Sunday, September 30, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 7

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 7

முந்தைய பகுதி இங்கே!



5. "ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இனிஒருவற்கு

அஃதிறந்து வாழ்தும் எனல்" [971]






சட்டென நிமிர்ந்தான் கந்தன்!

இவருக்கு எப்படி நான் ஆடு மேய்க்கறவன்னு தெரிஞ்சுது?

ஒரு விதமான பயத்துடன் அவரைப் பார்த்து,
"ஏதோ, தேவையானது இருக்கு."
எனச் சொன்னான்.

"அப்போ பிரயோசனமில்லை. இது கொஞ்சம் கஷ்டம். ஒனக்குத் தேவையானது ஒன்கிட்ட இருக்குன்னா, என்னால ஒண்ணும் பண்ண முடியாது"
என்றவரைப் பார்த்து,

'நான் இவர்கிட்ட எதுவும் உதவின்னு கேக்கலியே. இவரா வந்து ஏன் இப்படிச் சொல்றார்'னு சற்றுக் கோபமானான் கந்தன்.

"தோ! நீயா வந்தே, சோறு கேட்டே. குடுத்தேன். புத்தகத்தைப் பாத்தே. இப்போ எதெதையோ சொல்றே! எனக்கு ஒண்ணும் புரியலை.
என் புஸ்தகத்தைக் கொடுங்க! நான் போவணும்" என்றான்.

'ஒங்கிட்ட இருக்கற ஆடுங்கள்ல பத்துல ஒரு பாகம் எனக்கு குடு. புதையல் எங்கே இருக்குன்னு நான் ஒனக்கு சொல்றேன்"
என்றான் கிழவன் அமைதியாக!

உறைந்து போனான் கந்தன்!

'அந்தக் கிழவியாவது ஒண்ணுமே வாங்கிக்கலை என்கிட்ட! இவரு அதை ஒட்டுக் கேட்டிருப்பாரு போல. அதை வெச்சு என்னோட ஆட்டை வாங்கப்
பாக்கறாரு. சீக்கிரமாக் கிளம்பிறணும் இந்த இடத்தை விட்டு' என எண்ணியவாறே, எழ முயற்சித்தவன்,

கிழவன் இவனை லட்சியமே செய்யாது, பக்கத்தில் கிடந்த ஒரு குச்சியை எடுத்து தரையில் ஏதோ வரைவதைக் கவனித்தான்.

கிழவன் மார்பில் இருந்த துணி சற்றே விலகி இருந்தது.

மார்பில் ஒரு தங்க ஒளி!

இலைகளால் கோத்த ஒரு தங்கமாலை போல ஏதோ ஒன்று சூரிய ஒளியில் மின்னியது.

சரேலென்று, தன் துணியை மூடினான் கிழவன்!

கந்தன் அவன் என்ன எழுதுகிறான் எனப் பார்வையைத் திருப்பினான்.

அங்கே.....

கந்தனின் தாய் தந்தையர் பெயர்களும், செல்லி என ஒரு பெயரும் எழுதப் பட்டிருந்தன!

"எனக்கு எப்பிடி இதெல்லாம் தெரியும்னு அதிசயப் படறியா? நாந்தான் சொன்னேனில்ல சிதம்பரத்துக்கு ராசா நானுன்னு!" எனச் சிரித்தான் கிழவன்!

'ஒரு ராசா வந்து எதுக்கு என்னியப் போல ஒரு ஆடு மேய்க்கறவனோட பேசணும்?' என தயக்கத்துடன் கேட்டான், கந்தன்.

'அதுக்கு எத்தினியோ காரணம் இருக்கும். இப்போதைக்கு, நான் சொல்றதை மட்டும் கேளு! நீ ஒன்னோட லட்சியம் எதுன்னு தெரிஞ்சுகிட்டே; அதுக்காவத்தான் நான் இப்பிடில்லாம் பேசறேன்னு
வெச்சுப்போமே! சின்ன வயசுல ஒவ்வொருத்தனுக்கும் தான் இன்னா பண்ணனும்னு ஒரு நெனப்பு வரும். அந்த வயசுல எல்லாமே
தெளிவா இருக்கும். இதான்,.... இன்ன வளியிலதான் பண்ணனும்னு ! தான் இன்னாவா ஆவணும்,
அதுக்கு என்னல்லாம் பண்ணனும்னு கூடத் தெளிவாத் தெரியும். ஆனா, நாளாவ, நாளாவ, அவனுக்கே தெரியாம,
ஒரு அவநம்பிக்கை அவன் மனசுல வர ஆரம்பிக்கும். இது நம்மால முடியாது. இதுக்கு யாரும் ஒதவ மாட்டாங்கன்னு
அவனே இப்ப முடிவு பண்ண ஆரம்பிச்சிடுவான்.'

கந்தன் ஒன்றுமே புரியாமல் அவரைப் பார்த்தான். கிழவன் பேசிக்கொண்டே போனான்.

'தொவக்கத்துல பாத்தியானா, இது ஒன்னோட லட்சியத்துக்கு நேர்மாறா இருக்கற மாரித்தான் தோணும். ஆனா, கவனமாப் பாத்தியானா,
இந்த லட்சியத்தை நீ அடையறதுக்கான தடைங்களைத்தான் இது பட்டியல் போட்டுக் காட்டுதுன்னு புரியும். ரொம்பப் பேருக்கு இது புரியறதுல்ல.
ஆகா!இத்தினி கஷ்டம் இதுல இருக்கான்னு மலைச்சிப் போயி, சரி, நம்ம விதி அவ்ளோதான்னு அப்பிடியே விட்டுருவானுக!



கொஞ்சப் பேருங்கதான், இந்த சூட்சுமத்தைப் புரிஞ்சுகிட்டு, இதான் நமக்கு இந்த ஆண்டவன் செய்யணும்னு விதிச்சிருக்காரு. இது என்னோட
ஆத்மா சொல்ற விசயம். இந்தத் தடையை எல்லாம் அதுதான் எனக்கு காட்டுது. அதைத் தாண்டி உடைச்சுகிட்டு நான் இதை செஞ்சு முடிப்பேன்னு
கிளம்புவானுங்க! இப்ப அதான் உனக்கும் புரிஞ்சு இருக்கு!"

இன்னமும் விளங்காமல், கந்தன், அவரைப் பார்த்து,



"பல ஊருக்கும் போவணும். செல்லியோட பேசணும். ஆடு வளக்கணும்.
இதான் என் லட்சியம்னு இருக்கற எனக்குமா?" என அவநம்பிக்கையோடு கேட்டான்.

'ஆமா! அது மட்டுமில்ல! கனவுல கண்ட புதையலை அடையணும்னு ஒரு வெறி இப்ப ஒனக்கு வந்திருக்கு. ஒனக்கு இருக்கற மாதிரியே
இந்த ஒலகத்துக்கும் ஒரு ஆத்மா இருக்கு.அதுக்கு இந்த ஒலகத்துல இருக்கற மனுஷங்களோட சந்தோசம்தான் முக்கியம்.



கூடவே துக்கம், பொறாமை, வெறுப்பு இதெல்லாமும் அதுக்கு இருக்கு. ஆனா, இதெல்லாமே அதுக்கு ஒண்ணுதான். வேறுபாடே இல்லை அந்த ஆத்மாவுக்கு!
நீ இதுல எதுனாச்சும் ஒண்ணை... அது சந்தோசமோ, துக்கமோ, இல்லை பொறமையோ எதுன்னாலும் சரி,... தீர்மானமா விரும்பினியானா
அந்த ஆத்மா உன்கூடவே இருந்துகிட்டு, அதை உனக்கு கிடைக்க ஒதவும். இதான் சூட்சுமம்."

இருவரும் சற்று நேரம் மௌனமாக இருந்தனர். கிழவன் கந்தன் முகத்தையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
கந்தன் கிழவர் சொன்னதை மனதில் உள்வாங்கி யோசித்துக் கொண்டிருந்தான்.

"இன்னமும் எம்மேல நம்பிக்கை வரலைல்ல ஒனக்கு? சரி!....உங்க வாத்தியாரு என்ன சொன்னாரு உனக்கு?" எனத் திடீரெனக் கேட்டார் கிழவர்!

திகைத்துப் போனான் கந்தன்!

......."கந்தா! உலகம் இந்த ஊரோட நின்னு போகலை. இதுக்கு மேலேயும் இருக்கு. உன்னைச் சுத்தி நடக்கற ஒவ்வொண்ணுத்தையும்
கவனமாப் பாரு.எதையும் மறக்காதே! எல்லாமே ஒருநாளைக்கு உனக்கு உதவும்.பல இடத்துக்கும் போகப் பாரு.
எங்கே இருந்தாலும் நீ நல்லா இருப்பே"...........


வாத்தியார் சொன்னதை அப்படியே ஒப்பித்தான் கந்தன்.

'அதெப்படி ஒங்களுக்குத் தெரிஞ்சுது?' அவன் குரலில் ஒரு மரியாதை தானாக வந்தது!

"அதை விடு! அதோ அங்கே கடை போட்டிருக்கான் பாரு! அவனும் ஒன்னிய மாரித்தான். பல ஊரும் பாக்கணும்னு நினைச்சான். ஆனா, அதுக்குப் பணம்
வேணுமேன்னு நினச்சு, அந்தக் கடையைப் போட்டு, கொஞ்சம் கொஞ்சமா பணம் சேத்துகிட்டு வரான்!
வயசானதும் ஒருநாளைக்கு, பட்டணம்லாம் போவணும்னு முடிவு பண்ணியிருக்கான்! நெனைச்சிருந்தா, எப்போ வேணும்னாலும் போயிருக்கலாம்.
ஆனா, அதுக்கு முந்தி, தான் ஒரு பணக்காரன் ஆவணும், பணம் சேக்கணும்னு ரூட்டை மாத்திகிட்டான். நெனச்ச மாரி, அப்பவே
கிளம்பியிருந்தான்னா, இந்நேரம் பல ஊருங்களைப் பாத்திருப்பான். ஆனா செய்யலை." என நிறுத்தினான்.


"ஆமா. இப்ப எனக்கு ஏன் இதையெல்லாம் சொல்றீங்க?" எனக் கேட்டான் கந்தன்.


"ஏன்னா, இப்ப நீ என்ன செய்யணும் நாமன்னு ஒரு முடிவு எடுக்கற எடத்துல நிக்கறே! அதையெல்லாம் விட்டுட்டு, திரும்பவும்ஆடு மேய்க்கவே போயிறலாமான்னும் யோசிக்கறே! அதான்!" என்றான் கிழவன்.


'ஓ! அப்ப இது மாரி இருக்கறப்பத்தான் நீங்க ஒவ்வொர்த்தர்கிட்டேயும் வருவீங்களோ?' எனச் சற்று ஏளனமாக வினவினான் கந்தன்.


அவனது ஏளனத்தைச் சட்டை செய்யாமல், "இதே மாரி வருவேன்னு சொல்ல முடியாது. ஆனாக்க, எதுனாச்சும் ஒரு வளியில நான் வருவேன்!என்ன பண்றதுன்னு பம்மிகிட்டு இருக்கறப்ப ஒரு தீர்மானமா, இல்லேன்னா, யார் மூலமாச்சும் ஒரு ஆலோசனையா, வருவேன். சில சமயம், கடைசி நிமிஷத்துல வந்து பிரச்சினையை சுளுவா தீத்து வைப்பேன்.இதையெல்லாம் லட்சியம் பண்ணாம அவன் போறானா, அதையும் சிரிச்சுகிட்டே பாப்பேன்! ரொம்ப நேரத்துல நாந்தான் வந்தேன்னே தெரியாது. தானே சமாளிச்சிட்டதா நெனைச்சிக்குவான். சர்த்தான் போடான்னு விட்டிருவேன்!


இப்பிடித்தான் ஒர்த்தன், எதுவானாலும் சரி, முட்டம் கடலாண்டை கிளிஞ்சல் பொறுக்கியே பெரிய ஆளாயிடுவேன்னு சதா சர்வகாலமும் அதையே செஞ்சுகிட்டு இருந்தான்.ஒருநாளு, அவனுக்கும் பொறுமை போயிடுச்சி.இன்னிக்குத்தான் கடைசி நாளு. இன்னிக்கும் ஒண்ணும் கிடைக்கலைன்னா, சர்த்தான் போடான்னு விவசாயம் பண்ணப் போயிடலாம்னு முடிவுபண்ணிட்டான்.அன்னிக்கும் ஒண்ணும் கிடைக்கலை.கிளம்பற நேரம்.அப்பவும் அவனுக்கு இந்த லட்சியத்தை விட மனசில்ல.கடைசி கடைசியா ஒரு தடவை பார்த்துறலாம்னு சல்லடையைப் போட்டான்.அவனோட விடாமுயற்சியப் பாத்த நான், ஒரு பெரிய சிப்பியா என்னை மாத்திகிட்டு, அந்த சல்லடையில போயி விளுந்தேன்.அவனுக்கா ஒரே கோவம்!வெறுப்புல என்னைத் தூக்கி ஒரு கல்லு மேல எறிஞ்சான்.சிப்பி உடைஞ்சுது.உள்ளேருந்து இம்மாம் சைசுல ஒரு பெரிய நல்முத்து!இன்னிக்கு அவன் பெரிய பணக்காரன்!இன்னமும் சல்லடை போடறான்.... ஆளுங்களை வெச்சு!" என்றார் கிழவர்.


'அதெல்லாம் சரி! என்னோட புதையலைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே?"


"அது தெரியணும்னா, எனக்கு நீ பத்துல ஒரு பங்கு ஆட்டைக் கொடுக்கணும்!"
கிழவி நினைவு சட்டென வர, 'கிடைக்கற புதையல்ல பத்துல ஒரு பங்குன்னு வெச்சுப்போமே' என்ற கந்தனை ஏமாற்றத்துடன் பார்த்தார் கிழவர்.


"இல்லாத ஒண்ணுல எனக்கு பங்கு தர நீ ஆரம்பிச்சேன்னா, அதை அடையறதுக்கான ஆசை ஒனக்கு இல்லாமப் போயிடும்" என்றார்.


'இல்லே! அதுதான் அந்த சோசியக்கார கிளவிக்கு தர்றதா சொல்லியிருக்கேன். அதான்...." என இழுத்தான் கந்தன்.


'அது அந்தக் கிளவியோட! எனக்கு என்ன வந்திச்சு அதுல? பரவாயில்லை! அந்த மட்டுக்கும் எதுவும் சும்மாக் கிடைக்காதுன்னு புரிய வெச்சாளே கெளவி. அந்த மட்டுக்கு அது உத்தமம்தான்" எனச் சொல்லியவாறே, புத்தகத்தைத் திருப்பி கந்தனிடம் கொடுத்துவிட்டு எழுந்தார் கிழவர்!


"நாளைக்கு இதே நேரம், இதே எடம்! உன்கிட்ட இருக்கற ஆடுங்கள்ல பத்துல ஒரு பங்கை ஓட்டிகிட்டு வா! நான் ஒனக்கு புதையல் எங்கே இருக்குன்னு சொல்றேன்" எனச் சொல்லிவிட்டு, விறுவிறுவென நடந்த கிழவர் கடையைத் தாண்டி திரும்பியதும் மறைந்து போனார்!


[தொடரும்]


*******************************

அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 6

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 6


முந்தைய பகுதி இங்கே!

4. "வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது." [377]



கிழவி சொன்னதை அசைபோட்டுக் கொண்டே வழியில் இருந்த மற்ற கடைகளைப் பார்த்துக் கொண்டும், சில பொருட்களை வாங்கிக் கொண்டும் கந்தன் சந்தையில் சற்று நேரம் சுற்றினான்.

அப்படிச் சுற்றுவது அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

இங்கு வருவோர், போவோர் எல்லாரும் அவனுக்கு அதிகம் தெரியாதவர்கள்!

சிலரை அவ்வப்போது பார்த்தாலும், மிக நெருக்கமாக எவருடனும் பழக வேண்டிய நிர்ப்பந்தம் இங்கில்லை!

அடிக்கடி பார்த்துப் பேசுவதில் ஒரு அபாயம் இருக்கிறது.

நன்கு தெரிந்து போவதாலேயே, ஒருவரைப் பற்றி ஒரு விசேஷ அக்கறை பிறக்க ஆரம்பிக்கிறது.

அவர்கள் நலனில் கொண்ட அக்கறை, இவனை அவர்கள் விருப்பத்துக்குத் தக்கவாறு மாறணும் என அவர்களை நினைக்க வைக்கிறது!

அப்படி நிகழாவிட்டாலோ, உடனே கோபம் வரத் துவங்குகிறது, அவர்களுக்கு.

அடுத்தவர் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் எனத் தெளிவாக இருக்கும் இந்த மனிதர்கள் தன்னைப் பற்றி அவ்வாறு சிந்திக்கிறார்களோ
என்றால் அதுதான் கிடையாது!

சட்டெனச் சிரிப்பு வந்தது கந்தனுக்கு!
கூடவே கோபமும் வந்தது!
செல்லியையும் காணவில்லை.
வயிறு பசிக்க ஆரம்பித்தது.

அருகில் இருந்த பலகாரக் கடைப் பக்கம் சென்று, சோறு வாங்கிக் கொண்டு, கையிலிருந்த புத்தகத்தைப் பிரித்து, சாப்பிட்டுக் கொண்டே,
விட்ட இடத்திலிருந்து படிக்கத் துவங்கினான்!

'எப்ப படிச்சாலும் இந்த வாயுல நுழையாத பேருங்களை எல்லாம் நினைவுல வெச்சுக்கவே முடியறதில்ல!' என வாய் விட்டுச் சொல்லிக் கொண்டே
படிக்கும் போது,


'தம்பி ஏதோ படிக்கறாப்புல இருக்கு' எனச் சொல்லிக் கொண்டே பக்கத்தில் வந்து அமர்ந்தான் ஒரு வயதானவன்.

செல்லியைப் பார்க்க முடியாமல் போன கடுப்பில் இருந்த கந்தனுக்கு, இந்த ஆளின் வருகை எரிச்சலூட்டியது.

'அதான் தெரியுதில்ல' எனச் சொல்லிக் கொண்டே அவனை ஒதுக்கி மேலும் படிப்பது போல பாவனை செய்தான்.

கிழவன் விடுவதாயில்லை.

'சாப்ட்டு ரெண்டு நாளாச்சு! கொஞ்சம் அரிசி சோறு கொடேன்' எனக் கெஞ்சவே, அரை மனதோடு, தன் சாப்பாட்டு இலையைப்
பாதியாகக் கிழித்து, ஒரு பகுதி சோற்றை அதில் தள்ளி, 'இந்தா. சாப்பிடு!' என அவனுக்கு அளித்தான்.

'என்னா புஸ்தகம் அது?' ஒரு வாய் சோற்றை அள்ளி வாயில் போட்டுக் கொண்டே, கிழவன் தொடர்ந்தான்.

'அதான் சோறு குடுத்தாசில்ல? இன்னும் எதுக்கு என்னிய தொந்தரவு பண்றே?' எனக் கேட்க வாயெடுத்தவனுக்கு,
அவன் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது..."பெரியவங்க ஆராயிருந்தாலும், மரியாதையா நடந்துக்கோ"!

'ஆமா! இதான் படிக்கறேன்' என்றபடி புத்தகத்தை அவரிடம் நீட்டினான்.... படிக்க முடியாமல் அவர் இடத்தைக் காலி பண்ணிடுவார்
என நினைத்து!

"ம்ம்ம்! இதுவா?" என்றபடி சில பக்கங்களைப் புரட்டிவிட்டு, "நல்ல புஸ்தகம் தான். ஆனா படிக்கக் கொள்ள எரிச்சலா இருக்கும்"
என்றவுடன் கந்தனுக்கு ஒரே அதிர்ச்சி!

இந்தாளுக்கு படிக்க மட்டுமில்ல, இந்தப் புத்தகத்தையும் படிச்சிருக்காரு என்ற உண்மை புரிய, அவர் மேல் ஒரு மதிப்பு வரத் துவங்கியது.

"வேற எதுலியும் சொல்லாத பெரிய விசயம் எதுவும் இதுல சொல்லிறலை. ஒலகத்துல எவனுக்கும் தன்னோட லட்சியம் எதுன்னு தெரியறதில்ல
அப்படீன்றதைத்தான் இதுவும் சொல்லுது. அது மட்டுமில்ல.இந்த ஒலகத்துல இதுவரைக்கும் சொன்ன மஹா பெரிய பொய்யைத்தான்,
ஒவ்வொர்த்தனும் நம்பறான்னு இது முடியுது" என்று சொன்னவரை ஆச்சரியத்துடன் பார்த்தான் கந்தன்!

அதென்ன உலக மகா பொய்யி? என்றான்.

"அதுவா? ஒவ்வொருத்தனும், அவனவன் வாழ்க்கையில ஒரு கட்டத்துல, போராடிப் போராடிப் போயி, அதையும் மீறிகிட்டு தனக்கு நடக்கறதை பொறுத்துக்க முடியாம,
எல்லாம் விதிப்படி நடக்குது, விதி எனக்கெதிரா சதி செய்யுதுன்னு முடிவு பண்ணிடறான். அதான் மிகப் பெரிய பொய்யி!"


"கொளப்பறீங்களே சாமி!"

"என்னா சொல்ல வரேன்னா, தோல்வியைக் கண்டு தொவண்டு போயிடறான். மேலே தொடராம விட்டுர்றான். அதுக்கு விதி மேல பழியைப் போட்டுடறான். அதான் பொய்யின்னு சொல்றேன்."

'நல்லவேளையா அப்படில்லாம் எதுவும் எனக்கு ஆவலை! படிக்கணும்னு நினைச்சேன், இப்போ ஆடு மேய்க்கறேன்" என்றபடி சிரித்தான் கந்தன்

ரொம்ப நல்லது! அப்பத்தான் நீ நெனச்ச மாரி பல ஊருக்கும் போவ முடியும். இல்லியா?"

"நான் நினைக்கறதை இவர் கரெக்டா சொல்றாரே" என்று எண்ணிய கந்தன், கொஞ்சம் மரியாதையோடு,
"அய்யாவுக்கு எந்த ஊரு?" என வினவினான்.

"நமக்கு எல்லா ஊருந்தான்" என்றான் கிழவன்!

"அதெப்படி? எல்லா ஊருக்கும் வேணுமின்னா போவலாம் . ஆனா, எதுனாச்சும் ஒரு ஊருலேர்ந்துதானே வரணும் யாரும்?" என அவரை
மடக்கினான் கந்தன்.

"அப்டீன்றியா? அப்போ சரி. எனக்கு ஊரு சிதம்பரம்னு வெச்சுக்க"

சிதம்பரம் என்ற பெயரை இதற்கு முன் கேள்விப்பட்டிராத கந்தன், அதை வெளிக்காட்ட விரும்பாமல்,


'ஓ! சிதம்பரமா? அங்கே ஆளுங்கள்லாம் எப்படி?' என அமர்த்தாலாக கேட்டான்.

'ஆளுங்களா? அவங்களுக்கென்ன? நல்லாத்தான் இருக்காங்க, அவங்க அவங்க சண்டையை விடாமப் போட்டுகிட்டு!' எனப் பிடி கொடுக்காமல் கிழவன் சொல்ல,பேச்சை மாற்ற எண்ணி,

'அங்கே நீங்க என்ன பண்றீங்க?' என்றான்.

'நான் என்ன பண்றேனா? நல்லாக் கேட்டே போ! நாந்தான் சிதம்பரத்துக்கு ராசா!' என்று ஒரு போடு போட்டான் கிழவன், சிரித்துக் கொண்டே!

'சரியான பைத்தியம் போல! இவருக்கு என்னோட ஆடுங்க எவ்ளவோ மேலு. அதுங்க இது மாரி உளறாது' என மனதுக்குள் எண்ணியபடியே
மீதி சாப்பாட்டை முடிக்க ஆரம்பித்தான்.

பெரியவர் விடுவதாயில்லை.

"என் பேரு கூத்தன்! உம்பேரு கந்தன் தானே! அது சரி.....எவ்ளோ ஆடு வெச்சிருக்கே நீ ?" என்றார்!


[தொடரும்]
********************

அடுத்த பதிவு இங்கே!






Read more...

Saturday, September 29, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 5

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 5

முந்தைய பகுதி இங்கே!






3. "அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்." [96]


"உள்ளே வாங்க தம்பி! இப்படி குந்துங்க! கையி பாக்கணுமா? ரூவால்லாம் அப்பறம் பேசிக்கலாம்! சாஸ்தி இல்ல! வாங்க வாங்க!"
என அவனை வரவேற்றபடியே, விரித்திருந்த பாயைக் காட்டி அதில் உட்காரச் சொன்னாள் அந்தக் கிழவி.

"இல்லே! அதுக்கெல்லாம் நான் வரலை! புதுசா இருக்கேன்னு பாத்தேன். அவ்ளோதான்" என்றவாறு இழுத்த அவனை அன்புடன்
பார்த்தாள், கிழவி.

"சும்மா வா ராசா! நீதான் இன்னிக்கு மொதப் போணி! முட்டத்துலேர்ந்து இதான் எனக்கு மொதத் தடவை இந்த சந்தைக்கு வர்றது!
நீ ஒண்ணும் தர வேணாம். சும்மா கையக் காட்டு. சரியாச் சொன்னேன்னா அப்பால நா கேக்கறதைக் குடு!"
என்றவாறே அவன் கையைப் பிடித்து உட்கார வைத்தாள்.

அப்படியே ஒரு கோலை எடுத்து, அவன் வலது கையைப் பார்த்தாள்.

"அடேங்கப்பா!" என ஒரு குரல் கிளம்பியது, அவளிடமிருந்து.

கந்தனுக்குள் ஒரு இனமறியா பயம் தோன்றியது.

"கையெல்லாம் ஒண்ணும் பாக்க வேணாம்" என எழத் துவங்கினான்.

"ஆமாமாம்! கை பாக்க வரலை நீ. உனக்கு வர்ற கனாவைப் பத்தி என்னா ஏதுன்னு தெரிஞ்சுக்கத்தான் வந்தே!"

கிழவியின் சொற்களைக் கேட்டதும், மந்திரம் போல உட்கார்ந்தான், கந்தன்!

"ஒனக்கு எப்பிடித் தெரியும் ஆத்தா?" என ஆச்சரியத்துடன் கேட்டான்.

"கனாவெல்லாம், சாமி நம்மளோட பேசறது. நம்ம பாசைல பேசினா, அது என்னன்னு சொல்லிட முடியும்.
ஆனா, சில சமயம் நம்மளோட பேசாம, நம்ம ஆத்மாவோட பேசும் சாமி! அது ஒனக்கு மட்டுந்தான் புரியும்.

அதுக்கு அர்த்தம் சொல்ல என்னால முடியாது. சரி, அது என்ன ஏதுன்னு பாக்கலாம். அதுக்கு முந்தி நான் சொல்றதுக்கு நீ என்ன தரணும்னு
இப்போவே பேசி முடிச்சிருவோம்." என்று கிழவி சொன்னவுடன்,


"ஆஹா! கிழவி நம்மகிட்ட பணம் கறக்க முடிவு பண்ணிட்டா! சாக்கிரதையா இருக்கணும்"
என மனதுக்குள் முடிவு செய்து கொண்டு,

"ஒரே ஒரு கனவு இதுவரைக்கு ஒரு ரெண்டு மூணு தடவ வந்திருச்சு! அது என்னான்னு சொல்றேன். கேட்டுக்கோ.

நான் என் ஆடுங்களை மேச்சுகிட்டு இருக்கேன். அப்போ ஒரு சின்னக் கொளந்தை வந்து, என்னோட ஆடுங்களோட சிரிச்சுகிட்டே விளையாடுது.
சரி, கொளந்தை தானேன்னு நான் அத ஒண்ணும் சொல்லலை. விளையாடிட்டு இருக்கற கொளந்தை, திடீர்னு என்னோட ரெண்டு கையையும்
பிடிக்குது.
அடுத்த நிமிஷம் நாங்க ரெண்டு பேரும் ஒரு புது எடத்துல இருக்கோம். அங்கே நெறய கோவில்லாம் இருக்கு!

கல்லுல செஞ்ச யானை கூட இருக்கு. பக்கத்துலியே கடலும். அந்தக் கொளந்த, .......வயசுல்லாம் தெரியலைன்னு சொல்றேன்ல!....
அது சொல்லுது,நீ இங்கே வந்தியானா, ஒரு பெரிய புதையல் கிடைக்கும். இதோ... இங்கதான்..." எனச் சொல்லிகிட்டே இருக்கையில,
சட்டுன்னு முளிப்பு வந்திருச்சு.... ஒவ்வொரு தடவையும்!....... இதுக்கு என்ன அர்த்தம்?
சொல்லு. சரியாச் சொன்னியானா,
துட்டு எவ்ளோ தரலாமின்னு பேசுவோம்" என அமர்த்தலாகச் சொன்னான் கந்தன்.

கிழவி சற்று நேரம் அமைதியாக இருந்தாள். அவனையும், அவன் கையையும் மாறி மாறிப் பார்த்தாள்.

வாயிலிருந்த வெற்றிலை பாக்கைத் துப்பிவிட்டு, கொஞ்சம் தண்ணி குடித்தாள்.

மறுபடியும், ஊறின பாக்கைக் கடித்துக் குதப்பி ஒரு வெற்றிலையைக் கிள்ளி, நிதானமாகச் சுண்ணாம்பைத் தடவினாள்.

நாலாகக் கிள்ளி அதை வாயின் இடது பக்கம் அடக்கி,பொறுமையாக மென்றாள்.

கூடவே, கொஞ்சம் கட்டைப்புகையிலையும் வெட்டிச் சேர்த்தாள்.

கந்தன் பொறுமை இழக்க அரம்பித்தான்.

'செல்லியை வேற பார்க்கவில்லை இன்னும்' என்ற எண்ணமும் கூடச் சேரவே, கிழவியைப் பார்த்து,

" இந்தக் கனாவுக்கு என்ன அர்த்தம்?
தெரியுமா, தெரியாதா. சொல்லு ஆத்தா! எனக்கு சோலி இருக்கு"
எனக் கேட்டான்.

"அட! பொறுப்பா! ரொம்பவே அவசரப் படறியே! என்னா மாரி கையி இது! சரி! நீ எனக்கு ஒண்ணும் தரவேணாம் இப்ப! ஆனா, ஒரு கண்டிசன். புதையல் கிடைச்சதும் அதுல பத்துல ஒரு பங்கு எனக்குத் தரணும் நீ!
சம்மதமா?"

கடகடவெனச் சிரித்தான் கந்தன்.

"அப்பாடா! அப்போ இப்ப ஒண்ணும் தர வேணாண்ற! சரி, கனாவுக்கு அர்த்தம் சொல்லு" என ஒரு நிம்மதியுடன் சொன்னான்.

"மொதல்ல, எனக்கு சத்தியம் பண்ணிக் குடு, பத்துல ஒரு பங்கு தருவேன்னு சொல்லு. கனாவுக்கு என்ன அர்த்தம்னு சொல்றேன்"
என மீண்டும் கிழவி வற்புறுத்தவே,

இதன் பொருளைத் தெரிந்து கொள்ளலாமே என்ற ஆவலில், "ம்ம்! சரி, சரி! நீ சொல்லு!"
என்றவுடன் கிழவி ஆரம்பித்தாள்....




"இது நான் முன்ன சொன்னமாரி, ஆத்மாவோட பேசற கனா இல்லை. நமக்கெல்லாம் புரியற ஒரு கனாதான். ஆனா, சொல்லப்போற விசயம்தான்ரொம்ப சிக்கலானது! அதுக்குத்தான் அந்த பத்துல ஒரு பங்கு கேக்கேன். சரியா!.... கவனமாக் கேட்டுக்க!நீ உடனே கிளம்பி அந்த எடத்துக்குப் போவணும்.சென்னப்பட்டணம் பக்கத்துல இருக்கு அந்த எடம். அப்பிடி ஒண்ணு இருக்கான்னு எனக்கு தீர்மானமா தெரியாது. ஆனாக்க, ஒரு கொளந்தை வந்து சொல்லிச்சுன்னா, அது கண்டிப்பா உண்மையாத்தான் இருக்கணும்.அங்கே ஒனக்கு நிச்சயமா புதையல் கிடைக்கும். நீயும் பெரிய பணக்காரனா ஆகப் போறே!"


கந்தனுக்கு எரிச்சல் வந்தது!

'இதைக் கேட்க இங்கு வரணுமா? அதுதான் கனவில் வந்து விட்டதே. கிழவி ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லையே'என எண்ணியபடியே,

"என் நேரத்தை இதுல செலவளிக்கறதா உத்தேசம் இல்லை" என்றவாறே எழ ஆரம்பித்தான்.


அவனைக் கடுமையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, கிழவி தொடர்ந்து பேசலானாள்.

"அதான் சொன்னேன்ல! இது கொஞ்சம் சிக்கலான கனான்னு! சுளுவா இருந்தா சொல்லியிருப்பேன்ல? கை பாக்கறது முகராசி பாக்கறதுல்லாம்கூட கத்து வெச்சிருக்கேன்! இரு" என்றதும்,



கிழவி சமாளிக்கிறாள் போல என நினைத்து, "அப்போ அந்தக் கோயிலுக்கு நான் போகலைன்னா, ஒனக்கு ஒண்ணும் தரவேண்டியதில்லைதானே"என மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்டான்.


"ஆமாமாம். சரி, நீ புறப்படு! ஒரு வரும்படியும் இல்லாம இன்னிக்கு முதப்போணி ஆயிருக்கு! பொளப்பைப் பாக்கணும். நா சொன்னதை மட்டும் மறந்திராதே! " என, கிழவி அவனை அனுப்பிவைத்தாள்.

[தொடரும்]

***************************

அடுத்த அத்தியாயம்!

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 4



"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 4

முந்தைய பகுதி இங்கே!




2. "எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு." [335]


செல்லி அவனுக்குத் தெரிந்த பெண்தான்!

ஒரு 12-14 வயசிருக்கும்.

பள்ளியில் அவனோடு கூடப் படித்தவள்.

'அஞ்சாம் கிளாஸோட பொட்டைச் சிறுக்கிக்கு படிப்பெல்லாம் போறும்'னு வீட்டில் சொல்ல, அவளும் இப்போது பள்ளிக்குச் செல்வதில்லை.

எப்பவாவது சந்தைக்கு வரும் போது அவனைப் பார்த்து அன்புடன் சிரிப்பாள்.

"நல்லா இருக்கியா செல்லி?" "ம்.. நீ...?" இவ்வளவுதான் அவர்கள் பேசிக் கொள்வது.

போனவாரம் பார்த்தபோது, கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்துவிட்டு, "அப்ப இன்னும் நீ படிக்கிறியா என்ன?"
என வெகுளித்தனமாகக் கேட்டாள்.

"வாத்தியார் குடுத்தாரு. பாரதக் கதை! பொளுது போகச்சொல்லி படிக்கறேன்."

"ஆடு மேக்கறவனுக்கு படிப்பு இன்னாத்துக்காம்?" எனத் தொடர்ந்தாள்!

செல்லியைத் தவிர வேறு யார் கேட்டிருந்தாலும் இவனுக்கு கோபம் நிச்சயம் வந்திருக்கும்.

ஆனால், கேட்டது செல்லியாயிற்றே!

அவளைப் பார்த்து சிரித்தபடியே சொன்னான், "சார்தான் சொன்னாரு. நெறயப் படிக்கணுமாம். அல்லாரையும் பாக்கணுமாம்.
அது மட்டுமில்ல செல்லி, நா இப்படியே இங்கியே இருப்பேன்னு நெனைக்காதே! நான் நம்ம ஊரையெல்லாம் தாண்டி, பட்டணம்லாம் போவேன்!
நெறய ஊரைப் பாக்கணும் எனக்கு!" என கண்களில் ஒரு ஒளி தெரிய அவன் சொன்னதைக் கேட்டதும்,

"தோ பார்றா! தொரை சீமைக்குப் போவப் போறாராம்! அப்டீன்னா எங்களைல்லாம் மறந்திருவேன்னு சொல்லு" எனச் செல்லியும்
உற்சாகமாகச் சீண்டினாள்.

"சேச்சே! உங்களையெல்லாம் மறக்கமுடியுமா? அதெல்லாம் எங்க போனாலும் உன் நெனப்பு இருக்கும். நீதான் என்கிட்ட
எப்பவும் பிரியமா பேசறியே! ஒன்னிய எப்படி மறக்கறது?" என இவனும் பதிலுக்குச் சொன்னதும், வெட்கத்துடன் ஒரு
புன்னகையை உதிர்த்துவிட்டு அவள் போனது இவன் மனதில் ஓட....

"இரு புள்ள! இன்னும் கொஞ்ச நேரம் களிச்சுப் போவியாம்!" என்று வாய்விட்டுச் சொன்னவன், சட்டென்று சுற்றுமுற்றும் பார்த்தான்.

யாரும் பார்க்கலியே என உறுதிப்படுத்திக் கொண்டான்.

அவளை நினைத்துக் கொண்டே, தனக்குள் பேசியதை எண்ணி வெட்கத்துடன் சிரித்துக் கொண்டான்!

'ம்.. ஒருவேளை செல்லி வந்தாலும் வரும்! அதுகிட்ட இந்தக் கனவைப் பத்தி சொல்லணும். அது கொஞ்சம் விவரமான புள்ளை.'
என முடிவு செய்து கொண்டான்.

**********
சந்தை!

எத்தனை விதமான மனிதர்கள்?
என்னவெல்லாம் தேவைகள்?

கூறு கட்டி வைத்திருக்கும் காய்கறிக்கடைகள், ரிப்பன், ஸ்லைடு, சாந்துப்பொட்டு, பவுடர் என ஒப்பனைப் பொருள்களை அடுக்கியிருக்கும் சிறிய கடைகள், அரிசி, மிளகாய், உப்பு இதெல்லாம் மலைபோல குவித்து வைத்து வருவோர் போவோரையெல்லாம் கூவி அழைக்கும் வியாபாரிகள், பக்கத்திலேயே, ஆடு, மாடு விற்க, வாங்குவோரைக் குறி வைத்து அலையும் தரகுக் கும்பல், சிறுவர், சிறுமியருக்கான பொம்மை, ஜவ்வுமிட்டாய் போன்றவற்றை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு அவரவர் கேட்கும் வடிவத்தில் நொடியில் தயாரித்துக் கட்டிவிடும் கடைக்காரர்கள், குடை ராட்டினம் என சந்தை களை கட்டியிருந்தது.

இவ்ளோ பொருளும் வித்துப் போயிருமா?
ஆருக்கு வேண்டியிருக்கும் இதெல்லாம்? என யோசித்தபடியே சுற்றி வந்தவன் கண்களில்,
அந்தக் கொட்டகை பட்டது!

"உள்ளத உள்ளபடியே சொல்லும் ஜக்கம்மா அருள்வாக்கு" என்ற போர்டு அவனை ஈர்த்தது.

கையில் ஒரு சிறிய பிரம்புடனும், ஓலைக் காதோடும், அடக்கி வைத்த புகையிலையுடனும், மஞ்சள் பூசிய முகத்தில், நெற்றி நிறையக் குங்குமத்துடன் அமர்ந்திருந்த
அந்த பருத்த கிழவி, அவனைப் பார்த்து வாய் நிறையச் சிரித்தாள்!

[தொடரும்]
************************************************

Read more...

Thursday, September 27, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 3

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 3


முந்தைய பகுதி இங்கே!
1.

கருக்கலில் கண் விழித்தது முதலே மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தான், கந்தன்.

பக்கெட்டில் இருந்த தண்ணீரை எடுத்து, வாய் கொப்பளித்து, முகம் அலம்பி,

"அம்மா! நான் போயிட்டு வரேன்" என்று, சுவரில் மாட்டியிருந்த படத்தைப் பார்த்துச் சொல்லிவிட்டு,
குடிசையை விட்டு வெளியே வந்தான்.

பட்டி அருகே சென்றதுமே, "மே.....ஏ" என அன்புடன் வரவேற்றன ஆடுகள்.

படலைத் திறந்து, "தா, தா" என அவைகளை வெளியே விரட்டி, படலை மீண்டும் மூடிவிட்டு, உற்சாகமாக
சீட்டி அடித்தபடியே அவைகள் பின் சென்றான்.

மனம் இன்னமும் அதிகாலையில் அவன் கண்ட கனவைப் பற்றியே சந்தோஷத்துடன் அசை போட்டது.

இந்த வாரத்தில் அவன் இரண்டாம் முறையாகக் கண்ட கனவு இது!

அப்போது....மந்தையிலிருந்து பிரிந்து தனித்துச் செல்ல முயற்சிக்கும் ஒரு ஆட்டைப் பார்த்தவுடன், கையிலிருந்த குச்சியைத்
தரையில் தட்டியபடியே திரும்ப மந்தைக்குள் அதைத் தள்ளிவிட்டு, வழக்கமாக மேய்ச்சலுக்கு விடும் இடத்தை அடைந்தான்.

ஊருக்கு வெளியே இருக்கும் அந்தப் பாழடைந்த கோவில்.

சிலையைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் யாரோ களவாடிச் சென்றபின்னர்,பூஜைகள் நின்று போய், வருவோரின்றி, சிதிலமாகிக்
கிடந்த கோவிலின் பின்புலம்தான் கந்தன் மேய்ச்சலுக்கு வழக்கமா வரும் இடம்.

அங்கிருக்கும் ஒவ்வொரு இடமும் அவனுக்கு அத்துப்படி!அந்த கோவில். சாமியில்லாத கர்ப்பக்கிரகம். இன்னமும் நிக்கற தெற்குச் சுவர். அதன் பின்னாலிருக்கும்,
ஓங்கி வளர்ந்த அந்தப் புளியமரம்! அதன் அடியில்தான் ஆடுகள் படுத்துறங்கும்.

கொண்டுவந்த கஞ்சிக்கலயத்தை, உள்மேடையில் ஓரமாக வைத்தபின்னர், 'கண்ணுங்களா! நல்லா மேயுங்க!'
என அன்பாகச் சொல்லியபடியே கையோடு எடுத்து வந்த புத்தகத்தைப் பிரித்தான்.

அவனோட அம்மா விட்டுச் சென்ற ஒரே சொத்து அந்த ஓலைக்குடிசையும், 15 ஆடுகளும், இந்தப் புத்தகமும் தான்.

அம்மா இருந்தவரைக்கும், கஞ்சியோ, கூழோ கொடுத்து அவனை இஸ்கோலுக்கு அனுப்பி வைத்தாள்.

ஆத்தாவுக்கு உடம்புக்கு வந்து சீக்காப் படுத்தப்பதான், இவனுக்கு படிக்க முடியாமப் போனது.

வாத்தியாருக்கு இவன் மேல ரொம்பப் பிரியம்.

இந்த நிலைமையிலியும் படிக்க வரானேன்னு.

இப்ப முடியாமப் போச்சுன்னு ஆனதும், ரொம்பவே வருத்தப்பட்டார்.

"கந்தா! உலகம் இந்த ஊரோட நின்னு போகலை. இதுக்கு மேலேயும் இருக்கு. உன்னைச் சுத்தி நடக்கற ஒவ்வொண்ணுத்தையும்
கவனமாப் பாரு.எதையும் மறக்காதே! எல்லாமே ஒருநாளைக்கு உனக்கு உதவும்.பல இடத்துக்கும் போகப் பாரு.
எங்கே இருந்தாலும் நீ நல்லா இருப்பே" எனச் சொல்லி,
இந்தப் புத்தகத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார்.

சீக்கிரமே அம்மாவும் செத்துப் போக, இப்போ கந்தனுக்கு இதான் வாழ்க்கை.

காலையில் மேய்ச்சலுக்கு இங்கே வருவது,

சாமி இல்லேன்னாலும், கன்னத்துல போட்டுகிட்டு உள்ளே செல்வது,
மீதிப் பொழுதை அங்கேயே கழிப்பது,

மனசிருந்தா, கோவிலைச் சுற்றி இருக்கற புதரை வெட்டி சீர் படுத்த முயல்வது,


சூரியன் உச்சிக்கு வந்ததும், கொண்டுவந்த கஞ்சியைக் குடித்துவிட்டு, கொஞ்சநேரம் கொண்டுவந்த புத்தகத்தைப் படிப்பது,

ஆடுகள் எல்லாம், நிழலுக்காக வந்து அந்தப் புளியமரத்தின் அடியில் உட்கார்ந்து அசை போடுவதைப் பார்த்த்படியே கொஞ்சம் கண்ணசருவது,

சூரியன் மேக்கால மறைஞ்சதும், 'வரேன் சாமி' என இல்லாத சாமிக்கு மீண்டும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு,


'எலே! வாங்கடே போலாம்!" எனச் சொல்லி வீடு திரும்புவது.

கைகால் கழுவிய பின்னர் அடுப்பை மூட்டி, கஞ்சியோ, கூழோ காய்ச்சிக் குடிச்சிட்டு, மறுநாளைக்கும் ஒரு கலயத்துல எடுத்து வெச்சிட்டு
சற்று நேரத்தில் உறங்கப் போவது.

வாரம் ஒருமுறை சந்தைக்குப் போய், ஆட்டுரோமம் போன்ற பொருட்களை விற்று, நல்ல விலைக்கு வந்தால் ஆடுகளை வாங்குவதோ, விற்பதோ செய்து,
வீட்டுக்குத் தேவையான சாமான்களையும் கொஞ்சம் வாங்கி, தானுண்டு, தன் வேலையுண்டு என இருந்து வந்தான் கந்தன்.

சின்னப்பையன், அதுலியும் அப்பன், ஆத்த இல்லாத புள்ளைன்னு எல்லாருக்கும் இவன் மேல அனுதாபம்!


காலையில் எழுந்து சந்தைக்குப் போனான்.

அங்கேதான் கந்தன் செல்லியைப் பார்த்தான்!

[தொடரும்]
************************************************

அடுத்த அத்தியாயம்

Read more...

Wednesday, September 26, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"


"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" [2]


முந்தைய பதிவு இங்கே!


வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்!


[இதுதான் நான் முதலில் எழுதிய முன்னுரை இக்கதைக்கு!

45 நாட்களாக வராததற்கு ஒரு விளக்கமாக முந்தைய பதிவு எழுதினேன்.

எனவே இதையும் படியுங்கள்!]

"ஆன்மிகம் கலங்கலின்றி தெளிவாய் ஆகிக் கொண்டே இருக்கிறது உம்முள்"!

சற்றும் எதிர்பாராமல், இப்படி ஒரு ஆசி ஒரு பெரியவரிடமிருந்து எனக்கு வந்தது சில நாட்களுக்கு முன்னர்.

படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது.

இதற்கு நான் அருகதையானவனா, இல்லையா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும்.

இப்படி ஒரு ஆசி கிடைப்பதே பெரிய விஷயம்தானே!

எல்லாவிதமான ஆசாபாசங்களுக்கும் ஆட்பட்டு, ஈடுபட்டு, உள்ளுக்கும் வெளியிலுமாக அலைபடும் ஒரு சாதாரண மனிதன்.

ஆனால், ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவானவன்.

அன்பு செலுத்துவதில், அதை வெளிப்படுத்துவதில்.

செலுத்துவதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை.

வெளிக்காட்டுவதில்தான் !

அன்பு, அன்பாகவே பெரும்பாலான சமயங்களில் வரும்.
சிலசமயங்களில்.....
அதட்டலாக, கோபமாக, கெஞ்சலாக, ஆத்திரமாக...

இப்படி வெளிப்படும் நேரங்கள்தான் வாழ்க்கையில் பிரச்சினைகளை உண்டாக்கும் நேரங்களாகப் போய்விடுகிறது.

வெகுவாகக் குறைத்து வருகிறேன், இத்தருணங்களை.

இதுதான் கலங்கலின்றித் தெளிவாதலோ!

பார்க்கலாம்!

இப்படி எண்ணங்கள் என்னுள் வந்து கொண்டிருந்த போது, சில மாதங்களாக நான் எழுத நினைத்து,
ஒத்திப் போட்டுக் கொண்டே வரும் ஒரு கதையை இங்கு ஒரு தொடராக வெளியிட எண்ணுகிறேன்.

இது என் கற்பனைக் கதை அல்ல.

நான் படித்த சில புத்தகங்களினால் எனக்குள் எழுந்த ஒரு பாதிப்பு எனச் சொல்வதே சரியாகும்.

கருத்து அங்கிருந்து.

களம் நான் அமைப்பது.

இது எந்தவொரு சித்தரைப் பற்றிய கதையும் அல்ல.

ஒரு மிக மிகச் சாதாரணமான மனிதன், தனது கனவை விடாது பற்றிச் செல்லுகையில் எப்படி அது என்னவாகுகிறது என்பதைப் பற்றிய கதை!

அப்போது ஒரு சித்தர் இதில் வருகிறார்!

ஆன்மீகத் தேடலில் இருப்போர்க்கு விடையாக அமையுமா?

தெரியாது.

அவரவர் தேடலை, அதில் அவர்கள் அடைந்திருக்கும் சாதனை அளவை, வளர்ச்சியைப் பொறுத்தது.

திடீர் திருப்பங்கள் இருக்காது.

ஆனால், ஸ்வாரஸ்யமாக இருக்கும் என நம்புகிறேன்.

ஒரு நாள் விட்டு ஒருநாளாகப் பதிய எண்ணம். [திங்கள், புதன், வெள்ளி என]

என் முதல் முயற்சி இது.

நல்லபடியாக அமைய குருவருள் வேண்டி, இறையருள் நாடி, உங்கள் அனைவரின் வாழ்த்துகளையும் கோருகிறேன்.

முருகனருள் முன்னிற்கும்!
**********************************

அடுத்த அத்தியாயம்

Read more...

இதோ வந்துவிட்டேன்!

"இதோ வந்துவிட்டேன்!"




'எங்கே உங்களைக் காணோம்? என்ன ஆயிற்று?' எனப் பல மடல்கள், தொலைபேசிகள்!

ஆம்! நான் காணாமல்தான் போயிருந்தேன்!

கடந்த 45 நாட்களாக ஒரு தவம்!

ஒரு நாவல் எழுத ஒரு உந்தல்!

அப்படி ஒன்றும் பெரிய எழுத்தாளனல்ல நான்.

என் மனதில் தோன்றியவற்றை கவிதைகள் மூலம்[கொத்ஸ் அதைக் கவுஜ என்பார்!] அவ்வப்போதும், திருக்குறள், திருப்புகழ் பாடல்களில் சிலவற்றையும் எனக்குத் தெரிந்தவரையில் எழுதியது தவிர, பெரிதாக ஒன்றும் எழுதியதில்லை.

ஆனால், ஒரு சில ஆன்மீகப் புத்தகங்களைப் படித்து வருகையில், இவற்றையொட்டி ஒரு கதையைச் சொல்லவேண்டும் என ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருந்தது.

அதை உறுதிப் படுத்தும் விதமாக ஒரு சகுனம் எனக்குத் தெரிந்தது.

பொதுவாகவே இந்த சகுனங்களில் நம்பிக்கை உள்ளவன் நான்.

நடந்த நிகழ்வுகள் இதை உறுதிப் படுத்தின.

எழுதத் தொடங்கினேன்!

என்னால் முடியுமா என்ற ஒரு அவநம்பிக்கையோடே!

ஆனால், இது உருவான விதம் எனக்குள்ளேயே ஒரு பிரமிப்பை உண்டுபண்ணியது என்றால், அது மிகையில்லை.

இதை எழுத எனக்கு ஊக்கம் அளித்த ஒரே நபர் என் மனைவி!

[உற்சாகமூட்டியவர் எனது இனிய நண்பர் திரு.கோவி.கண்ணன், இதன் களம் என்னவென்று தெரியாமலேயே!]

ஒவ்வொரு அத்தியாயமும் எழுதிய பின்னர் அதைப் படித்து, அப்படியே இதை ஒரு திருத்தமுமின்றி என் மனைவி அங்கீகரித்தபோதுதான் எனக்கு ஒரு உண்மை புலப்பட்டது.

இந்தக் கதையில் வருவது போல, இதெல்லாம் நம் மனித முயற்சியால் நிகழ்வதல்ல!

ஏதோவொரு சக்தி மேலிருந்து தூண்டுவதால் நிகழ்வதென்!

இந்தக் கதை சொல்லப்பட வேண்டிய ஒரு கதை!

நான் அதற்கொரு கருவி!

அவ்வளவே!

இதைப் படிப்பவர்க்கும் அவ்வாறே!

செல்ல வேண்டியவர்க்கே இது செல்லும்!

இதை ஏதாவது ஒரு பத்திரிகைக்கு அனுப்பலாமே என ஒரு எண்ணம் வந்தது, முதலில்!

நம்மை அங்கீகரிப்பவர்களே..... அவர்கள் எவ்வளவு பேராயினும் சரி.... அவர்கள் பார்வைக்கே இது போய்ச் சேரட்டும் என ஒரு ஆணை மனதில் உதித்தது!

எனவே இது இங்கு... உங்கள் பார்வைக்கு!

படித்தவர்கள் தயவு செய்து எங்காவது ஒருமுறை தங்கள் முகத்தைக் காட்டினால் மகிழ்வேன். அது உங்கள் விருப்பம்! கட்டாயமில்லை.

இத்தனை பீடிகைக்குப் பின்னர், இனி அதிகம் சொல்ல ஒன்றுமில்லை.

நிச்சயம் இது உங்களுக்குப் பிடிக்கும்.

இனி வருவது.....

"சித்தர்" [என்கிற] "கனவு மெய்ப்படும்!"

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அடுத்த அத்தியாயம்

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP