Tuesday, September 30, 2008

"விநாயகர் அகவல்" -- 13

"விநாயகர் அகவல்" -- 13



முந்தைய பதிவு

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி [68]



சிவனை உணர்ந்து சிவத்தில் திளையும்

திருவடி பணியும் அடியவர் எல்லாம்

அடியவர் என்பதைக் காட்டிடும் புனிதத்

தவமுனி வேடமும் தவத்திரு நீறும்

தாங்கியே தம்மைக் காட்டிக் கொள்வர்


ஆனைமுகனின் அருள்வழி அடைந்த

ஔவைப்பாட்டியும் தானும் அதுபோல்

தவநிறை வேடம் தாங்கிடச் செய்து

மந்திரமாகும் சுந்தர நீற்றைத்

தன்னில் அணிந்து தன்னைப் போலும்

இறையருள் நிறைந்த அடியவர் கூட்டம்

என்றும் தன்னுடன் தங்கிட வேண்டி

தாயினும் சிறந்த தயாவாய் ஆளும்

சங்கரன்மகனின் தாள்பணிகின்றாள்



அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் [70]


ஐந்தெழுத்து மந்திரத்தின் சுந்தரத்தைச் சொல்லிடுவோம்


'ந'கரமிங்கு மறைக்கும்பொருள்

'ம'கரமிங்கு மும்மலங்கள்

'சி'கரமென்னும் பதி உண்மை

'வ'கரமவன் அருட்கருணை

'ய'கரமது பசுவுண்மை


சொந்தமான பதியை விட்டுப்

பிரிந்துவந்த பசு ஆன்மா

திரும்ப அதை அடையாவண்ணம்

மறைந்திருந்து அதைத் தாக்கும்

மலமென்னும் மகரம் இங்கு!


பதியவனின் அருட்கருணை

பாய்ந்துவந்து தடையழிக்க

மறைப்பிங்கு விலகியோடி

பசுவிங்கு பதி அறியும்!

நமசிவயவின் பொருளிதுவே


ஐந்தெழுத்து மந்திரத்தை

அனுதினமும் இடைவிடாது

அன்புடனே ஓதிவரின்

அழுந்திவரும் ஆன்மாவும்

பேரின்பப் பேறடையும்


ஓமென்னும் பிரணவத்தின்

துணையின்றி தனியாக

ஓதுகின்ற பெருமையிங்கு

பஞ்சக்கரம் ஒன்றுக்கே

இருப்பதனை உணர்ந்திடுவோம்


இத்தகைய பேறுடைய

பஞ்சக்கர மந்திரத்தின்

உட்பொருளை கணபதியும்

ஔவைக்கு விளக்கிவிட

அன்னையிவள் ஆர்ப்பரிக்கிறாள்!


[பஞ்சக்கரம்= பஞ்ச+ அக்கரம்= பஞ்ச அக்ஷரம்= நமசிவய]



"சிவாய எனச் சொல்லி மூச்சிழுத்து நிறுத்திவிட்டு

நம:வெனச் சொல்லியதை வெளியினிலே விட்டுவிட

பலகாலப் பயிற்சியினால் தொங்கிநிற்கும் குண்டலினி

தானாகக் கிளர்ந்தெழுந்து மூலாதாரச் சக்கரத்தில்

தானாக நிலைகொண்டு ஒவ்வொன்றாய் மேலெழும்பி

சஹஸ்ராரம் சென்றடைய, சத்தத்தில் சதாசிவமும்

சித்தத்தில் சிவலிங்கமும் தானாகத் தோன்றிவிட

மூண்டெழுந்த முக்கோணச்சுடரினிலே மலமெல்லாம் சாம்பலாகும்

திருநீறாய் அதைக்கொண்டு நிர்மலனாய்த் திகழ்ந்திடுவாய்"

எனவந்த ஆனைமுகன் அருட்கருணைத் திறத்தினிலே

ஔவையிவள் அகமகிழ்ந்து ஆழ்நிலையில் அமிழ்கின்றாள்!



தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே! [72]



"தானே அது" வென்னும் தத்துவத்தின் பொருளாகி

நாடிவந்த எவருக்கும் அருள்வழங்கும் அன்பனிவன்

வாடிநின்ற எவர்துயரும் பொடியாக்கிப் போக்கிடுவன்

ஆனைமுகக் கடவுளிவன் அறுகம்புல் அணிந்திடுவான்


எளியனான என்றனையும் ஏற்றிவிடக் கருணைகொண்டு

தவஞானத் தத்துவத்தை வித்தகனாய் எனக்குரைத்து

அருள்ஞான உபதேசம் தந்தென்னை ஆட்கொண்ட

நின்னடியைப் பணிந்திங்கு திருவடியில் சரண்புகுந்தேன்


என்றிங்கு முடிக்கின்றாள் தமிழன்னை ஔவைப்பாட்டி

திருவடியில் நூல் தொடங்கி திருவடியில் தாள்முடித்தாள்

கருணையுளம் மிகக்கொண்டு தமிழரெலாம் வாழவென்று

கருத்தெல்லாம் பாட்டாகக் கவினுறவே சொல்லிவைத்தாள்


செந்தமிழின் செல்வமென எமக்கெல்லாம் வந்தயிவள்

தாளடியை யான் பணிந்து தெரிந்தவரை சொல்லிவைத்தேன்

சொல்லவைத்த ஔவைக்கு என்வணக்கம் சொல்லிவைத்தேன்

சொலப்பணித்த கணபதியின் தாளிணையில் நான் பணிந்தேன்


சொற்குற்றம் பொருட்குற்றம் இதிலிங்கு இருக்குமெனில்

குற்றமெலாம் எனக்கெனவே எனசொல்லிப் பணிகின்றேன்

நிறையெதுவும் இதிலிருப்பின் முன்சொன்ன பெரியோர்க்கு

அத்தனையும் சேருமென்று சொல்லியிங்கு முடிக்கின்றேன்!



"வித்தக விநாயகன் விரைகழல் சரணே!"


"விநாயகர் அகவல்" முற்றிற்று.


[நாளை நிறைவுறும்!]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP