Monday, March 19, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 56 [51-1]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 56 [51-1]

51. [1]

ஒருவித எதிர்பார்ப்புடன் கூடிய அமைதியுடன், அனைவருமே மயிலை மன்னாரின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். இன்றுதான் கந்தரநுபூதியின் நிறைவுப் பாடலுக்கு அவன் பொருள் சொல்லப் போகிறான் என்பதால்!


அதைப் பற்றிய ஒரு சிந்தனையும் தன்னிடத்தில் இல்லாதவன்போல மன்னார் பேசத் தொடங்கினான்.


‘இன்னா நாயர்! இன்னிக்குக் கடையுல வியாபாரம் எப்படி? வடையெல்லாம் நல்லாப் போச்சா?’ என்றதும், இதுவரைக்கும் எங்களிலேயே சற்று நிதானமாகக் காட்டிக் கொண்டிருந்த நாயரே கொஞ்சம் அசந்துதான் போனான்.


‘இப்போ எந்துக்கு இந்த விசாரம்?’ எனக் கொஞ்சம் தயக்கத்துடன் கேட்டான் நாயர்.


‘அதுக்கில்ல நாயர்! இன்னால்லாம் போட்டு, கலந்து, அத்த சரியா எண்ணையுல போட்டு, பதமா வேகவைச்சு போணி பண்ணினு க்கீறே நீ தெனமும்! என்னியப் போல ஆளுங்க ஒங்கடைக்கு வந்து, இன்னாமோ அசால்ட்டா, ஒரு வடையை எடுத்து, அத்தப் பிச்சுப் பாத்து, கடிச்சுட்டு, இது நொள்ளை, அது சொத்தைன்னோ, இல்லாங்காட்டிக்கு, ‘ஆகா, இன்னாமாப் பண்ணிக்கீறே நைனா’ன்னோ சொல்லிட்டு காசைக் கொடுத்திட்டுப் பூட்றோம்.


ஆனாக்காண்டிக்கு, இந்த ஒரு வடையைப் பண்றதுக்கு நீ இன்னா சிரமப் பட்டிருப்பே’ன்னு ஒரு செகண்டாவுது நெனைச்சிருப்போமா?


அட, அத்த வுடு! ஒன்னியே எடுத்துக்கோ? பருப்பை ஊற வைச்சு, பதமா உப்பைப் போட்டு, நாலு மொளகாயைத் தாளிச்சு அதுல கலந்து, இன்னும் அதுக்கு வோணும்ன்ற ஜாமானைல்லாம் போட்டு, நல்லா மாவாட்டி, எண்ணைய சூடாக்கி, இன்னா ஒரு பக்குவமா கொஞ்சங்கூட அலுப்பில்லாம பொரட்டிப் பொரட்டி யெடுத்து எங்களுக்கு நல்ல இருக்கணுமேன்னு ஒரு நெனைப்போட நித்தமும் நீ வடை சுட்டுத் தர்றே! ஆராவது ஒர்த்தனாவுது அந்த வடையைப் புட்டுச் சாப்பிடறப்ப அது பத்தி நெனைச்சிருப்பானா? அதான் கேட்டேன்’ என வெள்ளந்தியாகக் கேட்டான் மயிலை மன்னார்.


அடுத்த கணம் நாங்கள் யாருமே எதிர்பார்க்காத விதமாய், நாயர் எழுந்து நின்று, தன் மேல்துண்டை இடுப்பில் கட்டியபடியே, மன்னாரின் முன் நெடுஞ்சாண்கிடையாகக் காலில் விழுந்தான்.


எல்லாரும் ஒரு கணம் பதறித்தான் போனோம்.


இதையெல்லாம் கவனியாதவன்போல, மன்னார் என்னைப் பார்த்து,


‘இன்னைக்குத்தான் கந்தரநுபூதியுல கடைசிப் பாட்டைப் படிக்கப் போறோமில்ல. டேய், சங்கரு! அந்தப் பாட்டைப் படி’ என்றான், சலனமில்லாமல்.


ஒன்றுமே புரியாமல், ஆனால் ஏதோ புரியப் போகிறது என்னும் உணர்வோடு அவசர அவசரமாய்ப் புத்தகத்தைப் பிரித்துப் பாடலைப் படித்தேன்.

உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்க்
கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவா யருள்வாய் குகனே.

மயிலை மன்னார் அதைப் பிரித்துப் படித்துச் சொன்னான்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

‘ரெண்டு ரெண்டு வார்த்தையாப் பிரிச்சுப் படிச்சியானா, அதாங்காட்டிக்கு, ‘உருவாய், அருவாய்’ உளதாய் இலதாயி';ன்னு பாத்தீன்னா ஒரு அர்த்தம் புரியும் ஒனக்கு! அத்த மொதல்ல சொல்றேன்! ஏன்னா, அதான் அல்லாரும் சொல்றது.' எனத் தொடங்கினான் மன்னார்.


இருக்கறது, இல்லாதுது, ஒண்ணுனால வர்ற ஒண்ணு, ஒண்ணுத்தப் பத்தி தொடர்ந்து வர்ற ஒண்ணுன்னு சும்மா சகட்டுமேனிக்கு பூந்து வெள்ளாடிருக்காரு இதுலன்னு புரியும்!


இத்தான் சாமின்னு காட்றமாரி ஒரு உருவமாவும் வருவாரு.


இதுல்லாம் இல்ல, இதுக்கும் மேல அருவமா க்கீறவந்தான் இவன்னு சொல்றமாரியும் இருப்பாரு.


இருக்கானா, இல்ல, இல்லாதவனா இவன்னும் நெனைக்க வைப்பாரு.


அது எப்பிடீன்னா, எங்கேருந்தோ ஒரு வாசனை கெளம்பி, ஒன்னோட மூக்கைத் தொளைக்குது! அது இன்னா வாசனைன்னு நீ தேடிப் பாக்கறப்போ, அது இந்தப் பூவுலேர்ந்துதான் வருதுன்னு ஒனக்குப் புரியுது! ஒடனே, அந்தப் பூவை எடுத்து மூந்து பாக்கறே! அந்த வாசத்துல கெறங்கிப் போறே! இப்ப, நீ வாசத்துல கெறங்கினியா, இல்ல, பூவோட அளகுல மயங்கிப் போனியான்னே ஒனக்குப் புரியல! ஆனாக்காண்டிக்கு நீ கெறங்கினதென்னவோ வாஸ்த்தவம்! அதான் 'மருவாய், மலராய்'! ஆச்சா! இப்ப அடுத்தாப்புல பாப்பம்!


ரெத்தினமாலை ஒண்ணு ஒங்கையுல கெடைக்குது! அட! அதுக்கென்ன நீ இப்பிடி மலைச்சுப் போயி என்னியப் பாக்குற? நெசமாவே ஒங்கையுல ஒரு ரெத்தினமாலை க்கீது! ஒண்ணு சேப்பா க்கீது. ஒண்ணு பச்சையா க்கீது. ஒண்ணு நீலம்! இப்பிடி ஒண்ணொண்ணும் ஓரோரு கலரு. இதுல எது ஒசத்தி, எது ரொம்ப அளகுன்னு ஒனக்கு ஒண்ணும் புரியலை! ஆனாக்காண்டிக்கும், ஒண்ணொண்னுமே அளகாத்தான் க்கீது! அதுவும் எதுனாலன்னா, அது ஒண்ணொண்ணுலேர்ந்தும் வர்ற ஒளியால!


இப்ப நீ சொல்லு! ஒளியால அளகா? மணியால அளகான்னு? எதுக்கு எது ஆதாரம்? ஒன்னால சொல்ல முடியாது! அப்பிடித்தான் மயங்கறாரு அருணகிரியாரு! மணியா? ஒளியா?ன்னு தெரியுலியே முருகான்னு!


அடுத்தாப்புல வர்ற வார்த்தையைக் கெவனி!


‘கருவாய், உயிராய்!’


கருவால பெருமையா? அதுக்கு வர்ற உயிரால பெருமையா?


கருன்னு ஒண்ணு இல்லாங்காட்டிக்கு அதுக்குள்ள உசிருன்னு ஒண்ணு வர முடியுமா?
இல்ல, உசிருன்னு ஒண்ணு வராம கருவால இன்னாதான் பிரயோசனம்?
இதுல்லாம அது இல்ல! அது வராட்டி இது ஒபயோகமேயில்லை!
அதான் சூட்சுமம்!


இப்ப அடுத்த ரெண்டு வார்த்தை!


‘கதியாய் விதியாய்’


ஒனக்குன்னு விதிச்ச ஒரு கெதியாலத்தான் நீ பொறக்கறே! ஆனா, நீ பொறந்ததுமே, ஒனக்குன்னு விதிச்ச விதி ஒன்னிய வந்து ஒட்டிக்குது!


கெதியில்லாம விதியில்ல! விதி க்கீறதுன்றதுலாலியேத்தான் கெதி ஒன்னியை இங்க பொறக்க வைக்குது! கெதியால விதியா? இல்லாங்காட்டிக்கு, விதின்ற ஒண்ணால கெதி இங்க ஒன்னியத் தள்ளிச்சா?’ எனச் சொல்லி என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்!

“ஓ! அப்போ இதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்குன்னு சொல்றே’ எனச் சற்றுத் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு மன்னார் முகத்தைப் பார்த்தேன்!


‘தான் இவ்வளவு நேரமா, இவ்வளவு நாட்களாகச் சொன்னது ஒன்றும் பெரிதாக வீண்போகவில்லை’ எனும் தெம்புடன் என்னைப் பார்த்து அன்புடன் சிரித்தான் மயிலை மன்னார்!


இன்னும் தொடரும் எனும் நம்பிக்கையுடன் மன்னாரை ஆவலுடன் நோக்கினேன்.

[தொடரும்…..முடிவைத் தேடி!]
**********

அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

[இன்னும் இரு பதிவுகளாக இந்தப் பாடலின் விளக்கம் தொடரும். தினம் ஒரு பதிவாக வரும்.]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP