Showing posts with label upadhesa undhiyaar. Show all posts
Showing posts with label upadhesa undhiyaar. Show all posts

Friday, March 20, 2009

"உந்தீ பற!" -- 35



"உந்தீ பற!" -- 35


'பகவான் ரமணரின் திருவுந்தியார்'


[முந்தைய பதிவு]


"வாழ்த்து"
[திரு. முருகனார் எழுதியது]

[வழக்கம்போல், இந்தப் பாடல்களையும் பதம் பிரித்துத் தந்திருக்கிறேன். படித்தாலே எளிதாகப் புரியும் பாடல்கள் இவை. எனவே விளக்கம் தவிர்த்திருக்கிறேன். நன்றி.]


இருடிக ளெல்லா மிறைவனடியை

வருடி வணங்கின ருந்தீபற

வாழ்த்து முழங்கின ருந்தீபற. [1]


உற்றார்க் குறுதி யுபதேச வுந்தியார்

சொற்ற குருபர நுந்தீபற

சுமங்கள வேங்கடனுந்தீபற. [2]


பல்லாண்டு பல்லாண்டு பற்பன்னூ றாயிரம்

பல்லாண்டு பல்லாண்டு முந்தீபற

பார்மிசை வாழ்கவே யுந்தீபற. [3]


இசையெடுப் போருஞ் செவிமடுப் போரும்

வசையறத் தேர்வோரு முந்தீபற

வாழி பலவூழி யுந்தீபற. [4]


கற்கு மவர்களுங் கற்றுணர்ந் தாங்குத்தா

நிற்கு மவர்களு முந்தீபற

நீடூழி வாழியே யுந்தீபற. [5]


இருடிகள் எல்லாம் இறைவன் அடியை

வருடி வணங்கினர் உந்தீ பற

வாழ்த்து முழங்கினர் உந்தீ பற. [1]


உற்றார்க்கு உறுதி உபதேச உந்தியார்

சொற்ற [சொல்லிய] குருபரன் உந்தீ பற

சுமங்கள வேங்கடன் [பகவான் ரமணரின் இயற்பெயர்] உந்தீ பற. [2]


பல்லாண்டு பல்லாண்டு பல பன்னூறு ஆயிரம்

பல்லாண்டு பல்லாண்டும் உந்தீ பற

பார்மிசை வாழ்கவே உந்தீபற. [3]


இசையெடுப்போரும் செவிமடுப்போரும்

வசையறத் [குற்றமில்லாமல்] தேர்வோரும் உந்தீ பற

வாழி பல ஊழி உந்தீ பற. [4]


கற்கும் அவர்களும் கற்று உணர்ந்து ஆங்கு தா[ம்]

நிற்கும் அவர்களும் உந்தீ பற

நீடூழி வாழியே உந்தீ பற. [5]

******************************

“நிறைவுரை”

"அறியாதான் பாடுகிறேன் அம்மைத் திருக்கதையை

தெரியாதான் பாடுகிறேன் தேவி திருக்கதையை"



'மாரியம்மன் தாலாட்டு' என்னும் தோத்திரப் பாடலில் மேற்கூறிய வரிகள் வரும்.

அதுதான் என் நிலையும்!


இதில் சொல்லப்பட்டிருக்கும் பல விஷயங்களை முறையாகப் பயின்றவன் அல்லேன் நான்! அப்படி இருந்தும், இதனை எழுதப் புகுந்தது குருவருளாலேயே !


தெய்வாதீனமாக ரமணரின் பாடல் தொகுப்பு எனக்குக் கிடைக்கப் பெற்றதும், அதில் இந்த குறிப்பிட்ட 'திருவுந்தியார்' என் மனதைத் தொட்டதும் அவனருளாலே!


விமானத்தில் சென்னை செல்லுகையில், இன்னும் சற்று ஆழ்ந்து படிக்க முறபட்டபோது, மனதில் பட்ட கருத்துகளை ஒரு நோட்டுப் புத்தகத்தில், எட்டு வரிக் கவிதைகளாக எழுத முற்பட்டேன். [அவையே ஒவ்வொரு பாடலுக்கு அடியிலும் இட்டிருக்கும் 8 வரிகள்!]


சென்னை சென்ற மறுநாளே நான் மிகவும் வணங்கும் இறையன்பரைச் சந்திக்க காண நேர்ந்தபோது, அவர் கூறிய பல கருத்துகள், இந்நூலில் சொல்லியதற்கான மேல்விளக்கம் போல அமைந்தது கண்டு நெகிழ்ந்து போனேன்.


திரும்பி வந்ததும் இதனை அப்படியே போடலாம் என நினைத்து, முதல் பதிவையும் இட்ட நிலையில், எனது நண்பர் ஒருவர் [மங்களூரைச் சேர்ந்தவர் இவர்!] என்னை அழைத்தார்.


அவரிடம் ஒரு புத்தகம் இருப்பதாகவும், அது எனக்குப் பயன்படும் எனத் தான் நினைப்பதாகவும் கூறியதோடு அல்லாமல், அன்று மாலையே என் வீட்டிற்கு வந்து அதைத் தந்துவிட்டும் போனார்.


பகவான் ரமணர் எழுதிய 'உபதேச சாரா' என்னும் வடமொழி நூலின் ஆங்கில உரைவிளக்கம் அது! திரு. தேஜோமயானந்தா அவர்கள் எழுதியது! புரட்டிப் பார்த்தவுடன், முதல் இரு பாடல்களிலேயே புரிந்தது, இது 'உபதேச உந்தியாரின் வடமொழி ஆக்கம்' என!


என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!


குருவருள் தேடிவந்து, நான் எழுத நினைத்ததற்கு ஆசியும், வழிகாட்டலும் அளித்ததாக நம்புகிறேன். இதில் அவர் கருணையின்றி வேறேதும் இல்லை!


அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட விளக்கம், கிட்டத்தட்ட நான் எழுதிவைத்திருந்த பாடல்களுடன் ஒத்திருந்தது இன்னொரு ஆச்சரியமான விஷயம்.


முழுத் தெம்புடன் எழுதி முடித்து, இங்கு பதிந்து முடிக்கும் இந்நேரத்தில்,.... சமயத்தில் வந்து அருளிய அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


"மலையளவு நூலறிவு இருப்பினும், கூடவே கடுகளவாவது பயிற்சியும் நிகழ்ந்தால் மட்டுமே உண்மை புலப்படும்" என நான் வணங்கும் அந்த இறையன்பர் சொன்னதை இந்த நேரத்தில் எனக்கு நினைவுபடுத்திக் கொண்டு,

இங்கு நான் எழுதியதில் ஏதேனும் குற்றம் குறைகள் இருப்பின், அவற்றுக்கு முழுப் பொறுப்பும் என் அறியாமையே காரணம் எனச் சொல்லி, அனைவரையும் வணங்கி இதனை இத்துடன் முடிக்கிறேன்.


அனைவர்க்கும் பகவான் ரமணரின் திருவருள் சித்திக்க வேண்டுகிறேன்.


நன்றி! வணக்கம்!


"நன்றாக குரு வாழ்க!"


**************************

Read more...

Thursday, March 19, 2009

"உந்தீ பற! “ -- 34

"உந்தீ பற! “ -- 34
‘பகவான் ரமணர் அருளிய திருவுந்தியார்’


யானற் றியல்வது தேரி னெதுவது
தானற் றவமென்றா னுந்தீபற
தானாம் ரமணேச னுந்தீபற. [30]

யான் அற்று இயல்வது தேரின் எது அது
தான் அற்ற தவம் என்றான் உந்தீ பற
தானாம் ரமணேசன் உந்தீ பற.


தானெனும் ஒன்றினைத் தானே உணர்ந்து
தானும் இல்லா உணர்வினை அடைந்து

எல்லையில்லாப் பெருமகிழ்வதனில்
தானும் ஒன்றாய் இரண்டறக் கலந்து

எல்லாம் எங்கும் எதுவும் இன்பம்
என்னும் நிலையினில் திளைக்கும்

அனுபவம் எதுவென உணர்ந்தவன் சொன்னான்
அவனே ரமணன் எனும் நிலை அறிக.


'திருவுந்தியாரின்' நிறைவுப் பாடலைப் பார்க்கும் முன், இதுவரை அறிந்ததைச் சற்று சுருக்கமாகப் பார்ப்போமா?

முதல் மூன்று பாடல்கள் கர்ம யோகம் என்றால் என்ன, அதனை எப்படிச் செய்தல் நலம் என விவரித்தது.

4 முதல் 9 வரையில் பக்தி யோகம் முறையாகப் பயில்வது எப்படி எனச் சொன்னார் பகவான்.

யோகம் செய்வதன் பலனை, பயனை பத்தாவது பாடல் விளக்கியது.

11 முதல் 16 வரையிலான பாடல்கள் அஷ்டாங்க யோகம் பற்றி விரித்துச் சொல்லின.


17 தொடங்கி 29 வரையிலும், ஞான யோகம், ஒரு முறையான பயிற்சியின் மூலம் எப்படி ஒரு தகுந்த குருவின் துணையால் தெளியவரும் என பாடல்களின் மூலம் தெளிவித்தார் பகவான்.


இந்த நிறைவுப் பாடலில், இந்த' சுய தேடல்' எவ்வளவு உயர்வான ஒன்று என்பதனை பகவான் ரமணர் சொல்கிறார்!

--------

இவ்வுலக இன்பங்களை நாம் அடைய வேண்டுமானால், அதற்காக நிறையச் செயல்கள் செய்தாக வேண்டும்.

அதிகப் பயன் வேண்டுமானால், அதிகம் முயற்சி செய்ய வேண்டும் என்பது கண்கூடு.

இதே அளவுகோலை வைத்துத்தான், நாமெல்லாம், பயந்து ஒதுங்குகிறோம்.... இந்தச் சுயதேடலைக் கண்டு!

நீடித்த இன்பம் தரவிருப்பதை அடைய, நீடித்த உழைப்பு தேவையாகிப் போகும் என!

நான் மிகவும் மதிக்கும் அந்தப் பெரியவர் அடிக்கடி ஒன்று சொல்வார்! ....

"மலையளவு நூலறிவு வேண்டாம்! கடுகளவு பயிற்சி செய்தால் போதும்! உண்மை உனக்குக் கிட்டும்!"

தன்னைப் பற்றிய தவறான புரிதலே மேலும், மேலும் நம்முள் அறியாமையை வளர்த்து, ஆணவத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.

எந்தச் செயலாலும் இந்த அறியாமையைப் போக்கவே முடியாது!

உண்மை இன்பம் வேண்டுமெனின், நமது இயல்பு எதுவெனச் சரியாக நாம் அறிய வேண்டும்.

இந்தச் 'சுய தேடலில்’ கிடைக்கும் அறிவு ஒரு பெரிய தவம் எனச் சொல்கிறார் ரமணர்.

'தவம்' என்றால் என்ன?

புராணங்களிலும், இதிஹாசங்களிலும் நாம் படித்த, கடுமையாக உடல் வருத்தி, முனிவர்கள் பல்லாண்டுகளாகச் செய்த ஒன்றா?

அரை நொடியில் அவர்களது தவமெல்லாம் ஆணவத்தால், அழிந்து போனதையும் படித்திருக்கிறோமே!

கடுமையான தவத்தால் இது கிட்டியது என்பதை மறந்து, ‘தான்’ எனும் நினைவில் இதையெல்லாம் தொலைத்த முனிவர்கள் பலர்!

அப்படியானால் அது ’தவம்’ அல்ல!

இந்தத் 'தவம்' உள்ளில் நிகழும் ஒன்று! உடல் வருந்தச் செய்யும் ஒன்றல்ல!

ஒருமித்த மனத்துடன், 'எது எனக்கு நீடித்த மகிழ்ச்சியைத் தருகிறது?' என்னும் கேள்விக்கு விடை தேடிச் செல்லும் இந்த உள்ளில் செய்யும் உடல் வருத்திச் செய்யும் தவத்தை விடவும் மிகவும் சிறந்தது!

”இதுவல்ல நான், இதுவல்ல நான்!” என ஒவ்வொன்றாக நம் சட்டைகள் உரியும்போது, நம் ஆணவம் நம்மை விட்டு விலகுகிறது. அறியாமை அகலுகிறது!

உள்ளொளி தெரியத் தொடங்குகிறது!

இதனை நன்கு உணர்ந்தவர் சொல்லும் போது, இதன் வலிமை நமக்குப் புரிய வருகிறது!

அவர்தாம் பகவான் ரமண மஹரிஷி!

தான் அறிந்த ஒளியை நமக்கெல்லாமும் தர அருள்கொண்டு, இந்த அற்புதமான பாடல் தொகுப்பை அளித்துப் பறக்க விட்டிருக்கிறார்!

எளிதில் படித்துப் பொருள் காணமுடியாத உபனிஷத்துகளின் சாரத்தை அழகு தமிழில் நமக்கெல்லாம் தந்து ஒளிவீசப் பறக்கச் செய்திருக்கிறார்!

அந்த மஹானின் பாத கமலங்களில் விழுந்து பணிந்து நமக்கும் இந்த உண்மை புரியச் செய்ய அவரை வேண்டி, நம் தேடலைத் தொடங்குவோம்!

இந்த 'திருவுந்தியாருக்கு' முகப்புப் பாடல்களை அளித்த திரு. முருகனார், நிறைவாகவும் சில பாடல்களை வைத்திருக்கிறார்!

அவற்றை நாளை பார்த்து, இதனை நிறைவு செய்யலாம்.

நன்றி வணக்கம்!


"எத்தனை எத்தனை மஹான்கள் உண்டோ, அத்தனை அருளாளருக்கும் எனது பணிவான வணக்கங்கள்!"

"உந்தீ பற! உந்தீ பற! உள்ளொளி ஒளிர்ந்திட உந்தீ பற!""
******************
[நாளை நிறைவுறும்!]

Read more...

Tuesday, March 17, 2009

"உந்தீ பற!" - 33

"உந்தீ பற!" - 33

'பகவான் ரமணரின் திருவுந்தியார்'

[முந்தைய பதிவு]

பந்தவீ டற்ற பரசுக முற்றவா
றிந்த நிலைநிற்ற லுந்தீபற
விறைபணி நிற்றலா முந்தீபற. [29]

பந்த வீடு அற்ற பரசுகம் உற்றவாறு
இந்த நிலை நிற்றல் உந்தீ பற
இறைபணி நிற்றலாம் உந்தீ பற.

கட்டுகள் விலகிட அறியாமை விலகும்
அறியாமை விலகிட கட்டுகள் அறுந்துபோம்

உள்ளொளி உணர்ந்திட பெருவெளி தெரியும்
வீடுபேறென்னும் ஓர்நிலை புரியும்

பேரானந்தம் எதுவென உணரும்
சீராளர் எம்மில் சிலரே உண்டு

இதனில் திளைப்பவர் அறியும் சுகமோ
அவரே அறிவார்! அவரை வணங்குவோம்!



விடுதலை, முக்தி என்னும் ஒன்றை அடைந்தால் மட்டுமே நமக்கு மகிழ்ச்சி கிடைக்கும்; அதுவரையிலும், இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும் எனும் ஒரு எண்ணம் நமக்குள் விதைக்கப் பட்டிருக்கிறது.


எனவே, நம் மரணத்திற்குப் பின்னரே இந்த மகிழ்ச்சி, அதாவது சொர்க்கம் என்னும் ஒன்றை அடைந்த பின்னரே, இதெல்லாம் நமக்குக் கிட்டும் எனவும் எண்ணுகிறோம்.

ஆனால், பகவான் ரமணரோ 'இந்த சந்தோஷம் என்பது இங்கேயே கிட்டும்; அப்படி அதை அடைந்தவர்களை அன்றாட வாழ்க்கையிலேயே நம்மால் காணமுடியும்! அவர்கள் வணங்கத் தக்கவர்கள் எனச் சொல்லுகிறார்'
இந்தப் பாடலில்!

விடுதலை என்றாலே சந்தோஷம் என்பதோடு மட்டுமே சம்பந்தப் படுத்தி மயங்குகிறோம் பொதுவாக நாமெல்லாரும்.
ஆனால், நம் இயல்பே மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமே எனப் புரிய வரும்போது???

இந்த உலகில் அடையக் கூடிய எந்தப் பொருளினாலும் நீடித்த மகிழ்ச்சி நமக்குக் கிட்டுவதில்லை என முந்தைய பாடல்களில் பார்த்தோம்!
நிலைத்த நீடித்த மகிழ்வே உண்மையான மகிழ்ச்சி என முந்தைய பாடல்[28] சொன்னது.

அப்படியாயின், சாவுக்குப் பின்னரே மகிழ்வு கிட்டும் என எப்படி நம்புகிறோம்?

தன் இயல்பே மகிழ்ச்சி தான் என்னும் போது, இறந்தபின்னரா அதனைத் தேடுவது?

இந்த உலகில் இந்த உடலால் நமக்குக் கிடைத்த சொந்த பந்தங்கள் எல்லாமும் நிலையானவை என்னும் அறியாமை நீங்கும்போது, .... மனம் என்னும் ஒன்றே நம்மை இப்படி அலைக்கழித்தது எனப் புரிய வரும்போது, நிலையான மகிழ்வு என்பது எது எனப் புரிகிறது.

இப்படி எல்லாருக்கும் புரிகிறதா என்றால், இல்லை என்றே சொல்ல முடியும்.

இதுதான் எனக்கு விதித்தது என முடங்கிப் போகும் பலரையே நாம் பொதுவாகக் காண்கிறோம்.

இந்தநிலையை நமக்குத் தருவது இந்த உடல் மேல் நமக்கு இருக்கும் ஆசையும், அதைத் தொட்டு நம் மனம் நம்மை அலைக்கழிக்கும் நிலையுமே.

இதைப் புரிந்த ஒரு சிலர் இந்த நிம்மதி, சந்தோஷம் என்பது என்ன என ஆராயப் புகுந்து, இதன் விளைவாக ஒரு குருவின் துணையால் பயிற்சியில் ஈடுபட்டு தன்னை அறிந்து, தன்னை உணர்ந்து, தெளிவு பெறுகிறார்கள்.

இதன் விளைவாக, இருக்கும்போதே மகிழ்வாக இருப்பது எப்படி என்பதற்கு உதாரண புருஷர்களாக, நம் கண் முன்னே நடமாடுகிறார்கள்.

நான் பார்த்திருக்கிறேன்!

இவர்களைப் பார்த்தாலும், இவர்களுடன் பேசினாலும், இவர்களுடன் பழகினாலும், இவர்களைப் பற்றி நினைத்தாலுமே இவர்களது மகிழ்ச்சி அப்படியே நம்மைப் பற்றிக் கொள்ளும்!

அப்படிப்பட்ட மஹான்களை அவர்களது அருளால் மட்டுமே நாம் காண்கிறோம்.

இவர்கள் வணங்கத் தக்கவர்கள்!

இவர்களை எப்படி அடையாளம் காணுவது?

ஒரு நான்கு குணங்களின் மூலம் தெரிய வரும் எனப் பெரியவர்கள் சொல்கின்றனர்!

1. விவேகம்: நிஜத்துக்கும் , நிஜம் இல்லாதவற்றுக்கும் இடையிலான வேறுபாடை அறிந்திருப்பர்.

2. வைராக்யம்: இவ்வுலக, மேலுலக இன்பங்கள் எவற்றுக்கும் ஆசைப்படாத குணமுடையவர்கள்.

3. ஷட் ஸம்பத்தி: ஆறு வகையான செல்வங்களைப் பெற்றிருப்பர்.
[அ] ஸம= மனக்கட்டுப்பாடு
[ஆ] தம= புலன்களின் மீதான கட்டுப்பாடு
[இ] ஸ்ரத்தா= குருவின் மீதும், நன்னூல்களின் மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கை உடையவர்.
[ஈ] திதிக்ஷா = பொறுமை
[உ] உபரதி = வெளிப் பகட்டிலிருந்து விலகி நிற்பர்.
[ஊ] ஸமாதனா = எப்போதும் சமநிலையில் இருந்து தன்னில் ஆழ்ந்திருப்பர்.
4. முமுக்ஷுத்வம் = விடுதலையில் எப்போதும் நாட்டமுடையவராயிருப்பர்.

இத்தகைய பிறப்பு பல பிறவிகளில் அடைந்த புண்ணியத்தால் கிடைக்கவரும் ஒருவர், தக்க குருவின்பால் ஈர்க்கப்பட்டு, அவரது அருட்பார்வையினால், அறியாமை என்னும் மாயையில் இருந்து சட்டென விடுபடுகிறார்.
இதன் மூலம், பிறப்பு, இறப்பு என்னும் தளையிலிருந்து விடுபடுகிறார்.

சொல்லே சொல்லாகி சொல்லிழந்த சொல்லாத சுகமிதுதான்!

இப்படிப்பட்ட மஹான்கள் எப்போதும் வணங்கத் தக்கவர்!



எளிமையான தவம் எது என்பதை அடுத்த பாடலில் சொல்லி பகவான் நிறைவு செய்கிறார்!

“எந்தரோ மஹானுபாவுலு! அந்தரிகு வந்தனமுலு!”
********************
[தொடரும்]

Read more...

Sunday, March 15, 2009

"உந்தீ பற!” - 32

"உந்தீ பற!” - 32

‘பகவான் ரமணர் அருளிய திருவுந்தியார்’

[முந்தைய பதிவு]

தனாதியல் யாதெனத் தான்றெரி கிற்பின்
னனாதி யனந்தசத் துந்தீபற
வகண்ட சிதானந்த முந்தீபற. [28]

தன் ஆதி இயல் யாது எனத் தான் தெரிகில் பின்
அனாதி அனந்த சத் உந்தீ பற
அகண்ட சிதானந்தம் உந்தீ பற.

‘நான்’ யார் எனத் தேடிடும் யோகியர்
’நானே நான்’ எனப் புரிந்திடும்போது

‘அழிவிலாத பிறப்பே இலாத
நிரந்தரமான அறிவுறும் இன்பமே’

‘நான்’ எனப் புரிந்திடும் யோகியர்
அனைத்தும் கடந்த அனாதி ஆனந்தம்

சத்தியமாக ஒளிர்ந்திடும் நிலையினில்
எல்லையில்லப் பேரானந்தத்தில் திளைப்பர்.


“தன் நிலை உணர்தல்”

இவ்வுலகில் பிறந்த அனைவரும் துன்பங்களில் இருந்து எப்படி விலகுவது என்னும் ஒன்றையே காலை முதல் மாலை வரையிலும் அன்றாடம் சிந்தித்து அதற்கெனவே பாடு படுகிறோம்.

ஆனால், நீடித்த இன்பம் என்னும் ஒன்று கைக்கெட்டாத தூரத்திலேயே எட்டிப் போகிறது என்பதே நாம் உணரும் உண்மை!

இது புரிந்தவர் தான் யார் எனச் சிந்திக்கத் தொடங்கி முறையான ஒரு குருவின் துணையால், பயிற்சியில் ஈடுபட்டு, இதுவரை சொன்னது போன்ற ஒரு நிலையை அடைகின்றனர்.

இந்த நிலையில் விளைவது ஒரு எல்லையில்லா ஆனந்தம்!

இது எப்படி என்பதை இந்தப் பாடல் விளக்குகிறது.

தான் விரும்பும் பொருளை அடைவதால் மகிழ்ச்சி வரும் என மனம் நம்மை அலைக்கழிக்க, அதனைத் தேடியே நம் வாழ்க்கை அமைகிறது.

ஒரு பொருள் கிட்டியதும் அல்லது கிட்டாமல் போகும்போதும் விளைகின்ற சந்தோஷம்/ஏமாற்றம் வெகு விரைவிலேயே நம்மை விட்டு விலகி அடுத்த பொருளின் மீது நம் கவனம் திரும்புகிறது.

இரண்டாம் பாடலில் சொன்னது போல, வினை மேலும் வினைகளைச் செய்யத் தூண்டி, நம்மை மேலும் வினைக்கடலில் ஆழ்த்துகிறது.

இதனால் விளையும் சுகமோ, துக்கமோ அதிக நாள் நீடிப்பதில்லை என்பதை நாம் அனைவருமே அறிவோம்.

அப்படியானால், எப்போதும் சுகம் என்ற ஒன்றையே நம் மனம் நாடுகிறது; அதையொட்டியே நம் செயல்பாடுகளும் அமைகின்றன எனபதும் புரிய வரும்.

துக்கம் நாடாத நம் இயல்பு சுகம் என்னும் ஒன்றைத் தேடி அலைகிறது.

ஆனால், இவ்வுலகில் கிடைக்கும் சுகங்கள் நமக்கு நீடித்த மகிழ்வைக் கொடுப்பதில்லை என்பதும் புரிகிறது.

இந்த நீடித்த சுகம் என்ற ஒன்றைத் தேட விழையாமல், சுகம், துக்கம் என்ற இரண்டுக்குள்ளேயே நம் வாழ்வு பெரும்பாலும் அடங்கிப் போய் விடுகிறது....

புலன்களாலும், புத்தியாலும் கிடைக்கும் சுகம் நீடித்த இன்பத்தைத் தருவதில்லை எனப் புரியும் சிலர், இது எங்கே கிடைக்கும் என்னும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ஒரு தகுந்த குருவின் அருளால், முறையான பயிற்சியில் ஈடுபட்டு, படிப்படியாக உயர்ந்து, தான் யார் என்கிற அறிவு கிடைக்கப் பெறுகிறார்.

இந்த அறிவின் விளைவால் தெரியவரும் ஒளிவெள்ளத்தில் இதுவரை அதனை மூடியிருந்த அழுக்குகளெல்லாம் மறைந்து, தன்னை உணரும் நிலை கை கூடி வரும்.

இதுவரையிலும் தனது நிலையே இந்த மகிழ்வுதான் என்பது புரிய வரும் போது, இனிப்பான தானே ஏன் இனிப்பு எனக் கருதிய மற்ற பொருட்களின் மீது படிந்து இனிப்பை உணரச் செய்தது ஏனோ என்னும் தெளிவு பிறக்கிறது!

அறியாமை விலகும் போது இது தானாக நிகழ்கிறது!

இதுவே தன்னை உணருதல்!

எந்த ஒரு பொருளும் தன் நிலையிலிருந்து மாறுவதில்லை.

இனிப்பு இனிப்புதான், காரம் காரம் தான்! கசப்பு கசப்புதான்!

அதுபோல, ‘நான்’ என்பதும் நீடித்த நிலைத்த இன்பமே!

இதன் இயல்பு என்ன?

1. அவ்யயம்= அழிவற்றது, கெட்டுப் போகாதது.
2. அபவம்= பிறப்பு இறப்பு என்னும் விதிக்கு உட்படாதது.
3. ஆபூர்ணம்= காலம், நேரம், பொருள் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது. முழுமையானது. முடிவானது. எல்லையற்றது.
4. சித்= பரிபூரண அறிவு
5. சுகம்= முழுமையான உணர்வு அளிக்கும் பேரானந்தம். எதிலும் குறைவற்ற சுகம்.

இதுவே ‘நான்’!

நிலையில்லாத, அழிந்துபோகக் கூடிய பொருட்களினால் வரும் ஆனந்தம் தாற்காலிகமானது.
நிலைத்த, நீடித்த, அழிவில்லாத, முழுமையான அறிவினால் விளையும் உணர்வே தன்னை உணரச் செய்து, எல்லையில்லாப் பேரானந்தம்
கொடுக்கிறது எனப் பகவான் விளக்குகிறார்.


இந்தப் பேரானந்தம் மட்டுமே போதுமா?
இதுதான் விடுதலையா?

அடுத்த பாடல் இதற்கு விளக்கம் சொல்லும்!

குருவருள் அனைவர்க்கும் சித்திக்கட்டும்!
****************************
[தொடரும்]

Read more...

Thursday, March 12, 2009

”உந்தீ பற!” -- 31

”உந்தீ பற!” -- 31


’பகவான் ரமணரின் திருவுந்தியார்’

அறிவறி யாமையு மற்ற வறிவே
யறிவாகு முண்மையீ துந்தீபற
வறிவதற் கொன்றிலை யுந்தீபற. [27]

அறிவு அறியாமையும் அற்ற அறிவே
அறிவாகும் உண்மை ஈது உந்தீ பற
அறிவதற்கு ஒன்று இலை உந்தீபற.



அறிவன யாவும் அறிவால் கூடும்
அறியாதனவோ பலப்பல ஆகும்


அறிவால் உணரும் அறிவினில் இன்னும்
அறியாதெதுவென அறிவது கடினம்


அறிவும் அறியாமையும் இரண்டும் கடந்த
ஒருநிலை நிட்டையில் கூடிடும் யோகியர்


தன்னை அறிந்திடும் பொருளிதுவென்றே
நிலைத்த அறிவினைத் தெளிந்தே உணர்வர்.


'தன்னிலை உணர்தல்' [Self realization]என்ற சொல்லைப் போலவே, இந்த' தன்னை அறிதல்' [self knowledge]என்ற சொல்லையும் சற்று விளக்க வேண்டியிருக்கிறது.

ஒரு பொருளைப் பற்றிய அறிவு புலன்களால்[senses] அறியப்பட்டு, நம் அறிவினால்[intellect] விளங்கிக் கொள்ளப் படுகிறது........ இது அம்மா, இது அப்பா, இது வீடு, எனப் பலவும்.

ஆனால், இவ்வுலகில் நாம் அறியாதன பல இருக்கின்றன.

ஔவை சொன்னது போல 'கற்றது கையளவு; கல்லாதது உலகளவு"!

அப்படித்தான் இந்த 'தன்னை அறிதலும்' நம்மால் தவறாகப் புரிந்து கொள்ளப் படுகிறது.

இதுவரை நாம் அறியாத பல பொருட்களில் இதுவும் ஒன்று எனவும், மற்ற பொருட்களை அறிய முடிவது போல, இதனையும் அறிய முடியும் எனவும் நினைக்கிறோம்.

ஆனா, இது அப்படி அறியப்படும் ஒரு "பொருள்" அல்ல !

நமது புலனறிவுக்குக் கட்டுப்படாத, அதற்கும் அப்பாற்பட்ட ஒன்று இந்தத் 'தன்னை அறிதல்' என இதுவரையிலும் பார்த்தோம்.

அப்படியானால், இதனை எப்படி அறிவது என்பதை இப்பாடல் விளக்குகிறது.

சடப் பொருளால் எதனையும் உணர முடியாது என முன்பு பார்த்தோம். புலனறிவு என்பதும் ஒரு சடப் பொருளே எனவும் பார்த்தோம். உடல், உணர்வு, இவற்றால் விளையும் செயல்பாடே இது என முன்னொரு பாடல் விளக்கியது நினைவிருக்கலாம்.

அப்படியென்றால், சடப்பொருளான புலனறிவால் தன்னை அறிய முடியாது என்றாகிறதல்லவா?

புலனறிவால் விளையும் புத்தி ’இது என் மகன்’ எனக் காட்டுகிறது. ஆனால் ’அவனை எப்படிச் சமாளிப்பது?’ என்பது தெரியாமல் திகைக்கிறது! இது கணினி எனத் தெரியும்; ஆனால் அதை எப்படி இயக்குவது எனத் தெரியாது; அப்படியே அதன் இயக்கம் புரிந்தாலும், அதில் ஒரு பிரச்சினை வந்தால் சமாளிப்பது எப்படி எனத் தெரியாது.

இப்படி அறிவும், அறியாமையும் சேர்ந்த ஒன்றே நாம் அறிவது!

"நிலைத்த அறிவு" எனச் சொல்லப்படும் "சித்" இவ்விரண்டுக்கும் ஒளியூட்டுவதால், இவ்விரண்டையும் விட வேறானது. இவ்விரண்டுக்கும் அப்பாற்பட்டது.

தெளிந்தவர் எப்போதுமே தெளியப்படுவதிலிருந்து வேறுபட்டவர்தானே?

இதென்ன குழப்பம்? அப்படியானால், இந்த 'சித்' [Consciousness]என்பதுதான் 'நான்' என்பதை ஒளிரச் செய்கிறதா?

இல்லை!

இந்தத் தெளிந்த நிலையான அறிவு[Consciousness]தான் 'நான்' [self]!

இந்தத் தெளிவு பிறக்கும் போதே, 'நானும்' தெரிய வருகிறது.

'தன்னை அறிதல்' என்பது, 'நான் எனும் சித்தமே புத்தியை பிற பொருட்களை அறியச் செய்கிறது. தானே தெரியவரும் 'நான்', அறிவு, அறியாமை என்கின்ற இரண்டையுமே எனக்குத் தெரியச் செய்வதால், நான் இவற்றிலிருந்து தனித்து நிற்கிறேன் எனப் புரியவரும்.

இப்படிப் புரியும்போது, 'தன்னை அறிதல்' என்பது தானே நிகழ்ந்து, இது ஒன்றும் மற்ற பொருட்களைப் போல் அறியக்கூடியதல்ல என்கின்ற தெளிவும் பிறக்கிறது.

இதுவே இந்தப் பாடலில் ரமணர் வலியுறுத்துவது.

தன்னை அறிந்த பின்னால், அடுத்தது என்ன?
தன்னை உணர்வதுதானே!

நாளை பார்க்கலாம்!
*******************
[தொடரும்]

Read more...

Tuesday, March 10, 2009

"உந்தீ பற!” - 30

"உந்தீ பற!” - 30

’பகவான் ரமணரின் திருவுந்தியார்’

[முந்தைய பதிவு]


தானா யிருத்தலே தன்னை யறிதலாந்
தானிரண் டற்றதா லுந்தீபற
தன்மய நிட்டையீ துந்தீபற. [26]

தானாய் இருத்தலே தன்னை அறிதலாம்
தான் இரண்டு அற்றதால் உந்தீ பற
தன்மய நிட்டை யீது உந்தீ பற.

காணும் பொருளும் காண்பவன் தானும்
ஒருநிலை என்றே உணர்தல் கூடும்

இருநிலையில்லா ஒருநிலை அறிபவர்
காட்சிப் பொருளும் காணும் தானும்

ஒன்றே என்று உணர்தலில் திளைக்கும்
அந்நிலை அங்கே நிட்டை ஆகும்

அனைத்தும் தானாய்க் காண்பவர் உணரும்
தன்மயம் ஆதல் இதுவே காட்சி!


திடீரென ஒரு ஒளியைக் காணும் நிலை கூடி வரும் நிலையிலும், ஒரு யோகிக்கு ஒருவித மயக்கம் வரலாம்.

தெரியும் காட்சி, பார்க்கும் நான், எனப் பேதம் விளைக்கும் நிலையைத் தவிர்த்து,
காட்சியும் நானே! காண்பவனும் நானே ! இவை இரண்டும் வேறு வேறு அல்ல என்னும் ஒருநிலையில் ஆழ்வதே தன்மயமாதல் எனப்படும் யோக நிட்டை ஆகும்.

இந்த மயக்கம் எதனால் வருகிறது?

காண்பவன் 'நான்' எனும் ஒருவன்.

ஆனால் காணும் காட்சிகளோ பல!

நான் எப்படி அவைகளாக இருக்க முடியும்?

அப்படியென்றால், காண்பவன், காட்சிப் பொருள் என இரு நிலைகள் இருக்க வேண்டுமே?

இது பொதுவாக எவருக்குமே எழக்கூடிய நியாயமான கேள்வி.

யோக அறிவினால் ஒளிரும் நிலையைக் கண்டவர் இப்போது சிந்திக்கிறார்.

"நானே அனைத்துமாய் அனைத்துப் பொருட்களிலும் ஒளிரும், சத் - சித் என்னும் நிலை புரிந்தவர், இவ்வித மயக்கத்தில் இருந்து உடனே விடுபடுவார்.
காட்சி என்பதே தன் அறியாமை தன்னை விட்டு நீங்கியதால் விளைந்த ஒன்று எனப் புரிந்தவருக்கு இரண்டு நிலைகளுமே ஒன்றுதான் எனப் புரியவருகிறது.

ஒரு பணக்காரன் கனவில் தான் பிச்சை எடுப்பதாகக் கண்டு அதில் அல்லறும் காட்சிகளில் மனம் நொந்து வருந்துகிறான் .

திடுக்கிட்டுக் கண்விழித்துப் பார்த்ததும் கண்டதெல்லாம் ஒரு கனவே எனப் புரிய வருகிறது.

எனவே அவன் இனி வரும் கனவுகளைப் பற்றிக் கவலைப் பட மாட்டான்.

அது போலத்தான், ஒரு யோகியும், காண்பவன், காட்சிப் பொருள் இரண்டும் தானே என அறிந்து, தன்மயமாகி, ஒரு யோக நிட்டையிலேயே இவர் ஆழ்ந்திருப்பார் என பகவான் அருளுகின்றார்.


குருவே துணை!
*****************

[தொடரும்]

Read more...

Saturday, March 07, 2009

”உந்தீ பற!” - 29

”உந்தீ பற!” - 29

”பகவான் ரமணரின் திருவுந்தியார்”

[முந்தைய பதிவு]

இதுவரையில், பகவான் ரமணர் சொல்லியிருப்பது என்ன என்று, இந்தப் பதிவில் சுருக்கமாகக் காணலாம்! [ஆனால், நீளமான பதிவுதான்!:)]

முன்னுரையாக வந்த முருகனார், தாருகாவனத்தில், தாங்கள் செய்த முன் கருமங்களின் பயனாகக் கிடைத்த பெருமையினால் ஆணவமுற்ற முனிவர்கள், கருமத்தை மிஞ்சிய கடவுள் என ஏதுமில்லை எனத் திரிய, அவர்கள் ஆணவத்தை சிவனார் வந்து அழிக்க,ஆணவமலம் அழிந்த முனிவர்கள் கண்ணீர் மல்க வேண்ட, சிவனார் அவர்களுக்கு அருள் செய்ததைத் திறம்பட உரைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து வந்த பகவான் ரமணரின் பாடல்கள்:

1. செய்கருமம் பயன் தருவது இறைவன் ஆணையால் மட்டுமே! அதனால் கருமம் என்பது கடவுள் இல்லை.
கருமம் என்பது வெறும் சடப்பொருளே!

2. செய்கின்ற கருமம்[வினை],நம்மை மேலும் வினையில் ஆழ்த்தி, வினைக்கடலுக்குள் தள்ளுகிறது.
அது முக்தியைத் தர வல்லது அல்ல.

3. பலன் எதையும் கருதாது செய்கின்ற நிஷ்காமிய கருமமே,நமது கருத்தைத் திருத்தி, கதிவழி[முக்தி] காட்டும் என்பதே உண்மை.

4. உடலால் செய்யும் பூசை, வாக்கினால் செய்யும் நாமஸ்மரணை, உள்ளத்தால் செய்யும் ஜெபதியானம் இவை ஒன்றைவிட ஒன்று உயர்ந்தது என அறிக.

5. காண்கின்ற யாவையுமே இறை உரு என எண்ணி வழிபடுவது ஈசனுக்கு செய்கின்ற பூசனைகளிலேயே மிகவும் உயர்ந்ததாம்.

6. சத்தம் வருமாறு பூசனை செய்வதை விட,உதடுகள் அசையாது அவன் பெயரை உச்சரித்தல் உயர்ந்தது.
அதைவிட,அடிநாக்கில்,உதடுகள் அசையாமல்,திருப்பெயரைச் செபிப்பது அதனினும் உயர்ந்தது.

7. நீர்வீழ்ச்சி போல் அல்லாது, நெய்வீழ்ச்சி போல் , சிந்தாமல், சிதறாமல், ஒருநிலைப்பாட்டுடன் இறைநாமம் செபிப்பதே மிகவும் சிறந்தது.

8. வெளியில் இருக்கின்ற ஒரு உருவத்தின் மீது பக்தி கொண்டு அதனை ஆராதிப்பது அன்னிய பாவம் [bhaavam].
அதையே மனத்துக்குள் நிறுத்தி, அதனில் தியானிப்பது அனனிய பாவம் [bhaavam].
அன்னியபாவத்தை விட, அனனிய பாவமே சிறந்ததாம்.

9. அன்னிய, அன[ன்]னிய பாவம் இரண்டும் இல்லாத சத்பாவத்தில், நானும் இறையும் ஒன்று என்னும் பாவத்தில் திளைத்திருத்தலே பரபத்தி தத்துவம் எனப்படும்.

10. கன்மத்தில் தொடங்கி, பக்தி வயப்பட்டு, யோகநிலையில் ஆழ்ந்து, எல்லாம் நானே என்னும் ஞானம் வருகின்ற பரபத்தி நிலையே யோகஞானம் என்பதாம்.

இந்த இடத்தில், ஒரு மேல்விளக்கமாக, பதஞ்சலி முனிவர் அருளிய 'அஷ்டாங்க யோகம்' என்பதன் நிலைகள் சொல்லப்படுகின்றன.
யமம், நியமம், ஆஸனம்,ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணம், தியானம், சமாதி என்னும் எட்டு நிலைகள் ஒரு சாதகன் பயிலுவான்.

11. பிராணாயாமம் என்னும் மூச்சுக் காற்றினை அடக்கும் முறையை ஒரு குருவின் துணையால் முறையாகக் கற்ற சாதகன், வலையில் சிக்கும் பறவைகள் போல தன் மனத்தையும் இதன் மூலம் ஒடுக்குவான்.

12. சக்தி [இறை, இயற்கை] என்னும் மூலத்திலிருந்து பிரிகின்ற இரு கிளைகளாக, உள்ளத்தால் உணரப்படும் அறிவும், உயிர் எனப்படும் பிராணன் வழியாகச் செய்யப்படும் செயலும் விளங்குகின்றன.

13. மனத்தின் செயல்கள் இரண்டு. உணரப்பட்ட அறிவு, உணர்ச்சிகளினால் விளையும் செயல்பாடு. மூனது ஒடுங்கி [லயம்] மீண்டும் எழும். பின்னது அழிந்துபோகும் [நாசம்].... முறையான பயிற்சிகள் செய்யும் சாதகனுக்கு.

14. பிராணயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியினை முறையாகச் செய்வதன் மூல, உள்ளம் ஒடுங்கி, உள்ளில் இருக்கும் எண்ணங்கள் மறைந்து, உருவம் எதுவுமில்லா ஒரு ஒளி தெரிய வரும்.

15. இப்படிச் செய்யப்பட்ட பயிற்சியின் விளைவாக உள்ளில் இருக்கும் உரு அழிந்த யோகி எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்.

16. எண்ணங்கள் எழுப்பும் மலை போன்ற எண்ண விகாரங்கள் அனைத்தையும் விலக்கி வைத்துப் பார்க்கத் துவங்கும் யோகிக்கு உண்மையின் காட்சி உள்லில் மலரத் துவங்குகிறது.

பதினாறு பாடல்கள் இதுவரையில் படித்துப் பொருள் கண்டோம்.

முதல் மூன்று பாடல்கள் கர்மயோகம் என்பது என்ன? அதனால் விளையும் பயன் எத்தன்மையது? அதை அளிப்பது யார்/எது? அதனை எப்படி ஏற்றுக்கொள்வது என்பதைச் சொல்லின.

4 - 10 முதலான பாடல்கள், பக்தி யோகத்தை விளக்கமாகச் சொல்ல வந்த பாடல்கள்!
பக்தி என்றால் என்ன? பூசனை, ஜபம், தியானம் இவற்றை எப்படிச் செய்வது? இவற்றுல் எது மிகவும் சிறந்தது? இதன் மூலம் ஒரு சாதகன் எதனை அடைய வேண்டுகிறான்? உருவை உள்ளில் நிறுத்தி, உருவை அகற்றி உருவே தானாகி, எந்த ஒரு உருவும் இலாத பரம்பொருளே 'நான்' என உணர்ந்து அதனில் ஒன்றுவதே எப்படி? என்னும் கேள்விகளுக்கு விடையாக அமைந்தது இந்தப் பகுதி.

இதனைத் தாண்டி மேலும் செல்ல விழையும் சாதகன் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? அதன் வகைகள் என்னென்ன? அவற்றை எப்படிச் செய்வது முறையானது ? இதனால் விளையும் பயன் என்ன என்பதைச் சொல்லி, 'ஞான யோகம்' வருவதற்கு முதல் 'யோக ஞானம்' யோகத்தைப் பற்றிய முறையான ஞானம் வருதல் வேண்டும் என்னும் விளக்கத்தை 11 முதல் 16 வரையிலான பாடல்கள் விளக்கின.

" யோகஞானம்” பற்றி பல விளக்கங்கள் இருந்தலும், பொதுவாக அனைவராலும் பின்பற்றப்படும் பதஞ்சலி முனிவரின் 'அஷ்டாங்க யோகம்' பற்றிய ஒரு எளிய விளக்கம், இப்போது இதனை மேலும் அறிய உதவும்.

'புற, அக நிலைபாடுகள்', 'எப்படி அமர்வது?', 'முறையான மூச்சடக்கல் எப்படிச் செய்வது?', 'புலனடக்கம் என்றால் என்ன?' 'மனதை ஒருநிலைப் படுத்துதல்' சமாதி நிலை' என்னும் எட்டு நிலைகள் முறையே 'யமம், நியமம், ஆஸனம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணம், த்யானம், சமாதி' என வழங்கப்படும்.

முறையான குருவின் துணையோடு கற்றுக்கொண்டு செய்யப்படும் பிராணாயாமம் முதல் சமாதி வரை முறையான ஒரு குருவின் துணையுடன் பயிலும் சாதகன்,

வலைக்குள் அகப்படும் பறவைகள் போல், எப்படி எண்ண ஓட்டங்களை அமிழ்த்தி, உண்மைப் பொருளை உணரச் செய்து, இருவித நிலைப்பாடுகள் கொண்ட மனத்தை ஒடுக்கியும், அழித்தும் நிகழும் பயனால், செயல் என்ற ஒன்றும் செய்யாமலேயே, அல்லது, அப்படிச் செய்தாலும் அது பயன் கருதாச் செயலாகவும், உலக நன்மைக்காகவும் செய்யப்படும் ஆனந்த நிலையை ஒரு யோகி எனப்படுபவர் எவ்வாறு அடைகிறார் என்பதைச் சொல்லி, இந்த 'ஆனந்தம்' எவ்வாறாக 'தன்னை உணர்தல்' என்கின்ற 'தத்துவ தரிசனத்தைக் காட்டுகிறது என்பதை,11 முதல் 16 வரையிலான பாடல்கள் கோடிட்டுக் காட்டின.

இந்த நிலையை அடைந்த யோகி இனிச் செய்வது எல்லாமே 'ஞான யோகமே'!

இந்த 'ஞான யோகம்’ என்றால் என்ன என ஒரு சிறு விளக்கம் இப்போது காணலாம்! அதன் பிறகு, மீதிப் பாடல்களைப் பார்ப்போம்!

17. மனத்தை மறக்க, அதில் எழுகின்ற உணர்வுகளைத் தாங்கும் மனம் என்ற ஒன்றே இல்லை என உணரும் யோகி தெளிவு பெறுகிறார்.

18.அது எப்படி என்றால், மனம் என ஒன்று தனியாக இல்லை; நமக்குள் எழும் எண்ணங்களே மனம் என ஒன்றாக நான் உணருகிறேன் என்பதே என அறிய வருகிறார்.

19. இது ஒரு புத்தகம்.நான் இதை ஒரு புத்தகம் என உணர்கிறேன்.நான் உணர்கிறேன்.இந்த உணர்வு மனம் சார்ந்தது. எனவே, நான் என்பது, இந்த மனத்துக்கும் அப்பாற்பட்டது!

20. 'நான்'எனும் ஆணவம் அழித்திட முனைந்து உள்ளில் தேடி அதனை அழித்திட உள்ளில் ஒளிரும் ஓரொளி தானாய் அதுவாய் எழுந்து அங்கே ஒளிரும்

21. நான் இதைச் செய்தேன், அதைச் செய்தேன் என்கின்ற மனம் நான் இல்லை என அறிந்து ஞானத் தேடல் இன்னமும் அதிகமாகிறது. எண்ணங்களாலும், உணர்வுகளாலும் வளர்க்கப்படும் இந்த 'நான்' என்னும் ஆணவத்தைத் தேடிக் கண்டுபிடித்து அழிக்க வேண்டும். களிம்பேறிய செப்புப் பாத்திரத்தைத் தேய்த்தவுடன் ஒளி பெறுவது போல! இவ்வுலகில் எனது என நினைக்கும் எதுவுமே நான் இல்லை என்னும் தெளிவு வரும்போது, நான் தெரிய ஆரம்பிக்கிறது.

22. உடல், புலன்களால் வருவதெல்லாம் ’அசத்து’ என்னும் நிலையாத ஒன்றினைக் குறிக்கும். இது ‘சத்து’ என்கின்ற உண்மைப் பொருள் இல்லை.

23. நிலையான ‘சத்’தை அறியும் போது, ‘சித்’ என்னும் தெளிவு பிறக்கிறது. இவை இரண்டும் ஒன்றே என உணர்பவர் யோகிகள்!

24. அனைத்திலும் விரவியிருப்பது ஒன்றே என உணரும் போது அனைவரும் ஈசனே என்னும் தெளிவு பிறக்கிறது.

25. இந்த உணர்வினால், உடலால் வருகின்ற உபாதிகளைத் தொலைக்கும் யோகி இப்போது தானே ஈசன் என உணர்கிறார்! “நான் கடவுள்!” “அஹம் ப்ரஹ்மாஸ்மி!”



விரிவான விளக்கங்களுக்கு பதிவுகளை மீண்டும் படித்துப் பார்க்கலாம். அல்லது, தகுந்த குருவின் அருளால் நிகழும்!
******************
“மானஸ பஜரே குரு சரணம்!”
[தொடரும்]

Read more...

Thursday, March 05, 2009

”உந்தீ பற!” -- 28

”உந்தீ பற!” -- 28

’பகவான் ரமணரின் திருவுந்தியார்’



தன்னை யுபாதிவிட் டோர்வது தானீசன்
றன்னை யுணர்வதா முந்தீபற
தானா யொளிர்வதா லுந்தீபற. [25]


தன்னை உபாதி விட்டு ஓர்வது தான்
ஈசன் தன்னை உணர்வதாம் உந்தீ பற
தானாய் ஒளிர்வதால் உந்தீபற.


இதுதான் ’நான்’ என இதுவரை எம்மை
ஆட்டிப்படைத்த பிடிப்புகள் தளர்ந்திட


உபாதை என்னும் காட்டுகள் அவிழ்ந்திட
தான் என யார் என புரிந்திடல் நிகழும்


தன்னை உணர்வதே 'நானைக்' காட்டிட
தானே ஈசன் என்பதும் விளங்கும்


'நான் கடவுள்' என்பதன் தரிசனம்
தானே நிகழ்வதும் தன்னால் புரியும்.


ஈசனும், ஜீவனும் ஒரே பொருளின் வெவ்வேறு வடிவங்கள் எனச் சென்ற பாடலில் சொல்லியிருந்தார் ரமணர்.


தான் அலை என உணராத அறியாமையினால், அலைகள் ஆர்ப்பரித்து அடங்கி, மடங்கி, மீண்டும், மீண்டும் எழுகின்றன என்பதையும் பார்த்தோம்.


இந்த அறியாமையை விடுபவனுக்கு ஆத்ம தரிசனம் கிடைக்கிறது.


இந்த 'அலை - கடல்- நீர்' உதாரணத்தைக் கூட ஒருவிதத் தயக்கத்துடனேயே சொல்ல வேண்டியிருக்கிறது.
ஏனெனில், நம்மைப் போல் உணரும் தன்மை கொண்டவை அல்ல இவை.
அலைக்குத் தெரியாது தான் கடலின் ஒரு அங்கம் என.
கடலுக்குத் தெரியாது தானும் நீர் என்பதன் திரிபே என!


ஆனால், முறையான பயிற்சியினை மேற்கொண்டிருக்கும் சாதகனுக்கு [இப்போது யோகி எனும் நிலைக்கு உயர்ந்திருப்பவருக்கு] இது அப்படியே பொருந்தாது.


அலை அடங்குவதில்லை; கடல் ஓய்வதில்லை; நீர் விலகுவதில்லை.
ஆனால் மனிதனால் இதெல்லாமும் முடியும்!


அப்படியென்றால் என்ன செய்யணும் இவர்?


உடலால், மனத்தால் ஏற்படும் உபாதிகளை அறுத்தெறிவது என்றால், உடலை விட்டு விடுவதா? மனத்தை எப்படி அழிப்பது?


இதுபோன்ற கேள்விகள் நமக்கு எழலாம்.... எழும்!


இப்படித்தான் செய்யணும் என வேதாந்தம் சொல்லுவதே இல்லை.


உடலை அழிக்காதே! உடல் தான் நீ என்னும் அறியாமையை அழி!
மனத்தை அழிக்காதே! மனம் கொடுக்கின்ற போதையில் மயங்கித் திரியாதே!
இதுவே அறியாமையை அகற்றும் வழி!


இப்படிச் செய்கையில், இதுவரை நம்மைக் கட்டியிருந்த பந்தங்கள், சொந்தங்கள் எல்லாம் கட்டுத் தெறித்து ஓடும்!


தெளிந்த மனத்தில் ஈசன் மலர்வான்... ஒளியாக!


இது தானே, தன்னிச்சையாய் நிகழும்!


இதுவா... இந்த ஒளியா கடவுள்?


நானென்னவோ கடவுள் என்றால் கையில் வேலோடு அல்லது ஒரு புல்லாங்குழலோடு, முருகனாக, கண்ணனாக, இன்ன பிற தெய்வங்களாக நினைத்தேனே?
அந்த உரு எனக்குக் கிட்டாதா எனக் கேட்டால்... அதுவும் கிட்டும்..... இறையருளால்!


ஆனால், அப்படிக் கிடைக்கின்ற காட்சியை வைத்து, அதுதான் கடவுள் என மயங்காமல், 'நம்மிடம் இருக்கும் உண்மை நிலையத் தெரிந்து கொள்வதே ஆத்ம தரிசனம்.


அழியாத, எங்கும் நிறைந்த, எல்லாவற்றிலும் கலந்த, அறியாமை நீங்கிய அறிவின் தன்னிலைத் தெளிவே ஒளிமயமாக நம்முள் தெரியும் கடவுள்!


ஆம்! "நான் கடவுள்!"


"அஹம் ப்ரஹ்மாஸ்மி!"


இதை இன்னும் சற்று விரிவாக விளக்குகிறார் பகவான், அடுத்த பாடலில்!
திங்களன்று தொடரலாம்!
நாளை.... இதுவரை பார்த்ததின் ஒரு சிறிய விளக்கம்!


நன்றாக குரு வாழ்க!
***************************

[தொடரும்]

Read more...

Wednesday, March 04, 2009

”உந்தீ பற!” -- 27

”உந்தீ பற!” -- 27

’பகவான் ரமணரின் திருவுந்தியார்’

[முந்தைய பதிவு]

இருக்கு மியற்கையா லீசசீ வர்க
ளொருபொரு ளேயாவ ருந்தீபற
வுபாதி யுணர்வே றுந்தீபற. [24]

இருக்கும் இயற்கையால் ஈச சீவர்கள்
ஒரு பொருளே ஆவர் உந்தீ பற
உபாதி உணர்வே வேறு உந்தீ பற.


ஈசனின் அருளால் உயிர்த்திடும் உயிர்கள்
உடலதன் மயக்கம் உணர்ந்திடும் போது

தனியென உணரும் நிலையிங்கு வரலாம்
தான் பிறர் எனவே மயக்கம் கொளலாம்

ஒருபொருள் அனைத்த்திலும் விரவியிருக்கும்
ஒருநிலை அறிந்திடின் மயக்கம் விலகும்

உணர்வின் உபாதி பிரித்தெமைக் காட்டும்
ஆயினும் இங்கே அனைவரும் ஈசரே.


நிலையான உண்மை தனியொரு நிலையில் தன்னைக் காட்டிக் கொளும்போது ஜீவன் ஆகிறது.
பொதுவில் தன்னைக் காட்டுகையில் இயற்கை/ஈசன் என ஆகிறது.

எட்டாவது பாடலில், தன்னையும், பரம்பொருளையும் பிரித்துப் பார்க்காமல் பக்தி செய்வது பற்றிச் சொல்லியிருக்கிறது.
எப்படி இரு நிலைகளுக்கிடையில், ஒற்றுமையும், அதே சமயம் வேறுபாடுகளும் இருக்க முடியும்?
இதனை இப்பாடல் விளக்கி சொல்கிறது.

தனித்தனியே இந்த உலக நிகழ்வுகளுடன் ஒப்பீடு செய்யும் போது, ஜீவனுக்கும், ஈசனுக்கும் இடையே வேறுபாடு இருக்கத்தான் செய்யும்.

ஆனால், உண்மை நிலையில் வைத்துப் பார்க்கும்போது இவை இரண்டுமே ஒன்றெனப் புரியத் துவங்கும்.

என்னதான் வலுவாக இருந்தலும், இந்த தூல உடம்புக்கு ஒரு முடிவு உண்டு. இப்படி, இந்த உடலுடன் சம்பந்தப்படும் ஜீவன், இதையே நிலையெனக் கருதி, இவ்வுடலால் கிடைக்கும் பயனை ஐம்புலன்களின் வழியே பெறத் தொடங்கி, சற்று ஆணவமும் அடைகிறது.

இயற்கையின் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல்,உலகியலோடு ஒன்ற இதற்குத் தெரியாமல், வேற்றுமைகள், ஒற்றுமைகள், பிரிவினைகள், விருப்பு வெறுப்புகள் எனப் பலவற்றாலும் அலைக்கழிக்கப்பட்டு அல்லலுறுகிறது ஜீவன்.
இதையும் தாண்டி ஒரு சில ஜீவன்கள் தம் அறிவைக் கொண்டு இதனுடன் ஒன்றும் போதும், இந்த உலகளாவிய பார்வையை அடைய முடியாமல் போகிறது.

இந்த இரு நிலைகளிலுமே, அழியக்கூடிய ஒன்றினோடு இணைத்துக் கொள்வதால் இவ்வளவுதான் முடிகிறது ஜீவனால்!

இயற்கையின்/ஈசனின் துணையுடனேதானே நாம் இயங்குகிறோம்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களால் ஆன இந்த உடல் இவற்றைப் பெறுவது இந்த இயற்கையிடமிருந்தே!
இதை அதிகம் விளக்கத் தேவையிருக்காது என நினைக்கிறேன்.

இதன்படிப் பார்த்தால், இந்த முழுவுலகின் ஒரு துளியே தான் நாமெல்லாரும் என்பது புரியவரும்.

முன்னர் சொல்லியபடி, முழுமையான ஒரு சமுத்திரத்திலிருந்தே, அலைகள் எழும்பி, தவழ்ந்து பின்னர் மடங்குகின்றன.
ஒவ்வொரு அலைக்கும் ஒரு குறிப்பிட்ட வலு, வேகம் எல்லாம் இருந்தாலும், இந்த அலைகளின் ஆதார சுருதி சமுத்திரமே!

அப்படித்தான், நீர் என்கிற ஒன்று அனைத்துக்குமே ஆதாரமாகிறது.

இதுவே துளியாகிறது, அலையாகிறது, சமுத்திரமாகவும் ஆகிறது.
இதனையொட்டியே 'நீரின்றி அமையாது இவ்வுலகு' என வள்ளுவனும் பெருமை பாடிச் சென்றான்.

ஒவ்வொன்றின் தன்மையுடனும் இது சேர்கையில், துளி, அலை, கடல், சமுத்திரம் எனப் பல பெயர்களைப் பெற்றாலும், எல்லாம் சேர்ந்த ஒன்றுதான் இதன் ஆதாரம்.

இதுதான் ஜீவன், ஈசன்/இயற்கை என நிறுத்தப் படுகிறது.

அமெரிக்கத் தேர்தலில் சமீபத்தில் போட்டியிட்ட ஒபாமாவுக்கு இருந்தது மற்றவரைப் போலவே ஒரே ஓட்டுதான்!
தேர்தலில் பெற்ற வெற்றியின் விளைவாக, இப்போது அவர் அதிபர் ஆகிவிட்டார்!
ஒரு குடிமகனாக அரசால் ஆளப்பட்டவர், இப்போது அனைவரையும் ஆளும் அதிபர்!
இதுதான் தனியான ஒன்றுக்கும், பொதுவான் முழுமைக்கும் ஆன உதாரணம்!

ஆனால், அதிபருக்கோ...... அனைவரும் ஒன்றே!!!

இந்த நிலையில் கிடைப்பது..... இறைவனின் தரிசனம்!!
நாளை!

“தெளிவு குருவுரு சிந்தித்தல்தானே!”
**********************************

[தொடரும்]

Read more...

Monday, March 02, 2009

”உந்தீ பற!” -- 26

”உந்தீ பற!” -- 26

’பகவான் ரமணரின் திருவுந்தியார்’

[முந்தைய பதிவு]

உள்ள துணர வுணர்வுவே றின்மையி
னுள்ள துணர்வாகு முந்தீபற
வுணர்வேநா மாயுள முந்தீபற. [23]

உள்ளது உணர உணர்வு வேறின்மையின்
உள்ளது உணர்வாகும் உந்தீ பற
உணர்வே நாமாய் உளம் உந்தீ பற.

இருப்பெனச் சொல்வது அழியாதொன்று
’சத்’தென அதுவும் நிலைத்து இருக்கும்


சத்தை அறிந்திடும் தெளிவு பிறந்தால்
'சித்' என அதையும் சொல்லுவர் பெரியோர்

சத்தும் சித்தும் ஒன்றெனத் தெளிந்து
ஒளிர்வது எதுவென உள்ளில் உணர்ந்து

நான் எனும் ஒன்றைத் தேடிடும் யோகியர்
அறிவதும் இதுவே என்பதை அறிக.

சென்ற பாடலின் விரிவான விளக்கம் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கலாம்.

'ஆணவம்' என்பது மாயை எனில், நிலையான சத்தாக இருக்கும் தெளிவுநிலை சித் எனச் சொல்லப்படும்.

அப்படியென்றால், இந்தச் சித்தம் தான் 'சத்' எனச் சொல்லப்படுவதையே எனக்கு உணர்த்துகிறதோ? என.

'நான்' எனச் சொல்லப்படும் ஒன்றில், உடல், புலன்கள் இவற்றாலான ஈடுபாட்டை அழித்துவிட்டேன் என உணர்வது எப்படி?

உடல், புலன், மனம், புத்தி இவையெல்லாவற்றாலும் அறியாமை என்பதால் மறைக்கப்பட்ட ‘உண்மையான நான்’ களிம்பு நீக்கப்பட்ட செம்பு போல, இவையெல்லாம் அகலும்போது, தானாக ஒளிர்கிறது.

ஆம்!

தெளிவு என்பது அறியாமை நீங்கும்போது தானாகத் தெரிய வருகிறது.

அப்படியானால், இந்தத் தெளிவுதானா ‘நான்’ என்னும் நிலையைக் காட்டுகிறது?

‘நான்’ எனபது தானாக ஒளிரும் ஒன்றென்றால், அதை இன்னொன்று ஒளிரச் செய்ய முடியுமோ?

ஒரு விளக்கின் ஒளியைக் கொண்டா சூரியனை உணர முடியும்?

அப்படியெனின், சூரியனா ஒரு விளக்கின் ஒளியைக் காட்டுகிறது?

இல்லை!

ஒளிக்கு இன்னொரு ஒளியின் துணை தேவையில்லை.

ஒளி ஒளிதான்!

நமது அனுபவத்தின் மூலமும், பயிற்சியினாலும் இதுவரையில் நாம் அறிந்தது.... ’நான் என்பது உண்மை’[I am] ’நான் என்பது உண்மை என்பதை நான் அறிவேன்’![I know I am]

இதன்படி பார்த்தால், இவை இரண்டுமே உண்மை என்பது புரியும்!

இரண்டுமே ஒன்றுதான்!
தெளிவான ”சித்”தும் ஒளியே! நிலையான ”சத்”தும் ஒன்றே!

இதை அறிவதே ”நான்!”

இந்த ‘நான்’ எப்படி இந்தப் பிரபஞ்சத்துடன் ஒன்றுகிறது?

நாளை பார்க்கலாம்!

“தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்!”
*********************
[தொடரும்]

Read more...

Sunday, March 01, 2009

”உந்தீ பற!” -- 25

”உந்தீ பற!” -- 25

’பகவான் ரமணரின் திருவுந்தியார்’

[முந்தைய பதிவு]

உடல்பொறி யுள்ள முயிரிரு ளெல்லாஞ்
சடமசத் தானதா லுந்தீபற
சத்தான நானல்ல வுந்தீபற. [22]


உடல் பொறி உள்ளம் உயிர் இருள் எல்லாம்
சடம் அசத்து ஆனதால் உந்தீ பற
சத்தான நான் அல்ல உந்தீ பற.

உடலென அமைவதும், பார்த்தல் கேட்டல்
ருசித்தல் நுகர்தல் தொடுதல் என்னும்

ஐவகை உணர்வும், பிராணன் என்னும்
உள்ளமும், உயிரும், தெளிதல் என்னும்

புத்தியும், அறியாமை என்னும் இருளும்
தன்னால் இயங்கும் பொருளிலை ஆதலின்

அசத்து என்னும் சடப்பொருளாகும்
‘நான்’எனும் நிலைத்த பொருளிவை அல்லவே.


“நான் யார்?” என்கின்ற ஆதாரக் கேள்விக்கான விடையைச் சொல்ல முனைகிறார் பகவான் ரமணர்.

இதற்கு முதல்படியாக, ‘நான்’ என நாமெல்லாம் நினைக்கும் ஒவ்வொன்றையும் தனித்தனியாக விசாரித்துத் தெளியச் சொல்கிறார்.

நம்மை அறிமுகம் செய்துகொள்ளும்போது, முதலில் தான் இன்னார் என நம் பெயரைத் தான் பொதுவாகச் சொல்வோம்.

இது ஒரு வெறும் அடையாளம் மட்டுமே என உடனே புரியும்.

மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு இந்த உடலைக் காட்டிக் கொள்ள நான் பயன்படுத்தும் ஒரு கருவி என்பதாலேயே, ‘இவர்களுக்குப் பிறந்தவன் நான், இன்ன பெயர் எனக்கு, எனக்கு இத்தனை வயதாகிறது நான் ஒரு ஆண்/பெண்’ என அடையாளமாகச் சொல்கிறோம்.

இந்த உடலா நான்?

சிறுவயது முதல் இன்றுவரை பலவித மாற்றங்களுக்கு உட்பட்டு மாறிக் கொண்டே இருக்கும் இந்த உடலா நான் என ஆராய்ந்தால் இது இல்லை எனப் புரியவரும்.

அப்படியென்றால் ஒவ்வொருநிலையையும் கடந்து அழிந்தபோது, ‘நானும்’ அழிந்திருக்க வேண்டுமே! இந்த உடலையும் கடந்த ஒரு ‘நானாக’ நான் இருந்து வந்திருக்கிறேன் எனத் தெளிந்து, ‘நான்’ என்பது இந்த உடல் அல்ல எனும் தெளிவு பிறக்கிறது.

அடுத்து, இந்த உடல் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களால் ஆன ஒன்று. எனவே, இது தானாகச் செயல்படும் திறன் கொண்டதல்ல என்பது புரியவரும்.சடப்பொருள்களான இந்த ஐந்தும், தன்னையும் பிறரையும் அறியும் திறன் கொண்டவை அல்ல. ஆனால், எனக்கோ பொருட்களை இன்னதென்றும், என்னிலிருந்து வேறுபடுத்தியும் அறிய/உணர முடிகிறது. ’நான் தட்டிக்கொண்டிருக்கும் கணினி நான் அல்ல’ என்பது எனக்குத் தெரிகிறது.

ஆனால், இந்த உடல் நானல்ல என்பதை உணரத் தவறுவதாலேயே, நாம் பலவிதத் துன்பங்களுக்கு உள்ளாகிறோம்.

ஐம்புலன்களால் நாம் உணரும், பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், தொடுதல் இவையெல்லாமும் கூட நம்மை சலனப்படுத்துகிறது. பிராணன் எனச் சொல்லப்படும் மூச்சுக்காற்று, புத்தி என்கின்ற தெளிந்த அறிவு, அறியாமை என்கின்ற அஞ்ஞானம் இவையெல்லாமும் கூட இதேவகையில்தான்.

பார்க்கவேண்டியது கண்ணின் தொழில். அது அதனைச் செய்யாதபோது, ‘நான் ஒரு குருடன்’ எனச் சொல்கிறேன். பசியும் தாகமும் உயிரின் தொழில். ‘எனக்குப் பசிக்கிறது’ என அதைச் சொல்கிறேன். ஒரு மருத்துவருக்கு வேண்டிய படிப்பைப் படித்தவுடன் ‘நான் ஒரு வைத்தியன்’ என்கிறேன். அப்படியானால், அதற்கு முன் நான் யாராக இருந்தேன்? அப்போதும் இந்த ‘நான்’ இருந்ததே! அதையும் உடனே இந்த ‘நானுடன்’ தொடர்பு படுத்தி, ‘மருத்துவ அறிவு இல்லாதவனாக இருந்தேன்’ எனச் சொல்கிறேன்.

இப்படி ஒரே சமயத்தில், ஒரு மகனாக, கணவனாக, தந்தையாக, மருத்துவனாக, எதுவுமே அறியாதவனாக என்னால் இருக்க முடியுமா? அப்படி உணர்வதன் காரணம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நான் வெவ்வேறாக உணர்வதே இதன் காரணம்.

ஒரே சமயத்தில் ஒருவனே அரசனாகவும், மந்திரியாகவும், பிச்சைக்காரனாகவும் இருக்க முடியாது.

ஆனால், ஒரு நடிகன் பல்வேறு சமயங்களில் இதுபோன்ற பாத்திரங்களை ஏற்று நடிக்க முடியும்.
நடித்து முடிந்ததும் தன் இயல்பு நிலை என்னவென அறிந்து அதனில் தானாகத் திரும்பவும் அவனால் முடியும்.

இப்படி, பல்வேறு நிலைகளில் இருந்தாலும், தனது இயல்பு நிலை என்ன என அறிந்தவன் சலனமின்றி இருப்பான்.

தனது இந்த உடல், ஐம்புலன்கள், உயிர், தெளிவு, அறியாமை இவையெல்லாம் தனக்குத் தெரிந்திருப்பதால் இவையெல்லாம் நிலையில்லாச் சடப் பொருட்கள், இவற்றின் இயக்கம் இதனையும் தாண்டிய ஒன்றால் நிகழ்கிறது எனத் தெளிவு பெற்று அதனைத் தேட முயற்சி செய்கிறான்.

அப்படியென்றால், இந்த ‘நான் எனும் ஆணவம்’ எங்கிருந்து பிறக்கிறது?

உள்ளிருக்கும் நிலையான ஒன்று என நான் நினைக்கும் ஒன்று, மேற்கூறிய ஏதோ ஒன்றுடன் தன்னைச் சேர்த்துக் கொள்ளும்போது இந்த ஆணவம் பிறக்கிறது.

அதாவது, நிலையான ‘நான்’ என நான் நினைக்கும் ஒன்று, நிலையற்ற சடப்பொருட்களான உடல், ஐம்புலன்கள், பிராணன், புத்தி, அறியாமை என்கிற எவற்றுடனாவது இணையும் போது ‘ஆணவம்’ பிறக்கிறது. [இங்கு சொல்லப்படும் ஆணவம், வேதாந்தத்தில் சொல்லப்படுகின்ற ஆணவம் என முன்னரே சொன்னதை நினைவு கூறவும்!]

இப்போது இன்னொரு கேள்வி உடனே எழுகிறது.

அதெப்படி நிலையான ஒன்றையும், நிலையில்லாத ஒன்றையும் இணைக்க முடியும்?

இருளும் ஒளியும் ஒரே இடத்தில் இருக்க முடியுமா?

இப்படி நிகழமுடியாத ஒரு நிகழ்விலிருந்து பிறக்கும் விளைவே ‘ஆணவம்’ என்பது சற்றுக் குழப்பமாக இருக்கிறதல்லவா?

ரமணர் பதில் சொல்கிறார்!

‘உண்மை’ அறிவு இல்லாத நிலையிலேயே இது சாத்தியமாகும்.
ஒரு கயிற்றைப் பாம்பு என எண்ணிப் பயப்படும்போது, கயிறு பற்றிய நம் அறியாமையே இதற்குக் காரணமாகிப் போகிறது!

இது ஒரு மாயத் தோற்றமே![illusion]

‘உண்மையான நான்’ பற்றிய தெளிவு இல்லாதபோது, நாமாக நினைத்துக் கொண்டிருக்கும் ‘நான்’ ஏற்படுத்துகிற மாயமே ’ஆணவம்’ பிறக்கக் காரணமாகிறது.

‘அசத்து’ எனச் சொல்லப்படும் நிலையில்லாத, தானாக இயங்கமுடியாத பொருட்களை ‘நான்’ என நம்பும் அறியாமையத் தொலைத்து, ‘உண்மையான நான்’ எது எனத் தெளிய முற்படுவதே ‘ஆணவம்’ அழிக்கச் சிறந்த வழி என்கிறார்.

இந்தத் தொடரின் தொடக்கத்தில் சொல்லப்பட்ட வழிகளின் மூலம், ஒரு தெளிந்த, தூய்மையான மனத்தின் உதவியால், தக்கதொரு குருவின் துணை கொண்டு, தொடர்ந்த பயிற்சியின் மூலமே இதனை அறிய முடியும்.

நிலையான இதனை அறிவது எங்ஙனம்?
நாளை பார்க்கலாம்!


“தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்”
****************************************

[தொடரும்]

Read more...

Thursday, February 26, 2009

"உந்தீ பற!" -- 24

"உந்தீ பற!" -- 24



பகவான் ரமணரின் "உபதேச உந்தியார்"

[முந்தைய பதிவு]

நானென்னுஞ் சொற்பொரு ளாமது நாளுமே
நானற்ற தூக்கத்து முந்தீபற
நமதின்மை நீக்கத்தா லுந்தீபற. [21]


நான் என்னும் சொற்பொருளாம் அது நாளுமே
நான் அற்றது ஊக்கத்தும் உந்தீ பற
நமதின்மை நீக்கத்தால் உந்தீ பற.


தன்னிலை சார்ந்த 'நான்'எனும் பொருள்
தன்னில் மட்டுமே மகிழ்வினைத் தேடும்

சுற்றம் சார்ந்த 'நான்'எனும் சொல்லோ
சற்று விரிந்து மற்றதைக் கொள்ளும்

இரண்டு சொற்களின் எல்லையும் சிறிதே
அனைத்தும் 'நான்'என உணர்வதே பெரிதே

எனதிலை என்னும் நிலையங்கு வந்திட
எல்லாம் 'நானாய்' ஆகுதல் காணலாம்.



இந்தப் பாடலின் பொருளை முற்றுமாக உணர இந்த 'நான்' என்பது என்ன என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆணவத்தின் காரணமாக உணரப்படும் 'நான்' என்னும் சொல், தன்னைப் பற்றியே சிந்தித்திருக்கும்.


இதுவே இன்னும் சற்று விரிந்து தன் உடைமைகள், சுற்றம், நட்பு, நாடு, மொழி என விரிந்து இவற்றையும் இந்த நானுக்குள் சேர்த்து மகிழும்/துன்பப்படும்.
இந்த நிலையிலும், இந்த 'நான்' ஒரு உலகளாவிய பார்வையைக் கொள்வதில்லை.

அவ்வப்போது அப்படிக் கொண்டாலும், வெகுவிரைவாக, தன்னைச் சார்ந்த நானுக்குள் சுருங்கி, அதையும் மீறி, தனக்குள்ளேயே மீண்டும் சுருங்கி வித்தை காட்டும்.

இப்படி மாறி மாறி நிகழ்கின்ற உணர்வுகளால் அலைக்கழிக்கப்படும் 'நான்' ஒரு நிலயான சொல் அல்ல.

அப்படியென்றால் எது உண்மையான 'நான்'?

இயற்கையுடன்/ஈசுவரனுடன் ஒன்றி, எதுவுமே எனது இல்லை என்கின்ற நிலையில் வரும் ஞானத்தால், அஞ்ஞானமாகிய ஆணவம் என்னும் 'நான்' அழிந்து/அழிக்கப்பட்டு, உண்மையான 'நான்' ஒளிரத் தொடங்குகிறது.

உடல், உணர்வு இவற்றால் நிலைபெற்ற உயிர், [ஜீவன்] எப்போதும் இவ்விரண்டைச் சுற்றியே தன் காலத்தைப் போக்குகிறது.
அக்கம் பக்கத்தில் தன்னைப் போன்ற ஜீவன்கள் பல வகைகளிலும் இருப்பதைக் கண்டு தானும், அவையும் ஒன்றே என உணர்வதற்குப் பதிலாக, தன்னை அவற்றிலிருந்து எப்படி வேறுபடுத்திக் காண்பிப்பது என்னும் சிந்தனையிலேயே அவதிப்படுகிறது.

கடலிலிருந்து எழும் அலைகள் யாவும், தாம் கடலிலிருந்துதான் எழும்புகிறோம் என்னும் உணர்வில்லாமல், ஒன்றை விட அடுத்தது பெரியது/சிறியது; வேகம் அதிகம்/குறைவு என எண்ணினால் எப்படி இருக்கும்!
தாம் அனைத்தும் மீண்டும் அந்தக் கடலுக்குள்ளேயே திரும்பவும் சென்று, மீண்டும் எழத்தான் போகிறோம் என்பது புரியாமல் இவை நடத்தும் ஆட்டங்கள்தான் எத்தனை?

இருந்ததும் கடலே எழுந்ததும் கடலே, அலைந்ததும் கடலே, மீண்டும் திரும்புவதும் அந்த அழிவில்லாக் கடலே!

அந்தக் கடலும் நீர் என்னும் ஒரு பொதுப்பொருளின் ஒரு நிலையே!

அலைகளுக்கு, கடலுக்கு காலநேரக் கணக்குகள் உண்டு. நீருக்கு அவை கிடையாது.

அலை, கடல் என உணர்ந்ததெல்லாம் 'நீர்' என்ற ஒன்றில் அடங்கும் எனப் புரிந்தவுடன், இந்த அலை, கடல் என்கின்ற சொற்கள் பொருளற்றுப் போகின்றன. இந்தப் பெயர்களெல்லாம் வெறும் பெயர்கள் மட்டுமே, எல்லாமே நீரின் மாறுபட்ட வடிவங்களே என்னும் பூன்றம், பூரணம் புரிந்து போகிறது!

இந்தப் பூரணம்தான் சென்ற பாடலிலே சொல்லப்பட்டது!

அப்படிப்பட்ட பூரணத்துவத்தை அடைந்தவர், 'நான்' என்ற சொல்லின் பொருள் இன்னதென நன்கு தெளிந்து, எதுவுமே எனதில்லை என்னும் உணர்வே பூரணமான 'நான்' எனப் புரிவார்.

வேதாந்தத்தில் மிக முக்கியமாகக் கேட்கப்படும் 'நான் யார்?' எனும் கேள்விக்கான விடை நாளைய பாடலில்!

"தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்”
*********
[தொடரும்]

Read more...

Tuesday, February 24, 2009

"உந்தீ பற!" -- 23

"உந்தீ பற!" -- 23


பகவான் ரமணரின் "உபதேச உந்தியார்"

[முந்தைய பதிவு]

நானொன்று தானத்து நானானென் றொன்றது
தானாகத் தோன்றுமே யுந்தீபற
தானது பூன்றமா முந்தீபற. [20]

நான் ஒன்று தான் அத்து நான் நான் என்ற ஒன்று அது
தானாகத் தோன்றுமே உந்தீ பற
தான் அது பூன்றமாம் உந்தீ பற.


'நான்'எனும் ஆணவம் அழித்திட முனைந்து
உள்ளில் தேடி அதனை அழித்திட

உள்ளில் ஒளிரும் ஓரொளி தானாய்
அதுவாய் எழுந்து அங்கே ஒளிரும்

இதுவே உயரிய உள்ளொளி என்பதை
அதுவே தானாய்த் தெரிதலை உணர்வாய்

'நான் - நான்' என பூரணப் பொருளாய்
ஒளிரும் இதுவே முழுப்பொருள் ஆகும்.


பூன்றம் pūṉṟam
, n. <>

"ஆணவம் அழித்தல் எப்படி?' என்பதை ரமணர் இப்பாடலில் விளக்குகிறார்.

சென்ற பாடலில் சொல்லிய 'நான்' எனும் ஒன்று நாம் அன்றாட வாழ்க்கையில் உணருகின்ற ஒரு ஆணவம்.
'நான் ஒல்லியாக/குண்டாக இருக்கிறேன்' 'நான் ஒரு முட்டாள்/அறிவாளி', 'நான் ஒரு ஏழை/பணக்காரன்' எனப் பலவகையிலும் நம்மை அலைக்கழிக்கும் இந்த 'நான்' நம்மை நேர்வழியில் செல்லவிடாது தடுக்கிறது.

எண்ணங்களாலும், உணர்வுகளாலும் வளர்க்கப்படும் இந்த 'நான்' என்னும் ஆணவத்தைத் தேடிக் கண்டுபிடித்து அழிக்கச் சொல்கிறார் பகவான்.

'எந்தவொரு எண்ணமும், உணர்வும் என்னைப் பாதிக்காத நிலை வந்துவிட்டால், பிறகு எனக்கும் மற்ற ஜடப் பொருட்களுக்கும் என்ன வேறுபாடு?' எனும் நியாயமான சந்தேகம் எழக்கூடும்.

'அப்படியென்றால், நான் இழந்த 'நான்' அடையாளமற்றுப் போய்விடுவேனே' என்னும் ஒரு சந்தேகமும் எழலாம்!

ஆனால், இங்கேயே ரமணர் அதற்கான விடையையும் வைத்திருக்கிறார்!

”நான் இழந்த 'நான்' அடையாளமற்றுப் போகாது!”



அழுக்கு நீங்கிய பொன் ஒளிர்வதுபோல்!!


இதுவரையில் எண்ண, உணர்வு அழுக்குகளால் மூடி மறைக்கப்பட்ட 'உண்மையான "நான்"' தானாகப் பிரகாசிக்கத் தொடங்குகிறது!

களிம்பேறிய செப்புப் பாத்திரத்தைப் புளிகொண்டு தேய்த்தாலே போதும்! தானாக செம்பின் ஒளி இயல்பாகவே வெளிப்படும்!

அதே போலத்தான் இதுவும்!

ஆணவம் அழித்ததும், முழுமையான, பூரணமான, பூன்றமான நான் அதுவாகவே இதயத்தில் ஒளிரத் தொடங்கும் என நமக்கெல்லாம் தெம்பூட்டுகிறார் பகவான்!

நிலையில்லாத இந்த பெருமை/சிறுமைகளைத் தருகின்ற ஆணவத்தைத் தருகின்ற 'நான்' என்பதை அழித்தால், நிஜமான, நிலையான 'நான்' உனக்குத் தெரியும் எனச் சொன்னால், எவராது வேண்டாமென மறுப்பார்களோ!

பூரணமான இந்த 'நானே' மெய்யான 'நான்'! காலங்களைக் கடந்தது இது!

ஆனால், இதுவே போதுமா?


இனி வரும் பாடல்கள் இதற்கான விடை பகரும்!

"தெளிவு குருவின் திருமேனி காண்டல்"
****************************************
[தொடரும்]


Read more...

Sunday, February 22, 2009

"உந்தீ பற!" -- 22

"உந்தீ பற!" -- 22

பகவான் ரமணரின் "உபதேச உந்தியார்"

[முந்தைய பதிவு]

நானென் றெழுமிட மேதென நாடவுண்
நான்றலை சாய்ந்திடு முந்தீபற
ஞான விசாரமி துந்தீபற. [19]

நான் என்று எழும் இடம் ஏது என நாடவும்
நான் தலை சாய்ந்திடும் உந்தீ பற
ஞான விசாரம் இது உந்தீ பற.


’நான்’என இங்கே நம்முள் எழுவது
ஏதென சற்றே எண்ணிடும் போது

உரித்திட உரித்திட ஒன்றுமில்லாதுபோகும்
வெங்காயம் போலவே இதுவெனப் புரிந்திட

நானிதைச் செய்தேன் அதனைச் செய்தேனென
செயலினைப் புரிந்து பயனை உணரும்

அதுவல்ல 'நான்'என நன்கே தெளிந்திட
நான் தலைசாய்ந்து ஞானத்தேடல் மேலும்தொடரும் .


திரு. வடுவூர் குமார் உன்னிப்பாகக் கண்டுபிடித்தபடி, பதினேழாம் பாடலில் இருந்து, பகவான் ரமணர் ‘நான்’ என்பதின் தோலை ஒவ்வொன்றாக உரித்துக் காண்பிக்கத் துவங்குகிறார்.

மனம் அழிய முதலில் மனதை ஒருமைப்படுத்தி, எண்ணங்களை
ஒழுங்குபடுத்தி, ‘நான்’ இது’ என்னும் இரண்டுக்குள் குறுக்கி, பின்னர்,
அதையும் சுருக்கி, ‘நான் எனும் எண்ணம்’ என்பதிலிருந்தே எல்லாம் தொடங்குகிறது எனச் சொல்லியவர்,இந்த ‘நான்’ என்பதின் துவக்கம் எங்கே என ஆராயச் சொல்கிறார்.

அப்போது, இந்த எண்ணமும் மறைந்து, ‘நான்’ என்பதே நிலைபெறுகிறது.

பொதுவாக ‘நான்’ என்றாலே ஒரு கர்வம், அஹங்காரம் என்பதே நாம் அனைவரும் அறிந்த ஒரு பொருள்!

’நான்’ என ஒருவர் சொல்லும்போது, அப்படியே அனைவரும் இதை அணுகி ஒரு தவறான கருத்தைப் பொதுவில் கொள்கிறோம்.

வேதாந்தத்தில் இந்த ‘நான்’ வேறு பொருளில் உணரப்படுகிறது.

மனம்,உடல்,புத்தி இவற்றின் விளைவால் ஏற்படும் செய்கையும், அதனால் விளையும் உணர்வுகளுமே ‘நான்’ என இங்கு அறியப்படுகிறது.

‘நானே இந்த உடல்’, ‘நானே இதனைச் செய்கின்றேன்’ என்பது போல.

இந்த ‘நானைத்தான்’ மேலும் அறியத் தூண்டுகிறார் பகவான் ரமணர்.

இதுவே ஞானத் தேடல்!

பதின்மூன்றாம் பாடலில் இதனை வேறு விதமாக, ‘லயம், நாசம்’ எனச் சொல்லி,
எவ்விதமாக மனத்தை ஒடுக்குவது எனக் காட்டியது இனி மேலும் ஆழ்ந்து விளக்கப் படுகிறது.
*****************

[தொடரும்]

குருவருள் அனைவருக்கும் கிட்டட்டும்!

Read more...

Wednesday, February 18, 2009

"உந்தீ பற” -- 21

"உந்தீ பற” -- 21

“பகவான் ரமணரின் உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]


நானென் றெழுமிட மேதென நாடவுண்
ணான்றலை சாய்ந்திடு முந்தீபற
ஞான விசாரமி துந்தீபற. [19]


நான் என்று எழும் இடம் ஏது என நாடவும்
நான் தலை சாய்ந்திடும் உந்தீ பற
ஞான விசாரம் இது உந்தீ பற.


'நான்'என இங்கே எழுமிடம் எதுவென
இன்னும் சற்று தீர்க்கமாய்த் தேடிட

நான் எனும் ஒன்று மனத்தையும் தாண்டி
என்பது புரிந்திட தேடலும் மிகுந்திடும்

நானிதைச் செய்தேன் அதனைச் செய்தேனென
செயலினைப் புரிந்து பயனை உணரும்

அதுவல்ல'நான்'என நன்கே தெளிந்திட
நான்தலைசாய்ந்து ஞானத்தேடல் இன்னும்தொடரும்
.

‘தன்நிலை அறிதல்’ என்பதை விளக்கும் பாடல் இது.

பதினேழாவது பாடலில் சொல்லிய வண்ணம் மனதை அடக்கி அழிக்கும் உபாயம் தெரிந்த யோகிக்கு, நான், இது என்னும் இரண்டும் குறுகி, ‘நான்’ என்பதே மனம் எனச் சுருங்கி, இதுவும் இல்லை எனத் தெளியும்போது, அப்படியானால், இந்த ‘நான்’ என்பது எங்கே இருக்கிறது? எனும் கேள்வி எழுந்து, தேடுகின்ற நானை விடுத்து, ‘நான்’ எனும் ஒன்றே நிலைத்து நிற்கிறது.

இது ஒரு புத்தகம்
நான் இதை ஒரு புத்தகம் என உணர்கிறேன்
நான் உணர்கிறேன்
இந்த உணர்வு மனம் சார்ந்தது
எனவே, நான் இந்த மனத்துக்கும் அப்பாற்பட்டது!

அறிந்துணரும் ஆர்வம் இல்லாதவன் முதல் படியிலேயே நிற்கிறான்.
ஆர்வம் கிளம்பும் ஒருவன் அடுத்த நிலைக்கு வருகிறான்.
சாதகன் இருப்பது மூன்றாம் நிலை.
யோகி நான்காம் நிலையைப் புரிந்து அதற்கும் மேலான ஐந்தாம் நிலைக்குச் செல்லத் தொடங்குகிறார்.

இதுவே கர்மம் கழித்து, பக்தி செய்து, யோகம் பயின்று, ஞானம் நோக்கிச் செல்லும் வழி!
ஞான விசாரம்!

‘நான்’ எனும் ஆணவத்தை எப்படி அழிப்பது?

நாளை பார்க்கலாம்!

********************
[தொடரும்]

Read more...

Monday, February 16, 2009

"உந்தீ பற” -- 20


"உந்தீ பற” -- 20

“பகவான் ரமணரின் உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]

எண்ணங்க ளேமனம் யாவினு நானெனு
மெண்ணமே மூலமா முந்தீபற
யானா மனமென லுந்தீபற. [18]


எண்ணங்களே மனம் யாவினு[ம்] நா[ன்] எனும்
எண்ணமே மூலமாம் உந்தீ பற
யானா மனம் எனல் உந்தீபற.


இது அதுவென அலை அலையாக
எழுந்திடும் எண்ணக் குவியலின் அளவே

மனமெனும் ஒன்றின் மாண்பைக் காட்டிடும்
இவையெலாம் ஆங்கே எழுதலின் மூலமோ

'நான்'எனும் உணர்வின் தாக்கத்தினாலே!
உணர்வும் செயலும் உள்ளுயிர் சேர்ந்ததென

முன்னம் இங்கே சொல்லியதுணர்ந்திடின்
’யான்'என வருவதே மனமென உணர்க!



'மனம்' என்பது என்ன? எனும் கேள்விக்கான விடைதேடல் தொடர்கிறது!

எண்ணங்களே மனதின் செயல்பாடு . இதனை முன்பே படித்தோம்.
எந்த ஒரு பொருளோ, அல்லது உணர்வுகளோ ஏதேனும் ஒன்றைப் பற்றியே நிற்கிறது.

'இது ஒரு புத்தகம்', என உணர்வது அது பற்றிய நம் மனதின் அறிவினாலே தான்.

இந்த அறிவு, ஒரு அறியப்படுபவன் இல்லாமல் நிகழ முடியாது.

இப்போது, அதுவே, நான் இதை ஒரு புத்தகம் என அறிகிறேன் என மாறுகிறது.
இந்த 'நான்' என்னும் ஒன்றைச் சுற்றியே அனைத்தும் நிகழமுடியும் எனப் புரிகிறது.

'நான்' கோபமாக இருக்கிறேன்; நான் இது ஒரு புத்தகம் என அறிகிறேன் என்னும் போதெல்லாம், 'நான்' எனபதாலேயே நிகழ்கிறது எனப் பொருளாகிறது.

பார்க்கும் பொருள்களும், உணரும் உணர்வுகளும் மாறக்கூடும்.
ஆனல், இந்த 'நான்' என்பது மட்டும் மாறுவதில்லை.

இதன்மூலம் தான் அறிவது என்ன? என ஒரு யோகி சிந்திக்கத் தொடங்கும்போது, மனம் என்னும் ஒன்று முன் சொன்னதுபோல இருவிதமான எண்ணங்களின் கலவை அல்ல; 'நான்' எனும் ஒன்று எழுவதின் மூலமே அனைத்துப் பொருட்களுக்கும் ஒரு தெளிவு கிடைக்கிறது எனப் புரிகிறார்.

அப்படியானால், இந்த நான் எல்லா நேரங்களிலும் நம்முடன் இருக்கிறதா என ஆராயும் போது, ஆழ்ந்த உறக்கத்தில் இது காணாமல் போவதையும், விழித்தவுடன், உடனே இது வந்து தொற்றிக்கொள்வதையும் உணருகிறார்.

'நான் குண்டாக இருக்கிறேன், நான் வருத்தமாக இருக்கிறேன், நான் ஒரு பொல்லாதவன்' என்கின்ற 'நான்' எல்லாம் உண்மையில் நான் இல்லை எனப் புரியத் தொடங்குகிறது.

எந்த நிலையிலும் மாறாத ஒன்றே 'உண்மை' எனப் புரிந்த இவர், இப்படித் தெரிகின்ற இந்த 'நான்' மனம் சார்ந்ததே தவிர, இதையும் மீறிய ஒரு 'நான்' இருக்கிறதோ எனத் தன் தேடலைத் தீவிரமாக்குகிறார்.
**************
[தொடரும்]

Read more...

Sunday, February 15, 2009

"உந்தீ பற” -- 19

"உந்தீ பற” -- 19

“பகவான் ரமணரின் உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]

மனத்தினுருவை மறவா துசாவ
மனமென வொன்றிலை யுந்தீபற
மார்க்கநே ரார்க்குமி துந்தீபற. [17]



மனத்தின் உருவை மறவாது சாவ
மனம் என ஒன்று இ[ல்]லை உந்தீ பற
மார்க்க[ம்] நேர் ஆர்க்கும்[யார்க்கும்] இது உந்தீ பற.


மனத்தினில் பிறந்திடும் உருவது எழுந்திட
குணத்தினில் பிறந்திடும் எண்ணங்கள் ஒழிந்திட


கணத்தினில் அதனை மறந்திடல் வேண்டும்
மனமென எதுவென உணர்ந்திடும் போது

மனமென ஒன்று இல்லை என்னும்
தெளிவே பிறந்திடும் என்பதை அறிந்திடும்

யோகியர் மேலும் இவ்வழி செல்லும்
வகையினை அறிந்திடும் நேர்வழி செல்வார்.

கர்மயோகம், பக்தியோகம், அஷ்டாங்க யோகம் என்னும் வழிகளைப் பற்றிச் சொல்லியபின்னர்,ஞானயோகம் பற்றிய முன்னுரையாக இப்பாடல் அமைகிறது.

எப்படி மனத்தை அமைதிப்படுத்தி, உள்ளில் ஒடுங்கச் செய்வது என்னும் கேள்விகளையும் தாண்டி, இப்போது, இந்த ‘மனம்’ என்பது என்ன?என ஆராயத் தொடங்குகின்றார்.

உள்ளில் எழும் அனைத்துப் பிரச்சினைகளும் எங்கிருந்து எழுகின்றன எனத் தீவிரமாக ஆராய்ந்தால்,இதன் மூலம் நம் எண்ணங்களின் விளைவினாலேயே எனப் புரிய, மனம் என்னும் ஒன்றே இல்லாமல் செய்ய முடியும் எனத் தெளிகிறார்.

அப்படி இல்லாமலேயே செய்துவிடின், பின்பு, பிரச்சினைகளும் கிடையாது, தீர்க்க வேண்டிய அவசியமும் இல்லாது போகிறது.

எல்லா வேதாந்த விளக்கங்களிலும், அநேகமாகக் கையாளப்படும், ‘கயிறு-பாம்பு’ உதாரணம் இங்கு பொருந்தி, இதை இன்னும் சற்று தெளிவாக்கலாம்.

ஒரு பிரச்சினை நிஜமாகவே இருக்கிறதா? இல்லை நிஜமாகவே இல்லையா? அல்லது நம்மால் மட்டுமே பிரச்சினையாக உருவகப் படுத்தப் படுகிறதா ?

இருளில் திடீரெனத் தெரியும் ஒரு கயிறு, அதைப் பாம்பு என எண்ணவைத்து, பயத்தை உண்டாக்குகிறது. விளக்கை அதன் மீது செலுத்திப் பார்க்கும் போது, அது கயிறு எனத் தெளிந்து, அமைதியாகிறான்.

இப்போது, கயிற்றைப் பாம்பாக நினைத்ததும் நிஜம்! அது பாம்பு இல்லை என்பதும் நிஜம்!
அந்த சில நொடிகளில், அதைப் பாம்பு என உணர்ந்ததும் நிஜம்!
இதில் எது உண்மை?

‘உண்மை’ என்பது என்ன?

எந்த ஒரு பொருள், ‘நேற்று, இன்று, நாளை’ என்னும் மூன்று நிலைகளிலும் ஒரே பொருளாக இருக்கிறதோ, அது ஒன்றே நிஜம். உண்மை!

மற்ற எல்லாப் பொருட்களுமே, இல்லாமலோ அல்லது இருக்கிறது என உணரப்படும் ஒன்றோ தான்.

அப்படி உணரவைப்பதுதான் நம் மனம்!

இந்த மனம் தான் ஒரே பொருளை இருப்பதாகவும், இல்லாததாகவும் உணரவைத்து நம்மை அலைக்கழிக்கிறது! கோபம், வெறுப்பு, ஆசை, ஆத்திரம் எனப் பல உணர்வுகளினால் தூண்டப்பட்டு, மாறிக்கொண்டே இருக்கிறது.

இப்படி அடிக்கடி மாறுகின்ற மனம், அதனால் வரும் மாற்றங்கள் எல்லாமே ‘உண்மை’ இல்லை, இது ஒரு ‘மாயை’ எனத் தெளிந்து, இப்போது இந்த மனம் இல்லாமல் போகிறது.

கயிறு பற்றிய தெளிவு இல்லாமல் போனதாலேயே, அது பாம்பு என மாயையாக உணரப்பட்டது.
இப்படி, மாயையாக உணரப்பட்ட பாம்பு தோன்றக் காரணம் அந்தக் கயிறு.

கயிறு என்ற ஒன்றே நிஜம்; மற்ற எல்லா எண்ணங்களும், அதனைத் தொடர்ந்து வரும் அனைத்து எண்ணங்களுமே ‘நிஜத்தில் இல்லாத ஒன்று’ எனப் புரியும் நிலையில், இவற்றையெல்லாம் ஏற்படுத்திய ‘மனத்தை இல்லாமல் செய்வதே’ நேர்வழிக்குச் செலுத்தும் எனப் புரியத் துவங்குகிறது யோகிக்கு.

ஆம்! ‘சாதகன்’ என்ற நிலையிலிருந்து, இப்போது ஒரு ‘யோகி’யாக இவரது பயணம் தொடங்குகிறது!
-------------
[தொடரும்]

Read more...

Thursday, February 12, 2009

"உந்தீ பற” -- 18 “ஞானமே யோகம்!”

"உந்தீ பற” -- 18

“பகவான் ரமணரின் உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]

“ஞானமே யோகம்!”

அடுத்து வரும் பாடலகள் சொல்லும் செய்தி ‘ஞான யோகம்’ !

'கர்மயோகம், பக்தியோகம் ஞானயோகம்’ என அனைத்து வழிகளுமே ‘தன்னை அறிதல்’ என்னும் ஒரு இலக்கை நோக்கியே அமைகின்றன.

இதுவரை சொன்னதெல்லாம், முதல் இரு வழிகளால் இதை எப்படி அடைவது என்பது பற்றி!

இதன் முடிவில் கிடைக்கும் விடை அந்த சாதகனுக்கு ஒரு ஆச்சரியமான உண்மையை உணர்த்துகிறது!

முதல் இரு வழிகளுமே முடிவடைவது இந்த ஞான யோகத்தில் தான் என்பதை!

தனக்கென இல்லாமல் ஒரு செயல் செய்வதை உணர்பவனும், 'இந்தப் பலன் தான் எனக்கு வேண்டும்' என எண்ணாது ’நிஷ்காமியமாக’..... பலன் கருதாது இறைவன் மீது பக்தி செலுத்துபவனும், இறுதியில் உணர்வது இந்த ஞானத்தையே!

ஒரு பிரச்சினை என வரும்போது, அதைத் தடுக்கவே முதலில் முனைகிறோம்.

இந்தப் பிரச்சினை ‘உண்மை’ என நம்பி இதற்கு ஒரு வழி தேட அதில் கவனத்தைச் செலுத்துகிறோம்.
இது உண்மையிலேயே ஒரு பிரச்சினைதானா என உணரக்கூட மறுக்கிறோம்.
இதை எப்படித் தீர்ப்பது என்பதிலேயே நம் கவனம் முழுதுமாகச் செல்கிறது.

சரி! அப்படி ஒரு பிரச்சினை தீர்ந்தவுடன், நம் மனம் அமைதியடைகிறதா என்றால், அதுதான் இல்லை!
இந்தத் தீர்வின் மூலமாகவோ, அல்லது, அதன் பிற விளைவாகவோ மேலும் ஒரு பிரச்சினை இப்போது வந்து ஒட்டிக் கொள்கிறது!

“வினையின் விளைவு வினைக்கடல் வீழ்த்திடும்” என்னும் இரண்டாம் பாடலை இங்கு கவனத்தில் கொள்ளலாம்.

இப்போது கவனம் இதை எப்படித் தீர்ப்பது எனப் போகிறது!

இதற்கெல்லாம் என்ன காரணம் என ஆராய்ந்தால், ‘மனம்’ என்கின்ற ஒன்றே இதையெல்லாம் செய்கிறது எனப் புரியவரும்!

இந்த ’மனம்’ தான் எதையோ ஒன்றைப் பிரச்சினை எனக் கருதி அதை எப்படித் தீர்ப்பது என நம்மைப் பாடாய்ப் படுத்துகிறது!

இதன் போக்கிலேயே போய், அல்லல் படுபவரை விட்டுவிடுவோம்!

இதன்,..... இந்த ‘மனத்தின்’ பிடியிலிருந்து விடுபட ஒரு சிலரே விழைகிறார்கள்!

அவர்களே இதுவரை நான் சொல்லிவந்த ‘சாதகர்கள்’! ‘பயிற்சியாளர்கள்’!

பலவகையிலுமாக முயற்சி செய்து, கர்மயோகம், பக்தியோகம் என எதையாவது ஒன்றினைத் தேர்ந்தெடுத்து, அதிலே தீவிரமாக ஈடுபடுகிறார்கள்!

பிராணாயாமம், ஜெபம், தியானம் எனத் தம்மை ஈடுபடுத்தி, இதில் சிலர் ஜெயிக்கிறார்கள்! சிலர், ‘இதுவே போதும்’ என நிறுத்திக் கொள்கிறார்கள்!; ஒருசிலரே மேலும் பயிற்சியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்!

கர்மம், பக்தி எல்லாம் தன்னை இழுப்பது ஞானமே என இவருக்கு இப்போது புரிகிறது!

இப்போதும் இதை விட்டு விலகும் சாதகர்களும் இருக்கிறார்கள்!

’பிரச்சினை’ என ஒன்றுமே இல்லை; இதெல்லாம் ‘மனம்’ செய்கின்ற மாயை என்பதைப் புரிந்த சாதகன் இதை மேலும் ஆராயத் துவங்குகிறார்!

தாற்காலிகத் தீர்வுகள் எதனையும் தீர்ப்பதில்லை; முழுமையான தீர்வே முதன் முடிவு எனத் தெளிந்த ‘சாதகன்’ ’மனம்’ என்கிற ஒன்றினால் விளைகின்ற எதுவுமே பொய் எனத் தெளிந்து, மனத்தில் இருந்து இதனை அகற்ற முயற்சி செய்து, அதன் மூலம், மனத்தையே அழிக்க முற்படுகிறார்!

‘எல்லா பிரச்சினைகளுமே மனத்தினால் விளைந்த ஒன்றே’ என்னும் உண்மை இப்போது புலப்பட்டு,

‘இது எதனால் விளைகிறது?’ என சிந்திக்கத் துவங்கும் ‘சாதகன்’ அடைவதே ’ஞானம்’!

இதனைப் பயிலுவதே ‘ஞானயோகம்’

இது பற்றி பகவான் என்ன சொல்கிறார்?

திங்கட் கிழமை பார்ப்போம்!

***********************************

[தொடரும்]

Read more...

Wednesday, February 11, 2009

”உந்தீ பற!” - 17

"உந்தீ பற!” - 17

"பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]

"கற்றது கைம்மண்ணளவு!"

இனிவரும் பாடல்கள் சாதகனை ஒரு அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் விதமாக அமைந்தவை.

அவற்றைப் பார்க்கத் தொடங்கும் முன், இதுவரை பகவான் ரமணர் சொன்னது என்ன என, ஒரு சுருக்கமான விளக்கம் காண இங்கு முயலலாம்.

என் சிற்றறிவுக்கு எட்டியதை ஒட்டியே இந்த விளக்கம் அமைந்திருக்கும். இதை எனக்குச் சொன்னவர்கள் மீது குற்றமில்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதினாறு பாடல்கள் இதுவரையில் படித்துப் பொருள் கண்டோம்.

முதல் மூன்று பாடல்கள் கர்மயோகம் என்பது என்ன? அதனால் விளையும் பயன் எத்தன்மையது? அதை அளிப்பது யார்/எது? அதனை எப்படி ஏற்றுக்கொள்வது என்பதைச் சொல்லின.

4 - 10 முதலான பாடல்கள், பக்தி யோகத்தை விளக்கமாகச் சொல்ல வந்த பாடல்கள்!
பக்தி என்றால் என்ன? பூசனை, ஜபம், தியானம் இவற்றை எப்படிச் செய்வது? இவற்றுல் எது மிகவும் சிறந்தது? இதன் மூலம் ஒரு சாதகன் எதனை அடைய வேண்டுகிறான்? உருவை உள்ளில் நிறுத்தி, உருவை அகற்றி உருவே தானாகி, எந்த ஒரு உருவும் இலாத பரம்பொருளே 'நான்' என உணர்ந்து அதனில் ஒன்றுவதே எப்படி? என்னும் கேள்விகளுக்கு விடையாக அமைந்தது இந்தப் பகுதி.

இதனைத் தாண்டி மேலும் செல்ல விழையும் சாதகன் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? அதன் வகைகள் என்னென்ன? அவற்றை எப்படிச் செய்வது முறையானது ? இதனால் விளையும் பயன் என்ன என்பதைச் சொல்லி, 'ஞான யோகம்' வருவதற்கு முதல் 'யோக ஞானம்' யோகத்தைப் பற்றிய முறையான ஞானம் வருதல் வேண்டும் என்னும் விளக்கத்தை 11 முதல் 16 வரையிலான பாடல்கள் விளக்கின.

" யோகஞானம்” பற்றி பல விளக்கங்கள் இருந்தலும், பொதுவாக அனைவராலும் பின்பற்றப்படும் பதஞ்சலி முனிவரின் 'அஷ்டாங்க யோகம்' பற்றிய ஒரு எளிய விளக்கம், இப்போது இதனை மேலும் அறிய உதவும்.

'புற, அக நிலைபாடுகள்', 'எப்படி அமர்வது?', 'முறையான மூச்சடக்கல் எப்படிச் செய்வது?', 'புலனடக்கம் என்றால் என்ன?' 'மனதை ஒருநிலைப் படுத்துதல்' சமாதி நிலை' என்னும் எட்டு நிலைகள் முறையே 'யமம், நியமம், ஆஸனம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணம், த்யானம், சமாதி' என வழங்கப்படும்.

முறையான குருவின் துணையோடு கற்றுக்கொண்டு செய்யப்படும் பிராணாயாமம்,

வலைக்குள் அகப்படும் பறவைகள் போல், எப்படி எண்ன ஓட்டங்களை அமிழ்த்தி,

உண்மைப் பொருளைக் உணரச் செய்து,

இருவித நிலைப்பாடுகள் கொண்ட மனத்தை ஒடுக்கியும், அழித்தும் நிகழும் பயனால்,

செயல் என்ற ஒன்றும் செய்யாமலேயே, அல்லது, அப்படிச் செய்தாலும் அது பயன் கருதாச் செயலாகவும், உலக நன்மைக்காகவும் செய்யப்படும் ஆனந்த நிலையை ஒரு யோகி எனப்படுபவர் எவ்வாறு அடைகிறார் என்பதைச் சொல்லி,

இந்த 'ஆனந்தம்' எவ்வாறாக 'தன்னை உணர்தல்' என்கின்ற 'தத்துவ தரிசனத்தைக் காட்டுகிறது என்பதை,

11 முதல் 16 வரையிலான பாடல்கள் கோடிட்டுக் காட்டின.

இந்த நிலையை அடைந்த யோகி இனிச் செய்வது எல்லாமே
'ஞான யோகமே'!

இந்த 'ஞான யோகம்’ என்றால் என்ன என ஒரு சிறு விளக்கம் நாளை காணலாம்! அதன் பிறகு, மீதிப் பாடல்களைப் பார்ப்போம்!

முடிந்தால் இந்த 16 பாடல்களையும் மீண்டும் ஒருமுறை படித்துத்தான் பாருங்களேன்!

”தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்!”
**********

[தொடரும்]

Read more...

Tuesday, February 10, 2009

"உந்தீ பற!” - 16

"உந்தீ பற!” - 16

"பகவான் ரமணரின் “உபதேச உந்தியார்”

[முந்தைய பதிவு]

வெளிவிட யங்களை விட்டு மனந்தன்
னொளியுரு வோர்தலே யுந்தீபற
வுண்மை யுணர்ச்சியா முந்தீபற. [16]


வெளி விடயங்களை விட்டு மனம் தன்
ஒளி உரு ஓர்தலே உந்தீ பற
உண்மை உணர்ச்சியாம் உந்தீ பற.


அலைந்திடும் மனத்துக்கு ஆயிரம் விடயங்கள்
கலைந்திடும் மேகமென இங்குமங்கும் அலைக்கழிக்கும்

ஒருநிலைப் படுதலைக் குலைத்திடச் செய்யும்
விளைந்திடும் எண்ணமே மலையனக் குவியும்

பார்த்திடும் யாவையும் விலக்கியே வைத்து
பார்ப்பது யானெனும் நிலை புரிந்துவிடில்

ஒருநிலை உணர்வெனும் உண்மையின் காட்சி
உள்ளில் மலர்ந்து எங்கும் நிறையும்.


இதுவரை சொல்லிய அஷ்டாங்க யோகத்தின் முறையான பயிற்சியினால் விளையும் பயனை இந்தப் பாடல் விளக்குகிறது.

மூச்சுக்காற்றினை உள்ளில் ஒடுக்க, உண்மை எதுவெனத் தெரியும் என முந்தைய பாடல்களில் பார்த்தோம்.

வெளியில் தெரியும் அனைத்தையும், உடலும், உள்ளமும், அறிவும் நமக்கு உணர்த்தி இன்னின்னது இது எனக் காட்டினாலும், இவை அனைத்தையும் பார்ப்பது ‘நான்’ என்னும் ஒன்றே!

‘இது கணினி’,’இது புத்தகம்’ என பொருள்கள் எதிரில் தெரிந்தாலும், ‘நான்’ இப்போது ஒரு கணினியைப் பார்க்கிறேன்’, ‘நான் ஒரு புத்தகம் படிக்கிறேன்’ என அறியும்போது, உரு அழிந்து, ‘நான்’ என்னும் உணர்வு மேலோங்குகிறது.

இப்படி, இந்த ‘நான்’ என்னும் ஒன்றே அனைத்தையும் பார்க்கும், உணரும், அறியும் ஒன்று எனும் தெளிவு, புறப்பொருட்களை விடுத்து, உள்ளில் இன்னமும் அதிகமாக ஈடுபட ஒரு சாதகனைப் பண்படுத்துகிறது.

இந்த உணர்வு தொடர்ந்து செயல்படும்போது, ‘உண்மையான, சலனமற்ற உணர்வு’ காணும் பொருளுடன் ‘நான்’ என்னும் ஒன்றையும் ஒன்றச் செய்து, இரண்டுக்கும் வேறுபாடு இல்லாமல் செய்து, மனத்தை நிலைப்படுத்தி, ‘உண்மையின் காட்சி’ புரியத் துவங்கும்.


****************

[தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP