Wednesday, February 01, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 44

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 44”


41.

அடுத்த பாட்டைக் கேட்பதற்காக் கூடியிருந்தோம். மன்னார் என்ன சொல்லப் போகிறான் என எல்லாருக்குள்ளும் ஒரு ஆவல்!


அந்த நேரத்தில் வேக வேகமாக ஒருவன் ஓடிவந்து நேரே மன்னாரின் கால்களில் விழுந்தான்!
அனைவரும் பதறிப் போனோம்.


இன்னாடா கேசவா? இன்னாச் சமாச்சாரம்? ' என அவனை அன்புடன் தூக்கி நிறுத்தினான்.

'அண்ணே, நீதாண்ணே என்னியக் காப்பாத்தணும்! நொச்சிக்குப்பம் ஆளுங்க ரவுண்டு கட்டி அடிக்க வர்றாங்கண்ணே! இத்தினிக்கும் நான் ஒண்ணுமே பண்ணலை! நம்ம ராசுப் பயலுக்கு 'எல்ப்' பண்ணப்போயி இப்பிடி ஒரு தாவு வந்திரிச்சுண்ணே!' என அழத் துவங்கினான் கேசவன்.

'சரி, சரி, அளு[ழு]வாத! அதான் எங்கையுல வந்து சொல்லிட்டல்ல! இன்னா ஏதுன்னு வெசாரிக்கறேன். நொச்சிக்குப்பம் பீட்டரு நம்மகிட்ட இருந்தவந்தான்1 ஒண்ணும் கவலைப்படாதே! பொட்டப் புள்ளமாரி அளறான் பாரு!' என்று அவனைத் தேற்றினான் மயிலை மன்னார்!

எங்களைப் பார்த்து, "இப்ப இந்தக் கேசவன் வந்தானே, அதேம்மாரித்தான் இப்ப சொல்லப்போற பாட்டும். அதுக்குன்றமாரியே இப்ப இங்கியும் ஒரு சீன் ஆயிப்போச்சு' எனச் சிரித்தபடியே என்னைப் பார்க்க, உடனே அடுத்த பாடலைப் படித்துக் காட்டினேன்!

சாகா தெனையே சரணங் களிலே
காகா நமனார் கலகஞ் செயுநாள்
வாகா முருகா மயில்வா கனனே
யோகா சிவஞா னோபதே சிகனே

சாகாது எனையே சரணங்களிலே
காகா நமனார் கலகம் செயும் நாள்
வாகா முருகா மயில்வாகனனே
யோகா சிவஞான உபதேசிகனே

இதுக்கு முன்னாடியே ஒரு ரெண்டு மூணு பாட்டுல இதே போலச் சொல்லியிருக்காரு அருணையாரு. இந்தப் பாட்டை எப்பிடிப் படிக்கணும்னா,

"நமனார் கலகம் செயும் நாள் சாகாது எனையே சரணங்களிலே கா கா!"

நமன்னா எமன்! அவரைக் கொஞ்சம் மரியாதையா, நமனார்னு சொல்றாரு!
மாமன், மாமனார் மாரின்னு வைச்சுக்கோயேன்.

இவரோட வேலை இன்னான்னு நமக்கல்லாம் நல்லாவே தெரியும்.

எப்ப நம்ம டைம் முடியப்போறதுன்னு இவரு ஒரு கணக்கு வைச்சுக்கினு, கரீட்டா போயி நின்னுடுவாரு காவு வாங்கறதுக்கு!

அதுவும் சும்மால்லாம் போவ மாட்டாரு.
பெரிய கடாமீசையைத் திருகிக்கினு, எருமைக்கெடா மேல குந்திக்கினு கையுல ஒரு கவுத்த வீசிக்கினே ஒரு தோரணையோடதான் வருவாரு இந்தாளு!

'ம்ம்..கெளம்பு, கெளம்பு நேரமாச்சு'ன்னு அதட்டுவாராம்!
அதைத்தான் கலகம் பண்றதுன்னு கொஞ்சம் பயத்தோடயே சொல்லிக் காட்றாரு.

முந்தி ஒரு பாட்டுல சொன்னேனே, பெரிய மந்திரி வந்தா, மத்த மந்திரிங்கள்லாம் எளு[ழு]ந்து நிப்பாங்கன்னு!

அதப்போல, இந்த எமனார் பண்ற கலாட்டாவை எப்பிடி நிறுத்தறதுன்னு கொஞ்சம் யோசிக்கறாரு. ஆருகிட்ட போனா, நாம தப்பிக்கலாம்னு நெனைச்சுப் பாக்கறாரு.

இருக்கறதுலியே ரொம்பப் பெரிய ஆளா இருக்கணும். அவருக்கு மேல பெரிய சாமியே கெடையாதுன்றமாரி இருக்கணும். அப்பிடியாப்பட்ட சாமிகிட்ட போயி, அவரோட காலைப் பிடிச்சுக் கதறினா, அவரு கருணை பண்ணுவாருன்னு ஒரு ஐடியா வருது!

ஒடனேயே, அது ஆருன்னும் புரிஞ்சிருது!

'முருகா! நீதான் கதி! ஒன்னோட பாதமே எனக்கு சரணாகதி! நீதான் காப்பாத்தணும்! ஒடனே வந்து நான் செத்துப் போவாம காப்பாத்துப்பா'ன்னு கதர்றாரு.

இந்த விசயம் கொஞ்சம் லேசா ஒதைக்கும்!

அதெப்பிடி சாவாம காப்பாத்த முடியும்னு ஒரு 'டவுட்டு' கெளம்பும்!

அதுலதான் இந்த அனுபூதி சமாச்சாரம் ஒளிஞ்சுக்கினு க்கீது!

சாதாரணமா ஒர்த்தர் செத்துப்போனாக்க, எமன் வந்து உசிரை எடுத்துக்கினுபோயி, அவரோட பாவ, புண்ணியக் கணக்கைப் பாத்து, எங்க போவணுமோ அங்க அனுப்பி வைச்சு, அந்தக் காலம் முடிஞ்சதும், சொர்க்கமோ, நரகமோ, அங்கேருந்து மறுபடியும் இன்னொரு பொறவி கொடுத்து கீளே[ழே] பூமிக்கு வந்திர்றதுதான் வள[ழ]க்கமா நடக்கற சமாச்சாரம்.

ஆனாக்காண்டிக்கு, முருகனோட காலுல போயி விளுந்துட்டா, அவரோட கருணை கெடைச்சிருச்சுன்னா,...அதுக்கப்புறமா, இந்த சாவுன்றதே கெடையாது! எப்பவும் அவர்கூடவே தன்னை வைச்சிக்கிருவாராம்!
அது தெரிஞ்சதாலத்தான், கா, கான்னு ரெண்டு தபா தன்னைக் காப்பாத்தச் சொல்லிக் கேக்கறாரு அருணகிரியாரு. அவ்ளோ அவசரம்!

சரி, சரி, புரியுது, இப்ப இன்னா கேக்கப்போறேன்னு!
இதுக்கும் அடுத்த ரெண்டு வரிக்கும் இன்னா சம்பந்தம்னுதானே ஆர்வமா காத்துக்கினு க்கீறே?

இருக்கறதுலியே பெரியா சாமியாப் பாத்துத் தேடினாருன்னு சொன்னேன்ல?
அதத்தான் இந்த ரெண்டு வரியுலியும் சொல்லிக் காட்றாரு!

"வாகா முருகா மயில்வாகனனே யோகா சிவஞான உபதேசிகனே!"ன்னு!

'வாகா'ன்னு மொத வார்த்தை!
இதுக்கு பலமாதிரியா அர்த்தம் சொல்லலாம்!

'சீக்கிரமா வாப்பா, வந்து காப்பாத்துப்பா'ன்னு ஒரு பொருளு.

வாகான்னா, அள[ழ]கான வாகனத்துல வர்றவனேன்னும் சொல்லலாம்.

வாகுன்னா அள[ழ]குன்னே ஒரு அர்த்தமும் க்கீது! அதும்படிக்காப் பாத்தா, ரொம்ப அளகானவனேன்னும் புரியும்.

அடுத்தாப்பல 'முருகா'!
இதுக்கு அர்த்தம் நான் சொல்லவே வேணாம்.
பேரை கேட்டதுமே ஒடம்புல்லாம் அப்பிடியே புல்லரிச்சிரும்! அப்பிடி ஒரு சொல்லு இந்த முருகான்றது!

எமன் வர்ற அந்த சங்கடமான நேரத்துல ஒடனே வர்ற சாமியாவும் இருக்கணுமே!
அதுக்குத்தான் அடுத்ததா, 'மயில் வாகனனே'ன்னு செல்லமாக் கூப்பிட்டு, முருகனுக்கே அத்த நெனைப்புல குடுக்கறாரு!

பெருச்சாளி, மாடு அது இதுன்னு மெதுவா வர்ற சாமிங்களை விட, இந்த மயில் மேல வர்ற சாமி கொஞ்சம் ஒசத்தியாப் படுது இவருக்கு!

பள[ழ]ம் வேணும்னு ஒலகத்தயே ஒரு செகண்ட்ல சுத்தி வந்த பறவை ஆச்சே!
அதுனால இத்தப் புடிச்சுக்கினாரு!

கெருடன் மேல வர்ற சாமிகூட, ஆனை வந்து 'ஆதிமூலமே'ன்னு கத்தினப்ப, அந்தக் கெருடனை விட்டுட்டு அவரே நேரா வந்தாருன்னு ஒரு கதை படிச்சிருக்காரு!
அதுனால, இந்த மயிலை செலெக்ட் பண்ணிட்டாரு!

'யோகா'! இந்த யோக சக்திங்கல்லாம் க்கீதே, இத்த நல்லாவே தெரிஞ்சு வைச்சுக்கினு, அல்லாருக்கும் குடுக்கற சாமியும் முருகந்தான்னு நெனைச்சு, யோகான்னு கூப்புடறாரு.

இப்பத்தான் கொஞ்சம் கொள[ழ]ப்பமாப் பூடுது அருணகிரியாருக்கு!
இவரே இத்தினி ஒசத்தின்னா, இவரோட நயினா, அதான் நம்ம கபாலி,... அவரு இவரை விடவும் பெரிய ஆளு இல்லியான்னு!

இவரு கையுல க்கீற அத்தினி சமாச்சாரமும் அவரு கையுலியும் க்கீது!
அப்ப ஆரைக் கூப்புடறதுன்னு யோசனை பண்றாரு!

ஏன்னா, எமனை கெலிக்கறதுக்கு வர்ற சாமி ரொம்பவே ஒசந்ததா இருக்கணும்ல!
அதான்!

அப்பத்தான், 'டக்'குன்னு நெத்திப் பொட்டுல பட்டமாரி ஒரு விசயம் நெனைப்புல வருது!

அட! அந்த பரமசிவனே இவருகிட்ட மண்டி போட்டு பாடம் கேட்டவராச்சே!
அப்போ, ஆரு ஒசத்தியா இருக்க முடியும்!

மெய்யாலுமே, நம்ம முருகன் தான்னு முடிவு பண்ணிட்டு, 'சிவஞான ஒ[உ]பதேசிகனே'ன்னு அடக்கவொடுக்கமா, பயபக்தியா, கையைக் கட்டிக்கினு கெஞ்சிக் கேக்கறாரு!

நீ மட்டும் வந்து ஒன்னோட ரெண்டு காலையும் காட்டி, எனக்கு கருணை பண்ணினேன்னா, நான் அதுக்கப்பால, சாவே இல்லாத ஒரு நெலைக்குப் போயிருவேனே! ஒடனே வந்து காப்பாத்துப்பான்னு இந்தப் பாட்டுல சொல்றாரு!

அனுபூதின்ற ஒண்ணு வந்திருச்சுன்னா, இன்னா நெலைக்கு நாம போவோம்ன்றத சொல்லாம சொல்லி ஒனக்கும், எனக்கும் புரிய வைக்கறாரு அருணகிரிநாதரு!' எனச் சொல்லிவிட்டு,

'சரி, நீ வா கேசவா! இன்னா சமாச்சாரம்னு விசாரிப்போம்' என அவனை அழைத்துக்கொண்டு அந்தப் பக்கமாக வந்த ஒரு ஆட்டோவில் ஏறிக் கிளம்பினான் மயிலை மன்னார்!

'ஓம் சரவணபவ!'
********
[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP