Friday, April 28, 2006

வெற்றி முரசு


கேப்டன்" விஜயகாந்த்தின் பேட்டி - கோடை வெயிலுக்குச் சற்றும் சளைக்காத சூட்டுடன்....

உங்கள் வேட்பாளர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்தீங்க?

"என்னோட கட்சி வேட்பாளர்கள் எளிமையானவர்கள். திறமையானவர்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள். இவங்க உங்க கூடவே இருந்து, உங்களில் ஒருத்தராக இருப்பாங்கன்னு மக்கள்கிட்டே பகிரங்கமாகச் சொல்லிட்டு வர்றேன். உண்மை, உழைப்பு, நேர்மை, கல்வித்தகுதி எல்லாத்தையும் கவனத்தில் வச்சேன். டாக்டர்கள், என்ஜினீயர்கள், பட்டம் பெற்றவர்கள் இப்படி பலவிதமாக களத்தில் இருக்காங்க. பெண்களுக்குப் பெரிய பங்கு இருக்கு."

மிகவும் ஆரம்ப நிலையில் இருக்கிற ஒரு கட்சி. அதோடு தேர்தல் களத்துக்கும் வந்தாச்சு. 234 தொகுதிக்கும், வேட்பாளர், பயணம், பிரசாரம், மேடைகள், கூட்டங்கள் மலைப்பாக இருக்கு. செலவுகளை எப்படிச் சமாளிக்கிறீங்க?

"நான் சினிமாவில் நடிச்சு வந்ததெல்லாம், மக்கள் என்மேல் வைச்ச அன்பினால் வந்த பணம். அதையும் கட்சி நடத்த செலவழிக்கிறேன். அதுவும் பெரிய பணம் அல்ல. கட்சிக்காரர்கள் முடிந்த அளவுக்குத் தங்களுடைய பணத்தைக் கட்சிக்கும், தேர்தலுக்கும் செலவழிக்கிறாங்க. பூந்தோட்டத்திற்கு எதுக்கு சார் விளம்பரம்? நல்லது செய்கிறவங்களுக்கு ஓட்டா? நாட்டை ஏமாத்தறவங்களுக்கு ஓட்டான்னு கேக்குறேன். இதுக்கு எதுக்குப் பணம்?"

திடீர் தலைவர்னு உங்களைப் பற்றிய கிண்டல் இப்பவும் இருக்கிறதே?

"இப்படிப் பேசுறவங்களுக்கு நான் சொல்கிற அறிவுரை ஒன்றே ஒன்றுதான். உங்கள் மூளையைக் கொஞ்சம் பயன்படுத்தி, நடந்த விஷயங்களை யோசிச்சுப் பாருங்க. அறிஞர்அண்ணாவிற்குப் பிறகு, கலைஞர் முதல்வர் ஆனது திடீர் என்றுதானே?

சோனியாகாந்திதான் பிரதமர்னு நினைச்சுதானே மக்கள் ஓட்டுப்போட்டாங்க. மன்மோகன்சிங் எப்படி வந்தார்? சோனியா காந்தியே திடீர் தலைவர்தானே? அ.தி.மு.க. ஜெயிச்சு பிரச்னை வந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் வந்தாரே? அவர் திடீர் தலைவர் இல்லையா? இப்படி ஒவ்வொரு கட்சியும் கொஞ்சம் யோசிச்சுப் பார்த்திட்டு எங்கிட்ட வாங்க. யார் தலைவன்னு நம்மளை நாமளே
சொல்லிக்கிறதில்லைங்க.. மக்கள்தான் முடிவு பண்றாங்க."

வைகோ அ.தி.மு.க. கூட்டணிக்குப் போயிடுவார்னு, நீங்கள் முன்பே பேட்டியில் தெளிவாகச் சொல்லியிருக்கீங்க. எப்படி இந்த அனுமானம்?

"ஒரு சின்ன கணக்குதான். வைகோவோட ம.தி.மு.க. என்பதே வாரிசு அரசியலை எதிர்க்கிறதுதான். இதைத் தாவல்னு சொல்றாங்க. அவமானப்படுத்தி விட்டார்கள் என்கிறார்கள். அவருக்கு என்ன அவமானப்படுத்தப்படுவது புதுசா? ஏற்கெனவே தன்னை அவமானப்படுத்திட்டாங்க என்றுதானே தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறினார். நான் மக்கள்கிட்டே சொல்றது இதுதான். பாருங்க, யாராவது உங்களோட பிரச்னைக்குச் சண்டை போட்டுட்டு கூட்டணியை மாத்தி இருக்கிறார்களா? எவ்வளவு கேட்டும் என் தொகுதிக்குத் தண்ணி வரலைன்னு சொல்லிட்டு, எந்த எம்.எல்.ஏ. யாவது கட்சி மாறியிருக்காங்களா? இப்படி மாறி மாறி ஓட்டுப்போட்டு, இந்த இரண்டு துருப்பிடிச்ச கட்சிகளை ஆதரிக்கப் போறீங்களா?

வாரிசு அரசியலை நீங்க ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? உங்க குடும்பத்து ஆட்களும் உங்க கட்சியில் பங்கெடுக்கறாங்களே?

"அமெரிக்க அதிபர் புஷ்ஷோட அப்பா யாரு? இந்திரா அம்மையார் யாரு? ராஜிவ் காந்தி யாரு? சோனியா காந்தி யாரு? ஜி.கே. வாசன் யாரு? ஒரு கட்சித்தலைவருக்கு மகனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக யாரையும் ஒதுக்கிவிட முடியாது. அவரோட அர்ப்பணிப்பும், கட்சிக்கான உழைப்பும்தான் முக்கியமானது. ஸ்டாலின் தி.மு.க.வின் தலைவராக ஏன் வரக்கூடாது? அவர் தொடர்ந்து அந்தக் கட்சிக்காக வருஷக் கணக்காக உழைக்கிறாரே! காலங்காலமாக கட்சிக்கு உழைச்ச தி.மு.க.காரன் வயித்துல துண்டை
போட்டுட்டு, திடீர்னு புதுசாக எங்கேயிருந்தோ கொண்டு வந்து திணிக்கிறாங்க இல்லையா? அதை எதிர்க்கிறேன். மத்தபடி, எங்க வீட்டில் எனக்குச் செய்வது உதவி. பையன் பரீட்சைக்கு படிச்சா, அம்மா நாலு மணிக்கே எழுந்து டீ போட்டுக் கொடுத்து பக்கத்துல உட்கார்ந்து பார்த்துக்கிறதில்லையா? அப்படித்தான் என் வீடு."

தி.மு.க., அ.தி.மு.க. பேச்சாளர்கள் உங்களைத் தாக்கிப் பேசுகிறார்கள். ஆனால், தி.மு.க. தலைவரோ, அ.தி.மு.க. தலைவரோ அப்படி நேரடியாகத் தாக்குகிற மாதிரி தெரியவில்லையே?

"இரண்டு கழகத்தின் தலைவர்களுக்கும் என் பலம் புரிந்திருக்கிறது போல."

கடைசி வரைக்கும் அ.தி.மு.க. விற்குப் போய்விடுவீர்கள் என்று ஒரு செய்தி இருந்ததே?

"ஆரம்பத்திலிருந்து நான் மட்டும்தான் தனியாக நிற்கிறேன் என்று ஒரே வார்த்தையில் நின்னேன். அப்படியேதான் இப்பவும் இருக்கேன். இடையில் எல்லாக் கட்சியும் பேசிப்பார்த்தாங்க. நாங்க எங்க வேலையைப் பார்த்தோம். உளவுத்துறையும் நிறைய வேலை செய்தது."

இந்தக் கல்யாண மண்டபம் எந்த அளவில், எப்படி இருக்கு?

"விஜயகாந்த் எதிரின்னு நினைச்ச உடனே தி.மு.க. மண்டபத்தை இடிச்சு சந்தோஷப்பட பாத்தாங்க. காலம் மாறின உடனே, ஒரு புது ப்ளான் போட்டுக் கொடுத்தால் இடிக்காமல் விடுவதைப் பற்றிப் பார்க்கலாம்னு டி.ஆர்.பாலு சொன்னார். ஆனால், நான் ஒரு புது ப்ளானை இன்ஜினீயர்களை வச்சுப்போட்டு டி.ஆர். பாலுவிற்கு அனுப்பியிருக்கேன். இதுவரைக்கும் பதில் இல்லை. அனுப்பலைன்னா நீங்கதான் அனுப்பலைன்னு சொல்லிவிடுவாங்க. இதோ அனுப்பியாச்சு... பாலம் மண்டபத்துக்கு மேல போகுதா? இல்லை மண்டபத்து
மேலேயே போகுதான்னு பார்ப்போம்."

நீங்கள் எம்.ஜி.ஆரின் விசுவாசி. அ.தி.மு.க.வில் கூட அந்த மாதிரி விசுவாசிகள் இருக்காங்களே?

"ராமாபுரம் பக்கம் போனால் தோட்டத்தைப் பாருங்க. எப்பேர்ப்பட்ட வள்ளல்! எப்படி வாழ்ந்தது அந்த மனித மாணிக்கம்! வீடும் தோட்டமும் கவனிக்க ஆள் இல்லாமல் சிதைஞ்சு கிடக்கு. பாக்க நெஞ்சு அடைக்குது சார்... இன்னிக்கு அவர் போட்ட சாப்பாடு, வேலை, உடை, கட்சி, கௌரவம்னு வாழறவங்க நிறையப்பேர் இருக்காங்க. அவங்க உருவாக்கின கட்சி, கோடிகளில் கொண்டாட்டமாக இருக்கு. ஆனால், அவர் நடந்து வாழ்ந்த மண்? எம்.ஜி.ஆர். ஆத்மா இவர்களை மன்னிக்காது. ஜானகி அம்மா பள்ளிக்கு அப்ப 25,000 ரூபாய் கொடுத்தேன். இப்ப அவங்க கூட இல்லை. ஆனால் 50,000 ரூபாய் வருஷத்திற்குக் கொடுக்கிறேன்.
எம்.ஜி.ஆர். பெயரைச்சொல்லி வாழறவங்க எங்கே? அந்த விசுவாசிகள் எங்கே? மறந்த அவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? கடவுள் கவனிச்சுக்கிட்டே இருக்கார்."

கட்சி ஆரம்பிச்சீங்க. கூட்டம் கூட்டமாக மக்கள் வர்றாங்க. தொடர் பயணம் எல்லாம் சரி. இன்னும் உங்க சின்னம் தெரியலை. தெரிய வைக்க என்ன செய்யப்போறீங்க?

"நாம நல்லது பண்ணுவோம்னு தெரிஞ்சால் மக்கள் நம்ம சின்னத்தையே தேடி வருவாங்க. மக்களுக்கு விஜயகாந்தைத் தெரியும். அவங்களுக்கு விஜயகாந்தின் சின்னத்தைத் தெரிஞ்சுக்கிறது சுலபம். ஓட்டு நல்ல ஆட்சிக்குத்தானே தவிர, பழகின சின்னத்திற்கு அல்ல. எம்.ஜி.ஆருக்கு திடீரென்று இரட்டை இலை கிடைச்சு ஜெயிக்கலையா? சின்னம் ரீச் ஆயிட்டால் ஜெயிக்கலாம்னா, போன
பார்லிமெண்ட் தேர்தலில் அ.தி.மு.க. ஏன் படுதோல்வி அடைந்தது? இலை ரீச் ஆகலையா? சார், மக்களுக்கு நல்லது பண்ணினால் கொண்டாடுவாங்க நிச்சயமாக."

ஒரே வார்த்தையில் சொல்லுங்க. என்ன சொல்லி இந்த இரண்டு கட்சியையும் எதிர்க்கப்போறீங்க?

"ஊழல்தான்... இவங்க இரண்டுபேரும் பெரிசு பெரிசா ஊழல் பண்ணி, எக்கச்சக்கமாகச் சொத்து சேர்த்து வைச்சிருக்காங்க. கொஞ்சம் ரெஸ்ட் குடுங்க. அந்தப் பணத்தை எல்லாம் எண்ணி முடிக்கவே, அடுத்த ஐந்து வருஷம் ஆகும். அதுவரைக்கும் ஆட்சியை விஜயகாந்த் கையில் கொடுங்க. நீங்க திரும்ப இறக்கிவிட முடியாத அளவுக்கு வேண்டியது எல்லாம் செய்கிறேன்."

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP