Friday, October 21, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- - 32

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- - 32
31

'இந்தப் பாட்டுல வர்ற கடைசி வரிக்கு பொதுவா எல்லாரும் சொல்ற அர்த்தம் ஒண்ணு இருக்கு. அதுக்கு இன்னொரு அர்த்தமும் சொல்லலாம். அதான் இதுல ரொம்ப முக்கியம்' என ஆரம்பித்தான் மயிலை மன்னார்.


'எனக்கும் அதைக் கேழ்க்கணும்னுதான் ஆசை' எனக் கூடச் சிரித்தார் சாம்பு சாஸ்திரிகள்.


'அப்படி என்ன அந்தக் கடைசி வரியில் இருக்கு' என நானும், நாயரும் ஆவலானோம்!


'பாட்டைப் படி' என்றதும் வேகமாகப் படித்து முடிக்கவும், மன்னார் அதைப் பதம் பிரித்துச் சொன்னவுடன், அந்தக் கடைசி வரி கொஞ்சம் 'ஒரு மாதிரியாகத்தான்' இருந்தது.

பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே
வீழ்வா யெனவென் னைவிதித் தனையே
தாழ்வா னவைசெய் தனதா முளவோ
வாழ்வா யினிநீ மயில்வா கனனே

பாழ் வாழ்வு எனும் இப்படு மாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே


'அந்த வரிக்கு அப்பால வரலாம். இப்ப மொதல்லேர்ந்து பாப்பம்' என்ற மன்னார்,

"பாழ் வாழ்வு எனும் இப் படு மாயையிலே வீழ்வாய் என என்னை விதித்தனையே"

'முருகனைப் பார்த்து ஒரு கேள்வி கேக்கணும்னு தோணுது அருணகிரியாருக்கு.


அது இன்னான்றத அடுத்தாப்பல பாக்கலாம். அதுக்கும் முன்னாடி, எதுக்காவ அப்பிடிக் கேக்கணும்னு இவுருக்குப் படுது?
பொறந்ததுலேர்ந்து இந்த நாள் வரைக்கும் தான் பட்ட அவஸ்தையையெல்லாம் நெனைச்சுப் பாக்கறாரு ஒவ்வொண்ணா !!


இதுதான் சதம், இல்லலயில்ல, இதான் நெலையானது; அட, இத்த மறந்துட்டேனே, இதுல்ல எங்கூடவே வரப்போவுதுன்னு, இன்னான்னாத்துக்கும் பின்னாடி அலைஞ்சு திரிஞ்சு, எல்லாம் கொஞ்ச நாளைக்கு நெசம் மாரித் தெரிஞ்சு, 'சட்'டுன்னு, ஒரு காரணமுமில்லாமியே, இல்லாங்காட்டிக்கு, வேற ஏதோ ஒண்ணு கெடைச்சுதுன்னு வெலகிப்போன, இந்தப் பாளா[ழா]ப்போன வாள்[ழ்]க்கையை நெனைக்கறாரு.


'ஒரு அரை நிமிஷ நேரங்கூட மெய்யான ஒன்னிய நெனைக்கமுடியாம, ரொம்ப, ரொம்ப மோசமான மாயைவலையில விளு[ழு]ந்து பொரளுடான்னு என்னியத் தள்ளிவுட்டியே நீ முருகா'ன்னு முருகன் மேல ஒரு கோவம் கொஞ்சம் வருது அருணையாருக்கு. அதான் 'படு மாயை'ன்னு போட்டுத் தாக்கறாரு.


நான் இன்னா தப்புத்தண்டா பண்ணினேன்னு இப்பிடி ஒரு விதிய எனக்குக் குடுத்தே நீ முருகான்னு அடுத்த வரியுல ஒரு கேள்வி கேக்கறாரு.

"தாழ்வானவை செய்தன தாம் உளவோ"ன்னு இந்த வரி பேசுது. அதுக்குள்ள ஒரு சின்ன சூட்சுமம் க்கீது! அது புரிஞ்சுட்டா, அடுத்த வரியை எப்பிடி சொல்லலாம்ன்றது சுளுவாயிரும்!


'எந்தா ஆ சூட்சுமம்?' என அவசரமாகக் கேட்டான் நாயர்.


'அவசரப்படாதே! சொல்றேன்.... எனக்குப் பட்டத!' எனத் தொடர்ந்தான் மன்னார்.


பொதுவா, இந்தப் பாட்டுக்கு அர்த்தம் சொல்றவங்க அல்லாருமே,ரெண்டு, ஒண்ணு, ஒண்ணுன்னு இந்த நாலு வரியையும் பிரிச்சுப் பார்த்து,..... மொத ரெண்டு வரியுல தன்னைப் பத்திப் பொலம்பறதாவும், அடுத்த வரியுல, அப்பிடி நான் இன்னா தப்பு பண்ணினேன்னு சொல்லுன்னு கேக்கறதாவும், நாலாவது வரியுல, 'நீ நல்லா இருப்பா... எனக்கு இப்பிடிப் பண்ணினதுக்கு அப்பாலியும்'னு சொல்றதாத்தான் வியாக்கானம் பண்ணுவாங்க.


ஆனாக்காண்டிக்கு, மொத ரெண்டு வரியுல, தனக்கு நடந்ததச் சொல்லி வருத்தப்பட்டவரு, இந்த ரெண்டு வரியுலியும் முருகனோட பெருமையைச் சொல்றதாத்தான் நான் பாக்கறேன்.


'எனக்கு இதும்மாரி ஒரு மாயா வாள்[ழ்]க்கையைக் கொடுத்தியேன்னு நான் கொஞ்சம் வேகப்பட்டாலுங்கூட,..முருகா... ஒடனே எனக்கு ஒண்ணே ஒண்ணுதான் மனசுல படுது!
எப்பவாச்சும் நீ தப்பானதுன்னு எதுனாச்சும் பண்ணியிருக்கியா? நீ பண்ணினதெல்லாமே..... ஒன்னோட மட்டுமில்ல.... ஒன்னைத் திட்டினவங்களைக்கூட நீ வாள[ழ]வைச்சிருக்கே! அதுவும் எப்பிடி? நெனைச்ச ஒடனியே வேகமாப் பறந்துவர்ற மயில்மேல குந்திக்கினு வந்து காப்பாத்தற கடவுள் நீ! …… அதான் இந்த....” தாழ்வானவை செய்தன தாம் உளவோ?”

இப்போ, இந்தக் கடைசி வரி... “வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே!”

அப்பிடியாப்பட்ட நீ இனிமே என்னோட வாள்[ழ்]வாவே ஆனபின்னாடி, எனக்கு ஒரு கவலையுமில்லை முருகா!'ன்னு அருணகிரியாரு சொல்றதாத்தான் எனக்குப் படுது!

எனக்கு இன்னாமாரி கஸ்டம்லாம் நீ குடுத்திருக்கேன்னு நெனைக்கறத வுட்டுட்டு, இப்ப நீயே வந்து எனக்கு அருள் பண்ணிட்டதால, என்னோட வாள்[ழ்]வே நீதான்னு ஆயிருச்சு முருகா! இனி எனக்கு இன்னா குறை இருக்கப் போவுது'ன்னு அருணையாரு சொல்றதாத்தான் நெனைக்கறேன்.

இந்த அர்த்தத்துல இப்ப அந்த ரெண்டு வரியையும் படிச்சுப் பாரு' என்றான் மயிலை மன்னார்! '

""தாழ்வானவை செய்தன தாம் உளவோ? வாழ்வாய் இனி நீ',.... மயில் வாகனனே"

மன்னார் சொன்னதும் பொருந்தி வருவதாகத்தான் எனக்கும் பட்டது!

'ஓம் சரவணபவ மயில்வாகனா' என நாயர் சொல்லிக் கொண்டிருந்தான்!
**************
[தொடரும்]

வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP