Thursday, January 25, 2007

"தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி!" [3]




"தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி!" [3]

"பாதி தண்ணிதான் பூண்டிக்கு வந்துதுன்னு சொன்னேனா" என்றவாறு ஒரு டீயை உறிஞ்சிக்கொண்டே தொடர்ந்தான் மயிலை மன்னர்.

"ஏண்டா தண்ணி வரலை! என்ன ஆச்சுன்னு பாக்கப் போனாங்க நம்ம ஆளுங்க.

நல்லவேளை, போன தபா மாரி, ஆரும் தண்ணியைத் திருடலை.

சிமிண்ட்டுகரை வளியா தண்ணி ஊறி, வெளியே போவுது.

ஆஹா! சிமிட்டு [] வளியாக் கூட தண்ணி கசியுமேன்னு யோசிக்கலியேன்னு தெகைச்சாங்க.

இப்ப இன்னா பண்றது! இதுக்கு இன்னா வளின்னு ஆலோசனை பண்ணினாங்க.

சிமிண்டுக்கு பின்னாடி, கரை வலுவா இருந்தா தண்ணி போவலை; ஆனா, கரை 'பொத-பொத'ன்னு இருந்தா, தண்ணி கசியுது ரொம்ப-ன்னு தெரிஞ்சுது.

அந்த எடத்துல மட்டும் ஒரு கெமிக்கல் கலந்த பாலிமர் ஷீட்டை போட்டா அது சிமிண்டோட ஒட்டிகிட்டு இன்னும் வலுவாயிரும்னு புரிஞ்சுது.

ஆனா, இன்னும் அதிக செலவாகும்.

இன்னா, அதிகம் இல்ல.

ஒரு 90 கோடி ரூபா மேல!

ஏற்கெனவே 150 கோடி ஆயிப் போச்சு.

ட்ரஸ்டு ஆளுங்க நேரா சாமியப் போய் பார்த்தாங்க!

"செலவப் பாத்தா ஆவாது! இன்னா செய்யணுமோ செய்யுங்க"ன்னு சாமி சொல்லிட்டாரு.

அவ்ளோதான்!

எல்லாம் மளமளன்னு நடந்துது.

ஜூன் மாசம், 3-ந்தேதி, 2005-ம் வருசம்!
நாயுடு போயி, ராஜசேகர ரெட்டி வந்துட்டாரு சீஃப் மினிஷ்டரா!
அவரை வெச்சு ஒரு விளா வெச்சு ஷீட்டு போடற வேலய ஆரம்பிச்சாங்க!

அதே வருசம், நவம்பர் மாசம் சாமி பொறந்த நாளன்னிக்கு[23] தண்ணிய தொறந்து வுட்டாங்க!

"கிருஸ்னாம்மா" சும்மா கலகலன்னு சிரிச்சுகிட்டு குலுங்கி, தளுக்கிகிட்டு ஒரு ராசபாட்டையில வர்ற மாரி ஓடி வருது!



29-ந்தேதி பூண்டிக்கு வருது!

அல்லாருக்கும் சந்தோசம்!

12 டிஎம்சி தண்ணி வருது!

2005லியே தண்ணி வந்திருச்சின்னா இப்ப எதுக்கு விளா எடுத்தாங்கன்னு கேக்கறியா?

தண்ணி வந்தவொடனியே, ஒரு விளா எடுக்கணும்னு நெனச்சாங்க!

ஆனா, அப்ப இங்க இருந்த அம்மா அது முக்கியம்னு நினைக்கலை!

ஆட்சி மாறிச்சு!

கருணாநிதி வந்தாரு!

பத்து வருசம் களிச்சு சாமியும் இப்பதான் சென்னைக்கு வந்தாரு.

68லிருந்து எப்பிடியாவுது சென்னைக்கு குடிதண்ணி கொண்டு வரணும்னு இத்தயே நெனைச்சுகிட்டு இருந்த நம்ம மொதலமைச்சரும், நம்ம தமிள்நாட்டு மக்களோட நன்னியக் காட்ட இதுதான் சமயம்;
அது மட்டுமில்ல, மத்த 3 மொதலமைச்சருங்களையும் இதுக்கு ஒத்துக்க வைக்கவும் இதுதான் சமயம்னு முடிவு பண்ணி ஒரு விளாவுக்கு ஏற்பாடு பண்ணினாரு.

சாமியும் ஒத்துகிட்டாரு.

மத்ததெல்லாம் ஒனக்கு தெரியும்!:)

தமிளனோட நன்றியறிதலக் காட்டின நம்ம மொதலமைச்சருக்கு நெசமாவே ஒரு பெரிய்ய்ய 'ஓ' தான் போடணும்!

ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன்.

நல்லபடியா நமக்கு தண்ணி கெடைக்கணும்னு நெனச்ச ஆளு சாமிக்கு சமம்.
அவரு சாமியோ இல்லியோ அத அவங்கவங்க நெனப்புக்கு வுட்டுருவோம்.

ஒருத்தரைக் கூப்புட்டு ஒத்த பைசா கொடுன்னு கேக்காம,
ஒருத்தர் வந்து இத்த எங்களுக்கு செஞ்சு கொடுங்கன்னு தன்கிட்ட கேக்காம, ஒரு ஆளு, தானே வந்து ஒரு காரியத்த இன்னொருத்தருக்காவ செஞ்சார்னா, அவர்தான் சாமிக்கும் மேல!

இத்தப் பத்தி நா சொல்றத வுட, நம்ம ஐயன் இன்னா சொல்லிருக்காருன்னு சொல்லிட்டு முடிச்சுக்கறேன்.

ஐயனப் பாத்து ஒர்த்தன் கேக்கறான்!

"மலய வுடப் பெருசு எது?
ஒலகத்த வுடப் பெருசு எது?
கடல வுடப் பெருசு எது?"

அப்படீன்னு.

வள்ளுவன் சொல்றான்.....

"நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது." [124]

"காலத் தினாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது." [102]

"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது." [103]

அர்த்தம் தெரியலைன்னா கேளு, நாளைக்கு சொல்றேன்!

"மக்கள் சேவையே மகேசன் சேவை"

"அனைவரிடமும் அன்பு செய்; அனைவருக்கும் சேவை செய்"

சரி , ரொம்ப நேரமாச்சு! போயி அல்லாருக்கும் இத்த சொல்லு!

"மொதல்ல மனுசனா இருக்க கத்துக்க! அடுத்தவனப் பத்தி ஒண்ணு சொல்றதுக்கு முன்ன, அத்த தீர விசாரி! ஒன் நம்பிக்கையோட ஒத்துப் போவுதுன்ற ஒண்ணுத்துக்காவே ஒனக்கு சரியா தெரியாதத தூக்கி நிறுத்த தொணை போவாதே!"



தொடர்ந்து படித்த அனைவருக்கும் எனது நன்றி!

வணக்கம்!

சாய்ராம்.

Read more...

Wednesday, January 24, 2007

"தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி" [2]




"தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி" [2]

[முதல் பாகம் இங்கே!]

"இப்ப நான் இன்னாத்துக்கு பூராக் கதையும் வெலாவாரியா சொல்றேன்னா" எனத் தொடர்ந்தான் மயிலை மன்னார், ஒரு பீடியைப் பற்றவைத்துக் கொண்டே!

"இன்னாத்துக்குன்னா, அப்பத்தான் ஒனக்கு இதுக்கப்பால நடந்தது என்னான்றது புரியும்.

ம்ம்ம்ம்! எங்க விட்டேன்?.... ஆங்!ஆபிசருங்கல்லாம் கையப் பெசஞ்சுகிட்டு நின்னாங்க!
ஏன்னா, வுடறேன்னு சொன்னது 15 டிஎம்சி; அப்பிடி இப்பிடி ஆவியாப் போனாக்கூட ஒரு 12 டிஎம்சி தண்ணியாவுது பூண்டிக்கு வந்து சேந்ந்திரும்னு நம்ம ஆளுங்கள்லாம் கணக்கு போட்டு வெச்சிருந்தாங்க!

ஆனா, நடந்தது இன்னான்னா, தொண்ணித்தாறுலேர்ந்து, டூ டவுசண்டு வரைக்கும் [1996 - 2000]வர்ஷந்தோரும் வந்த தண்ணி இத்த வுட ரொம்ப கம்மி!
ஒரு ரெண்டு தபா வெறும் அரை டிஎம்சி கூட வரலை இந்த நாலு வர்ஷத்துல.

அத்தத்தான் இவனுக போய் பார்த்திட்டு வந்து 'லபோ-திபோ'ன்னு அடிச்சிகிட்டானுங்க.
ஆக மொத்தம், தெலுங்கு கங்கை,..... வெளங்கலீங்க!
சனத்தொகை கூடிப்போயி, மானமும் பொய்யாப் போயி, மெட்ராஸ் சனங்கல்லாம் தண்ணிக்கு ஆலாப் பறக்க ஆரம்பிச்சாங்க!

இப்பதான் நான் சொன்ன அதிசயம் நடந்துச்சு!
பொங்கல் களிச்சு ஒரு 4 நாளு போயிருக்கும் 2002-ல,... சனவரி பத்தொம்பதாந்தேதி.
பெங்களுர்ல சாமி கட்டின ஆசுபத்திரிக்கு மொதலாம் ஆண்டுவிளா!
பெரிய பெரிய ஆளுங்கள்லாம்.. வாஜிபாயி என்ன, கவுனர் என்னான்னு அத்தினி பேரும் குந்திருக்காங்க!

சாமி எளுந்து பேசறாரு. ஆசுபத்திரியோட நோக்கம், ஒடம்பை எப்பிடி சரியா கவனிசுக்கணும்னுல்லாம் பேசிகினே வந்தவரு, டபார்னு ரூட்டை மாத்தினாரு.


மெட்ராஸ் சனங்களோட தண்ணிக் கஸ்டத்தைப் பத்தி பேச்சு திரும்புது.
எப்டில்லாம் கஸ்டப்படறாங்க, வூட்டுக்குப் பக்கத்துல ஓடற அயுக்கு தண்ணியைவெல்லாம் கொணாந்து பொம்பளைங்க சமைக்கறதுக்கும், குடிக்கறதுக்கும் யூஸ் பண்றாங்கன்னு கேக்கறவங்க மனசெல்லாம் கரையற மாரி பேசறாரு.

கூடவே, ஆருமே எதிர்ப்பாக்கத, ஒரு அறிவிப்பையும் வுடறாரு.
இந்தமாரி, சாமி... அல்லாத்தையும் பாத்துகிட்டு இருக்காரு; துட்டு படைச்சவன்லாம், லாரி, டேங்க்ல தண்ணி சப்ளை பண்ண வெசுகிட்டு குஷாலா கீறாங்கோ. ஏளைபாளைங்களைப் பத்தி ஆரும் கவலப்படற மாரி தெரியல. அதுனால.... இவங்க கஸ்டத்தை போக்கறதுன்னு தான் முடிவு பண்ணியாச்சுன்னு!

அவ்ளோதான்.. அங்க இருக்கறவங்களுக்கெல்லாம் ஒரே சந்தோசம்!

சாமி ஒரு நல்ல வார்த்தை சொன்னார்னா, முடிக்காம வுடமாட்டாரு. இனிமே தீந்துது சென்னையோட கஸ்டம்லாம்னு.

மளமளன்னு காரியம் சும்மா மிலிடரி வேகத்துல ஆரம்பிச்சுது.
மொதல்ல ஒரு குரூப் ஆளுங்க, இன்னாடது. ... அகிலபாரத சத்யசாயி சேவா ட்ரஸ்டு... அதிலேர்ந்து போயி, ஆந்திரா கவர்மெண்டைப் பாத்தாங்க.

நம்ம என்டிஆர் மாப்ள சந்திரபாபு நாயுடுதான் சீப்மினிஷ்டர். ஏற்கெனவே, ஆந்திராவுல இதுமாரி ஏகப்பாட்ட வாட்டர் ப்ராஜெக்டுல்லாம் இந்த ட்ரஸ்டு பண்ணி ஒரு 20 லச்சம் பேருங்களுக்கு தண்ணிவசதி பண்ணினதுல்லாம் அவருக்குத் தெரியும்.
ஒடனே சரி, இதுக்கு இன்னா டெக்னிகல் எல்பு[ஹெல்ப்] வோனுமோ அத்தெல்லாம் தாரேன்னுட்டாரு.
எப்பிடியாவது, சென்னைக்கு தண்ணி கிடைக்கும்னா, எது வோணும்னாலும் செஞ்சுக்கலாம்னும் சொல்லிட்டரு.

இப்போ இஞ்சினியருங்கல்லாம் போயி, எதுனால தண்ணி கண்டலேறுலேர்ந்து பூண்டிக்கு போய் சேரலேன்னு டெஸ்டு பண்ணினாங்க. முன்னியே சொன்ன மாரி, காவா[கால்வாய்] சரியாத் தோண்டலை; தோண்டினதும் தூந்து போச்சு; அங்கங்க தேங்கற தண்ணியும் அடுத்தவன் வயப்பக்கமா பூடுது..... இப்படி அல்லாத்தையும் கண்டுபிடிச்சு லிஸ்டு ஒண்ணு தயார் பண்ணினாங்க.




(சில படங்கள்]

கடைசில, ஒரு ரிப்போர்டு தயார் பண்ணினாங்க.
கண்டலேருலேர்ந்து, பூண்டி வரைக்கும் திரும்பவும் புதுப்பிச்சாலொளிய, இந்த கால்வாய்க்கு இனிமே விமோசனமே இல்லேன்னு கண்டிஷனா இருக்கு அதுல!
மொத்த நீளம் இம்மாம் தெரியுமா?
150 கிலோமீட்டரு.
புதுப்பிக்கறதுன்னா இன்னான்னு நெனச்சே!
கண்டலேறு ரிசர்வாயரைப் பலப்படுத்தி, மளை பெய்யாத காலத்துலியும், தண்ணியைத் தேக்கி வைக்கற அளவுக்கு வலுவாக் கட்டணும்
ஏற்கெனவே நோண்டி, தூந்து போன வாய்க்காலை ஆளமாக்கணும்.
கரையை அகலப் படுத்தணும்.
தண்ணி கசியாமப் பாத்துக்கணும்.

இதுக்கான மொத்தச் செலவையும் ட்ரஸ்டே எடுத்துக்கும்னு சொல்லச் சொல்லி சாமி உத்தரவு போட்டுட்டாரு.


ஒர்த்தர்கிட்ட ஒரு நயாபைஸா கேக்கலை. ஒரு நோட்டிசு வுடலை.

லார்சண்ட் டுப்ரோ [L&T] கம்பெனி இந்த வேலைய தானே செஞ்சு தரேன்னு சொல்லிச்சு.

இப்பிடியே பல பேரு முன்னுக்கு வந்தாங்க.

வேலை ஜரூரா ஆரம்பிச்சு அல்லாம் முடிஞ்சுது.

ஒரு வெள்ளோட்டம் போல தண்ணியத் தொறந்து வுட்டுப் பாத்தாங்க!.........

.........பாதித் தண்ணி கூட பூண்டி வந்து சேரலை!!!!


ஏன்???????????!

[நாளை முடிவுறும்!]

ஜெய் சாய்ராம்!



Read more...

"தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி"

"தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி"


ரொம்ப நாள் கழித்து, நண்பனைப் பார்க்கும் ஆவலுடன் மயிலை சென்றேன்!

எங்கும் காணோம்!

அக்கம்பக்கத்தில் விசாரித்தேன்!

"அவனா? அவனை ராத்திரி 10 மணிக்கு மேலதான் பாக்கமுடியும்! திருவான்மியூர் வரைக்கும் போயிருக்கான்" எனச் சொன்னார்கள்.

'சரி, இன்றைக்கு எப்படியும் அவனைப் பார்த்துவிட்டுதான் போகப் போறேன். வந்தான்னா, நான் இங்கதான் மாடவீதில இருப்பேன்னு சொல்லுங்க' என அவர்களிடம் சொல்லிவிட்டு, கபாலி கோவிலுக்கு சென்று, தரிசனம் செய்து, 'வஸந்த பவனில்' சாப்பிட்டு விட்டு, வெளியே வருகையில், ஒரு அடி என் முதுகில் பலமாக விழுந்தது!

'யாரது' எனத் திரும்பினால், அட்டகாசமாகச் சிரித்தபடி, மயிலை மன்னார்!

"ஆகா! என்ன தரிசனம்! நீ வராமப் போயிட்டியே! அது சரி! நீதான் திருவெம்பாவை, அது, இதுன்னு, என்னை மறந்திட்டியே! இப்பவாவது நெனப்பு வெச்சுகிட்டு வந்தியே! இன்னா சமாச்சாரம்? நல்லா இருக்கியா" என்றபடி என்னை இழுத்துக் கொண்டு சென்றான், மன்னார்.

'ஆமாம்ப்பா! திருக்குறள் உன்கிட்ட கேட்டு ரொம்ப நாளாச்சு. அதான் வந்தேன்' என்றேன்.

'அது இருக்கட்டும். அதுக்கு முன்னாடி நா ஒனக்கு இன்னோரு விசயம் சொல்லணும். இப்ப நா எங்க போயிட்டு வர்றேன்னு கேக்கலியே' என்றான்.

'ஆமா, மறந்தே போனேன். எங்கிருந்து வருகிறாய்' என்று நானும் ஒப்புக்குக் கேட்டு வைத்தேன்.

"நீ அடிக்கடி சொல்லுவியே, சாய்பாபான்னு ஒரு சாமி, அது வந்திருக்கு நம்ம ஊருக்கு. ரொம்ப தபா இங்க வந்தாலும் இதுவரைக்கும் நானும் போய் பாத்ததில்லை. நீயுந்தான் எத்தினி தபா கூப்பிட்டிருப்பே. ஆனா, இப்ப நானே போய் பாத்திட்டு வர்றேன்! ஆச்சரியமா இருக்குல்ல! ஏன்னு கேளு.


ஆரும் செய்யாத ஒரு காரியத்தை அசால்டா செஞ்சிட்டு ஒரு பந்தாவும் பண்ணாம, இப்ப நம்ம ஊரு நல்லா இருக்கணும்னு ஒரு யாகமும் பண்றாரு. அத்தப்பத்தி கேள்விப்பட்டேன். அங்க போனதுந்தான் தெரியுது. எம்மாம் பெரிய வேலைய சத்தமில்லாம செஞ்சிருக்காருன்னு!

இதத்தாம்ப்பா நம்ம ஐயனும் அடிக்கடி சொல்லுவாரு. எதைச் செய்யணுமோ அதைச் செய்யு, செய்யறத ஒயுங்கா செய்யு. ஆரம்பிச்சீன்னா முளுசா செஞ்சு முடி. செஞ்சதைப் பத்தி பீத்திக்காத. முடிச்சியா,... அடுத்தது நம்மால இன்னா செய்ய முடியும்னு அத்த செய்யப் போ" இப்படி பல குறள்ல சொல்லியிருக்காரு! இந்த மாரி நா இதுவரைக்கும் பாத்ததேயில்ல."
என்று ஒரு பெரிய பிரசங்கமே செய்து விட்டான் மன்னார்.

வலைப்பூக்களில் இது பற்றிய ஒரு புரியாத நிலையே நிகழ்வதைக் கண்டு மனம் நொந்து போயிருந்த வேளையில் அவன் இப்படிச் சொன்னதும், 'கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல' உள்ளூர் ஆளைக் கேட்டு அதை எழுதலாமே என எண்ணி, அவனைப் பார்த்து,
நடப்பதையெல்லாம் அவனுக்கு விவரித்தேன்.

"கெடக்கறாங்க வுடு! அவங்களப்பத்தி நீ கவலைப்படாதே! ஆனா, நான் சொல்றதை அப்படியே எளுதிப் போடு. புரிஞ்சுக்கறவங்க புரிஞ்சுக்கட்டும்" என அவன் சொன்னதை இங்கு பதிகிறேன்.

ஆதி முதல் அந்தமாக அவன் சொன்னதை எழுத ஒரு சில பதிவுகள் பிடிக்கும்!

சென்னப்பட்டணமா இருந்த நம்ம மெட்ராஸ் இங்லீஷ்காரன் காலத்துல இருந்தே ரொம்ப ஃபேமஸான ஊரு.
ஊரு பெருசாக, பெருசாக, ஆளுங்களும் சாஸ்தியாகி, தண்ணிக்கு எப்பவுமே தட்டுப்பாடுதான்!
ஏன்னா, இங்க ஒரு ஆறோ, குளமோ பெருசா சொல்லிக்கற மாரி ஒண்ணுமில்ல.
கொஞ்ச தூரம் தள்ளி ஓடற ஒரு ஆறுதான்.


ஒரு வெள்ளக்காரன், ஃப்ரேஸர்னு பேரு அவனுக்கு, அவந்தான் மொத்மொதலா, 1884ல, சோளவரம், ரெட் ஹில்ல்ஸ் பக்கத்துல ஒரு டாம் கட்டி, மளைக்காலத்துல அந்த ஆத்துல வர்ற தண்னியைத் தேக்கி வெச்சு, கொஞ்சம் நம்மள காப்பாத்தினான்.
அப்ப நம்ம ஊருல எத்தினி பேருன்ற?
வெறும் நாலரை லெச்சம் பேருதான்!
அவனுகளுக்கே இந்தப் பாடு!
குடிக்கறதுக்கு, பாசனத்துக்கு, அல்லாத்துக்கும் இந்தத் தண்ணிதான்.
குடிக்கற தண்ணி கீள்பாக்கத்துலஒரு டாங்குல சுத்தி பண்ணி நமக்கெல்லாம் வந்துச்சு.

கொஞ்ச நாள் களிச்சு, பாசனத்துக்கு வர்ற தண்ணிய நிப்பாட்டிட்டாங்க.
குடிக்கறதுக்கு மட்டும் கீள்பாக்கம் தண்ணி.
இப்படி கொஞ்ச காலம் ஓடிச்சு.

சொதந்தரம் கெடச்சும், ஒண்ணும் பெருசா ஆரும் இந்த தண்ணி விசயத்துக்கு முயற்சி பண்ணலை.
1968லதான் செண்டர்ல கொடுத்த ப்ரெஷர்னால, கிருஸ்னா நதிலேர்ந்து தண்ணி தரதா, ஆந்திரா ஒத்துகிச்சு. மகாராஸ்ட்ரா, கர்நாடகா இதுங்களும் தன் பங்குக்கு கிருஸ்னாலேர்ந்து தண்ணி தரணும்னும் முடிவாச்சு.
மொத்தம் 15 டிஎம்சி தண்ணி இவங்க மூணு பேரும் சேர்ந்துகொடுக்கறதா பேச்சு.

ஆச்சா?

தண்ணி தராங்க, சரி. எப்படி அத்த இங்க கொண்டாறது? இதுல பேச்சு வர்த்தை..... இளுத்தடிச்சாங்க. ஒண்ணூம் முடிவாவல. அப்பிடியே கெடப்புல போட்டுட்டாங்க.

இதான் இப்பிடி ஆயிருச்சேன்னு, அப்போ மினிஷ்டரா இருந்த நம்ம கருணாநிதி, சென்னைவாசிங்களுக்கு தண்ணி வரணும்னு ஒரு திட்டம் போட்டாரு. எவன் எவன்டயோ போய் கேக்கறத விட, வீராணத்துலேர்ந்து கொளாய் மூலமா தண்ணி கொண்டு வந்த்துரலாம்னு எவனோ சொன்னதக் கேட்டு நெறய பணம் செலவளிச்சு முயற்சி பண்னினாரு. பேரு கெட்டதுதான் மிச்சம்! தண்ணியும் வரல; ஒண்ணும் வரல. வாங்கின கொளாய்லாம் அங்கங்கியே கெடந்து சீரளிஞ்சதுதான் லாபம்!

அடுத்தப்பல எம்ஜியாரு வந்தாரா! அவர் தன் பங்குக்கு எதனாச்சும் செய்யணும்னு நெனச்சாரு. கிருஸ்னா திட்டந்தான் இதுக்கு வளின்னு முடிவு பண்ணினாரு.
ஆந்திரா சீஃப்மினிஷ்டரோட பேச்சு வார்த்தை நடத்தினாரு.
ரெண்டு டாம் கட்டி நம்ம ஸ்டேட் பார்டருக்கு கொஞ்சம் பக்கத்துல வரைக்கும் கொண்டு வர்றது; கண்டலேறுன்ற எடத்துல ஒரு ரிஸர்வாயர் கட்டறது; அங்கேருந்து ஒரு வாய்க்கா கட்டி நம்ம பார்டருக்குள்ள வந்து போண்டி தேக்கத்துல அத்த சேர்த்துறதுன்னு முடிவாச்சு.

ஆனா, இதுக்குள்ள ஒரு சூட்சுமம் இருக்கு! அத்த சொல்றேன் கவனமா கேளு.

அப்ப இருந்த ஆந்திரா சீஃப்மினிஷ்டர் படா கில்லாடி!

கிருஸ்னா தண்ணிய ஆந்திராவுல இருக்கற ஊருக்கெல்லாம் பாசனத்துக்கு எப்பிடியாவது பயன்படுத்தணும்னு ஒரு ப்ளான் மனசுக்குள்ள வெச்சிருந்தாரு.

நாம கொடுக்கற பணத்தை வெச்சு, தன் ஊருக்கெல்லாம் தண்ணி காட்டிரலாம்னு அவர் திட்டம்!

அதனால, இதுக்கு ஆதரவு கொடுக்கறதா போக்கு காட்டி, இந்த கண்டலேறு-பூண்டி கால்வாய்க்கு, "தெலுங்கு கங்கா"ன்னு ஒரு பேரும் வெச்சு , இந்திரா அம்மாவ வரவளச்சு 83-ல, மெட்ராஸ்ல ஒரு பெரிய தடபுடலா நடந்து முடிஞ்சது!

மொத்த மதிப்பிடு அப்ப 2,500 கோடி ரூவா!
ஆந்திரா 2000 கோடி அவங்க சைடுல டாம் காட்ட, தமிள்நாடு 500 கோடி இந்த கண்டலேறு-பூண்டி கால்வாய்க்கு கொடுக்கறதா ஒப்பந்தம் போட்டாச்சு!

போட்ட திட்டப்படி ரெண்டு பேரும் பணத்தை கொடுக்க, ஆந்திரர, கண்டலேறு வரைக்கும் ரொம்ப சிரத்தையா அல்லாத்தையும் கட்டிட்டாங்க1
இந்த கண்டலேறு-பூண்டிக்கு மட்டும் வெறூம் குளியத் தோண்டி போட்டுட்டு, தெலுங்கு கங்கா திட்டம் வெற்றிகரமா முடிஞ்சுபோச்சுன்னு 96-ல ஒரு பெரிய விளாவையும் நடத்தி காமிச்சுட்டாங்க!

ஒப்பந்தப்படி, ஆவியாப் போறது போவ, 15 டிஎம்சி தண்ணி பூண்டிக்கு வரணும்.

ஆனா, ஒரு சொட்டு கூட வரல!
இன்னாடா, அத்தினி தண்ணியுமா அவியப் பூடுச்சுன்னு நம்ம அபீசருங்க அல்லாம் விளுந்தடிச்சிகினு ஓடிப் போயிப் பாத்தனுவ!

பாத்தா ஆளுங்களுக்கு பகீர்னு ஆயிப் போச்சு!

கால்வாயின்னு ஒண்ணுமே இல்லை! அங்கங்க அவன் அவன் பாத்தி வெட்டி, வர்ற தண்ணிய அல்லாம், தன் வயலுக்கு திருப்பி வுட்டுருக்கான்!

கால்வாயும் சுத்தமா இல்ல! குட்டையும் குளியுமா தண்ணி தேங்கிக் கெடக்குது!

எப்பிடி தண்ணி வரும்!

போட்ட பணமும் அம்போன்னு போச்சு!
தண்ணியும் வரல!

ஆஹா! கவனிக்காம விட்டுட்டோமேன்னு, திருடனுக்கு தேள் கொட்டின மாரி அல்லாரும் கையப் பெசைஞ்சுகிட்டு நின்னாங்க!


அப்போதான்...........................
ஒரு அதிசயம் நடந்திச்சு!!!!!!!!!!!

[நாளை தொடரும்!]

சாய்ராம்.





Read more...

Friday, January 19, 2007

"உன்னுடன் நானும்!"

"உன்னுடன் நானும்!"

நண்பர் நாமக்கல் [புது]கவிஞர் சிபியார் ஒரு கவிதை இட்டிருந்தார்! அதன் பாதிப்பில் விளைந்த என் சிந்தனை இதோ!

"உன்னுடன் நானும்!"

நீ கேட்ட அத்தனையும்
நானும் கேட்டேனடி
என்னுள்ளே!

நான் பட்ட பாட்டினை
நீயும் படவேண்டாமெனவே
கருவிலேயே உன்னைக்
கலைத்தேனடி!

உச்சி முகர்ந்து கொஞ்ச
இச்சை இருந்த போதும்
எச்சில் என உனைப் பேசும்
பொச்சருக்கு பயந்தேனடி!

நெட்டி முறித்துப் போடவே
நித்தமும் ஆசை இருக்குதடி
தோள்கள் தந்திடவே என்னுள்
பாசம் இருக்குதடி!

காதலை மதிக்காமல்
காமத்தை நினைந்துவிட்டு
மானத்தைத் தொலைத்தேனடி
காமுகன் ஒருவனால்!

என்னைக் கெடுத்த பின்னர்
அடுத்தவளைத் தேடி
அவன் போய்விட்டான்
இங்கே நான் சுமக்கிறேன்!

எப்படி உன்னை வெளிக்கொணர்வேன்
அப்படியென ஓய்ந்து போனேன்
எப்படியோ இது தெரிவதற்குள்
அப்படியே அழிப்பதே வழி!

நீ வளர்ந்து மரமாகி

நிழல் தரும் காலம்வரை

தாயிவளால் தாங்காதென

தங்கம் உனைத் "துடைத்து"விட்டேன்!

நீ யாரென்றே தெரிந்தது
உன்னை பதிவிட்ட[scan] பின்னரே!
பெற்றவர்க்குத் தெரிந்ததால்
குற்றமெனத் தொலைத்துவிட்டார்!

உடல்கள் அழியுமாம்!
உயிர்கள் ஓய்வதில்லையாம்
கற்றவர் சொல்லுகின்றார்- எனவே
பெற்றவள் உனைத் துறந்தேன்!

என்றேனும் ஓர்நாள் உனை
எங்கேனும் சந்திக்க நேர்ந்தால்
பட்டென்று ஒற் அறை
என் முகத்தில் அறைந்துவிடு!

அதுவரையில் என் மகளே
கருவறையில் நீ வேண்டாம்
கண்கலங்கி நிற்கின்றேன்
உன்னுடன் நானும்!

நீ கேட்ட அத்தனையும்
நானும் கேட்டேனடி
என்னுள்ளே!

Read more...

Wednesday, January 17, 2007

"ஷைலஜா" கேட்ட சேந்தனார் கதை!

"ஷைலஜா" கேட்ட சேந்தனார் கதை!

திருவெம்பாவைப் பதிவொன்றில், "ஷைலஜா" அவர்கள் சேந்தன் கதை பற்றிக் கேட்டிருந்தார்.
நானும், திருவெம்பாவையை முழுதும் இட்ட பின்னர் போடுவதாக வாக்களித்திருந்தேன்!

இப்போது அந்தக் கதை என்னவென்று பார்ப்போம்
!

பன்னிரு திருமுறைகளால் ஆன தேவாரத்தில், ஒன்பதாம் திருமுறை "திருவிசைப்பா" என வழங்கும் தித்திக்கும் தேமதுரத் தெய்வீகப் பாடல்கள்!
ஒன்பது அடியவர்கள் இதனைப் பாடியிருக்கின்றனர் இத்திருமுறையில்.
இதில் இரண்டாம் அடுக்கில் இருக்கும் பாடல்களின் சொந்தக்காரர்தான் நமது சேந்தனார்.

இவரைப் பற்றிச் சொல்லப்புகுமுன், நீங்கள் நமக்கெல்லாம் மிகவும் தெரிந்த பெயரான பட்டினத்தாரைப் பற்றிய கதையையும் சற்று அறிந்து கொள்ள வேண்டும்!
ஏனெனில்,
பட்டினத்தாரிடம் கணக்குப்பிள்ளையாய் இருந்தவர்தான் சேந்தனார்!

பட்டினத்தாரின் இயற்பெயர் திருவெண்காடர்.

இவர் ஒரு பெரிய செல்வந்தராக வாழ்ந்து வருகையில், தனக்குப் பிள்ளை இல்லையே என ஏங்க,
இறைவன் அவருக்கு ஒரு ஆண்மகவை அருள,
அவன் இளவயதில் வியாபாரத்துறையில் ஈடுபாடில்லாமல் இருக்கிறானே என தந்தை வருந்த,
பொருளீட்ட கடல் கடந்து கப்பலில் தன் மகனை அனுப்ப,
கொள்ளையர் நடுக்கடலில் மற்றெல்லாரின் எல்லா செல்வத்தையும் கவர்ந்து செல்ல,
இந்த தெய்வப்பிள்ளை மட்டும் வரட்டி மூட்டைகளாக,
தான் சம்பாதித்தது எனச் சொல்லி சாக்கு மூட்டைகளை வீட்டில் அடுக்க,
தந்தை திருவெண்காடர் மகனைக் கடிந்து கொள்ள,
ஓர் ஓலையைத் தந்தை கையில் அளித்து மகவு மறைய,
உள்ளே சென்று வரட்டிகளை உடைத்துப் பார்க்கையில்,
அவற்றினுள் நவமணிகளும் நிறைந்திருக்க,
வெளியே வந்து மகனைத் தேடி அரற்ற,
மகன் தந்த ஓலை நினைவுக்கு வர,
அதனைப் பிரித்துப் படிக்க,
"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!"
என அதில் எழுதியிருப்பதைக் கண்டு,
அலறி, உள்ளம் துடிக்க, அறிவு புலப்பட்டு,
அத்தனை செல்வங்களையும் தன் கணக்குப்பிள்ளை "சேந்தனிடம்" ஒப்படைத்து,
"இவற்றை ஏழைகளுக்குப் பிரித்துக் கொடு"
எனச் சொல்லி துறவறம் மேற்கொண்டது தான்,
சுருக்கமாக பட்டினத்தார் கதை!

இந்த சேந்தன் அப்படி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட செல்வங்களை, முதலாளிக்குத் துரோகம் இழைக்காமல் காப்பாற்றி வரும் வேளையில், அவர் இட்ட கட்டளைப்படியே, கருவூலத்தை ஏழைகளுக்கென திறந்து விடுகிறார்.
செல்வம் போய்விடுமே என்ற அச்சத்தில், திருவெண்காடரின் உறவினர்கள், சோழ மன்னரிடம், இல்லாது பொல்லாது எல்லாம் சொல்லி, சேந்தனார் சிறையில் தள்ளப்படுகிறார்!

சிலகாலம் சென்று, ஒற்றியூரில் இருக்கும் பட்டினத்தாரிடம், சேந்தனாரின் மனைவி, மக்கள் சென்று நடந்ததைக் கூறி முறையிட, பட்டினத்தார் இறைவனை வேண்டுகிறார். சேந்தனாரும் விடுவிக்கப் படுகிறார்!

பட்டினத்தாரின் காலடியில் வந்து விழும் சேந்தனாரைப் பார்த்து, "நீவிர் சிலகாலம் தில்லை [சிதம்பரம்] சென்று அங்கு விறகு விற்று, இறைவனை வணங்கி, இறையடியார்க்குத் தொண்டு செய்யுமாறு" பணிக்கிறார்.

அவ்வறே, சேந்தனாரும், குருவின் கட்டளையை மனதில் ஏற்று, தில்லைக்கு வந்து, விறகு வெட்டி, அதனை விற்று, தினம் ஒரு சிவனடியாருக்கு அமுது படைத்து வாழ்ந்து வருகிறார்.
இவரது சைவத்தொண்டினைக் கண்டு மகிழும் ஈசன், அம்பலவாணன், ஒரு நாள் தானே சிவனடியாராக வந்து, சேந்தனார் செய்து படைத்த "களியை" உண்டு மகிழ்கிறார்!
இவரது பெருமையை உலகுக்கு அறிவிக்க எண்ணிய இறைவன், தன் திருமேனி முழுதும் அந்த மிகுதியான "களியை" பூசி மறுநாள் அம்பலத்தில் காட்சி தருகிறார்!

அது மட்டுமா!

சேந்தனார் மேல் தனக்கிருக்கும் கருணையினைக் காட்டுமுகமாக, ஒரு திருவாதிரைத் தேர்த்திருநாள் அன்று, தேரை ஓடமுடியாமல் நிறுத்திவிடுகிறார் நடராசப் பெருமான்!
அனைவரும் என்ன செய்தும் கொஞ்சம் கூட நகரவில்லை தேர்!
சேந்தனார் வருகிறார்!
"திருப்பல்லாண்டு" பாடுகிறார்!
ஓடாத தேர் உருண்டு ஓடத் துவங்குகிறது, யாரும் வடம் இழுக்காமலேயே!!
இப்படியே நிலைக்கு வந்தும் சேர்கிறது!

இப்படி இறைவன் புகழ் பாடி இருந்த சேந்தனார், தில்லையிலிருந்து கிளம்பி, "திருவிடைக்கழி" என்னும் தலத்தை அடைந்து, அங்கு ஒரு மடம் நிறுவி, அங்கிருக்கும் முருகனை[....ஆம்!....தகப்பன்சாமியான முருகனேதான்!...]வழிபட்டு ஒரு நிறைவான தைப்பூச நன்நாளில் இறைவனுடன் சோதியாய்க் கலந்ததாக வரலாறு சொல்லுகிறது.


அந்த ஊர் இப்போது "சேந்தமங்கலம்" என வழங்கப்படுகிறது!

இதுதான் சேந்தன் கதை!

அவர் கண்ட தரிசனத்தை நமக்கும் இந்த "காணும் பொங்கல்" நாளில் அருள இறைவனை வேண்டி, அவன் "திருப்பல்லாண்டு" நாமும் பாடுவோம்!

திருச்சிற்றம்பலம்!

"சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு"
"கோயில் மன்னுக!" [தேரோட்டம் முடித்து கோவிலுக்கு திரும்பு ராஜா!]

"மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. 1

மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டுங் கொடுத்தும் குடிகுடி ஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்து
அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே. 2

நிட்டையி லாவுடல் நீத்தென்னை ஆண்ட நிகரிலா வண்ணங்கள்
சிட்டன் சிவனடி யாரைச் சீராட்டும் திறங்களுமே சிந்தித்(து)
அட்ட மூர்த்திக்கென் அகம்நெக ஊறும் அமிர்தினுக்(கு) ஆலநீழற்
பட்டனுக்(கு) என்னைத்தன் பாற்படுத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 3

சொல்லாண் டசுரு திருப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண் டிற்சிறை யும்சில தேவர் சிறுநெறி சேராமே
வில்லாண் டகன கத்திரன் மேரு விடங்கன் விடைப்பாகன்
பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 4

புரந்தரன் மாலயன் பூசலிட்(டு)

ஓலமிட்(டு) இன்னம் புகலரிதாய்
இரந்திரந்(து) அழைப்பஎன் னுயிராண்ட

கோவினுக்(கு) என்செய வல்லம் என்றும்
கரந்துங் கரவாத கற்பக

னாகிக் கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப்

பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே. 5

சேவிக்க வந்தயன் இந்திரன்

செங்கண்மால் எங்கும்திசை திசையென
கூவிக் கவர்ந்து நெருங்கிக்

குழாம்குழ மாய் நின்று கூத்தாடும்
ஆவிக்(கு) அமுதைஎன் ஆர்வத்

தனத்தினை அப்பனை ஒப்பமார்
பாவிக்கும் பாவகத்(து) அப்புறத்

தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 6

சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றதார் பெறுவார் உலகில்?
ஊரும் உலகும் கழற உளறி உமைமண வாளனுக்(கு)ஆம்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே. 7

சேலுங் கயலும் திளைக்கும் கண்ணார்இளங் கொங்கையில் செங்குங்குமம்
போலும் பொடியணி மார்பிலங் குமென்று புண்ணியர் போற்றிசைப்ப
மாலும் அயனும் அறியா நெறி தந்துவந்தென் மனத்தகத்தே
பாலும் அமுதமு ஒத்துநின் றானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 8

பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள்
ஆவிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 9

தாதையைத் தாளற வீசிய சண்டிக்(கு)இவ் அண்டத்தொடும் உடனே
பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும் போனகமும் அருளிச்
சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும்
பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 10

குழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணளவும் சென்று விம்மி மிகுதிரு ஆருரின்
மழவிடை யாற்கு வழிவழி யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த
பழஅடி யாரொடுங் கூடி எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 11

ஆரார் வந்தார்? அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்
நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே. 12

எந்தை எந்தாய் சுற்றும் முற்றும் எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்று
சிந்தை செய்யும் சிவன்சீர் அடியார் அடிநாய் செப்புறை
அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகழ் தாண்டுகொண் டாருயிர்மேல்
பந்தம் பிரியப் பரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே. 13.

-------

திருச்சிற்றம்பலம்


[அருணையாரும், மயிலை மன்னாரும் தினம் வந்தூ கேட்கிறார்கள், "இனி நாங்கள் வரலாம் அல்லவா" என!
இனிமேல் அவர்கள் ராஜ்ஜியம்தான்!]

Read more...

Tuesday, January 16, 2007

"பாடி, ஆடி, எழுந்தருளாயே!"

"திருவெம்பாவை-திருப்பள்ளி எழுச்சி"
மாணிக்கவாசகர் அருளியது.


ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்பேசும்போது
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென்
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
மாலறியா நான்முகனுங் காணா மலையினை
மானே நீ நென்னலை நாளை வந்துங்களைஅன்னே இவையுஞ் சிலவோ
கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 10


மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்ன
ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
பைங்குவளைக்கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
காதார் குழையாடப் பைம்பூண் கலனாட
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே
முன் இக்கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
செங்கணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய். 20


போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே !
அருணண் இந்திரன் திசை அணுகினன்
கூவின பூங்குயில்; கூவின கோழி
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
பூதங்கள் தோறும் நின்றாய்
பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
அது பழச்சுவையென, அமுதென
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டாவிழுப்பொருளே
புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்போக்குகின்றோம் அவமே
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே ! [30]


[ திருவெம்பாவை-திருப்பள்ளி எழுச்சி முற்றிற்று!]

"திருச்சிற்றம்பலம்"

Read more...

Thursday, January 11, 2007

"பள்ளி எழுந்தருளாயே" - 10 [30]

"பள்ளி எழுந்தருளாயே" - 10 [30]


"புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்
போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி

சிவன் உய்யக் கொள்கின்றவாறு" என்று நோக்கித்
திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்

அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்

அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் !
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே ! [10]

"தேவராலும், வேறு எவராலும் நெருங்கவும் முடியா
சிவனை, இப்பூவுலகில் வாழ்ந்திடும் அடியவரோ
மிக எளிதில் அடைதலைக் கண்டு, மண்ணுலகின்
வழியாகவே இவரை அடைதல் கூடும்" என உணர்ந்து


பூதலத்தில் பிறக்காமல் நாட்களை வீணாகக்
கழிக்கிறோமே என ஏங்கி, மீண்டும், மீண்டும்
திருமாலும் இப்பூவுலகில் அவதரித்து வருகின்றார்!
நான்முகனும் அவ்வண்ணமே ஆசைப் படுகின்றார்!

[மீனாகவும், ஆமையாகவும்,வராகமாகவும், வாமனனாகவும்,
நரசிம்மமாகவும், பரசுராமனாகவும், இராமனாகவும்,
பலராமனாகவும், கண்ணனாகவும் ஒன்ப்தவதாரம் எடுத்து
பாரிதனில் மீண்டும் மீண்டும் பிறந்தும், பக்தரை உய்வித்தாலும்,
மீண்டும் ஒருமுரை கல்கியாய் அவதரிக்க

எண்ணம் கொண்டிருப்பதும் இதனாலோ! ]

மிகவும் மலர்ந்திருக்கும், அளவற்ற மெய்க்கருணையுடன்
உமது திருமுகத்துடன் இம்மண்ணுலகில் வந்து
எம்மையெல்லாம் ஆட்கொள்ள வல்லமை படைத்தவனே!
எங்கும் நிறைந்திருக்கும் இனிய அமுதமே!

திருப்பெருந்துறைத் திருத்தலத்தில்
நிறைவாய் வீற்றிருக்கும் சிவபெருமானே!
பள்ளியினின்றும் எழுந்தருள்வாயே!

அருஞ்சொற்பொருள்:

புவனி - பூமி; மலரவன் - பிரமன்; அவனி - உலகம்.


[திருவெம்பாவை-திருப்பள்ளி எழுச்சி முற்றிற்று!]


"திருச்சிற்றம்பலம்"

Read more...

"பள்ளி எழுந்தருளாயே" - 9 [29]

"பள்ளி எழுந்தருளாயே" - 9 [29]

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்


மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே !
வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்


கண்ணகத்தே நின்று களிதரு தேனே !
கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்


எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய் !
எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே ! [9]

[இன்றைய விளக்கம் ஜி.ரா.வுக்காக!]

விண்ணுலகில் வாழ்ந்திடும் தேவர்கள் எவரும்
மன்னவன் உன்னைக் காண விரும்பினாலும்
பூதகணங்களைத் தாண்டி வாயிலை அடைய வேண்டும்!
வாயிலில் காவலிருக்கும் நந்தியை அணுகி
முறையிட வேண்டும் முதலில் அனுமதி கேட்டு!

அவர் சென்று உள்ளே பார்த்து சிவனிருக்கும்
சூழ்நிலை கண்டறிந்து, அவரிடம் விண்ணப்பித்து
பின்னரே உள்ளே செல்ல முடியுமா, முடியாதா
என்பதைத் தீர்மானிக்க முடிந்திடும்!
இப்படி அரியதாகிய மேலான மெய்ப்பொருளே!

அப்படிப்பட்ட நீயோ எங்களை உன் அடிமையாகக்
கொண்டு எங்களை வாழச் செய்திருக்கின்றாய்!
வளமான திருத்தலமாம் திருப்பெருந்துறையினில்
வாகாய் அமர்ந்திருப்பவனே!

எப்படி அமர்ந்திருப்பினும் அடிமைகளாம் எங்களை
எப்போதும் மறவாமல் எங்களின் கண்களுக்குள்ளேயே
நின்று, காணும் பொருள்களில் எல்லாம் உன் வடிவினைக்
காட்டிக் களிப்பினை வழங்கி அருளும் தித்திக்கும் தேனே!

பரந்தாமன் அன்று பாற்கடலில் தோற்றுவித்த
ஆலகால விடத்தை யாரும் தொட அஞ்சியபோது
பரிவுடன் அதனை வாங்கி தன்னுள் செலுத்திய பின்னர்
மீண்டும் அமுதமாய்த் தோன்றியவனே!

நினைத்தாலே நெஞ்சினில் இனிப்பாய் இனிக்கும்
திருவுருவ அழகினை உடைய கரும்பே!

உன்னை விரும்பி அன்பு செய்திடும் அன்பர்கள்
எண்ணங்களில் நீக்கமற நிறைந்தவனே!

இவ்வுலகம் யாவினுள்ளும் உறையும் அனைத்து
ஜீவராசிகளுக்கும் உயிராக உள்ளவ்னே!

தீதில்லா எங்கள் பெருமானே!
பள்ளி எழுந்தருள்வாயாக!

அருஞ்சொற்பொருள்:
நண்ணுதல் - நெருங்குதல்; விழு - மேன்மை; தொழுப்பு (தொழும்பு) -
அடிமைப்பணி; வண் - அழகிய; களி - மகிழ்ச்சி.

அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள் !

முருகன் அருள் முன்நிற்கும் !!!

Read more...

Wednesday, January 10, 2007

"பள்ளி எழுந்தருளாயே" - 8 [28]

"பள்ளி எழுந்தருளாயே" - 8 [28]


முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;
மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் !

பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே !

செந்தழல் புரை திருமேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி

அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே ! [8]

முதல் எனச் சொல்வதற்கும் முந்தையவனே!
இடைநிலை எனச் சொல்லப்படும் இடையவனே!
அனைத்தும் ஒடுங்கும் இறுதியானவனே!

இம்மூன்றையும் நிகழ்த்துவதாய்ச் சொல்லும்
பிரமன், திருமால், உருத்திரன் இவர்
மூவராலும் அறிய முடியாதவனே!
உன்னை வேறு எவரால் அறிந்திடல் ஆகும்?

இத்தகைய அருமை உடையவனாகிய நீயோ
இப்பூவுலகையே ஒரு பந்து போன்று
தன் விரல்களில் அணிந்திருக்கும் உமையுடன் சேர்ந்து
உன் அடியவர் வாழும் பழங்குடிசைகளில்
எழுந்தருளி அருள் புரிகின்றனை! பரம்பொருளே!

செக்கச் சிவந்த தழல் போலும் உன் திருமேனித்
தரிசனம் எங்களுக்குத் தந்து, கூடவே
திருப்பெருந்துறையினில் நீ அமர்ந்திருக்கும்
கோயில் தரிசனமும் விரைவினில் காட்டி,

சத்குருமூர்த்தியாய், அறிவுப் பிழம்பாய் நீயிருக்கும்
வேடமும் வலியவே வந்து காட்டி,
என்னையும் உன் அடிமையாக ஏற்றுக் கொண்டாய்!
எங்கும் நிறை அமுதமே! பள்ளி எழுந்தருள்வாயாக!

அருஞ்சொற்பொருள்:
மூவர் - பிரமன், விஷ்ணு, உருத்திரன்; குடில் - இல்லம்; தழல் - தீ; புரை - போன்ற.

Read more...

"பள்ளி எழுந்தருளாயே" - 7 [27]

"பள்ளி எழுந்தருளாயே" - 7 [27]

"அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு
அரிதென, எளிதென", அமரும் அறியார்,

"இது அவன் திருவுரு; இவன் அவன்" எனவே;
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்

மதுவளர் பொழில் திருஉத்தர கோச
மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !

எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்;
எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே ! [7]

அமரரும் அறியா அப்பரம்பொருளின் தன்மை
"பழம் போல சுவை மிக்கது" எனவும்
அது "அமுதம் போல இனிதானது" எனவும்
"அறிந்து கொள்ள அரிதானது" எனவும்
இல்லை அது "மிக மிக எளிதானது" எனவும்
விண்ணகத் தேவரும் அறிய மாட்டார்கள்!

ஆனால், "இதுவே அப்பரம்பொருளின் திருவுருவம்!"
"இவனே நாம் வணங்கும் சிவபெருமான்!" என
நாங்கள் சரியாக அறியும் வண்ணம் அருள் கொண்டு
எளிவந்த கருணையுடன் எங்கள் முன்னே வந்து
எங்களையும் அடிமையாக ஏற்றுக் கொண்டு
இந்த மண்ணிலே எழுந்தருளி இருக்கின்றாய்!

தேன் சொரியும் மலர்ச்சோலை சூழ்ந்த
திரு உத்தரகோச மங்கைத் திருத்தலத்தில்
எழுந்தருளி இருப்பவனே! சிவனே!
திருப்பெருந்துறை தலத்திற்கு அரசனே!

நீ எங்களை ஏவல் கொள்ளும் முறைமை எது?
அதனைக் கேட்டு அவ்வாறே ஒழுகுவோம்!
எங்கள் பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயாக!

அருஞ்சொற்பொருள்:
மது - தேன்; ஆறு - வழி/முறைமை.

Read more...

"பள்ளி எழுந்தருளாயே" - 6 [26]

"பள்ளி எழுந்தருளாயே!' - 6 [26]

பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும்

மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா !

செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே !

இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே ! [6]


இவ்வுலக வாழ்வின் பரபரப்பை விட்டொழித்து
ஒருமையான மனத்துடன், உட்காட்சியில்
உன்னையே கண்டுணர்ந்த மெய்ஞ்ஞானியர் எல்லாரும்,

இம்மண்ணுலகில் பிறந்தாலும், தம் பந்தக் கட்டுகளை
அறுத்தெறிந்த சிவயோகிகள் எல்லாரும்,

மனித இயல்பிலே நின்று, மையணிந்த கண்ணுடைய
பெண்களைப் போலவே தங்களை நினைந்து
தம் தலைவனாக உனைக் கொண்டு வணங்குகின்றனர்!

தலை மகளாம் மலைமகள் உமையின் மணவாளனே!
செந்நிறம் பொருந்திய தாமரைகள் மலர்கின்ற
வயல்கள் சூழ்ந்த திருநகராம் திருப்பெருந்துறையில்
எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே!

இந்தப் பிறவியினை நீக்கி எங்களுக்கு அருள்செய்து
எங்களை ஆட்கொண்டு அருள் புரியும்
எங்கள் பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயாக!

அருஞ்சொற்பொருள்:
பப்பு - பரப்பு; அணங்கு - பெண்; செப்புறு - செம்மை உடைய.

Read more...

"பள்ளி எழுந்தருளாயே!" - 5 [25]

"பள்ளி எழுந்தருளாயே!" - 5 [25]

"பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்
போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர்

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்

சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா !
சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து

ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

"எல்லாம் வல்ல இறைவன் பஞ்ச பூதங்கள் எனும்
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் இவைதனில்
நீக்கமறக் கலந்துள்ளான்; அவனுக்கு இறப்பெனும்
போக்கும் இல்லை; பிறப்பெனும் வரவும் இல்லை!" எனவே
கற்றறிந்த ஞானியர் அனைவரும் கூறுவர்.

அவர்கள் இவ்வண்ணம் பாடியும் ஆடியும் போற்றிடும்
துதிகளை விருப்பமுடன் பாடுதல் அன்றி
உனைக் கண்டறிந்தவர்களைப் பற்றி நாங்கள்
காதினாலும் கேட்டுத் தெரிந்ததில்லை!

இவ்வாறு எங்கள் சிந்தனைக்கும் அப்பாற்பட்டவனாய்
நீ இங்கு அரிதாய் நிற்கின்றாய்!
எங்கள் "கண்முன்னே எழுந்தருளி", நாங்கள்

அறிந்தும் அறியாமலும் செய்கின்ற குற்றங்கள்யாவினையும்
அறுத்தெறிந்து, எம்மையும் உன் அடியவர்களாக்கி
ஏற்று அருள் புரிந்திட அன்புடன் வேண்டுகிறோம்!

எங்கள் பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயாக!

அருஞ்சொற்பொருள்:
சீதம் - குளிர்ச்சி; ஏதம் - குற்றம்/துன்பம்.

Read more...

Tuesday, January 09, 2007

"பள்ளி எழுந்தருளாயே!" - 4 [24]

"பள்ளி எழுந்தருளாயே!" - 4 [24]

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;

துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !

என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

இனிய நாதம் ஒலிக்கும் வீணையும், யாழும்
ஏந்தி இன்னிசைக்கும் கூட்டம் ஒரு புறம்;

வேத மந்திரங்களுடன் பல்வேறு
துதிப்பாடல்களை ஓதிடும் கூட்டம் ஒரு புறம்;

நெருங்கித் தொடுக்கப்பட்ட மலர் மாலைகளை
கையில் ஏந்தி நின்றிடும் கூட்டம் ஒரு புறம்;

அன்பு மிகக்கொண்டு அழுது கண்ணீர்விடுபவரும்
மெய்மறந்து தள்ளாடுபவரும் கூட்டம் ஒரு புறம்;

இருகை கூப்பி தலை மேல் உயர்த்தி அரகரவென
அஞ்சலி செய்திடும் கூட்டம் ஒரு புறம்;

அருள்மிகு திருப்பெருந்துறையினில்
அழகுற வீற்றிருக்கும் சிவபெருமானே!

இவ்வண்ணம் பெருமை வாய்ந்த அடியவர்
உன் திருச்சந்நிதி முன் கூடியுள்ளார்!

தகுதி சிறிதேனும் இலாத நானும்
இவர்கள் நடுவே நின்றிருக்கிறேன்!

என்னையும் ஒரு பொருட்டாக அருள் செய்து
ஆட்கொண்ட எந்தன் பெருமானே!

பள்ளி எழுந்தருள்வாயே!

['தகுதி சிறிதும் இலாத நான்' எனச் சொல்லி, அதே கையோடு, இத்தனை தகுதி வாய்ந்தவரையும் புறந்தள்ளி, எனக்காக எழுந்திரு எனக் கேட்கும் உரிமை! இவனன்றோ 'எமக்கெளியன்!']

அருஞ்சொற்பொருள்:
துன்னிய - செறிந்த; சென்னி - தலை; அஞ்சலி - வணக்கம்.

Read more...

Monday, January 08, 2007

"பள்ளி எழுந்தருளாயே!" - 3 [23]

"பள்ளி எழுந்தருளாயே!" - 3 [23]

கூவின பூங்குயில்; கூவின கோழி;
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;


ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்

தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் !
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !

யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் !
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே ! [3]

அழகிய குயிலகள் இனிமையாகப் பாடின;
கோழியினங்களும் கூவிவிட்டன;
சிறகடித்துப் பறக்க பறவைகளும் சலசலத்தன;

திருக்கோயிலில் சங்குகளும் ஒலித்தன;
வானத்து விண்மீன்களும் தம்மொளி குன்றின;
உதயக் கதிரொளியும் ஒன்று சேர்ந்தன;

தேவனே! எம்மீது விருப்பம் கொண்டு
நல்ல வீரக்கழல் அணிந்த உனது இரு
திருவடிகளையும் எங்களுக்குக் காட்டுவாயாக!

எவராலும் அறிந்துகொள்ள அரிதானவனே!

அடியவராம் எங்களுக்கு மட்டும்
அனுபவித்தற்கு எளிமையானவனே!

திருப்பெருந்துறையில் சீரோடு உறையும்
சிவபெருமானே! பள்ளி எழுந்தருள்வாயாக!

அருஞ்சொற்பொருள்:
குருகு - பறவை; ஓவுதல் - மறைதல்; தாரகை - நட்சத்திரம்; ஒருப்படுதல் - முன்னேறுதல்/மேலோங்குதல்.

Read more...

Sunday, January 07, 2007

"பள்ளி எழுந்தருளாயே" - 2 [22]

"பள்ளி எழுந்தருளாயே" - 2 [22]

அருணண் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய்
அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின்


கருணையின் சூரியன் எழ எழ, நயனக்
கடிமலர் மலர, மற்று அண்ணல் அங்கண்ணாம்

திரள்நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் !
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !

அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே !
அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே !

இந்திரன் திசையாம் கிழக்கில் அருணோதயம் அணுகியது.
விடியலின் செந்நிறம் படர்கிறது.
இருளும் அகன்று சென்றுவிட்டது.

உன் திருமுகமாம் உதயகிரியில் உந்தன் கருணை எனும்
சூரியனின் உதயமும் எழுகின்றது
அதே சமயத்தில் மலர் போன்ற உன் கண்களும்
மணமுள்ள மலர் போல மலர்கின்றன.

அவைகளைக் கண்டு பரவசமுற்று ஆனந்தத்தால்
தேனினை நாடும் வண்டுகள் போல
அடியவர்களின் கூட்டம் திரளாக வந்து
தோத்திர முழக்கம் செய்கின்றனர்.


இதனை உணர்வீர்! திருப்பெருந்துறையில் எழுந்தருளி
திருக்கோயில் கொண்டருளும் சிவபெருமானே!
அருளெனும் செல்வத்தை தருவதற்கென மலை போலும்
ஆனந்தத்தை ஓயாது வந்து கொண்டிருக்கும்

அலைகடல் போல் தருபவனே! எம்மீது
கருணை கொண்டு திருப்பள்ளி எழுந்தருள்வாயே!

அருஞ்சொற்பொருள்:
அருணன் - சூரியனின் தேர்ப்பாகன் (காலையில் சூரியன் தோன்றும் முன்
தோன்றும் செந்நிறம் அருணோதயம் எனப்படும்); இந்திரன் திசை - கிழக்கு;
நயனம் - கண்; கடி - மணம்; அறுபதம் - வண்டு.

Read more...

Saturday, January 06, 2007

"பள்ளி எழுந்தருளாயே" - 1 [21]

"பள்ளி எழுந்தருளாயே" - 1 [21]

திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி
(திருப்பெருந்துறையில் அருளியது -எண்சீர் கழி நெழிலடி ஆசிரிய விருத்தம் )


இறைவன் பெருமையைப் பாடியும், அவனைக் காண நீராடியும் முடித்த பெண்டிர், முனிவர், சிவனடியார்கள் அனைவரும் இப்போது திருப்பெருந்துறையில் அருள் புரியும் சிவனைத் துயிலெழச் செய்ய விரைகின்றனர்! அதே போற்றியும், திருவடிகளும் இங்கும் தொடர்கிறது!

நாமும் அங்கு செல்வோம்!



திருச்சிற்றம்பலம்


போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே !
புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு

ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்;

சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே !

ஏற்றுயர் கொடியுடையாய் ! எனையுடையாய் !
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே ! 1.

என் வாழ்விற்கு முழுமுதல் பொருளாக ஆனவனே!
உன்னைப் போற்றுகின்றேன்!

பொழுது விடிந்து விட்டது! மலர் போன்ற உன்
திருவடிகளுக்கு இணையான மலர் கொண்டுவந்து
அத்திருவடிகளில் தூவினோம்!

அதனால் மனமகிழ்ந்து உன் பூமுகத்தில் மலர்ந்த
அழகிய புன்னகையைக் கண்டதும்
அதனை மனதில் நிறுத்தி மீண்டும்
உன் திருவடிகளையே வணங்குகிறோம்!

சேற்றில் மலர்ந்து தேன்இதழ் விரிக்கும் தாமரைகள்
நிறைந்த குளுமையான வயல்கள் சூழ்ந்த
திருப்பெருந்துறையில் அமர்ந்த சிவனாரே!
உயர்த்திய காளைக் கொடி உடையவரே!

எங்களையும் அடிமையாகக் கொண்டவரே!
எங்கள் பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயே!


அருஞ்சொற்பொருள்:
சேறு - கள்/ தேன்; தண் - குளிர்; ஏறு - இடபம்.

Read more...

Friday, January 05, 2007

"ஆடேலோர் எம்பாவாய்" - 10 [20] இரண்டாம் பகுதி

"ஆடேலோர் எம்பாவாய்" - 10 [20] இரண்டாம் பகுதி

பதின்மூன்றாம் பாடல் மனதைக் கவர்ந்தது போலவே, இப்பாடலும் உருக்கியது!

இப்பாடலில் எட்டு அடிகள்!
அதில் முதல் ஏழு அடிகளில் போற்றப்படுவது ஈசன் திருவடிகள்!


அதைப் பற்றிய விளக்கம் ஒன்றை ஓர் உரையில் படித்தேன்.

சைவ சித்தாந்தத் தத்துவத்தை அப்படியே இந்த ஒரு பாடலில் பிழிந்து தந்திருக்கிறார், வாதவூரார்!
நான் அறிந்ததை இங்கு உங்களுடன் பங்கிட விழைகிறேன்!


திருவெம்பாவையின் முதல் பாடலில் "ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி" என இறைவனைப் புகழ்ந்த மாணிக்கவாசக சுவாமிகள், இந்த இருபதாம் இறுதிப் பாடலில் ஆதிக்கு ஒரு வணக்கம், அந்தத்திற்கு ஒரு வணக்கம் என முதல் இரு அடிகளில் போற்றுகிறார்.

அடுத்த ஐந்து அடிகளில், ஒரு ஐந்து நிகழ்வுகளைச் சொல்லி, அதற்கும் இத் திருவடிகளையே போற்றுகிறார்!

இவை என்னென்ன எனப் பார்க்கலாம்!

ஐந்தொழில் புரிய திருவுளம் கொண்டு இந்த சிவம் என்னும் சோதி எல்லாவற்றிற்கும் பிறப்பிடமான "ஆதி" [முதல்]ஆயிற்று.

இந்த ஐந்து தொழில்களும் முடிந்த நேரத்திலோ, அனைத்தும் ஒடுங்கும் 'அந்தம்" [இறுதி] ஆயிற்று!

முதலும், முடிவும் இல்லாத முழுமுதற்பொருள், நமக்குக் கருணை செய்யும் பொருட்டு, ஐந்தொழில் புரிந்து ஆதியும், அந்தமும் ஆயிற்று!

அப்படிப்பட்ட, ஆதியும், அந்தமும் நம் சிவனாரின் சேவடிகளே!
அவை நம்மைக் காத்து அருளட்டும்!

இப்போது இந்த ஐந்தொழில்களைப் பார்ப்போம்!

முதலில் வருவது "படைப்பு"... தோற்றம்!


தோன்றிய ஒன்று நல்ல முறையில் காக்கப்பட வேண்டுமேயானால், இன்பம்.....போகம் துய்க்க வேண்டும்! இதுவே "காத்தல்"!


பிறந்தவை யாவும் ஒரு நாள் அழியத்தான் வேண்டும்! இந்த "அழித்தல்" ...ஈறு எனப்படும்!

இம்மூன்றும் தவிர, வேறு இரு தொழில்களும் எல்லாம் வல்ல இறைவனுக்கு உண்டு!

ஒன்று "மறைத்தல்"...காணாமை! தன் திருவடிகளை மறைத்து சோதிப்பிழம்பாய், மாலறியா, நான்முகனும் 'காணா' மலையாக நின்றது குறிப்பால் காட்டப் பட்டது.

அடுத்த, ஐந்தாவது தொழில், "அருளல்"....உய்ய ஆட்கொண்டு அருளுவது! நாம் கடைத்தேற வகை செய்வது!

இந்த "படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்" என்னும் ஐவகைத் தொழில்களையும் திருவடிகளே செய்யும்!

இப்படி ஏழடியிலும், இறைவன் திருவடிகளே போற்றப்பட்டது.


எட்டாம் அடியில் இம்மாதத்திற்கு உகந்த "மார்கழி நீராடல்" போற்றப்பட்டது!

இப்போது மீண்டும் ஒருமுறை பாடலைப் பார்ப்போம்!


போற்றி அருளுக நின் "ஆதியாம்" பாதமலர்
போற்றி அருளுக நின் "அந்தமாம்" செந்தளிர்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் "தோற்றமாம்" பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் "போகமாம்" பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் "ஈறாம்" இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் "காணாத" புண்டரிகம்

போற்றி யாம் உய்ய ஆட்கொண்டு "அருளும்" பொன்மலர்கள்
போற்றியாம் "மார்கழி நீர் ஆடேலோர்" எம்பாவாய். 20


அருவம், அருவுருவம், உருவம் மூன்றும் கடந்த இறைவனாரின் ஞானசொரூபத்தில்,
பெண்ணாகி, ஆணாகி, அலியாகி நின்ற நிலையில்,

விண்ணாகி, மண்ணாகி, இத்தனையும் வேறாகி கண்ணார் அமுதமாய் நின்ற தோற்றத்தில்,
திருவடிகளும் ஒரு ஞான பாவனையாகவே அமையும்.

உண்மையில் உருவமில்லாதவன் அவன்!

இதனை உணர்ந்த ஞானமே அம்பலம்.... திருக்கோயில்.... அண்ணாமலை !

அதில் விளையும் ஆனந்தமே இறைவனாரின் திருக்கூத்து!

இப்பேரானந்தத்தை நாளை முதல், நம்முள் "திருப்பள்ளி எழுச்சி" பாடுவோம், இன்னும் பத்து நாட்களுக்கு!


எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

திருச்சிற்றம்பலம்.

Read more...

Wednesday, January 03, 2007

"ஆடேலோர் எம்பாவாய்" - 10 [20]

"ஆடேலோர் எம்பாவாய்" - 10 [20]

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்


போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்

போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய். 20


[கரையேறிய பெண்கள் காலைக்கருக்கலில் நிமிர்ந்து பார்க்கிறார்கள்!
நெடிதுயர்ந்த கோபுரம் மங்கலாகத் தெரிகிறது!
வழக்கம் போலவே, உயர்ந்த உருவத்தோடு அந்தச் சிவனாரே தெரிகின்றனர்!
ஆனால், இதென்ன! ஒன்றும் சரியாகத் தெரியவில்லையே!
மேலே குறுகிய உடலோடும் கீழே அகன்று விரிந்த பாதங்கள் தெரிகின்றன!
அன்பு மேலிட்டு அத்திருப் பாதங்களைப் போற்றிப் பாடத் துவங்குகின்றனர்!
எல்லாம் போற்றி முடித்த பின்னர் திரும்பிப் பார்த்தால்......
இன்னும் ஒரு பெண் மட்டும் கரையேறாமல் குளித்துக் கொண்டிருக்கிறாள்!
அவளையும் அழைக்கின்றனர்!]


[மேலே சொன்னது என் மனதில் தோன்றிய கருத்துகள்! கற்பனை!]

அனைத்திற்கும் தொடக்கமான உன் மலர்ப் பாதங்கள் எமக்கு அருளட்டும், போற்றி!

அனைத்தும் முடிவாக வந்தடையும் சிவந்த தளிர் போன்ற பாதங்கள் அருளட்டும், போற்றி!

அனைத்து ஜீவராசிகளும் பிறக்கும் இடமான அந்த பொற்பாதங்களே, போற்றி!

அனைத்து உயிர்களும் இன்பம் துய்க்க அருளும் மலர்ப்பாதங்களே, போற்றி!

அனைத்து உயிர்களுக்கும் இறுதியாய் விளங்கும் இணையான இரு பாதங்களே, போற்றி!

அரங்கனும், அரனும் தேடியும் காணமுடியாத திருவடித் தாமரைகளே, போற்றி!
அனைவரும் முத்தியடைய ஆட்கொண்டருளும் பொன்மலர்ப் பாதங்களே, போற்றி!

அனைவரும் எழுந்தபின்னரும் இன்னுமா மார்கழி நீராடுவாய்? பாடுவோம் நாம், போற்றி!

அருஞ்சொற்பொருள்:
ஈறு - முடிவு; புண்டரிகம் - தாமரை

[இதற்கு இன்னொரு ஆழ்விளக்கமும் உண்டு!
அது நாளை!]


திருச்சிற்றம்பலம்!

Read more...

"ஆடேலோர் எம்பாவாய்" - 9 [19]

"ஆடேலோர் எம்பாவாய்" - 9 [19]

[குளியாட்டம் நிகழ்ந்தவரை ஒரே கும்மாளமாயிருந்த பெண்கள், சிவனாகவே தாங்கள் கண்ட இப்பூம்புனலை விட்டுக் "கரை" ஏறுகிறார்கள்!
நிகழ்வுலக மயக்கம் இவர்களைப் பீடிக்கிறது!
அதினின்று விடுபடவும் சிவனாரையே வேண்டுகின்றனர்!
நாகரிகம் மாறி வருகின்ற இக்காலத்திற்கும் பொருத்தமான ஒரு பாடலை அன்றே இப்பெண்கள் பாடியிருக்கிறார்கள்!]



உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்


எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க

எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க

இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். 19




எல்லாம் வல்ல எங்கள் பெருமானே!
எங்களுக்கெல்லாம் இப்போது ஓர் புது அச்சம் வந்திருக்கிறது!


"உன் கைப் பிள்ளை உனக்கே உரியது! நும் பொறுப்பே அவையெல்லாம்"
என்று,எப்போதும் வழங்கும் பழமொழி யாம் கேட்டிருக்கிறோம்!


[கரையேறும் இந்நேரத்தில்] அதனை மீண்டும் ஓர்முறை
உம்மிடம் நினைவூட்ட வேண்டுமோவென எமக்குத் தோன்றுகிறது!

எனவே உன்னிடம் ஓர் விண்ணப்பம் வைக்கின்றோம்!
நாங்கள் சொல்வதைக் கருணையுடன் கேட்டருள்வாயாக!

உன் அடியவர் என்பரைத் தவிர்த்து வேறொருவர் தோள்களையும்
எம்மார்பில் நாங்கள் தழுவுதல் இல்லாமல் போகட்டும்!

உம் பணியே அல்லாது வேறெந்தத் தோழிலும்
எம் கைகள் செய்யாதிருக்கட்டும்!

வேறெதுவும், இதைத்தவிர, இரவும், பகலும்
எம் கண்கள் கண்டு மயங்காதிருக்கட்டும்!

யாம் வேண்டிடும் இந்தப் பரிசுகளை மட்டும்
எம் தலைவனாம் நீவிர் அருள் புரிவீரேல்,

கதிரவன் இனி எத்திசையினில் உதித்தால்தான்
எமக்கென்ன குறை? எனச் சொல்லி

ஆடி எழுந்திரடி என் பெண்ணே!


அருஞ்சொற்பொருள்:
கொங்கை - மார்பகம்; கங்குல் - இரவு; பரிசு - வகை; ஞாயிறு - கதிரவன்.

Read more...

Monday, January 01, 2007

"ஆடேலோர் எம்பாவாய்" - 8 [18]

"ஆடேலோர் எம்பாவாய்" - 8 [18]

[மழை வந்ததும் இன்னொரு ஆசை பிறக்கிறது இப்பெண்டிருக்கு! பூம்புனலில் பாய்ந்து நீரில் துழாவி,அடிப்பக்கம் வரை செல்ல! மேலே வெளிச்சம்; கீழே இருள்! இடையினில் இரண்டும் கலந்த ஒரு தோற்றம்! கற்பனைச் சிறகு விரிந்து பறக்கிறது! இறைவனை இம்மூன்றாகவும் பாடி மகிழ்கின்றனர்!
எங்கும் இறைவன்! எதிலும் இறைவன்! என்னே இவர் மாண்பு!]

இத் திருவாதிரைத் திருநாளில் நாமும் அவன் கழலடி பணிவோம்!!

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்


கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்


பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்

கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 18


திருவண்ணாமலையினிலே நம் இறைவன்
பேரொளிப் பிழம்பாய் நிற்கின்றான்!

அவன் திருவடித் தாமரை பணிந்து
வணங்கிடும் விண்ணவரின் மகுடங்களில்
விளங்கிடும் அணிமணி வைரங்கள்
எம்பிரானின் திருவடிப் பேரொளிமுன்
ஒளியிழந்து, தம் பெருமை இழந்து
மங்கித் திரிதல் போல,

காரிருள் நீங்கிடும் வண்ணம்
கதிரவன் எழுந்ததும் இங்கே
விண்மீன்கள் எனும் தாரகைகள்
தம் ஒளியிழந்து மறைந்தன!
பொழுதும் விடிந்து விட்டது!

பெண்ணென்றால் பெண் எனவும்,
ஆண் என்றால் ஆண் எனவும்,
இரண்டுமற்ற அலி எனவும்
அவன் இங்கே விளங்கிடுவான்!
[எப்படி இது சாத்தியமெனின்],

இடையறாது ஒளிவீசும் ஆதவனும்
வெண்மதியும், ஒளிர்தாரகையும்
விளங்கிடும் வானம் போலவும்,
அவற்றால் பயன்பெறும் நிலம் போலவும்,
இவை இரண்டிற்கும் வேறான அனைத்துமாகவும்
விளங்கி நின்று, நம் கண் முன்னே
காட்சி தரும் நிறையமுதமாகவும்
நிற்கின்ற, எம் தலைவனின் கழல் பூண்ட
திருவடிகளினைப் பாடிப் பாடி
மலர் நிறைந்து விளங்குகின்ற
இந்த நீரினில் நீயும் மேலும் கீழும்
பாய்ந்து ஆடடி என் பெண்ணே!

அருஞ்சொற்பொருள்:
வீறு - ஒளி/பெருமை; கார் - இருள்; கரப்ப - நீக்க; தாரகை - விண்மீன்;
பிறங்கொளி - மின்னும் ஒளி.

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP