Friday, September 16, 2011

மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம் - 27

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- 27
26.

[சற்று நீளமான இந்தப் பதிவை, ஒருமுறைக்கு இருமுறையாகப் படிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.]

நாயர் கடையில் அவனது ஸ்பெஷல் மசால் வடையையும், ஒரு கப் டீயையும் குடித்துவிட்டு அவசர அவசரமாகத் திரும்பி வரவும், மயிலை மன்னார் சாம்பு சாஸ்திரிகளின் வீட்டு வாசலில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது!


என்னைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தவன் நேராக அடுத்த பாடலைப் படிக்கச் சொன்னான்.

ஆதா ரமிலே னருளைப் பெறவே
நீதா னொருசற் றுநினைந் திலையே
வேதா கமஞா னவிநோ தமனா
தீதா சுரலோ கசிகா மணியே!

என நான் படித்து அதைப் பிரித்தும் சொல்லிக் காட்டினேன்.... அதிகக் கடினமாக இல்லையென்பதால்!

ஆதாரம் இலேன் அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோதா மனா
தீதா சுரலோக சிகாமணியே!

என்னை ஒருவித இரக்கத்துடன் பார்த்துவிட்டு, 'இதுக்குத்தான் அவசரப்படக் கூடாதுன்றது! அப்பிடிப் பிரிக்கக் கூடாது இத்த! மொத ரெண்டு வரியும் சரிதான். அதுல ஒண்ணும் கஷ்டமில்ல! அடுத்த ரெண்டு வரியையும் வேற விதமாப் பிரிக்கணும் எனச் சொல்லிவிட்டு, முழுப்பாடலையும் பிரித்துச் சொன்னான்.

ஆதாரம் இலேன் அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத மன
அதீதா சுரலோக சிகாமணியே!

'ஞான விநோதா மனா தீதா' இல்ல! 'ஞான விநோத மன....அதீதா' அது' எனத் திருத்தினான்!

சாஸ்திரிகள் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது போல எனக்குப் பட்டது! அவரைப் பார்த்தேன். ஆனால், அவர் முகம் சலனமில்லாமல் இருந்தது!


'சரி, அது கெடக்கட்டும் இப்ப நல்லாக் கவனமா நான் சொல்றதை கேட்டுக்கோ! ஒரு பெரிய உண்மை இந்தப் பாட்டுல வரப் போவுது! அது இன்னான்றத அப்பாலிக்கா சொல்றேன். இப்ப மொதல்ல இந்த மொத ரெண்டு வரியும் ஒனக்கு எப்பிடிப் புரியுதுன்னு சொல்லு' என என்னைப் பார்த்துச் சிரித்தான்.


ஒன்றும் புரியாமல், அந்த வரிகளை மீண்டும் ஒரு முறை படித்தேன்!

"ஆதாரம் இலேன் அருளைப் பெறவே நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே"

உன்னுடைய அருளைப் பெறுவதற்கான எந்த விதமான ஆதாரமும் என்னிடம் கிடையாது! அதனால்தானோ என்னவோ, நீ கூட அதைப் பற்றிக் கொஞ்சம் கூட நினப்பதும் இல்லை' எனப் படுகிறது' என்றேன்.


'நீ சொல்றது சரிதான்! ஆனா, இதை வேற எப்பிடிப் பார்க்கலாம்' என என்னைச் சீண்டியபடியே நாயரைப் பார்த்தான்!


கொஞ்ச நேரம் யோசித்த நாயர், ' சேட்டன் பறஞ்சது சரியாயிட்டு உண்டு. பக்ஷே, இன்னொரு விதமாயிட்டும் பறயலாம்' என்றான்.


'சொல்லு' என்பது போலப் பார்த்தான் மன்னார்.


'அனுபூதி கிட்டிட்ட பின்னேதானே ஈ பாட்டு அருணகிரி பாடின்னு? பின்னே எந்தா இப்பிடி பறயின்னு?' என்றான் நாயர்!


'சபாஷ்!' என்றார் சாஸ்திரிகள்!


மன்னர் முகமும் நன்றாக மலர்ந்தது!


'பாயிண்ட்டைப் பிடிச்சிட்டே நாயர்! ' என்றான் .


'நாயர் சொல்றதுதான் கரீட்டு! இந்தப் பாட்டைப் பாடறப்ப, அருணகிரியாருக்கு ஏற்கெனவே முருகன் அருள் பண்ணிட்டான்! பின்ன, எதுக்காவ அவரு இப்பிடி சொல்லணும்?


பொம்பளைப் பித்து பிடிச்சு பொண்ணுங்க பின்னாடி சுத்திக்கினு இருந்தப்பவோ, இல்லாக்காண்டிக்கு, கோபுரத்துலேந்து குதிச்சப்ப முருகன் காப்பாத்தினப்பவோ, இல்ல, வயலூரு, விராலிமலையிலியோ இவுரு இந்தப் பாட்டைப் பாடலை! முருகன் 'சொல்லற; சும்மாயிரு'ன்னு சொல்லிட்டு, அப்பாலிக்கா, 'முத்தைத்தரு'ன்னு சொல்லெடுத்துக் குடுத்தப்ப, அவரு முருகன் மேல திருப்புகள்[ழ்]தான் பாடிக்கினுத் திரிஞ்சாரு!


முருகனே நேருல வந்து அவருக்கு பிரணவ உபதேசம் பண்ணினதுக்கு அப்பாலதான், அவரு கந்தரநுபூதியும், கந்தரலங்காரமும் பாடினாரு! எல்லாமே கெடைச்சதுக்கு அப்பாலிக்கா, இப்பிடி ஒரு பாட்டைப் பாடினாருன்னா, நம்ப முடியுமா?


அப்ப ஏன் இப்பிடி சொல்றாரு?


இங்கதான் கொஞ்சம் யோசிக்கணும்!


தனக்காவப் பாடலை அவுரு! அவுருக்குத்தான் வேணுன்றதுக்கு மேலியே முருகன் வாரி வாரிக் குடுத்துட்டானே!


அப்ப, வேற ஆருக்காவ பாடினாரு இப்பிடி?


ஒனக்கும், எனக்குந்தான்!


புரியிலியா?


அவரோட கருணை மனசு அவரை அப்பிடிப் பாட வைக்குது!
தனக்குக் கெடைச்சது அல்லாருக்கும் கெடைக்கணுமேன்னு துடிக்கற துடிப்புல பாடின பாட்டுங்க இதெல்லாம்!


எனக்குக் கிடைச்சிருச்சுன்றதச் சொல்ற பாட்டா இருந்தா அதோட கொரலே [தொனியே] வேற மாரி இருந்திருக்கும்! 'ஆ! பாருங்கப்பா! முருகன் எனக்கு இன்னாமா அருள் பண்ணியிருக்காருன்னு' ஒரு கெர்வமா வந்திருக்கும் அதெல்லாம்!


ஆனா, அவரோட பாட்டெல்லாத்தியுமே பாத்தியானா, அல்லாமே, ஒன்னையும், என்னியும் போல சாதாரண ஜனங்க பாடினா எப்பிடி இருக்குமோ, அதும்மாரிப் பாடின பாட்டுங்க!


அவருக்குக் கெடைச்சதைப் போல கெடைக்காம, .......ஆனாக்காண்டிக்கு, அதே சமயத்துல, அவுரு பண்னினதுக்கும் மேல, நெறையத் தப்பு பண்ணினவங்களுக்கும் இந்த அனுபூதி கெடைக்கணும்னு நெனைச்ச அவரோட பெரிய மனசுதான், இதும்போலப் பாட்டா வந்திருக்கு!


அதுனாலத்தான், அருணகிரியாரோட பாட்டுங்களைப் படிக்கறப்பல்லாம், அது தனக்கும் சரியாவே இருக்கறமாரி ஒரு 'ஃபீலிங்' உள்ளுக்குள்ள வரும் ரொம்பப் பேருக்கு!


இதான் அவரோட பாட்டுங்கள்ல க்கீற ஒரு இஸ்பெசல்!


இத்தப் புரிஞ்சுக்கினு, இப்பப் படிச்சியானா, ஒனக்கும் நாயர் சொன்னாமாரியே புரியும்'! இதான் நான் சொல்ல வந்தது' என நிறுத்தினான் மன்னார்!

எங்கள் கண்களிலெல்லாம் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது!


அதைக் கவனியாதவன் போல, மன்னர் தொடர்ந்தான்!

'ஆதாரம்'னா ரெண்டு விதமா சொல்லலாம்.


சாட்சின்ற பொருளு ஒண்ணு.


ஒன்னோட அருளு கெடைக்கறதுக்கான ஒண்ணுமே நான் பண்ணலியே முருகா!ன்னு சொல்றமாரி வரும்.


இன்னொண்ணு, பிடிச்சுக்கறதுக்கான ஆதாரம்!


ஒரு கொடி படரணும்னா, அதுக்கு ஆதாரமா ஒரு கொம்பு வோணும்!


இல்லேன்னா நாலா பக்கமுமா அந்தக் கொடி இங்கியும், அங்கியுமா அலையும், எதுனாச்சும் ஆதாரம் கெடைக்காதான்னு!


அதும்மாரி, ஒன்னோட அருளுன்ற ஆதாரம் எனக்குக் கெடைக்கணும்னா, அதுக்கு நீ மனசு வைக்கணும், அத்த வைக்க மாட்டேன்றியே முருகான்னு பொலம்பற மாரியும் புரிஞ்சுக்கலாம்!


இப்ப அடுத்த ரெண்டு வரியையும் பாப்பம்!


அதுக்கும், இப்ப சொன்னதுக்கும் இன்னா சம்பந்தமின்னு பாக்கலாமா' எனக் கண் சிமிட்டினான் மயிலை மன்னார்!

ஏதோ இதிலும் பொடி வைத்துச் சொல்லப் போகிறான் என ஆவலுடன் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்!

"வேதாகம ஞான விநோத மன அதீதா சுரலோக சிகாமணியே!"

மூணு சமாச்சாரம் இதுல வருது!

வேதாகம ஞான விநோத
மன அதீதா
சுரலோக சிகாமணியே!

ஒண்ணொண்ணா பாப்பம்!


வினோதன்னா, புதுமை பண்றவன்னு அர்த்தம்! இல்லாட்டி, புதுசு புதுசா வெளையாடறவன்னும் சொல்லலாம்!


அப்பிடி இன்னா புதுசா புதுமை பண்ணினாரு முருகன்!


அருணகிரிக்கு தன்னைப் பத்தியே நெனைப்பு வருது!


எந்த ஒரு காரியத்தையும் பண்ணினா, ஒண்னு அது வேதத்துக்கு சம்மதமா இருக்கணும். இல்லேன்னா, ஆகம விதிங்களுக்கு கட்டுப்பட்டதா இருக்கணும்! அதுவுமில்லேன்னா, ஞான வளி[ழி]யிலியாவுது அதுக்கு ஒரு கட்டளை இருக்கணும்! இந்த மூணுலியும் எதுனாச்சும் ஒண்ணுலியாவுது ஒர்த்தன் பண்ற காரியத்துக்கு ஒப்பு இருக்கணும். இல்லேன்னா அந்தக் காரியம் சரியில்லேன்னு அர்த்தம்! இதான் பெரியவங்க நமக்கெல்லாம் சொல்லியிருக்கறது!


இவுரு,... தான் பண்ணின காரியத்தையெல்லாம் ஒண்ணொண்ணா நெனைச்சுப் பாக்கறாரு.
தாம் பண்ணின எந்த ஒரு காரியத்துக்கும் மேலே சொன்ன மூணுலியுமே சரின்னு சொல்லிருக்கலைன்னு நல்லாப் புரியுது!


ஆனாக்காண்டிக்கும், முருகன் இவுருக்கு நேராவே வந்து அருள் பண்ணியிருக்காரு!


நெனைச்சுப் பார்க்கறப்பவே இவுருக்கு ஒரே ஆச்சரியமாப் பூடுது!


இது அத்தினிக்கும் மீறின சக்தியா அந்தக் கந்தன் நின்னுக்கினு ஒரு வெளையாட்டா இந்தக் காரியத்தப் பண்ணியிருக்காருன்னு புரியுது! அவரால மட்டுந்தான் இப்பிடிப் பண்ண முடியும்னு புரிய வருது!

அதான் வேத, ஆகம, ஞான விநோத'!!


இப்பிடிப் பண்றதுன்றது பொதுவா நடக்கவே முடியாது. ஆராச்சும் வந்து சொன்னா நம்ம மனசு அத்த ஒத்துக்காது! அடப் போடா! சும்மா கதை வுடாதேன்னு வெரட்டிருவோம்! ஆனாக்க, இப்பிடியாப்பட்ட ஒரு அருளை ரொம்ப 'அசால்ட்டா' பண்ணிட்டுப் போறாரு முருகன்.


அதத்தான், 'மன அதீதா' மனசையெல்லாம் கடந்தவனே, மனசுக்கெல்லாம் எட்டாதவனேன்னு சொல்லிக் கும்புடுறாரு அருணகிரியாரு!


இப்பிடி சொன்னதுமே, இதும்போல, வேற ஆருக்காவுது பண்ணியிருக்காரா நம்ம முருகன்னு கொஞ்சம் நெனைச்சுப் பாக்கறாரு!

ஏன்னா, ஒரே ஒரு தபா மட்டுந்தான் நடந்திச்சுன்னா, அத்த ஏதோ லக்கி சான்ஸுன்னு சொல்லிருவோம். அதே, ஒண்ணுக்கும் மேல நடந்திருச்சுன்னா, அப்ப அது அவரோட லீலைன்னு வெளங்குமில்லியா, அதுக்குத்தான்!


அப்பிடி நெனைக்கறப்ப, சட்டுன்னு ஒண்ணு ஞாபகத்துக்கு வருது!


தப்பும் மேல தப்பு பண்ணின தேவருங்களுக்கும் இதும்மாரி அருள் பண்ணித்தானே அவங்களையெல்லாம் சூரனோட பிடிலேர்ந்து காப்பாத்தினாரு; அதுனாலத்தானே, இவுருக்கே பட்டங் கட்டி, அவங்கள்லாம் கந்தனோட காலுல விளு[ழு]ந்து கெடக்காங்கன்னு தோணுது! 'சுரலோக சிகாமணியே'ன்னு கூப்புடுறாரு! தேவலோகத்துக்கே தலைவனா இருந்து அவங்களோட தலையெல்லாம் ஒன்னோட காலடியுல கெடக்கறமாரி நிக்கறவனேன்னு துதிக்கறாரு!


இதும்போல மனசால கூட நெனைக்க முடியாத காரியம்லாம் பண்ற நீ கொஞ்சம் கருணை வைச்சு, என்னையும்.... என்னைப் போல இருக்கறவங்களையும்...... பாருப்பான்னு சொல்ற அருமையான பாட்டு இது!


கொஞ்சம் சாஸ்தியாத்தான் சொல்லிட்டேன்னு தெரியுது! இருந்தாலும், சொல்லாம இருக்க முடியலே' என ஒரு மழலை போலச் சிரித்தான் மயிலை மன்னார்!

சாஸ்திரிகள் மௌனமாக அமர்ந்திருந்தார்! நானும், நாயரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்! என்னையுமறியாமல் என் வாய் பாடலை மீண்டும் ஒருமுறை முணு முணுத்தது.


ஆதா ரமிலே னருளைப் பெறவே
நீதா னொருசற் றுநினைந் திலையே
வேதா கமஞா னவிநோத மனா
தீதா சுரலோ கசிகா மணியே.

'கொஞ்ச நேரம் இந்தப் பாட்டுல சொன்னத நெனைச்சுப் பாரு' எனச் சொல்லிவிட்டு, எழுந்து நின்று சோம்பல் முறித்தான் மயிலை மன்னார்!


அருணகிரிநாதரின் கருணை உள்ளத்தை நினைக்கையில் மனம் கசிந்தது!
*************
[தொடரும்]


வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP