Monday, January 08, 2007

"பள்ளி எழுந்தருளாயே!" - 3 [23]

"பள்ளி எழுந்தருளாயே!" - 3 [23]

கூவின பூங்குயில்; கூவின கோழி;
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;


ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்

தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் !
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !

யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் !
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே ! [3]

அழகிய குயிலகள் இனிமையாகப் பாடின;
கோழியினங்களும் கூவிவிட்டன;
சிறகடித்துப் பறக்க பறவைகளும் சலசலத்தன;

திருக்கோயிலில் சங்குகளும் ஒலித்தன;
வானத்து விண்மீன்களும் தம்மொளி குன்றின;
உதயக் கதிரொளியும் ஒன்று சேர்ந்தன;

தேவனே! எம்மீது விருப்பம் கொண்டு
நல்ல வீரக்கழல் அணிந்த உனது இரு
திருவடிகளையும் எங்களுக்குக் காட்டுவாயாக!

எவராலும் அறிந்துகொள்ள அரிதானவனே!

அடியவராம் எங்களுக்கு மட்டும்
அனுபவித்தற்கு எளிமையானவனே!

திருப்பெருந்துறையில் சீரோடு உறையும்
சிவபெருமானே! பள்ளி எழுந்தருள்வாயாக!

அருஞ்சொற்பொருள்:
குருகு - பறவை; ஓவுதல் - மறைதல்; தாரகை - நட்சத்திரம்; ஒருப்படுதல் - முன்னேறுதல்/மேலோங்குதல்.

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP