Sunday, September 21, 2008

"விநாயகர் அகவல்" -- 12

"விநாயகர் அகவல்" -- 12
முந்தைய பதிவு

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி [64]



உருவாய் வந்து திருவருள் செய்தவன்

குருவாய் வந்து அகவிருள் தொலைத்தவன்

அருவுருவாகி அகத்துள் ஆடுவான்

அவனே உருவிலா சதாசிவம் ஆகும்


சிவமாய், சக்தியாய், விந்துவாய், நாதமாய்

அருவம் காட்டி ஐந்தொழில் புரிபவன்

சதாசிவமாகி விண்வெளி நிற்பான்

உள்ளிலும் புறத்திலும் இவனே நிறைவான்


ஆக்கல் காத்தல், அழித்தல், மறைத்தல்,

அருளல் என்னும் ஐந்தொழில் யாவும்

செய்திடும் அருவுரு சதாசிவம் என்பான்

விண்வெளியதனில் நாதமாய் ஒலிப்பான்


கண்ணில் தெரிந்தவன் சத்தத்தில் நிறைந்து

சதாசிவமாக அண்டத்தில் ஒலிப்பான்

சித்தத்தில் அவனே சிவலிங்கம் ஆவான்

வானத்திலாடும் மயில் குயிலாச்சு!


யோகம் என்னும் ஞானம் பெற்றோர்

அண்டத்துள் அறிவது சதாசிவத்தை

உள்ளம் என்னும் பிண்டத்தில் அறிவது

சிவலிங்கம் என்னும் அதுவே ஆகும்


அகமும் புறமும் யோகமும் போகமும்

இவரருளாலே நிறைந்திடக் கண்டு

கணபதி தந்த நற்கொடை அருளிது

மழையாய்ப் பொழிவதில் ஔவை நனைகிறாள்!


அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி [66]



இறையவன் திருவுரு கொள்வதற்கும் அரியது

சின்னஞ்சிறிய அணுவுள்ளும் அணுவாய் இருப்பான்

அண்டபகிரண்டம் முழுதுக்குமாய் விரிந்துமிருப்பான்

எங்கெங்கு நோக்கினும் சக்தியடா எனப்பாடிய

பாரதியின் சொல்போல காணுமிடமெல்லாம்

நீக்கமற நிறைந்திருக்கும் அவனருளைப் பருகுவது


இறையருள் தனக்குக் கொடுத்திட்ட நிலையை

எவரும் புரிந்திடத் திருவுளம் கொண்டு

அனைவரும் அறிந்திடும் ஒருபொருள் எடுத்து

அதனின் மூலம் எமக்கு உரைக்கிறாள்


பாலும்,தெளிதேனும், பாகும் பருப்பும்

கரும்பும், ஒரு முக்கனியும் சொற்சுவை சேர்க்கும்!

கணுக்களெல்லாம் முற்றிக் கனிந்து

கருப்பஞ்சாறு தன்னில் நிறைந்து

இனிப்பெனவே இருக்கின்ற கரும்புபோல

என இந்தக் கரும்பைச் சுவைக்கிறாள் ஔவை
********************************************
[தொடரும்]

அடுத்த பதிவு

Read more...

"விநாயகர் அகவல்" -- 11

"விநாயகர் அகவல்" -- 11

முந்தைய பதிவு

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து) [58]



சொல்லிய சொல்லும், எண்ணிய எண்ணமும்

பாசம் என்னும் அறிவின் விளைவுகள்!

பாசமறுக்க இறையருள் வேண்டும்!

இறையருள் வருவது குருவருள் மூலம்!


சொல்லும், எண்ணமும் அறவே அறுத்து

மனத்துள் ஒடுங்கிட இன்பம் பிறக்கும்

பாசமறுத்து பசுவெனும் அறிவை

உள்ளில் அறியும் நிலையைக் காட்டிட

இறையே இங்கு குருவாய் வந்த

இனிமைக் களிப்பில் ஔவை சிலிர்க்கிறாள்!



இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் [60]



இருளைக் காண்பதும் ஒளியைக் காண்பதும்

கண் எனும் ஒன்றே புரிந்திடும் செயலாம்!


ஞானம் பிறப்பதும் அறியாமை இருப்பதும்

சிவமயம் என்னும் பேரருள் ஆணை!


இதனை அறிந்து, அறிந்தோம் என்னும்

எண்ணமும் அகன்று இறையருள் தன்னில்

தானே இறையாய் இருப்பது என்னும்

மூன்றாம் நிலையாம் சாரூபம் தன்னில்!


அருளே வடிவாம் கணபதி அருளால்

அறிவும் அறிவின்மையும் பிறக்கும் இடமும்

ஒன்றே என்னும் தெளிவில் பிறக்கும்

இன்பநிலையினில் சாரூபம் கண்டாள்!



எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)

அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் [62]



இத்தனை வந்ததும் எல்லாம் மறையும்

தானே இறையெனும் உணர்வும் மறையும்


எல்லையில்லாப் பெருவெளியதனில்

எல்லைகள் ஏது எண்ணங்கள் ஏது


எல்லா நலனும் இழந்தே போயினும்

எல்லையில்லா இன்பமே நிலைக்கும்


நாலாம் நிலையாம் சாயுச்சியம் எனும்

சொல்லா நிலையில் சுகமே விளையும்


இம்மை மறுமை பிறப்பு இறப்பெனும்

எல்லாத் துயரும் அடியோடழிந்து


அல்லல்கள் யாவும் நில்லாதொழிந்து

கணபதி அருள்வழி ஒன்றே தெளிந்து

ஆனந்த நிலையினில் ஔவை திளைக்கிறாள்!
***********************************************
[தொடரும்]

அடுத்த பதிவு

Read more...

"விநாயகர் அகவல்" -- 10

"விநாயகர் அகவல்" -- 10




முந்தைய பதிவு

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி [54]



இறையின் தரிசனம் தியான முடிவினில்

மும்மலம் விளைத்த அகவிருள் விலகி

ஆன்மா ஒளியினைக் காணும் வேளையில்

சாதகன் சிரசின் மேலொரு ஒளியின்

காட்சியும் கிட்டும் என்பர் யோகியர்

நால்வகை நிலையுள் சாலோகமென்னும்

முதல்நிலை
இதுவென ஆன்றோர் அறிவர்

சரியை என்னும் யோகம் சித்திக்க

சாலோகநிலையினில் பேரொளி தரிசனம்

இறையருள் கிட்டிய பெருமித மகிழ்வில்

ஔவைப்பாட்டி குதித்தாடுகிறாள்!



என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து [56]



ஆன்மா தன்னை அறியும்போது

இறையின் அருகில் இருப்பதை உணரும்

இறையருள் இன்றி இது நிகழாது

பேரொளிவெள்ளம் உள்ளில் தெரிய

ஆனைமுகனும் அருகில் தெரிவான்

ஐம்புலன் ஆளுகை தன்னை மறைக்க

ஆன்மா எதுவென தனக்கே மறக்க

அமலன் அருளால் தன்னை அறிந்திட

ஞானம் பிறந்த நன்னெறி நிலையில்

சாமீபமென்னும் இரண்டாம் நிலையினை

ஆனைமுகனின் அருகில் இருப்பதை

அறியும் ஔவை அகமகிழ்கின்றாள்!


சுழுமுனை வரையினில் கனலை எழுப்பி

நாடிகள் பத்தையும் சுத்தப்படுத்தி

அமுதநிலையையும் அறிந்து மகிழ்ந்து

ஆயுளை நீட்டும் வழியடைந்தாலும்,


ஆனைமுகனின் அருளால் கிட்டும்

இந்நிலை ஞானம் கைகூடாவிடின்,

தன்னை அறியும் நிலை கிட்டாவிடின்,

ஏதொருபயனும் இல்லை என்பதை

உணர்ந்திட்ட ஔவை இவ்வண்ணம் மகிழ்கிறாள்!


இவையெலாம் முறையே தன்னில் நிகழ்ந்திட

முன்னை வினைகள் முதலில் மாயணும்!

காலம் காலமாய்ப் பிறவியெடுத்து

கணக்கில்லாது வினைகள் புரிந்து

கணக்கினை மேலும் மேலுமாய்க் கூட்டி

ஆன்மா உள்ளின் அடியில் அழுந்தி

சுமைகளைக் குறைக்கும் வழிதெரியாமல்

அலைந்திட்ட ஆன்மா விடுதலை பெற்று

முந்தைய வினைகளை முழுதுமாய்க் களைந்து

பேரொளி கண்டு தன்னை அறிந்து

மகிழ்வில் ஆழ்ந்திடும் காட்சியைக் கண்டாள்!
*******************************************
[தொடரும்]

அடுத்த பதிவு


Read more...

"விநாயகர் அகவல்" -- 9

"விநாயகர் அகவல்" -- 9


முந்தைய பதிவு

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி [46]


செய்துவரும் பயிற்சியதும் மென்மேலும் முதிர்ந்துவர

ஆனந்தம் உள்ளினிலே அமுதமெனப் பொங்கிவரும்!

சூரியனும் சந்திரனும் இசைந்திருந்து இளகவைக்கும்

செயல்திறனைச் சூட்சுமமாய் ஔவையிங்கு சொல்லிநின்றாள்


[மேலிதனைச் சொல்லுதற்கு குருவினருள் எமக்குவேண்டும்!]

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச் [48]


ஆதாரம் ஆறினிடை அமர்ந்திருந்து இயக்குகிற

பதினாறு கலைகளையே பாட்டியிங்கு சொல்லுகிறாள்

மேலிருக்கும்
ஸஹஸ்ராரம், ஆதாரம் ஆறு,

லலாடபிந்து, அர்த்த சந்திரன், ரோகிணி,

நாதம், நாதாந்தம், சக்தி, வியாபிகா,

சமனா, உன்மனா
என்னுமிந்தப் பதினாறு

நிலைகளையே கடந்தவரே உத்தமத் தவத்தோர்

ஆதாரச் சக்கரங்கள் ஓராறும்,

சூரிய சந்திரக் கலையிரன்டும்

சேர்ந்திங்கு உடற்சக்கரம் எட்டானது

உள்ளிருக்கும் சக்கரத்தை

உள்ளிருக்கும் கணபதிதான்

உள்ளபடி காட்டுகிறான்


சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப் [50]


உருவினைச் சமைக்க ஆறுமுகம் கொள்வர்

பருப்பொருள் இலக்கணம் அதுவே ஆகும்

வடிவம், உயரம், நீளம், அகலம்,

திண்மை, பருமை எனவும் சொல்வர்

நான்முகம் என்பது நுண்பொருள் இயல்பு

இயந்திரவடிவில் இதனை அமைப்பர்

இறையவன் உருவினை அறிந்திட உதவிடும்

பத்து குணங்களும் எண்ணிடச் செய்து

உள்ளில் காட்டும் யோகியர் நிலையினை

கணபதி காட்டித் தருவான் என்றாள்


புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக் [52]


ஐம்புலன் ஐந்தும், மனம், புத்தி

அகங்காரம் எனும் மூன்றும் சேர்ந்த

சூக்கும உடலின் எட்டுநிலைகளும்,

உள்ளிருக்கும் ஆறு ஆதாரங்கள்

நிராதராம், மீதானம் எனும்

எட்டுநிலைகளாய் விரிந்திருக்கும்

அற்புதத்தை
எனக்குப் புரியவைத்தனையே

என ஔவையின் மகிழ்ச்சி அதிகமாகிறது!
******************************************

[தொடரும்]

அடுத்த பதிவு

Read more...

"விநாயகர் அகவல்" -- 8

"விநாயகர் அகவல்" -- 8





முந்தைய பதிவு

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் [40]


ஆதாரங்கள் ஆறும் இங்கே

இரண்டிரண்டாய்ப் பிணைந்திருக்கும்

மூலாதாரமும் சுவாதிட்டானமும்

அக்கினிமண்டலம் எனவாகும்

மணிபூரகமும் அநாகதமும்

சூரியமண்டலம் என விளங்கும்

விசுத்தி, ஆக்கினை இரண்டும் சேர்ந்து

சந்திரமண்டலம் என விளங்கும்


குண்டலினி என்னும் பரிக்ரக சக்தி

பாம்பின் உருவம் தனைக்கொண்டு

மூலாதார மடியினில் தன்னைச்

சுருட்டிவைத்துத் தொங்கிநிற்கும்

முறையுடன் புரியும் யோகசாதகன்

சுருண்டிருக்கும் அரவம் இதனை

மூன்று மண்டல வாயில் வழியே

ஆக்கினைவரையில் தானெழுப்பி

மந்திரச் சொல்லை நாவில் உணர்ந்து

ஆன்மா இதனை உணரச் செய்யும்


குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து [42]

பேசாதொலிக்கும் மந்திர சத்தம்

சுவாசச் சுழலின் துணையால் நிகழும்

இடகலை பிங்கலை சுழுமுனை மூலம்

சுழலும் ஒலியே அஜபா எனப்படும்!

உட்செலும் பிராணன் 'ஸோ' எனும் ஒலியையும்

கும்பகம் நிற்கும் வாயுவில் 'ஹம்'எனும் ஒலியும்

கூடச்சேர்ந்து 'ஸோஹம்' எனவாகும்!



ஸோஹம் என்பதே சிவோஹம் ஆகும்!


சிவோஹம் என்னும் சொல்லாமந்திரம்

ஒவ்வொரு சுவாசம் நிகழும் போதும்

ஒவ்வொருவர்க்குள்ளும் நிகழ்ந்தே இருக்கும்

அறிந்தவர் இதனைப் பிடித்துக்கொண்டு

சாதகம் என்னும் பயிற்சி செய்யின்

உள்ளே மூளும் கனலின் வெம்மை

தன்னில் உணரும் ஞானம் பிறக்கும்

[அசபை= அஜபா]

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே [44]


இத்தனை இதுவரை காட்டிய கணேசன்

மூலத்தினின்று முளைத்தெழும் சோதியைக்

கிளப்பிவிட்டு மேலெழும்பச் செய்திருந்து

சுழுமுனை மார்க்கமாய் கொண்டுசெல்லும் வழியினைக்



காற்றெனும் பிராணன் வழியினைச் சொல்லி

காட்டித்தந்த அருள்திறத்தைப் பாடுகிறாள்!

[கால்=காற்று, பிராணன்]
*******************
[தொடரும்]

அடுத்த பதிவு

Read more...

"விநாயகர் அகவல்" -- 7

"விநாயகர் அகவல்" -- 7


[முந்தைய பதிவு]

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி [34]

ஐம்புலன் அவஸ்தை கருவிகள் நிகழ்த்தும்!

'கண் செவி மூக்கு வாய் தொடுபுலன்' என்னும்

ஐம்புலன் ஆட்சி-- இரு கண், இரு செவி,

இரு துளை நாசி, ஒருவாய், ஆண்குறி,

ஆசனவாய்-- எனும் ஒன்பது வாயில்

வழியே நிகழும் வகையினை அறிந்து

வாசல் திறக்கும் கதவினை ஓம் எனும்

மந்திரச் சொல்லால் அடைத்திடும் வழியை

எனக்கு இன்புடன் அருளிக் காட்டி,

ஆறா தாரத்(து) அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே [36]


ஆழ்நிலை தியானம் புரிந்திடும் தவத்தோர்

ஆறாதாரங்கள் வழியினில் செலுத்தி

பிராணனை ஒடுக்கும் வித்தையை அறிவர்!

மூலாதாரம் என்னும் முதல்நிலை

குதம்,குறி இவற்றின் நடுவே இருக்கு

கணபதி இங்கே ஆளுமைசெய்து

சாதகன் தன்னை வழிநடத்திடுவார்

குறிமூலம் தன்னில் சுவாதிட்டானம்

பிரமன் இங்கு அமர்ந்திருப்பார்

உந்திக் கமலம் தன்னில் மணிபூரகம்

திருமால் இதிலே வாசம் செய்கிறார்

இதயநாடியில் அநாகதம் உளது

உருத்திரர் இதனின் தலைவர் ஆவார்

கண்டம் நடுவே விசுத்தி ஆகும்

மகேசர் தலைமையில் இயக்கம் நடக்கும்

புருவமத்தியில் ஆக்ஞை எனப்படும்

சுழுமுனை என்பதும் இதுவேதான்

ஆளுமை செய்பவர் சதாசிவர் ஆவார்

மூலம் தொடங்கி மேலே எழும்பி

பிராணன் இவற்றின் வழியே கடந்து

சுழுமுனை வரையில் சுழன்று செல்லும்

இந்நிலை வந்தவர் இகத்தை மறப்பர்

ஆன்ம உணர்வினில் எல்லாம் மறந்த

இனிமை அனுபவம் தன்னில் திளைப்பர்

இவ்வகை செய்திடும் யோகப்பயிற்சி

ஆதாரயோகம் என்பர் ஆன்றோர்

தன்னை மறந்தவன் இறையினை உணரும்\


இன்னொருநிலையே நிராதாரம் என்பர்


இவ்வகை யோகம் கைகூடிவிட

பிராணன் வீணே செலவாகாமல்

இடம் வலம் என்னும் இரண்டும் அடக்கி

ஆனையைப் பழக்கும் அங்குசம்போல

ஆனைமுகனும் மூலத்தில் நின்று

அன்புடன் அருள்வார் அவரைத் துதித்தால்!

இந்நிலை கைவரின் பேச்சும் ஒழியும்

ஆன்மா என்றும் ஒருநிலை நிற்கும்


இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி [38]


சூரியன், சந்திரன், அக்கினி என்னும்

மூவகை நாடிகள் உடலில் உள்ளன.

பிங்கலை என்னும் சூரியநாடி

வலப்பக்க நாசியின் வழியே செல்லும்

இடகலை என்னும் சந்திரநாடி

இடப்பக்க நாசியின் வழியினில் செல்லும்

சுழுமுனை என்னும் அக்கினிநாடி

உடலின் நடுவில் உயிர்த்து நிற்கும்

வல, இடம் வாயு சென்றுவருவதில்

உடலின் இயக்கம் நிகழ்கிறது

பிராணனின் வாயு உள்ளே செல்வது

பூரகம் என்னும் சொல்லால் அறியும்

உள்ளே சென்றதை உடலிருத்துவது

கும்பகம் என்னும் சொல்லால் அறியும்

வெளியே சென்றிடும் வாயுவின் செயலை

இரேசகம் என்னும் சொல்லால் அறிக

ஓமெனும் சொல்லைப் பிரித்துப் பார்த்தால்

அகரம் உகரம் மகரம் புரியும்


பிங்கலைக்குரியது அகரம் ஆகும்

உகரமும் மகரமும் இடகலை சுழுமுனை

இரண்டையும் குறிக்கும் எழுத்துகள் ஆகும்

மூலத்தில் எழுந்திடும் முக்கோண ஜோதியை

மேலே எழுப்பிச் சிரசில் கொணர்ந்தால்

ஆயிரம் இதழுடை தாமரை ஒன்று

அகலவிரிவதை ஆன்றோர் உணர்வர்

இவ்வகை வழிகளின் முறைகள் யாவையும்

குருமுகம் அறிவது சாலச் சிறந்தது


இடகலை பிங்கலை இரண்டும் நிறுத்தி

சுழுமுனைவழியே சிரசைக் காட்டிட

கணபதி அருள ஔவை மகிழ்கிறாள்!


************************************************

[தொடரும்]

அடுத்த பதிவு

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP