Tuesday, November 08, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- - 33

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- - 33
32.

‘ஸ்வாமியே சரணம் ஐயப்பா!’ என முழங்கியபடி ஐயப்ப பக்தர் கூட்டம் ஒன்று, தலையில் இருமுடிகளுடன் சாம்பு சாஸ்திரிகள் இருக்கும் தெரு வழியாகக் கடந்து சென்றது.

‘சட்’டென்று திண்ணையிலிருந்து குதித்த மன்னார் அவர்கள் முன் சென்று தரையில் விழுந்து வணங்கினான். மாலை அணிந்திருந்த நானும், நாயரும் அவனுடன் சென்று வணங்கினோம். சாஸ்திரிகள் மனைவி, தயாராக வைத்திருந்த தண்ணீரால் அவர்களது பாதங்களைக் கழுவி, சந்தனம் குங்குமம் இட்டு, நமஸ்கரித்தார். கூடவே சாஸ்திரிகளும் விழுந்து வணங்கினார். எங்களது பணிவான வணக்கங்களை ஏற்றுக்கொண்டு, ‘சாமியே சரணம்’ என்னும் கோஷத்துடன் ஐயப்ப சாமிகள் தங்களது யாத்திரையைத் தொடர்ந்தனர்.


அவர்கள் கடந்து சென்றதும், மீண்டும் திண்ணையில் வந்தமர்ந்தோம்.

‘இந்த சாமிங்க மேல மட்டும் எனக்குத் தனி மருவாதி! ஏன்னா, வெளிப்படையா எல்லா மதத்து சாமிங்களையும் கும்புடறதுனாலத்தான். இதான் எனக்கு இவங்ககிட்ட ரொம்பவே பிடிச்ச விசயம். ‘சாமியே சரணம் ஐயப்பா’ன்னு சொல்லிட்டு, அடுத்தாப்புலியே, ‘வாபரின் தோள[ழ]னே’, சாதிபேதம் இல்லாதவனே’ன்னு அடுத்த சரணம் கூப்பிடுவாங்க! இப்பிடி அல்லாருமே இருந்துட்டா எவ்ளோ நல்லாருக்கும்! இத்தனைக்கும் இந்த சாமி ஒண்ணுமே பேசாம, வெறும் முத்திரையைக் கையால காட்டிக்கினு க்கீறாரு. அவுருக்குத் தெரியாத சாஸ்திரமா, தத்துவமா? அப்பிடி இருந்தாலுங்கூட, அமைதியா, தெளிவாக் குந்திக்கினு க்கீறாரு. இதப் பத்தித்தான் இப்ப வரப்போற பாட்டு பேசுது! பாட்டைப் படி.’என்றான் மயிலை மன்னார்.

கலையே பதறிக் கதறித் தலையூடு
அலையே படுமா றதுவாய் விடவோ
கொலையே புரிவே டர்குலப் பிடிதோய்
மலையே மலைகூ றிடுவா கையனே


கலையே பதறிக் கதறித் தலையூடு
அலையே படுமாறு அதுவாய் விடவோ
கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்
மலையே மலை கூறிடு வாகையனே

“கலையே பதறிக் கதறித் தலையூடு அலையே படுமாறு அதுவாய் விடவோ?”

‘ரொம்பப் படிக்காதே; படிச்சதெல்லாம் போறும்; பயிற்சியில ஈடுபடு’ன்னு ஒங்காளு சொல்லுவாரே……. அதையேதான் இந்த வரியுல சூட்சுமமா சொல்றாரு அருணையாரு.


எந்தவித ஞானமும் இல்லாம, சும்மா, அல்லாத்தியும் படிச்சு, தலையுல ஏத்திக்கினு, அதுல இன்னா சொல்லிருக்குன்ற அறிவோ, அனுபவமோ இல்லாம, வெறுமுனே வெட்டி வீராப்பா, வர்றவன் போறவன்ட்டல்லாம், வெட்டிச் சண்டை போட்டுக்கினு, மண்டை கொய[குழ]ம்பிப்போயி, கடோசிக்கடைசியா, இந்தக் கொயப்பமே ஜாஸ்தியாயிப்போயி, பைத்தியம் பிடிச்சு அலையுறமாரி என்னிய ஆக்கிடாதேப்பா’ன்னு கதற்ராரு அருணகிரியாரு!


கொஞ்சமாப் படிச்சாலும், அதுல சொன்னாது இன்னான்னு அனுபவிச்சுப் பாக்கணும்! அது தானா வந்திருமா? வராது! அனுபவத்தக் குடுக்கறதுக்கு அந்த முருகன் தயவு வேணும்! ‘அவன் பாதமே கதின்னு ஒரு அரை நிமிச நேரமாச்சும் இல்லாமப் பூட்டேனே’ன்னு ஒரு பாட்டுல சொல்லுவாரே …. நெனைப்பு க்கீதா? அப்பிடி நெனைச்சு உருகினாத்தான் அவனோட அருளு கிடைக்கும். ‘ஓம் சரவணபவா’ன்னு நாயரு சொல்லிக்கினுக்கீறானே, அதுமாரி!


அத்த வுட்டுட்டு, கண்டத்தியும் படிச்சு, மண்டையுல ஏத்திக்கினு, இதுவா, அதுவான்னு புரியாமப் போயி, ……. அல்லாத்துலியும் நல்லதுதான் க்கீது. நான் இல்லேன்னு சொல்லலை….. ஆனா, ரொம்பப் படிச்சுக்கினே இருந்தா, எப்பத்தான் நீ அவனைப் பத்திப் புரிஞ்சுக்கறது? அவன் வேணுமா? இல்லை, வெறும் புஸ்தக அறிவு வேணுமா? இந்த அறிவால இன்னா பிரயோசனம்? கால் காசுக்கு ஒதவுமா இந்த அறிவு?


‘பஜகோவிந்தத்துல’ சங்கராச்சாரியார் சொல்லுவாரே, அதும்மாரி, கடைசில எது ஒதவும்ன்றதைப் பத்தின ஒரு தெளிவு வரணும். படி, நான் வேணாங்கலை! ஆனா, அந்தப் படிப்பை வைச்சு, அவனைப் புடிக்கப் பாக்கணும். அப்பிடியில்லாத, சும்மா வம்பு வலிக்கறதுக்காகவும், தன்னோட அறிவைக் காட்டிக்கறதுக்காவும் படிக்கற படிப்புல்லாம் சுத்த ‘வேஸ்ட்டு’ன்னு சொல்லிப் புரியவைக்கறாரு அருணகிரியாரு.


அவரோட பாட்டுலல்லாம் பாரு. அநேகமா, முருகனைப் பத்திச் சொல்றப்பல்லாம், கூடவே, ராமன், கிஸ்னன், சிவன், லெச்சுமின்னு மத்த சாமிங்களையும் பெருமையாப் பாடியிருப்பாரு.


சாஸ்திரங்களைப் பத்தித் தெரிஞ்சுக்கறதுல்லாம், ஒரு நல்ல வளி[ழி]யுல நீ போறதுக்காவ மட்டுந்தான். அத்த வுட்டுட்டு, எங்க சாமிதான் ஒசத்தி, ஒன்னுது மட்டம்னு வம்பு வளக்கறதுக்காவ இருக்கக்கூடாதுன்றத நல்லா, அளு[ழு]த்தந்திருத்தமா சொல்றாரு இந்த வரியுல.


அப்பிடிப் பண்ணினா இன்னா ஆவும்னும் சொல்லிடறாரு!
இதுனால மூளை கொய[குழ]ம்பிப்போயி, பைத்தியந்தான் பிடிக்கும்னு!
நல்லாப் புரிஞ்சுக்கணும் இத்த’ என சற்று உணர்ச்சிவசப்பட்டே பேசினான் மன்னார்.


அவனைச் சற்று தன்நிலைக்குக் கொண்டுவருவதற்காக, ‘அது புரியுது மன்னார்! அதுக்கும், இந்த அடுத்த ரெண்டு வரிக்கும் என்ன சம்பந்தம்னு சொல்லுவியே. அதைச் சொல்லு, கேட்போம்’ என்றார் சாம்பு சாஸ்திரிகள்!


‘ஆமாம்ல! கொஞ்சம் ‘ஓவரா’த்தான் பேசிட்டேன் போல’ என ஒரு சங்கோஜத்துடன் சொன்ன மன்னார், மேலே தொடர்ந்தான்!

“கொலையே புரி வேடர் குலப் பிடிதோய் மலையே! மலை கூறிடு வாகையனே!”

‘வய[ழ]க்கம்போல, முருகனைப் பத்தி பெருமையாச் சொல்றமாரி இருந்தாக்கூட, இதுக்குள்ள ஒரு பெரிய சமாச்சாரத்தச் சொல்றாரு அருணகிரியாரு.

“கொலையே புரி வேடர் குலப் பிடிதோய் மலையே!”

இதுக்கு இன்னா அர்த்தம்? ‘காட்டுல வேட்டையாடி கண்ணுல பட்ட பிராணிங்களையெல்லாம் கொல்ற வேடர் கொலத்துல பொறந்த பொட்டையானை மாரி அள[ழ]கா க்கீற வள்ளியம்மாவை கட்டிப்பிடிச்சு அணைச்சுக்கற பெருமையான மலை போல க்கீற குமரனே’ன்னு வரும்!


ஆனாக்காண்டிக்கு, இதுக்குள்ளாற இன்னாத்த சொல்ல வராருன்னு பாக்கணும்.


‘மலையே’ன்னு ஒரு வார்த்தை போடறாரு! ஆடாம, அசங்காம, ஒசரமா, பெருசா நிக்கும் மலை! அதுக்குள்ளாற இன்னால்லாம் க்கீதுன்னு ஆராலியும் கண்டுபிடிக்க முடியாது! அப்பிடி, எந்த சாஸ்திரத்தாலியும், வேதத்தாலியும் கண்டுபிடிக்க முடியாத ஆளுதான் நம்ம கந்தன்!
அப்பிடியாப்பாடவரு இன்னா பண்ணினாரு? ஒரு சாதாரண வேடன்மாரி வேசம் கட்டிக்கினு, காட்டுக்குள்ள போனாரு. எதுக்காவ? தன்னையே நெனைச்சு உருகிக்கினுக்கீற வள்ளியைக் கண்ணாலம் கட்டிக்கறதுக்காவ! ஏன், அவுரு நெனைச்சிருந்தார்னா, அந்தம்மாவை ஒரு ‘செகண்டு’ல இட்டாந்திருக்க முடியாதா? ஏன் அப்பிடிச் செய்யலைன்னு யோசிக்கணும்.


இவுரு பரமாத்மா. வள்ளி சீவாத்மா! சீவன் கெடந்து பரமாத்மாவையே நெனைச்சு உருகறச்சே, அந்தப் பரமாத்மாவால சும்மா இருக்க முடியாது! ஒடனே கெளம்பிறும் சீவாத்மாவைத் தன்னோட சேத்துக்கறதுக்காவ! அதுக்கு நேரங்காலம் எடம் பொருள் ஏவல்லாம் பாக்காது! தான் அப்பிடியே போகாம, அந்தச் சீவாத்மா இன்னா நெலையுல க்கீதோ, அதே மாரிப் போயி அத்தச் சேத்துக்கும்.


இப்ப, வள்ளின்ற சீவாத்மா எங்க க்கீது? கண்ணுல பட்டதையெல்லாம் கொல்ற கொடுமையான வேடர் கொலத்துக்கு நடுவுல கெடந்து அல்லாடுது! கண்டத்தியும் படிச்சுக் மூளை கெட்டுப்போயி அலையுற கூட்டத்துக்கு நடுவுல, தன்னை மட்டுமே நெனைச்சுக்கினு க்கீற ஒர்த்தர்மாரி வள்ளி மட்டும் ஒரே நெனைப்புல தவிக்கறாங்க!


அவங்களைத் தன்னோட சேத்துக்கறதுக்காவ, இவுரும் அந்த வேடருங்க மாரியே வேசம் கட்டிக்கினுப் போயி அந்தம்மாவைக் கட்டிப் பிடிச்சுக்கறாரு.

அதுக்குத்தான் இந்த வரியை இப்பிடி வைச்சிருக்காரு அருணகிரி! வெளங்குதா?’ என்றான் மயிலை மன்னார்!


‘அப்படீன்னா அந்த அடுத்த வார்த்தை?’ என இழுத்தேன் நான்!

“மலை கூறிடு வாகையனே!”ன்னு ஏன் போட்டாருன்னுதானே கேக்கறே? அதுலியும் ஒரு பொடி வைச்சுத்தான் சொல்லிருக்காரு’ எனக் கண் சிமிட்டினான் மன்னார்!


‘மலையைக் கூறு போட்டு வெற்றிமாலை சூடினவனே’ன்னு பொருளு இதுக்கு.


இப்பத்தான் முருகனை ஒரு மலைன்னு சொன்னாரு. இதுல இன்னாடான்னா, மலையைக் கூறு போட்டவனேன்னு சொல்றாரு!
அப்பிடி இன்னா மலையைக் கூறு போட்டாரு கந்தன்?


சூரனோட தம்பி தாரகன் ஒரு மாயமலையா நின்னான். அதுக்குள்ளாற போன ஒர்த்தர்கூட….. வீரவாகு மொதக்கொண்டு…… ஆருமே வெளியே வரமுடியாம மயங்கிப் போனாங்க! இது, அதுன்னு படிச்சு அல்லாத்தியும் மண்டைக்குள்ளாற ஏத்திக்கினு மயங்கிப் போனவங்கமாரின்னு வைச்சுக்கோயேன்! விசயம் தெரிஞ்சதும் முருகன் இன்னா பண்ணினாரு? தன்னோட ஞானவேலை அதும்மேல எறிஞ்சாரு! அவ்ளோதான்! அந்த மாயமலை அப்பிடியே பொடிப்பொடியா ஒடைஞ்சுபோயி, மயங்கிக் கெடந்தவங்க அல்லாரியும் தெளிய வைச்சாரு.


அதும்மாரி, அல்லாத்தியும் படிச்சு பைத்தியம் புடிச்சாலுங்கூட, கந்தனை நெனைச்சு தியானம் பண்ணினேன்னா, தன்னோட ஞானவேலால தெளிய வைப்பாருன்னு ரகசியமா சொல்லிக் காட்டுறாரு அருணகிரியாரு!


அதான் இந்த ரெண்டு வரிங்களோட பெருமை! அருணகிரியாரால மட்டுந்தான் இப்பிடி சூட்சுமமாப் புரியவைக்க முடியும்’ எனக் கைகூப்பி வணங்கினான் மயிலை மன்னார்!

‘ஓம் சரவணபவ சோதரனே சரணம் ஐயப்பா’ என்னும் ஒலி எங்கள் அனைவரின் உதடுகளிலிருந்தும் ஓங்கி ஒலித்தது!
***********************
[தொடரும்]
வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!
[படித்துப் பின்னூட்டமிட்டு வாழ்த்திய அனைவருக்கும் எனது பணிவன்பான வணக்கங்கள்!]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP