Saturday, October 27, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 25

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 25

முந்தைய பதிவு இங்கே!


[படம் அனுப்பி உதவிய கோவி.கண்ணனுக்கு நன்றி!]

23.
"அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர். " [1160]

முன்னிருட்டிலேயே எழுந்து கிளம்பி விட்டான் ராபர்ட்.

'கந்தனை நம்பிப் பயனில்லை! அவனுக்கு எனக்கிருக்கும் ஆர்வம் இல்லை. அவன் கவனமெல்லாம் ஏதோ ஒரு புதையலைப் பற்றியே!
இப்போ வேற இவன் அந்தப் பொன்னியைப் பார்க்கிற பார்வையே சரியாயில்லை! ஏதோ லவ் மாதிரி தெரியுது. ஒரு காரியம் பண்றப்ப,
நடுவுல இந்தக் காதலுக்கெல்லாம் இடம் கொடுத்தா எடுத்த காரியத்தை முடிக்க முடியாமப் போயிரும்.
நாம நம்ம வேலையைப் பாக்கணும்'

என முடிவு செய்த ராபர்ட், விடிவதற்கு முன்னரே எழுந்து, பொன்னி சொன்ன வழியில் வேகமாக நடை போட்டான்.

2, 3 மணி நேர நடைக்குப் பின்னர், தான் எங்கோ ஒரு நடுக்காட்டில் போகுமிடம் இன்னதெனத் தெரியாது மாட்டிக் கொண்டதை உணர்ந்தான்!

'தனியாக வந்தது தப்பு. பொன்னி, கந்தனோட வந்திருக்கலாம். இப்போ இந்த நடுக்காட்டுல வந்து சிக்கிக்கிட்டோமே'எனக் கொஞ்சம் அஞ்சினான்.

'என்ன தம்பி! எங்கே போறீங்க?' என்ற குரல் கேட்டு தூக்கிவாரிப் போட்டது போல் திரும்பினான்.

நீண்ட வெண்ணிறத் தாடியுடன், அமைதி தவழும் முகத்துடன், ஒரு பெரியவர் ஒரு மரத்தடியில் அமர்ந்தபடி இவனைப் பார்த்தார்.

'இரும்பைப் பொன்னாக்கும் சித்தரைப் பார்ப்பதற்காக வந்தேன். வழி தவறிட்டேன்னு நினைக்கிறேன். கொஞ்சம் தயவு பண்ணி, முத்துமலைக்கு போற வழியைச் சொன்னீங்கன்னா நான் திரும்பி கிளம்பின இடத்துக்குப் போயிருவேன்'என்றான் ராபர்ட்.

'ஓ! அங்கேருந்துதான் வர்றீங்களா? சரி! அதிருக்கட்டும். உங்களுக்கு எதுக்கு தங்கத்து மேல ஆசை? எப்படி வந்தது?' என்றார் பெரியவர்.

உற்சாகமானான் ராபர்ட்!

தனக்கு இவர் உதவுவார் என ஒரு நம்பிக்கை பிறந்தது.

'நான் ரொம்ப நாளா இதைப் பத்தி புஸ்தகம்லாம் படிச்சு வரேன். அதுல இதைப் பத்தி விரிவா சொல்லியிருக்கு. இதை விளக்கமா சொல்லக்கூடிய
ஒரு சித்தரைத் தேடிகிட்டு இருக்கேன். அதான் இங்கே வந்திருக்கேன்'

'இதுவரைக்கும் எதையாவது தங்கமா இல்லை வெள்ளியாகவாவது மாற்றி இருக்கிறாயா?' சிரித்துக் கொண்டே கேட்டார் பெரியவர்.

அவர் ஒருமையில் அழைக்க ஆரம்பித்ததைக் கவனித்த ராபர்ட், சட்டென உஷாராகி,

'இல்லீங்க! என்ன பண்ணனும்னு முறையெல்லாம் படிச்சிருக்கேன். இன்னும் முயற்சி பண்ணலை!' என்றான்.

'முயற்சியே செய்யாம தங்கம் பார்க்க ஆசைப் படறே! ம்ம்! முதல்ல போயி, நீ படிச்சது சரியான்னு பாரு. அதுல சொன்னதை செஞ்சு பாரு!
அப்பறமும் வரலைன்னா, இங்கியே வா! முயற்சியே செய்யாம பெருசா ஆசைப்படறவன் எப்பவுமே எதையுமே அடைஞ்சதில்லை'
என்றார்.

"ஐயா! நீங்கதான் நான் தேடிக்கிட்டு இருக்கற சித்தரா?' என அவர் காலில் விழுந்தான் ராபர்ட்.

'அதைப் பத்தி பிறகு பார்க்கலாம். இப்ப நீ போய் படிச்சதை செய்யத் தொடங்கு. உனக்கு நல்லது நடக்கட்டும்' என ஆசீர்வதித்தார்.

'இதோ இந்த வழியா நேரே போனால் ஒரு ஓடை வரும். அங்கே வலது பக்கம் திரும்பி சிறிது தூரம் சென்றால், ஒரு வெள்ளைப்பாறை தெரியும்.
அங்கிருந்து பார்த்தால் நீ முத்துமலைக்குச் செல்ல வேண்டிய பாதை தெரியும்' எனச் சொல்லி அவனுக்கு விடை கொடுத்தார்.

மீண்டும் அவரை வணங்கிவிட்டு, ராபர்ட் ஓடையை நோக்கி நடக்கலானான்.
********** ******

கந்தன் குழப்பத்துடன் எழுந்து வெளியே வந்தான்.

ராபர்ட் தன் வழியே சென்றுவிட்டான் எனப் புரிந்தது.

ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு சிலர் சேர்ந்தாலும், அவரவர் வழி எனத் தெரியும் போது பிரிந்து செல்லத் தயங்க மாட்டார்கள் எனப் புரிந்தது.

அப்படிச் செல்லாதவர்கள் என்றுமே தங்கள் லட்சியத்தை அடையவும் மாட்டார்கள் எனவும் சிந்தித்தான்.

ராபர்ட் செய்தது சரிதான் எனப் பட்டது. இனி நம்ம வழியை நாமதான் பார்த்துக்கணும் என எண்ணினான். சிரிப்பு வந்தது! சிரித்துக் கொண்டே தலை நிமிர்ந்தான்.

பொன்னி எதிரில் வந்து கொண்டிருந்தாள், கையில் ஒரு மண் குடத்தில் நீரேந்தியபடி.

மனதில் ஒரு இனம் தெரியாத ஆனந்தம் பிறந்தது கந்தனுக்கு.

'இவ்ளோ சீக்கிரமாவே எளுந்திருவியா?'எனச் சம்பந்தமில்லாமல் கேட்டு, அவளை நிறுத்தினான்.

'ஐய்யே! எளுந்திருக்காமத்தான் தண்ணி கொண்டு வருவாங்களாக்கும்!' எனச் சிரித்தாள் பொன்னி.

அவள் நக்கலடிக்கிறாள் என நினைத்தாலும் கோபம் வரவேயில்லை கந்தனுக்கு.

ஏதோ ஒன்று மனதில் உந்த, அவளைப் பார்த்து துணிச்சலோடு,

'உன்கிட்ட ஒண்ணு சொல்லணும். நான் உன்னை விரும்பறேன். உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்!'

பொன்னியின் கையில் இருந்த மண்குடம் கீழே விழுந்து உடைந்தது! நீர் சிதறியது! கந்தன் மேல் தெறித்தது.

தண்ணீர் தன்மேலே பட்டுச் சிதறியதை ஒரு நல்ல சகுனமென நினைத்தான் கந்தன்.

"ஒரு புதையலைத் தேடி நான் ஊரை விட்டுக் கிளம்பினேன். நடுவுல என்னென்னல்லாமோ ஆயிப்போச்சு.இப்போ கீழே நடக்கற கலவரத்தால
இங்கே வந்து மாட்டிகிட்டேன். எதுக்குடா இப்படி ஆச்சுன்னு நினைச்சேன். இப்பத்தான் புரியுது, அது ஒரு பெரிய ஆசீர்வாதம்னு. ஏன்னா,
அதனாலதானே உன்னை நான் பார்க்க முடிஞ்சுது!'

'கலவரம்லாம் சீக்கிரமே முடிஞ்சிரும். நீங்களும் எதுக்காக வந்தீங்களோ, அதைப் பார்க்கப் போயிறலாம்' என்றாள் பொன்னி.

'எங்க மலை ஆளுங்கள்லாம் எப்பவுமே எதுனாச்சையும் தேடிகிட்டுத்தான் இருப்பாங்க. எங்களைப் போல பொண்ணுங்களுக்கெல்லாம்,
அதுல ரொம்பவே பெருமை' என்றபடியே தன் வீடு நோக்கி செல்லத் துவங்கினாள்.

'கொஞ்சம் நில்லு. உங்கிட்ட ஒண்ணு சொல்லணும். என் கதையைக் கேளு. அதுக்கப்புறம் நீ உன் முடிவைச் சொல்லிட்டுப் போகலாம்!' என்றபடி அவளை மறித்தான்.

தன் கனவில் தொடங்கி, குறிசொன்ன கிழவி, தங்கமாலை அணிந்த கிழவர் சொன்னது, ஆடுகளை விற்றுவிட்டு மதுரைக்கு வந்தது,
பணத்தைத் தொலைத்தது, அண்ணாச்சியின் தொடர்பு, பின்னர் அவரோடு சேர்ந்து ஓட்டலைப் பெருசா வளர்த்தது, பின்னர்,
திடீரென ஒருநாள் அங்கிருந்து கிளம்பியது, பஸ்ஸில் ராபர்ட்டைப் பார்த்தது, ஒரு கலவரத்தின் காரணம் பஸ் நிற்க, அதனால், ராபர்ட்டோடு
இங்கு வந்து சேர்ந்தது
வரை எல்லாவற்றையும் விரிவாகச் சொன்னான்.

பொறுமையாக அத்தனையையும் கேட்ட பொன்னி அவனை அன்புடன் பார்த்தாள்.

'உன்னைப் பார்த்த அன்னிக்கே எனக்குள்ளே என்னமோ பட்டுச்சு. இவன் தான் உனக்குன்னு வந்தவன்ற மாரி ஒரு உணர்வு. அதான் நீ சொல்ற
அந்த உலக ஆத்மாவோட குரலோ என்னமோ, எனக்குத் தெரியலை. ஆனா, உன்னோட எனக்கு ஒரு பந்தம் இருக்குன்னு மட்டும் எனக்குப்
புரியுது.ஒருவேளை இந்தமாரி ஒருத்தனுக்காவத்தான் நான் காத்திருந்தேனோ, தெரியலை. நாங்கள்லாம் மலைஜாதிப் பொண்ணுங்க.
எங்களுக்கு சாதி கட்டுப்பாடு இதுல்லாம் கிடையாது. வழக்கமா எங்க ஆளுங்கள்ல ஒருத்தரைத்தான் நாங்க கல்யாணம் பண்ணிப்போம்.
ஆனா, அதுக்காவ, வேற ஆளுங்களைக் கட்டிக்கக்கூடாதுன்னுல்லாம் ஒண்ணும் கிடையாது.நெறையப் பேரு அப்பிடி வேத்தாளைக் கட்டிகிட்டு போயிருக்காங்க. எனக்கு மட்டும் இந்த மலை சாமி என்னமோ ஒரு நல்ல வழியைக் காட்டும்னு ஏதோ ஒண்ணு சொல்லிகிட்டே இருந்திச்சு. அது நீதான்னு நான் இப்போ திடமா நம்பறேன்.'

கந்தன் மகிழ்ச்சியுடன் அவள் கையைப் பற்ற முயன்றான்.

பொன்னி தன் கைகளை பின்னுக்குக் கட்டிக்கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

'நீ இப்ப உன் லட்சியத்தைத் தெளிவாச் சொல்லிட்டே! சகுனத்து மேல உனக்கு இருக்கற நம்பிக்கையையும் சொன்னே. இப்ப எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை. பயமும் இல்லை. அந்த சகுனந்தான் உன்னை என்கிட்ட கொண்டுவந்திருக்கு.நானே உனக்குன்னு ஆனதுக்கப்புறம், எனக்கு என்ன தோணுதுன்னா, நானும் உன்னோட கனவுல ஒரு ஆளு, நீ சொல்ற அந்த விதியில ஒரு சின்ன பகுதின்னு! அதனால, நான் இப்ப சொல்லப்போறது என்னன்னா, கவனமாக் கேளு!... நீ எதுக்காக இங்கே வந்தியோ, அதைத் தொடர்ந்து போ!எத்தனை நாளு ஆனாலும் சரி,..... அதை விடாதே! இங்க இருக்கற மரங்கள் வேணும்னா இல்லாமப் போயிறலாம். ஆனா, காடு இருக்கும். அதே மாரித்தான் நாம ரெண்டு
பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் வெச்சிருக்கற அன்பும். எல்லாம் விதிப்படி நடக்கும். நான் உன்னோட விதியில ஒரு பங்குன்னா, நீ ஒரு நாளைக்கு என்கிட்ட நிச்சயமாத் திரும்பி வருவே!அதுவரைக்கும் நான் காத்திருப்பேன் உனக்காக!'

பரவசத்துடன், அவள் கையைப் பற்ற மீண்டும் முயற்சித்தான் கந்தன்.

தன் கைகளை இறுக்கமாகக் கட்டியபடி, பொன்னி தன் வீடு நோக்கி, திரும்பிப் பாராமல் நடந்தாள் பொன்னி!

[தொடரும்]
********************************************

அடுத்த அத்தியாயம்

27 பின்னூட்டங்கள்:

Anonymous,  Monday, October 29, 2007 9:15:00 PM  

முதல்ல அட்டெண்டன்ஸ்!

நாமக்கல் சிபி Monday, October 29, 2007 9:20:00 PM  

//எங்களுக்கு சாதி கட்டுப்பாடு இதுல்லாம் கிடையாது. வழக்கமா எங்க ஆளுங்கள்ல ஒருத்தரைத்தான் நாங்க கல்யாணம் பண்ணிப்போம்.
ஆனா, அதுக்காவ, வேற ஆளுங்களைக் கட்டிக்கக்கூடாதுன்னுல்லாம் ஒண்ணும் கிடையாது.நெறையப் பேரு அப்பிடி வேத்தாளைக் கட்டிகிட்டு போயிருக்காங்க.//

நல்ல வேளை! கந்தனோட காதல் ஒரு பிரச்சினையும் இல்லாம சுமுகமா சால்வ் ஆயிடுச்சே!

நாமக்கல் சிபி Monday, October 29, 2007 9:21:00 PM  

ஆஹா! ராபர்ட்டுக்கும் ஒரு வழி கிடைச்சிடுச்சு!

இனி அவர் வழி தனி வழிதான்!

பாவம்! புத்தகத்தைப் படிச்சி செஞ்சி செஞ்சி பார்க்கப் போறான்!

எல்லாம் மாயைன்னு கடைசிலதான் புரியப் போகுது!

துளசி கோபால் Monday, October 29, 2007 9:55:00 PM  

//பரவசத்துடன், அவள் கையைப் பற்ற மீண்டும் முயற்சித்தான் கந்தன்.

தன் கைகளை இறுக்கமாகக் கட்டியபடி, பொன்னி தன் வீடு நோக்கி, திரும்பிப் பாராமல் நடந்தாள் பொன்னி!//


ஆம்பளைக்கி எப்பவும் ஒரு அவசரம்.
நம்ம பொன்னி பாருங்க 'நிதானமா' இருக்காள்.

எல்லாம் விதிப்படி நடக்கும். நடக்கட்டும்.

"அன்றெழுதுன எழுத்தை ஆண்டவனே அழிச்செழுத மாட்டானாம்"
எங்க பாட்டியின் சொல் இது.

Anonymous,  Monday, October 29, 2007 10:33:00 PM  

ஆஹா! இன்னிக்கு முதல் ஆட்டையப் போட்டது நான்தானா?

எல்லாம் அவன் சித்தம்!
காலங்கார்த்தாலே முழிக்க வெச்சி படிக்க வெச்சிட்டான்!

இலவசக்கொத்தனார் Monday, October 29, 2007 10:34:00 PM  

நியாயம்தான். முதலில் செய்ய வேண்டியதைக் கவனிக்கச் சொல்லும் பொன்னியின் வார்த்தைகள் சரிதான். ஆனா அந்த தேடலில் இவளும் சேர்ந்து பங்கெடுத்துக்கிட்டத்தான் என்ன?

VSK Monday, October 29, 2007 11:10:00 PM  

ஆஹா! சூதாடிச் சித்தர் முதல் ஆளா[சித்தரா!:)] வந்திருக்கறது ஒரு நல்ல சகுனம்தான்!:))

வாங்க! வாங்க!

நாமக்கல் சிபி Monday, October 29, 2007 11:11:00 PM  

//அன்றெழுதுன எழுத்தை ஆண்டவனே அழிச்செழுத மாட்டானாம்"//

நல்ல விஷயங்கள் நிறைய கிடைக்குதே இங்கே?

அது சரி துளசி அக்கா!
நேத்து நாங்க எதிர்பார்த்த விளக்கம் இன்னும் நீங்க சொல்லலையே!

VSK Monday, October 29, 2007 11:11:00 PM  

என் இனிய அனானி நண்பருக்கு நன்றி! :))

Anonymous,  Monday, October 29, 2007 11:12:00 PM  

//சித்தரா//

சித்தர். சித்(த)ரா அல்ல!

அண்ணா மலை! அண்ணா மலை!

VSK Monday, October 29, 2007 11:13:00 PM  

//கந்தனோட காதல் ஒரு பிரச்சினையும் இல்லாம சுமுகமா சால்வ் ஆயிடுச்சே!//

அதான் முதல் சந்திப்புலியே ஒரு கெமிஸ்ட்ரி அவங்களுக்குள்ள வந்திருச்சே, சிபியாரே!! அதுக்கப்புறம் நாம தடையெல்லாம் போடலாமா! அதான் ஒரு சின்ன பிரிவு மட்டும்! ;))

VSK Monday, October 29, 2007 11:15:00 PM  

//ராபர்ட்டுக்கும் ஒரு வழி கிடைச்சிடுச்சு!//

ராபர்ட் ஆரம்பத்திலிருந்தே இதில் உறுதியாத்தானே இருந்திருக்கன். அதுக்கு அவனுக்கு ஒரு வழி சொல்லிட்டாரு சித்தர்!

அவன் வழியை அவன் பிடிச்சுகிட்டான்!

//எல்லாம் மாயைன்னு கடைசிலதான் புரியப் போகுது!//

என்னங்க சிபியாரே! இப்படி முடிவையெல்லாம் சொல்லிடறீங்களே!:))

VSK Monday, October 29, 2007 11:17:00 PM  

//ஆம்பளைக்கி எப்பவும் ஒரு அவசரம்.
நம்ம பொன்னி பாருங்க 'நிதானமா' இருக்காள்.//

அதுக்குள்ள "நம்ம" பொன்னி ஆயிட்டாளா டீச்சர்!

விதிப்படி நடக்கும் என்பது உண்மையான வார்த்தை.... என்னைப் பொறுத்தவரையில்!

VSK Monday, October 29, 2007 11:18:00 PM  

//ஆஹா! இன்னிக்கு முதல் ஆட்டையப் போட்டது நான்தானா?

எல்லாம் அவன் சித்தம்!//

தங்கள் சித்தம் எந்தன் பாக்கியம், சூதாடிச் சித்தரே!
:))

VSK Monday, October 29, 2007 11:23:00 PM  

/ஆனா அந்த தேடலில் இவளும் சேர்ந்து பங்கெடுத்துக்கிட்டத்தான் என்ன?//

அவ கடமை காத்திருத்தல், வழி நடத்தல், ஊக்கமளித்தல். அதன் அவளுக்குத் தெரிஞ்சது! அதைத்தான் அவ செய்யறா, கொத்ஸ்!! :)

கந்த அவனோட தேடலை அவன் தான் செய்யணும்!

VSK Monday, October 29, 2007 11:24:00 PM  

//நல்ல விஷயங்கள் நிறைய கிடைக்குதே இங்கே?//

அதென்னவோ உண்மைதாங்க!

எல்லாருமே ரொம்ப நல்ல விஷயங்களைப் பகிர்ந்துக்கறாங்க என்பது சந்தோஷமான விஷயமா இருக்கு!

VSK Monday, October 29, 2007 11:26:00 PM  

//சித்தர். சித்(த)ரா அல்ல!

அண்ணா மலை! அண்ணா மலை!//

சித்ரா பௌர்ணமி அன்னிக்கு அண்ணா மலையைச் சுத்தினா ரொம்பவே நல்ல பலன்லாம் வருமாமே சித்தரே! :))

துளசி கோபால் Tuesday, October 30, 2007 12:25:00 AM  

அந்த நேத்து விஷயமா?

எல்லாம் சொல்லக் கேட்டதுதான்.ஆராயப்படாது ஆம்மாம்........

மகரிஷிகள் தங்கள் மனைவியருடன் கூடினால் உண்டாகும் கர்ப்பம், அந்த நிமிஷமே முழுக்குழந்தையா பிறந்துருமாம்.
ஒரு நாள் (ராத்திரி) கூட தாய் வயித்தில் தங்காதாம்.
கர்ணன், இன்னும் பாண்டவர்கள் எல்லாம் பிறந்தது இப்படித்தானாம்.
உடனுக்குடன். ஸ்பீட் டெலிவரி:-))))
அதுவுமில்லாம, குழந்தை வேணுமுன்னு நினைக்கும்போது மட்டுமே கூடல்.

நோ டைம்பாஸ் :-)))

வல்லிசிம்ஹன் Tuesday, October 30, 2007 12:50:00 AM  

"ஒரு புதையலைத் தேடி நான் ஊரை விட்டுக் கிளம்பினேன். நடுவுல என்னென்னல்லாமோ ஆயிப்போச்சு//
இது நம் அனைவருக்குமே பொருந்தும் இல்லையா.

''இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே ''

பாடல் நினைவு வருகிறதே.
ஞானத்தையும் தங்கத்தையும் ஒன்றூ என்கிறாரா???!!!

வல்லிசிம்ஹன் Tuesday, October 30, 2007 12:54:00 AM  

ஃபண்டாஸ்டிக் துளசி. சூப்பர் விளக்கம். இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்:)))))))

நாகை சிவா Tuesday, October 30, 2007 4:19:00 AM  

ராபர்ட் க்கு வழி தெரிந்து விட்டது. இனி அவன் முயற்சி செய்து பார்த்து விட்டு தான் அடுத்து நகர முடியும். கந்தனுடம் சேர்ந்து விடுவானா.. அம்புட்டு தானா அவன் பாத்திரம்...

ஆக கந்தனுக்கு சித்தர் வித்தை கத்து கொடுக்க போறாரா?

VSK Tuesday, October 30, 2007 7:40:00 PM  

//அந்த நேத்து விஷயமா?//

நல்லா பாடம் எடுக்கறீங்க்க டீச்சர்!

VSK Tuesday, October 30, 2007 7:42:00 PM  

//ஞானத்தையும் தங்கத்தையும் ஒன்றூ என்கிறாரா???!!!

சரியாச் சொல்லியிருக்கீங்க வல்லியம்மா!

இந்த உலகத்தில் இரண்டு விதத் தேடல்தாங்க!

ஒண்னு ஞானம், இன்னொண்ணு தங்கம்!
:))

VSK Tuesday, October 30, 2007 7:44:00 PM  

//ஆக கந்தனுக்கு சித்தர் வித்தை கத்து கொடுக்க போறாரா?//

இனிமே அதைப்பத்திதானே கதை, நாகையாரே!

cheena (சீனா) Wednesday, October 31, 2007 11:09:00 PM  

// நோ டைம் பாஸ் //
துளசியின் விளக்கம் அருமை

ராபர்ட்டுக்கு சற்றே கதையிலிருந்து விலக ஒரு வழி - முயற்சியே செய்யாமல் முடிவை எதிர் பார்ப்பதூதவறு தான். முயற்சிகள் தவறலாம். முயல்வது தவறக் கூடாது.

கந்தன் பொன்னி காதல் கதை வளரும் என நினைத்தேன். கதாசிரியரோ கருமமே கண்ணாய்க் கந்தனை வழி நடத்துகிறார். ( பொன்னி மூலமாக)

சான்ஸ் கிடைச்சா துளசி பொம்பளைங்களெப் பாராட்டிடுவாங்களே !!

VSK Wednesday, October 31, 2007 11:39:00 PM  

மெய்யாலுமே டீச்சரின் விளக்கம் அருமைதான், தீரு.சீனா!

இது முழுக்க முழுக்க கந்தனைப் பற்றிய கதை மட்டுமே என்பதால்தான் மற்றவர்களைப் பற்றி அதிகம் வளர்த்தாமல், அவர்களெல்லாரும் கந்தனுக்கு எந்த விதத்தில் பயன்படுகிறார்கள் என்பதை மட்டுமே சொல்ல விழைகிறேன்.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP