஆழ்ந்து விளக்கப் படுகிறது.
*****************

[தொடரும்]

குருவருள் அனைவருக்கும் கிட்டட்டும்!

Read more...

Saturday, February 21, 2009

"அமெரிக்கத் தமிழர் நடத்திய எழுச்சிப் பேரணி!"


"அமெரிக்கத் தமிழர் நடத்திய எழுச்சிப் பேரணி!"

1. 30 பேர் கொண்ட எங்களது பேருந்து 'ராலே'யிலிருந்து அதிகாலை 5 மணிக்குக் கிளம்பி 10.30 மணி அளவில் வாஷிங்டன் சென்றடைந்தது. பசிக்குமே எங்களூகு என உணர்ந்த தாய்மார்கள் 'சண்ட்விச்', வாழைப்பழம், என எங்களைக் கவனித்துக்கொண்டார்கள். வழியில் ஓரிடத்தில் நல்ல காப்பியும் குடித்தோம்.

2. கானடா போன்ற இடங்களில் இருந்து வருபவர்களுக்கு வசதியாக, ஏகப்பட்ட கைத்தட்டிகள் எங்களவர்களால் செய்யப்பட்டு, அதையெல்லாம் இறக்கி பேரணி நடந்த இடத்துக்குக் கொண்டு சேர்ப்பித்துவிட்டு, வெளியுறவுத்துறை அலுவலகத்துக்கு எங்கள் பேருந்து பயணித்தது.

3. சுனாமியின் போது மருத்துவப் பணியாற்றச் சென்று, அந்த வேலையில், எம்மவரின் துயரை நேரடியாகக் கண்டு, மனம் மாறி, இதற்கெனவே தன் எஞ்சிய வாழ்நாளைச் செலவிட முடிவெடுத்த ஒரு அமெரிக்கப் பெண் மருத்துவர், செய்திருந்த முயற்சியின் விளைவாய், 200 பேருக்கு மட்டுமே அனுமதி கொடுத்திருந்த இடத்தில், எங்களது முதல் கட்டப் பேரணி துவங்கியது.

4. ஈழத்தமிழரின் அவல நிலையைத் தெரிவிக்கும் கைத்தட்டிகள், கோஷங்களுடன் ஒரு 200 அடி தூரத்திற்கு வளையமாக எங்களது நடைப்பயணம் 11 மணி முதல் 1 மணி வரை தொடர்ந்தது. அமைச்சரகத்திலிருந்து பலரும் வெளியே வந்து இதனைப் பார்த்து, கைதட்டி உற்சாகப்படுத்தி, ஒரு சிலர் எங்களை நெருங்கி வந்து எங்களுடன் கதைத்தது மனதுக்கு ஆறுதலையும், உற்சாகத்தையும் ஊட்டியது.

5. ஒருசில பத்திரிகை நிருபர்களும் இந்த நிகழ்ச்சியைப் பற்றிய குறிப்பெடுத்து, படங்கள் பிடித்து, எங்களை உற்சாகப் படுத்தினர்.

6.12.45 மணி அளவில், வெளியுறவு அமைச்சர் ஹில்லரி க்ளிண்டனின் உதவி டைரக்டர் இறங்கி வந்து எங்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, எங்களது மனுவைப் பெற்றுக்கொண்டு, இதை ஹில்லரியிடம் நேரடியாகச் சேர்ப்பிப்பதாக உறுதியளித்துச் சென்றவுடன், அங்கிருந்து கிளம்பி ஊர்வலமாகப் போலீஸ் உதவியுடன், வெள்ளை மாளிகை நோக்கி நடந்தோம்.
7. காலை 10 மணி முதலே அங்கு கூடியிருந்த கூட்டம், கானடாவாழ்த் தமிழர்களின் வருகை கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக பெருகத் தொடங்கியிருந்தது.

8. சுமார் 50 பேருந்துகளில் பெருமளவில் கானடாவிலிருந்து தமிழர்கள் ஆர்வத்துடன் வந்தது நெகிழ்ச்சியாக இருந்தது.

9. சுமார் 12 பேருந்துகள் கடைசி நேரத்தில், பேருந்து உரிமையாளர்களால் ரத்து செய்யப்பட்டு, பணம் திருப்பிக் கொடுக்கப் பட்டதால், 500-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பயணிக்க இயலாமல் போனதாகக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது வேதனையளித்தது. சிங்கள அரசின் சதி எனச் சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள்.

10. கடைசி நேரத்தில், திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிங்களக் கூட்டம், எங்களுக்கு எதிரே இடம் ஒதுக்கப்பட்டு, சுமார் 200 பேர் கொண்ட கூட்டம் முழக்கம் செய்து கொண்டிருந்தது.

11. இந்தப் பக்கம் திரும்பினால், ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர் கூட்டம்!

12. 'போர் நிறுத்தம் வேண்டும்' 'தமிழீழம் ஒன்றே தீர்வு' அதிபர் ஒபாமா, எங்களுக்கு உதவி செய்யுங்கள்' 'இனப்படுகொலையை நிறுத்து' எனப் பலவிதமான கோஷங்கள் விண்ணதிர முழங்கிக் கொண்டிருந்தன.

13. அமைதியாக ஒரு 500 பேர் அமெரிக்க, கானடா கொடிகளைத் தாங்கியவண்ணம் இந்தக் கூட்டத்தைச் சுற்றி ஊர்வலமாக நடந்து கொண்டிருந்தது.

14. அனைவருக்கும் இலவசமாக தண்ணீர் பாட்டில்கள் வழங்கப் பட்டுக் கொண்டிருந்தன.

15. கானடா தமிழர்கள் தங்களுக்குள் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்த வடை, போண்டா நாக்கில் நீரையும், மனதில் பொறாமையையும் வளர்த்துக் கொண்டிருந்தன.

16. வரும் வழியெல்லாம் பேசிக்கொண்டு வந்ததால், எனது அலைபேசி தனது சக்தியை இழந்து, அணைந்துபோக, வருவதாகச் சொன்ன நண்பர்களை எப்படிச் சந்திப்பது எனத் திகைத்தேன். பிறகு 'முருகனருள் முன்னிற்கும்' என்னும் நம்பிக்கையில் தெம்புடனே இருந்தேன். என்னிடம் இல்லாவிட்டால் என்ன? என் நண்பர்களிடம் அலைபேசி இருக்கிறது என்னும் துணிபும் ஒரு காரணம்!

17. கழிவறைக்குச் செல்ல நினைத்து போகும் வழியில், சிங்களக் கூட்டத்தில் இருந்து வந்த ஒருவர் குழப்பம் விளைவிக்க நினைத்து, உள்ளே ஊடுருவ, ஒரு சின்ன சலசலப்பு. காவலர் உதவியுடன், அவர் தனது கூட்டம் இருந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.

18. கழிவறைக்குச் செல்லும் இடத்தில், ஒரு பெண்மணி தன் இரு குழந்தைகளுடன் வெளியே வந்து கொண்டிருந்தார். எங்கேயோ பார்த்த முகமாய் இருக்கிறதே என எண்ணியதும் மனதுள் ஒரு மின்னல்!
'சுவாதி?' என வினவ, 'ஓம்! டொக்டரோ?' எனப் பதிலுக்கு அவர் வினவ, சுவாதியின் தரிசனம்! ஒரு சில நிமிடங்கள் பேசினோம். சிநேகிதி கூட வந்திருக்கிறாராம். சுதனும் வந்திருக்கிறாராம். நீங்கள் என் கணவரைச் சந்திக்க வேண்டும்' எனச் சொல்லித் தான் இருக்குமிடத்தை ஒரு உத்தேசமாகச் சொல்லி, பிறகு சந்திக்கலாம் என நகர்ந்தார்.

19. சென்ற பின்னால்தான், அடடா, ஒரு புகைப்படம் எடுக்காமல் விட்டுவிட்டோமே எனத் தோன்றியது! அதற்குள் அவர் மாயமாய் கூட்டத்துள் மறைந்துவிட்டார்.

20. பேருந்துகள் நின்றிருந்த இடத்துக்கு அருகில் ஒரு பெரிய கூட்டம்! என்னவெனச் சென்று பார்த்தால், நியூயார்க், மேரிலாண்ட் வாழ் தமிழ் மக்கள் தயார் செய்து கொண்டு வந்திருந்த உணவுப் பொட்டலங்களை அனைவருக்கும் வழங்கிக் கொண்டிருந்தனர் ஒரு சிலர்! தக்காளி சாதம், புளிசாதம், எலுமிச்சம்பழச் சாதம் என மூன்று வகையான உணவுகள், குளிர்பானம், தண்ணீர் என விருந்துபசாரம் அமோகமாக நடந்து கொண்டிருந்தது. ஒரு தக்காளி சாதமும், ஒரு தண்ணீர் பாட்டிலும் எடுத்துக் கொண்டு நான் நகரும் நேரத்தில், ஒரு காவலதிகாரி வந்து, இதுபோல உணவு விநியோகம் செய்வது சட்டப்படி குற்றம் எனச் சொல்லி உடனடியாக அதை நிறுத்தச் சொல்லி மிரட்டத் தொடங்கினார். இதர்கு என்ன வழி எனக் கேட்டதும், உடனே சாந்தமாகி, வேண்டுமானால், பேருந்துக்குள் வைத்துக் கொண்டு விநியோகிக்கலாம். எடுத்தவர்கள் மைதானத்துக்குள் சென்று சாப்பிடலாம் என ஆலோசனையும் சொல்ல, அப்படியே மீதி விநியோகம் தொடர்ந்தது.

21. இதே நேரத்தில், கூடியிருந்த சிங்களக் கூட்டம் தங்களது பேரணியை[!] முடித்துக் கொண்டு கலைந்தது. தமிழர் கூட்டத்திலிருந்து ஒரு பெருத்த ஆரவாரம்!

22. என் கண்கள் இங்குமங்குமாக யாராவது தெரிந்தவர்கள் தென்படுகிறார்களா எனத் தேடிக் களைத்தது.

23. ஏதோ ஒரு ஆணைக்குக் கட்டுப்பட்டது போல, நின்று கொண்டு களைத்த கூட்டம் அப்படியே அமரத் தொடங்கியது! நடுவில் ஒரு 'பாதுகாப்பு வலயம்'! அங்கு அடுக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில்கள் எல்லாம் காலியாகிக் கொண்டிருந்தன! 24. 3 மணி வரைக்கும் கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்த பேரணி, அமெரிக்க தேசீய கீதத்துடன் ஒரு கட்டுப்பாடுக்குள் வந்து, நான் முன்னம் சொல்லிய அந்த அமெரிக்க டாக்டர், வந்து உரையாற்றத் தொடங்கினார்.

25. அவரைத் தொடர்ந்து, ப்ரூஸ் ஃபெயின், எங்கள் ஊரைச் சேர்ந்த எலியாஸ் ஜெயராஜா, கானடாவைச் சேர்ந்த சிற்றம்பலம் உரையாற்றினர். அமெரிக்க அதிபரின் உதவியை வேண்டியே அனைவரது பேச்சுகளும் அமைந்தன. ராஜபக்சேயின் கொடுங்கோல் அரசை நீதிமன்றத்துக்குக் கொண்டுவர நான் பாடுபடுவேன் என ப்ரூஸ் சொன்னபோது, பெருத்த ஆரவாரம்! ஹில்லரியிடம் சமர்ப்பித்த மனுவில் அடங்கிய கோரிக்கைகள் என்னவென எங்களூர் ஜெயராஜா விவரித்துச் சொன்னபோது, இது நடக்க வேண்டுமே என அனைவரும் ஆதங்கக் குரல் எழுப்பினர்.

26. தமிழ் வணக்கப் பாடலை கானடாவைச் சேர்ந்த இரு இளம்பெண்கள் இசையுடன் பாடக் கூட்டம் இனிதே முடிவடைய, அவசர அவசரமாக என் நண்பரின் கைப்பேசியை வாங்கி, சிநேகிதியை அழைக்க, அவர் தனது பேருந்துக்காக ஒரு குறிப்பிட்ட இடத்தில் காத்திருப்பதாகச் சொல்ல, அங்கு விரைந்து அவரைக் கண்டுபிடித்தேன்! அழகிய ஒரு இளம்பெண், தலையில் வெள்ளைக் குல்லாயுடன் இருந்த அவரை அடையாளம் கண்டுபிடித்து, அவருடன் உரையாடினேன்.

27. அவருடன் வந்திருந்த அவரது தோழிக்குக் குளிரில் கை விரைத்துப் போய் அவதிப்பட, அவருக்கு என்னால் முடிந்த முதலுதவியைச் செய்து, ஓடிச்சென்று, ஒரு ஜோடி கையுறைகள் வாங்கிக் கொடுத்து, எனது பேருந்து புறப்படும் அழைப்பு வந்ததால், அவரிடம் இருந்து விடை பெற்றுத் திரும்பினேன்.

28. மாலை 6 மணிக்குக் கிளம்பி இரவு 12 மணி அளவில் வீடு திரும்பினேன்.

29. வந்திருந்த அனைவரிடமும் நான் கண்டது இதுதான்: எம்மவர் அங்கே அல்லல்படும்போது, இங்கே எம்மால் செய்ய முடிந்த இந்தக் குரலாவது அவர்களை எட்டி அவர்களுக்கு ஒரு ஆறுதலைத் தராதா? அப்போதுதான், வானூர்தித் தாக்குதல் பற்றிய விவரம் காட்டுத்தீயாய் அங்கு பரவி அனைவர் முகத்திலும் ஒரு உற்சாகம் தெரிந்தது! உங்கள் குரல் எங்களுக்காக ஒலிப்பது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது! அதே சமயம், நாங்கள் இன்னமும் ஓயவில்லை என்பதையே அது தெரிவித்தது என அனைவரும் பரவலாக மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொண்டது மனதுக்கு இதமாக இருந்தது.

30.இவ்வளவு கூட்டம் இதுவரையில் வந்ததில்லை என்பதில், ஏற்பாடு செய்தவர்களுக்கு மகிழ்ச்சி!! ஒருவித அசம்பாவிதமும் நிகழ்வில்லை என்பதில் அனைவருக்கும் ஒரு நிம்மதிப் பெருமூச்சு!! எல்லா ஏற்பாடுகளும் திறம்படச் செய்ததில் ஒரு திருப்தி!! அமெரிக்காவைத் தவிர வேறெந்த நாட்டையும் குறிப்பிட்டு எந்தவொரு கோஷமும் ஒலிக்கவில்லை என்பதில் என் போன்றோருக்கு ஒரு பெருமை என நிகழ்ச்சி இனிதே நடந்து முடிந்தேறியது!
*************************

Read more...

Wednesday, February 18, 2009

"உந்தீ பற” -- 21

"உந்தீ பற” -- 21

“பகவான் ரமணரின் உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]


நானென் றெழுமிட மேதென நாடவுண்
ணான்றலை சாய்ந்திடு முந்தீபற
ஞான விசாரமி துந்தீபற. [19]


நான் என்று எழும் இடம் ஏது என நாடவும்
நான் தலை சாய்ந்திடும் உந்தீ பற
ஞான விசாரம் இது உந்தீ பற.


'நான்'என இங்கே எழுமிடம் எதுவென
இன்னும் சற்று தீர்க்கமாய்த் தேடிட

நான் எனும் ஒன்று மனத்தையும் தாண்டி
என்பது புரிந்திட தேடலும் மிகுந்திடும்

நானிதைச் செய்தேன் அதனைச் செய்தேனென
செயலினைப் புரிந்து பயனை உணரும்

அதுவல்ல'நான்'என நன்கே தெளிந்திட
நான்தலைசாய்ந்து ஞானத்தேடல் இன்னும்தொடரும்
.

‘தன்நிலை அறிதல்’ என்பதை விளக்கும் பாடல் இது.

பதினேழாவது பாடலில் சொல்லிய வண்ணம் மனதை அடக்கி அழிக்கும் உபாயம் தெரிந்த யோகிக்கு, நான், இது என்னும் இரண்டும் குறுகி, ‘நான்’ என்பதே மனம் எனச் சுருங்கி, இதுவும் இல்லை எனத் தெளியும்போது, அப்படியானால், இந்த ‘நான்’ என்பது எங்கே இருக்கிறது? எனும் கேள்வி எழுந்து, தேடுகின்ற நானை விடுத்து, ‘நான்’ எனும் ஒன்றே நிலைத்து நிற்கிறது.

இது ஒரு புத்தகம்
நான் இதை ஒரு புத்தகம் என உணர்கிறேன்
நான் உணர்கிறேன்
இந்த உணர்வு மனம் சார்ந்தது
எனவே, நான் இந்த மனத்துக்கும் அப்பாற்பட்டது!

அறிந்துணரும் ஆர்வம் இல்லாதவன் முதல் படியிலேயே நிற்கிறான்.
ஆர்வம் கிளம்பும் ஒருவன் அடுத்த நிலைக்கு வருகிறான்.
சாதகன் இருப்பது மூன்றாம் நிலை.
யோகி நான்காம் நிலையைப் புரிந்து அதற்கும் மேலான ஐந்தாம் நிலைக்குச் செல்லத் தொடங்குகிறார்.

இதுவே கர்மம் கழித்து, பக்தி செய்து, யோகம் பயின்று, ஞானம் நோக்கிச் செல்லும் வழி!
ஞான விசாரம்!

‘நான்’ எனும் ஆணவத்தை எப்படி அழிப்பது?

நாளை பார்க்கலாம்!

********************
[தொடரும்]

Read more...

Monday, February 16, 2009

"உந்தீ பற” -- 20


"உந்தீ பற” -- 20

“பகவான் ரமணரின் உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]

எண்ணங்க ளேமனம் யாவினு நானெனு
மெண்ணமே மூலமா முந்தீபற
யானா மனமென லுந்தீபற. [18]


எண்ணங்களே மனம் யாவினு[ம்] நா[ன்] எனும்
எண்ணமே மூலமாம் உந்தீ பற
யானா மனம் எனல் உந்தீபற.


இது அதுவென அலை அலையாக
எழுந்திடும் எண்ணக் குவியலின் அளவே

மனமெனும் ஒன்றின் மாண்பைக் காட்டிடும்
இவையெலாம் ஆங்கே எழுதலின் மூலமோ

'நான்'எனும் உணர்வின் தாக்கத்தினாலே!
உணர்வும் செயலும் உள்ளுயிர் சேர்ந்ததென

முன்னம் இங்கே சொல்லியதுணர்ந்திடின்
’யான்'என வருவதே மனமென உணர்க!'மனம்' என்பது என்ன? எனும் கேள்விக்கான விடைதேடல் தொடர்கிறது!

எண்ணங்களே மனதின் செயல்பாடு . இதனை முன்பே படித்தோம்.
எந்த ஒரு பொருளோ, அல்லது உணர்வுகளோ ஏதேனும் ஒன்றைப் பற்றியே நிற்கிறது.

'இது ஒரு புத்தகம்', என உணர்வது அது பற்றிய நம் மனதின் அறிவினாலே தான்.

இந்த அறிவு, ஒரு அறியப்படுபவன் இல்லாமல் நிகழ முடியாது.

இப்போது, அதுவே, நான் இதை ஒரு புத்தகம் என அறிகிறேன் என மாறுகிறது.
இந்த 'நான்' என்னும் ஒன்றைச் சுற்றியே அனைத்தும் நிகழமுடியும் எனப் புரிகிறது.

'நான்' கோபமாக இருக்கிறேன்; நான் இது ஒரு புத்தகம் என அறிகிறேன் என்னும் போதெல்லாம், 'நான்' எனபதாலேயே நிகழ்கிறது எனப் பொருளாகிறது.

பார்க்கும் பொருள்களும், உணரும் உணர்வுகளும் மாறக்கூடும்.
ஆனல், இந்த 'நான்' என்பது மட்டும் மாறுவதில்லை.

இதன்மூலம் தான் அறிவது என்ன? என ஒரு யோகி சிந்திக்கத் தொடங்கும்போது, மனம் என்னும் ஒன்று முன் சொன்னதுபோல இருவிதமான எண்ணங்களின் கலவை அல்ல; 'நான்' எனும் ஒன்று எழுவதின் மூலமே அனைத்துப் பொருட்களுக்கும் ஒரு தெளிவு கிடைக்கிறது எனப் புரிகிறார்.

அப்படியானால், இந்த நான் எல்லா நேரங்களிலும் நம்முடன் இருக்கிறதா என ஆராயும் போது, ஆழ்ந்த உறக்கத்தில் இது காணாமல் போவதையும், விழித்தவுடன், உடனே இது வந்து தொற்றிக்கொள்வதையும் உணருகிறார்.

'நான் குண்டாக இருக்கிறேன், நான் வருத்தமாக இருக்கிறேன், நான் ஒரு பொல்லாதவன்' என்கின்ற 'நான்' எல்லாம் உண்மையில் நான் இல்லை எனப் புரியத் தொடங்குகிறது.

எந்த நிலையிலும் மாறாத ஒன்றே 'உண்மை' எனப் புரிந்த இவர், இப்படித் தெரிகின்ற இந்த 'நான்' மனம் சார்ந்ததே தவிர, இதையும் மீறிய ஒரு 'நான்' இருக்கிறதோ எனத் தன் தேடலைத் தீவிரமாக்குகிறார்.
**************
[தொடரும்]

Read more...

Sunday, February 15, 2009

"உந்தீ பற” -- 19

"உந்தீ பற” -- 19

“பகவான் ரமணரின் உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]

மனத்தினுருவை மறவா துசாவ
மனமென வொன்றிலை யுந்தீபற
மார்க்கநே ரார்க்குமி துந்தீபற. [17]மனத்தின் உருவை மறவாது சாவ
மனம் என ஒன்று இ[ல்]லை உந்தீ பற
மார்க்க[ம்] நேர் ஆர்க்கும்[யார்க்கும்] இது உந்தீ பற.


மனத்தினில் பிறந்திடும் உருவது எழுந்திட
குணத்தினில் பிறந்திடும் எண்ணங்கள் ஒழிந்திட


கணத்தினில் அதனை மறந்திடல் வேண்டும்
மனமென எதுவென உணர்ந்திடும் போது

மனமென ஒன்று இல்லை என்னும்
தெளிவே பிறந்திடும் என்பதை அறிந்திடும்

யோகியர் மேலும் இவ்வழி செல்லும்
வகையினை அறிந்திடும் நேர்வழி செல்வார்.

கர்மயோகம், பக்தியோகம், அஷ்டாங்க யோகம் என்னும் வழிகளைப் பற்றிச் சொல்லியபின்னர்,ஞானயோகம் பற்றிய முன்னுரையாக இப்பாடல் அமைகிறது.

எப்படி மனத்தை அமைதிப்படுத்தி, உள்ளில் ஒடுங்கச் செய்வது என்னும் கேள்விகளையும் தாண்டி, இப்போது, இந்த ‘மனம்’ என்பது என்ன?என ஆராயத் தொடங்குகின்றார்.

உள்ளில் எழும் அனைத்துப் பிரச்சினைகளும் எங்கிருந்து எழுகின்றன எனத் தீவிரமாக ஆராய்ந்தால்,இதன் மூலம் நம் எண்ணங்களின் விளைவினாலேயே எனப் புரிய, மனம் என்னும் ஒன்றே இல்லாமல் செய்ய முடியும் எனத் தெளிகிறார்.

அப்படி இல்லாமலேயே செய்துவிடின், பின்பு, பிரச்சினைகளும் கிடையாது, தீர்க்க வேண்டிய அவசியமும் இல்லாது போகிறது.

எல்லா வேதாந்த விளக்கங்களிலும், அநேகமாகக் கையாளப்படும், ‘கயிறு-பாம்பு’ உதாரணம் இங்கு பொருந்தி, இதை இன்னும் சற்று தெளிவாக்கலாம்.

ஒரு பிரச்சினை நிஜமாகவே இருக்கிறதா? இல்லை நிஜமாகவே இல்லையா? அல்லது நம்மால் மட்டுமே பிரச்சினையாக உருவகப் படுத்தப் படுகிறதா ?

இருளில் திடீரெனத் தெரியும் ஒரு கயிறு, அதைப் பாம்பு என எண்ணவைத்து, பயத்தை உண்டாக்குகிறது. விளக்கை அதன் மீது செலுத்திப் பார்க்கும் போது, அது கயிறு எனத் தெளிந்து, அமைதியாகிறான்.

இப்போது, கயிற்றைப் பாம்பாக நினைத்ததும் நிஜம்! அது பாம்பு இல்லை என்பதும் நிஜம்!
அந்த சில நொடிகளில், அதைப் பாம்பு என உணர்ந்ததும் நிஜம்!
இதில் எது உண்மை?

‘உண்மை’ என்பது என்ன?

எந்த ஒரு பொருள், ‘நேற்று, இன்று, நாளை’ என்னும் மூன்று நிலைகளிலும் ஒரே பொருளாக இருக்கிறதோ, அது ஒன்றே நிஜம். உண்மை!

மற்ற எல்லாப் பொருட்களுமே, இல்லாமலோ அல்லது இருக்கிறது என உணரப்படும் ஒன்றோ தான்.

அப்படி உணரவைப்பதுதான் நம் மனம்!

இந்த மனம் தான் ஒரே பொருளை இருப்பதாகவும், இல்லாததாகவும் உணரவைத்து நம்மை அலைக்கழிக்கிறது! கோபம், வெறுப்பு, ஆசை, ஆத்திரம் எனப் பல உணர்வுகளினால் தூண்டப்பட்டு, மாறிக்கொண்டே இருக்கிறது.

இப்படி அடிக்கடி மாறுகின்ற மனம், அதனால் வரும் மாற்றங்கள் எல்லாமே ‘உண்மை’ இல்லை, இது ஒரு ‘மாயை’ எனத் தெளிந்து, இப்போது இந்த மனம் இல்லாமல் போகிறது.

கயிறு பற்றிய தெளிவு இல்லாமல் போனதாலேயே, அது பாம்பு என மாயையாக உணரப்பட்டது.
இப்படி, மாயையாக உணரப்பட்ட பாம்பு தோன்றக் காரணம் அந்தக் கயிறு.

கயிறு என்ற ஒன்றே நிஜம்; மற்ற எல்லா எண்ணங்களும், அதனைத் தொடர்ந்து வரும் அனைத்து எண்ணங்களுமே ‘நிஜத்தில் இல்லாத ஒன்று’ எனப் புரியும் நிலையில், இவற்றையெல்லாம் ஏற்படுத்திய ‘மனத்தை இல்லாமல் செய்வதே’ நேர்வழிக்குச் செலுத்தும் எனப் புரியத் துவங்குகிறது யோகிக்கு.

ஆம்! ‘சாதகன்’ என்ற நிலையிலிருந்து, இப்போது ஒரு ‘யோகி’யாக இவரது பயணம் தொடங்குகிறது!
-------------
[தொடரும்]

Read more...

Friday, February 13, 2009

"காதலென்றால் பெரும் அவஸ்தையென்று.......!!!"

"காதலென்றால் பெரும் அவஸ்தையென்று.......!!!"

"காதலர் தினம்" இன்று!
இந்தக் 'காதல்'னா என்னன்னு மனசு ரொம்பவே அரிச்சுக் குடைஞ்சு கேள்வி மேல கேள்வியாக் கேட்டுகிட்டே இருந்திச்சு.

காதல்னா என்ன?
அது எங்கேருந்து வருது?
எப்படி தொடங்குது?

இதுக்கெல்லாம் பதில் எனக்குத் தெரியவே தெரியாது சாமி! இருந்தாலும் முயற்சி பண்றேன்!

'அடக்கப்படும், அவமானப்படுத்தப்படும்' உறவுகள் எல்லாமே ஒரு மாதிரி போதை!
உள்ளே இறங்கியாச்சுன்னா... மவனே அவ்ளோதான்.... திரும்ப வெளிவரவே முடியாது!

இதை எப்படி நீ சொல்றேன்னு கேட்கலாம்!.... அட! என்னைப் பார்த்துக் கேட்டாங்க சில பேரு! அதான் இப்ப வந்து சொல்றேன்.

எனக்கு நிகழ்ந்த இந்தக் 'காதல்' ஒருவகையிலே அன்பு///வெறுப்பு ரெண்டுமே சம அளவுல கலந்த ஒண்ணு!

பொறுங்க... பொறுங்க? நீங்க என்ன கேக்க வர்றீங்கன்னு புரியுது.... அடப்பாவமே! உனக்கா இப்படி ஒரு நிலைமைன்னுதானே கேக்கப் போறீங்க? மேல படிங்க!.. என் சோகக் கதையை!

இந்த அன்பு//வெறுப்புன்ற சமாச்சாரம் பார்க்கப்போனா நம்ம எல்லார் வாழ்க்கையிலியுமே அசால்ட்டா வந்து போறதுதான்னு நான் சொல்லாமலியே உங்களுக்கெல்லாம் தெரிந்தானே! ஆங்! அப்பிடி... அப்பிடித்தான் தலையாட்டணும்.. சும்மாவாவது இல்லைன்னு பொய் சொல்லக்கூடாது!

இப்ப இன்னும் கொஞ்சம் வெலாவாரியா சொல்றேன்!

என்னோட காதலியை நான் முதல் முதலாப் பார்த்த நிமிஷத்திலேர்ந்து, என்னோட ஆசையை என்னால அடக்கவே முடியலை! 'பட்'டுன்னு விழுந்திட்டேன்!அன்புக்கு ஒண்ணும் குறைச்சலே இல்லை. அது வெள்ளமாத்தான் பொங்கி வந்திச்சு!


ஆனா, அதே சமயம், நான் அனுபவிச்ச சித்திரவதை இருக்கே... அப்பப்பா... சொல்லி மாளாது!!!!!


தூண்டிவிட்டுட்டு ஏமாத்தறது, ஆசைகாட்டி மோசம் பண்றது, என்னைத்தான் நீ காதலிக்கணும்னு பிடிவாதம் பண்றதுன்னு ஏகப்பட்ட டார்ச்சர்!


அதோட இருக்கச் சொல்ல, காதலோட முழு அர்த்தமும் எனக்குப் புரிஞ்சுது.
' அட! கிடைச்சா இது மாரில்ல கிடைக்கணும்'னு நான் காலரைத் தூக்கி விட்டுகிட்டுத்தான் நடந்தேன் சாமி!அந்த முதல் சந்திப்புக்கு அப்புறமா நடந்ததையெல்லாம்... இப்ப நினைச்சாலும் குலை நடுங்குது!


எத்தனைப் பொய்கள், எத்தனை ஏமாற்றங்கள், எத்தனை வாக்குறுதி மீறல்கள்!
கணக்குப் போடவே முடியாதுன்னா பார்த்துக்கங்களேன்!'இனித் தாளாதுடா சாமி'ன்னு வெட்டிரலாம்னு நினைப்பேன்!


அப்ப, வீசுவாங்க பாரு ஒரு அஸ்திரம்!


தன்னைப் போல திறமையான ஆளே இல்லைன்ற மாரி, ஒரு 'ஆக்ட்' கொடுத்து, நம்மளை நம்ப வைச்சு, அப்படியே மெழுகா உருகவைச்சு, ..... பிறகென்ன? ... 'அடியேன் மீண்டு தஞ்சம்'னு போய்க் காலுல விழுந்திருவேன்.. திரும்பவும் தொடரும் சித்திரவதை! அதே பழைய ... மேலே சொன்ன அத்தினியும்.... இன்னும் அதிகமா வந்து தாக்கும்!

இது ஒருவாட்டி, இல்லை, ரெண்டுவாட்டி நடந்தா பரவாயில்லை! நானும் இங்க வந்து அழுதுகிட்டிருக்க மாட்டேன் உங்ககிட்ட!எத்தனை தடவை! எத்தனை தடவை!


ஒவ்வொரு தடவையும் இதே கதை தான்!


'வேணாம் போ!'ன்னு சொல்ல நினைக்கறப்ப, எப்பிடியோ அதை மட்டும் உஷாராக் கண்டுபிடிச்சு, உடனே, உத்தமமா ஒரு காரியம் பண்ணி என்னை மயக்கறதுல கில்லாடி! நான் ஒரு முட்டாள்! ஒவ்வொரு தடவையும் இதே உண்மைன்னு நம்பி, சரெண்டெர் ஆயிருவேன்.


இந்த நாடகம் இன்னி வரைக்கும் தொடருதுன்னா பாத்துக்கோங்களேன்!

எனக்கும் இப்பல்லாம் ஒரு நெனைப்பு வருதுங்க!ஒருவேளை இதான் எனக்கும் பிடிச்சுப் போச்சோ? இல்லை, இதை எனக்கு ரொம்பவே பிடிச்சதுனால, நானே இதையெல்லாம் எதிர்பாக்கறேனோ?
தெரியலை சாமிங்களா!

நிச்சயமா இன்னிக்கு சிரிச்சுகிட்டு இருக்கிற எனக்கு, நாளைக்கு என்ன நடக்கப்போகும்னு நல்லாவே தெரிஞ்சும், விட்டில்பூச்சி மாரி, அங்கியேதான் மனசு கிடந்து அல்லாடுது!

அதாங்க காதலோட மகத்தான சக்தி!
நீதான் அதை ஒரு கட்டுப்பாட்டுக்குள்ள வைச்சிருக்கேன்னு நினைப்போம்!
ஆனா, அப்பிடி இல்லை அது! அதான் உன்னை அடக்கி ஆண்டு சர்வாதிகாரம் பண்ணுது! இதான் உண்மை!

இதோ இன்னிக்கு காதலர் தினம். இன்னிக்கும் இதே தான் நடக்கப் போவுதுன்னு உள்மனசு சொல்லுது! அப்பிடித்தான் நடக்கவும் நடக்கும்!

'அடடா! என்ன புலம்பல் ஜாஸ்தியாகிட்டே போவுது? உன்னை இப்படி அவஸ்தைப் படுத்தின அந்த ஆளு யாரு'ன்னு நீங்க கேட்கறது எனக்குக் கேட்குது!

சொல்றேன்! சொல்றேன்! சொல்லாமலியா போயிருவேன்! இதோ சொல்றேன்!

அதுக்கு முன்னாடி அது என்னவெல்லாம் பண்ணிச்சுன்னு கொஞ்சம் சொல்றேன் கேளுங்க~!

காதலோட பிடியில மாட்டிக்கிட்ட நான், "உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்" எனப் பாடிய நான், இப்ப கண்விழி பிதுங்கி நிக்கறேனே அதாங்க கதை!

[இனி வருவது நேரடியான மொழிபெயர்ப்பு!!]

மதியம் ஒரு மணிக்கு நல்லா சாப்பிட்டுட்டு, டி.வி. முன்னாடி உட்கார்ந்து, என்னோட கல்லூரி பாஸ்கெட்பால் அணி பரிதாபமா போஸ்டன் அணிகிட்ட தோக்கறதைப் பரிதாபமா பார்த்துகிட்டு, எங்காளுங்க எப்பனாச்சும், ஒரு கூடை போட்டதுக்கு கைதட்டி, எதிராளுங்க கூடை மேல கூடையாப் போடும்போது, முகத்தைத் திருப்பிகிட்டு திரும்பிப் படுத்துகிட்டே, முழு ஆட்டத்தையும் பார்த்துத் தொலைச்சேன்!

நல்ல ஒரு நாளை நாசமாக்கினதுக்கு நன்றி சொல்றதா, திட்றதான்னு நினைக்கறப்ப, வந்தாருய்யா எங்க கோச்![Coach]

'ஏதோ தப்பு நடந்திடுச்சு! அடுத்த தடவை சரி பண்ணிருவோம்'னு சொன்னதை அப்பிடியே நம்பி, சொன்னமாரியே ஜெயிச்சும் காமிச்சாரு!

உடனே, திரும்பவும் காதல்!!

அதைத் தொடர்ந்து வரிசையாத் தோல்விகள்! .....நடுவுல அத்தி பூத்தாப்பல ஒரு ஜெயிப்பு!

இப்பிடித்தாங்க பண்றாங்க..... எங்க காலேஜ் டீம் [குழு]!!!!!!
அவதாங்க என் காதலி! என்னோட நார்த் கரோலினா ஸ்டேட் யூனிவெர்ஸிடி! {NC State University]

அதனால, ....... உங்க எல்லாருக்கும் சொல்லிக்கறது என்னன்னா,..........

இந்தக் காதலர் தினத்தன்னிக்கு, உங்களோட காதலி/மனைவி கையைக் கெட்டியாப் பிடிச்சிகிட்டு, அவங்களை வெளியே கூட்டிகிட்டுப் போயி, நல்ல டின்னர் வாங்கி கொடுங்க!

கூடவே இருந்து எல்லாத்துலியும் துணையா இருக்கறதுக்காக, ஒரு பெரிய நன்றி சொல்லுங்க!

என்னோட "ஆளு" என்னை வதைக்கற மாரி இல்லாம, உங்களை சந்தோஷமா வைச்சுகிட்டு இருக்கறதுக்கு .... முடிஞ்சா..... காலுல விழுந்து சொன்னாலும் தப்பில்ல!...ஒரு நன்றி சொல்லிடுங்க!

உங்க உடல் நலத்தை அவங்க நல்லாப் பார்த்துக்கறதுக்கு இன்னொரு நன்றி!
எங்காளு எனக்குப் பண்றதுல்லாம், நலக்கேடுதாங்க!

ஆனா......... இத்தினிக்கபுறமும், .....அவங்க அப்பப்ப உங்களுக்குக் கொடுத்த சில அற்புதமான கணங்களை நினைச்சு, அதுக்காக ஒரு பெரிய 'ஓ' போட்டு நன்றி சொல்லுங்க!

இதாங்க! இதுவேதாங்க!
இந்த சில கணங்கள் தான் நம்ம வாழ்க்கையின் ஆதாரம்!
இதை வைச்சுத்தான், நம்ம மொத்த வாழ்க்கையே சுழலுது!
இதான், நம்மளை உற்சாகப்படுத்தும்! உயர்த்தும்!

இதுவேதான், என்னை என் கல்லூரி மேல, இப்பவும் ஒரு காதலை இன்னிவரைக்கும் வைச்சிருக்கு!


என்னோட எதிரியோட ஆளு ஒரு 'சூப்பர் ஃபிகரா' இருந்தாலும், என்னோட குண்டுப் பொண்ணே என் கண்ணுக்கு அழகா எப்பவுமே தெரியுறா!
இதாங்க காதல்!

இதுக்குக் கண்ணு, மூக்கு, காதுல்லாம் இல்லீங்க!
சொல்லப்போனா, சொல்றமாரி, எதுவுமே இல்லீங்க!
அதாங்க காதல்! தானா வரும்! அனுபவிங்க.... புரிஞ்சவங்கல்லாம்!


கோ ஸ்டேட்!!!!!!!!!!! [Go State!]***********
[ஒருவிதக் குழப்பத்துடன் இதுவரை படித்து வந்தவர்களுக்கு மட்டும்!!]

கல்லூரியில் படிக்கும் எனது மகனுக்கு [Jai Kumar] திடீரென எனது 'மரபணு' உள்ளில் உந்த,
'எனது சமூக விமரிசனங்கள்' [My social commentary] என ஒரு மின்மடல் அனுப்பத் தொடங்கினார், கடந்த இரு வாரங்களாக!
அப்படி அவர் அனுப்பிய ஒரு மடல்தான் இது! உங்களைப் போலவே, நானும் முதல் சில நிமிடங்களில் குழம்பியது உண்மையே!
படித்து முடித்ததும், கொஞ்சம் பெருமையாகவே இருந்தது!
இன்றைய தினத்துக்கு ஒரு நல்ல பதிவாக அமையும் என எண்ணி, இதைத் தமிழாக்கி இங்கு அளிக்கிறேன். பார்க்கப்போனால், இதுவும் ஒரு 'சுட்ட'பதிவே!]

[விரும்பினால், அவனது ஆங்கில எழுத்தை இங்கே அளிக்கிறேன்!]


நன்றி!!
காதல் வாழ்க!!

Here it is!!

Social Commentary by Jai Kumar

With Valentines this week I felt it appropriate to tackle a question I had
been asked regarding love.

What is love? What isn’t love? Where does it
come from? How does it start?

I don’t claim to know the answers, but I
will begin with this: Abusive relationships are addicting. Once you are in
one there is simply no way out. I was recently requested to discuss the
horribly painful and crushing love life that is Jai Kumar’s.

This relationship in my life can be summed up best by the term: “Love/Hate.” I
know what you must be thinking at this point, Jai I thought you were
single? Clearly, I am not. I know what else you must be thinking,
Love/Hate don’t we all have those moments in our life? Not like I do. I’ll
extrapolate.

From the moment I met my love I couldn’t resist. I was teased
and tempted, wooed and cared for. I felt home when around my love. I was
finally home, or so I thought. Since our initial meeting my life has been
a roller coaster of torment, deceit, lies, and broken promises. I can’t
get out! Each and every time I feel that my heart can’t take it anymore my
love does something to win me back again. It’s remarkable. It’s as if she
knows that I am on the verge of turning my back on her. Just as the moment
approaches when I’ve lost all faith, I’ve sunk lower than I can sink, I am
lifted up by the light of love only to be subsequently squashed, abused,
crushed, and left for dead on the side of the road (That’s what she
said!). Yet no matter what I do, no matter how much I know this is a lost
cause, a losing battle, I keep coming back for more abuse.

That’s the strange thing about love you don’t control it, it controls you. My heart
is a piñata and this Valentine’s Day it will probably be tormented the
same way it was last year. Who is this maiden of distress, this temptress
of the noble hearted? Why it is none other than, you guessed it: NC State
University.

She has put cupids choke hold on me, and I am blinded like Ray Charles
singing with Kanye West during “Gold Digger.” (Or was that Jamie Foxx?
He
can see so that would mean my simile wouldn’t work, but you get the
point.) I will wake up, put on my finest outfit and proceed to the couch
where I will most likely watch my heart get stomped out at 1:00pm. It’s
become a Valentine’s Day tradition. Last year Boston College laid the
beat down and I sat sadly watching my love deprive me of a joyous day in
which we were to celebrate our renewed passion for each other.

So as this year’s day for love approaches, grab the one you’re with, hold them
tight, and take them out to dinner. Thank them for not ripping your
heart out like my love keeps doing to me. Thank them for comforting you
when you are downtrodden, more often than not my love is the source of my
misery. Thank them for caring about your health; my love will be the
death of me. But most importantly thank them for the amazing moments you
two share together, I know I will:

83-79, 41-10, camping out in 0 degree weather for tickets, the 2007 ACC tournament, and so much more. I know my heart will probably get stomped on sooner, rather than later, I know
that a relationship where I do all the loving and State does all the hating isn’t going to get me far in life. But whatelse I know is that even though your arch rival may be dating a supermodel 18 miles away, nothing is better than when your slightly overweight, smart, mildly amusing soccer mom of a love kicks her ass!

As Whitney Houston sang to Kevin Costner in the epic classic Waterworld, “I will always love you.”
GO STATE.

My heart is eternally yours, tread softly, even though I know
you’ll probably run over it with a bull dozer the second this e-mail is
read.

Signed,

Jai Kumar


Read more...

Thursday, February 12, 2009

"உந்தீ பற” -- 18 “ஞானமே யோகம்!”

"உந்தீ பற” -- 18

“பகவான் ரமணரின் உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]

“ஞானமே யோகம்!”

அடுத்து வரும் பாடலகள் சொல்லும் செய்தி ‘ஞான யோகம்’ !

'கர்மயோகம், பக்தியோகம் ஞானயோகம்’ என அனைத்து வழிகளுமே ‘தன்னை அறிதல்’ என்னும் ஒரு இலக்கை நோக்கியே அமைகின்றன.

இதுவரை சொன்னதெல்லாம், முதல் இரு வழிகளால் இதை எப்படி அடைவது என்பது பற்றி!

இதன் முடிவில் கிடைக்கும் விடை அந்த சாதகனுக்கு ஒரு ஆச்சரியமான உண்மையை உணர்த்துகிறது!

முதல் இரு வழிகளுமே முடிவடைவது இந்த ஞான யோகத்தில் தான் என்பதை!

தனக்கென இல்லாமல் ஒரு செயல் செய்வதை உணர்பவனும், 'இந்தப் பலன் தான் எனக்கு வேண்டும்' என எண்ணாது ’நிஷ்காமியமாக’..... பலன் கருதாது இறைவன் மீது பக்தி செலுத்துபவனும், இறுதியில் உணர்வது இந்த ஞானத்தையே!

ஒரு பிரச்சினை என வரும்போது, அதைத் தடுக்கவே முதலில் முனைகிறோம்.

இந்தப் பிரச்சினை ‘உண்மை’ என நம்பி இதற்கு ஒரு வழி தேட அதில் கவனத்தைச் செலுத்துகிறோம்.
இது உண்மையிலேயே ஒரு பிரச்சினைதானா என உணரக்கூட மறுக்கிறோம்.
இதை எப்படித் தீர்ப்பது என்பதிலேயே நம் கவனம் முழுதுமாகச் செல்கிறது.

சரி! அப்படி ஒரு பிரச்சினை தீர்ந்தவுடன், நம் மனம் அமைதியடைகிறதா என்றால், அதுதான் இல்லை!
இந்தத் தீர்வின் மூலமாகவோ, அல்லது, அதன் பிற விளைவாகவோ மேலும் ஒரு பிரச்சினை இப்போது வந்து ஒட்டிக் கொள்கிறது!

“வினையின் விளைவு வினைக்கடல் வீழ்த்திடும்” என்னும் இரண்டாம் பாடலை இங்கு கவனத்தில் கொள்ளலாம்.

இப்போது கவனம் இதை எப்படித் தீர்ப்பது எனப் போகிறது!

இதற்கெல்லாம் என்ன காரணம் என ஆராய்ந்தால், ‘மனம்’ என்கின்ற ஒன்றே இதையெல்லாம் செய்கிறது எனப் புரியவரும்!

இந்த ’மனம்’ தான் எதையோ ஒன்றைப் பிரச்சினை எனக் கருதி அதை எப்படித் தீர்ப்பது என நம்மைப் பாடாய்ப் படுத்துகிறது!

இதன் போக்கிலேயே போய், அல்லல் படுபவரை விட்டுவிடுவோம்!

இதன்,..... இந்த ‘மனத்தின்’ பிடியிலிருந்து விடுபட ஒரு சிலரே விழைகிறார்கள்!

அவர்களே இதுவரை நான் சொல்லிவந்த ‘சாதகர்கள்’! ‘பயிற்சியாளர்கள்’!

பலவகையிலுமாக முயற்சி செய்து, கர்மயோகம், பக்தியோகம் என எதையாவது ஒன்றினைத் தேர்ந்தெடுத்து, அதிலே தீவிரமாக ஈடுபடுகிறார்கள்!

பிராணாயாமம், ஜெபம், தியானம் எனத் தம்மை ஈடுபடுத்தி, இதில் சிலர் ஜெயிக்கிறார்கள்! சிலர், ‘இதுவே போதும்’ என நிறுத்திக் கொள்கிறார்கள்!; ஒருசிலரே மேலும் பயிற்சியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்!

கர்மம், பக்தி எல்லாம் தன்னை இழுப்பது ஞானமே என இவருக்கு இப்போது புரிகிறது!

இப்போதும் இதை விட்டு விலகும் சாதகர்களும் இருக்கிறார்கள்!

’பிரச்சினை’ என ஒன்றுமே இல்லை; இதெல்லாம் ‘மனம்’ செய்கின்ற மாயை என்பதைப் புரிந்த சாதகன் இதை மேலும் ஆராயத் துவங்குகிறார்!

தாற்காலிகத் தீர்வுகள் எதனையும் தீர்ப்பதில்லை; முழுமையான தீர்வே முதன் முடிவு எனத் தெளிந்த ‘சாதகன்’ ’மனம்’ என்கிற ஒன்றினால் விளைகின்ற எதுவுமே பொய் எனத் தெளிந்து, மனத்தில் இருந்து இதனை அகற்ற முயற்சி செய்து, அதன் மூலம், மனத்தையே அழிக்க முற்படுகிறார்!

‘எல்லா பிரச்சினைகளுமே மனத்தினால் விளைந்த ஒன்றே’ என்னும் உண்மை இப்போது புலப்பட்டு,

‘இது எதனால் விளைகிறது?’ என சிந்திக்கத் துவங்கும் ‘சாதகன்’ அடைவதே ’ஞானம்’!

இதனைப் பயிலுவதே ‘ஞானயோகம்’

இது பற்றி பகவான் என்ன சொல்கிறார்?

திங்கட் கிழமை பார்ப்போம்!

***********************************

[தொடரும்]

Read more...

Wednesday, February 11, 2009

”உந்தீ பற!” - 17

"உந்தீ பற!” - 17

"பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]

"கற்றது கைம்மண்ணளவு!"

இனிவரும் பாடல்கள் சாதகனை ஒரு அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் விதமாக அமைந்தவை.

அவற்றைப் பார்க்கத் தொடங்கும் முன், இதுவரை பகவான் ரமணர் சொன்னது என்ன என, ஒரு சுருக்கமான விளக்கம் காண இங்கு முயலலாம்.

என் சிற்றறிவுக்கு எட்டியதை ஒட்டியே இந்த விளக்கம் அமைந்திருக்கும். இதை எனக்குச் சொன்னவர்கள் மீது குற்றமில்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதினாறு பாடல்கள் இதுவரையில் படித்துப் பொருள் கண்டோம்.

முதல் மூன்று பாடல்கள் கர்மயோகம் என்பது என்ன? அதனால் விளையும் பயன் எத்தன்மையது? அதை அளிப்பது யார்/எது? அதனை எப்படி ஏற்றுக்கொள்வது என்பதைச் சொல்லின.

4 - 10 முதலான பாடல்கள், பக்தி யோகத்தை விளக்கமாகச் சொல்ல வந்த பாடல்கள்!
பக்தி என்றால் என்ன? பூசனை, ஜபம், தியானம் இவற்றை எப்படிச் செய்வது? இவற்றுல் எது மிகவும் சிறந்தது? இதன் மூலம் ஒரு சாதகன் எதனை அடைய வேண்டுகிறான்? உருவை உள்ளில் நிறுத்தி, உருவை அகற்றி உருவே தானாகி, எந்த ஒரு உருவும் இலாத பரம்பொருளே 'நான்' என உணர்ந்து அதனில் ஒன்றுவதே எப்படி? என்னும் கேள்விகளுக்கு விடையாக அமைந்தது இந்தப் பகுதி.

இதனைத் தாண்டி மேலும் செல்ல விழையும் சாதகன் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? அதன் வகைகள் என்னென்ன? அவற்றை எப்படிச் செய்வது முறையானது ? இதனால் விளையும் பயன் என்ன என்பதைச் சொல்லி, 'ஞான யோகம்' வருவதற்கு முதல் 'யோக ஞானம்' யோகத்தைப் பற்றிய முறையான ஞானம் வருதல் வேண்டும் என்னும் விளக்கத்தை 11 முதல் 16 வரையிலான பாடல்கள் விளக்கின.

" யோகஞானம்” பற்றி பல விளக்கங்கள் இருந்தலும், பொதுவாக அனைவராலும் பின்பற்றப்படும் பதஞ்சலி முனிவரின் 'அஷ்டாங்க யோகம்' பற்றிய ஒரு எளிய விளக்கம், இப்போது இதனை மேலும் அறிய உதவும்.

'புற, அக நிலைபாடுகள்', 'எப்படி அமர்வது?', 'முறையான மூச்சடக்கல் எப்படிச் செய்வது?', 'புலனடக்கம் என்றால் என்ன?' 'மனதை ஒருநிலைப் படுத்துதல்' சமாதி நிலை' என்னும் எட்டு நிலைகள் முறையே 'யமம், நியமம், ஆஸனம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணம், த்யானம், சமாதி' என வழங்கப்படும்.

முறையான குருவின் துணையோடு கற்றுக்கொண்டு செய்யப்படும் பிராணாயாமம்,

வலைக்குள் அகப்படும் பறவைகள் போல், எப்படி எண்ன ஓட்டங்களை அமிழ்த்தி,

உண்மைப் பொருளைக் உணரச் செய்து,

இருவித நிலைப்பாடுகள் கொண்ட மனத்தை ஒடுக்கியும், அழித்தும் நிகழும் பயனால்,

செயல் என்ற ஒன்றும் செய்யாமலேயே, அல்லது, அப்படிச் செய்தாலும் அது பயன் கருதாச் செயலாகவும், உலக நன்மைக்காகவும் செய்யப்படும் ஆனந்த நிலையை ஒரு யோகி எனப்படுபவர் எவ்வாறு அடைகிறார் என்பதைச் சொல்லி,

இந்த 'ஆனந்தம்' எவ்வாறாக 'தன்னை உணர்தல்' என்கின்ற 'தத்துவ தரிசனத்தைக் காட்டுகிறது என்பதை,

11 முதல் 16 வரையிலான பாடல்கள் கோடிட்டுக் காட்டின.

இந்த நிலையை அடைந்த யோகி இனிச் செய்வது எல்லாமே
'ஞான யோகமே'!

இந்த 'ஞான யோகம்’ என்றால் என்ன என ஒரு சிறு விளக்கம் நாளை காணலாம்! அதன் பிறகு, மீதிப் பாடல்களைப் பார்ப்போம்!

முடிந்தால் இந்த 16 பாடல்களையும் மீண்டும் ஒருமுறை படித்துத்தான் பாருங்களேன்!

”தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்!”
**********

[தொடரும்]

Read more...

Tuesday, February 10, 2009

"உந்தீ பற!” - 16

"உந்தீ பற!” - 16

"பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]

வெளிவிட யங்களை விட்டு மனந்தன்
னொளியுரு வோர்தலே யுந்தீபற
வுண்மை யுணர்ச்சியா முந்தீபற. [16]


வெளி விடயங்களை விட்டு மனம் தன்
ஒளி உரு ஓர்தலே உந்தீ பற
உண்மை உணர்ச்சியாம் உந்தீ பற.


அலைந்திடும் மனத்துக்கு ஆயிரம் விடயங்கள்
கலைந்திடும் மேகமென இங்குமங்கும் அலைக்கழிக்கும்

ஒருநிலைப் படுதலைக் குலைத்திடச் செய்யும்
விளைந்திடும் எண்ணமே மலையனக் குவியும்

பார்த்திடும் யாவையும் விலக்கியே வைத்து
பார்ப்பது யானெனும் நிலை புரிந்துவிடில்

ஒருநிலை உணர்வெனும் உண்மையின் காட்சி
உள்ளில் மலர்ந்து எங்கும் நிறையும்.


இதுவரை சொல்லிய அஷ்டாங்க யோகத்தின் முறையான பயிற்சியினால் விளையும் பயனை இந்தப் பாடல் விளக்குகிறது.

மூச்சுக்காற்றினை உள்ளில் ஒடுக்க, உண்மை எதுவெனத் தெரியும் என முந்தைய பாடல்களில் பார்த்தோம்.

வெளியில் தெரியும் அனைத்தையும், உடலும், உள்ளமும், அறிவும் நமக்கு உணர்த்தி இன்னின்னது இது எனக் காட்டினாலும், இவை அனைத்தையும் பார்ப்பது ‘நான்’ என்னும் ஒன்றே!

‘இது கணினி’,’இது புத்தகம்’ என பொருள்கள் எதிரில் தெரிந்தாலும், ‘நான்’ இப்போது ஒரு கணினியைப் பார்க்கிறேன்’, ‘நான் ஒரு புத்தகம் படிக்கிறேன்’ என அறியும்போது, உரு அழிந்து, ‘நான்’ என்னும் உணர்வு மேலோங்குகிறது.

இப்படி, இந்த ‘நான்’ என்னும் ஒன்றே அனைத்தையும் பார்க்கும், உணரும், அறியும் ஒன்று எனும் தெளிவு, புறப்பொருட்களை விடுத்து, உள்ளில் இன்னமும் அதிகமாக ஈடுபட ஒரு சாதகனைப் பண்படுத்துகிறது.

இந்த உணர்வு தொடர்ந்து செயல்படும்போது, ‘உண்மையான, சலனமற்ற உணர்வு’ காணும் பொருளுடன் ‘நான்’ என்னும் ஒன்றையும் ஒன்றச் செய்து, இரண்டுக்கும் வேறுபாடு இல்லாமல் செய்து, மனத்தை நிலைப்படுத்தி, ‘உண்மையின் காட்சி’ புரியத் துவங்கும்.


****************

[தொடரும்]

Read more...

Monday, February 09, 2009

"உந்தீ பற!” - 15

"உந்தீ பற!” - 15

"பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”

மனவுரு மாயமெய்ம் மன்னுமா யோகி
தனக்கோர் செயலிலை யுந்தீபற
தன்னியல் சார்ந்தன னுந்தீபற. [15]


மன உரு மாயம் மெய்ம்மன்னுமா[ம்] யோகி
தனக்கோர் செயல் இலை உந்தீபற
தன் இயல் சார்ந்தனன் உந்தீ பற.மனமெனும் ஒன்று மாயங்கள் செய்து
பலவுருக் கொண்டு பாதகம் செய்யும்

பலவித உருவினைப் பலப்பலநேரம்
தனதெனச் சொல்லி ஆட்டியே வைக்கும்

மனமிது மாயா உருவென அறியும்
யோகியர் இதனின் வலையினில் விழாது

தனக்கென ஏதும் செயலிலை என்றே
தன்னியல்பு அறிந்து மகிழ்வுடன் இருப்பர்.


மனத்தை அழிக்கும் உபாயம் எதுவெனத் தெரிவதே ஒரு உண்மையான சாதகனின் தேடல்!

ஆசனம், பிராணாயாமம் என்னும் பல வகைகளின் மூலம் மட்டுமே ஒருவர் யோகி ஆவதில்லை!

இருவிதச் செயல்பாடுள்ள மனத்தின் செயலை அறிந்து, அதனை ஒடுக்கவும், அழிக்கவும் தெரிய இவற்றின் உதவியைச் சரியாகப் புரிந்து ‘உண்மைப் பொருளை’உணர்ந்தவரே, அப்படி நிகழ்த்தியவரே ‘யோகி’ என ஆகிறார்.

இவருக்கு ‘நான்’ யார்? என்பது புரிந்து, ஆனந்தம் வெளியில் இருக்கும் பொருள்களினால் வருவதில்லை; அது தனக்குள்ளேயே இருக்கிறது என்பது புரிவதால், எப்போதும் இயல்பான மகிழ்ச்சியுடனே இருக்கத் துவங்குகிறார்.

‘இது வேண்டும்!’, ’அது வேண்டும்!’ என விரும்பி அதற்காகச் செயல்கள், முயற்சிகள் செய்யாமல், ’நானே ஆனந்தம்’ என்னும் உணர்வில், எப்போதுமே ஆனந்தத்தில் திளைக்கிறார். பெறவேண்டியதென இனி ஒன்றும் இல்லை என்றபின், இனி அவர்க்கு என்ன தேவை? இனி செய்ய வேண்டியதெனவும் இவருக்கு ஒன்றும் இல்லை. இதைச் செய்; அதைச் செய் என எவராலும் நிர்பந்திக்கவும் முடியாத மகிழ்வில் எப்போதும் இருக்கிறார்.

அதற்காக இவர் செயல் என எதுவுமே செய்வதில்லையா? என ஒரு கேள்வி நமக்கு எழலாம்.

செய்வார்!

ஆனால், இவரது செயல்பாடுகள் எதையேனும் சாதிக்க வேண்டும் என்னும் ஆர்வத்தால் அல்லாமல், உள்ளிருக்கும் ஆனந்தத்தின் வெளிப்பாட்டால், தன்னலமற்ற, ஆணவம் இல்லாத உலக நன்மைக்கான செயல்கள் இவரிலிருந்து பெருக்கெடுத்து இயல்பாகவே ஓடத் துவங்கும்!

இதையே இந்தப் பாடல் விளக்குகிறது.
*******************
[தொடரும்]

Read more...

Sunday, February 08, 2009

"உந்தீ பற!” - 14

"உந்தீ பற!” - 14


"பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]

ஒடுக்க வளியை யொடுங்கு முளத்தை
விடுக்கவே யோர்வழி யுந்தீபற
வீயு மதனுரு வுந்தீபற. [14]

ஒடுக்க வளியை ஒடுங்கும் உளத்தை
விடுக்கவே ஓர்வழி உந்தீ பற
வீயும் அதன் உரு உந்தீ பற.


உள்வழி இழுத்து மூச்சுக் காற்றினை
உள்ளே ஒடுக்கிட உள்ளம் ஒடுங்கும்

அலைந்திடும் உளத்தை வெளியில் விடாது
வளியெனும் காற்றினை உள்ளில் ஒடுக்கி

உளத்தை ஒடுக்கிட எண்ணம் அழியும்
இதனைப் பயின்று முறையொடு செய்யின்

உள்ளம் என்பதின் உருவம் அழியும்
உருவெதுமில்லா உளமது ஒளிரும்.

முந்தைய சில பாடல்களில் சொல்லப்பட்ட கருத்தையும், அதனால் விளையக்கூடிய பயனையும் பற்றி இந்தப் பாடல் பேசுகிறது.

பிராணயாமம் என்னும் மூச்சுக் காற்றினை உள்ளடக்கிச் செய்யப்படும் பயிற்சி, ஒரு வலையில் சிக்கி அடைபடும் பறவைகள்போல இருவிதச் செயல்களைச் செய்யும் மனத்தை, ஒடுக்கியும், அழித்தும் உதவி செய்கிறது எனப் பார்த்தோம்.

பிராணாயாமம் சாதகனின் மனத்தை அமைதிப் படுத்துகிறது.
இவ்வாறு அமைதியான மனது பரம்பொருளை நினைக்கத் துவங்குகிறது.
அப்போது ‘அறியாமை’ மெதுவாக விலகத் தொடங்குகிறது.

இந்தப் ‘பரம்பொருள்’ என்பது நாம் நினைக்கும் ஒரு ”உரு” அல்ல!

‘உரு’ மீதான அன்பு, ஈடுபாடு, விருப்பு, வெறுப்புகளை உள்ளில் உண்டாக்கி மனத்தை அலை பாயச் செய்கிறது.
என்னுடையதே சிறந்தது, மற்றது அதைவிடவும் தாழ்ந்தது என நினத்து, நினைவுகளை ஒருதலையாக மாற்றுகிறது.

”உண்மைப் பரம்பொருள்” என்பது ஒன்றே! அது இரண்டாக மாறுவதில்லை. இதுவே எல்லாவற்றினுள்ளும் இருக்கிறது என்பதாலேயே, எந்த ஒரு உருவும் நிலை பெறுகிறது என்பதை ‘அமைதி அடைந்த மனம்’ அறிய இந்த பயிற்சி உதவுகிறது.

நாம் வளர,வளர, நம் எண்ணங்களும் மாறுபடுகின்றன.
நேற்று உண்மை என நம்பியதை இன்று அதே மனம் ஏற்க மறுக்கிறது என்பதை நாம் அனைவருமே நன்கே உணர்ந்திருக்கிறோம்.
ஏற்க மறுக்கவில்லை என்றாலும், குறைந்த பட்சம் சில கேள்விகளாவது வந்திருக்கும்!

இப்படி மனம் மாறிக் கொண்டிருந்தாலும், இதையெல்லாம் நிகழ்த்திக் கொண்டிருப்பது ‘நான்’என்னும் ஒன்றுதான் என்பதை நாம் புரிய,அறிய மறுக்கிறோம்.

ஏனென்றால், இதை ‘புரிய’, ‘அறிய’ முடியாமல் நாம் எப்போதும் அலை பாய்ந்துகொண்டே இருப்பதாலேயே!

முறையான குருவின் துணையுடன் இந்த ‘பிராணாயாமம்’ என்னும் மூச்சை உள்ளடக்கலை, அல்லது கவனித்தலைச் செய்யத் துவங்கும் சாதகன் இப்படி அலை பாய்வதில்லை.

‘நான்’ என்கிற ஒன்றில்லாமல் இதெல்லாம் நிகழ்வதில்லை என்பது புரிய வருகிறது அவருக்கு!

‘எல்லாவற்றையும் கடந்த “நான்”’ என்பதே எல்லா அறியாமையையும், எண்ண அலைகளையும் அழிக்கிறது என்பது இப்போது அவருக்குப் புரிய, அறிய வருகிறது.

“உரு” அழிகிறது!
‘உண்மை” புரிகிறது!
”பரம்பொருள்” எதுவென ஒருவாறாகத் தெரிய வருகிறது.

[முன்னமே சொல்லியபடி, இனி வரும் பாடல்கள் சற்று ஆழமாகச் செல்வதினால், இது பற்றிய விளக்கங்களும் அதிகமாவதைத் தவிர்க்க இயலவில்லை. நான் சொல்வதில், அல்லது சொல்ல வந்ததில் ஏதேனும் குறைகள் இருக்கக் கூடும். நான் புரிந்துகொண்ட அளவிலேயே இவற்றைச் சொல்ல முனைந்திருக்கிறேன் என்பதை இந்த நேரத்தில் சொல்ல
விழைகிறேன்.நன்றி.]


“தெளிவு குருவின் திருமேனி காண்டல்”
**************

[தொடரும்]

Read more...

Saturday, February 07, 2009

"மயிலே! கொணர்தி உன் இறைவனையே!"

"மயிலே! கொணர்தி உன் இறைவனையே!"
பாம்பன் சுவாமிகள்! நம் காலத்தில் வாழ்ந்த அருணகிரிநாதர் இவர்! பல பதிகங்களை முருகன் மீது இவர் இயற்றியிருக்கிறார். ஒவ்வொன்றுமே முத்துகள்தான்! நான் முன்னம் ஒருமுறை சொல்லியிருந்த வேற்குழவி வேட்கை" என்னும் பதிகத்தைப் பக்தியுடன் ஓதி, இரட்டை குழந்தைகளிப் பெற்ற நிகழ்வு உங்களில் சிலருக்கு நினைவிருக்கும்! இவரது சமாதி ஆலயம் திருவான்மியூரில் இருக்கிறது.


"பகை கடிதல்" என்னும் ஒரு அற்புதப் பதிகம்! "இந்தத் திருப்பத்தை காலை மாலை பூசித்துப் பத்தி பிறங்கப் பாடுவார் திருமயில் மீது செவ்வேட்பரமனத் தரிசிப்பர்; பகையை வெல்வர்."என பாம்பன் சுவாமிகளாலேயே ஆசீர்வதிக்கப்பட்ட பதிகம் இது!


படிக்கும்போதே, படபடவெனச் சிறகு விரித்து மயில் ஒன்று நம் முன்னே வருவது போல் உணரமுடியும். "ஏ! மயிலே! நீ இல்லாமல் முருகன் எங்கும் செல்ல மாட்டானாமே! சரி! உன்னையே அழைக்கிறேன்! நீ உடனே என் முருகனைக் கூட்டிக் கொண்டுவா!" என விரும்பி வேண்டிக் கேட்கும் வகையில், சந்தம் கமழத் திகழும் பதிகம் இது!

தைப்பூச நன்நாளில் இப்பதிகத்தை அனைவரும் ஓதி, இலங்கையில் அல்லலுறும் நம் தமிழர்க்கு மயில் வாகனன் விரைவில் அருள அழைக்குமாறு வேண்டுகிறேன். சக்தி வாய்ந்த இப்பதிகம் அனைவர்க்கும் நல்லது அருளட்டும்!


[”முருகனருள்” வலைப்பூவில் இதைப் போட வந்தேன். அங்கு நண்பர் ரவி ஒன்று இப்போதுதான் பதிந்திருக்கிறார். நண்பர் தி.ரா.ச. இன்னொரு பதிவை போடுவதற்காக வைத்திருக்கிறார். எனவே இது இங்கு இடப்படுகிறது! பகவான் ரமணரின் உபதேச உந்தியார் திங்களன்று தொடரும்!!]

"பகை கடிதல்"

திருவளர் சுடருருவே சிவைகர மமருருவே
அருமறை புகழுருவே யறவர்க டொழுமுருவே
இருடபு மொளியுருவே யெனநினை யெனதெதிரே
குருகுகண் முதன்மயிலே கொணர்தியு னிறைவனையே. [1]

மறைபுக ழிறைமுனரே மறைமுதல் பகருருவே
பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே
இறையிள முகவுருவே யெனநினை யெனதெதிரே
குறைவறு திருமயிலே கொணர்தியு னிறைவனையே. [2]

இதரர்கள் பலர்பொரவே யிவணுறை யெனதெதிரே
மதிரவி பல வெனதேர் வளர்சர ணிடையெனமா
சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே
குதிதரு மொருமயிலே கொணர்தியு னிறைவனையே. [3]

பவநடை மனுடர்முனே படருறு மெனதெதிரே
நவமணி நுதலணியேர் நகைபல மிடறணிமால்
சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே
குவலயம் வருமயிலே கொணர்தியு னிறைவனையே. [4]

அழகுறு மலர்முகனே யமரர்கள் பணிகுகனே
மழவுரு வுடையவனே மதிநனி பெரியவனே
இழவில ரிறையவனே யெனநினை யெனதெதிரே
குழகது மிளிர்மயிலே கொணர்தியு னிறைவனையே. [5]

இணையறு மறுமுகனே யிதசசி மருமகனே
இணரணி புரள்புயனே யெனநினை யெனதெதிரே
கணபண வரவுரமே கலைவுற வெழுதருமோர்
குணமுறு மணிமயிலே கொணர்தியு னிறைவனையே. [6]

எளியவ னிறைவகுகா வெனநினை யெனதெதிரே
வெளிநிகழ் திரள்களை மீன் மிளிர்சினை யெனமிடைவான்
பலபல வெனமினுமா பலசிறை விரிதருநீள்
குளிர்மணி விழிமயிலே கொணர்தியு னிறைவனையே. [7]

இலகயின் மயின்முருகா வெனநினை யெனதெதிரே
பலபல களமணியே பலபல பதமணியே
கலகல கலவெனமா கவினொடு வருமயிலே
குலவிடு சிகைமயிலே கொணர்தியு னிறைவனையே. [8]

இகலறு சிவகுமரா வெனநினை யெனதெதிரே
சுகமுனி வரரெழிலார் சுரர்பலர் புகழ்செயவே
தொகுதொகு தொகுவெனவே சுரநடமிடுமயிலே
குகபதி யமர்மயிலே கொணர்தியு னிறைவனையே. [9]

கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே
அருணைய னரனெனவே யகநினை யெனதெதிரே
மருமல ரணிபலவே மருவிடு களமயிலே
குருபல வவிர்மயிலே கொணர்தியு னிறைவனையே. [10]மயில் வாகனனே போற்றி!
முருகனருள் முன்னிற்கும்!

***********************************

Read more...

Friday, February 06, 2009

"உந்தீ பற!" - 13

"உந்தீ பற!" - 13

பகவான் ரமணரின் "உபதேச உந்தியார்"


கடந்த நாட்களில், பகவான் ரமணர் சொன்னது என்ன என்று, இந்தப் பதிவில் சுருக்கமாகக் காணலாம்!

முன்னுரையாக வந்த முருகனார், தாருகாவனத்தில்,தாங்கள் செய்த முன் கருமங்களின் பயனாகக் கிடைத்த
பெருமையினால் ஆணவமுற்ற முனிவர்கள், கருமத்தை மிஞ்சிய கடவுள் என ஏதுமில்லை எனத் திரிய, அவர்கள்
ஆணவத்தை சிவனார் வந்து அழிக்க,ஆணவமலம் அழிந்த முனிவர்கள் கண்ணீர் மல்க
வேண்ட, சிவனார் அவர்களுக்கு அருள் செய்ததைத் திறம்பட உரைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து வந்த பாடல்கள்,


1. செய்கருமம் பயன் தருவது இறைவன் ஆணையால் மட்டுமே! அதனால் கருமம் என்பது கடவுள் இல்லை.
கருமம் என்பது வெறும் சடப்பொருளே!

2. செய்கின்ற கருமம்[வினை],நம்மை மேலும் வினையில் ஆழ்த்தி, வினைக்கடலுக்குள் தள்ளுகிறது.
அது முக்தியைத் தர வல்லது அல்ல.

3. பலன் எதையும் கருதாது செய்கின்ற நிஷ்காமிய கருமமே,நமது கருத்தைத் திருத்தி,கதிவழி[முக்தி]
காட்டும் என்பதே உண்மை.

4. உடலால் செய்யும் பூசை, வாக்கினால் செய்யும் நாமஸ்மரணை, உள்ளத்தால் செய்யும் ஜெபதியானம், இவை ஒன்றைவிட ஒன்று உயர்ந்தது என அறிக.

5. காண்கின்ற யாவையுமே இறை உரு என எண்ணி வழிபடுவது ஈசனுக்கு செய்கின்ற பூசனைகளிலேயே மிகவும் உயர்ந்ததாம்.

6. சத்தம் வருமாறு பூசனை செய்வதை விட,உதடுகள் அசையாது அவன் பெயரை உச்சரித்தல் உயர்ந்தது.
அதைவிட,அடிநாக்கில்,உதடுகள் அசையாமல்,திருப்பெயரைச் செபிப்பது அதனினும் உயர்ந்தது.

7. நீர்வீழ்ச்சி போல் அல்லாது,நெய்வீழ்ச்சி போல், சிந்தாமல்,சிதறாமல்,ஒருநிலைப்பாட்டுடன் இறைநாமம் செபிப்பதே மிகவும் சிறந்தது.

8. வெளியில் இருக்கின்ற ஒரு உருவத்தின் மீது பக்தி கொண்டு அதனை ஆராதிப்பது அன்னிய பாவம் [bhAvam].
அதையே மனத்துக்குள் நிறுத்தி, அதனில் தியானிப்பது அன[ன்]னிய பாவம் [bhAvam]. அன்னியபாவத்தை விட, அனனிய பாவமே சிறந்ததாம்.

9. அன்னிய, அன[ன்]னிய பாவம் இரண்டும் இல்லாத சத்பாவத்தில், நானும் இறையும் ஒன்று என்னும் பாவத்தில் திளைத்திருத்தலே பரபத்தி தத்துவம் எனப்படும்.

10. கன்மத்தில் தொடங்கி, பக்தி வயப்பட்டு, யோகநிலையில் ஆழ்ந்து, எல்லாம் நானே என்னும் ஞானம் வருகின்ற பரபத்தி நிலையே யோகஞானம் என்பதாம்.

இந்த இடத்தில், ஒரு மேல்விளக்கமாக, பதஞ்சலி முனிவர் அருளிய 'அஷ்டாங்க யோகம்' என்பதன் நிலைகள் சொல்லப்படுகின்றன.
யமம், நியமம், ஆஸனம்,ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணம், தியானம், சமாதி என்னும் எட்டு நிலைகள் ஒரு சாதகன் பயிலுவான்.

11. பிராணாயாமம் என்னும் மூச்சுக் காற்றினை அடக்கும் முறையை ஒரு குருவின் துணையால் முறையாகக் கற்ற சாதகன், வலையில் சிக்கும் பறவைகள் போல தன் மனத்தையும் இதன் மூலம் ஒடுக்குவான்.

12. சக்தி [இறை, இயற்கை] என்னும் மூலத்திலிருந்து பிரிகின்ற இரு கிளைகளாக, உள்ளத்தால் உணரப்படும் அறிவும், உயிர் எனப்படும் பிராணன் வழியாகச் செய்யப்படும் செயலும் விளங்குகின்றன.

13. மனத்தின் செயல்கள் இரண்டு. உணரப்பட்ட அறிவு, உணர்ச்சிகளினால் விளையும் செயல்பாடு. மூனது ஒடுங்கி [லயம்] மீண்டும் எழும். பின்னது அழிந்துபோகும் [நாசம்].... முறையான பயிற்சிகள் செய்யும் சாதகனுக்கு.


விரிவான விளக்கங்களுக்கு பதிவுகளை மீண்டும் படித்துப் பார்க்கலாம். அல்லது, தகுந்த குருவின் அருளால் நிகழும்!

மீண்டும் திங்களன்று தொடரலாம்!

குருவே துணை! நன்றாக குரு வாழ்க!

************

[திங்களன்று தொடரும்]

Read more...

Thursday, February 05, 2009

"உந்தீ பற!" -- 12

"உந்தீ பற!" -- 12


பகவான் ரமணரின் "உபதேச உந்தியார்"இலயமு நாச மிரண்டா மொடுக்க
மிலயித் துளதெழு முந்தீபற
வெழாதுரு மாய்ந்ததே லுந்தீபற. [13]


இலயமும் நாசம் இரண்டாம் ஒடுக்க
இலயித்துளது எழும் உந்தீ பற
எழாது உரு மாய்ந்ததேல் உந்தீபற.

மனத்துள் அடங்குதல் இலயமெனச் சொல்வர்
மனமது அழிதல் நாசம் எனப்படும்

பிராணனும் மூச்சும் உள்ளே ஒடுங்கிட
லயமும் நாசமும் இவ்விதம் நிகழும்

அடங்கிய மனமும் மீண்டும் எழுந்திட
அழிந்த மனமோ திரும்புவதில்லை

உறங்கிட மீண்டும் எழுதல் நடக்கும்
இறந்தவர் மீண்டும் எழுதல் உண்டோ!


இதுவரை வந்த பாடல்களிலேயே, புரிந்துகொள்ளக் கடினமாய் இருந்த பாடல் இது எனக்கு!

மனத்தை அடக்கப் பயிலும் சாதகனுக்கு, பயிற்சியின் விளைவாய் இரு நிகழ்வுகள் நடக்கின்றன.

வலைக்குள் அடங்கிய பறவைகள் என முன்னொரு பாடலில் சொன்னது இங்கே உதவலாம்.

மூச்சுக்காற்றின் மூலம் பிராணாயாமம் செய்கையில், மனமும், அதன் விளைவான எண்ணங்களும் அடங்கி ஒடுங்குகின்றன.

இதிலிருந்து விடுபடும்போது, வலை விட்டு வெளிவந்த பறவைகள் போல இதுவரை ஒரு அனுபவத்தில் இலயித்திருந்த மனம் மீண்டும் விடுபட்டு எழுகிறது.

அஷ்டாங்க [எட்டுநிலை] யோகத்தில் சொல்லியிருந்த மற்ற பயிற்சிகளின் மூலம், மனத்தை, அதன் ஆசைகளை அழித்துவிட முடிகிறது. அப்படி அழிந்த மனம் மீண்டும் உயிர்ப்பதில்லை.

தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் ஒருவன், மீண்டும் அதிலிருந்து விடுபட்டு எழுந்திடக் கூடும். ஆனால், இறந்தவர் மீண்டும் எழுவதில்லை.

மேலே சொன்ன உதாரணத்தை, பிராணாயாமத்தால் இலயித்த,[அல்லது] ஒடுங்கிய மனத்துக்கும், நேரான மனக்கட்டுப்பாட்டினால் அழிக்கப்பட்ட மனத்துக்கும் ஒப்பிட்டால், இது இன்னும் சற்று புரியலாம்.

இதைத் தொடர்ந்து எழும் கேள்விகள் ஏராளம்!


அப்படியானால், இரண்டு மனங்களா நமக்கெல்லாம்?
மனம் அழிந்தால், அதனுடன் கூடவே அதன் நினைவுகளும் அழிந்துவிட்டால், பின்பு எப்படி எல்லாவற்றையும் உணர்வது?
மீண்டும் அனைத்தையும் முதலிலிருந்தே கற்றுக் கொள்ளணுமா?
எனக்கு இதுவரையில் நடந்த நிகழ்வுகள் இப்போது எல்லாம் என்னாகும்?
இப்படி நினைவழிந்த மனத்துடன் நான் எப்படி உலகில் வாழமுடியும்?

நியாயமான இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிய, முதலில், இந்த 'மனமழிப்பு' என்றால் என்ன என ஆராய்வோம்!

இரண்டு மனங்கள் இல்லை நமக்கு; ஆனால் மனத்துக்கு இரு முக்கியச் செயல்கள் இருக்கின்றன!

1. புலன்களின் மூலம் உணர்ந்ததை உள்வாங்கிக் கொண்டு உள்நிறுத்திக் கொள்வது. புலன்களின் செயல்பாடு சரியாக இருக்கும் வரையிலும், இந்த மனத்திற்கு அழிவில்லை. இது தொடர்ந்து செயலாற்றிக் கொண்டே இருக்கும்.

இதனால் தொந்தரவில்லை. மாறாக, முறையான கட்டுப்பாடுகளுடன் பயின்ற ஒரு சாதகனுக்கு இந்த உணர்வு உதவியே புரியும். இதைப் பார்க்காதே, இதை உண்ணாதே, இதைத் தொடாதே, இதைக் கேட்காதே, இதை நுகராதே என!

2. மனத்தின் இன்னொரு செயல்பாடு, பலவிதமான உணர்ச்சிகளுக்கு ஆட்படுவது. கோபம், பயம், பொறாமை, என்னுடையது எனும் எண்ணம், விருப்பு, வெறுப்பு ஆசை, நிராசை எனப் பலவித உணர்ச்சிகளுக்கு மனிதன்
தொடர்ந்து ஆட்படுகிறான்.... அல்லலும் படுகிறான் அதனால்!

முறையான பயிற்சியினால் இந்த மனம் அழிந்து போகிறது.

இதன் பயனாக, சாதகன் எந்தவிதமான சலனங்களுக்கும் ஆட்படாமல் போகிறான்.
சந்தோஷம் என்பது எனக்குள் நான் உணர்வதேயன்றி,
வெளிப்பொருட்களால் அல்ல
என்னும் தெளிவு பிறக்கிறது.
அறியாமை நீங்கிய தெளிந்த மனது தன்னைச் சுற்றி நிகழ்வதைக் கவனித்தும், உணர்ந்தும், தனக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கத் துவங்குகிறது.

இதனைத் தொடர்ந்தும் கேள்விகள் எழக்கூடும்!

ஆனால், இங்கு சொல்லப்படுவதெல்லாம், இந்த வழியில் செல்ல விழைபவர்க்கே எனபதைப் புரியவும். இந்த நிலை வருவதற்கு எத்தனை முயலவேண்டும் என்பதெல்லாம் முன்வந்த பாடல்கள் விளக்கியுள்ளன. அந்த நிலைகளைக் கடந்து இங்கு வந்தவர்கே இது!

அப்படியென்றால், இந்த நிலைக்கு வராமல் இதையெல்லாம் ஏன் தெரிஞ்சுக்கணும்!?

பள்ளிக்குச் செல்லும் மாணவன், நன்றாகப் படித்து, நல்லவேலையில் இருப்பவரைப் பார்க்கும்போது, தானும் அதுபோல ஆகவேண்டும் எனும் ஒரு உணர்வில் ஆட்பட்டு, முனைந்து படிப்பதைப் போலத்தான்!

அதற்கு, முதல் பயிற்சிதான் முன்னே சொல்லிய ‘யமம்’ ’நியமம்’ - வெளி, உள் கட்டுப்பாடு!

அதனில் முனைவோம் முதலில்..... இதையெல்லாம் படித்துக் கொண்டே!
****************

[தொடரும்]

Read more...

Wednesday, February 04, 2009

"உந்தீ பற!" -- 11

"உந்தீ பற!" -- 11


பகவான் ரமணரின் "உபதேச உந்தியார்"

[முந்தைய பதிவு]

உளமு முயிரு முணர்வுஞ் செயலு

முளவாங் கிளையிரண் டுந்தீபற

வொன்றவற் றின்மூல முந்தீபற. [12]உளமும் உயிரும் உணர்வும் செயலும்

உளவாம் கிளை இரண்டு உந்தீ பற

ஒன்று அவற்றின் மூலம் உந்தீ பற.உள்ளம் என்னும் ஒன்றின் இருப்பால்

உயிரும் ஆங்கே ஓம்பியே வளரும்


உணர்வெனும் ஆக்கம் இருத்தலின் விளைவால்

செயலெனும் ஒன்றின் பிறப்பும் நிகழும்


உள்ளம் கொடுக்கும் உணர்வின் உந்தல்

உயிரின் செயலை ஓங்கியே வளர்க்கும்


இரண்டு கிளையாய்ப் பிரிந்து நிற்கினும்

சக்தியே இவற்றின் மூலம் ஆகும்.உள்ளம் அறிவு சார்ந்தது. இந்த அறிவு, புலன்களின் வழியே கண்டு, கேட்டு, சுவைத்து, முகர்ந்து, தொடுதல் வழியாக உணரப்பட்டு, அறிந்து கொள்ளப் படுகிறது. உயிர் எனப்படும் பிராணன் அந்த அறிவைச் செயல்வடிவாக்குக்கிறது.

இந்த இரு கிளைகளும் சக்தி என்னும் பரம்பொருளின் [சிலர் இதனை இயற்கை எனச் சொல்லக்கூடும்], மூலத்திலிருந்து பிறக்கிறது.

பிராணன் என்கிற உயிர்மூச்சு, கிரியா சக்தியாகச் செயல்படுகிறது.

மனம் என்னும் ஞான சக்தி, தன்னறிவைக் கொண்டு வழிநடத்துகிறது.

புலன்கள் உணரும் பொருட்களை மனம் இன்னதென உணர்ந்து, தெரிந்து, புரிந்து கொள்கிறது.

இந்த இரண்டாலுமே தனித்தனியாக எதனையும் அறிய முடிவதில்லை என்பதைக் கவனிக்கவும்.

நம் மனம் ஏதோ ஒரு உணர்வின் வாயிலாக கோபமோ, பயமோ, ஆத்திரமோ அடையும்போது, நமது உடல் பதறி, மூச்சுக்காற்று வேகமாக வரத் துவங்குகிறது என்பது அனைவருக்குமே தெரியும்!

அதே மனம் சமாதானமாகும்போது, மூச்சும், உடலும் சீராகின்றன.

பிராணன், மனம் இரண்டிற்கும் இடையிலுள்ள சம்பந்தம் இந்த உதாரணத்தால் புரிய வரலாம்.

முந்தைய பாடலில் சொல்லப்பட்ட, 'மூச்சுக் காற்றை மட்டுமே கவனித்து வருதல்' என்கிற பிராணாயாமத்தைச் செய்யும்போது, எந்தவித அவசரமும் இல்லாமல் மூச்சு சீராக வருவதையும், உடல் லேசாக இருப்பதையும், மனம் வேறெதையும் நினையாமல், ஆராயாமல், அமைதியாவதையும் உணரலாம்!

பயிற்சி செய்யும் சாதகன் ஒருநிலைப்பட இது உதவுகிறது.

இந்த இரு கிளைகளுக்குமே ஆதாரமாக "சக்தி" விளங்குகிறது என்பதே இப்பாடலின் உட்பொருள்!

*********************

[தொடரும்]

Read more...

Tuesday, February 03, 2009

"உந்தீ பற!” -- 10

"உந்தீ பற!” -- 10
”பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”வளியுள் ளடக்க வலைபடு புட்போ
லுளமு மொடுங்குறு முந்தீபற
வொடுக்க வுபாயமி துந்தீபற. [11]

வளி உள் அடக்க வலைபடு புள் போல்
உளமும் ஒடுங்குறும் உந்தீ பற
ஒடுக்க உபாயம் இது உந்தீ பற.


[வளி= சுழல்காற்று; புள்= பறவை[கள்]


கூட்டமாய் வந்து தானியம் தின்னும்
பறவைகள் அனைத்தும் விரிக்கும்வலையுள்

ஒன்றாய்ச் சிக்கி மடங்குதலென்னும்
நிலையினை யறிந்த ஞானியர் தாமும்

மூச்சுக் காற்றினை உள்ளே ஒடுக்கும்
உபாயம் அறிந்து அங்ஙனம் செய்திட

அவ்வழி தொடரும் உளமும் ஒடுங்கும்
இவ்வழி நல்வழி என்றே உணர்க.


[விளக்கம் கருதி, இனி பாடல்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பதிவிலும், கூடவோ, குறையவோ ஆகலாம்!]

‘ப்ராணாயாமம்’ என்னும் ஒரு பயிற்சியின் மூலம் இயல்பாக எப்போதுமே நிகழ்ந்துகொண்டிருக்கும் மூச்சினை உள்ளிழுத்து வெளிவிடும் செய்லபாட்டினை முறையாகச் செய்வது எப்படி என ஒரு குரு மூலம் உணர்ந்தறிந்த சாதகன், இதன் பயனை, பயிற்சியின் மூலம் உணரத்தொடங்குகிறார்.

சிதறிக் கிடக்கும் தானியங்களைக் கொத்தித் தின்னவரும் பறவைக் கூட்டம் தனித்தனியே அமர்ந்து, தன் வேலையைச் செய்யத் துவங்குகிறது.
மேலிருந்து ஒரு வலை அவை மீது வந்து விழுகிறது!
அத்தனை பறவைகளும் இப்போது அந்த ஒரு வலைக்குள்!

இதேபோல,
நம் மனத்துக்குள்ளும் பலவித எண்ண அலைகள்!
இங்கும் அங்குமாய்ப் பறந்து பறந்து கொத்திக் கொண்டிருக்கின்றன.
முறையான மூச்சடக்கிச் செய்யும் பயிற்சியின் மூலம், இந்த எண்ணங்கள் அடக்கப்படுகின்றன.

வலை அறுந்தால், பறவைகள் மீண்டும் சுதந்திரமாய்ப் பறப்பதுபோல, இந்தப் பயிற்சியின் முடிவில் மீண்டும் சாதகன் எண்ணங்களின் வசப்படுகிறார்.

உள்ளிழுத்தல் [பூரகம்], வெளிவிடுதல் [ரேசகம்] என்னும் இருவித நிலைகளையும் தவிர, உள்நிறுத்தி ஒடுங்குதல் [கும்பகம்] என்னும் மூன்றாம் நிலையும், பிராணாயாமத்தில் சொல்லித் தரப்படுகிறது.

மூச்சு விடுவதில், முதல் இரு நிலைகள் மட்டுமே பொதுவாக நிகழும். இந்த மூன்றாம் நிலையான ‘கும்பகம்’ என்பதை எப்படிச் செய்வது என்பது ஒரு முறையான குருவின் மூலமே கற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதில் கவனம் வைக்கவும்.

பகவான் ரமணர் ஒரு எளிய வழியைச் சொல்லித் தருகிறார்.

எந்த விதமான கட்டுப்பாடும் செய்யாமல், இயல்பான மூச்சு விடுத்தலை மட்டுமே கவனிக்கச் சொல்கிறார். கவனம் சிதறாமல் இதிலேயே பதியும்போது, மனத்தின் ஓட்டம் கட்டுப்படுத்தப் படுகிறது. மனம் அமைதியாகி ஒடுங்குகிறது.

இதுபற்றி, படிப்பதையும், கேட்பதையும் விடவும், முறையான பயிற்சி மூலமே இது கைகூடும்.

************************

[தொடரும்]

Read more...

Monday, February 02, 2009

"உந்தீ பற!“ - 9

"உந்தீ பற!“ - 9”பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”[முந்தைய பதிவு]


சென்ற பதிவில் சொன்ன விளக்கம் சிலருக்கு குழப்பத்தை உண்டு பண்ணி இருக்கலாம்!

கன்மம், பக்தி, ஞானம் என மூன்று நிலைகளைத்தானே கேட்டிருக்கிறோம்!
இதென்ன புதிதாக யோக ஞானம் எனச் சொல்கிறாரே என!

கன்மம், பக்தி என்கிற இரண்டு நிலைகளைத் தாண்டியதும், ஞானம் உடனே வருவதில்லை.
யோக சாதனை என்னும் ஒன்றின் மூலமே மனத்தை ஒருமுகப்படுத்த முடியும்.


நான் மிகவும் மதிக்கும் ஒரு பெரியவர் அடிக்கடி என்னிடம் சொல்லும் ஒரே வார்த்தை இதுதான்!

“படித்ததெல்லாம் போதும்! பயிற்சியில் ஈடுபடு!”

இந்தப் பயிற்சிதான் யோகம் எனப்படுவது.

பலவிதமான யோக சாதனைகளைப் பற்றி பல பெரியவர்கள் சொல்லியிருந்தாலும், பதஞசலி முனிவர் விரிவாகச் சொல்லியிருக்கும் யோக விளக்கமே பொதுவாகப் பலராலும் பின்பற்றப் படுகிறது.


’பதஞ்சலி யோகம்’ என இது வழங்கப்படுகிறது.

எட்டு விதமான பயிற்சிகளை முறையாகப் பயில இதில் சொல்லுகிறார் பதஞ்சலி.


அஷ்டாங்க யோகம், ராஜ யோகம், த்யான யோகம் எனவும் இது சொல்லப்படும்.

இந்த எட்டு நிலைகள் என்னவெனப் பார்ப்போம்!

1. யமம்: பயிற்சியில் ஈடுபடும் ஒரு சாதகன் வெளிப்படையாகக் காட்டவேண்டிய, பயிலவேண்டிய நிலைகள் யமம் என அழைக்கப்படுகிறது. இவை ஐந்து வகைப்படும்.


அஹிம்சை: எவருக்கும் தீங்கு இழைக்காமல் இருத்தல்

சத்யம்: உண்மை மட்டுமே பேசுதல்

அஸ்தேயம்: எதையும் திருடாமை


ப்ரம்மச்சரியம்: தன் [புலன்] அடக்கம்


அபரிக்ரஹம்: பிறருக்கில்லாது மறைக்காது இருத்தல்.இதைக் கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால், பல செய்திகளைச் சொல்லும்! தனது நிலையை வெளிப்படையாகக் காட்டுதல், அடுத்தவர்க்கு இல்லாது எதனையும் பதுக்கி வைக்காதிருத்தல், என மேலே சொல்லியிருக்கும் முதல் நான்கு செயல்களின் மொத்தப் பயனாக இது விளங்குவது புரிய வரலாம்.

2. நியமம்: இது தனக்குள் சாதகன் செய்ய வேண்டிய செயல்களைச் சொல்கிறது. இதுவும் ஐந்து நிலைகளைச் சொல்கிறது.


சௌசம்: புறத் தூய்மை; அகத் தூய்மை.மீண்டும் நான் மிகவும் மதிக்கும் அந்தப் பெரியவரே நினைவுக்கு வருகிறார். சற்றும் கசங்காத உடைகள்; எப்போதும் சிரிக்கும் முகத் தோற்றம்; வெளியில் தெரியும் கைகளும், கால்களும், அதன் நகங்கள் உட்பட சீராக இருப்பது என ஒரு மரியாதையான புறத்தோற்றம் அவருக்கு!

அகத் தூயமை என்பது முதலில் சொல்லப்பட்ட யமத்தில் பயின்றதால், தனக்குள் நிகழும் மாற்றம்.

சந்தோஷம்: நாமெல்லாம் சந்தோஷம் என்பது கிடைக்காதது கிடைத்தால் என எண்ணுகிறோம். ஆனால், அதுவல்ல சந்தோஷம்! கிடைத்ததில் திருப்தி அடைவதே சந்தோஷம் எனப்படும்.

தவம்: எளிமையான தவநிலை

ஸ்வாத்யாயம்: புனித நூல்களைப் படித்தல்

ஈஸ்வர ப்ரணிதானம்: இறைவனே கதியெனச் சரண் அடைவது

இந்த பயிற்சிகள் சாதகனை [பயிற்சியாளனை] தன் வாழ்வில் ஒரு சமநிலை காணச் செய்து, அவனது தனித்துவத்தைச் சீர்படுத்துகிறது.

3. ஆஸனம்: தியானத்தில் ஆழ்வதற்கு முன் அமர்வது பற்றி இது சொல்கிறது. உட்கார்ந்த ஒரு சில நிமிடங்களிலேயே, இப்படியும், அப்படியுமாய் நெளிவதும், கால்களை அடிக்கடி மாற்றிக் கொள்வதும், லேசான முனகல், இருமல் எனப் பலர் செய்வதை நாம் பார்க்கலாம். இதற்கெல்லாம் அடிப்படை, முறையான அமர்தலைக் கற்றுக் கொள்ளாததாலே! இதை எப்படிச் செய்வது என்பதை ஒரு குரு மூலம் அறிவதே சிறந்தது.

4. ப்ராணாயாமம்: இடகலை,பிங்கலை எனச் சொல்லப்படும் இரு நாசி துவாரங்களின் வழியாகச் செய்யப்படும் மூச்சு இழுத்தலும், விடுதலும் ஒரு முறையான குருவின் மூலம் கற்றுக் கொண்டு பயிற்சி தொடர வேண்டும்.

5. ப்ரத்யாஹாரம்: வேண்டிய போதெல்லாம் தன்னிச்சையாகப் புலன்களை புலனின்பத்தில் இருந்து விடுவித்துக் கொள்வது எனப் பொருள். பல நிலைகளில் ஒரு சாதகன் புலன்களினால் தூண்டப்படும் நிலைக்கு ஆட்படுவான்.
அந்த நேரங்களில், தன்னை அந்த நிலையிலிருந்து விடுவித்து, மனத்தையும், புலன்களையும் அடக்குவதே இந்த நிலை.

6. தாரணம்: எதனாலும் அசைக்க முடியா மனத்திடத்துடன் மனத்தை ஒருமுகப்படுத்துவது தாரணம்.

7. த்யானம்: ஒரே நிலையில் உண்மைப் பொருளை உள்ளில் உன்னி செய்யப்படும் நிலை இது. யோகத்தின் ஏழாவது நிலையாகத் தான் இது சொல்லப்பட்டிருப்பதைக் கவனிக்கவும்! மற்ற ஆறு நிலைகளைச் செய்யாமல்
இதில் நேராக பலரும் முனைவதையே பொதுவாகக் காண்கிறோம். கவனம். குருவின் துணையும், அருளும் இதற்கு மிகவும் தேவை.

8. சமாதி: நினைவுகள் அனைத்துமே அற்ற ஒரு நிலை இது. யோகத்தின் இறுதி நிலை. யோகதியானம் இங்கு தியானயோகமாக மாறி பூரணமாகிறது.

ஆனால், யோகா என்னும் வகுப்புகளுக்குச் செல்லும் பலருக்கும், பிராணாயாமம், தியானம் என்னும் இரு நிலைகளே பயிற்றுவிக்கப் படுகிறது. முறையான ஒரு குரு மட்டுமே அனைத்து நிலைகளையும் சொல்லிக்
கொடுப்பார் என்பது கவனிக்கத் தக்கது.

யோக தியானம் மூலம் ஞானத்தை நோக்கிப் பயணிக்கலாம்.

இப்போது மீண்டும் பத்தாவது பாடலைப் படித்தால் இங்கு சொல்லப்படுவது என்னவெனப் புரியலாம்.

இனி நாளை தொடருவோம் பகவான் ரமணரின் உபதேச உந்தியாரை!
**************

[தொடரும்]


Read more...

Sunday, February 01, 2009

"உந்தீ பற!“ - 8

"உந்தீ பற!“ - 8

”பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]

பாவ பலத்தினாற் பாவனா தீசசற்
பாவத் திருத்தலே யுந்தீபற
பரபத்தி தத்துவ முந்தீபற. [9]


பாவ பலத்தினால் பாவனாதீச
சற்பாவத்து இருத்தலே உந்தீ பற
பரபத்தி தத்துவம் உந்தீ பற.


அன்னியம் அனையம் இரண்டினும் மேன்மை
பாவனாதீதம் [bhaavanaathiitham] எனுமொரு நிலையே
[ஏதும் இல்லா ஒரு நிலையதுவே]

ஏதொரு ஒருவமும் வெளியிலோ உள்ளிலோ
இருத்தலில் ஈர்ப்பெனும் ஒருநிலை வரலாம்

அதனைப் பற்றிய கவனம் மிகுந்து
அடுத்ததைப் பழிக்கும் தீதும் வரலாம்

ஏதும் இல்லா சற்பாவத்தில் இருத்தலே
பரபத்தி தத்துவம் என்பதை அறியலாம்.


வெளியில் இருக்கின்ற ஒரு உருவத்தின் மீது பக்தி செலுத்துகின்ற அன்னிய பாவம், அப்படி வெளியில் காணாது உள்ளேயே அந்த உருவினை வைத்து செய்கின்ற பக்தியான அனனிய பாவம் என்கிற இரண்டை விடவும்
எந்தவொரு உருவினையும் எண்ணாத சத்பாவத்தில் இருத்தலே ‘பரபத்தி’ என்னும் தத்துவம் ஆகும்.


உதித்த விடத்தி லொடுங்கி யிருத்த
லதுகன்மம் பத்தியு முந்தீபற
வதுயோக ஞானமு முந்தீபற. [10]


உதித்த இடத்தில் ஒடுங்கி இருத்தல்
அது கன்மம் பத்தியும் உந்தீ பற
அது யோக ஞானமும் உந்தீ பற.


எதனைக் கண்டும் எதனையும் உணர்ந்தும்
அதுவாய் இருத்தல் பரபத்தி என்னிலோ

எதுவினைக் கண்டும் ஏதும் ஆகா[து]
எண்ணம் உதித்த இடத்தினை அகலா[து]

ஆங்கே அதுவாய் ஒடுங்கி இருத்தலோ
கன்மம்பத்தி என ஆன்றோர் உரைப்பர்

அதுவேயோக ஞானம் எனுமாம்
உயரிய நிலையாம் உணர்வாய் இதனை.


இறையுணர்வு எந்த இடத்தில் தோன்றுகிறதோ, அதனை அப்படியே உள்வாங்கி, பிறகு அதனிலேயே ஒடுங்கி ஆழ்வது கன்மம் தொடங்கி, பக்திவயப்பட்டு, பின் யோக நிலையில் ஆழ்கின்ற ஒன்றாகும்.

வெளியுருவைக் கண்டு அதனில் பக்தி செலுத்துவது கன்மம். அதனை உள்ளில் வைத்துப் போற்றுவது பக்தி.
அவையெல்லாவற்றையும் விடுத்து, ஏதுமில்லா ‘பரபத்தி’யில் ஆழ்வது யோக ஞானம் என்னும் உயரிய நிலை.

[அடுத்த பாடலைப் பார்க்கும் முன், இந்த யோகஞானம் என்றால் என்ன என்பதை சற்று விரிவாகப் பார்க்கலாம்!]

****************
[தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP