Sunday, January 16, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம்!- 1

சென்ற ஆண்டில் ஐந்தே ஐந்து பதிவுகள் மட்டுமே! எழுதவில்லையா என நண்பர்களிடமிருந்து கேள்விகள்! எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். வேலைப் பளுவின் காரணமாக அதையெல்லாம் இங்கே பதிய நேரமில்லை!
அதனால்.......!!!
இந்த ஆண்டில் அநேகமாக தினம் ஒரு பதிவு வரக்கூடும்!
முதன் முதலாக, எனது அருமை நண்பன் 'மயிலை மன்னார்' எனக்குச் சொல்லிய 'கந்தர் அநுபூதி' விளக்கத்துடன் இந்த ஆண்டைத் துவக்குகிறேன்!அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்!
**************

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம்!

எனது கேள்விகளுக்கெல்லாம் விடையாக வந்து உதவும் எனது "நண்பன்"
மயிலை மன்னார், நாயர், சாம்பு சாஸ்திரிகள் பங்குபெறும் குறிப்புகளை இந்த
இழையில் அளிக்க நினைக்கிறேன். அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்!

[மயிலை மன்னார் பற்றிய ஒரு சிறு குறிப்பு! என்னுடைய பால்ய சிநேகிதன். தொடக்கப் பள்ளியில் படித்த காலத்தில் நல்ல நட்பு மலர்ந்து, அது இன்றும் தொடர்கிறது! மயிலாப்பூர் பகுதியில் ஒரு பேட்டை ரவுடியாக இவன் காலம் திசை மாறிப் போனாலும், எங்களது நட்பு இன்னமும் அப்படியேதான்
இருக்கிறது! பார்ப்பதற்கு முரடன் போல இருந்தாலும், மிகப் பெரிய விஷயங்களையும் அநாயசமாகச் சொல்லிவிடுவான்! நாங்கள் வழக்கமாகச் சந்திக்கும் இடம் [எப்போவாவதுதான்!] மயிலை வடக்கு மாட வீதியில் இருக்கும் நாயர் டீக்கடை! நாயரின் மசால் வடையும் டீயும்
உலகிலேயே சிறந்த இரண்டு என நான் அடித்துக் கூறுவேன்! சாம்பு சாஸ்திரிகள் என்னும் மிகப் பெரிய வேத பண்டிதர் ஒருவர் இந்த மன்னாரின் பேச்சுக்கு அடிமை! இவனுக்கும் அவர் மீது நல்ல மதிப்பு உண்டு. இந்தச் சிறு குறிப்புடன் மேலே பயணிப்போம்! வணக்கம்.]

"கந்தர் அநுபூதி" -- 1

வழக்கம் போலவே கலகலப்புக்குக் குறைவில்லாது மயிலாப்பூர் மாடவீதி நிறைந்திருந்தது!

'மன்னாரைப் பார்த்தியா?' எனக் கேட்டபடியே நாயர் கடைக்குள் நுழைந்தேன்.

'ஞான் கண்டிட்டில்லா. எந்து சமாச்சாரம்?' என அக்கறையுடன் கேட்டான் நாயர்.

'ரெண்டு மசால்வடை, ஒரு டீ கொண்டா. சொல்றேன்' எனச் சொல்லிலிவிட்டு ஒரு ஓரமாக அமர்ந்தேன்.

சற்று நேரத்தில் சூடான மசால்வடை, டீ சகிதமாய் என் முன் வந்து, டேபிளில் வைத்துவிட்டு, 'இப்ப பறையு!' என்றான்.

'ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அதான்' எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஒரு ஆட்டோவில் வந்து அலட்சியமாக இறங்கி உள்ளே வந்தான் மயிலை மன்னார்! என்னைப் பார்த்ததும் நேராக வந்தவன் என் முகத்தைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தான்.

'ம்ம்... இன்னா சமாச்சாரம்? சொல்லு!' என அமர்த்தலாகக் கேட்டான்.

ஒண்ணுமில்லை. பொங்கலும் அதுவுமா நல்ல நாளில் உன்னிடம் ஏதாவது கேட்கலாமே என வந்தேன். அதுக்காக நீதான் புதுசா ஒண்ணு சொல்லணும்' என்றேன்.

'இவ்ளோதானே! அல்லாம் நல்லபடியா நடக்கும்! கவலிய வுடு! எத்தத் தொடங்கினாலும் புள்ளையாரை வைச்சுத்தான் தொடங்கணும். அதுக்காப்பால, ஒனக்கு ரொம்பவும் இஸ்டமான முருகனைச் சொல்லணும்.

அதுனால, கந்தரனுபூதி பத்தி சொல்றேன் கேட்டுக்கோ. அருணகிரிநாதரு முருகனைக் கும்பிட்டு ஆருக்கும் கெடைக்காத ஒரு அற்புதமான உணர்வை அடைஞ்சாராம். அதுக்கு அனுபூதின்னு பேரு.

'அனு'ன்னா ஒரு விசயத்த உணர்றபோது உள்ளுக்குள்ள வர்ற ஒரு ஆனந்தம்.
'பூதி'ன்னா இந்தப் பஞ்சபூதத்த இன்னான்னு அறிஞ்சுகினு கெடைக்கற ஞானம்!
ஆகக்கூடி, 'அனுபூதி'ன்னா ஞானத்த உணர்றதுனால கெடைக்கற ஆனந்தம்னு சொல்லலாம்.

இதெல்லாம் தெரியலைன்னாலும் கூடப் பரவாயில்ல. இத்தப் படிச்சாலே, ஒனக்குள்ள ஒரு ஆனந்தம் பொறக்கும்! அதுக்காவ மட்டுமே இத்தப் படிச்சாலே ஒனக்கும் ஒரு தெளிவு கெடைக்கும். அதுனாலத்தான், இத்தச் சொல்லலாம்னு நெனைக்கறேன்! சரி, ஒங்கிட்ட அந்தக் குட்டிப் பொஸ்தவம்
இருக்குமே! அதுலேர்ந்து அந்த மொதப் பாட்டைப் படி!' என்றான் மயிலை மன்னார்.

படித்தேன்!

திருச்செந்திலாதிபன் துணை
கந்தரநுபூதி - 1

'காப்பு'

நெஞ்சக் கனகல் லுநெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமா லைசிறந் திடவே
பஞ்சக் கரவா னைபதம் பணிவாம்.

[ நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக் கர ஆனை பதம் பணிவாம்.]

"எப்ப ஒனக்கு ஒரு கஸ்டம் வந்தாலும் நீ இன்னா பண்றே? ஒடனே 'முருகா ஒன்னிய வுட்டா கெதியில்ல எனக்கு! நீதான் காப்பாத்தணும்'ன்னு ஒரு சவுண்டு வுடறே! அவனும் இன்னா பண்றான்?
'நான் இருக்கக்கொள்ள ஒனக்கு எதுக்குரா பயம்?'னு அந்த ஆறுமுகசாமி ஆறுதலா வந்து ஒனக்கு ஒரு தெளிவைக் குடுக்கறாரு!

அந்த முருகன் மேல நம்ம அருணகிரிநாதரு பாட்டாலியே ஒரு மாலை கட்டறாரு. தானா அப்பிடியே வந்து வுளுந்த வார்த்தையால கட்டின மாலை! இந்த மாலையப் படிச்சா இன்னா ஆவும்னும் சொல்றாரு.

பலான பலான விசயத்தையெல்லாம் பார்த்துப் பார்த்துக் கல்லாயிப் போயிட்ட ஒன்னோட மனசு, அப்பிடியே ஒரு பாகு மாரி கொளைஞ்சு போறமாரி ஆயிருமாம்...இத்தப் படிச்சாலே..... அந்தமாரி ஒரு மாலை!

அப்பிடி எளுதின இந்தப் பாட்டுல்லாம் எப்ப ஒசந்ததா ஆயிப்போவும் தெரியுமா?
நாலு கையோட கூட, அஞ்சாவது கையா ஒரு தும்பிக்கையும் வைச்சுக்கினு ஆத்தங்கரையிலியும், அரசமரத்தடியிலியுமா குந்திக்கினு க்கீறாரே, அந்தப் புள்ளையாரோட காலைக் கெட்டியாப் பிடிச்சுக்கினு தொடங்கற எந்தக் காரியமும் கெலிச்சிரும்! அதுனால, அவரோட காலடியுல போயி
இத்தை வைச்சு,'நீதான் இத்த நல்லபடியா ஆக்கித் தரணும்'னு தொடங்கறாரு. அதான், இதுக்கு 'காப்புச் செய்யுள்'னு பேரு.

இப்பவும் அப்பிடித்தானே இன்னைக்குன்னு பாத்து, சினிமா, பீச்சுன்னு அலையாம எங்கையுல வந்திருக்கே? ஒரு கொறைவும் வராது" என ஆதரவாய் என்னைத் தட்டிக் கொடுத்தான் மயிலை மன்னார்.

'கணபதி எல்லாம் தருவான்!' என்னும் புத்துணர்வோடு மேலும் கேட்கத் தயாரானேன் நான்!
************
[தொடரும்]
வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!
****************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP