Thursday, March 24, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 12

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 12
11.
இனிமே சொல்லப்போற மூணு பாட்டையும் ஒண்ணாப் பார்த்தா நல்லாருக்கும். ஒண்ணுக்கொண்ணு தொடர்பா ஒரு சங்கதியச் சொல்லுற பாட்டுங்க. பதிணொண்ணாம் பாட்டைப் படி!' என ஆரம்பித்தான் மயிலை மன்னார்.

கூகா வெனவென் கிளைகூ டியழப்
போகா வகைமெய்ப் பொருள்பே சியவா
நாகா சலவே லவநா லுகவித்
தியாகா சுரலோ கசிகா மணியே

'அத்த இப்பிடிப் பிரிச்சுப் பாக்கணும்' என்றான்.

கூகா என என் கிளை கூடி அழப்
போகா வகை மெய்ப் பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலு கவித்
தியாகா சுரலோக சிகாமணியே


'பாட்டெல்லாம் படிக்கக்கொள்ள ரொம்பவே ஈஸியாத்தான் இருக்கும். அர்த்தம் புரியுறதுகூட ஒண்ணும் பெரிய கஸ்டம்லாம் இல்லை. ஆனா, அதுக்குள்ளாற இன்னா பொடி வைச்சிருக்காருன்றதப் புரிஞ்சுக்கறதுலதான் க்கீது சூட்சுமம்'

இப்ப இந்தப் பாட்டையே எடுத்துக்க. மொத ரெண்டு வரியுல அந்தக் 'கிளை'ன்ற வார்த்தைதான் கொஞ்சம் தடுக்கும். கிளைன்னா சொந்தபந்தமின்னு புரிஞ்சிருச்சின்னா, அப்பாலிக்கா, மிச்சமெல்லாம் புரிஞ்சிரும்.

கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை மெய்ப் பொருள் பேசியவா

நான் செத்துப் போனேன்னா, என்னோட சொந்தக்காரங்கல்லாம் 'கா' 'கூ'ன்னு அதாவுது, 'காச்சுமூச்சு'ன்னு, 'லபோதிபோ'ன்னு கத்திக்கினு மாருல அடிச்சுக்கினு அளா[ழா]தபடிக்கா, எனக்கு நீ 'குன்ஸா' ஒரு பெரிய விசயத்தச் சொல்லிக் குடுத்தியே முருகா!ன்னு இதுல சந்தோசப் படுறாரு அருணகிரியாரு.

இதுல இன்னா புரியுது? ஆராவுது செத்துப் போனா, சொந்த பந்தம்லாம் இப்பிடி அளுவுறது சகஜந்தான். அதுல ஒண்ணும் பெருசா இல்லை. ஆனா, இவுருக்கு இன்னா நடந்திச்சுன்னு கோடி காட்டுறாரு அருணையாரு.

இவுருக்கு சாவே வரலைன்னு ஒரு சங்கிதிய 'டமார்'னு போட்டு ஒடைக்கறாரு!
அதுக்குக் காரணம் இன்னான்னும் சொல்றாரு! அதான் இவுருக்குக் கெடைச்ச அநுபூதி!
முருகன் வந்து இவுருக்கு இன்னாமோ சொல்லிக்குடுக்க, இவுருக்கு மரணபயமே போயிருச்சுன்றத சும்மா, அப்டி 'டகால்ட்டியா' சொல்லிக் காட்டுறாரு.
அப்பிடீன்னா, இது மட்டும் கெடைச்சிருச்சுன்னா, ஒனக்கு சாவே இல்லைன்னு ஒரு போடு போடறாரு இவுரு!

அப்பிடியாப்பட்ட கந்தனை அடுத்த ரெண்டு வரியுல பெருமையாப் பேசறாரு.

நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே

நீ நாகாசலன் வேலவன், நாலு கவியும் கொடுக்கற தியாகி, தேவலோகத்துக்கே ராசாவா மகுடம் சூட்டிக்கினு க்கீற பெரிய ஆளுப்பா நீ!'ன்னு இன்னான்னமோ சொல்லிப் பாடறாரு!

சரி, இதுக்கும், மொத ரெண்டு வரிக்கும் இன்னா சம்பந்தம்னு பாப்பம்!

சாவே இல்லாமப் பண்றதுன்னா, இன்னா சும்மா சாதாரணக் காரியமா அது?
அப்பிடியாப்பட்ட ஆளு இன்னா பெரிய தருமவானா இருக்கணும்? இன்னா ஒரு கருணை இருந்தா அப்பிடி ஒரு கொணம் வரும் ஒர்த்தருக்கு?

இப்ப,... சாவே இல்லாதவங்க ஆரு?
தேவருங்க! தேவலோகத்துல க்கீற தேவருங்க!
அவங்களுக்கே ஒரு நாளு ஆபத்து வந்து சூரபத்மன் அவங்களையெல்லாம் புடிச்சு ஜெயில்ல போட்டு வாட்டி எடுத்தான் ரொம்ப நாளைக்கு!

நீயும் நானும்னாக் கூடப் பரவாயில்லை. தோ, நீ க்கீறியே... ஒன்னிய ஒரு ரெண்டு தட்டு தட்டினாப் படுத்துருவே! அப்பாலிக்கா, ஒன்னோட 'பாடி'யத்தான் போட்டு அடிக்கணும்! ஆனா, தேவருங்க பாடு ரொம்பவே கொடுமை சாமி! எவ்ளோ வாட்டியெடுத்தாலும் சாவு மட்டும் வராது! வலிதான் கிடைக்கும்!

ஒன்னியும் என்னியும் விட, அப்பிடியாப்பட்டவங்களைக் காப்பாத்துறது இன்னும் பெட்டெர் தானே!
அத்தான் பண்ணினாரு முருகன்!
தன்னோட வேலை எடுத்து வீசி, சூரனைப் பொளந்து போட்டு, தேவருங்களுக்கு மறுபடியுமா, அவங்க ஒலகத்த வாங்கிக் குடுத்தாரு.
அதுக்காவ, இவங்கல்லாமாச் சேர்ந்து, முருகனுக்கே ராசாவாப் பட்டம் கட்டி, இந்திரன் தன்னோட பொண்ணியும் குடுத்தருன்றதுல்லாம் ஒனக்கும் தெரியும்.
அப்பிடி, தேவருங்க மாரி இவரையும் ஆக்கிட்டாராம் கந்தன். அதத்தான் அப்டி சொல்லிக் காட்றாரு.. சுரலோக சிகாமணியேன்னு! சிகைன்னா தலைமயிரு. மணின்னா மகுடம்.

அடுத்தப்புல, 'நாலு கவி தியாகா'ன்றாரு.

நாலு கவின்னா இன்னான்னு ஒனக்கே தெரியும். எங்க சொல்லு?' என்றான்.

ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தார கவி. இதைப் பற்றி முன்பே ஒரு திருப்புகழில் விவரமா எழுதியிருக்கேன்' எனப் பதில் சொன்னேன்.

'அதேதான்! அல்லாராலியும் இந்த நாலையுமே பாடறதுன்றது கொஞ்சம் கஸ்டமான சமாச்சாரம். ஒண்ணு இருந்தா, ஒண்ணு நல்லா வராது. ஆனாக்காண்டிக்கு, அருணகிரியாருக்கு இதெல்லாம் கைவந்த கலையா வந்திச்சு. இப்பிடி நாலு விதமாப் பாடறதுக்கெல்லாம் காரணம் நம்ம முருகந்தான்! அவந்தானே தமிள்[ழ்]க் கடவுளு. அப்பிடி கொடுக்கற வள்ளலேன்னு சொல்றாரு. இப்பிடி ஆருக்கு எது வேணும்னு பாத்துப் பாத்துக் குடுக்கறமாரி இவுருக்கும் குடுத்துட்டாராம். அதுனால, நீ பெரிய வள்ளலுப்பா'ன்னு கூத்தாடுறாரு.

கடைசியா நாகாசலனேன்னு ஒரு வார்த்தை!

இந்த நாகாசலம்ன்றது எந்த எடம்?
திருப்பதின்னு சிலபேரு சொல்லுவாங்க. திருச்செங்கோடுன்னு சிலபேருங்க சொல்லுவாங்க!
ரெண்டுத்துக்குமே இந்தப் பேரு க்கீது.
திருப்பதியுல க்கீற ஏளு[ழு] மலையுல ஒரு மலைக்கு சேஷாசலம்னு பேரு.
திருச்செங்கோட்டுல ஆதிசேஷனே வந்து தன்னோட சாபம் தீர்றதுக்காவ பூசை பண்ணினான் முருகனைன்னும் சொல்லுவாங்க.
இந்த திருச்செங்கோட்டு முருகனைப் பத்தி ரொம்பப் பாட்டு பாடிக் கீறாரு அருணையாரு.
அதுனால, இத்த அந்த ஊரு முருகனைப் பத்திச் சொல்ற பாட்டாவே வைச்சுக்கலாம்!

வெஷம் இருக்கற ஆதிசேஷனையே காப்பாத்தி அருள் செஞ்சமாரி, என்னியும் காப்பாத்தினியேன்னு, அத்த மொதல்ல வைச்சு, வேலெடுத்து சூரனைப் பொளந்தியேன்னு சொல்லி, கேட்டவங்களுக்குக் கேட்டதெல்லாம் கொடுக்கற வள்ளல்ப்பா நீன்னு பெருமையாப் பாடி, சாவா வரத்த எனக்கும் கொடுத்த தேவலோக ராசாவேன்னு கொண்டாடறாரு இந்தக் கடைசி ரெண்டு வரியுல!' எனப் பேசிவிட்டு, அருகிலிருந்த நீரை எடுத்து மடமடவெனக் குடித்தான் மயிலை மன்னார்!

சாஸ்திரிகள் கண்ணிலிருந்து 'கரகர'வெனக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
அடுத்தவாரம் புதங்கிளமை பாக்கலாம்' எனச் சொல்லியபடியே, அங்கு வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி, அதில் ஏறிப் பறந்தான் மன்னார்.
சொல்லமுடியாத சந்தோஷத்துடன் நானும் நாயரும் சாஸ்திரிகளிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினோம்!

****************
அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Monday, March 21, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 11

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 11
"கந்தரநுபூதி" -- 11
10.

'மனசைப் பார்த்து இம்மாம் விசயம் சொன்னவரு, இப்ப அதுக்கு கொஞ்சம் தெகிரியம் குடுக்கலாமின்னு பாக்கறாரு. அத்த வுடு, இத்த வுடுன்னு வரிசியா சொல்லிக்கினே வந்தா அந்த பாளாப்போன மனசு பயந்துருமோன்னு நெனைச்சவரு 'நீ ஒண்ணும் கவலைப்படாதே'ன்னு தெம்பு குடுக்கறாரு' என்று ஆரம்பித்தான் மயிலை மன்னார்.

நாங்கள் சாஸ்திரிகள் வீட்டுத் திண்ணையில் கூடியிருந்தோம். இன்று புதன் கிழமை! இன்னைக்கு ஒண்ணும் வேலையில்லை! வாப்பா' எனச் சொன்னதால், நாயரையும் கூட்டிக்கொண்டு சென்றேன்.
அப்படி என்ன சொல்லியிருக்கார் அருணகிரியார் என பாட்டை உரக்கப் படித்தேன்.

கார்மா மிசைகா லன்வரிற் கலபத்
தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய்
தார்மார் பவலா ரிதலா ரியெனுஞ்
சூர்மா மடியத் தொடுவே லவனே.

கார் மாமிசை காலன் வரின் கலபத்து
ஏர் மாமிசை வந்து எதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே.

'எமன் வரும்போது, மயில் மேல வாப்பா'ன்னு சொல்றவரைக்கும் புரியுது. அதுக்கப்புறமா, என்னமோ வலாரி, தலாரின்னுல்லாம் ஏதோ சொல்றாரே...அதான் புரியலை மன்னார்' என்றேன் நான்.

'அப்ப, அந்த மொத ரெண்டு வரியும் புரிஞ்சிருச்சுன்ற!' எனக் குறும்பாகச் சிரித்தான் மன்னார்.

'ஞானும் அதே சோதிச்சு!' என என்னைப் பார்த்தான் நாயர்.

'நீ சொன்ன அர்த்தம் கரீட்டுத்தான்பா. ஆனா, அதுக்குள்ள ஒரு சின்ன சமாச்சாரம் க்கீது. அத்தச் சொல்றேன் கேட்டுக்கோ'


"கார் மாமிசை காலன் வரின் கலபத்து ஏர் மாமிசை வந்து எதிரப் படுவாய்"

கார் மான்னா, கறுப்பா பெருசா க்கீற மாடு.... எருமை மாடு.. காலன்னா எமராசா. கால்னா காத்து. காத்துமாரி வேகமா வந்து உசிரை பிடுங்கிகிட்டு போயிருவான். அதான் காலன்னு பேரு. ஆனாக்காண்டிக்கு, அந்தாளு வர்றதோ மெதுவாப் போற எருமை மாட்டும் மேல.

பொதுவாவே முருகனடியாருன்னா, எமன் வர்றதுக்கே பயப்படுவான். ஒருவேளை அப்பிடியே வந்தாலும், நீ ஒடனே பெருசா, அளகா, தோகையை விரிச்சுக்கினு க்கீற மயில்மேல ஏறி வெரசலா வந்து என்னைக் காப்பாத்துப்பா, முருகா'ன்னு கேட்டுக்கறாரு.

கலபம்னா தோகை. கலாபம்ன்றத அப்பிடிச் செல்லமா சொல்றாரு. ஏருன்னா, அளகு. மயிலு தோகையை விரிச்சா அளகாத்தானே இருக்கும்?

மெதுவா எருமைமாட்டு மேல எமன் வர்றதுக்குள்ள, வேகமா மயில்மேல நீ வந்திருன்னு சொல்லி, மனசுக்கு ஒரு தெம்பைக் குடுக்கறாரு.

சரி, இதுக்கும் அடுத்தாப்புல வர்ற ரெண்டு வரிக்கும் என்னா சம்பந்தன்றதுதானே ஒன்னோட கேள்வி?

இதுல இன்னா சொல்லியிருக்காருன்னு மொதல்ல பாப்பம்.

"தார்மார்ப வலாரி தலாரி எனும் சூர்மா மடியத் தொடு வேலவனே."

'தார் மார்ப'ன்னு மொதல்ல சொல்றாரு! நல்ல வாசனையான கடம்பமலரால ஆன மாலையைப் போட்டுக்கீனு க்கீறவனேன்னு!இத்த எதுக்காவ சொல்றாருன்னா, முருகனோட வேலு வர்றதுக்குள்ள, அவனோட மயிலு பறந்து வேகமா வர்றதுக்குள்ள, இந்த மாலையோட வாசனை வந்து சொல்லிரும், கவலைப்படாதே! முருகன் வந்துக்கினு க்கீறான்னு! "ஆனை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே"ன்றமாரி, முருகனுக்கு முன்னாடியே, இந்த பூவாசம் வந்து ஒரு தெகிரியம் குடுத்துரும்னு தெம்பா சொல்றாரு!
இப்ப இந்த வலாரி ஆருன்னு சொல்றேன் கேளு. வலன், வலன்னு ஒரு ராட்சசன் இருந்தான். அவனுக்கும் இந்திரனுக்கும் பகை. அரின்னா எதிரின்னு அர்த்தம். தங்கிட்ட இருந்த வஜ்ஜிராயுதத்தால அந்த அசுரனை இந்திரன் கெலிச்சுட்டான். அதுனால, இந்திரனுக்கு வலாரின்னு ஒரு பேரு.

அடுத்துது 'தலாரி'! தலம்னா இன்னான்னு ஒனக்கே தெரியும். இருக்கற எடத்துக்கு தலம்னு சொல்லுவாங்க. இங்கியும், அதே 'அரி'தான். வலாரி தலாரின்னா, இந்திரன் இருந்த எடத்தையே அழிச்ச எதிரின்னு பொருளு. ஆரு அப்பிடிப் பண்ணினாங்க. அவந்தான் சூர்மா. மான்னா ரொம்பப் பெருசுன்னு அர்த்தம். சூரன் எப்போ பெருசா நின்னான்? சமாதானமாப் போப்பான்னு சொல்ல வந்த முருகனை எதிரியாப் பாத்து, அவனோட சரமாரியாச் சண்டை போட்டு, சமாளிக்க முடியாமப் போயி, கடல்ல போயி ஒளிஞ்சுகிட்டான். வேலை விட்டெறிஞ்சாரு கந்தன். கடலே வத்திப் பூடுச்சு. இன்னாடா பண்றதுன்னு நேரா தேவலோகத்துல போயி ஒளிஞ்சுக்கறான். அவனுக்கு முன்னாடியே மயிலு அங்க நிக்குது! நல்லாக் கெவனி! மயிலு.... இவன் வேகத்துக்கும் முந்தியே அங்க போயிருச்சு! அவ்ளோ ஷ்பீடு அதுக்கு. அதுக்குத்தான் எமன் எருமையுல வர்றப்ப, மயில்மேல வந்து காப்பாத்திருவான் நம்ம முருகன்னு தெகிரியம் குடுக்கறாரு மனசுக்கு!

ம்ம்ம்... இப்ப மிச்சக் கதையும் கேளு. இன்னா பண்றதுன்னு புரியாம சூரன் ஒரு பெரிய்ய்ய்ய மாமரமா நின்னுடறான். பார்த்தாரு முருகன். இது இனிமே வேலைக்காவுதுன்னு, தன்னோட கையுல க்கீற வேலை எடுத்து வுடறாரு. மாமரம் ரெண்டாப் பொளந்து, சேவலும், மயிலுமா மாறிட்டான்னு கந்த புராணம் சொல்லுது. அதான் 'தொடு வேல் அவன்!' தொடுன்னா எறியுறது!

நாயர் ஏதோ சொல்ல வாயெடுத்தான். அவனைக் கையமர்த்தி, சும்மா இருக்கச் சொல்லிவிட்டு, மன்னார் தொடர்ந்தான்.

நீ இன்னா கேக்கப்போறேன்னு தெரியும்! அதான் ஏற்கெனவே மயிலு ஒண்ணு க்கீதே, அப்போ இந்த மயிலு இன்னா ஆச்சுன்னுதானே? சூரனோட ஒரு பாதி சக்தி, மயிலோட ஐக்கியமாயிருச்சுன்னு எடுத்துக்கணும்! மீதி சக்தி அவருக்கு கொடியா மாறிடுது.

எதுத்து நிக்கற சக்தில்லாம் வேலும், மயிலுமா முருகன் வந்தா ஒண்ணுமில்லாமப் போயிறும். அதுனால நீ எதுக்கும் கவலைப்படாதேன்னு தட்டிக் குடுக்கறாரு அருணகிரி.

இனிமே அடுத்தாப்புல வரப்போற மூணு பாட்டும் ஒரு செட்டு. அதை சனிக்கிளமையன்னிக்குப் பாக்கலாம். இன்னா அப்பிடிப் பாக்கறே. இனிமே அடிக்கடி நானு உங்களையெல்லாம் பாக்கப்போறேன்'எனச் சொல்லி மகிழ்வுடன் சிரித்தான் மயிலை மன்னார்.
****************
அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Tuesday, March 15, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 10

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 10

கந்தரநுபூதி - 10
9.
'இன்னைக்குப் பாக்கப்போற பாட்டு, நான் முந்தியே சொன்ன நாலு பாட்டுல கடைசிப் பாட்டு. இந்த மனசு இருக்கே... அது ரொம்ப ரொம்பப் பொல்லாதுது. அது பண்ற அளும்பாலத்தான் ஒரு வளியுல நெலைச்சு நின்னு, மனசொப்பிப் போவ முடியாம தடுக்குது. அதைத்தான் இந்த நாலு பாட்டுலியும் ஒண்ணொண்ணா சொல்லிக்கினே வராரு அருணகிரியாரு.

நீ எம்மனசு மேல ஒங்காலை வைச்சியானா அல்லா வெனையும் தீந்துரும்னு மொதப் பாட்டுல கொஞ்சலாக் கெஞ்சினாரு.
அடுத்த பாட்டுல, இன்னும் ஒரு படி மேல போயி, முருகனுக்கு ஆயிரம் வேலை இருக்கும். அதுனால அவன் வந்து காலை வைக்கறதுக்காவ 'வெயிட்' பண்ணாம, நீயே போயி அவனோட ரெண்டு காலையும் கெட்டியாப் புடிச்சுக்கோன்னாரு.
மூணாவது பாட்டுல, இந்த வம்புப் பேச்சையெல்லாம் வுட்டுட்டு, பேசாமக் கம்முன்னு கெடன்னு கந்தன் சொன்னதால, என்னோட ஊரு, என்னோட வூடு, என்னோட சொந்தக்காரங்கன்ற அல்லாமே அத்துப் பூட்டதாச் சொல்லி, அத்தச் சொன்னது ஆருன்னும் சொன்னாரு.
இப்ப இதுல, இன்னோரு விசயத்தப் பத்திச் சொல்றாரு. ம்ம்ம்... பாட்டைப் படி!' என்றான் மயிலை மன்னார்.
நான் படித்துக் காட்டியதும், அதைப் பதம் பிரித்துச் சொன்னான் மன்னார்.


மட்டூர் குழன்மங் கையர்மை யல்வலைப்
பட்டூ சல்படும் பரிசென் றொழிவேன்
தட்டூ டறவேல் சயிலத் தெறியும்
நிட்டூ ரநிரா குலநிர்ப் பயனே.


நான் படித்துக் காட்டியதும், அதைப் பதம் பிரித்துச் சொன்னான் மன்னார்.

மட்டூர் குழல் மங்கையர் மையல்வலைப்
பட்டூசல் படும் பரிசு என்று ஒழிவேன்
தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்
நிட்டூர நிராகுல நிர்ப்பயனே.


ஊரு, வூடு, சொந்தபந்தம்னு அல்லாத்தியும் வுட்டுட்டாக்கூட, இன்னும் ஒரே ஒரு ஆசை மட்டும் தீரலை அருணையாருக்கு! இந்த விசயத்துல அருணகிரியாரு ஒரு காலத்துல 'ஆசைகிரியாரா' இருந்தாரு. அதான் பொண்ணாசை!
'மட்டூர் குழல் மங்கையர் மையல்வலைப் பட்டூசல் படும் பரிசு என்று ஒழிவேன்'னு கதர்றாரு.

மட்டு ஊருதாம் குழல் மேல!
மட்டுன்னா இன்னா? தேன், வாசனைன்னு ரெண்டு விதமாவும் சொல்லலாம். ஆனா, தல நெறைய பூவை வைச்சுக்கினு, இருட்டற நேரத்துல ரோட்டாரமா நின்னுக்கினு, சொகம் குடுக்கறதுக்காவக் காத்துக்கினு நிப்பாங்களே, அவங்களைத்தான் சொல்றாரு இந்த வரியுல.
அவங்க வைச்சுக்கினு க்கீற பூவுலேர்ந்து தேனா வடியுதாம் . அதுனால, அவங்க தலைமயிர்லேர்ந்து அப்பிடி ஒரு வாசனை கெளம்பிக் கெறங்கடிக்குதாம். அந்த வாசனை இவரை இளு[ழு]க்க, இவுரும் அவங்க பின்னாடியே போயிடுறாராம். அவங்க விரிக்கற ஆசை வலையுல இவுரு மாட்டிக்கினு அல்லாடுறாராம். எப்பிடி? ஒரு படகு கணக்கா! இப்பிடியும், அப்பிடியுமா துடுப்பு இல்லாம தண்ணியுல தத்தளிக்கற ஒரு படகு மாரி, இவுரு மனசும் ஆடுதாம். பரிசுன்னா, படகுன்னு அர்த்தம். இந்த சங்கடத்த நான் என்னிக்கு ஒளி[ழி]க்கறதுன்னு அளுவுறாரு. அல்லாம் இந்தப் பாளும் மனசு பண்ற கூத்து! பொண்ணுங்களப் பத்தித் தப்பாச் சொல்லலை இந்தப் பாட்டுல அவுரு! ஒன்னியத்தான்... ஒம் மனசத்தான் குத்தம் சொல்றாரு. நல்லாப் புரிஞ்சுக்க!


அப்பத்தான், இவுருக்கு 'சட்'டுன்னு நெனைப்புக்கு வருது!
சூரனோட சண்டை போடப் போறப்ப, வளியுல ஒரு மாய மலை நின்னுக்கினு அல்லாரியும் உள்ளே இளுத்துக்கினு போச்சுன்னு சொன்னேன்ல! அப்ப முருகன் இன்னா பண்ணினாரு. தன்னோட வேலை எடுத்து வுட்டாரு. அது கரீட்டா எங்க எந்தெந்த இடத்துல ஓட்டைங்க இருக்குன்னு பார்த்து, அந்த மலையையே தூள் தூளாக்கிருச்சு.

'அட! இன்னா 'ஐஸாலக்கடி' வேலை பண்ணினேப்பா ! பொல்லாத பய நீ! ஒரு செகண்டுல கவலையையெல்லாம் போக்கடிச்சு, அல்லாரோட பயத்தியும் தீத்துக்கட்டின வீரன் நீ! ஒன்னால என்னோட இந்த சின்னூண்டு கவலையையா போக்கடிக்க முடியாது?'ன்னு 'நைஸு' பண்றாரு!

'சாமி! அந்தக் கடைசி வரியுல வர்ற சமஸ்கிருதத்துக்கு கொஞ்சம் வெளக்கம் குடுங்க!' என சாம்பு சாஸ்திரிகளைப் பார்த்துச் சொன்னான் மயிலை மன்னார்.


"தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும் நிட்டூர நிராகுல நிர்ப்பயனே."


'சைலம்னா மலை, கிரவுஞ்ச மலை. நிட்டூரன்னா பொல்லாத பயன்னு அர்த்தம். செல்லமாக் கொஞ்சறார் அருணகிரியார்! ஆகுலம்னா கவலை; நிராகுலன்னா கவலையே இல்லாதவன்னு அர்த்தம். நிர்ப்பயன்னா பயமே இல்லாம யுத்தம் பண்றவன்னு சொல்லுவா!'

வளைவும், நெளிவுமா இருக்கற அந்த மலைக்குள்ள நுழைஞ்சு, அதைச் சல்லடை சல்லடையாப் பொடிப்பொடியாக்கின வேலைக் கையிலேர்ந்து துளிக்கூட பயமில்லாம எறிஞ்சு நிர்மூலம் பண்ணினவனே, அப்பனே முருகா!ன்னு ஸ்தோத்ரம் பண்றார் என்றார் சாம்பு சாஸ்திரிகள்.

'இந்த நாலு பாட்டுலியும் சொன்னதக் கெட்டியாப் புடிச்சுக்கினியான்னா, இந்த மனசுன்ற ஒண்ணப் பத்திக் கவலியே படத் தாவல்ல! சரி, அடுத்த வாரம் பாப்பம். நான் வரேன் சாமி! ' எனச் சொல்லிவிட்டு அவசர அவசரமாகக் கிளம்பிச் சென்றான் மயிலை மன்னார்!
'எண்ட தெய்வமே! முருகா!' என கோபுரத்தைப் பார்த்து வணங்கினான் நாயர்.
*************
வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!
*******************

Read more...

Monday, March 07, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 9

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 9
"கந்தரநுபூதி" -- 9

சரியான நேரத்துக்கு சாஸ்திரிகள் வீட்டை அடைந்தேன்.
இந்தமுறை மறக்காமல், நாயரையும் பார்த்துவிட்டு, அவனையும் கூடவே அழைத்துவந்தேன்!

எனக்கு முன்னாலேயே மன்னார் வந்திருந்தான். சாஸ்திரிகளுடன் எதைப் பற்றியோ பேசிக்கொண்டிருந்தவன், எங்களைப் பார்த்ததும், அப்படியே அதை நிறுத்திவிட்டு, 'வாங்க, வாங்க! நேரத்தோட வண்ட்டாப்புல க்கீது!' என வரவேற்றான்!

'பின்ன நாங்க எந்து செய்யி? சேட்டன் இப்போழ் வாரம் ஒரு முறையாய்ட்டுத் தானே சம்சாரிக்கின்னு!' எனச் சிணுங்கினான் நாயர்!

'தோ பார்றா? நாயருக்குக் கோவம் வர்றத!' எனச் சிரித்த மன்னார், சட்டென்று சீரியஸாகி,
'சரி, அப்போ அடுத்த பாட்டைப் பாக்கலாமா? அதுக்கும் முன்னாடி நான் சொன்னது நெனைப்பிருக்கட்டும். மனசைப் பாத்து சொல்ற மூணாவுது பாட்டு இது!

மொதப் பாட்டுல, கல்லான எம்மனசு மேல ஒன்னோட காலை வையிப்பான்னு கெஞ்சினாரு. ரெண்டாவது பாட்டுல, வெனையாவே செஞ்சு செஞ்சு கெட்டுப்போன மனசுக்கு ஒரு வளி காமிச்சாரு. இன்னான்னு? ஒன்னுதுன்னு ஒண்ணுத்தியும் ஒங்கிட்ட வைச்சுக்காமக் கொடுத்திட்டு, கந்தனோட காலு ரெண்டையும் கெட்டியாப் புடிச்சுக்கினியான்னா, நீ படுற வெனையெல்லாம் சுட்டெரிஞ்சு சாம்பலாயிப் போயிரும்னாரு. இப்ப, இதுல இன்னா சொல்றார்னு பாப்பம்! அதுக்கும் முந்தி, பாட்டைப் படி' என்றான்.
நானும் படித்துக் காட்டினேன்.

அமரும் பதிகே ளகமா மெனுமிப்
பிமரங் கெடமெய்ப் பொருள்பே சியவா
குமரன் கிரிரா சகுமா ரிமகன்
சமரம் பொருதா னவநா சகனே

அமரும் பதி கேள் அகமாம் எனும் இப்
பிமரம் கெட மெய்ப் பொருள் பேசிய ஆ
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே

'ஒரு பெரிய சங்கதியை முருகன் இவுருக்கு சொன்னாருன்னு போன பாட்டுல சொன்னேன்ல. அத்தச் சொன்னது ஆருன்னு இந்தப் பாட்டுல சொல்லிக் கூத்தாடுறாரு அருணகிரிநாதரு.

'பேச்சையெல்லாம் வுட்டுட்டு 'கம்'முன்னு கெட'ன்னு சொன்னாராம்.
அந்த சத்திய வாக்கைக் கேட்டதுமே, ஒரு மூணுவிதமான மயக்கம் இவுருக்கு தீந்துபூட்டுதாம்!
இன்னான்னானு வரிசையா பட்டியலு போடுறாரு.

'அமரும் பதி'ன்னா இருக்கற ஊரு.
'கேள்'னா கேக்கறது இல்லை! சொந்தக்காரங்கன்னு அர்த்தம்! சொந்தமின்னா, அல்லாருந்தான்! பொண்டாட்டி, புள்ளை, மாமன், மச்சான்னு அல்லாரையுமேத்தான் சொல்றாரு.
இந்த 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'னு கோஷம் போடுவாங்களே ஆளாளுக்கு மேடையுல அது ரெண்டுந்தான் மேல சொன்ன ரெண்டும்!
அடுத்தாப்புல, 'டகால்டி'யா ஒரு வார்த்தை போடுறாரு!... 'அகம்'னு.
அகம்னா வூடுன்னும் அர்த்தம் வைச்சுக்கலாம், நானுன்ற இந்த அகங்காரத்தியும் சொல்லலாம்.

மேல சொன்ன மூணையும் ... என்னோட ஊரு, என்னோட சாதிசனம், என்னோட வூடுன்றதுல்லாமே மனசுக்குள்ள ஒரு கெர்வத்தைக் குடுத்து என்னிய ஆட்டுது! ஒரு மயக்கத்தைக் குடுக்குது.
அத்தத்தான் 'பிமரம்'னு சொல்றாரு.
மொறையாப் பாத்தா, பிரமம்னுதான் சொல்லியிருக்கணும்!
ஆனா, அதெல்லாம் ஒரு மயக்கத்தைக் குடுக்கறதால, அந்த வார்த்தையே கொஞ்சம் திரும்பிப்பூடுது!
பிரமம், பிமரம் ஆயிருது!
இதுமாரி 'டமாசு'ல்லாம் அடிக்கடி பண்ணுவாரு நம்ம அருணகிரிசாமி!

முருகன் சொன்ன 'மெய்ப்பொருளால'... சத்திய வாக்கால... இந்த மயக்கமில்லாம் தீந்திருச்சாம் இவுருக்கு!
இந்த அதிசியத்த இன்னான்னு நான் சொல்லுவேன்னு குதிக்கறாரு!
அதான் 'கெட மெய்ப்பொருள் பேசிய ஆ!'

இத்தச் சொன்னது ஆருன்னு இப்ப அடுத்த பட்டியலு போடுறாரு!

இதுலியும் ஒரு மூணு வருது!

சொன்னது குமரன், அது ஆருன்னா கிரிராச குமாரியோட மகன், அவன் இன்னா பண்ணினான்னா, சமரம் பொரு தானவ நாசகன்னு வரிசியா அடுக்கிக்கினே போறாரு!

மொதல்ல சொன்ன மூணுக்கும், இப்ப சொல்ற மூணுக்கும் எதுனாசும் சம்பந்தம் க்கீதான்னு பாத்தா,... ஆமா! க்கீதுன்னு புரியவரும்!

'குமரன்'னாலே மலையிருக்கற ஊருலல்லாம் ஒக்காந்துக்கினு கீறவன்னு அல்லாருக்கும் தெரியும்! அப்போ, குமரன்னதுமே ஏதோ ஒரு ஊரு ஒன்னோட நெனைப்புக்குத் தானா வந்திரும்!

மலைராசன் பொண்ணு பெத்த புள்ளைன்னு அடுத்த வார்த்தை! 'கிரிராசகுமாரி மகன்'னு! இதுல ஒரு சொந்த பந்தத்தையும், அவரோட சொந்த வூடு எதுன்னும் லேசா தொட்டுக் காமிக்கறாரு!

'தனு'ன்னு ஒரு ராட்சசி பெத்த புள்ளைங்களான ராட்சசங்கள்லாம் சண்டைக்கு வந்தாங்களாம்.இவுரை எதுத்து! தனு பெத்ததால தானவர்னு அவங்களுக்குப் பேரு! அவங்களையெல்லாம் ஒண்ணுமில்லாம நாசம் பண்ணினவர்னு மூணாவதா சொல்றாரு. ...'சமரம் பொரு தானவ நாசகன்'னு!
சாமியோடையே சண்டை போட வர்றான்னா, அவன் எவ்ளோ பெரிய மடையனா இருக்கணும்? புத்தி கெட்டுப் போனாத்தானே, ஒரு மயக்கம் வந்தாத்தானே, இதும்மாரில்லாம் செய்யத் தோணும்!

இப்ப ரெண்டியும் சேத்துப் பாத்தியானா, ஊரு, சொந்தம், வூடுன்ற மூணு வித மயக்கமும் மனசைப் போட்டுக் கொய[ழ]ப்பறப்ப, தன்னோட அடியாருங்களைக் காப்பாத்தறதுக்காவ, முருகன் சண்டை போட வந்திருவான்னு பூடகமா சொல்லிக் காட்றாரு நம்மாளு!

போன பாட்டுலியே சொன்னாமாரி, முருகன் சண்டை போட்டார்னா, ஆரும் அளிஞ்சுபோவ மாட்டாங்க! அதுக்குப் பதிலா, அந்தக் கொணங்களை மட்டும் தொரத்திட்டு, ஒனக்கு ஒரு உண்மையைக் காட்டுவாருன்னு இந்தப் பாட்டுல புரிஞ்சுக்கணும்!

இப்ப ஒரு சட்டை அளுக்காயிருச்சுன்னா, தூக்கியா கெடாசிடறோம்? அதுல க்கீற அளுக்கை மட்டும் சோப்பு போட்டுத் தொவைச்சு சுத்தம் பண்ணித் திரும்ப மாட்டிக்கறோம்ல?

அதும்மாரித்தான் இங்கியும்!
மயக்கந்தான் கெட்டுப் போவும்! நீ கெட மாட்டே! ஏன்னா, அப்பத்தானே ஒனக்கு அநுபூதின்னா இன்னான்னு புரியும்! இன்னா? சொல்றது வெளங்குதா?' என்றான்.

'ஏதோ கொஞ்சம் புரியுது மன்னார்! அப்பிடீன்னா, அடுத்த பாட்டுதான் இந்த வரிசையில் கடைசி பாட்டுல்லை? அது என்னன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கே!' என்றேன்.

சாஸ்திரிகளைப் பார்த்து என்னைக் காட்டி உதட்டைப் பிதுக்கினான் மயிலை மன்னார்!

'ம்ம்... என்னத்தைச் சொல்றது?' என்பதுபோல் என்னை ஒரு இரக்கத்துடன் பார்த்தார் சாஸ்திரிகள்.

நாயர் ஒன்றும் பேசாமல், மௌனமாக எழுந்து நடையைக் கட்டினான்!

'அடுத்த வாரம் பாப்பம்! நாங்க வரோம் சாமி!' என சாம்பு சாஸ்திரிகளிடம் சொல்லிக்கொண்டுவிட்டு, என் தோளின் மீது கையைப் போட்டவாறே நடக்கத் தொடங்கினான் மன்னார்.

மாலைநேர மயிலை மாடவீதி வழக்கம்போலக் களை கட்டியிருந்தது!
**********
[தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP