Wednesday, January 10, 2007

"பள்ளி எழுந்தருளாயே" - 8 [28]

"பள்ளி எழுந்தருளாயே" - 8 [28]


முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;
மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் !

பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே !

செந்தழல் புரை திருமேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி

அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே ! [8]

முதல் எனச் சொல்வதற்கும் முந்தையவனே!
இடைநிலை எனச் சொல்லப்படும் இடையவனே!
அனைத்தும் ஒடுங்கும் இறுதியானவனே!

இம்மூன்றையும் நிகழ்த்துவதாய்ச் சொல்லும்
பிரமன், திருமால், உருத்திரன் இவர்
மூவராலும் அறிய முடியாதவனே!
உன்னை வேறு எவரால் அறிந்திடல் ஆகும்?

இத்தகைய அருமை உடையவனாகிய நீயோ
இப்பூவுலகையே ஒரு பந்து போன்று
தன் விரல்களில் அணிந்திருக்கும் உமையுடன் சேர்ந்து
உன் அடியவர் வாழும் பழங்குடிசைகளில்
எழுந்தருளி அருள் புரிகின்றனை! பரம்பொருளே!

செக்கச் சிவந்த தழல் போலும் உன் திருமேனித்
தரிசனம் எங்களுக்குத் தந்து, கூடவே
திருப்பெருந்துறையினில் நீ அமர்ந்திருக்கும்
கோயில் தரிசனமும் விரைவினில் காட்டி,

சத்குருமூர்த்தியாய், அறிவுப் பிழம்பாய் நீயிருக்கும்
வேடமும் வலியவே வந்து காட்டி,
என்னையும் உன் அடிமையாக ஏற்றுக் கொண்டாய்!
எங்கும் நிறை அமுதமே! பள்ளி எழுந்தருள்வாயாக!

அருஞ்சொற்பொருள்:
மூவர் - பிரமன், விஷ்ணு, உருத்திரன்; குடில் - இல்லம்; தழல் - தீ; புரை - போன்ற.

"பள்ளி எழுந்தருளாயே" - 7 [27]

"பள்ளி எழுந்தருளாயே" - 7 [27]

"அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு
அரிதென, எளிதென", அமரும் அறியார்,

"இது அவன் திருவுரு; இவன் அவன்" எனவே;
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்

மதுவளர் பொழில் திருஉத்தர கோச
மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !

எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்;
எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே ! [7]

அமரரும் அறியா அப்பரம்பொருளின் தன்மை
"பழம் போல சுவை மிக்கது" எனவும்
அது "அமுதம் போல இனிதானது" எனவும்
"அறிந்து கொள்ள அரிதானது" எனவும்
இல்லை அது "மிக மிக எளிதானது" எனவும்
விண்ணகத் தேவரும் அறிய மாட்டார்கள்!

ஆனால், "இதுவே அப்பரம்பொருளின் திருவுருவம்!"
"இவனே நாம் வணங்கும் சிவபெருமான்!" என
நாங்கள் சரியாக அறியும் வண்ணம் அருள் கொண்டு
எளிவந்த கருணையுடன் எங்கள் முன்னே வந்து
எங்களையும் அடிமையாக ஏற்றுக் கொண்டு
இந்த மண்ணிலே எழுந்தருளி இருக்கின்றாய்!

தேன் சொரியும் மலர்ச்சோலை சூழ்ந்த
திரு உத்தரகோச மங்கைத் திருத்தலத்தில்
எழுந்தருளி இருப்பவனே! சிவனே!
திருப்பெருந்துறை தலத்திற்கு அரசனே!

நீ எங்களை ஏவல் கொள்ளும் முறைமை எது?
அதனைக் கேட்டு அவ்வாறே ஒழுகுவோம்!
எங்கள் பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயாக!

அருஞ்சொற்பொருள்:
மது - தேன்; ஆறு - வழி/முறைமை.

"பள்ளி எழுந்தருளாயே" - 6 [26]

"பள்ளி எழுந்தருளாயே!' - 6 [26]

பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும்

மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா !

செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே !

இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே ! [6]


இவ்வுலக வாழ்வின் பரபரப்பை விட்டொழித்து
ஒருமையான மனத்துடன், உட்காட்சியில்
உன்னையே கண்டுணர்ந்த மெய்ஞ்ஞானியர் எல்லாரும்,

இம்மண்ணுலகில் பிறந்தாலும், தம் பந்தக் கட்டுகளை
அறுத்தெறிந்த சிவயோகிகள் எல்லாரும்,

மனித இயல்பிலே நின்று, மையணிந்த கண்ணுடைய
பெண்களைப் போலவே தங்களை நினைந்து
தம் தலைவனாக உனைக் கொண்டு வணங்குகின்றனர்!

தலை மகளாம் மலைமகள் உமையின் மணவாளனே!
செந்நிறம் பொருந்திய தாமரைகள் மலர்கின்ற
வயல்கள் சூழ்ந்த திருநகராம் திருப்பெருந்துறையில்
எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே!

இந்தப் பிறவியினை நீக்கி எங்களுக்கு அருள்செய்து
எங்களை ஆட்கொண்டு அருள் புரியும்
எங்கள் பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயாக!

அருஞ்சொற்பொருள்:
பப்பு - பரப்பு; அணங்கு - பெண்; செப்புறு - செம்மை உடைய.

"பள்ளி எழுந்தருளாயே!" - 5 [25]

"பள்ளி எழுந்தருளாயே!" - 5 [25]

"பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்
போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர்

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்

சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா !
சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து

ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

"எல்லாம் வல்ல இறைவன் பஞ்ச பூதங்கள் எனும்
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் இவைதனில்
நீக்கமறக் கலந்துள்ளான்; அவனுக்கு இறப்பெனும்
போக்கும் இல்லை; பிறப்பெனும் வரவும் இல்லை!" எனவே
கற்றறிந்த ஞானியர் அனைவரும் கூறுவர்.

அவர்கள் இவ்வண்ணம் பாடியும் ஆடியும் போற்றிடும்
துதிகளை விருப்பமுடன் பாடுதல் அன்றி
உனைக் கண்டறிந்தவர்களைப் பற்றி நாங்கள்
காதினாலும் கேட்டுத் தெரிந்ததில்லை!

இவ்வாறு எங்கள் சிந்தனைக்கும் அப்பாற்பட்டவனாய்
நீ இங்கு அரிதாய் நிற்கின்றாய்!
எங்கள் "கண்முன்னே எழுந்தருளி", நாங்கள்

அறிந்தும் அறியாமலும் செய்கின்ற குற்றங்கள்யாவினையும்
அறுத்தெறிந்து, எம்மையும் உன் அடியவர்களாக்கி
ஏற்று அருள் புரிந்திட அன்புடன் வேண்டுகிறோம்!

எங்கள் பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயாக!

அருஞ்சொற்பொருள்:
சீதம் - குளிர்ச்சி; ஏதம் - குற்றம்/துன்பம்.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP