Tuesday, February 22, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 8

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 8
கந்தரநுபூதி: 8

பல வேலைகள் இருப்பதால் இனி வாரம் ஒரு முறைதான் பார்க்கமுடியுமெனச் சொல்லிவிட்டான் மன்னார்!

குறிப்பிட்ட நேரத்தைச் சொல்லி, என்ன வேலை இருந்தாலும், அந்த நேரத்தில் தான் சாஸ்திரிகள் வீட்டில் கண்டிப்பாக இருப்பேன் என வாக்களித்திருந்தான் மன்னார்!

'அநுபூதி கிடைப்பதென்றால் சும்மாவா?' எனச் சிரித்தார் சாம்பு சாஸ்திரிகள்!

சரியாகச் சொன்ன நேரத்திற்கு முன்னமேயே அங்கு சென்றுவிட்டேன்!

ஒரு சில நிமிடங்களில் அங்குவந்த நாயர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தான்!

அப்போதுதான் புரிந்தது... நான் அவனை அழைத்து வராமல் நேராக வந்துவிட்டதை!

ஒரு குற்ற உணர்வுடன் அவனைப் பார்த்தேன்!

'ஒன்னும் கொழப்பமில்லா! நிண்ட ரூட்டு வேற. எண்ட ரூட்டு வேற! எனிக்கு மனசிலாயி ' எனக் கபடமில்லாமல் சிரித்தான் நாயர். அவன் கையில் மசால் வடை பார்சல் இருந்தது!

இதைக் கேட்டுச் சிரித்தபடியே வந்தான் மயிலை மன்னார்!

'இன்னா நாயர்? அனுபூதி நீ இல்லாமலியே கேட்டுறலாம்னு வண்ட்டானா நம்ம சங்கரு? ' எனக் கிண்டலடித்தான்!

சாஸ்திரிகள் பெரிதாகச் சிரித்தார்!

'சரி, சரி! மேட்டருக்கு வருவோம்! அடுத்த பாட்டைப் படிக்கறதுக்கு முன்னாடி ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ! இந்தக் "கந்தர் அனுபூதி"யை மட்டும் நம்ம அருணகிரியாரு கொத்து கொத்தாச் சொல்லியிருக்காரு! முந்தியே சொன்னேனில்ல... அந்த 3.4.5 மூணு பாட்டும் ஒரு செட்டுன்னு நெனைப்புல வைச்சுக்கன்னு....... அதேமாரி, போன பாட்டுலேர்ந்து.... அதான், 6,7,8,9 பாட்டு நாலும் ஒரு செட்டு! இந்த நாலு பாட்டும் மனசைப் பத்திச் சொல்றது.
போன பாட்டுல கல்லான எம்மனசு மேல ஒன்னோட காலை வையிப்பான்னு கெஞ்சினாரு.

இப்ப இந்தப் பாட்டுல..... எங்கே அந்தப் பாட்டைப் படி!' என்றான் மயிலை மன்னார்!


கெடுவாய் மனனே கதிகேள் கரவா
திடுவாய் வடிவே லிறைதா ணினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே .

கெடுவாய் மனனே கதிகேள் கரவா
திடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவேதனை தூள் படவே
விடுவாய் விடுவாய் வினையாவையுமே .

ஏ! கெட்டுப் போன என்னோட மனசே!ன்னு தன்னோட மனசைப் பார்த்துப் பேசறாரு அருணகிரியாரு!
முன்னாடியே சொன்னேனே, அதுமாரி, இதெல்லாம் ஒனக்காவோ, இல்லை, எனக்காவோ அவுரு பாடலை!
இதும்மாரி பெரியவங்க சொன்னதெல்லாம் அவங்களைப் பத்தி மட்டுந்தான்! அவங்க பட்ட அனுபவத்தத்தான் பாட்டாப் பாடியிருக்காங்க!

ஏ, கெட்டு ஒளி[ழி]ஞ்சுபோன என்னோட மனசே! ஒனக்கு ஒரு வளி[ழி] சொல்றேன் கேட்டுக்கோன்னு ஆரம்பிக்கறாரு!

அதான்,
'கெடுவாய் மனனே கதிகேள்'

'கரவாதிடுவாய்'னா, கொஞ்சங்கூட சிந்தனையே பண்ணாம, ஒங்கிட்ட க்கீற பொருளையெல்லாம் கொடுத்திருன்றாரு!

ஒங்கிட்ட அப்பிடி இன்னா க்கீது?
பண்மா? பொருளா?
அதில்லை இங்க சொல்றது

அடுத்த வரியுல சொல்றரு... அத்தக் கவனி

'வடிவேல் இறைதாள் நினைவாய்'ன்னு ஒண்ணு சொல்றாரு!

அதான் இதுல முக்கியமாக் கவனிக்கணும் நீ!

இன்னாமோ நாம சம்பாதிச்சதக் குடுக்கறோம்னு அகந்தை பிடிச்சு அலையாம, இத்தயெல்லாம் குடுத்தது அந்தக் கந்தவேலந்தான்னு புரிஞ்சுக்கினு, அவன் குடுத்தத அவனோட அடியாருங்களுக்குக் குடுக்கறேன்ற நெனைப்போடக் குடுக்கணும்!

துளிக்கூட அகங்காரமே இல்லாம, இதெல்லாம் என்னோடதுன்ற நெனைப்பு கொஞ்சங்கூட வராமக் குடுக்கணும்ம் நீ!
அப்பத்தான் நீ குடுக்கறதுலியே ஒரு அர்த்தம் இருக்கும்னு தெளிவாச் சொல்றாரு அருணகிரியாரு!

அப்பிடிக் குடுத்தாத்தான் ஒன்னோட வேதனையெல்லாம் சுட்டெரிஞ்சு சாம்பலாகிப் போவும்னு ஷ்ட்ராங்காச் சொலிடறாரு அடுத்த வரியுல!

'நெடுவேதனை தூள் படவே சுடுவாய்'

இத்தினி நாளா நீ அனுபவிச்சுக்கினு க்கீற வேதனையெல்லாம் தீந்து போவணும்னா, நீ குடுக்கறதெல்லாம் ஒன்னோடது இல்லை; அல்லாமே அவன் குடுத்ததுதான்ற நெனைப்போடக் குடுத்தாத்தான் வேதனை தீரும்னு புட்டுப் புட்டு வைக்கிறாரு!

இதுக்கு அப்பாலதான், ஒரு டகால்டி வேலை பண்றாரு இந்தாளு!

இன்னும் இன்னத்தக் குடுன்னு சொல்லலை ! நல்லாக் கெவனி!

'வினை யாவையுமே விடுவாய் விடுவாய்'னு ரெண்டு தபா சொல்றாரு!

எதுக்கு அப்பிடிச் சொல்றாருன்னு கொஞ்சம் யோசிக்கணும்!

வெனைன்னா இன்னா?

நல்ல வெனை, கெட்ட வெனைன்னு ரெண்டு க்கீது!

கெட்டத விட்டிருன்னுதான் அல்லாரும் சொல்லக் கேட்டிருக்கோம்!

இவுரு இன்னாடான்னா, அது நல்ல வெனை, கெட்ட வெனைன்னு பாக்காதே! வெனைன்னு எப்ப தெரிஞ்சு போச்சோ, அப்பவே, அது நல்லதா, கெட்டதான்னு ஆராய்ச்சி பண்ணிக்கினு டயத்த வேஸ்ட் பண்ணாம, வெனைன்னு தெரிஞ்சதுமே, அத்த விட்டிருன்னு அடிச்சுச் சொல்றாரு. இதத்தான் குடுக்கச் சொல்றாரு!

கொஞ்சம் கொயப்பமாத்தான் இருக்கும் இந்த சமாச்சாரம்!

கெட்டத வுட்டுரலாம். அது புரியுது.

ஆனா, எதுக்காவ நல்லதியும் வுட்டுருன்னு சொல்றாரு?

ஒரு நல்லது பண்ணினா அதுனால ஒனக்கு கொஞ்சம் புண்ணியம் கெடைக்கலாம்.
அத்த அனுபவிச்சே ஆவணும் நீ!

நீ அனுபூதியத் தேடிப் போறப்ப, இது எதுக்கு ஒனக்கு?

புரியுதா?

இத்தத்தான் 'சொல்லற, சும்மாயிரு'ன்னு கந்தன் சொல்லி வைச்சாரு அருணகிரியாருக்கு!

அது இப்ப நெனைப்புல வருது அவுருக்கு!

ஆஹா! எனக்கு நல்லதும் வேணாம்; கெட்டதும் வேணாம்! ஒண்ணுமில்லாம இருந்தாலே போறுண்டா சாமின்னு தடாலடியா மனசு கையுல சொல்லிடறாரு!

இப்ப ஒரு நாயை, அது ஒன்னோட நாயா இருந்தாக்கூட, ரூமுக்குள்ள பூட்டிவைச்சு அடிச்சியான்னா, ஒரு நேரத்துல அது ஒன்னியே திருப்பிக் கடிக்க வரும்! அதும்மாரித்தான், நாம செய்யற நல்லதும் கெட்டதும் நம்மியே திருப்பித் தாக்கும்! புரியுதா நான் சொல்றது? கெட்டதுல மட்டுமில்லாம, நல்லதாலியுங்கூட மனசு கெட்டுப் போவறதுக்கு சான்ஸ் க்கீது! கெர்வம் வந்திரும்!

அதுனால, நல்லதோ, கெட்டதோ, எத்தயுமே ஒங்கிட்ட வைச்சுக்காம, அல்லாமே அவன் தான் குடுத்தான்ற நெனைப்போட அல்லாத்தியுமே விட்டொளிச்சிருன்னு இந்தப் பாட்டுல சொல்றாரு அருணகிரியாரு.

சரி, அடுத்த வாரம் இதே நேரம் பாப்போம்' எனச் சொல்லி எழுந்தான் மயிலை மன்னார்!

என்ன சொல்வதெனப் புரியாமல், ஏக்கத்துடன் மயிலை மன்னாரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினேன் நான்!
*************

[தொடரும்].

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP