நாயும் நானும்!
நண்பர் பச்சோந்தி ஒரு அழகான கவிதையைப் பதிவிட்டிருந்தார்!
அதனைப் படித்துக்கொண்டு வரும் போதே எனக்குள் எழுந்த மாற்றுக் கவிதையை அவருக்கு அனுப்பினேன்!
இப்போது உங்கள் பார்வைக்கும்!
முதலில் அவரது மூலக் கவிதை!
பின்னால் வருவது என் எண்ணம்!
நான்கு தெருக்கள் மட்டும் அறிந்த நாய்!!
அறியாமையின் பயத்தால் விளைந்த
அடிமை எண்ணத்தில்
கதவைச் சுரண்டி கவனம் திருப்பும்
சுதந்திரம் என்பதன் பொருள் அறிந்த
என் வீட்டு நாய்
கவனம் கலைந்த நான் வியப்புடன்
பயத்தின் பொருள் யாது என்றேன்
பயத்தின் பொருள் அடுத்தவரை
அச்சுறுத்துவதில் உண்டு என்றது அந்நாய்.
அச்சுறுத்தும் செயலின் ருசி
ஒரு முறை சுவைத்தால்
தெரியும் அதன் தீராத எல்லை.
நாயாகப் பிறந்தால் தான் தெரியும்
பயம் என்பதன் பொருளும்
அச்சுறுத்தலின் ருசியும்.
சிந்தனை வயப்பட்டு நான் திகைப்புடன்
சுதந்திரத்தின் பொருள் யாது என்றேன்
சுதந்திரத்தின் பொருள் அடுத்தவருக்கு
அடிமைப்படுவதில் உண்டு என்றது நாய்
அடிமைத்தனத்தின் சுகம்
ஒரு முறை சுவைத்தால்
தெரியும் அதன் தீராத எல்லை.
நாயாகப் பிறந்தால் தான் தெரியும்
அடிமைத்தனத்தின் சுகமும்
சுதந்திரத்தின் வலியும்
இது கொடுமை என்று
நான் கூக்குரலிட்டேன்
இது நல்லொழுக்கம்
என ஊளையிட்டது நாய்
சோர்ந்து போய் நான்
எனக்குள் சொல்லிக் கொண்டேன்
பரிதாபம்..!
இந்தக் கொடுமையைச்
சொல்லிக் கொடுத்தது யார்?
அவமதிப்பும், புறக்கணிப்பும்
நிறைவென உணர வைத்தது யார்?
சிரிப்புடன் நாய் சொன்னது
நீ பேசுவது உனக்குச் சொல்லிக் கொடுத்தது.
நான் பேசுவது என் ஆன்மா அறிந்தது.
ஆனால் நீயும் நானும் வேறல்ல.
posted by Chameleon - பச்சோந்தி @ 10:57 PM
At 12:12 AM, SK said…
நாயும் நானும்!
மரியாதையின் காரணம் விளைந்த
அன்பு எண்ணத்தால்
கதவைச் சுரண்டி கவனம் திருப்பும்
சுதந்திரம் என்பதன் பொருள் அறிந்த
என் வீட்டு நாய்.
கவனம் கலைந்த வியப்புடன்
மரியாதையின் பொருள் யாது என்றேன்.
மரியாதையின் பொருள் அடுத்தவரை
அன்புசெய்தலில் உண்டு என்றது என் நாய்.
அன்பு செய்தலின் ருசி
ஒரு முறை சுவைத்தால்
தெரியும் அதன் தீராத எல்லை.
நாயாகப் பிறந்தால்தான் தெரியும்
மரியாதை என்பதன் பொருளும்
அன்பு செய்தலின் ருசியும்.
சிந்தனை வயப்பட்டு நான் மகிழ்வுடன்
சுதந்திரத்தின் பொருள் யாது என்றேன்
சுதந்திரத்தின் பொருள் அடுத்தவருக்கு
நன்றியறிதலில் உண்டு என்றது என் நாய்.
நன்றியறிதலின் சுகம்
ஒருமுறை சுவைத்தால்
தெரியும் அதன் தீராத எல்லை
நாயாகப் பிறந்தால்தான் தெரியும்
நன்றியறிதலின் சுகமும்
சுதந்திரத்தின் சுவையும்.
இது அருமை என்று
நான் கூக்குரலிட்டேன்
இதுவே என் பெருமை
எனக் குரைத்தது என் நாய்.
வியந்து போய் நான்
எனக்குள் சொல்லிக் கொண்டேன்
அற்புதம்!
இந்த உண்மையை இதற்குச்
சொல்லிக் கொடுத்தது யார்?
அன்பும், நன்றியும்
சிறந்த பண்பென
மனிதன் உணராமல் போனது ஏன்?
பரிவுடன் நாய் சொன்னது
உன் இயல்பை மறந்து
உள்தேடுதலை விட்டு
ஊதாரியாய் சுற்றுவதால்
உணர முடியாமல் போயிற்று
உனக்கு.
"அன்பு செய்!
நன்றியுடன் இரு!
உனக்கும் புரியும்!"