Friday, January 19, 2007

"உன்னுடன் நானும்!"

"உன்னுடன் நானும்!"

நண்பர் நாமக்கல் [புது]கவிஞர் சிபியார் ஒரு கவிதை இட்டிருந்தார்! அதன் பாதிப்பில் விளைந்த என் சிந்தனை இதோ!

"உன்னுடன் நானும்!"

நீ கேட்ட அத்தனையும்
நானும் கேட்டேனடி
என்னுள்ளே!

நான் பட்ட பாட்டினை
நீயும் படவேண்டாமெனவே
கருவிலேயே உன்னைக்
கலைத்தேனடி!

உச்சி முகர்ந்து கொஞ்ச
இச்சை இருந்த போதும்
எச்சில் என உனைப் பேசும்
பொச்சருக்கு பயந்தேனடி!

நெட்டி முறித்துப் போடவே
நித்தமும் ஆசை இருக்குதடி
தோள்கள் தந்திடவே என்னுள்
பாசம் இருக்குதடி!

காதலை மதிக்காமல்
காமத்தை நினைந்துவிட்டு
மானத்தைத் தொலைத்தேனடி
காமுகன் ஒருவனால்!

என்னைக் கெடுத்த பின்னர்
அடுத்தவளைத் தேடி
அவன் போய்விட்டான்
இங்கே நான் சுமக்கிறேன்!

எப்படி உன்னை வெளிக்கொணர்வேன்
அப்படியென ஓய்ந்து போனேன்
எப்படியோ இது தெரிவதற்குள்
அப்படியே அழிப்பதே வழி!

நீ வளர்ந்து மரமாகி

நிழல் தரும் காலம்வரை

தாயிவளால் தாங்காதென

தங்கம் உனைத் "துடைத்து"விட்டேன்!

நீ யாரென்றே தெரிந்தது
உன்னை பதிவிட்ட[scan] பின்னரே!
பெற்றவர்க்குத் தெரிந்ததால்
குற்றமெனத் தொலைத்துவிட்டார்!

உடல்கள் அழியுமாம்!
உயிர்கள் ஓய்வதில்லையாம்
கற்றவர் சொல்லுகின்றார்- எனவே
பெற்றவள் உனைத் துறந்தேன்!

என்றேனும் ஓர்நாள் உனை
எங்கேனும் சந்திக்க நேர்ந்தால்
பட்டென்று ஒற் அறை
என் முகத்தில் அறைந்துவிடு!

அதுவரையில் என் மகளே
கருவறையில் நீ வேண்டாம்
கண்கலங்கி நிற்கின்றேன்
உன்னுடன் நானும்!

நீ கேட்ட அத்தனையும்
நானும் கேட்டேனடி
என்னுள்ளே!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP