Thursday, November 30, 2006

அ.அ.திருப்புகழ் -- 14 - "திருமகள் உலாவும்"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 14 - "திருமகள் உலாவும்"

முருகப்பெருமானின் எட்டுவிதக் குணங்களைக் கூறும் அருமையான பாடல் இது.
என்னை மிகவும் கவர்ந்த இப்பாடலில் அக்கருத்தினை எவ்வளவு அழகுறச் சொல்கிறார் பாருங்கள்!
இசைத்துப் பாடிக் கேட்பதற்கும் மிக இனிமையான பாடல்.

அதுவும் சித்ராவின் தேன்குரலில் இப்பாட்டினைக் கேட்கணும்!

வலையேற்ற முயற்சிக்கிறேன், தெரிந்தவர் உதவி கொண்டு.

.................பாடல்.....................

தனதனதந்தன தனதனதந்தன
தனதனதந்தன தனதான

திருமக ளுலாவு மிருபுய முராரி
திருமருக நாமப் --பெருமாள்காண்
ஜெகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் --பெருமாள்காண்

மருவுமடி யார்கள் மனதில் விளையாடு
மரகத மயூரப் --பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவுகதிர் காமப் --பெருமாள்காண்

அருவரைகள் நீறு பட அசுரர் மாள
அமர் பொருத வீரப் --பெருமாள்காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் --பெருமாள்காண்

இருவினையி லாத தருவினை விடாத
இமையவர்கு லேசப் --பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி நோதப் --பெருமாளே.

............................................................

.................பொருள்................


இதற்கான பொருள் மிகவும் எளிது!

"திருமகள் உலாவும் இருபுய முராரி
திருமருக நாமப் பெருமாள் காண்"

காக்கும் கடவுளாம் பரந்தாமன்
காப்பதெல்லாம் யார்துணை கொண்டு?
வீரமிகு தோள்களில் வீற்றிருக்கும்
வீரலக்ஷ்மியின் வீரியத்தாலன்றோ!


முரனென்னும் அசுரனை அழித்து
முராரியெனப் பெயர்பெற்றதுவும்
இன்னுமிந்த உலகினைக் காப்பதுவும்
அவள் அளிக்கும் புயவலிமையாலன்றோ!

இவ்விருவர் மருகரென பேர்பெற்று விளங்கிடும்
எம்பெருமான் இவனெனவே அறிந்திடுவாய்!
அடியவர் மானம் காத்து அருளுவதால்
இவனே "மானமூர்த்தி" என உணர்ந்திடுவாய்!

"ஜெகதலமும் வானும் மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் பெருமாள் காண்"

மண்ணவரும் விண்ணவரும் மனமுருகிப் பாடுகின்ற
பண்ணிசைக்கும் பாடல்களின் இன்னிசையைக் கேட்டுணரும்
என்னருமைக் கந்தன்பிரான் இவனென்றே தெளிவாய் மனமே!
அண்ணலிவன் "கானமூர்த்தி" என உணர்வாய் மனமே!

"மருவும் அடியார்கள் மனதில் விளையாடும்
மரகத மயூரப் பெருமாள் காண்"


சிறுபிள்ளைக் குமரனவன்
சிரித்தாட இடம் வேண்டும்!
இரவும் பகலும் அவனை எண்ணி
உருகும் அடியார்கள் மனமே ஆடுகளம்!
பச்சைமயில் வாகனனும்
பரவசமாய் அதை நாடி
ஆடாமல் ஆடுகிறான்
அடியவரின் மனத்தினிலே!
அதை அறிந்து அவனொன்றே
"தியானமூர்த்தி" எனத் தெளிவாய்!

"மணிதரளம் வீசி அணி அருவி சூழ
மருவு "கதிர் காமப்" பெருமாள் காண்"

அவுணர்கோமானாம் சூரனை அழித்திடவே
சிவனார் கண்ணினின்று பிறந்திட்ட பாலனவன்
சீரலைவாய் கடந்து தென்னிலங்கை சென்றடைந்து
போர்க்கோலம் தாங்கி நின்று கோபாவேசமாய்
நின்றிட்ட புண்ணியத்தலம் கதிர்காமம்


பொங்கிவரும் மாணிக்கநதி நீரில் திரண்டுவரும்
இரத்தினமும் முத்துகளும் திருமுருகன் காலடியில்
அருவியங்கே பொழிந்துவரும் அழகான காட்சியுண்டு.
உருவமங்கு கிடையாது; திரையொன்றே வணங்கப்படும்
விண்ணுக்கும் மண்ணுக்கும் வானளாவி நிற்பவனை
"வானமூர்த்தி" என நீயும் வணங்கிடுவாய் மனமே!

"அருவரைகள் நீறுபட அசுரர் மாள
அமர் பொருத வீரப்பெருமாள் காண்"

அங்கிருந்து வேல்விடுத்து அசுரர் குலமழித்து
தீங்குசெய்த சூரனையும் மலைகளையும் பொடியாக்கி
வீரமிகு போர்செய்து அடியவர் துன்பமகற்றிய
தீரனிவனை "வீரமூர்த்தி" என பணிந்திடுவாய் நெஞ்சே!

"அரவு, பிறை, வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் பெருமாள் காண்"

தவமொன்றே தனிப்பயன் அளித்திடும்
சிவனெமக்கு வேண்டாமென்று ஆணவத்தால்
அபிசாரவேள்வி செய்து அழிக்கவல்ல பாம்புகளை
ஏவிவிட்ட முனிவர்களை முறியடித்து அரவங்களை
ஆபரணமாய் அணிதிட்டான் ஆலவாயழகன்.

தக்கன் சாபத்தால் கலையழிந்து உருக்குலைந்த
சந்திரனைக் காக்கவெண்ணி அஞ்சேலென்று
தன் தலையில் சூடிக்கொண்ட சந்திரமௌளி.

உலகத்தை அழிக்கவென உக்கிரமாய்ப் புறப்பட்ட
கங்கையின் சீற்றமடக்கி தன்சடையில் அதைத்தாங்கி
உலகுய்யச் செய்திட்ட உத்தமனாம் கங்காதரன்.

இத்தனையும் தான் கொண்டும்
அத்தலை பணிந்து வணங்க
பிரணவத்தின் பொருள் கேட்ட
தகப்பனுக்கே உபதேசித்த
குருநாதன் என்னப்பன்
சாமிநாதன் "ஞானமூர்த்தி"
என்றே வணங்கிடு நன்னெஞ்சே!

"இருவினை இலாத தருவினை விடாத
இமையவர் குலேசப் பெருமாள் காண்"

நல்வினை தீவினை என்னுமிரண்டும்
தமக்கென்று இல்லாமல், மனிதருக்கு
அவரவர் வினைக்கேற்ப பலனளிக்கும்
தேவர்களின் குலமழியாமல் காத்து
வாழ்வளித்த வள்ளலாம் குமரக்கடவுள்
"தியாகமூர்த்தி" என அல்லும் நினைத்திடுவாய்.

"இலகுசிலை வேடர் கொடியின் அதிபார
இருதன விநோதப் பெருமாளே."

பரம், அபரம் எனும் இருவித ஞானமுண்டு.

இவ்வுலக சிந்தனையில் இன்பமுடன் ஈடுபட்டு
செய்கருமம் செப்புடனே செய்து பரம் உணரலாம்.
செய்வதெல்லாம் அவன் செயலேயென்றுணர்ந்து
இறைவனிடம் பக்திவைத்து அபரம் அறியலாம்.

இவ்விரண்டும் தன்னகத்தே வைத்திருந்து
உலகனைத்தும் இன்புறவேயென்று இன்முகம் காட்டி
இன்பசக்தியாம் வள்ளியம்மையுடன் இனித்திருக்கும்
"போகமூர்த்தி"யாய் விளங்கும் முருகனை பணிந்திடுவாய்.
.............................................................

இவ்வண்ணம் இப்பாடலில் எட்டுமூர்த்தியும் காட்டி
நல்வண்ணம் நம்வாழ்வில் நாம் உய்ய நமக்களித்து
பொன்வண்ணக் குமரனின் கோலமெல்லாம் காட்டிய
பண்வண்ணன் அருணையானின் பதம் பணிந்து போற்றுவோம்.
------------------------------------------------------------


அருஞ்சொற்பொருள்:

தரளம் == முத்து
அருவரைகள் == சிறந்த மலைகள்
அரவு == பாம்பு
பிறை == நிலவு
வாரி == நீர் [கங்கை]
விரவு சடை வேணி == [மேற்கூறிய மூன்றும்] கலந்து வாழ்கின்ற சடைமுடியை உடைய [சிவன்]
அமலர் == சிவன்
தருவினை == நமது வினையால் வரும் விளைவுகள்
இமையவர் == தேவர்
இலகு சிலை வேடர் == கையில் வில் தாங்கி நிற்கும் வேடர்

-----------------------------------------------------------------


வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும் !
அருணகிரிநாதர் தாள் வாழ்க!

******************************************************************

Read more...

Tuesday, November 28, 2006

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 9

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 9

இன்னா, அண்ணாத்தை காரியம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?" என்று பரிவோடு வரவேற்றான் மயிலை மன்னார்.

"ம்... எல்லாம் முடிஞ்சு அவரும் போய் சேர்ந்துட்டாரு. நானும் ஊர் வந்து சேர்ந்தாச்சு" என்று சொல்லிய என்னைப் பார்த்து,

"தோ, இப்ப இன்னாத்துக்கு கலங்குறே நீ? அல்லாரும் ஒருநாளைக்கு போய்ச் சேர வோண்டியவங்கதான். ஆனா, அதுக்கு முன்னாடி, நாம யாரு, இன்னான்ற அறிவு நமக்கு வரணும். அப்பால, இதெல்லாம் நம்மை ஒண்ணும் பண்ணாது; இந்த சாவைப் பத்தி நாமளும் கலங்க மாட்டோம். இத்தப் பத்தி நம்ம ஐயன் இன்னா சொல்லியிருக்காருன்றதை சொல்றேன், அத்த எளுதிக்கோ" என்றான் மன்னார்.

இனி வருவது குறளும், அதற்கு மயிலை மன்னாரின் விளக்கமும்.

அதிகாரம் 36: மெய்யுணர்தல்

"பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு." [351]

நாம இந்த ஒலகத்துல பொறக்கறது எது சரி, எது தப்புன்னு சரிவர ஆராய்ஞ்சு பாத்து நடக்கறதுக்காவத்தான்.
ஆனா, நாம இன்னா பண்றோம்?
நெலையில்லாத பொருள் மேல ஆசை வெச்சு ஏமாந்து போறோம்.
இந்தக் காரு, பங்களா, சொத்து, சொகம் இதெல்லாம்தான் சாசுவதம்னு மயங்கறோம்.
இந்த மயக்கம் தீர்ற வரைக்கும் இந்தப் பொறப்புலேர்ந்து நாம தப்ப முடியாது.


"இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு." [352]


இந்த நல்லது கெட்டது இத்தெல்லாம் இன்னான்னு புரிஞ்சுகிட்டு, அத்தோட மயக்கம் நீங்கிப் போச்சுன்னா, நல்லது, கெட்டதுன்னு ஒண்ணும் கிடையாது; நடக்கறதுல்லாம் ஒரு நிகழ்வு; அவ்வளோதான்னு புரிஞ்ச தெளிவு வந்திடுச்சின்னா, அப்பால அல்லா இருட்டும் வெலகிப் போயி, சந்தோசம் மட்டுந்தான் நிக்கும் ஒன்னோட. இன்னா நடக்குதோ, அது அல்லாம் ஒன்னோட நன்மைக்குத்தான்னு நெனைச்சுக்கோ. சரியா?

"ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து." [353]

இந்த ஒலகத்துல இருக்கற எதுவும் ஒனக்கு சொந்தமில்லைன்னு ஒரு நெனைப்பை வளர்த்துக்கோ.
அப்போ இன்னா நடந்தாலும் அது ஒன்னிய பாதிக்காது.
இவன் ஏன் இப்படி செய்ஞ்சான்; அவன் ஏன் அப்பிடி சொன்னான்னு மருகிகிட்டு இருக்க மாட்டே!
அல்லாத்துக்கும் ஒரு காரண காரியம் தேடி அலையாதே!
அப்பிடி இருந்தேன்னா, ஒரு தெளிவு பொறக்கும்.
அப்போ வானமே ஒனக்கு வசப்பட்டுரும்.

"ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லாத வர்க்கு." [354]

நீ இன்னாதான் அரிச்சந்திரன் மாதிரி பொய்யே சொல்லாம, புத்தர் மாதிரி அன்பே சத்தியம்னு, கண்ணகி மாதிரி கற்பே பிரதானம்னு, ஒன்னோட அஞ்சு அறிவையும் அடக்கிட்டேன்னு பீத்திகிட்டாலும், இந்த ஒலக மயக்கத்திலேர்ந்து வுடுபடலேன்னா, ஒரு பிரயோசனமும் இல்லை.
சும்மனாச்சுக்கும், முனிவர் மாதிரி இருக்கேன்னு சொல்லி பாவலா காட்டிகிட்டு, இன்னிக்கு சோறு கிடைக்குமா, அடுத்த பங்களா எப்போ வாங்கலாம், எந்த ஷ்டாக்குல எவ்வளோ பணம் போடலாம்னு யோசிச்சிகிட்டு இருந்தியின்னா, மவனே, நிச்சயமா ஒனக்கு அடுத்த பொறப்பு கட்டாயமா உண்டு!

"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு." [355]

இது ரொம்ப ஈசியான கொறளு.
நீ எத்தைப் பார்த்தாலும், அத்தோட உண்மையான தன்மை இன்னான்னு கொஞ்சம் ஆராய்ஞ்சு பாக்கக் கத்துக்கணும்.
ஒதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன்.
ஒரு காரு வாங்கற இப்ப.
சும்மாவா வருது!
மொதல்ல டௌன் பேமெண்ட் கட்டணும்; இன்சூரன்ஸ் எடுக்கணும், அப்பால மார்ட்கேஜு கட்டணும் மாசாமாசம்! ஆக்ஸிடெண்ட் ஆவாம ஓட்டணும்.
இத்தினி இருக்கு அதுல.
சும்மனாச்சும், காரோட அளகுல மயங்கி, தகுதிக்கு மீறி வாங்கிட்டேன்னா, ஒன் பொளைப்பு அத்தோட அம்பேல்தான்.
இது மாரி இன்னும் பலானது பலானது சொல்லலாம்!
நீயே புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன்.
அப்படி பாக்கறதுதான் உண்மையான மெய்யறிவுன்னு சொல்றாரு.

"கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி." [356]

ஒனக்கு அடுத்த பிறவின்னு ஒண்ணு வேணாம்னா, உண்மையான மெய்ப்பொருள் இன்னாதுன்னு கத்துக்க முயற்சி பண்ணு.
அதுக்கு ஒரு நல்ல குருவைத் தேடிப் போயி கத்துக்கறது நல்லது.
அவர் சொல்றதைக் கேட்டுக்க.
அப்புறமா நீயே ஒனக்குள்ளாற யோசி.
ஒரு அறிவு வரும்.
அத்தைக் கெட்டியாப் பிடிச்சுக்கோ.
அவ்ளோதான்!

"ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு." [357]

மறுபடியும், மறுபடியும் அத்தையேதான் சொல்றாரு ஐயன்.
சரியானபடிக்கா சிந்திச்சு, இந்த மெய்ப்பொருளை உணர்ந்தியானா, ஒனக்கு மறுபிறவின்றதே கிடையாது.

"பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு." [358]

மறுபடியும் ஒனக்கு பிறவி வேணுமின்னா, இந்த மயக்கத்துலியே கிடந்து பொரளு. என் வூடு, என் மக்கா, என்னோட காரு, பேங்க் பாலன்ஸுன்னு நினைச்சு நினச்சு பொலம்பிகினே இரு. திரும்பி வரலாம். இத்தெல்லாம் திருப்பியும் ஒரு தபா அனுபவிச்சு சாவலாம்.
ஆனா, ஒன்னொட நோக்கம் இத்தெல்லாம் விட்டொளிச்சிட்டு, விடுதலை வேணும்னா, உண்மையான அறிவை ஒனக்குள்ளியே தேடு.

"சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்." [359]

உரிச்சுப் பார்த்தா வெங்காயத்துல ஒண்ணுமே இல்லைன்னு சொல்லுவாங்க கேட்டிருக்கேல்லே!
அது போல, அல்லாத்தையும் உள்ளே பூந்து பார்த்தேன்னா, எதுவும் ஒனக்கு சொந்தமில்லேங்கறது புரிஞ்சு போவும்.
அப்போ, எதுவும் ஒனக்கு சொந்தமில்லேன்னா, ஒனக்கு எது மேலியும் ஒரு ஆசை இல்லாம போவும். சரியா.
அப்பிடி நடந்தேன்னா, எந்த ஒரு தும்பமும் ஒன்னிய வந்து சேராது. இதுவா, அதுவான்னு மயங்க மாட்டே நீ.

இந்தக் கொறளை,

"சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின், சார்தரு நோய்
மற்றழித்துச் சார்தரா."
அப்பிடீன்னு படிக்கணும்.

"காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்." [360]

இது வரைக்கும் இந்த மயக்கம், மயக்கம்னு சொல்லிகிட்டு இருந்தேன்ல.
அந்த மயக்கம் எதுனால வருதுன்னு இப்போ சொல்றேன் கவனமா கேட்டுக்கோ!
ஒரு பொருள் மேல வைக்கிற ஆசை மொதலாவது.
ஒருத்தர் மேல வர்ற வெறுப்பு, விரோதம், கோவம் ரெண்டாவது.
இதுவோ, அதுவோன்னு மயங்கற மயக்கம் இருக்கே அது மூணாவது.
இந்த மூணும் ஒன்கிட்ட வராம பார்த்துகிட்டியானா , ஒன்னாண்டை ஒரு விதமான தும்பமும் கிட்டக் கூட நெருங்காது.


இந்த அதிகாரத்துக்கு ஏன் மெய்யுணர்தல்னு பேரு வெச்சாரு தெரியுமா?
மெய்யின்னா ஒடம்புன்னு ஒரு அர்த்தம்; உண்மைன்னு இன்னொரு அர்த்தம்.
ஒடம்பைத் தொட்டு வர்றதுதான் மேலே சொன்ன மூணும்.
இந்த ஒடம்புல இருக்கற அந்த அஞ்சறிவுதான் நம்மை இந்தப் பாடு படுத்துது.
அத்த அடக்கக் கத்துகிட்டா, அது ஒரு விதமான மெய்யுணர்தல்.
ஆனா, அது மட்டும் போதாதாம்.
354ஐ திருப்பி ஒரு தபா படி!
அத்தைப் புரிஞ்சுகிட்டியானா, இதையும் தாண்டி, உண்மை நிலையை அறிஞ்சுக்க முயற்சி பண்றதுதான் உண்மையான மெய்யுணர்தல்னு வெளங்கும்.

நல்லபடியா புரிஞ்சுகிட்டு, நல்லா வாள்ற வளியைப் பாரு.

ஒங்க பதிவாளர்கிட்டேயும் இத்த நான் சொன்னேன்னு சொல்லு.
பைசா பொறாத விஷயத்துக்கேல்லாம் தாம் தூம்னு சண்டை போட வேணாம்னு சொல்லு.
சரி, சரி, டீ, வடை சாப்பிடலாம் வா"
என்று உரிமையுடன் அழைத்துச் சென்றான் மயிலை மன்னார்!

Read more...

Saturday, November 25, 2006

வலைபதிவர் -- சில குறிப்புகள்

''காலம்'' அளிக்கும் சில இனிய பரிசுகள்!
காலன் அளித்த பரிசினை ஏற்று, காலமான அண்ணனைக் காண,
கன்னித்தமிழகம் சென்றிட்ட வேளையிலும்
கணினியில் பரிச்சயமான கனிவான நண்பர்களைக் காண
காலம் அளித்த சில இனிய பரிசுகள்!

கோவி கண்ணன்:

கனிவான மனிதர்
கண்ணுக்கினிய மனையாளுடன்
கண்ணான மகளுடனும்
கனிவோடு வரவேற்று
கருத்தோடு கவனித்து
தனியறையில் எனை அமர்த்தி
தனித்தனியாய் பொருள் கொடுத்து
வகை வகையாய் சமைத்து போட்டு
வெற்றிலை பாக்கும் உடனளித்து
வெளியெங்கும் சுற்றிக் காட்டி
வருகையினை அறிவித்து
வரும் நண்பர்க்கு வழிகாட்டி
இனிதாக முகம் காட்டி
இனியதொரு முத்தமிட்டு
இறுகியெனைக் கட்டியணைத்து
இனிய நட்பின் இலக்கணம் காட்டி
எனைக் கவர்ந்த இனிய நண்பர்.

குழலி:

கருத்தினிலே இசைவில்லை என்றாலும்
முகத்தினிலே அதைக் காட்டாமல்
பல தூரம் பயணம் செய்து
சில நேரம் என்னுடன் கழிக்க
சிறியதொரு பையினிலே
சிவப்பான ஆப்பிள் வைத்து
வெறுங்கையில் வாராமல்
வந்தவரை வரவேற்று
எம்முடன் இருந்து
இனிய உணவருந்தி
இனிதாகப் பேசி எமை மகிழ்வித்து
இனியதொரு மாலையினை
எம்மோடு கழித்திட்ட
இனிய நண்பர்!

வடுவூர் குமார்:

இளைய வயதினர்
இசைவான நல்முகம்
நெற்றியிலே குங்குமம்
நிறைவான சிரிப்பு முகம்
நேரம் ஆகிப்போனாலும்
காத்திருந்த இனியவர்
பார்த்தவுடன் பழகியவர் போல்
ஈர்த்திட்ட எளியவர்
தன்பெருமை பேசாமல்
எனைப் போற்றி மகிழ்ந்தவர்
பாலியலை இன்னும்
முழுதாகப் படிக்கவில்லை என
மனந்திறந்து பேசியவர்!
மீண்டும ஒருமுறை
பார்க்க வேண்டுமென பண்ணியவர்!

விடாது கருப்பு:

மூன்று முறை பேசினாலும்
முகம் காட்ட மறந்தவர்!
எங்கே எனைப் பார்த்துவிட்டால்
தன்கொள்கை மாறிடுமோவென
தயக்கத்தால் தவிர்த்தவர்!
தளர்வில்லா சுறுசுறுப்பாய்
தனித்தமிழில் பேசியவர்!
வேண்டுமென்றே வாராமல்
விருந்தினரைப் பாராதவர்!
அடுத்த முறை வரும் போது
முகம் காட்ட வருவாரோ?

பாலபாரதி:

துடிப்பான இளைஞரிவர்!
அடுக்கடுக்காய்ப் பேசிடுவார்
அளவற்ற செய்ய ஆசை!
ஆனாலும் எண்ணியதைச் செய்திடவோ
திண்ணிய நெஞ்சம் இல்லை.
அளவாகத் திட்டமிட்டு
அதைச் செய்ய நினைத்திட்டால்
அடுத்த முறை பலனுண்டு
ஆண்டவனும் அருளிடுவான்!
செய்ய நினைப்பதோ ஆயிரமாயிரம்
தெளிவாகத் திட்டமிட்டு
தீவிரமாய்ச் செயல்பட்டால்
பண்ணிய பாட்டுக்கும்
பலனிருக்கும் நிச்சயமாய்!

மா.சிவகுமார்:

ஆர்வம் கொப்பளிக்கும்
ஆரவாரமில்லா மனிதர்
ஏதேனும் நல்லது செய்ய
எப்போதும் துடிப்பவர்
பாலியல்பதிவில் சுரத்தில்லையென்று
பட்டென்று சொல்லியவர்!
இது பெற்றோருக்கான பதிவென்று
சொன்னதும் சற்று சமாதானமானார்!
தெரிந்ததைப் பகிர்வதில்
தெளிவாக இருப்பவர்!


லக்கிலுக்:

நீளமான முடியுண்டு
நிறைவான சிரிப்புண்டு
துருதுருக்கும் துணிவுண்டு
பரபரக்கும் எண்ணமுண்டு
தன் போக்கை சற்று மாற்றி
சகலரும் நல்லவரேயென
சற்றே நினைத்திட்டால்
இவரது இன்முகம் எவர்க்குமே சொந்தமென
இனித்திடும் காலம் வெகுதொலைவில்
இல்லையென்பேன்!

முத்து தமிழினி:

நீண்டு வளர்ந்ததோர்
நெடியதொரு உயரம்!
நேரிய முகத்தினிலே
நிறைவான புன்னகை!
தன் மீது கொண்டுள்ள
பாரதியின் தன்னம்பிக்கை!
தெரிந்தவரெனத் தெரிந்தும்
தானாக வலி சென்று
பழகாமல் இருந்தாலும்
பேசியதும் இன்முகம் காட்டி
பணிவாகப் பேசும் குணம்!

விக்கி:

தானாக வந்தங்கு
தன்மையாய்ப் பழகியவர்
வந்திருந்த பதிவர் குழாமில்
மனங்கவர்ந்த நல்ல நண்பர்!

பொன்ஸ்:

கனிவான தமிழச்சி
பொலிவான தோற்றத்தாள்!
நனிவான இன்சொல்லால்
நிறைவாகப் பேசிட்டார்!
வந்தவுடன் கலகலக்கும்
யானை சின்னம் இவர்க்குப் பொருத்தமே!

ஓகை நடராஜன்:

அமைதியான மனிதர்
ஆழம் மிக அதிகம்!
மனதினிலே ஓடுகின்ற
எண்ணமோ மிக வேகம்!
அத்தனையும் அச்சமின்றி
கொட்டிடவோ மிக அவசரம்!

நாமக்கல் சிபி:

வந்தநாள் முதல்
சென்றநாள் வரை
தினசரி தொலைபேசி
பரிவுடன் பேசியவர்!
நேரில் பார்க்க இயலாவிடினும்
மிகவும் பழகியவர் போன்ற
உணர்வை உண்டு பண்ணியவர்!
மனையாளும் மகிழ்வோடு
பேசியது களிப்பான ஓர் அனுபவம்!


சுல்தான்:

துபாயில் சந்தித்த அற்புத மனிதர்
ஒருவேளை தொடர்பு மூலம்
இறைவன் எனக்களித்த அருமை நண்பர்!
தன் வேலை தனை விடுத்து
என் வருகைக்கென காத்திருந்து
சரவணபவனில் உணவளித்து
என் தூக்கம் தனை உணர்ந்து
தன் படுக்கையில் எனைக் கிடத்தி
எனக்காக விழித்திருந்து
என் உறவுடன் எனைச் சேர்த்து
என்னுடனே இரவு வரை
இன்முகமாய் இனிதிருந்து
எனை அனுப்பும் நேரம் வரை
என்னுடனே கூட இருந்து
வந்து சேர்ந்த பின்னும் கூட
நலம் கேட்டு மடல் அனுப்பி
எனைக் கவர்ந்த இனிய நண்பர்

இன்னும் சில பேர்களுண்டு
அவர் பற்றி சொல்ல இங்கு
பதிவின் நீளம் கருதி
பகராமல் விடுகின்றேன்
அதனாலே குறையாக
யாருமிங்கு எண்ணவேண்டாம்!
எல்லாரும் நல்லவரே!

காலமளித்த இனிய பரிசுகளை
பாலமாக எண்ணுகிறேன்
கனிவோடு உன்னுகிறேன்
முருகனுக்கு நன்றி சொல்லி முடிக்கின்றேன்.
.














Read more...

Thursday, November 02, 2006

இலவசம் மனக்கசப்பே!

"இலவசம் மனக்கசப்பே!"

இப்ப நீங்க சும்மா நீங்க உண்டு உங்க வேலை உண்டுண்ணு இருக்கீங்க!

உங்க போறாத நேரம், வேலை நேரத்துல பொழுது போகாம,

உங்களோட தமிழார்வம் உங்களுக்குள்ளே பீரிட்டுகிட்டு வருது!

அக்கம் பக்கம் கண்ணை வுடறீங்க!

ஸூபர்வைஸர் மதிய சாப்பாட்டுக்கு போயிருக்காங்க1

கை தன்னை அறியாம, தமிழ்னு டைப் அடிக்குது!

ஒரு 10-15 பக்கத்துக்கு சுட்டிங்க வருது1

சனி பலமா பிடிச்சிருக்கான் உங்களை!

மூணாவது தொடுப்பு தமிழ்மணம்னு இருக்கு!

என்னன்னு பாக்கலாம்னு சும்மா விளையாட்டா தட்டறீங்க!

போச்சு!

இனிமே நீங்க, நீங்க இல்லை!

ஒரு அந்தர்பல்டி அடிக்கப் போவுது உங்க வாழ்க்கை!

வீடு இல்லை!

மனைவி இல்லை!

இதுவரைக்கும் பழகின நண்பரில்லை!

புள்ளை குட்டி இல்லை!

இனி எல்லாம் தமிழ்மணமே!

இலவசமா வந்தது இது!

தேவையா இதுன்னு ஒவ்வொரு விநாடியும் உள்மனசு உதைச்சுகிட்டே இருக்கும்!

வூட்டுல கொடுக்கற ஒதை இந்த கணக்குல வராது!

அது தனி!

ஒரு மணி, ரெண்டு மணின்னு இதுல ஒக்காந்திட்டு வந்தா, லஞ்சம் கொடுத்துட்டு வர்றது கூட 'இலவசமா' கிடைக்காது!


இப்போ இன்னோரு இலவசத்தை பாப்போம்!

இதுவரைக்கும் உங்க வாழ்க்கைல வராத ஆளுங்க உங்களோட நெருங்கிய நண்பராவாங்க!

நீங்க நெனச்சே பாக்காத அளவுக்கு, அவங்க உங்க வாழ்க்கையிலோ, இல்லை நீங்க அவங்க வாழ்க்கையிலோ பூந்து புறப்படப் போறீங்க!

இது கூட இலவசந்தாங்க!

ஒத்தப் பைசா செலவில்லாம வர்றதுதாங்க இது!

ஆனா, இது உங்க வாழ்க்கைல இனிமே பண்ணப்போற எதையும் நீங்க கற்பனை கூட செஞ்சு பாக்க முடியாது!

ஆனா, இது நிஜம்னு மட்டும் நம்பி ஏமாந்துடாதீங்க!

ஒரு விலை கொடுத்து வாங்கற பொருளுக்குத்தாங்க மதிப்பு!

மத்தது எல்லாம்........ அதுலேயும் இந்த இலவசமா வருதே..... அதனால வர்றது எல்லாம் வெறும் கசப்பு மட்டும்தாங்க!

இவங்க உங்க சொந்தம்னு நீங்க நெனச்சு ஏமாந்து மட்டும் போயிடாதீங்க!

ஒரே ஒரு தடவை இவங்க மனசு கோணற மாதிரி நடக்கறதா அவங்க நினைச்சுட்டா போறும்!

நீங்க ஒண்ணும் பண்ண வேண்டாம்!

அவங்க நினைச்சுட்டா போறும்!

அத்தோட உங்க ஆட்டம் க்ளோஸ்!

இலவசமா வருதா?

தல தெறிக்க ஓடுங்க!

இதுல மயங்கி ஏமாந்து போகாதீங்க!

அனுபவத்துல சொல்றேங்க!

ஏன் சார்? எங்கே இப்படி ஓடறீங்க?

இதுவும் இலவசம்னா?

சார்! சார்!...............


Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP