Sunday, September 14, 2008

"விநாயகர் அகவல்" -- 5

"விநாயகர் அகவல்" -- 5



முந்தைய பதிவு

குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென [22]

தன்னைத் தானே உணரும் பேறு

எல்லாருக்கும் வாய்ப்பதுமில்லை

தன்னையுணரச் செய்திட இங்கு

குருவென ஒருவன் வந்திடல் வேண்டும்

இறையருள் கூடி ஞானம் பிறந்திடக்

குருவே எமக்குத் திருவருள் புரிவான்

இதுவே உண்மை இதுவே மெய்யென

நல்லவை உணர்த்தித் திருவடி தருவான்

ஐந்தெழுத்தை அகத்தில் வைத்து

அனுதினம் நின்னை எண்ணித் துதித்திட

அன்புக்கணபதி நீயே என் குருவாய் வந்து



வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே [24]


இதுவரை இங்கு வாடியதெல்லாம்

தீர்ந்தது என்று அருளினை வழங்கி

கையினில் ஏந்திய தந்தக்கோலால்

முந்தைவினைகளை முழுதுமாய் அழித்து

மகிழ்வாய் என்றன் கலியினைத் தீர்த்து



உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி [26]


எத்தனை முறை யான் கேட்டபோதிலும்

முன்னிலும் இனிப்பாய்த் திகட்டாச் சொல்லை

பாவங்கள் போக்கிடும் திருமந்திரத்தை

உய்த்திடச் செய்திடும் உபதேசத்தை

என்றன் செவியில் அன்புடன் ஓதி

நூல்பல ஓதி கிடைக்கா ஞானம்

நீயே வந்து உரைத்திட்ட ஞானம்

யானெனும் செருக்கை ஒழித்திட்ட ஞானம்

திருவடி வைத்துத் தந்திட்ட ஞானம்

என்றும் எனக்குத் தெவிட்டா ஞானம்

அதனை அறிந்ததில் தெளிந்தது ஆன்மா
******************************************
[தொடரும்]

அடுத்த பதிவு

Read more...

"விநாயகர் அகவல்" -- 4

"விநாயகர் அகவல்" -- 4





முந்தைய பதிவு

முப்பழ நுகரும் மூஷிக வாகன! 15


தோல், விதை, கொட்டை ஏதும் தள்ளாது

அனைத்தும் கொள்வது ஆனையின் குணமே

அன்பால் பழுத்த அடியவர்தம்மில்

குற்றம் குறைகள் ஏதுமிருப்பினும்

அப்புறம் தள்ளா அருட்பெருங்கடலிவன்!

ஆனை வடிவம் கனத்ததோர் உருவம்

ஆயினும் அமர்வதோ பெருச்சாளி மேலே

எவரும் தாங்கிடும் வண்ணம் மென்மை

அருளைப் பொழிபவன் என்பதை உணர்த்தும்

“குண்டலியோகம் செய்பவர் உள்ளில்

குறுகுறுவெனவோர் உணர்வும் ஓடும்

பெருச்சாளி ஒன்று ஓடுதல்போல

அவ்வுணர்விருக்கும்”-
இது ஆன்றோர் வாக்கு!

மூலம் தொடங்கி மேலே ஏறிடும்

குண்டலிக் கனலின் உச்சியில் இருப்பவர்

விநாயகன்
என்றும் அறிந்தவர் சொல்லுவர்!



இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்

தாயா யெனக்குத் தானெழுந் தருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் [18]



எத்தனைதான் பட்டாலும் வாடியிங்கு நொந்தாலும்

மீண்டுமிந்தப் பிறவியெனும் ஆழ்கடலில் உழல்வதுவே

வாழுகின்ற உயிர்க்கெல்லாம் வாடிக்கை ஆகிப்போச்சு!

போதுமிந்தப் பிறவியென மனமிங்கு நினைக்கையிலே

சூது மிகுந்த வாழ்க்கையினிப் போதுமென எண்ணுகையில்

மாயமிந்தப் பிறவியென மனமுணரும் நேரத்தில்

தாயாக நீ வந்து தயை செய்து காத்திடவே

நாயாக நானிங்கு உழலாமல் பிறப்பறுத்து

நீயாக என்முன்னே இப்போதே எழுந்துவந்து

அடியேனை ஆட்கொள்ள வேண்டுமெனும் என்கதறல்



திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்

பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து [20]



பிறவிப்பயனின் விளைவாய்ச் சிறிது சிறிதாய்க்

குறைந்திருந்து, நின்றன் கருணை என்னில் தெரிந்து

நின்னையே நாடி ஐந்தெழுத்தை அன்புடன் ஓத

மூலாதாரம் முதலில் கிளம்பி, சுவாதிட்டானம்

நாபி, இதயம், கண்டம் புருவமத்தி
என்னும் இடங்களில்

சுழுமுனை வழியே நின்று துதிக்கும்

பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவம்

என்னும் ஐவரும் ஒவ்வொரு எழுத்திலும் நின்றிருந்து

ஓதும் நாமம் நாதமாய் மாறிட

கதறல் கேட்ட கணபதி அதனில்

ஓம் எனும் நாதமாய் வருவான்

நற்றுணை புரிவான் இதயம் பொருந்தத்

தன் திருவருள் தருவான் கணபதி.
*******************************************
[தொடரும்]

[நீலக் கணபதியை மேலே தரிசியுங்கள்!!]

அடுத்த பதிவு

Read more...

"விநாயகர் அகவல்" -- 3

"விநாயகர் அகவல்" --- 3




முந்தைய பதிவு இங்கே

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் [8]


படைத்தல் காத்தல், அழித்தல்,

மறைத்தல், அருளல் என்றே உலகில்

இறையவன் செய்திடும் ஐந்தொழிலாகும்

நான்கு கரங்கள், எட்டுக்கைகள்

பன்னிரு தோளெனக் கடவுளர் உண்டு

ஐங்கரம் கொண்டு ஐந்தொழில் செய்யும்

அருள்நிறைக் கடவுள் கணபதி இவனே

முன் ஒருகையில் ஒடித்த தந்தம்

எழுத்தாணி எனவே அதனைக்கொண்டு

படைக்கும் தொழிலைச் செய்கின்றான்

இன்னொரு கரத்தில் மோதகம் ஏந்தி

அனைத்தையும் காக்கும் காப்புத் தொழிலையும்

மூன்றாம் கரத்தில் அங்குசம் ஏந்தி

அழித்தல் தொழிலையும் புரிகின்றான்

நாலாம் கரத்தில் பாசம் தாங்கி

மறைக்கும் கருமம் நிகழ்த்துகிறான்

ஐந்தாம் கரமாம் தும்பிக்கையினில்

அமுதக் கலசம் அதனைத் தாங்கி

அருளினை எமக்கு வாரித்தருகிறான்

ஆனையின் நிறமோ கருமை ஆகும்

ஆடையுடுத்ததோ வெண்மை ஆகும்

இரண்டும் கலந்தால் நீலம் ஆகும்

கண்ணுக்குக் குளுமை நீல நிறமே

தனியே தன்னந்தனியே......

அகத்தில் இவனைத் தனியே நிறுத்தி

வெளியன் இவனை வழிபடும் அன்பர்

அழியாநலனைப் பெற்றிடுவார் எனும்

நம்பியாண்டான் நம்பி சொன்னது

நீலத்திரு மேனியின் எழிலின்

தன்மைகுறித்தே என்றே கொள்க.


நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் [10]


அடியவர் நெஞ்சினில் அன்புடன் அருளும்

மந்திரம் யாவையும் சொல்லிடும் வண்ணம்

நாயகன் வாயும் தொங்கிய வண்ணம்!

ஆனையின் வாயினைப் போலே கீழே

தொங்கிடும் வாயின் பெருமை இதுவே!

நாலிரு புயமெனில் எட்டென வேண்டா

இருபுயம் என்பது வலிமையைக் குறிக்கும்

நுதலில் இருந்து வளர்ந்திடும் துதிக்கை

தோளெனத் தனியே அமைவது இல்லை

எனவே கணபதி வலிமை பொருந்திய

நான்கு புயங்களைத் தன்னில் கொண்டான்!

பகலவன், முழுமதி, அக்கினி எனவே

மூன்று கண்களைக் கொண்டவன் நாயகன்

மும்மதம் என்னும் ஆன்மவினைகளின்

பாவம் கழுவிடும் மதநீர் சுரப்பால்

முகத்தில் தழும்பாய்க் கோடினை உடையவன்

[நான்ற= தொங்குகிற; சுவடு= தழும்பு]



இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் [12]


எவர்க்கும் உண்டிங்கு இருசெவிகள்

இருந்தும் பயனற்று வாழ்கின்றார்

செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்

என்று பாடினான் வள்ளுவன் இங்கு!

செவியின் பயனைச் சரியாய் உணரா

இழிநிலை மாந்தர் தன்னிலை மறந்தார்

நாயகன் புகழைக் கேட்பது ஒன்றே

செவிகள் செய்யும் புண்ணியம் என்று

அதனைச் செய்திடும் உயர்நிலை தவத்தோர்

அருளைப் பாடி அவனடி பணிய

அவனிரு செவிகளும் அசைந்து கொடுக்கும்!

ஆம்!~

கணபதி திருச்செவி மட்டுமே இங்கு

அசையும் தன்மை உடையனவாகும்!

வேறெவர் செவியும் அசைவது இல்லை

ஆனையின் செவிகள் மட்டுமே புரியும்!

ஆனைப்பாகன் ஆனையின் மீது

ஏறிடப் பற்றிடும் ஒருபொருள் செவியே!

கணபதி செவிகளைப் பற்றியவண்ணம்

பிறவித்துயரை ஒழித்திட முடியும்

அத்தகு பெருமை வாய்ந்திட்ட செவிகளை

ஔவை இங்கே அழகுறப் போற்றினார்!

மூவுலகுயிரும் ஒன்றாய் வணங்கிடும்

முழுமுதற்கடவுள் கணேசன் ஆவான்

அவனது முடியினில் பொலிவாய்த் திகழும்

பொன்முடி இவனே அரசன் என்னும்!

ஓமெனும் பிரணவ மந்திரம் காட்டும்

முப்புரிநூலைத் திருமார்பில் தாங்கி

ஒளியெனும் அறிவை எமக்குத் தருபவன்

விநாயகன் என்றே இச்சொல் உணர்த்தும்!



சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே! [14]



அறிவுறை மாந்தர் பகுத்தறிவென்னும்

ஒருநிலைநின்று வாதம்செய்து நாளைக்கடத்துவர்

உண்மை அறிவுடை உயர்நிலை தவத்தோர்

உண்மை எதுவெனப் புரிந்தே இருப்பர்


ஐம்புலன் ஆசையில் அகப்பட்ட ஆன்மா

விழித்திரும்போது சூழ்நிலை அறிந்து

வேதனைகொள்ளும் நிலையினை ஆன்றோர்

ஜாக்கிராவஸ்தை என்று சொல்லுவர்

கனவுலகில் சென்று அலையும் ஆன்மா

விரும்பிய இடங்களைத் தானே அடைந்து

எங்கும் பரவி உணர்வுகள் கொள்ளும்

நிலையினை சொப்பனாவஸ்தை எனபர் அறிந்தோர்!

இவ்விரு நிலையிலும் சொற்களின் ஆட்சி

அதிகம் இருக்கும் என்பதை உணர்க!

ஆழ்நிலைத் துயிலில் சுழுத்தியில் அடங்கிய

சொற்கள் தம்மின் வலிமை இழக்கும்

பேசாநிலையில் ஆன்மாஇருந்தும்

இதுவோர் மறதிநிலையே!

இதனால் பெரிதும் பயனேதுமில்லை!

மனத்தை அடக்கி பிராணனில் ஒடுக்கி

சித்தம் தன்னை அவனில் நிறுத்தி

இருக்கும் நிலையைத் துரியம் என்பர்

ஆன்மா இங்கே இறையை உணரும்

காலமும் நேரமும் கடந்து நின்று

இன்பமும் துன்பமும் ஒழிந்து சென்று

பிறப்பும் இறப்பும் இல்லா நிலையிது

இந்நிலைதன்னில் இருப்பவன் கணேசன்

அனைத்தையும் தந்திடும் கற்பகத் தரு அவன்!

யானை அதிலும் ஆண்யானையாம்!

அதனால் கற்பகக் களிறே என்கிறார்!



[தொடரும்]


*********************


அடுத்த பதிவு





Read more...

"விநாயகர் அகவல்" --- 2

"விநாயகர் அகவல்" --- 2




ஔவையார் அருளிச்செய்த "விநாயகர் அகவல்"

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாடப் [2]




குளிர்நிறை சந்தனம் பூசிய கழல்கள்

தாமரை மலரினைப் போலச் சிவந்தவை

கால்களில் குலுங்கும் பாதச் சிலம்புகள்

பேரொலி எழுப்பும் இன்னிசை ஒலிகள்

திருவடி அதனில் பிரபஞ்சம் பிறந்தது

நாத ஒலியினில் நானிலம் பிறந்தது

அனைத்தும் இவனின் அடிகளில் பிறந்தன

ஒவ்வொரு ஒலிக்கும் புதிதுபுதிதாய்

இசையொலி எழுப்ப யுகங்கள் பிறந்தன

மூலாதாரக் கனலினைக் கிளப்பும்

நாயகன் கழல்கள் நாதம் எழுப்பும்

நாதத்திலிருந்து அனைத்துமே பிறக்கும்

[சீதம்= குளிர்; களபம்= சந்தனம்]





பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் [4]



பொன்னால் ஆகிய அரைஞாண் கயிறும்

பூவினைப் போலும் மென்மை தவழும்

வெண்ணிறப் பட்டில் மின்னும் ஆடையும்

பெருத்த இடுப்பில் பாங்குடன் மிளிர

[பூந்துகில்= மென்மையான வெண்ணிறப்பட்டு; மருங்கு= இடை, இடுப்பு; எறிப்ப= ஒளிபரப்ப]


பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்குசிந் தூரமும் [6]



திருவடி தொடங்கி இடைவரை வந்தவர்

அண்டசராசரம் அனைத்தும் அடங்கும்

ஆனைமுகத்தோன் பானைவயிற்றில்

பெட்டியைப் போலும் பெருநிறை வயிற்றில்

சற்றே கனிந்து அதைப் பாடுகின்றார்.

ஆனைமுகத்தோன் அதனால் இங்கு

கனத்த முகத்தோன் ஒற்றைக் கொம்பன்

அழகுறை நெற்றியில் சிவந்ததோர் பொட்டு

சிந்தூரம் எனவே அதனைச் சொல்வர்

திருவடி துவங்கி முகநிறை தரிசனம்

ஔவை செய்விக்கும் ஆனந்த தரிசனம்!

[பேழை= பெட்டி; பாரம்= கனம்; கோடு= தந்தம்; வேழம்= யானை; சிந்தூரம்= சிவப்புப் பொட்டு]

Read more...

"விநாயகர் அகவல்" --- 1

"விநாயகர் அகவல்" --- 1
என் இனிய அன்பான நண்பர்களே,

ஔவையார் அருளிய விநாயகர் அகவல் நான் தினமும் ஓதும் ஒரு பனுவல்.

சேரமான் நம்பி கைலாயம் செல்ல விரைகிறார்!

ஔவையாரையும் உடனழைக்க, தன் பிள்ளையார் பூஜையை முடித்த பின்னே வர முடியும் என்கிறார் ஔவையார்.

காத்திராமல் நம்பி விரைய, ஔவையார் பூஜையைத் தொடர்கிறார்.

அப்போது பிறந்ததுதான் விநாயகர் அகவல்!

அகவலைப் பாடி முடித்ததும், தன் தும்பிக்கை மூலம், விநாயகப் பெருமான் ஔவையாரை நேராக ஒரு நொடியில் கைலாயம் கொண்டு சேர்த்ததாக வரலாறு!

அதாவது, இதில் சொல்லியபடி செய்தால், இறைவனடி சேரலாம் என்பது கருத்து!!

இதெல்லாம் தெரியாமலேயே, இதன் இனிமையும் சந்தமும் என்னை மிகவும் கவர்ந்தது.

பொருள் முழுதும் அறியாமலேயே இதனைச் சொல்லி வந்திருந்தேன்.

தமிழ்மணத்தில் பதிவெழுதத் தொடங்கியபின், இதனை மேலும் ஆழ்ந்து படிக்கத் துவங்கினேன்.


அகவல் என்றால் "அழைப்பது" எனப் பொருள்!

என் முருகனின் மயிலும் அகவும்!!

எனவே, இது மேலும் என்னைக் கவர்ந்தது!

இதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின!

இதனை என் மொழியில் சொல்ல வேண்டும் என்ற ஆசையை என்னுள் ஏற்படுத்தியது முருகனருள்.

எழுதி முடித்ததும், நான் மிகவும் மதிக்கும் ஒரு பெரியவரிடம் இதை அனுப்பினேன்.

பத்து நாட்களாகியும் அவரிடமிருந்து பதிலில்லை.

இன்று காலை ஒரு மடல்...... பதியச் சொல்லி!

தாமதம் இல்லாது, இதோ உங்கள் பார்வைக்கு.

சொல்ல வேண்டிய செய்திகள் அனைத்தையும்,....... சொல்லப்போகும் அவையின் மனமறிந்து, ....... சொல்லி இருக்கிறேன் என நினைக்கிறேன்

திங்கள் முதல் வெள்ளி வரை, தினம் ஒரு பதிவாகத் தொடர்ந்து வரும்.

வழக்கம் போல் நீட்டி முழக்கித்தான்!

படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்!



வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்!


அனைவர்க்கும் முருகனருள் முன்னிற்கும்!

*******************************************************




Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP