Thursday, April 12, 2007

"பத்திரமாய்ப் போய் வா என் கண்ணே!"




"பத்திரமாய்ப் போய் வா என் கண்ணே!"








காலை நேரமிது
கனவெல்லாம் நனவாக
களிப்புடனே கிளம்புகிறாய்
பத்திரமாய்ப் போய் வா என் கண்ணே!"

அன்னையவள் அன்புடனே
ஆசையாய் உணவெடுத்து
அன்புடனே அனுப்பி வைப்பேன்
பத்திரமாய்ப் போய் வா என் கண்ணே!"

வாகனங்கள் இங்குமங்கும்
வேகமாய்ப் போய் வரும்
வழிமீது விழி வைத்து நீ
பத்திரமாய்ப் போய் வா என் கண்ணே!"

அப்பா! நான் போயிட்டு வரேன்
என்று சொல்லி என் மகளே
அக்கறையாய் இறங்குகிறாய்
பத்திரமாய்ப் போய் வா என் கண்ணே!"

ஆ! இதென்ன! என்ன நிகழ்கிறது?
அப்பக்கம் இப்பக்கம் எதுவுமே பாராமல்
இப்படி ஓடுகிறாளே அலட்சியமாய் என் மகள்
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

ஐயோ! இதுவென்ன்ன சத்தம்!
காரொன்று "கிறீச்"சுகிறதே!
உனக்கேதும் ஆகவில்லையே?
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

ஏனிந்த மயான அமைதி?
என்ன நடந்து விட்டதிங்கு?
ஏன் எல்லாரும் எனைப் பார்க்கின்றனர்?
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

ஏதோ விபத்து நடந்திருக்கிறது!
ஏன் என் மகள் இன்னும் பஸ் ஏறவில்லை?
அவளுக்கு ஏதும்.........................
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

அரைபட்டுக் கிடக்கிறாள் அன்புமகள்
கைபிசைந்து நிற்கின்றார் காரோட்டி
கையில் தவழ்ந்த மகளைக் கையிலெடுத்து...:(
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

காலையில் கிளம்புகையில் நினைத்தேனா?
கனிமொழியைப் பறிகொடுப்பேனென்று
காதல் மனைவிக்கு என் சொல்வேன்?
பத்திரமாய் இருக்கிறாயா என் கண்ணே!"

அவசரமாய் அள்ளுகின்றேன்
அசைவில்லை அவள் உடலில்
அரற்றுகின்றேன் நானினிங்கு
பத்திரமாய் இருக்கிறாயா என் கண்ணே!"

அவசரப்பிரிவில் என் மகள்
அறுவைச் சிகிச்சை நடக்கிறது
உயிருக்கு உத்திரவாதமில்லை
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

கையைப் பிசைந்த வண்ணம்
காப்பாற்ற முடியவில்லையென
சொல்லியங்கே செல்கின்றார்... இனி என்ன?
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

போகும் வழியிலே பயமில்லை இனி
யாரும் உனைத் தொந்தரவு செய்ய மாட்டார்
வாகனங்கள் ஏதும் வேகமாக வாராது
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

செல்லுகின்ற வேளையிலும்
உயிரதனைப் பிரிந்தாலும்
இதயத்தைத் தானம் தந்தாய்
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

நீ எம்மைப் பிரிந்தாலும்
இனியின்றிப் போனாலும்
"உன்னிதயம்" வாழுமிங்கு
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

நினைவெல்லாம் நீயாக
உயிரெல்லாம் உனதாக
உனை எண்ணி வாழ்ந்திருப்போம்
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

[இந்தப் பதிவு எழுதும் இந்நேரத்தில், நேற்றைய தினம் பள்ளிக்குச் செல்லும் போது ஒரு கார் மோதி, மரணமடைந்த என் தமிழ்நண்பரின் 12 வயதுக் குழந்தை அனுஷாவின் இதயம் யாரோ ஒருவருக்குப் பொருத்தப்படுகிறது; அவளும் கடைவழி செல்கின்றாள் என்னும் செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொண்டு, அந்தக் குழந்தைக்காகவும், அவர் குடும்பத்தினர்க்காகவும் ஒரு நொடி பிரார்த்தியுங்கள் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்]





இதற்கு மேல் தொடர மனமில்லை.
இதைக் கேளுங்கள்!




"நாம் எவ்வளவு நல்லவர் என்பது இல்லை; எவ்வளவு நல்லது செய்தோமென்பதே" --அனுஷா வாஸுதேவா

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP