Sunday, December 23, 2007

குருவாய்! வருவாய்! அருள்வாய்!


குருவாய்! வருவாய்! அருள்வாய்!


ஒருவினை வந்து உணர்வினை அழுத்தும்!

ஒருவினை நகர்ந்து உள்ளத்தை வதைக்கும்!

ஒருவினை ஒளிந்து புறவழி செல்லும்!

மறுவினை அங்கே வாசலில் நிற்கும்!

சிறுவினை கண்டு பெருவினை நகைக்கும்!

பெருவினை கண்டு சிறுவினை அஞ்சும்!

தீவினை அங்கே பல்லை இளிக்கும்!

நல்வினை செய்திடல் எதுவெனத் திகைக்கும்!

ஊழ்வினை வந்து உயிரினை உருத்தும்!

எவ்வினை எதுவினை எதுவென இருந்தும்

இறைவனின் உறுதுணை அனைத்தையும் தடுக்கும்!

நிகழ்வினை நடத்தும் ஒருவனை நம்பி,

செயல்வினை யாவும் அவனது எனவே,

பொதுவினில் வைத்து புகழ்வினைக் கூட்டி,

உருவினை ஒளித்த இறைவனை வேண்டி,

உருவினில் பெருத்த முதல்வனை நம்பி,

குருவின் குருவாம் வேலனைப் பணிந்து,

உருவினைப் பெருத்து சாகரம் மேவிய

அனுமனைக் கொண்டு வல்வினை வென்று,

ஒருவினை அடக்கி உள்ளில் அமர்ந்த

திருவினைச் சரணெனத் தாள் அடைந்தாலே,

அருவினை யாவும் அறுந்தோடிடுமே!

ஸ்வாமி சரணம்!

*************************************************


[தாயகம் செல்கிறேன்! ஒரு மாதம் கழித்து வருகிறேன்! முருகனருள் முன்னிற்கும்!]

Read more...

Thursday, December 20, 2007

"பூக்களில் உறங்கும் மௌனங்கள்" [ந.ஒ.க.போ]

"பூக்களில் உறங்கும் மௌனங்கள்"
['நச்'சுன்னு ஒரு கவிதைப் போட்டிக்காக!]


காத்தலின் கணங்களில் கரைந்திடும் காட்சிகள்
பார்த்தவர் அருகினில் பகிர்ந்திடும் எண்ணங்கள்
வார்த்தைகள் வெளிவரா நாணத்தின் நிலைப்படிகள்
நேர்த்தியாய்ச் சொல்லிட துடித்திடும் நினைவலைகள்
அனைத்தையும் அடக்கியோர் ஜீவனும் உயிர்த்தது
உயிர்த்ததில் ஓரணு உள்ளின்று சிலிர்த்தது
சிலிர்த்ததில் மொட்டொன்று மெல்லவே முகிழ்த்தது
முகிழ்த்ததில் வாசங்கள் இதனுளே பரந்தது
பரந்ததை இதழ்களும் தனக்குளே மறைத்தது
மறைத்தது மௌனமாய் தனக்குளே வளர்ந்தது
வளர்ந்தது ஓர்நாள் இதழ்களை விரித்தது
விரித்ததில் வாசமும் எங்கணும் படர்ந்தது
படர்ந்தை உணர்ந்துமே வண்டினம் மொய்த்தது
மொய்த்ததில் தேனையும் பருகியே அகன்றது
அகன்றதும் ஆங்கனே மகரந்தம் நின்றது
நின்றதால் மலரும் தன் மௌனத்தில் அழுதது
அழுததை உரைத்திட ஆருமே அங்கிலை
பூக்களின் மௌனங்கள் பூவுடன் கழிந்தது
மௌனத்தின் விழித்துளி சாறெனச் சேர்ந்தது
பூக்களின் சூல்களும் கனியதாய் கனிந்தது
மகிழ்ச்சியும் துயரமும் புளிப்பதாய் சுரந்தது!

மனிதன் ஒருவன் கனியதைச் சுவைத்தான்!
சுவைத்த மனிதன் சொன்னான், 'சீ சீ! இது புளிக்குது'!!

மனிதம் அறியுமோ மலர்களின் மௌனம்!

Read more...

Tuesday, December 18, 2007

செவ்வாய் !!!


செவ்வாய் !!!


முதலில் தொடங்கி முடிவில் முடியும்
செவ்வாய்க் கதையிங்கு யானும் சொல்வேன்!

அன்னையின் வயிற்றினில் அமைதியாய் உறங்கி
உண்மையை உணர்ந்திடும் ஆசையின் வழியே
இன்பமும் துன்பமும் யாமுணர்ந் திடவே
மன்னும் உலகினில் வந்து வீழ்ந்ததும்
சுவாசம் இழுத்திட வழியெதுவெனவே
திகைப்பினில் பவள வாயினைத் திறந்தே
முதலாம் முதலாய் ஆங்கோர் காற்றை
முதலில் இழுப்பதும் செவ்வாய் வழியே!

மூச்சுக் காற்று உட்புகுந் திடவே
உடலும் உயிருடன் கலந்திட அங்கே
பிரிந்ததை எண்ணி ஒரு புறம் துக்கமும்
வந்ததை எண்ணி மறுபுறம் வருத்தமும்
ஒருங்கே சேர்ந்து உளம் உருகிடவே
ஓங்கிடும் ஒலியினைத் தானே கிளப்பி
உலகோர் உவப்ப ஈன்றவள் மகிழ
முதலில் அழுவதும் செவ்வாய் வழியே!


அழுகையின் இயக்கத்தில் உட்தீ எரிய
தனக்குத் தானே இயக்கம் என்பதை
உளமது உணர்த்த உடலும் வருத்த
முதலில் தோன்றிடும் பசி போக்கிடவே
எங்கே உணவென ஆவலாய்த் தேடி
தாயின் முலையினைப் பற்றியே சிசுவும்
தன் பசி தணித்திட பீறிடும் அமுதை
முதலில் சுவைப்பதும் செவ்வாய் வழியே!

பசியும் பறந்திட பத்தும் பிறந்திட
உடலின் இயக்கம் உணர்வில் கலந்திட
அருகே ஆரென அறியும் ஆவலில்
உடலினை நெளித்து சோம்பல் முறித்து
கண்களை விரித்து கைகளை ஆட்டி
மலர்முகம் காட்டி தாய்முகம் நோக்கி
அவளது அகமும் புறமும் மலரவே
முதலில் சிரிப்பதும் செவ்வாய் வழியே!


வளரும் வயதில் எத்தனை செயினும்
கைகளால் தொட்டு காலினால் உதைத்து
கண்களால் சிரித்து செவிவழி கேட்டு
உண்ண மறுத்து, வாந்தி எடுத்து
இன்னமும் எத்தனை குறும்புகள் செயினும்
அன்னையும் பிறரும் கேட்கத் துடிப்பது
'ம்மா' எனவே ஆசையில் அங்கே
வருமொலி அதுவும் செவ்வாய் வழியே!

அறியும் கல்வியும், புரியும் தமிழும்
சொல்லும் மொழியும், செப்பும் கவியும்
அறிவியல் அறிவும், ஆசைமொழிகளும்,
கூறிடும் காதல் கன்னல் சுவையும்,
விருப்பினைக் காட்ட வெளிவரும் சொல்லும்,
மறுப்பினைக் காட்ட மொழிந்திடும் மொழியும்,
சிரிப்பினைக் காட்ட சிந்திடும் தேனும்,
முதலாய் வருவது செவ்வாய் வழியே!


பிடித்தவர் முகமதை உள்ளில் வாங்கி
அவரை நினைந்தே உள்ளும் உருகி
கண்வழி, மடல்வழி, செவிவழி அதிலே
கனவுத்தூதுகள் கடிதினில் அனுப்பி
கொண்டவர் நெஞ்சில் தானும் புகுந்து
ஆசையில் அவருடன் தனியிடம் சென்று
அன்புடன் அவரிரு கரங்கள் பற்றி
காதலை மொழிவதும் செவ்வாய் வழியே!

இறையின் வடிவினில் மனது லயித்து
முறையாய் தோத்திரம் பாடவே முனைந்து
கரை சேர்த்திட இறை என்றே தெளிந்து
கரையும் சொல்லால் பாடல்கள் படித்து
விரைவாய்த் தினமும் ஆலயம் சென்று
இறையைத் தொழுது அவனை வணங்கி
நிறைவாய்த் தமிழில் பாசுரம் வடித்து
இறையைத் தொழுவதும் செவ்வாய் வழியே!

உழலும் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும்
பழகிடும் போதில் இன்புற்றிருப்பதும்
வழியும் உணர்வின் ஒவ்வொரு சொல்லும்
திகழும் பெருமையும் வருவது யாவும்
இகழும் நிலையினை தானே அடைவதும்
புகழும் ஏச்சும் ஒருங்கே வருவதும்
தமிழும் தரணியில் மேலும் உயர்வதும்
அழகுடன் மொழிந்திடும் செவ்வாய் வழியே!

வாடி அலைந்து, அல்லற் பட்டு,
ஓடிக் களைத்து, இனிவியலாதென்று
வாடி வதங்கி வயோதிகம் வந்து
தேடியதெல்லாம் தனதிலவெனவே
நாடிய ஞானம் நண்ணிடப் பெற்று
கூட்டை விட்டு பிரிந்திடும் வேளை
வாய்வழி பிறந்த மூச்சும் குன்றி
வாய்வழி அதுவே சென்றிடும் நேரம்
உறவும் சுற்றமும் ஓவெனவலறி
நால்வர் சுமக்க இடுகளம் வந்து
சிதையில் கிடத்தி செந்தீ மூட்டும்
சமயம் ஆங்கே வந்திடும் போது
அனைவரும் விடைகொட இறுதிக்கடனாய்
அரிசியை இடுவதும் செவ்வாய் வழியே!


செவ்வாய் தொடங்கி செவ்வாய் வழியே
ஒவ்வாவுயிரும் ஒன்றா உடலும்
ஒன்றாய்ச் சேர்ந்து ஆடிடும் நாடகம்
எவ்வாறெனவே இதுவரை சொன்னேன்!
செவ்வாய் அதனின் சீர்மை உணர்ந்து
செவ்வாய் வழியே நல்மொழி சொல்லி
செவ்வனே செயல்கள் யாவையும் ஆற்றி
செவ்வேள் முருகனைப் பணிவாய் நெஞ்சே!

***************************************************


'செவ்வாய்க்கிழமையான இன்று அதே செவ்வாயை வேறு விதமாக எண்ணியதில் விளைந்த வரிகள்!'

Read more...

Thursday, December 13, 2007

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" --16

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" --16

"கிட்டத்தட்ட 4 மாசம் ஆயிடுச்சு மன்னார், உன்னைப் பார்த்து! என்னை தப்பா நினைச்சுக்காதே!" என்று தயங்கியபடியே சொன்னேன்.

"அட! இன்னாபா நீ! இதுக்கெல்லாம் போயி தப்பா நினைச்சுக்குவானா இந்த மன்னாரு! அப்புறமேல நம்ம பிரெண்ட்சிப்புக்கு இன்னா மருவாதி இருக்கு! நீ இன்னா வேணுமின்னேவா என்னியப் பாக்காம இருந்தே! ஒரு நாவலு, 2 சிறுகதை அப்பிடீன்னு வேலையாதானே இருந்தே! நாங்கூட படிச்சேன் அந்த நாவலை! என்னை மறந்தாலும், ஐயனை மறக்காம ஒவ்வொரு பதிவுலியும் ஒரு குறளு போட்டே பாரு! அங்கேதான் நீ நம்மளை 'டச்'பண்ணிட்டேப்பா! இதுமாரி, கேட்டதை மறக்காம இருக்கே பாரு! அதப் பத்தி கூட வள்ளுவரு ஒரு அதிகாரம் எளுதியிருக்காரு! கேக்கிறியா?" என்று என் நண்பன் மயிலை மன்னார் சொன்னவுடன் உற்சாகமாக பேப்பர் பேனாவை எடுத்துத் தயாராக வைத்துக் கொண்டேன்!

இனி வருவது குறளும், மன்னாரின் விளக்கமும்!

அதிகாரம் - 42 "கேள்வி"

"செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை" [411]


"இந்த ஒலகத்துல எத்தினியோ விதமான வழியில துட்டு சம்பாரிச்சு பணக்காரனா ஆயிறலாம். ஆனாக்க, இந்த 'கேக்கறது'ன்ற செல்வம் இருக்கு பாரு.... அதாம்ப்பா... எந்த ஒரு விஷயத்தையும் காதால கேட்டு மனசுல உள்வாங்கிக்கற பாரு....அதைத்தான் செல்வம்னு ஐயன் சொல்றார்ரு இங்க... ! அது எப்பிடீன்றியா? இப்ப, ஒரு விஷயத்தை நீ கண்ணால பாக்கற...அட, ஒரு பேச்சுக்கு நம்ம தலைவர் நடிச்ச தம்பிக்கு எந்த ஊரு பாம்பு ஸீன்னு வைச்சுக்குவோமே... அவரு முகபாவம்லாம் காட்டி பிரமாதமா நடிச்சிருப்பாரு. அதையே சவுண்டு இல்லாம ஓட்டறாங்கன்னு வைச்சுக்க... அந்த ஸீனு உனக்கு ரசிக்குமா? அதையே அப்பிடியே கண்ணை மூடிக்கிட்டே கேக்கறேன்னு வையி.... தலைவரு மூஞ்சி அப்பிடியே ஒன்னோட மனக்கண்ணு முன்னாடி ஓடும்! எப்பிடி அது? காதால கேட்டு மனசுல உள்வாங்கிகினதால.... இது போல இன்னும் எத்தினியோ சொல்லலாம்! இந்த கேள்விஞானம்ன்ற செல்வந்தான் அல்லா செல்வத்தைக் காட்டியும் ரொம்பப் பெருமையானது! இது எப்பிடின்னு பின்னாடி சொல்லுவாரு பாரு!"

"செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்." [412]

"ஒனக்குப் பிடிச்சது ஒண்ணை நீ கேக்கறேன்னு வையி.... மவனே... பசி தூக்கம் அல்லாத்தியும் மறந்து 'ஆ'ன்னு கேட்டுகிட்டே இருப்பே! இப்பக்கூட பாரேன்! வயக்கமா இங்க வந்தா இன்னா பண்ணுவே நீ! மொதல்ல நாயர் கடையாண்டை நேர போயி 4 மசால்வடையை உள்ளே தள்ளிட்டு, ஒரு கப்பு டீ அடிச்ச பின்னாடிதான் எங்கிட்டவே பேச ஆரம்பிப்பே! நான் சொன்னவுடனே பேப்பர் பேனாவை எடுத்துகிட்டு கிறுக்க ஆரம்பிச்சிட்டேல்ல! அட! ஒரு தமாசுக்கு சொன்னேம்ப்பா! உடனே முறுக்கிக்காத! இப்பிடித்தான் அநேகமா அல்லாருமே இருப்பாங்க! கேக்கறதுக்கு ஒண்ணும் இல்லேன்னாத்தான் சோத்து நெனப்பே வரும்! "

"செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து." [413]

"இப்ப, இந்த தேவர்கள்னு ஆகாசத்துல இருக்கறவங்களைப் பத்தி சொல்லுவாங்களே, அவங்க இன்னா பண்றாங்க? எங்கியோ தொலைதூரத்துல இருந்தாலுங்கூட, இங்கேருந்து ஓதற மந்திர சத்தத்த சொல்லி நாம அனுப்பற சக்தியை எடுத்துக்கறாங்கன்னு நம்பறோமில்ல.... அது எப்பிடி நடக்குது?.... இந்தக் கேள்வி அறிவு அவங்களுக்கு இருக்கறதாலத்தான்! அப்பிடியாப்பட்ட இந்தக் கேள்வி அறிவுன்ற ஒண்ணு இருக்கற மனுஷங்க கூட, இந்த பூமியில இருந்தாலும், அந்த தேவர்களுக்கு சமமின்னு ஐயன் சொல்றாரு! கேக்கறதால வர்ற அறிவை வைச்சே சூட்சுமமா அல்லாத்தியும் 'டக்கு' 'டக்கு'ன்னு புரிஞ்சுப்பாங்க!"

"கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாத் துணை" [414]


"வயசாயிப்போன காலத்துல ஒன்னால சரியா பாக்க முடியாம கண்ணு மங்கலாயிடும், பசி அடைச்சுப் போயிரும். நடக்கமுடியாம தளந்து போயிருவே! 'ஒற்கம்'னா 'தளர்ச்சி'ன்னு அர்த்தம்! அப்போ உன்னால ஒண்ணுமே பண்ன முடியாது! ஆனா, நீ செயலா இருக்கறப்பவே, நாலு நல்ல நூலுங்களைப் படிக்கலைன்னாலும், அடுத்தவங்க சொல்லக் கேட்டாவது இருந்தேன்னு வையி... அது ஒனக்கு கைத்தடி மாரி பயன்படுமாம்! சும்மா கண்ணை மூடிக்கிட்டே, எங்கியும் போவாமலியே, உன்னோட அறிவாலியே, நீ நெனைச்சுப் பாத்துகினே சாந்தோசமா இருக்கலாம்! பொளுதும் போவும் ஒனக்கு! அதுனால இப்பலேர்ந்தே நாலு நல்ல விசயங்களைக் கேக்கறதுன்னு ஒரு வளக்கப் படுத்திக்க! இன்னா... வெளங்குதா?"

"இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்." [415]

"அதுக்காவ, எவன் என்ன சொன்னாலும் கேக்கறதுன்னு அர்த்தம் இல்லை. நல்ல குணம் இருக்கறவன், நல்ல நடத்தையா இருக்கறவன் சொல்லாப் பாத்துக் கேக்கணும்! அதைக் கேட்டு நல்லா உள்வாங்கிக்கிட்டியானா, வளுக்கற பூமியில நடக்கறப்ப ஒருகைக்கோலு எப்பிடி நீ வளுக்கி விளாம இருக்க ஒதவுமோ, அப்பிடி அது ஒன்னிய கெட்ட விசயத்துல இருந்து காப்பாத்தும்!"

"எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்." [416]


"இங்க ஒரு முக்கியமான மேட்டர் ஐயன் சொல்றாரு! கவனமாக் கேளு! அப்பிடி நீ கேக்கற விசயம் எம்மாம் பெருசுன்றது முக்கியமில்லை! நல்ல கருத்துக்களை மட்டுமே கேக்கணும்! அது தம்மாத்தூண்டு மேட்டரா இருந்தாலும் சரி! அது மாரி கருத்துங்கல்லாம் ஒனக்கு ரொம்ப ரொம்ப பெருமையை தேடித்தரும்! புரியுதா?"

"பிழைத்துணர்த்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்." [417]

"ஒரு ஆளு ரொம்பக் கூர்மையா எந்த ஒரு விசயம்னாலும் ஆராய்ஞ்சு கவனமாக் கேட்டுத் தெரிஞ்சுக்கறவனா இருந்தா, ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல, ஒரு கருத்தை அவன் தப்பாவே தெரிஞ்சுகிட்டாக்கூட, புத்தியில்லாத, முட்டாத்தனமான சொல்லை சொல்லவே மாட்டான். இதுல ஏதோ தப்பு இருக்கு! அதுனால, இப்பா இதைச் சொல்லி நாம அரைகுறைன்னு காட்டிக்க வேணாம். இன்னும் நல்லா ஆராய்ஞ்சு பாத்திட்டு உண்மை இன்னான்னு தெரிஞ்சதுக்கு பொறவால சொல்லலாம்னு 'கம்'முனு இருந்திருவான்!"

"கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி." [418]

"நாம இத்தினி சொல்லியும் ஆரும் சரியாக் கேக்க மாட்டேங்கறாங்களேன்னு ஐயனுக்கு கோவம் கோவமா வருது! அடுத்த மூணு குறள்ல போட்டு விளாசுறாரு இவங்களை! இதுவரைக்கும் நான் சொன்னது மாரி நல்ல கருத்துக்களை... அதையெல்லாம் கேட்டதால ஒன் காதே வலிச்சாலும் சரி... இன்னாடா இவன் தொணதொணக்கறானேன்னு ஒன் காது துளைச்சுப் போனாலும் சரி!..... கேக்கலைன்னா, ஒனக்கு காதுன்னு ஒண்ணு இருந்து, அது நல்லாவே கேட்டாலும் கூட, நீ காது கேக்காத செவிடுக்கு சமம்னு ஐயன் கண்டிசனா சொல்லிடறாரு!"

"நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது." [419]


எந்த ஒரு விசயத்தையும் நல்லா கேட்டு, அதை சரியா புரிஞ்சு உள்வாங்கி வைச்சுக்கற இந்த கேள்வியறிவுன்ற ஒண்ணு மட்டும் ஒருத்தனுக்கு கிடைக்கலேன்னா, அவனால அடக்கமா, மருவாதியா வணங்கிப் பேச முடியாது!ஏன்னா அவன் அரைகுறை மாரி உளறிக் கொட்டிக்கினே இருப்பான்!"

"செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்." [420]


"இந்தக் கேள்வியறிவுன்ற ஒண்ணை உணராம,, அதால கிடைக்கற பலனைத் தெரிஞ்சுக்காம, நாக்குக்கு கிடைக்கற சுவையை மட்டுமே எப்பப் பாத்தாலும் நினைச்சுகிட்டு வயித்தை ரொப்பறவங்க இந்த ஒலகத்துல உசிரோட வாழ்ந்தாக்கூட அதனால இன்னா லாபம்னு ஐயன் ரொம்பவே சூடாறாரு!"

"இன்னா ஐயன் சொன்னது விளங்கிச்சா? அதுனால நல்லா படிச்சு, கேட்டு அறிவை விருத்தி பண்ணிக்கோ! கேக்கறது நல்லதா இருக்கட்டும்! அதை மனசுக்குள்ள நல்லா உள்வாங்கிக்கோ! இப்ப முதல் குறளைப் படி! ஏன் இதான் பெரிய செல்வம்னு சொல்றாருன்னு புரியும்!"

"சரி! சரி! நீ சூடாவாதே! இதுவரைக்கு கேட்டது போதும்! 412- ல சொன்னமாரி, இப்போ வயித்துக்கு கொஞ்சம் அனுப்பலாம்! நாயரு சூடா வடை சுட்டிருக்காரு ஒனக்காக ஸ்பெசலா! வா!" என தோள் மீது கை போட்டு அணைத்தபடியே நடந்தான் மயிலை மன்னார்!
********************************************************

Read more...

Wednesday, December 12, 2007

நிஜமான நிழல்கள்!

நிஜமான நிழல்கள் !

'என்னங்க! இன்னிக்காவது சீக்கிரமா வீட்டுக்கு வந்திருவீங்கல்ல?' என்ற ஷோபாவை எரிச்சலுடன் பார்த்தான், கிரீஷ்.

'இதென்ன கேள்வி தினத்துக்கும்? எப்பவும் போல ஆஃபீஸ் முடிஞ்சதும் வெளியில போயிட்டு லேட்டாத்தான் வருவேன். ஏன்? இன்னிக்கு என்ன திடீர் விசேஷம்?' என்று உறுமினான்.

'அதுக்கில்லீங்க! எங்க அப்பா இன்னிக்கு சாயந்தரத்துக்கு மேல ஊரிலேருந்து வரேன்னு டெலிஃபோன் பண்ணினாரு. எப்படியும் வர்றதுக்கு ஒன்பது மணிக்கு மேல ஆயிடும். இன்னிக்காவது கொஞ்சம் சீக்கிரமா வந்தீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும். அதுக்குத்தான்......' எனத் தயங்கியபடியே சொன்னாள் ஷோபா.

'ஆமா! பெருசா அள்ளிக் கொண்டு வரப் போறாரு பாரு உங்க அப்பா! இதோ பாரு! யாருக்காகவும் என் வழக்கத்தை என்னால மாத்திக்க முடியாது! இன்னிக்கு என் ஃப்ரெண்ட் குணாவுக்கு பர்த்டே! ஒரு பார்ட்டி கொடுக்கறான் எங்களுக்கெல்லாம். வர்றதுக்கு 11 க்கு மேலியே ஆகும்! எல்லாம் அவரை நாளைக்குப் பார்த்துக்கலாம். நீ சீக்கிரமா ஆஃபீஸ்லேர்ந்து வந்து உங்கப்பாவைக் கவனிச்சுக்கோ!' என்றபடியே கைப்பெட்டியை எடுத்துக் கொண்டு காரைக் கிளப்பினான் கிரீஷ்.

அவன் போவதை ஒரு அலுப்புடன் பார்த்துக் கொண்டே, கிளம்பத் தயாரானாள் ஷோபா.
************
கல்யாணமாகி 4 வருடங்கள் ஆகின்றன கிரீஷ்-ஷோபா தம்பதியினர்க்கு. ஆரம்பத்தில் ரொம்பவே அன்பாகத் தான் இருந்தான் கிரீஷ். இப்பவும் வார இறுதியில் வெளியில் செல்வது எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அலுவல் நாட்களில், இப்போதெல்லாம், கடந்த 2 வருடங்களாக தினமும் வெளியில் நண்பர்களுடன் பாருக்குச் சென்று குடித்துவிட்டு, 10-11 மணிக்கு மேல்தான் வீடு திரும்புகிறான். பெரிய கம்பனியில் நல்ல வேலை. கை நிறையச் சம்பளம். ஷோபாவும் ஒரு நல்ல வேலையில்தான் இருக்கிறாள். வசதிக்கு ஒன்றும் குறைவில்லை. ஒருவேளை அதுதான் இதற்கெல்லாம் காரணமோ?

ஷோபாவும் முதலில் இது பற்றிக் கேட்டுப் பார்த்துவிட்டு, 'சரி, போ! குடிக்கறது வீட்டுல வேணாம்னு வெளியில குடிக்கிறார்' என விட்டுவிட்டாள்.
********************
'என்ன மாப்ளே! இன்னிக்கு எங்கே பார்ட்டி?' என அலைபேசியில் விசாரித்தான் கிரீஷ்.

'ரம்பாவுக்கு வந்திரு மச்சி! அங்கே உனக்கு ஒரு புதுவித அனுபவம் கிடைக்கப் போகுது! நாம இதுவரைக்கும் போகாத இடம்! அப்பிடியே வர்றப்போ, ராஜுவையும், செழியனையும் பிக்கப் பண்னிகிட்டு வந்திரு! சரியா? ' என மறுமுனையில் குஷியாகச் சொன்னான் குணா.

'அதுக்கென்ன! அப்படியே செஞ்சிடறேன். ரம்பாவா? எங்கேப்பா இருக்கு அது?' என வழியை விசாரித்து வைத்துக் கொண்டான்.

மாலை ஆனதும் நண்பர்களை சேர்த்துக் கொண்டு, அந்த ஹோட்டலை அடைந்தான். சாப்பிடும் இடம், வசதியான தங்கு அறைகள் இவற்றுடன் ஒரு தனி பாரும் சேர்ந்த ஹோட்டல் அது! இதற்குள் செல்ல மட்டும் தனியே டிக்கட் வாங்க வேண்டும்! குணா எல்லாவற்றையும் தயார் செய்து வைத்திருந்தான். நகரின் எல்லையைத் தாண்டி, அமைந்திருக்கிறது.

அடுத்தவர் முகம் கூடத் தெரியாத அளவுக்கு மங்கலான விளக்கொளியில், ஒரே இரைச்சலாக இருந்தது அந்த பார். புகை மண்டலம் வேறு! நல்ல கூட்டம்! குடித்துக் கொண்டும் ஆடிக் கொண்டும் பல ஜோடிகள் இருந்தார்கள்.

குடிப்பானே தவிர... அதுவும் நண்பர்களுடன் சேர்ந்து மட்டுமே.. .... கிரீஷுக்கு இது போன்ற இடத்துக்கு வருவது இதுவே முதல் தடவை. கொஞ்சம் வியப்பாகவும், அச்சமாகவும் இருந்தது.


'என்னடா குணா! இங்க கூட்டிகிட்டு வந்திட்டே!' எனக் கடிந்து கொண்டான், விஸ்கியைச் ருசித்தபடியே!!

'அட! சும்மா குடிச்சுகிட்டே இருந்தா மட்டும் போதுமா? இங்க வந்தா பலானது பலானதுல்லாம் கூட கிடைக்குமாம்! ஏன்! உனக்கே மச்சம் இருந்தா, உன்னைக் கூட யாராச்சும் வந்து கூப்பிட்டாலும் கூப்பிடுவாங்க!' எனக் கண்ணடித்தான் குணா!

'ரொம்ப நல்லாருக்கு போ! எனக்கு வேணாம்ப்பா அதுல்லாம்! நமக்கு வீட்டுல ஆளு இருக்கு! நீங்க நடத்துங்க!' என்றபடியே பார்வையைப் படர விட்டான்.

செழியனும், ராஜுவும் உற்சாகமாக யாருடனோ ஆடிக் கொண்டிருந்தனர். அதேபோல் இன்னும் பலரும்!. முகம் தெரியாத சில ஜோடிகள் ஆடிக் கொண்டே ஒரு பக்கக் கதவைத் திறந்து , அறைகள் இருந்த பக்கமாகச் செல்வதையும் பார்த்தான்!

'என்ன பாக்கற! இதுக்கெல்லாம் கூட உடனே ரூம் செட் பண்ணிக் கொடுத்திருவாங்க இங்க!' என்று அவனிடம் வந்து சொல்லிவிட்டு, ஒரு பெண்ணுடன் நகர்ந்தான் குணா!

கிரீஷுக்கு வெறுப்பாய் இருந்தது. மணியைப் பார்த்தான். 8.30.
சட்டென காலையில் ஷோபா சொன்னது நினைவுக்கு வரவே, குணாவைத் தேடிக் கண்டு பிடித்து, அவனிடம் விடை பெற்றான் கிரீஷ்!

'டஃப் லக்!' என குணா கத்தியது அவன் காதுகளில் விழுந்தது.

ஒருமணி நேரம் கழித்து, வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

மாமனார் வந்த அசதியில் அடுத்த அறையில் படுத்திருந்தது தெரிந்தது. ஷோபா உள்ளே சமையலறையில் இருக்கும் சத்தம் கேட்டது.

நடந்ததை நினைத்துக் கொண்டே வெறுப்புடன் தன் கைப்பெட்டியை பக்கத்தில் இருந்த முக்காலியில் வீசினான்... குடிபோதையில்! ஷோபாவின் கைப்பை மேல் பட்டு அது கீழே விழுந்து சிதறியது.

அதை எடுத்து வைக்கக் குனிந்தான்.

உள்ளிருந்து 'என்னங்க சீக்கிரமே வந்துட்டீங்களா?' எனக் கேட்டவாறே கையில் கரண்டியுடன் வந்த ஷோபா திக்கித்து நின்றாள்!



கிரீஷ் கையிலிருந்த ஷோபாவின் கைப்பையில் இருந்து இரண்டு 'ரம்பா' டிக்கட்டுகள் அவர்களைப் பார்த்துச் சிரித்தன!
**********************


[சர்வேசனின் 'ந.ஒ.க. போட்டிக்கு]

Read more...

Sunday, December 09, 2007

நிழலும், நிஜமும்! [ந.ஒ.க.]

நிழலும், நிஜமும்!
[ந.ஒ.க.]



"யார் குழந்தை இது? இப்படி ஓடறதே?" அந்த விழாவிற்கு வந்திருந்த பெண்களில் அநேகம் பேர் முணுமுணுத்தார்கள்!

"சித்ரா, கொஞ்சம் உன் பையனைப் பிடிச்சு வையேன்!" ரமேஷ் கோபமாகச் சித்ராவைப் பார்த்து சொன்னான்.

"அவன் அப்படித்தாங்க! கொஞ்சம் அதிகமா விளையாடறான். இது புரியாம மத்தவங்கதான் சலிச்சுக்கறாங்கன்னா நீங்களும் கத்தறீங்களே!" சித்ராவும் பதிலுக்கு முறைத்தாள்.

"அதுக்கில்லேம்மா! இவ்வளவு ஹைப்பரா இருக்கானே! மத்தவங்களுக்கு இடைஞ்சல் இல்லாம இருக்கட்டுமேன்னுதான் சொன்னேன்" என ரமேஷ் வழிய,
"சரி, சரி, வாடா இங்கே!" என ஓடிக்கொண்டிருந்த செந்திலை தன் மடியில் எடுத்து வைத்துக் கொஞ்சினாள் சித்ரா.

செந்தில் அடங்காமல் திமிறிக் கொண்டே அவள் மடியில் இருந்து இறங்க அடம் பிடித்து அலறினான்.

இனி இங்கிருந்தால் சரிப்படாது என முடிவு செய்து, பையனை இழுத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.

கூடவே வெளியில் வந்த ரமேஷ், 'இப்பல்லாம் ரொம்பவே அதிகமா ஆட்டம் போடறான் இல்லே! அடுத்த தடவை டாக்டர்கிட்ட போறப்போ, இதையும் சொல்லி என்னன்னு கேளு' என ஆலோசனை சொன்னான்.
************************
அமெரிக்காவில் ஒரு சாஃப்ட்வேர் கம்பனியில் நல்ல வேலையில் இருப்பவன் ரமேஷ். அமைதியான சுபாவமும், பெற்றவர்களிடம் மிகுந்த பாசமும் கொண்ட நல்ல பிள்ளை. வாரம் இரண்டு முறையாவது அப்பா அம்மாவிடம் பேசலைன்னா தூக்கம் வராது அவனுக்கு! சம்பளத்தில் ஒரு கணிசமான தொகையை மாதம் தவறாமல் அனுப்பி வைக்கிறான். அவர்களும் பெங்களூரில் ஒரு நல்ல ஃப்ளாட் வாங்கி வசதியாக வாழ்ந்து வருகிறார்கள். சித்ரா இதற்கெல்லாம் ஒன்றும் சொல்வதில்லை. அவர் சம்பாதிக்கிறார். அப்பா அம்மாவுக்கு கொடுக்கறதுல என்ன தப்பு என அனுசரணையாகப் போய்விடுவாள்.

செந்தில் அவர்களது ஒரே பிள்ளை. வயது 4 முடிந்து சென்ற மாதம் தான் தடபுடலாக நண்பர்களை அழைத்து விழா கூட கொண்டாடினார்கள்.
பிறந்தது முதலே ரொம்பவும் சூட்டிகையான பிள்ளை. சதா துறுதுறுவென்றிருப்பான். அதிகம் பேச்சுதான் இன்னமும் வரவில்லை. சதா அம்மாவின் புடவைத்தலைப்பை[அல்லது துப்பட்டாவை!!] பிடித்துக் கொண்டே அலைவான். எதை எடுத்தாலும் டமாரெனப் போட்டு உடைத்து விடுவான்.

அப்படித்தான் அன்றொருநாள் யாரும் பார்க்காத போது, பாத்ரூமுக்குள் சென்று உட்பக்கம் தாளிட்டுக் கொண்டு, பைப்பைத் திறந்துவிட்டு, மூடத் தெரியாமல், உள்ளேயே நின்றுகொண்டு இருந்துவிட்டான்.
பையனைக் காணுமே எனத் தேடிய சித்ரா, தண்ணீர் வழிந்து வெளியில் கார்ப்பெட்டெல்லாம் நனைந்ததைப் பார்த்து, அவனைக் கதவைத் திறக்கச் சொன்னால், உள்ளிருந்து பதிலே வராமல், கலவரமாகி,.. ரமேஷுக்கு ஃபோன் போட்டு வரவழைத்து,..... ஒரே களேபரமாகிப் போயிற்று.
******************************
சொன்னபடியே டாக்டரிம் சென்று வந்த பின்னர் இருவர் முகத்திலும் ஈயாடவில்லை.

'அப்படில்லாம் இருக்காதுங்க! டாக்டர்தான் இன்னும் டெஸ்ட்டெல்லாம் எடுத்த பிறகு சொல்றேன்னு சொல்லியிருக்காரே! இப்பவே நாம ஒண்ணும் கற்பனை பண்ணிக்க வேணாம்!' சித்ரா உறுதியுடன் சொன்னாள்.

'அது சரிதான்! இருந்தாலும்....' என இழுத்தான் ரமேஷ்.

'என்ன இருந்தாலும்..? எல்லாம் சரியாயிரும். அப்படியே இருந்தாலும் இந்த ஊருல இல்லாத வசதியா? அமெரிக்காவுலதான் இதுக்கு ரொம்பவும் அருமையான ட்ரீட்மெண்ட்டுல்லாம் கிடைக்குதாம்' எனத் தைரியமாகச் சொன்னாள் சித்ரா.

'எனக்கென்னவோ எதுக்கும்.... ' என ஏதோ சொல்ல வாயெடுத்தவன் சட்டென்று பேச்சை நிறுத்திக் கொண்டான்.
**********************
ஒருமாதம் கழிந்தது. இப்போதெல்லாம் அதிகம் பேசிக்கொள்வதில்லை இருவரும்.

சித்ரா சதா கணினியில் எதையோ தேடிக் கொண்டும், தொலைபேசியில் பேசிக்கொண்டும் இருந்தாள்.

அலுவலில் வேலை அதிகம் என ரமேஷ் லேட்டாக வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.

ஒருநாள் மாலை உற்சாகமாக வீடு திரும்பினான் ரமேஷ்.
"சித்ரா! அடுத்த வாரம் நாம் இந்தியா போறோம். 2 மாசம் ட்ரிப்! என்னென்ன பேக் பண்ணனுமோ எல்லாம் ரெடி பண்ணிக்கோ!" என்றான்.

"என்ன திடீர்னு? சொல்லவே இல்லையே! எனக்கும் சந்தோஷமாத்தான் இருக்கு. எல்லாரையும் பார்த்த மாதிரி இருக்கும்" எனச் சட்டென சித்ராவும் உற்சாகமானாள்.

மீதி நாட்களில் தேவையான துணிமணிகளை இரண்டு சூட்கேஸுகளில் அடைத்தாள்.

கிளம்பும் நாள் வந்தது!

ரமேஷின் நண்பன் சுந்தர் காரெடுத்துக் கொண்டு வந்திருந்தான்.

சித்ரா செந்திலுடன் பெட்ரூமில் ஏதோ மும்முரமாய் இருந்தாள்.

'சித்ரா, சுந்தர் வந்தாச்சு, சீக்கிரம் கிளம்பி வா' என ரமேஷ் குரல் கொடுத்தான்.
உள்ளிருந்து பதில் ஒன்றும் வராததைக் கண்டு பெட்ரூமுக்குள் செல்ல முனைந்தான். கதவு உட்பக்கமாய் தாளிட்டிருந்தது.

'சித்ரா, ஏய்! என்ன பண்றே! கதவைத் தாழ்ப்பாள் போட்டுகிட்டு?" எனப் பொறுமையிழந்து கத்தினான் ரமேஷ்.

"நானும் செந்திலும் வரலை! உங்க பெட்டி வெளியில வைச்சிருக்கேன். நீங்க போகலாம் உங்க அப்பா அம்மாகிட்ட!" சித்ரா உள்ளிருந்து பேசினாள்.

"ஏய்! உனக்கென்ன பைத்தியம் பிடிச்சிருச்சா! எதுக்கு இப்படி பண்றே?" கோபத்துடன் இரைந்தான் ரமேஷ்.

"எனக்கு ஒண்னும் ஆகலை. ரெண்டு நாளைக்கு முந்தி நீங்க உங்க நண்பர் சுந்தரோட என் காதுல விழாதுன்னு நினைச்சு பேசினதையெல்லாம் கேட்டுகிட்டுத்தான் இருந்தேன். நம்ம குழந்தைக்கு ஆட்டிஸம்[autism]ன்றதால நீங்க உங்க வேலையை அங்கே மாத்திகிட்டு உங்க அப்பா அம்மா சொல்படி இந்தியாவுலியே தங்கப்போறீங்கன்னு சொன்னதெல்லாம் என் காதுலியும் விழுந்தது. ரெண்டு மாச ட்ரிப்புன்னு சொன்னதெல்லாம் வெறும் பொய்தானே! ஒரு பொண்டாட்டியா என்னை மதிச்சு என்கிட்ட இதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணக் கூட இல்லை நீங்க. அவகிட்ட சொல்லிட்டியான்னு கேட்ட சுந்தருக்கு என்ன சொன்னீங்க..... அவளுக்கு இது இப்ப தெரிய வேணாம். அவ இந்த ஊரை விட்டு வர மாட்டா. இங்கேதான் இதுக்கு நல்ல ட்ரீட்மெண்ட்
இருக்குன்னு மறுத்திடுவான்னு சொன்னீங்கள்ல.
ஸோஷியல் செக்யூரிட்டி ஆஃபீஸுக்கு ஃபோன் பண்ணி எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். என் பையனுக்கு எப்படி சிகிச்சை கொடுக்கறதுன்றதை எல்லாம் நான் முடிவு பண்ணிட்டேன். நீங்க போகலாம். உங்க ஃப்ளைட்டுக்கு லேட் ஆயிடுச்சு. நான் வரலை. இதுதான் என் தீர்மானமான முடிவு" சித்ரா உள்ளிருந்ந்து ஒரு ஆவேசத்துடன், ஆனால் அமைதியாகப் பேசினாள்.

'இதுக்காக நீ ரொம்பவே வருத்தப் படப் போறே! உன் திமிருக்கு தகுந்த பலன் உனக்குக் கிடைக்கும்! எங்க அப்பா பேச்சை நான் மீற மாட்டேன். பை!' தன் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினான் ரமேஷ்.

'நான் இருக்கேண்டா உனக்கு! நீதான் எனக்கு முக்கியம்!' வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, சிரித்தபடி செந்திலை அணைத்தாள் சித்ரா!

இதெதுவும் புரியாத பரப்பிரம்மாய் ஏதோ ஒரு பொம்மையை உடைத்துக் கொண்டிருந்தான் செந்தில்!
******************************


"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்." [158]

Read more...

Monday, December 03, 2007

"அ.அ. திருப்புகழ்" - 23 "விறல்மாறன் ஐந்து'

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" -- 23 "விறல்மாறன் ஐந்து"

திருப்புகழ் விளக்கப் பதிவு இட்டு வெகு நாட்களாச்சு, எஸ்.கே! சீக்கிரமா ஒண்ணு போடுங்க என ஒரு அன்புக்கட்டளை இட்டு கூடவே இந்தப் பாடல் தலைப்பையும் கொடுத்த "கேயாரெஸ்ஸுக்கு" எனது மனமார்ந்த நன்றி!

இப்போது பாடலைப் பார்ப்போம்!
******************************************


விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து வெயில்காய
மிதவாடை வந்து கழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ

மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த மடிபாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்த அதிதீரா

அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சும்
அடியா ரிடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே!
**************************************************************

இதை தினமும் 6 முறை சொல்லிவர, திருமணம் ஆகாதவர்க்கு விரைவில் திருமணம் நிகழும்... ! இது வாரியார் வாக்கு!


************************************************************



பொருள்:
[வழக்கம் போல் பின்பாதி பார்த்து, பிறகு முன்பாதி!]

"மறிமானுகந்த இறையோன்"

தவங்கள் செய்து வலிமையடைந்து
பணிவினை மறந்து தருக்குடன் அலைந்த
தாருகவனத்தின் முனிவர்கூட்டச்
செருக்கினை அடக்க சிவபெருமானும்
அழகியவுருவில் அவர்முன் நடக்க

மையலில் மயங்கி முனிவர் பெண்டிர்
அழகிய தமிழ்மகன் பின்னே நடக்க
ஆத்திரமுற்ற முனிவர் கூட்டம்
அழகனை அழிக்க யாகங்கள் செய்ய
அதனில் கிளம்பிய சிறுமான் வடிவை

அம்பல வாணன் மீதே ஏவ
அன்புடன் சிரித்து அப்புள்ளிமானை
தன்னிரு விரலால் தயவுடன் எடுத்து
கரங்களில் சூடிய கயிலைப் பெம்மான்

"மகிழ்ந்து வழிபாடு தந்த"

செருக்கினால் குமரனைப் பணியாதொழித்த
பிரமனை அழைத்து மூலப்பொருளாம்
பிரணவத்தொலியின் பொருள்தனைக் கேட்டு
அதனை அறியா திகைத்த நான்முகன்
தலையினில் குட்டி சிறையினில் தள்ளி

சிருட்டித்தொழிலைத் தானே செய்து
கந்தவெற்பினில் கம்பீரமாக
கந்தக்கடவுளும் அமர்ந்திட்ட வேளையில்,
கண்நுதற்கடவுள் குமரனை அழைத்து
பிரமனைச் சிறைவிடப் பரிவுடன் சொல்ல,
ஐயனின் சொல்லை மகிழ்வுடன் ஏற்று

பிரமனை விடுத்து, புத்திகள் சொல்லி
தந்தையுடனே தனித்திரும் காலை,
பிரணவப்பொருளைத் தனக்கும் சொல்ல
அப்பனும் வேண்டிட சுப்பனும் மிடுக்காய்
இடம்,பொருள், ஏவல் அறிந்து

கேட்டலும் சொல்லலும் நிகழ்ந்திடல் வேண்டும்
எனவே உரைக்க, அதனின் தத்துவம்,
சீடன் பணிவின் திறனை இந்த
உலகுக்குணர்த்த, அருட்பெரும்ஜோதி
தணிகை சென்று கண்களை மூடி

ஒரு கணப்பொழுது தவமுமியற்ற
[தணிகை மலைக்கு இதனால் "கணிக வெற்பு" என்னும் பெயரும் இதனால் வந்தது!]
சுப்பிரமணியன் அவர்முன் தோன்ற
ஆலவாய் அண்ணல் வடதிசை நின்று
குருவின் முன்னே பணிவுடன் வணங்கி

மூலப்பொருளின் பொருளுரை கேட்டார்
ஐம்முகக்கடவுள் அறுமுகக்கடவுளின்
சீடனாய் இருந்து குருவிடம் கேட்டல்
எப்படி என்பதைப் பாருக்குணர்த்திய,

"மதிபாளா"

ஞான வடிவினரே!

"மலை மாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேல் எறிந்த"

கெடுமனங்கொண்ட கொடுங்கோலரக்கன்
சூரன் என்பான் சிவனை வணங்கிப்
பலவரம் பெற்று தம்பியர் துணையுடன்
தேவர் மானிடர் முனிவரை வருத்தி
ஆட்சி செய்யும் வேளைதன்னில்,

முனிவரும் தேவரும் இறைவனை துதிக்க
ஐயனும் அவர்மேல் கருணை கொண்டு
நெற்றிக்கண்ணில் தீப்பொறி கிளப்பி
ஆறுமுகனாம் ஓருரு உதித்தனன்!

சக்திவேற் படையைத் தாயவள் அளிக்க
அதனைக் கொண்டு கிரௌஞ்சமலை பிளந்து
தம்பியரைப் போர்க்களத்தில் வென்று
சூரனைப் போரில் பொருதிய வேளை
அண்டரும் விண்டரும் நடுங்கிடும் வடிவில்
மாமரமாகி சூரன் நின்றனன்

மாமர அசைவினில் அண்டம் நடுங்க
அதனுடன் சேர்ந்து அகிலமும் ஒடுங்க
அதனைக் கண்ட செந்தில்வேலோன்
வேற்படைவிடுத்து 'உடலைப் பிளந்து
வருகுதி!' என்று ஆணை பிறப்ப,

சங்கார வேலும் காற்றினைக் கிழித்து,
ஒளியினைக் கிழித்து, விண்ணினைக் கிழித்து
தீச்சுடர் பரப்பி நிலத்தில் நிமிர்ந்த
மராமரம் தன்னை கூறாய்ப் பிளக்க

"அதிதீரா"

வீரச்செயல் புரிந்திட்ட மாவீரனே!

"அறிவால் அறிந்து இருதாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே"

பாசம் என்னும் ஒருபேய் வாட்டும்
பசுவெனும் மறுபேய் இறைவனை மறைக்கும்
இவ்விரு மாயை இரண்டையும் ஒழித்து
மெய்யறிவாலே இறையை உணர்ந்து

நீயே சரணம் எனும் நினைவாலே
கந்தனின் திருத்தாள் மலரடி பணிந்து
வேண்டும் அன்பர்கள் வாழ்வினில் தொடரும்
இடர்களை நொடியில் அகற்றிடும் தலைவா!

"அழகான செம்பொன் மயில் மேல் அமர்ந்து
அலைவாய் உகந்த பெருமாளே!"

அழகே உருவாய் செம்பொன் நிறமாய்
திகழும் மயிலின் மேலே அமர்ந்து
செந்தூர் என்னும் சீரலைவாயில்
மகிழ்வுடன் அருளும் பெருமைக்குரியோனே!

"விறல்மாரன் ஐந்து மலர் வாளி சிந்த"

இவனது கணையால் மயங்குவர் கோடி
எவரையும் வீழ்த்திடும் காமக்கணையோன்
முனிவருமிவனது கணை பிழையாரே
தேவரும் கெட்டே மதியழிந்தொழிந்தார்
பிரமனும் மாலுமே தப்பியதில்லை
எனவே இவனே விறல்மாரனாவான்!
அவனே அழகிய மன்மதன் என்பான்!

அவனது கையில் வில்லொன்றுண்டு
அவன் தொடு கணையோ ஓரைந்தாகும்!

தாமரைக் கணையால் உன்மத்தம் பிறக்கும்
மாவின் கணையால் காதல் விளையும்
அசோகக் கணையால் கூடுதல் நிகழும்
முல்லைக் கணையால் விரகம் விளையும்
நீலக் கணையால் ஈர்த்தல் நிகழும்!

சொல்லும் நினைவும் ஒன்றெனவாகி
ஒருவருக்கொருவர் உயிர்பால் இரங்கி
நினைந்து ஆங்கே சோகம் தழுவி
அவரை நினைந்து பலவாறு பிதற்றி
நினைவொழிந்தங்கே மயக்கம் விளைந்து
ஐவகைக் காதல் நோய்களும் நிகழும்

இவ்வைந்து கணைகளும் ஒருங்கே செலுத்தி
மாறன் கணைகள் என்னை வருத்த,

"மிகவானில் இந்து வெயில் காய"
[இதனை "வானில் இந்து வெயில் மிக காய" எனப் படிக்கவும்]

சந்திரன் கணைகள் காதலைக் கூட்டும்
வானில் வீசும் சந்திரக் கணைகள்
பகலில் கொளுத்திடும் வெயில் போல் காய்ந்திட
மிகவே துன்பம் காதலில் வருத்த,

"மித வாடை வந்து தழல் போல ஒன்ற"

குளிரும் கிரணம் சுடுவது என்றால்
வீசும் தென்றலும் வெந்திடுமன்றோ!
மெல்லிய தென்றல் வீசுதல் கூட
நெருப்பினைப் போலே சுடுவது போல,

"விலைமாதர் தந்தம் வசை கூற"

வினைவசம் தம்மை இழந்திட்ட மகளிர்
மனம்போன வண்ணம் சுடுமொழி கூறி
வதை செய்திடவும்,

"குறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட
கொடிதான துன்ப மயல் தீர"

சீவனென்னும் ஆன்மா ஐம்புலனாம் வேடுவரின்
ஆளுகையில் அகப்பட்டு உடலென்னும் மலைக்குள்ளே
உனைச் சேரும் வழியின்றி உழலுவதைப் பார்க்கிலையோ!
பரமாத்மா உடன் சேரும் நாளைத்தான் ஜீவாத்மா
வெகுநாளாய்க் காத்திருந்து விருப்புடனே நாடுதம்மா!
ஐம்புலனும் வேடுவராய் அலைக்கழித்து கொடுமைசெய
மலைநடுவே பதுங்கியிரும் பறவை படும் துயர் போல
ஜீவாத்மா மயக்குற்ற துயர் நீங்கி சுகம் விளைய,

"குளிர்மாலையின்கண் அணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ"

குளிர் பரவும் மாலைநேர வேலையதில்
நின் மார்பில் சூடிநிற்கும் மணமாலை தனைத் தந்து
என் துயர் தீரும் நிலைதந்து இவண் வந்து
எனைச் சேர்த்து அணைய மாட்டீரோ, குமரவேளே!!!

******************************************************


அருஞ்சொற்பொருள்:

விறல்மாரன்= மன்மதன்
வாளி= அம்பு, கணை
இந்து= நிலவு
தந்தம்= பற்கள் [ இங்கு பற்களில் இருந்து பிறக்கும் சொல எனப் பொருள் வரும்]
மறிமான்= சிறிய மான்
மதிபாளா= ஞானம் மிகுந்தவர்
வேலை= கடல்
அலைவாய்= திருச்செந்தூர்
***********************************************

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
***********************************************

Read more...

Wednesday, November 28, 2007

"ஐயப்பன் தினசரி பூஜை"

"ஐயப்பன் தினசரி பூஜை"


கார்த்திகை 1-ம் தேதி ஆத்திக அன்பர்களுக்கு ஒரு முக்கிய தினம்!
ஐயப்ப பக்தர்கள் அன்றுதான் மாலை அணிந்து, மண்டலவிரதத்தைத் துவங்குவார்கள்!
நானும் கடந்த பல ஆண்டுகளாக இந்த விரதத்தை செய்து வருகிறேன்.
எளிய தமிழில் ஒரு பூஜை முறை எழுத வேண்டும் என்ற எண்ணத்தில், இதை எழுதி, நான் நடத்தும் பூஜைகளில் இதனைக் கடைபிடித்தும் வருகிறேன்.
ஐயப்ப பக்தர்களுக்காக இதை இங்கே வெளியிடுகிறேன்.
தேவைப்படுபவர்கள் இதனைப் பின்பற்றலாம்..... பிடித்திருந்தால்!

முதலில் பூஜை முறை பாக்களை அளித்துவிட்டு, பின்னர் இதன் தொடர்பாக சில பதிவுகள் அளிக்க எண்ணம்.

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

--------------------------------------------------------

"ஐயப்பன் தினசரி பூஜை"
[எளிய தமிழில்]

விநாயகர் காப்பு:
முழுமைக்கும் முதலான வெண்களிற்று விநாயகனே!
பழுதின்றி பூஜை நடக்க முன்னின்று அருள் செய்வாய்!


குரு வணக்கம்:
குருவுக்கும் குருவான, திருவான குருவுருவே!
உறுமனத்தில் அன்பிருக்க, உருவாக அனுக்கிரஹிப்பாய்!


தீப வணக்கம்:
வெளியிருட்டை விலகச் செய்யும் சுடரான நெய்விளக்கே!
அறியாமை இருளகற்றி அடியேனைக் காத்திடுவாய்!

ஐயப்பன் அழைப்பு:
அந்தமும் ஆதியில்லா, அருட்பெரும் ஜோதிதேவா!
வந்திடாய் வந்திடாய் நீ! வந்தெங்கள் பூஜை ஏற்பாய்!

ஐயப்பன் வரவேற்பு:
வந்தனை வந்தனை நீ! வரதே வான்முகிலே ஐயா!
சிந்தனை களித்து இங்கே, சிறப்புடன் வீற்றிருப்பாய்!

சந்தனம் அளிப்பு:
பந்தனை அறுத்து எம்மை, பவக்கடல் தாண்டச் செய்ய,
சந்தனம் ஏற்பாய் ஐயா! சபரிமலை வாசனே!

குங்குமம் அளிப்பு:
ஆரியங்காவு ஐயனே! அடியரைக் காக்க நீயே,
குங்குமம் ஏற்பாய் ஐயா! குளத்துப்புழை பாலகனே!

மலர் சாற்றல்:
அலர்ந்திடக் கொண்டுவந்தோம்! அல்லல்கள் தீரவென்று,
மலர்களை ஏற்று எங்கள், மயக்கமும் தவிர்ப்பாய் ஐயா!

அக்ஷதை தூவல்:
பக்ஷமும் கொண்டு எங்கள், பவவினை பறந்து ஓட,
அக்ஷதை ஏற்றுக்கொண்டு, அருள்புரி ஐயப்ப தேவா!

தாம்பூலம் அளிப்பு:
வேம்பாகும் உலகவாழ்வு, வேதனை தீரவென்று
தாம்பூலம் ஏற்று எம்மை, தயாபரா ஆதரிப்பாய்!

கனி படைத்தல்:
பனிரவி பட்டதைப் போல், பறந்திடத் துயரமெல்லாம்,
கனியிதை ஏற்றுக்கொண்டு, கடைக்கண்ணால் பார்த்திடாயோ!

[ஐயப்பன் ஸஹஸ்ரநாமம்/அஷ்டோத்திரம்/ஸ்தோத்திரங்கள்/ பஜனைப் பாடல்கள் இப்போது செய்யலாம்.]

தூபம்:
பாபங்கள் விலகிச் சித்தம், பரிசுத்தமாகவென்று,
தூபமும் ஏற்றுக்கொண்டு, துயர்கெட அருள்வாய் ஐயா!

தீபம்:
தாபமாம் பிறப்பிறப்பு, தணித்துயர் முக்திமேவ,
தீபமும் ஒளிர ஏற்று, திகம்பரா அருள்வாய் ஐயா!

நைவேத்தியம்:
ஐவேதனைப் புலன்கள், அடங்கிட ஐயா இந்த,
நைவேத்யம் ஏற்றுக் கொள்வாய்! நாயகா லோகவீரா!

கற்பூரம்:
அற்பமாம் ஜகத்துமாயை, அழிந்தருள் ஞானம் மேவ,
கற்பூரஜோதி ஏற்று, கனிவுடன் அருள்வாய் ஐயா![x3]

துதி:
ஐயனே! அருளே! போற்றி! ஐயப்பதேவா போற்றி!
எம்மையே ஆதரித்து, இருள்கெட அருள்வாய் போற்றி!
மும்மலம் அழிந்து ஞானம், முற்றிட விதிப்பாய் போற்றி!
இம்மையில் இன்பமெல்லாம் இருந்திடச் செய்வாய் போற்றி!

வேண்டல்:
அருளோடு செல்வம் ஞானம், ஆற்றலும் அன்பும் பண்பும்,
பொருள்நலம் பொறுமை ஈகை, பொருந்திடச் செய்வாய் ஐயா!
ஆயுள் ஆரோக்யம் வீரம், அசைந்திடா பக்தி அன்பு,
தேயுறாச் செல்வம் கீர்த்தி, தேவனே அருள்வாய் ஐயா!

பிழை பொறுக்க வேண்டல்:
அறியாமை இருளில் சிக்கி, ஆடிடும் பேதையோம் யாம்!
தெரியாமல் செய்யும் குற்றம் தேவனே பொறுப்பாய் ஐயா!

மந்திரம் சடங்கு வேள்வி, மதிப்புறு உபசாரங்கள்,
வந்தனை துதிகள் ந்யாஸம், வழுத்தின ஜபமும் தியானம்
இந்தவார் செய்தபூஜை, இருந்திடும் பிழைகள் எல்லாம்,
சிந்தையில் கொள்ளாதேற்று, சீர் பெற அருள்வாய் ஐயா!

கனிமலர் தூப தீபம், கற்பூர நைவேத்யங்கள்,
நனியிலாச் சிறிதானாலும், ஐயப்பா நிறைவாய்க் கொள்வாய்!

[தெரிந்த அளவில் சரணங்கள் சொல்லவும்!]
இதன் தொடர்ச்சி நாளை வரும்!

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

Read more...

Monday, November 26, 2007

"குமார கவசம்"

"குமார கவசம்"

கந்தர் சஷ்டியை முன்னிட்டு என் மனதில் தோன்றிய ஒரு உந்தலின் காரணமாக நானும் ஒரு
கவசம் எழுதினேன். "சித்தர்" கதை அப்போது நிறைவுறாதலால், இதனை அப்போது இடவில்லை.
இதை எந்த வகையிலும் பெரியோர்கள் எழுதியவற்றுடன் ஒப்பிட வேண்டாம். என் முருகனுக்கு நான் செலுத்திய சிறு காணிக்கை என்ற அளவில் படித்து,
விரும்பினால் கருத்து சொல்லவும். நன்றி.

வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரா!

"குமார கவசம்"


படிப்போர்க்குப் பெருமைவரும் , பகையும்போம், பண்ணில்

வடிப்போர்க்கு ஞானம் பெருகி - சிவமும் கூடிவரும்

பாமரரும் படித்தவரும் புகழ்ந்தேத்தும் சிவ

குமாரக் கவசந் தனை!

எனதுஅகமடங்க என்னகம்புகுந்த
மனமயில் வாகனனே கதி!


--நூல்--

குமரனின் குணங்களைக் குற்றமில்லாமல்
அடியவன் நானும் அன்புடன் கூறிட
கஜமுகன் கணேசன் கால்களைப் பிடித்தேன்
காத்திட வேணும் கருத்தினில் நிறையணும்

மோஹனக்குமரன் மயிலினில் ஏறி
வேகமதாக என்னிடம் வந்து
வாகனமாக என் மனம் கொண்டு
காக்கணும் இந்தப் பாக்களில் நின்று

ஆரணம் ஓதும் அடியவர்க்கெல்லாம்
காரணமின்றியே காத்திட வருவான் [10]
நாரணன் மருகன் நன்மையே புரிவான்
சீரலைவாயோன் செம்மையே செய்வான்

கந்தாவென்றால் இந்தாவென்பான்
கந்தாவென்றால் சொந்தமாய் நிற்பான்
கந்தாவென்றால் கவலைகள் தீரும்
கந்தாவென்றால் மூத்தவன் மகிழ்வான்

என்னகம் அகற்ற இங்கே வருக
என்னுளமறிந்து விரைவினில் வருக
கண்ணெனப் போற்றும் கண்நுதலோனிடம்
சொல்லியும் வருக சடுதியில் வருக [20]

அன்னை பார்வதி மடியினிலிருந்து
மெல்லவிறங்கி மயிலினில் வருக
அண்ணன் கணேசன் அடியைப் பணிந்தே
அவனருள்தனையும் எடுத்தே வருக

மாமன் மாமியர் அனைவரை வணங்கி
மகிழ்வுடன் வருக மயிலினில் வருக
அழைத்ததும் வருக அணைத்திட வருக
எளியேன் செய்திடும் பிழை பொறுத்தருள்க

அமரர்தலைவா வருக வருக
குமரநாயகா வருக வருக [30]
அன்பருக்கன்பா வருக வருக
துன்பம் தொலைத்திட வருக வருக

சரவணபவனே வருக வருக
ரவண பவச வருக வருக
வணப வசரனே வருக வருக
ணபவ சரவ வருக வருக

பவசர வணனே வருக வருக
வசர வணப வருக வருக
சடக்ஷரத்தோனே வருக வருக
சஷ்டியின் தலைவா வருக வருக [40]

கார்த்திகைபாலா வருக வருக
சிவசக்திபாலா வருக வருக
தேவர்கள் துன்பம் தீர்த்திட வந்தாய்
தேவாதிதேவன் நெற்றியில் பிறந்தாய்

தீப்பொறி வெப்பம் தாங்கிடஅஞ்சி
வாயுவும் தீயும் தூக்கிடச் சென்று
கங்கையில் இடவே அவளும் வறள
சரவணப்பொய்கையில் கமலத்தில் தவழ்ந்தாய்

கார்த்திகைப்பெண்டிர் மார்பினில் இருந்தாய்
அன்னையும் மகிழ்ந்து அன்புடன் சேர்த்து [50]
ஆசையில் அணைத்து அருளது வழங்க
ஆறுமுகன் என அருள்செய வந்தாய்

சூரனை வேலால் கூறாய்ப் பிளந்து
சேவலும் மயிலுமாய்த் தன்னுடன் வைத்துத்
தேவர்கள் குறைகளைக் கனிவுடன் தீர்த்துத்
தேவகுஞ்சரி கரம்தனைப் பிடித்துத்

தேவர்கள் சேனாபதியானவனே
பாவங்கள் போக்கும் பன்னிருபுயனே
குறமகள் வள்ளியைக் கடிமணம் புரிய
கரிமுகன் அண்ணனைத் துணைக்குமழைத்து [60]

வேடனாய் விருத்தனாய் வேங்கை மரமாய்
வேடமணிந்து லீலைகள் புரிந்து
வள்ளியின் மனதினில் கள்ளமாய்ப் புகுந்து
நம்பிராஜனை நயமாய் வென்று

குறமகள் வள்ளியை மணம் செய்தவனே
தேவகுஞ்சரியை இடப்பக்கம் வைத்து
வள்ளியை வலப்பக்கம் வடிவுடன் இருத்தி
விண்ணவர் மண்ணவர் துயர்களைத் துடைத்துத்

திருப்பரங்குன்றம் , திருச்சீரலைவாய்
திருவாவினன்குடி திருவேரகமும் [70]
திருத்தணி பழமுதிர்சோலையமர்ந்து
அறுபடை வீட்டில் அருள் புரிபவனே

என் தலை வைத்துன் பொன்னடி பணிந்தேன்
தலைமுதல் கால்வரை தயவுடன் காக்க
விழிகளிரண்டையும் வேலவர் காக்க
செவிகளிரண்டும் செந்திலோன் காக்க

நாசியை நல்லூர்க் கந்தன் காக்க
கன்னமிரண்டும் கதிர்காமன் காக்க
செவ்வாயதனைச் சேனாபதி காக்க
நாவையும் பல்லையும் அருணையோன் காக்க [80]

கழுத்தும் கைகளும் கந்தனைத் துதிக்க
கனிவோடு குன்றக் குடியோன் காக்க
மார்பையும் வயிற்றையும் மருதமலை காக்க
அமரர் தலைவன் குறிகளைக் காக்க

கால்களை விரல்களை விராலிமலை காக்க
ஆசனவாயை அழகன் காக்க
முதுகைப் பரிவுடன் பிரான்மலை காக்க
முழுவுடலும் முத்துக் குமரன் காக்க

எவ்வித நோயும் எவ்வித இன்னலும்
எனையணுகாமல் எட்டுக்குடி காக்க [90]
காலை தொடங்கி துயிலும் வரையிலும்
புரியும் செயல்கள் அனைத்தையும் காக்க

கந்தனின் பெயரை அனுதினம் துதிக்க
கந்தா கடம்பா கருணாகரனே
கார்த்திகைமைந்தா மயில்வாகனனே
சஷ்டிகுமரா ஷண்முகா வேலா

அறுபடைக் குமரா அருணாசலனே
சிவனின் குருவே குருவின் உருவே
ஔவைக்கு அருளைப் பொழியும் குமரா
தணிகாசலனே தண்ணீர்மலையே [100]

தங்கரதத்தில் வலம்வரும் வேலா
மோஹங்கள் தீர்க்கும் மோஹனச் செல்வா
செல்வக்குமரா செந்திலாண்டவா
சூராதி சூரா வீராதி வீரா

விஜயமளிக்கும் விஜய குமாரா
சரவணபவனே ரத்னகுமாரா
வள்ளிமணாளா நவமணியாண்டவா
பவமழிப்பவனே வரமளிப்பவனே

சந்திர சூரியர் தாரகை போற்றும்
இந்திரன் மகளின் இதயக்காவலா [110]
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகாவெனவே

மூச்சுளவரைக்கும் உன்றனைப் போற்றி
உன்னில் உருகி உன்னுள் கரைந்து
அற்புத ஞானம் அருணைக்கு அருளித்
தந்ததுபோலெனைத் தயவுடன் காக்க

ஏழையேன் என்றன் இன்னல் களைக
என்றும் என்னை உன்னுடன் கொள்க
உன்னைப் போற்றியே உய்ந்திடும்வண்ணம்
ஒருவரம் தருக உன்னடி தருக [120]

சங்கரன் குமாரன் கவசமிதனைச்
சந்ததம் பாடச் சங்கடம் விலகும்
சந்தானபாக்கியம் சகல சுகங்களும்
சஞ்சலமின்றிச் சந்ததம் சேரும்

கருணைக்கடலே கந்தா போற்றி
பெருமைக்குரிய தலைவா போற்றி
அறுபடைவீட்டில் அமர்ந்தோய் போற்றி
அன்பருக்கருளைப் பொழிவோய் போற்றி

சீர்மிகு வள்ளி சரணங்கள் போற்றி
வான்மிகு தேவ குஞ்சரி போற்றி [130]
அறுமுகன் அடியார் அனைவரும் போற்றி
அவரைப் பணிவார் மலர்ப்பதம் போற்றி

சரணம் சரணம் ப்ரணவா சரணம்
சரணம் சரணம் குருகுகா சரணம்
சரணம் சரணம் ஸ்கந்தா சரணம்
சரணம் சரணம் சரவணபவ ஓம் !! [136]

ஓம்! ஓம்! ஓம்!



Read more...

Friday, November 09, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 41

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 41


முந்தைய பதிவு இங்கே!


39.
"ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நனிய துடைத்து." [353]

கந்தன் அந்தப் பாழடைந்த கோவிலுக்குள் நுழைந்தான்!

இரவு நெருங்கிக் கொண்டிருந்தது.

புளியமரம் அவனைப் பார்த்து 'இத்தனை நாளா எங்கே போயிருந்தே! வா! வா!' என்பது போல் தன் கிளைகளை ஆட்டியது!

தன்னோட ஆடுகள் அதனடியில் படுத்துறங்கும் காட்சி அவன் மனத்துள் விரிந்தது.

அந்தக் கனவு மட்டும் வராமல் இருந்திருந்தால்....!!!!!!!!!!!

இப்போது ஆடுகள் இல்லை. அவன் கையில் ஒரு கடப்பாறை!

அப்படியே அந்த மரத்தடியில் உட்கார்ந்தான். அவன் மனத்துக்குள் இதுவரையில் அவன் கடந்து வந்த காட்சிகள் ஒரு நிழற்படம் போல ஓடியது.
திரும்பத் திரும்ப வந்த அந்த கனவு, அந்த குறி சொன்ன கிழவி, தங்கமாலை அணிந்த கிழவர், பணத்தைத் திருடிக் கொண்டு ஓடிய திருடன், அண்ணாச்சி......
இப்படியே அனைவரும் அவன் கண்முன் வந்தனர். எல்லாமே ஒரு காரண காரியத்தோடத்தான் நடந்திருக்கு. எப்படி தவறாக முடியும்? அவன் எண்ணம் இன்னமும் தொடர்ந்தது.

கடைசியாக, மஹாபலிபுரத்தில் அந்தத் திருடன் சொன்ன சொல் அவன் காதில் மீண்டும் ஒலித்தது!

"தெற்கு கோடியில கடலோரத்துகிட்ட இருக்கற ஒரு ஊருல ஒரு பாழடைஞ்ச கோயிலுக்கு தெற்கு சுவருக்குப் பின்னால ஒரு பெரிய புதையல் உனக்காக காத்திருக்குன்னு! அங்கே ஆடுல்லாம் கூடமேய்ப்பாங்களாம்! சாமி சிலை கூட அங்கே இருக்காதாம்!அங்கே இருக்கற புளியமரத்துக்கு அடியில தோண்டினா, ஒரு பெரிய புதையல் கிடைக்கும்னு அந்தக் கனவுல சொல்லிச்சு! புத்தி கெட்டவந்தான் இது மாரி கனவையெல்லாம் நம்பிக்கிட்டு அவ்ளோ தூரம் போவான். சும்மனாச்சும் ஒரு கனா வந்திச்சுன்னு எவன் அவ்ளோதூரம் போவான்!"

சிரித்துக் கொண்டே எழுந்து, கடப்பாறையை எடுத்து அந்த மரத்தடியில் ஒரு போடு போட்டான்!

'பெரிய கில்லாடிய்யா நீ!' வானத்தைப் பார்த்துக் கத்தினான் கந்தன்! 'எல்லாமே உனக்கு அப்பவே தெரியும்! அதான் அந்த துறவிகிட்டக் கூட ஒரு கட்டித் தங்கத்தைக் கொடுத்து வைச்சிட்டுப் போனே! நான் ரத்தம் வழிய, வழிய, அவர் மடத்துக் கதவைத் தட்டினப்ப, அவர் என்னைப் பார்த்து சிரிச்ச சிரிப்பு இருக்கே, அது ஆயுசுக்கும் மறக்காது! என்கிட்ட முன்னேயே சொல்லியிருக்கலாம்ல! ரொம்பவே குசும்புதான்யா உனக்கு!'

"இல்லை! நான் அப்பவே சொல்லியிருந்தா நீ அந்தக் கல்லுக்கோவிலைப் பார்த்திருக்க மாட்டே! அழகா இருந்திச்சுல்லே அது! கூடவே எத்தனை அனுபவங்கள்! " என ஒரு குரல் வானத்திலிருந்து கேட்டது!

நிமிர்ந்து பார்த்தான்! ஒரு அழகிய வெண்புறா தன் சிறகுகளை விரித்தபடி அமைதியாகப் பறந்து கொண்டிருந்தது!

'ரொம்பவே லொள்ளுதான் உங்களுக்கு!' எனச் சிரித்தபடியே சொல்லிக் கொண்டே மீண்டும் கடப்பாறையைப் போட்டான் கந்தன்!

ஒரு அரைமணி நேரத்தில் 'ணங்'கென்று எதுவோ தட்டுப் பட்டது!

சிறிது நேரத்தில், ஒரு இரும்புப்பெட்டி தெரிந்தது! அதைத் திறந்தான்! உள்ளே, தங்க நாணயங்கள், நகைகள்!!

தன் கைப்பையில் இருந்து பெரியவர் கொடுத்த அந்த இரு கற்களை எடுத்தான்.

இதற்கு முன் ஒரே ஒரு தடவைதான் அவைகளை எடுத்திருக்கிறான். இவைகளை எடுக்க வேண்டிய தேவையே இல்லாமல் அவனுக்கு சகுனங்கள் உதவி விட்டன!

அந்தக் கற்களை மார்போடு அணைத்துக் கொண்டான்.

இப்போது அவைகள்தான் "இதெல்லாம் கனவல்ல; நிஜம்தான்!" எனச் சொல்லிய அந்த தங்கமாலை அணிந்த பெரியவரின் நினைவாக இருப்பவை! அதுவே அவரை மீண்டும் அவன் கண்முன்னே நிறுத்தின,,.... அவரை இனி பார்க்க முடியாதெனினும்!

'இதெல்லாம் கனவல்ல! நிஜம்தான்! வாழ்க்கை எப்போதுமே தான் கண்ட கனவை விடாமல் தொடர்ந்து செல்பவர்க்கு நல்லதையே செய்கிறது!' கந்தனின் மனது துள்ளியது!

குறி சொன்ன கிழவிக்கு ஒரு பங்கு கொடுக்க வேண்டுமே என்று நினைவுறுத்தியது!

காற்று ஒன்று மெல்ல வீசியது!

ஊழிக்காற்றல்ல அது!

இதமான ஒரு மலைவாசம் அதில் வீசியது!

மூலிகைகளின் மணம் அதில் கலந்து வந்தது!

அதனின்று ஒரு தனி மணம் கமழ்ந்து அவன் இதழ்களில் வந்து முத்தமிட்டது!

கந்தன் சிரித்தான்.

இதுதான் முதல் தடவையாக அவள் அனுப்புவது!

'இதோ வருகிறேன் பொன்னி!' உரக்கக் கத்தினான்!


[முற்றும்]
***********************************************************************************

"ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நனிய துடைத்து." [353]

****************************************************************

ஒரு மண்டலகாலம் இந்தக் கதை வந்தது ஒரு எதிர்பாராத நிகழ்வு!

தனது 82-ம் பிறந்தநாளைக் கொண்டாடும் "சித்தருக்கெல்லாம் பெரிய சித்தரின் " பிறந்தநாளன்று நிறைவுறுவது இன்னும் சிறப்பு!

இக்கதையை இதுகாறும் தொடர்ந்து படித்து, பின்னூட்டம் அளித்த அனைவர்க்கும் எனது நன்றி.

முன்னமே சொன்னதுபோல இது என் கற்பனையில் உதித்த கதை அல்ல. என்னை மிகவும் பாதித்த 'தி அல்கெமிஸ்ட்' என்னும் கதை இதற்கு ஆதாரம்.

அத்துடன் இன்னும் சில பெரியவர்கள் சொன்ன ஆன்மீகக் கருத்துகளையும் சேர்த்து, நம்மவர்க்குப் புரியும் வகையில் புதிய களம் அமைத்து, நமது தமிழ்க்களத்தில் உலவ விட்டிருக்கிறேன். இதை ஊகித்து பின்னூட்டம் இட்டவர்களுக்கு என் நன்றி.

உங்கள் கனவுகளைத் தொடர்ந்து தீவிரமாகச் செல்லுங்கள் ! கனவுகள் மெய்ப்படட்டும்!

அன்புவழி அனைவரும் செல்ல வாழ்த்துகள்!

நன்றி தெரிவிக்கும் இந்நாளில் [Thanks giving Day] அனைவர்க்கும் நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன்!









Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 40

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 40

முந்தைய பதிவு இங்கே!

38.
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு." [423]

"எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவது அறிவு." [426]



அக்கம் பார்த்துக் கொண்டே, பயமின்றி நடந்தான் கந்தன்.

கூட சித்தரும் இல்லாததால், தன் மனது என்ன சொல்லுகிறதெனக் கவனிக்கத் தொடங்கினான். புதையல் இருக்குமிடத்தை அதுதான் இனிக் காட்டும் எனவும் நம்பினான்.

"புதையல் எங்கே இருக்குதோ, அங்கேதான் உன் மனசு உன்னை இட்டுச் செல்லும்!' சித்தரின் குரல் உள்ளே கேட்டது.

ஆனால், அவன் இதயம் வேறென்னவெல்லாமோ பேசிக் கொண்டிருந்தது.

'உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு கந்தா! ஒரு சாதாரண சின்னப் பையனா ஆடு மேய்ச்சுகிட்டு இருந்த நீ, எதையெதையெல்லாமோ கடந்துவந்து, இப்ப அநேகமா புதையல் எடுக்கற இடத்துகிட்ட வந்துட்டே! பெரிய கில்லாடிதான் நீ! காத்தாக் கூட மாறிக் காமிச்சிட்டே!' என்று புகழ்ந்தது.

'அதெல்லாம் கிடக்கட்டும். அது நடந்து முடிஞ்ச கதை. அதைப் பத்தி இப்ப என்ன பேச்சு? நீதான் எனக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கணும் இப்ப' என அதட்டினான்.

'உன் கண்ணுலேருந்து தண்ணி வர்ற அளவுக்கு எங்கே, எந்த இடத்துல உனக்கு ஒண்ணு நடக்குதோ அங்கே நான் இருப்பேன். உன் புதையலும் தான்!' என்று கிசிகிசுத்தது.

மெதுவாக நடந்தான் கந்தன். இரவு தொடங்கி முழுநிலவு வெளிவந்து வெளிச்சத்தைக் கூட்டியது. குளிர்ந்த காற்று இதமாக வீசியது!

ஒரு சின்ன குன்று எதிர்ப்பட்டது. அதன்மீது ஏறினான். அவன் கண்ட காட்சி அவனைப் பரவசப்படுத்தியது!

அழகிய கருங்கடல் அலைகளோடு ஆரவாரித்தது. அதன் கரையருகே அழகிய கற்பாறைகளால் குடைந்தெடுத்த கோவில்கள்! நிலவுவெளிச்சத்தில் எல்லாமே பளபளத்தன.

கந்தனின் கால்கள் தானாக மண்டியிட்டன. தரையை முத்தமிட்டு வணங்கினான்.


கண்களிலிருந்து கரகரவெனக் கண்ணீர் வழியத் தொடங்கியது!
'எனக்கு ஒரு கனவைக் காண்பித்து, அதை ஒரு பெரியவர் மூலமா உறுதிப்படுத்தி, ஒரு வெள்ளைக்காரன் மூலமா ஆதாரம் கொடுத்து, ஒரு சித்தர் மூலமா அதை அடையவைத்ததற்கும், இறைவா! உனக்கு என் நன்றி! அது மட்டுமா! காதல் நிரம்பிய ஒருவனால் அவன் நினைத்ததை அடைய முடியாமல் போகாது எனத் தனக்குக் காட்டிய ஒரு பெண்ணை எனக்குக் கொடுத்ததற்கும் சேர்த்தே நன்றி!'

மனமார, வாய்விட்டுக் கதறினான் கந்தன்!

இப்படியே திரும்பிவிடலாமா என யோசித்தான்.


'கனவில் கண்டது உண்மைதான் எனத் தெரிஞ்சாச்சு.இப்படியே திரும்பி, பொன்னிகிட்ட போயிறலாம். இருக்கற தங்கத்தை வித்து, கொஞ்சம் ஆடுமாடு வாங்கி, அதை வைச்சு தொழில் பண்ணி மானமா வாழ்ந்திறலாம். இப்ப சித்தருக்குத் தெரியாத வித்தையா? அவர் தங்கம் பண்றதுகூடத் தெரிஞ்சு
வைச்சிருக்காரு. அதுக்காக இதை என்ன, எல்லார்கிட்டயும் போயிக் காமிச்சுகிட்டாரா என்ன? இதைப் பாக்கறதுக்குள்ள, என்னெல்லாம் தெரியணுமோ, அதையெல்லாம் தெரிஞ்சுகிட்டாச்சு. இப்ப புதையலுக்கு என்ன தேவை?' இப்படியெல்லாம் எண்ணம் ஓடியது.

'இவ்வளவு தூரம் வந்தாச்சு. கனவு மெய்ப்படும் நேரம் வந்தாச்சு! இதோ இன்னும் கொஞ்ச தூரம் போனா, எதுக்காக வந்தோமோ அது கிடைக்கப் போகுது. அதில்லாம திரும்பினா, இதுவரைக்கும் பட்ட பாடெல்லாம் வீண்!'என நினைத்துக் கொண்டே கண்களைத் தாழ்த்தி தான் மண்டியிட்ட இடத்தைப் பார்த்தான்.

அவன் கண்ணீர் பட்ட இடம் கண்ணில் பட்டது! ஒரு அழகிய வண்ணத்துப் பூச்சி எங்கிருந்தோ இந்த நேரத்தில் பறந்து அவன் தோளில் வந்து உட்கார்ந்தது! வண்ணத்துப்பூச்சி பறப்பது ஒரு நல்ல சகுனம் என அவன் மனது சொல்லியது!

சுற்று முற்று பார்த்தான். யாருமில்லை என உறுதிப்படுத்திக் கொண்டபின், அந்த இடத்தைக் கைகளால் பரபரவெனத் தோண்டத் துவங்கினான். அருகில் கிடந்த ஒரு கம்பையும் வைத்துக் கிளறினான். மண் பிரதேசமாக இருந்ததால் தோண்டுவதும் எளிதாகவே இருந்தது!


தோண்டத் தோண்ட மண்ணும், சிறு பாறைகளும் வந்ததே தவிர புதையல் எதுவும் தென்படவில்லை!

அவன் கைகள் வலித்தன. நகமும், சதையும் பிய்ந்து ரத்தம் வர ஆரம்பித்தது.இனியும் தோண்டணுமா என நினைத்தான். மனம் சொல்லியது நினைவுக்கு வரவே, விடாமல் தோண்டினான். ஒரு பாறை ஒன்று கையில் தட்டியது. முனைப்புடன் அதை அகற்றலானான்.

பின்னால் ஏதோ காலடி சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். நிலவொளியின் பின்னே வந்ததால் அவர்கள் முகம் சரியாகத் தெரியவில்லை.

'என்ன தோண்டிகிட்டு இருக்கே இங்கே?' ஒரு குரல் அதட்டியது.

பயத்தால் அப்படியே உறைந்தான் கந்தன். பாறைக்குக் கீழே புதையல் இருக்கிறதென நிச்சயமாக ஒரு உணர்வு சொல்லியது. இதை எப்படிச் சொல்வதென மனம் அஞ்சியது.

'என்ன சும்மா இருக்கே? என்னத்தை மறைச்சு வைக்கறே?' அதட்டல் மேலும் அதிகமாகியது.

'நான் எதையும் மறைக்கலை.' கந்தன் சற்று தைரியத்துடன் சொன்னான்.

அவன் பேசியதைக் காதில் வாங்காமல் அவர்களில் ஒருவன் அவனைத் தள்ளிவிட்டு, ஒரு டார்ச் வெளிச்சத்தில் அவன் தோண்டிக் கொண்டிருந்த குழியை ஆராய்ந்தான்.
இன்னொருவன் கந்தனிடம் இருந்த பையைப் பிடுங்கி, அதில் துழாவினான்.

கையில் தங்கக்கட்டி அகப்பட்டது!

'ஏய்! இவன்கிட்ட தங்கம் இருக்குடோய்!' எனக் கூவினான்! கவனமாக அதைத் தன் மடியில் பத்திரப் படுத்திக் கொண்டான்!

'அதான் அந்தக் குழிக்குள்ள மறைச்சு வைக்கறான் போல! தேடுறா' என ஒருவன் ஆணையிட்டான்.

கந்தனையே மீண்டும் தோண்டச் செய்தார்கள். ஒன்றும் அகப்படவில்லை. கந்தனை அடிக்கத் துவங்கினார்கள், உண்மையைச் சொல்லச்சொல்லி.

ரத்தம் வழிய கந்தன் கீழே சரிந்தான். சாவு நிச்சயம் என நடுங்கினான்.

'நாளைக்கு சாகப் போறேன்னும் போது பணத்தை வைச்சுகிட்டு என்ன லாபம்? பணமா ஒரு உசுரைக் காப்பாத்திரும்?' என சித்தர் சொன்னது நினைவுக்கு வந்தது.

'ஒரு புதையலுக்காகத்தான் இங்கே தோண்டிகிட்டு இருந்தேன்' என உரத்த குரலில் கத்தினான். ' எனக்குக் கனவுல இந்த இடம் தெரிஞ்சுது. குறி சொல்ற ஒரு ஆத்தா கூட இது சரியான இடம்தான்னு சொன்னாரு. அதான் யாருமில்லாத நேரமா வந்து தோண்டிகிட்டு இருக்கேன்'.



அவர்களில் ஒருவன் இதைக் கேட்டதும் பலமாகச் சிரித்தான்!
'அட, விடுங்கப்பா அவனை. செத்துத் தொலைக்கப் போறான். இவனை மாரி அலையற ரொம்ப ஆளுங்களை நான் பார்த்திருக்கேன். இவங்கிட்ட வேற ஒண்ணும் இல்லைன்னுதான் தோணுது. அந்தத் தங்கந்தான் இவன்கிட்ட இருந்த ஒரே பொருள் போல. அதைக் கூட அவன் திருடினாலும் திருடியிருப்பான். வாங்கடா போவலாம்'
என்று அவர்களில் ஒருவன் சொல்ல, அடிப்பதை நிறுத்தினார்கள்.

அப்படியே தரையில் சாய்ந்தான் கந்தன் அநேகமாக மயங்கிய நிலையில்!

'நீ சாக மாட்டே! பொழைச்சுப்பே! ஆனா, இனிமே உசிரோட இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் இப்படி ஒரு முட்டாளா இருந்திட்டோமேன்னு நினைச்சு நினைச்சு புலம்பப் போற! ஏன் சொல்றேன்னா, கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்துக்கு முன்னே,இதே இடத்துல.... நீ நிக்கறியே... அதே இடந்தான்... இந்த இடத்துல எனக்கும் ஒரு கனவு வந்திச்சு! தெற்கு கோடியில கடலுக்குப் பக்கத்துல ஏதோ ஒரு ஊருல இருக்கற ஒரு பாழடைஞ்ச கோயிலுக்கு தெற்கு சுவருக்குப் பின்னால ஒரு பெரிய புதையல் உனக்காக காத்திருக்குன்னு! அங்கே ஆடுல்லாம் கூட மேய்ப்பாங்களாம்! சாமி சிலை கூட அங்கே இருக்காதாம்!அங்கே இருக்கற புளியமரத்துக்கு அடியில தோண்டினா, ஒரு பெரிய புதையல் கிடைக்கும்னு அந்தக் கனவுல சொல்லிச்சு! புத்தி கெட்டவந்தான் இது மாரி கனவையெல்லாம் நம்பிக்கிட்டு அவ்ளோ தூரம் போவான். சும்மனாச்சும் ஒரு கனா வந்திச்சுன்னு எவனாச்சும் அவ்ளோதூரம் போவானா!
அதுமாரித்தான் நீயும்! உன்னைப் பார்த்தா சிரிப்பா இருக்கு. எப்பிடியோ போய்த் தொலை!'

அவர்களில் ஒருவன் சொல்லியது அவன் காதுகளில் அரைகுறையாக விழுந்தது.

அவர்கள் மறைந்தனர். கந்தன் தள்ளாடியபடியே எழுந்தான்.

தூரத்தில் கற்கோயில் அவனைப் பார்த்துச் சிரித்தது. அலைகள் சந்தோஷமாக ஆரவாரித்தன!

கந்தன் அதைப் பார்த்து பலமாகச் சிரித்தான்!


மீண்டும் அவன் கண்களில் கண்ணீர் வந்தது..... சந்தோஷத்தால்!

அவனுக்கு தான் தேடிவந்த புதையல் இருக்குமிடம் தெளிவாகத் தெரிந்தது!!

[நாளை "கனவு மெய்ப்படும்!"]!
************************************

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு." [423]


"எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு." [426]



அடுத்த அத்தியாயம்




Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 39

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 39

முந்தைய பதிவு இங்கே!

37.

"செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்." [26]

"நான் கேட்டதுக்கும் மேலேயே நீங்க நிரூபிச்சிட்டீங்க! இனிமே, நீங்க எங்கே வேண்டுமானாலும் போகலாம். உங்களைத் தவறா நினைச்சதுக்கு என்னை மன்னிச்சிடுங்க. நீங்க இந்தக் காட்டை விட்டு பத்திரமாப் போக சில ஆளுங்களை உங்களோட அனுப்பறேன். எங்களை ஆசீர்வதிங்க!" என்றான் தலைவன்.

' அப்பாவி மனிதர்களைப் பலி வாங்காத எந்தக் காரியமும் வெற்றி பெறும். அதுக்கு ஆசீர்வாதம்கூடத் தேவையே இல்லை. எங்களுக்கு துணையாக யாரும் வேண்டாம். நீங்க கவனமா இருங்க. இறையருள் எப்பவும் கூடிவரும்!' எனச் சொல்லி சித்தர், கந்தனுடன் கிளம்பினார்.

காட்டைக் கடந்து, வாலாஜாபாத் என்னும் ஒரு ஊரின் எல்லையில் இருந்த ஒரு மடத்தின் வாசலை அடைந்தனர்.

'இதோட என் துணை முடிஞ்சுது. இனிமே நீ தனியாத்தான் போகணும். இங்கேருந்து மஹாபலிபுரம் ஒரு மூணு, நாலு மணிநேரம்தான்' என்றார் சித்தர்.

'உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. எத்தனையோ உண்மைகளை எனக்குப் புரிய வைச்சீங்க!' என்று தழுதழுத்தான் கந்தன்.

'உனக்குள்ளே இருந்ததை உனக்குக் காட்டிக் கொடுத்ததைத் தவிர நான் வேற ஒண்ணும் பண்ணலை'என்று சிரித்தார் சித்தர்.

மடத்தினுள் சென்றனர். உள்ளே இருந்த ஒரு துறவி இவர்களை வரவேற்றார். அவருடன் ஏதோ தனியாகப் பேசினார் சித்தர்.

அந்தத் துறவி இவர்களை உள்ளே வரச் சொல்லி, நேராக சமையற்கட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அடுப்பை மூட்டி, ஒரு கடாயை அதன் மீது வைத்துவிட்டு, இவர்களைத் தனியாக விட்டுவிட்டு அகன்றார்.

ஒரு ஈயத்துண்டை எடுத்து அதில் வைத்தார்.

நன்றாக அது சூடாகி, உருகி, ஒரு திரவமாக ஆனபின்னர்,தன் தோளில் மாட்டியிருந்த பையிலிருந்து, ஒரு பளிங்கு போன்ற ஒரு கல்லை எடுத்து, ஒரு கத்தியால் அதிலிருந்து ஒரு சிறு பகுதியை செதிளாக வெட்டி அதில் இட்டார்.

அடுப்பிலிருந்த திரவம் சிவப்பாக மாறியது!

இன்னும் சற்று நேரம் கொதித்த பின்னர், கடாயை அடுப்பிலிருந்து கீழிறக்கி வைத்தார்.

சிறிது நேரத்தில் திரவம் இறுகி ஒரு கட்டியாக மாறியது. ஆனால் ஈயம் அங்கில்லை! தங்கம் மின்னியது!

கந்தன் புன்முறுவல் பூத்தான்.

'என்னாலும் இதுபோல ஒருநாள் செய்ய இயலுமா?' ஆவலுடன் கேட்டான் கந்தன்.

'இது எனக்கான விதி! உன்னுடையது இதுவல்ல! இப்படியும் செய்யமுடியும் என்பதை உனக்குக் காட்டவே இதை நான் உன்னெதிரில் செய்துகாட்டினேன்' எனச் சொல்லியபடியே அதை நான்கு கூறாக வெட்டினார்.

'இடம் கொடுத்து உதவிய உங்களுக்கு இது' என ஒரு பகுதியை அந்தத் துறவியிடம் கொடுத்தார்.

'அப்படி என்ன நான் செய்துவிட்டேன்? இதெல்லாம் ரொம்பவே அதிகம்' எனத் துறவி மறுத்தார்.

'மீண்டும் ஒருமுறை அப்படிச் சொல்லாதீர்கள். இந்த உலக ஆத்மா அதனைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்தமுறை கிடைப்பது குறையலாம்' சட்டென்று சூடானார் சித்தர்!

துறவி பதிலேதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார்.

இன்னொன்றைக் கந்தனிடம் கொடுத்தார்.'இது உனக்கு. நீ இழந்த பணத்துக்கு ஈடாக!' கந்தனும் இது அதிகம் எனச் சொல்ல வாயெடுத்தவன் சட்டென அடக்கிக் கொண்டான்!!
துறவியிடம் சித்தர் சொன்னதை நினவில் கொண்டான்!

'இது எனக்கு! திரும்பிச் செல்ல உதவியாய் இருக்கும்' எனச் சொல்லியபடி அதைத் தனது பைக்குள் வைத்தார்.

நான்காவது பகுதியைக் துறவியிடம் கொடுத்தார். 'இதை வைத்துக் கொள்ளுங்கள். திரும்பவும் இந்தப் பையன் இங்கே வந்தால் அவனிடம் கொடுங்கள்!'என்றார்.

'எனக்குத் தான் புதையல் கிடைக்கப் போகுதுன்னு சொன்னீங்களே!' எனக் குழம்பினான் கந்தன்.

'அது நிச்சயம் கிடைக்கும் உனக்கு!'

'அப்படீன்னா இது எப்படி எனக்குத் தேவைப்படும்?'

'ஏற்கெனவே நீ இரண்டு முறை உன்னுடைய பொருளையெல்லாம் தொலைச்சிட்டே! மதுரையில ஒரு திருடன்கிட்ட, இன்னொரு தடவை அந்தக் காட்டுல! ஒரு தடவை நிகழ்ந்தா, அது மறுபடியும் நடக்க வாய்ப்பில்லை; அதுவே, இரண்டு தடவை நடந்தா, கண்டிப்பா மூணாவது தடவையும் நடக்கும்னு எனக்குள்ள ஒரு நம்பிக்கை!' என ஒரு அர்த்தமுள்ள சிரிப்புடன் சொல்லியபடியே கிளம்பினார் சித்தர்!

கந்தனும் பின் தொடர்ந்தான்.

'இனிமே உன் வழி அந்தப் பக்கமா! என் கூட இல்லை. ஒண்ணை மட்டும் நினைவில் வைச்சுக்கோ. என்ன ஒரு சின்ன விஷயமா இருந்தாலும் சரி,ஒருத்தொருத்தர் செய்யற ஒவ்வொரு காரியமும் இந்த உலகத்தோட சம்பந்தப்பட்டிருக்கு. சில பேருக்கு இது புரியும். ரொம்பப் பேருக்கு புரியாமலே போயிடுது.

ஒரு காகிதத்தை குப்பைத்தொட்டியில போடாம தெருவுல எறியறதுலேர்ந்து, அதையே பொறுக்கி அந்தக் குப்பைத் தொட்டியில் ஒழுங்க போடறவரைக்கும், எத்தனையோ இப்படி உலகத்தைப் பாதிக்கிற, மேம்படுத்தற காரியங்களைச் செய்யறோம். என்ன செய்யறோம் என்பதில் கவனமா இருந்தா, நடக்கறதுல்லாம் நல்லதா நடக்கும். போய் வா!'

அவன் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார்.

"நான் திரும்பவும் உங்களைப் பார்ப்பேனா?" கேட்கும் போதே அவன் குரல் தழுதழுத்தது.

"இறையருள் இருந்தால் எதுவுமே நடக்கும்! இனிமேல் என் துணை தேவையில்லை உனக்கு. நீதான் கத்துகிட்டதை தொடர்ந்து விடாம செஞ்சு வரணும். எனக்காக ஒரு ஜீவன், அதான் உங்க நண்பன் ராபர்ட், அங்கே காத்துகிட்டு இருக்கான். அவனுக்கு ஒரு வழி காமிச்சிட்டு அடுத்ததைப் பார்க்கப் போகணும். இருக்கும்வரை கடமைகள் தொடர்ந்து வரும்.
எது விதிக்கப்படுதோ, அதைச் செய்ய மட்டும் மறந்திடாதே! நல்லபடியா போயிட்டுவா!"

அவரை ஒருமுறை விழுந்து வணங்கினான் கந்தன்.

நிமிர்ந்து நன்றாக உள்வாங்கினான் அவர் திருவுருவை.

திரும்பிப் பார்க்காமல் வேகமாக நடந்தான்.

[தொடரும்]
***************************************
"செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்." [26]

அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 38

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 38

முந்தைய பதிவு இங்கே!


36.

"ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தார் செயின்." [464]

காற்றின் வேகம் தாங்க முடியாமல், காடு தவித்தது.

மிருகங்கள் பதுங்கின.

இந்த திடீர் மாற்றத்தை உணரமுடியாமல், வழக்கமாகப் பறந்துவிடும், பறவையினங்கள் ஒடுங்கின.

தலைவனின் கூட்டமும் இதன் வேகத்தைக் கண்டு மிரண்டது.

'இதை நிறுத்தச் சொல்லலாமே' என ஒருவன் கத்தினான்.

'ஆமாம். அதான் சரி. சித்தரை நிறுத்தச் சொல்லுங்க!' என இன்னொருவன் ஆமோதித்தான்.

'நம்ம சவாலே அந்த சித்தர் தன்னையே காத்தா மாத்திக் காட்டணும்ன்றதுதான்! இப்ப வீசறது காத்துதான். சித்தரில்லை! அவர், அதோ, அங்கே நிக்கறாரு. என்ன என்ன நடக்குதுன்னு பார்ப்போம்!'


தலைவன் மட்டும் உறுதியாக நின்றான். அதே சமயம் அவன் கண்கள் முன்பு பேசிய அந்த இரண்டு பேரையும் குறித்துக் கொண்டன.

'இது முடிஞ்சதும் முதல் வேலையா, இவனுக ரெண்டு பேரையும் கவனிக்கணும். பயப்படற ஆளுங்க நம்ம இயக்கத்துக்கு லாயக்கில்லை' என எண்ணிக் கொண்டான்!
----------------

'காத்து சொல்லுது,... உனக்குத்தான் அன்பைப் பத்தி நல்லாத் தெரியுமின்னு! அது தெரியும்னா, உனக்கு இந்த உலகத்தோட ஆத்மாவையும் தெரியணுமே! ஏன்னா, அதுவும் அன்புதான்'


என்று காற்று எழுப்பிய புழுதியில், சற்றே மங்கலாகத் தெரிந்த சூரியனைப் பார்த்துக் கேட்டான், கந்தன், தன் கண்களை இடுக்கியபடி!

'நான் இருக்கற இடத்திலேர்ந்து என்னால அந்த ஆத்மாவைப் பார்க்க முடியுது.

என் மூலமாத்தான் அது இந்த உலகத்தைப் பாதுகாக்குது!

மரம், செடி, கொடி, பறவை, மிருகம், மனுஷன், வெயிலு,நிழலு எல்லாமே எங்களாலதான் வருது.

எவ்வளவோ தூரத்துல நான் இருந்தாக் கூட,எனக்கும் அதுக்கும் ஒரு தொடர்பு இருக்கு.

இப்ப நான் இருக்கற இடத்துலேர்ந்து கொஞ்சம் கிட்ட வந்தாக்கூட, இந்த பூமியில இருக்கற எல்லாமே வெந்து சாம்பலாயிடும்.

அந்த ஆத்மாவும் அழிஞ்சிடும்.

ஆனாலும், எங்களுக்குள்ள ஒரு பரஸ்பரம் அன்பு இருக்கு.
அதுக்காக நான் இந்த உலகத்துக்கு வெப்பத்தையும், உயிரையும் கொடுக்கறேன்; அது எனக்கு நான் வாழறதுக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுக்குது'
என்று சூரியன் பேசியது!

'அப்படீன்னா, உனக்கும் அன்பைப் பத்தித் தெரியும்னு சொல்லு!' என்றான் கந்தன்.

'நானும் இந்த உலக ஆத்மாவும் இதைப் பத்தி நிறையவே பேசியிருக்கோம். அதோட கவலை என்னான்னா, இந்த உலோகங்களையும், தாவரங்களையும் தவிர மத்த எல்லாருமே, தாங்கள்லாம் ஒண்ணுதான்னு புரிஞ்சுக்கலியேன்னுதான்.

ரொம்ப வருத்தம் அதுக்கு!

இரும்பு இரும்பா இருக்கு, வெள்ளி வெள்ளியா இருக்கு, தங்கம் தங்கமாவே!
எதுவும், தான் இன்னொண்ணா மாறணும்னு ஆசைப்படறதில்லை.


'நீரளவே ஆகுமாம் நீராம்பல்'னு, தாவரங்களும் அதே மாதிரிதான்!

இந்த மனுஷங்களும், மிருகங்களும்தான் இன்னும் அதைப் புரிஞ்சுக்காம, ஒண்ணை ஒண்ணு அடிச்சுகிட்டு,.. ஒத்துமையா இருக்க மறுக்கறாங்க....' என சற்று வருத்தத்துடன் பேசியது சூரியன்.

'அப்படியே இருந்தா என்ன பயன்? எல்லாத்துக்குமே ஒரு விதி இருந்தாக்கூட, எல்லாரும் அதுவே போதும்னு இருந்திடக்கூடாது. அடுத்த நிலை என்னன்னு அதுக்குப் போக முயற்சி பண்ணனும். விதியை மாத்தணும்!எல்லாரும் ஒண்ணாகணும்! இந்த உலக ஆத்மாவோட ஒண்ணாப் போகணும்! அதுதான் சித்துவேலை!

ஒவ்வொருத்தரும் ஒரு தேடலை எடுத்துக்கணும்; முயற்சி பண்ணி அதைக் கண்டுபிடிக்கணும்; போன ஜன்மத்துல இருந்ததைவிட, இன்னும் கொஞ்சம் மேல் நிலைக்கு வர தொடர்ந்து முயற்சிக்கணும். தன்னோட தேவைகளை குறைச்சுகிட்டு, ஒண்னுமில்லாம ஆகி, 'சரி, இனிமே இப்படியே இருந்தா ஒரு பிரயோஜனமும் இல்லை. நாம அடுத்த நிலைக்குப் போகணும்னு உழைக்கணும். அதைத்தான் சித்தருங்க நமக்குக் காட்டறாங்க!

இப்ப இருக்கறதை விட உசர ஆரம்பிக்கறப்ப, நாம மட்டும் இல்லை,
கூட இருக்கறவங்களும் நம்மளோட சேர்ந்து உசருவாங்க'ன்னு புரிய வைக்கறாங்க. இப்ப நான் உன்கிட்ட நின்னு பேசறதுக்குக் கூட அதான்.... அந்த அன்புதான் காரணம்!'

கந்தன் சொன்னதைக் கேட்டு சற்று நேரம் மௌனமாக இருந்தது சூரியன்.

'எனக்கு எப்படி அன்புன்னா தெரியாதுன்னு சொல்றே?' எனக் கேட்டது.

'ஒரே இடத்துல இருக்கற காடோ, கண்ட இடமெல்லாம் சுத்தற காத்தோ, இல்லை உன்னை மாதிரி எல்லாத்தையும் தொலைதூரத்துலேருந்து பாக்கற உனக்கோ அன்பு, காதல் இதெல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை!


அன்புன்றது, இந்த உலகத்தோட ஆத்மாவுக்கு ஏதாவது நல்லது பண்றதா இருக்கணும்.


நானும் இந்த ஆத்மாவைப் பாத்திருக்கேன்!

என்னமோ அது ரொம்ப சுத்தமானதுன்னு நினைச்சிருந்தேன்.

ஆனா, அதுக்கும் சராசரி ஆசா பாசங்கள் எல்லாம் இருக்குது!

அதுக்கு தீனி போடறது யாருன்னு பார்த்தேன்.

அது வேற யாருமில்லை!

நாங்கதான்!

எங்க நடத்தையைப் பொறுத்துதான் அதோட நல்லது, கெட்டது எல்லாமே நடக்குது.

இங்கதான் அன்போட சக்தி தெரிய வருது.

நாங்கள்லாம் அன்புவழியுல நடந்தா, இந்த உலகமும் அப்படியே மாறிடும்.'

'அப்போ, என்கிட்ட என்னதான் எதிர்பார்க்கற?' சூரியன் புரியாமல் விழித்தது!

'என்னை ஒரு காத்தா மாத்த உதவி பண்ணனும்!' தைரியமாகக் கேட்டான் கந்தன்!

'எல்லாமே தெரிஞ்சவன்னு என்னை சொல்லுவாங்க. ஆனா, எனக்குக் கூட உன்னை காத்தா மாத்தறதுக்கு என்ன வழின்னு தெரியலியே'

'அப்போ யாரைக் கேக்கணும்?'

காற்று இவர்களின் உரையாடலைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது! 'எல்லாம் வல்ல' என இன்றுவரை நினைத்திருந்த சூரியனாலும் கூட முடியாதது என ஒன்று இருக்கிறதே! இதை இப்படியே மூலை முடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்க்கணுமே !' எனக் கவனித்தது.

'படைச்சவனைத்தான் கேக்கணும்!' என்றது சூரியன்.

காற்றுக்கு ஒரே குஷி! இன்னும் பலமாக வீசியது! கீழிருந்த கூட்டம் அஞ்சி நடுங்கியது. மரங்களின் அடியில் சென்று பதுங்கினார்கள்.

கந்தன் தன் பார்வையை "படைத்தவனை" நோக்கித் திருப்பினான். இந்த உலகமே அமைதியானதை உணர்ந்தான். அவனாலும் பேச முடியவில்லை.


இனம் புரியாத ஒரு அன்பு ஊற்று அவன் இதயத்தில் இருந்து கிளம்புவதாக உணர்ந்தான். அப்படியே அவனை அறியாமல் விழுந்து கும்பிட்டான். இதுவரையிலும் அவன் செய்யாத பிராத்தனை அவனுள்ளில் இருந்து புறப்பட்டது. வார்த்தைகள் இல்லை அதிலே! தனது ஆடுகளுக்காகவோ, அண்ணாச்சிக்காகவோ... ஏன்.... பொன்னிக்காகவோ கூட அவன் பிரார்த்தனை அமையவில்லை.அந்தப் பிரார்த்தனையின் போது அவனுக்குஒன்று புலப்பட்டது..

"இந்தக் காடு, காற்று, சூரியன் இன்னும் எல்லா ஜீவராசிகளுமே தனக்கென விதிக்கப்பட்ட வழியில் செல்ல முயற்சிக்கிறது என்ற உண்மை அவனை பலமாகத் தாக்கியது.
அந்த வழியெங்கிலும் பல்வேறு நற்சகுனங்கள் அவரவர்க்குத் தெரிகிறது. அதை எடுத்துக் கொண்டு தன் வாழ்வை வளப்படுத்துகிறவர்கள் சிலரே!தனது படைப்பின் ரகசியம் என்னவென எவருக்குமே தெரியவில்லை. படைத்தவன் ஒருவன் மட்டுமே இதையெல்லாம் தீர்மானிக்கிறான். அவனால் மட்டுமே அதிசயங்கள் நிகழ்த்த முடியும்.
கடலைப் பாலைவனமாக்க முடியும்; மனிதனைக் காற்றாக்க முடியும்! இந்த உலத்தின் ஆத்மாதான் அந்தப் "படைத்தவனிடமும்" வியாபித்திருக்கிறது. அதுதான் தன்னுள்ளும் நிறைந்திருக்கிறது. இதை உணர்ந்தால், தன்னாலும் அதிசயங்கள் நிகழ்த்த முடியும்"
என!

அவன் எழுந்தான்!
காற்றானான்!
அனைவரும் இதைக் கண்டனர்!
காற்று பலமாக வீசியது!
சிறிது நேரம் கழித்து அது குறைய ஆரம்பித்தபோது, கந்தன் ஒரு மரத்தின் கீழே நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தனர்.


அவர்களால் இந்த மாயத்தை... சற்றுமுன் காற்றோடு காற்றாக எழுந்தவன், இப்போது தனியே நின்றுகொண்டிருக்கும் அதிசயத்தை... நம்பவே முடியவில்லை!

சித்தர் மட்டும் வாய்விட்டு ஆனந்தமாகச் சிரித்துக் கொண்டு இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்!

தான் தேடிக்கொண்டிருந்த சீடன் கிடைத்துவிட்டான் என்ற திருப்தி அவர் சிரிப்பில் வெளிப்பட்டது!


[தொடரும்]
*************************************
"ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தார் செயின்." [464]



அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 37

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 37

முந்தைய பதிவு இங்கே!


35.

"வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று." [678]

அந்தக் காட்டை ஊடுருவி அவன் பார்வை சென்றது.

ஒவ்வொரு மரமும், செடியும், கொடியும், பறவையும், மிருகமும் அவனுக்குப் புலப்பட்டது.

இதுவரை தன் வாழ்வில் குறுக்கிட்ட அத்தனை மனிதர்களும்..... செல்லி, குறிசொன்ன கிழவி, தங்கமாலை அணிந்த பெரியவர், வழிப்பறி செய்த இளைஞன், அண்ணாச்சி, ராபர்ட், காத்தான், பொன்னி, முத்துராசா, மாயன் பூசாரி, இன்னும் எல்லாருமே கண்ணில் தெரிந்தார்கள்.

'ரெண்டு நாளா என்னையே தானே பாத்துகிட்டு இருக்கே! பத்தலியா? இன்னும் என்ன அப்படி ஒரு பார்வை!' காடு பேசியது அவனுக்குக் கேட்டுத் திடுக்கிட்டான்.

'உன்னைத் தாண்டித்தான் நான் விரும்பற அன்பு எனக்காக காத்துகிட்டு இருக்குது. அவளைக் கூட என்னால பார்க்க முடியுது இப்ப! அவகிட்ட நான் போகணும்னா, உன்னோட உதவி எனக்குத் தேவை. இப்ப நான் ஒரு காத்தா மாறி அவகிட்ட போகணும்' கந்தன் தன்னையுமறியாது காட்டுடன் பேசினான்.

'அன்பா? அப்படீன்னா என்ன?' காடு கேட்டது.

இங்க இருக்கற எல்லா ஜீவராசிகிட்டயும் நீ காட்டறதுக்குப் பேருதான் அன்பு. உன்னோட ஒவ்வொரு மூலை முடுக்கும் அதுங்களுக்கு தெரிய வைக்கறே. அததுக்கு வேளா வேளைக்கு சாப்பாட்டுக்கு வழி பண்ணறே. இங்கே சண்டை கிடையாது. எல்லாருக்கும் சமமா உன்னோட அன்பைப் பங்கு போட்டுக் கொடுக்கறே. எலிக்கு கிழங்கு, பாம்புக்கு எலி, புலிக்கு மான், .... இப்படி ஒவ்வொண்ணுக்கும் ஏதாவது ஒண்ணு ஏற்பாடு பண்ணியிருக்கே. எல்லாரும் அதை ஒத்துகிட்டு, தன்னைக் காப்பாத்திக்கப் பாத்துக்குது. அடுத்தவங்க விஷயத்துல தலையிடறதில்லை.'

'அதுக்குப் பேருதான் அன்பா?' என்றது காடு.

'ஆமாம், தன்னைக் கொடுத்து அடுத்தவங்களை வளக்கறதுக்குப் பேருதான் அன்பு. இங்க அதான் நடக்குது. மரத்தால மிருகம், மிருகத்தால மனுஷன், மண்ணிலேருந்து உலோகம், ஏன்.....தங்கம் கூட! எதுவும் தனக்குன்னு வைச்சுக்காம கொடுக்கறதுக்குப் பேருதான் அன்பு.'

'நீ சொல்றது எதுவும் எனக்குப் புரியலை, போ!'

'எதுவும் புரியலேன்னாலும், எனக்காக ஒரு பொண்ணு காத்துகிட்டு இருக்குது. அதுகிட்ட போறதுக்கு நான் ஒரு காத்தா மறணும். அதுக்கு நீதான் உதவி பண்ணனும்! இது மட்டும் உனக்குப் புரிஞ்சா போதும். உன் உதவி எனக்குக் கிடைக்கும்! ' என்றான் கந்தன்.

காடு சிறிது நேரம் ஒண்ணும் சொல்லாமல் யோசித்தது.

'வேணும்னா இங்க இருக்கற மரங்களை அசையச் சொல்லி காத்தை வரச் சொல்றேன். நீ அதுகிட்டயே கேட்டுக்க. எனக்கு வேற ஒண்ணும் தெரியாது' என்ற காடு, மரங்களை அசையச் செய்தது. ஒரு சிறிய தென்றல் வீசத் தொடங்கியது.

தூரத்திலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த சித்தர் மெதுவாகச் சிரித்தார்.
--------
காற்று மெதுவாக வந்து அவனைத் தொட்டது! அவன் முகத்தை வருடியது.

காற்று ஒன்றுதான் எங்கும் இருக்கும் ஒன்று. அதனால், காற்றுக்கு எல்லாமே தெரியும் என்பதால், காட்டோடு இவன் பேசியதும் காற்றுக்கு தெரிந்துதான் இருந்தது.

எங்கு பிறந்தோம், இறப்போம் என்ற ஒன்றும் இல்லாத காற்று, எல்லாமுமே அறியும்!

'நீதான் எனக்கு உதவி செய்யணும்' என்றான் கந்தன்.

'இப்படி எங்களோடெல்லாம் பேச எப்படி உனக்குத் தெரிஞ்சுது?' என்றது காற்று.

'என் மனசு!'

'நீயும் நானும் வேற வேற! நீயெல்லாம் காத்தா மாறுவதெல்லாம் ஆவற கதையில்லை!'

'அதெல்லம் பொய்யி. எனக்கு ஒரு சித்தர் சொல்லிக் கொடுத்திருக்காரு.
எனக்குள்ளேயே இந்த பஞ்சபூதங்களும் இருக்கு. அதனால உண்டான எல்லாவிதப் பொருள்களும் ஏதோ ஒரு விதத்துல.... அது கடலோ, மலையோ, இல்லை காத்தோ..... எதுன்னாலும் சரி, என்கிட்டயும் இருக்கு. எல்லாமே ஒரே ஒரு பரம்பொருளாலத்தான் படைக்கப் பட்டிருக்கு. அதனால, நம்ம எல்லாருக்குள்ளேயும் ஒரே ஆத்மாதான் இருக்கு. இப்ப எனக்கும் உன்னைப் போலவே ஆகனும்னு ஆசையா இருக்கு.எல்லா இடத்துக்கும் போகணும், அந்த வேகத்தால என்னோட புதையலை மறைஞ்சிருக்கற இடத்தைக் கண்டுபிடிக்கணும். என்னை விரும்பற பொண்ணுகிட்ட போகணும். அது
முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு!'
என்று ஒரு புதுவிதத் தைரியத்துடன் சொன்னான் கந்தன்.

'அவர் சொன்னதை நானும் கேட்டுகிட்டுத்தான் இருந்தேன். அவர் இன்னொண்ணும் சொன்னாரே! எல்லாத்துக்கும் ஒரு விதி இருக்கு அதை மீற முடியாதுன்னு! அதைக் கேக்கலியா நீ? நீ காத்தா மாறறது முடியாத காரியம். ' எனச் சொல்லிச் சிரித்தது காற்று.

'ஒரு கொஞ்ச நேரத்துக்காவது நான் காத்தோட காத்தா இருக்கறது எப்படின்னு கத்துக் கொடு. மனுஷனும், காத்தும் சேர்ந்தா, என்னவெல்லாம் பண்ணலாம், பண்ணமுடியும்னு நான் உனக்கு சொல்றேன்' என அதன் ஆவலைத் தூண்டினான்.

காற்றுக்கும் ஆவல் அதிகமாகியது. 'தன்னால் ஒரு பெரிய காட்டையே வீசி சாய்க்க முடியும்; ஆழ்கடலில் ஒரு பெரிய கொந்தளிப்பை உண்டுபண்ணி, பெரிய பெரிய கப்பல்களையெல்லாம் கூட சின்னாபின்னமாக்க முடியும்; எங்கேயோ பாடற இசையை, இன்னொரு நாட்டுல கேக்கவைக்கமுடியும்; இன்னும் என்னென்னவோ செய்ய முடியும்! ஆனா, இவன் புதுசா என்னமோ சொல்றானே. ஆனா, அதுக்காக இவனைக் காத்தா மாத்துன்றானே. அது முடியாத காரியமாச்சே' என அவனை இரக்கத்துடன் பார்த்தது.




அது யோசிக்கத் தொடங்கிவிட்டது என்பதை அறிந்த கந்தன் இன்னும் கொஞ்சம் அதை அசைக்க எண்ணி, மேலும் பேசினான்!

'இதான்... இதான்! இதான் அன்புன்னு சொல்றது! இவனுக்கு எதுனாச்சும் செய்யணுமேன்னு நினைக்கறியே, அதான் அன்பு! ஒருத்தரை நேசிக்கறப்ப, எதுவுமே முடியாத காரியம் இல்லை! ஏன்னா, அப்போ அந்த உள்ளம் உருகுது. எல்லாமே உள்ளுக்குள்ளியே நடக்கத் தொடங்குது. அப்போ அதால எதையும் பண்ணமுடியும்னு ஒரு தீவிரம் வரும்.'அன்பின் வழியது உயிர்நிலை'ன்னு எங்க ஆளுகூட ஒருத்தர் பாடியிருக்காரு!' பேசிக்கொண்டே இருந்தவன் கொஞ்சம் அதிகமாப் பேசிட்டோமோ என நினைத்து, சட்டென,


' ஆனா எல்லாத்துக்கும் காத்தோட தயவு இருந்தாத்தான் நடக்கும்'
என முடித்தான்.

காற்றுக்கு திடீரெனக் கோபம் வந்தது. ஒரே ஊதாய் ஊதி இவனை அப்படியே ஒரு தூக்கு தூக்கிடலாமான்னு நினைத்தது! 'சே! அப்படி பண்ணினாக் கூட என்ன பிரயோஜனம்? அதுக்குப் பதிலா இவன் சொல்ற மாதிரி செஞ்சா என்ன? இப்ப, இவனை எப்படி காத்தா மாத்தறது, அன்புன்னா என்ன? இதெல்லாம் நமக்கு தெரியலியே' என எண்ணியது. கோபம் இன்னும் அதிகரித்தது.

'நான் சுத்தாத இடம் இல்லை இந்த உலகத்துல. எந்த மூலை முடுக்குக்குப் போனாலும், எல்லா இடத்துலியும், இந்தக் காதல், அன்பு, பாசம்னு பேசறாங்க! பேசிட்டு அப்படியே அண்ணாந்து வானத்தைப் பாக்கறாங்க! ஒருவேளை, வானத்தைக் கேட்டா அதுக்குத் தெரியுமோ என்னமோ!' என்று எண்ணியது!, 'சே! தனக்கு இது தெரியலியே; அதையும் இவனிடம் ஒப்புக் கொள்ளும்படியாப் போச்சே!' என்ற அவமானத்தில் மிகுந்த கோபத்துடன் கத்தியது!

காற்று பலமாக வீசியது அங்கு!

'அப்படீன்னா ஒண்ணு பண்ணு! நீ இப்ப ஒரு பெரிய காத்தா மாறி, வீச ஆரம்பி! அதுல கிளம்பற புழுதில, இந்த சூரியனோட வெளிச்சம் என் கண்ணை மறைக்காது! என்னாலியும் வானத்தை நல்லாப் பார்க்க முடியும்!' என்றான் கந்தன்!

'இது நல்ல யோசனையாய் இருக்கே' என்று மகிழ்ந்த காற்று தன் தீவிரத்தைக் கூட்டியது! வெகு வேகமாகத் தன் சக்தி அனைத்தையும் திரட்டிக் கொண்டு ஒரு சூறாவளியாய் மாறியது! 'ஹோ'வென்ற சத்தத்துடன்,
பேரிரைச்சலைக் கிளப்பி வீசத் தொடங்கியது!

தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சித்தர் வாய் விட்டு சிரிக்கத் துவங்கினார்!

[தொடரும்]
************************************

"வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று." [678]




அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 36

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 36

முந்தைய பதிவு இங்கே!


34.

"உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து." [596]



ஒரு நாள் சென்றது.

ஒன்றுமே நடக்காதது போல், சித்தர் அங்கிருந்த ஆட்களுடன் கதையடித்துக் கொண்டிருந்தார்! கந்தனைக் காட்டி வேறு எதையோ சொல்லிச் சிரித்தார். அவர்களில் ஒருவன் ஒருசமயத்தில் கந்தனைப் பார்த்து கையெடுத்துக் கும்பிடக் கூட செய்தான்.

தியானம் செய்வது போல உட்கார்ந்திருந்த கந்தனுக்கு, ஆத்திரமும், அழுகையும் பொத்துக் கொண்டு வந்தன!

சற்று நேரம் பொறுத்து சித்தர் அவன் பக்கமாய் வந்த போது, ' ஒருநாள் ஆயிப்போச்சு! இன்னும் ஒருவழியும் தெரியலியே' என ஆதங்கத்துடன் பகிர்ந்தான்.

'நான் சொன்னது நினைவிருக்கில்ல?
கண்ணுக்கு எதுத்தாப்பல தெரியற இந்தப் பரந்த உலகம் கடவுளோட ஒரு அம்சம். ஒரு சித்தன் என்ன பண்ணறான்னா, இந்த அம்சத்தை, கண்ணுக்குத் தெரியாத தெய்வீக நிலையோட பார்த்து, அப்படியே ரெண்டையும் ஒரே தட்டுல கொண்டுவந்து அனுபவிக்க ஆரம்பிப்பான்!'

சொல்லியவாறே, தன் தோளில் வந்து உட்கார்ந்த கழுகைத் தடவிக் கொடுத்தார்.

'என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க. இங்க நான் உசிருக்குப் போராடிகிட்டு இருக்கேன். நீங்க ஒண்ணுமே நடக்காத மாரி, கழுகோட கொஞ்சிகிட்டு இருக்கீங்களே? இன்னும் ரெண்டு நாளுல நாம ரெண்டு பேரும் உசிரோட இருப்போமான்னே சந்தேகம்! அதைப் பத்தி யோசிங்க' என கோபமாகக் கத்தினான்.

'உஸ்ஸ்ஸ்ஸ்! மெல்லப் பேசு! அநேகமா நீதான் செத்துப் போவேன்னு நினைக்கறேன்' என்றார் விஷமமாகச் சிரித்தபடி!

'ஏன் அப்படி?' என பயம் கிளம்பி நெஞ்சை அடைக்கக் கேட்டான் கந்தன்.

'ஏன்னா,....எனக்கு எப்படி காற்றா மாறுவதுன்னு தெரியும்!' எனச் சொல்லியபடியே கழுகை எடுத்துப் பறக்க விட்டார் சித்தர்!
---------------

இரண்டாம் நாள்!


கந்தனின் பயம் அதிகரிக்கத் தொடங்கியது. அவன் மனசும் கூடச் சேர்ந்து கொண்டது அவனது பயத்தில்!

உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல், மெதுவாக எழுந்து நடந்தான்.

இரண்டு ஆட்கள் அவன் போவதைப் பார்த்து அவனைப் பின் தொடர ஆரம்பித்தனர்.

சித்தர் அவர்களை ஒரு பார்வைபார்த்து, அவன் எங்கியும் போகமாட்டான் என்பது போல சைகை செய்ய அவர்கள் சித்தரின் அருகில் அமர்ந்தனர்.

கால் போன போக்கில் என்னென்னவோ யோசித்தபடியே நடந்தான்.
ஒரு வழியும் புலப்படாமல், கந்தன் திரும்பி வந்தான்.


மொத்தக் காடும் அவன் பயத்தை எதிரொலிப்பது போல் அவனுக்குத் தோன்றியது.

சித்தர் கண்களை மூடி தியானத்தில் இருந்தார்.


காவலாளிகள் தொலைவில் இவன் வந்ததைக் கவனித்துவிட்டு, ஒருவிதத் திருப்தியுடன் வேறேதோ பேச ஆரம்பித்தார்கள்.

இவன் வந்ததும் கண்களைத் திறந்து, 'என்ன?' என்பது போல் பார்த்தார்.

'நீங்களும் ஒண்ணும் சொல்ல மாட்டேன்றீங்க! இந்தக் கடவுளும் என்னைக் கை விட்டுட்டாரே!' எனக் கலங்கிப் போய் கேட்டான்.

'கடவுள் எப்படி கைவிடுவாரு?' எனத் திருப்பிக் கேட்டார்.
'எனக்கு எப்படி தெரியும்? நீங்கதான் பெரிய சித்தராச்சே! நீங்களே சொல்லுங்க! கடவுள்னா யாரு?' என்றான்.

'எல்லாத்துலியும் இருக்கற வேறுபாடுகளைத் தெரிஞ்சுகிட்டும், ஒரு வேற்றுமையும் பார்க்காதவரே கடவுள்! பார்க்கப் போனா நீ கூட ஒரு கடவுள்தான்!'

'விளையாடாதீங்க! இப்ப தமாஷ் பண்ற நிலையில நான் இல்லை' என விரக்தியாகப் பேசினான் கந்தன்.

'நெசமாத்தான் சொல்றேன். இப்ப உன்னையே எடுத்துக்க. இது கையி, இது காலு, கண்ணு, மூக்கு காது, தலைன்னு உன் உடம்புல இருக்கற எல்லா வேறுபாடும் உனக்குத் தெரியும். ஆனா, அதுக்காக இதான் உசத்தி, காலை விட கண்ணுதான் உசத்தி, இது மட்டம்னு பிரிசுப் பாக்கறதில்ல நீ. அதது செய்ய வேண்டிய வேலகளும் உனக்குத் தெரியும்.எதெது என்னென்ன பண்ணும்னும் உனக்குத் தெரியும். அதுக்கு மட்டும்தான் அதைப் பயன்படுத்துவே!


எனக்கு மட்டும் செருப்பு, கையிக்கு மட்டும் தங்க கடிகாரமான்னு காலு நினைக்காது.

நான் எடுத்துத்தான் கொடுக்கறேன்; வாயிதான் தினம் சாப்பிடுதுன்னு கை பொறாமைப்படாது.

உள்ளுக்குள்ள இருக்கற ஒரு சக்தி மனசு மூலமா வெளிப்பட்டு, அது கண்ணு வழியா வெளிப்படும்போது, கண்ணு பாக்குது. அதே சக்தி காது வழியா வெளிப்படும் போது காது கேக்குது. இப்படித்தான் ஒவ்வொண்ணும்!

உள்ளே இருக்கற சக்திதான் இப்படி பல ரூபமா வெளிப்படுதுன்றதைப் புரிஞ்சுகிட்டு, அந்த சக்தி என்னான்னு பார்க்க ஆரம்பிக்கறப்ப உனக்குள்ல இருக்கற கடவுள் உனக்குத் தெரியவரும். அந்த தெய்வீக நிலையைப் புரிஞ்சுகிட்டியானா, அப்புறம் எல்லாமே சுளுவா வந்திரும். இதைப் பத்தி யோசிக்க ஆரம்பி!' எனச் சொல்லிவிட்டு,

'இன்னும் ஒரு நாளுதான் இருக்கு, கடவுளே!' என ஒரு குண்டையும் போட்டுவிட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார் சித்தர்!

ஏதோ ஒரு நம்பிக்கை உள்ளத்தில் பிறக்க, கந்தனும் அவரருகில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான்.
---------------------

மூன்றாம் நாளும் விடிந்தது!

'என்ன உங்க சித்தர் தயாரா? போய் என்ன ஏதுன்னு பார்க்கலாமா?' எனத் தலைவன் வந்து கேட்டான்.

'ஓ! பார்த்துறலாமே' எனத் தெம்பாகச் சொல்லிய சித்தர், கந்தனைப் பார்த்தார்.

கந்தன் ஒன்றும் பேசாமல் எழுந்து நின்று அவர்களைப் பார்த்தான்.

மானசீகமாக சித்தரை வணங்கினான். சித்தர் அவனைப் பார்த்துச் சிரித்தார்.

ஏதோ ஒரு சக்தி தனக்குள் இருந்து இயக்குவதை உணர்ந்தான்.

'எல்லாரும் அப்படியே உட்காருங்க. கொஞ்ச நேரம் பிடிக்கும் இதுக்கு' என்றான்.

'எங்களுக்கு ஒரு அவசரமும் இல்லை. இந்தக் காடு எங்களுக்கும் பழக்கமானதுதான்' என அமர்த்தலாகச் சொல்லியபடியே, உட்கார்ந்தான் தலைவன்.

மற்றவர்களையும் உட்காரச் சொல்லி கை காட்டினான்.

கந்தன் சற்று தள்ளிச் சென்று, அந்த காட்டையே உற்று நோக்கினான். மிகவும் பழக்கப்பட்ட இடம் போல உணர்ந்தான். காட்டைத் தாண்டி அவன் பார்வை விரிந்தது!

[தொடரும்]
*******************************


"உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து." [596]


அடுத்த அத்தியாயம்

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP