Wednesday, February 16, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 7

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 7

கந்தரநுபூதி: 7

'அதெப்பிடி நீ சொல்லலாம்!? லோகத்துல வந்து பொறந்துட்டேன்! இங்க எனக்குன்னு சில கடமைகள் விதிச்சிருக்கு! அதுக்கும் அவனைத் தானே நான் கேழ்க்கணும்? என்னை இப்பிடி கொண்டுவந்து போட்டுட்டியே ஷண்முகா! இப்ப நான் என்ன பண்றது? எனக்கு ஒன்னை விட்டா ஆரு கெதின்னு அந்த பகவானைக் கேழ்க்காம வேற ஆரைப் போய் நான் கேழ்க்கணும்ன்றே? எனக்கு நீ சொன்னது சரியாப் படலை மன்னார்!' என்றார் சாஸ்திரிகள்!

அவர் கண்கள் மயிலை மன்னாரைப் பார்த்து, லேசாகச் சிமிட்டியதுபோலத் தெரிந்தது என் மாயையோ? எனக்குத் தெரியவில்லை!

ஆனால், அவர் கேட்ட கேள்வியில் நியாயம் இருப்பதாகப் பட்டது!
'ஞானும் அதே விளிக்க நெனைச்சு' என நாயரும் எங்கள் பக்கம் சேர்ந்து கொண்டதும், இது சரிதான் எனும் முடிவுக்கே நானும் வந்துவிட்டேன்!
மன்னாரின் முகத்தில் குறும்பு மிளிர்ந்தது!

முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு, 'அடுத்த பாட்டைப் படி!' என்றான்!
நானும் படித்தேன்!

திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியா ரரவிந் தமரும் புமதோ
பணியா வெனவள் ளிபதம் பணியுந்
தணியா வதிமோ கதயா பரனே.

திணியான மனோசிலை மீது உனது தாள்
அணியார் அரவிந்தம் அரும்பும் அதோ
பணியா என வள்ளி பதம் பணியும்
தணியா அதி மோக தயாபரனே

'இன்னா சொல்றாரு இதுல?
எம் மனசு கல்லு போல க்கீது! அதுல ஒன்னோட தாமரைக் காலை வையி! மெல்லிசா க்கீற வள்ளியோட பாதத்தும் மேல தலைவைச்சுப் படுத்துக்கினுக்கீறியே, முருகா! அவ மேல ஒனக்கு இத்தினி ஆசையா? எம்மேல கருணை காட்ட மாட்டியா'ன்ற மாரி ஒரு பாட்டை இப்பக் குடுக்கறாரு!

படிக்கறப்ப ரொம்பவே சிம்ப்பிளாப் புரிஞ்சிரும் இந்தப் பாட்டு!
ஆனா, இன்னா சொல்றாருன்னு பாத்தா.... அடேங்கப்பா! இன்னால்லாம் சொல்லிக்கீறாருன்னு மலைச்சிப் போயிருவே!

'திணியான மனோசிலை'ன்னா இன்னா?
"திணி"ன்னா கெட்டியான்னு அர்த்தம்.
'சிலை'ன்னா கல்லு
'மனோசிலை'ன்னா, என்னோட மனசு கல்லுமாரி கீது!
'திணியான மனோசிலை'ன்னா, கெட்டியான கல்லுமாரிக்கீற மனசு!
ஆரோட மனசு?
ஒம் மனசைப் பத்தி எனக்கு இன்னா தெரியும்?
அல்லாம் என்னோட மனசுதான்!

'தாள்'னா காலு.... பாதம்னும் சொல்லலாம்!

'அணி' ன்னா அள[ழ]கானன்னு பொருளு.
அணிஆர்னா ரொம்ப ரொம்ப அள[ழ]கான.
அரவிந்தம்னா தாமரை.
அரும்புன்னா மொட்டு. ஆனா, அதுவே அரும்புமதோன்னு சொன்னா, மொட்டு பூக்குமோன்னு வந்துரும்!

ஆகக்கூடி, "உனது தாள் அணியார் அரும்புமதோ"ன்னா, தாமரை போல க்கீற ஒன்னோட காலு எம்மேல மலருமோன்னு கேக்கறாரு!

கல்லுமாரி கீற என்னோட மனசுமேல, தாமரை மாரிக்கீற ஒன்னோட காலு பட்டு மலருமோன்னு மொத ரெண்டு வரியுல கேக்கறாரு!

எது மலரணும்?
காலா? இல்லாங்காட்டிக்கு.. என்னோட மனசா?
அதான் தாமரைன்னு சொல்லிட்டாரே! தாமரை மொட்டுன்னா சொன்னாரு? இல்லதானே!
அப்ப, என்னோட கல்லு மனசை பூக்க வையிப்பான்னு கெஞ்சறாரு!

கல்லு எங்கியாச்சும் பூக்குமா?
இல்லேன்னா, கல்லுலதான் எதுனாச்சும் பூக்குமா?
நெனைச்சுப் பாரு! ஒனக்கே சிரிப்பு சிரிப்பா வரும்!
இன்னாடா இவுரு? ரொம்பப் பெரிய ஆளுன்னு நெனைச்சு இவுரு பாட்டைப் படிக்கறோம்! இவுரு இன்னாடான்னா இப்பிடிக்
கூமுட்டையாட்டம் ஒரு கேள்வி கேக்கறாரேன்னு தோணும்!

ஆனாக்காண்டிக்கு, இவுரா கூமுட்டை?
நாமதான் கூமுட்டை!

அடுத்த ரெண்டு வரியுல ஒரு போடு போட்டு அப்பிடியே சாய்ச்சிடுறாரு!

அப்பிடியே படிச்சியானா, இதுல இன்னா க்கீதுன்னுதான் தோணும் ஒனக்கு!

இன்னா சொல்றாரு?
பணியா என வள்ளி பதம் பணியும் தணியா அதி மோக தயாபரனே

மெல்லிசா, பஞ்சுமாரி கீற வள்ளியோட பாதத்தும் மேல தன்னோட தலையை வைச்சுக்கினு, 'நீ இன்னா சொல்றே வள்ளி? இப்ப நானு இன்னா பண்ணணும்ன்றே?'ன்னு கெஞ்சுறாராம் இந்த முருகன்! அதான் இந்த 'பணியா என வள்ளி பதம் பணியும்'!!
அதும் எதுனால?
அவ மேல வைச்சிருக்கற அடக்க முடியாத காதல்னாலியாம்! அதி மோகன்னு சொல்றாரு!
ஆனாக்க, அவுரு பெரிய தயாபரனாம்!
தயாபரன்னா, ரொம்பவே கருணை வைச்சிருக்கற ஆளுன்னு அர்த்தம்!

வெச கெட்டுப் போயி, தனக்குப் பிடிச்ச வள்ளியோட பாதத்துல தலையை வைச்சுக்கினு, அவ சொல்ற வேலையச் செய்யுறதுக்கு தயாரா இருந்துக்கினு கெஞ்சற ஆளு கருணைக்கடலாம்!!!!

வேடிக்கையா இல்ல ஒனக்கு?
கேட்டா சிரிப்புத்தான் வரும்!

மொத ரெண்டு வரியுல அப்பிடி முருகனைக் கெஞ்சினவரு, இப்ப கேக்கற ஆளு ஆரைன்னா, ஒரு பொம்பள காலுல தன்னோட தலையை வைச்சுக்கினு, அவளைக் கெஞ்சற ஆளு!

இன்னா சொல்றாருன்னு ஆராயணும்!

வள்ளி ஆரு?
முருகனை மட்டுமே மனசுல நெனைச்சுக்கினு, வேற ஆரையும் கிட்டக்கக் கூட அண்ட வுடாத ஒரு பொண்ணு!
முளிச்சதுலேந்து, படுக்கற வரைக்கும், அவன் நெனைப்புத்தான் அவ மனசுல!
வேற ஆரையும் கிட்டக்க நெருங்க வுடாம, அவ எத்த வைச்சு வெரட்றான்னு கொஞ்சம் யோசி!


தெனைப்புனத்தும் மேல நிக்கறா வள்ளி!
அவ கையுல கவங்[ண்]கல்லு!
தன்னோட பொருளை தொடணும்னு ஆரு வந்தாலும் கல்லால அடிச்சு வெரட்டுற பொண்ணு அது!


அப்பிடி கல்லுமாரி க்கீற மனசைப் பாத்ததும், இவுருக்கு மனசு எளகிருது!
தனக்குன்னே க்கீற பொண்ணுக்கு தன்னை வுட்டா வேற ஆரு க்கீராங்கன்னு ஒரு நெனைப்பு வந்தவொடனியே, ஓடோடி வந்து அவ காலுல தன்னோட தலையை வைச்சு, 'இப்ப நான் இன்னா பண்ணனும்னு சொல்லு தாயி'ன்னுக் கெஞ்சறாரு இந்த கந்தன்!
இதான் அவரோட கொணம்~!

தன்னை நெனைச்சு உருகினாப் போறும் அவுருக்கு!
ஓடிவந்து கெஞ்சற ஒன்னியக் கொஞ்சுவாரு அவுரு!
அத்தத்தான் இந்தப் பாட்டுல சொல்றாரு அருணகிரியாரு!

ஒன்னியத் தவுர, வேற ஆரையும் மனசுல நெனைக்காம இருந்த வள்ளிக்காவ நீ எறங்கிவந்து, அவ சொல்ற வேலையைச் செய்யறதுக்குத் தயாராக் கீறமாரி, என்னோட மனசையும் ஒன்னோட பாதத்த வைச்சு மாத்துப்பான்னு!

இப்ப சொல்லு! அவரை மட்டுமே நெனைச்சு நீ உருகினா ஒன்னோட காலுலியே வந்து வுளறதுக்கு அவுரு ரெடியா க்கீறாரு.
அத்த வுட்டுட்டு, நீ இது வேணும், அது வேணும்னு கேட்டியானா அது டுபாக்கூரா இல்லியா?' என என்னைப் பார்த்துக் கேட்டுவிட்டு, ஓரக்கண்ணால் சாஸ்திரிகளைப் பார்த்தான் மயிலை மன்னார்!

சாம்பு சாஸ்திரிகள் தன் கண்ணாடியைக் கழற்றித் தன் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தார்!
நாயர் மௌனமாக எழுந்து இப்படியும் அப்படியுமாகத் தெருவில் நடந்தான்!
*********
[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP