Monday, October 22, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 22

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 22

முந்தைய பதிவு இங்கே!






20.

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்." [517]

"ஆரது?"

குடிசையிலிருந்து ஒரு ஆள் வெளிப்பட்டான்.

'என்ன வேணும்? எங்கே இவ்ளோ தூரம்? எப்படி வந்தீங்க? காரா, பஸ்ஸா?' என அடுக்கிக் கொண்டே போனான்.

'அதெல்லாம் விவரமா சொல்றோம். முதல்ல, இங்கே எதாவது நல்ல ஓட்டல் இருக்கா? பசிக்குது.' என ராபர்ட் சொல்லவும்,
'ஹோ'வென்று வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான் அந்தக் காட்டுவாசி.

'என்னாது? ஓட்டலா? அதெல்லாம் இங்க கிடையாது சாமியோவ். இங்க இருக்கறதெல்லாம் இந்தக் குடிசைங்களும், அதுல இருக்கற
நாங்களுந்தான். எடம் தெரியாம வந்துட்டீங்க போல. எங்க போகணும் நீங்க? அதை மொதல்ல சொல்லுங்க' எனச் சற்று கண்டிப்புடன் கேட்கவே
கந்தன் கொஞ்சம் பயந்தான்.

ராபர்ட், ஏதோ அனுபவப்பட்டவன் போல, அந்த ஆளை நெருங்கி, 'நாங்க திரும்பிப் போறதுக்காக வரலை. எங்களுக்கு இங்கேதான் ஒரு காரியம்
ஆகணும். இங்க உங்க ஊருல பெரிய ஆளு யாரு? நாங்க அவரைப் பார்க்கணும்.' என அமர்த்தலாகச் சொல்ல,

காட்டுவாசியும், 'அதோ, அங்கே தெரியுதே, அந்த புளியமரம், அதைத்தாண்டி போனீங்கன்னா, ஒரு கோவிலு இருக்கும். அதுக்குப் பக்கத்து
வீட்டுல போயி, முத்துராசான்னு கேளுங்க. வெவரம் சொல்லுவாங்க' எனச் சொல்லித் திரும்ப ஆரம்பித்தான்.

ராபர்ட் விடுவதாயில்லை.

'என்னப்பா! இப்படி சொன்னா எப்படி? நீங்களும் வாங்க! வந்து கொஞ்சம் சொல்லுங்க. குடிக்க கொஞ்சம் தண்ணி கிடைக்குமா? உங்க பேரு என்ன?'
என அவனுடன் அன்பாகப் பேசினான்.

'என் பேரு காத்தானுங்க. இருங்க இதோ வாரேன்.' எனச் சொல்லி உள்ளே சென்றவன், சற்று நேரத்தில் வெளியே வந்தான்.

அவன் கையில்,ஒரு சிறு கூடையில் மலைவாழைப் பழங்களும், ஒரு சொம்பில் தண்ணீரும்!

'பாத்தா, சாப்ட்டு ரொம்ப நேரம் ஆனமாரி இருக்கு. இந்தாங்க இதைச் சாப்பிடுங்க' என நீட்டினான்.

இருந்த பச்சிக்கு, தேவாமிர்தமாய் இனித்தன அந்தப் பழங்கள்!

ஆளுக்கு அரை டஜன் பழங்களை உள்ளே தள்ளிவிட்டு, வயிறு முட்ட தண்ணீரைக் குடிப்பதை, அன்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் காத்தன்.

'சரி, வாங்க போகலாம். இங்கே யார் வந்தாலும் தலைவருக்குத் தெரியாம இருக்கக் கூடாது. ம்ம்... நடங்க.' எனச் சொல்லியபடியே
கிளம்பினான்.

'ஆத்தா! நா தலைவர் வீடு வரைக்கும் போயிட்டு வாரேன்' என உள்நோக்கிச் சொல்லிவிட்டு, நடக்க ஆரம்பித்தான்.

உள்ளேயிருந்து 4 கண்கள் இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தன!
***************

'தொரையப் பாத்தா, அசலாட்டம் இருக்குது. தம்பிக்கு எந்த ஊரு?' திண்ணையில் உட்கார்ந்திருந்த முத்துராசா கேட்டார்.

நல்ல உயரமான தோற்றம். 55 வயசு மதிக்கலாம். முறுக்கிய அடர்த்தியான மீசை முழுதுமாக நரைத்திருந்தது. துண்டை மடித்து தூக்கலாக முண்டாசு கட்டியிருந்ததால், தலைமுடியின் நிலவரம் தெரியவில்லை! நல்ல கறுத்த உறுதியான உடல். ஒரு பெரிய துண்டால் மேலுடம்பைப் போர்த்தியிருந்தார்.

கந்தன் ராபர்ட்டின் பக்கத்தில், ஆனால், சற்றுப் பின்தள்ளி 'இவனே சமாளிச்சுக்கட்டும்' என்பதுபோல் நின்றிருந்தான்.



ராபர்ட்டைக் காட்டி,

'எனக்கு நாகர்கோயில் பக்கம் முட்டம் பக்கத்துல ஒரு கிராமம். இவரு, வெள்ளைக்காரரு. இங்கிலாந்திலேர்ந்து வந்திருக்காரு' என்றான்
கந்தன்.

'என்ன விசயமா இவ்ளோ தூரம் வந்திருக்கீங்க? வழக்கமா ஆரும் வராங்கன்னா, காட்டிலாக்கா ஆளுங்க தான் இட்டாருவாங்க. ம்ம்..சொல்லுங்க எனத் தொடர்ந்தார் தலைவர்.

சேலம் போவதற்காக பஸ்ஸில் வந்தது, வழியில் நடந்த கலவரத்தால் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டு, பின்னர் இந்த இடத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு
இங்கு வந்தது வரைக்கும் ராபர்ட் சொல்லிவிட்டுத் தொடர்ந்தான்.

'இங்கே பக்கத்துலதான் கொல்லிமலை இருக்குதுன்னு ஒரு பெரியவர் சொன்னாரு. எங்களுக்கும் அதைப் பாக்கணும்னுதான் ஆசைப்பட்டு இங்கே வந்தோம்.
நீங்கதான் கொஞ்சம் தயவு பண்ணனும்.'

'கொல்லிமலைல என்ன இருக்கு? ஏதோ ஒரு சிவலிங்கம் இருக்குது அங்கே. அரப்பளீஸ்வரர்னு பேரு அவருக்கு! பவுர்ணமிக்கு பவுர்ணமி ஆராரோ வருவாங்க. காட்டிலாக்கா ஆளுங்க துணைக்கு வருவாங்க. மத்த நாள்ல ஆரும் அங்கே போகமாட்டாங்க. இப்போ அதுக்கான நேரங்கூட இல்லியே! நீங்க ஒண்ணு பண்ணுங்க. திரும்பிப் போயிட்டு,
அதிகாரிங்களோட வாங்க, என்ன நா சொல்றது! விளங்கிச்சா?' என்றபடி எழுந்தார் முத்துராசா.

ராபர்ட் விடுவதாயில்லை!

'பவுர்ணமிக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்குங்க. அதுவரைக்கும் நாங்களும் இங்கியே தங்கிக்கறோமே. கீழேவேற ஒரே கலவரம்னு பேசிக்கறாங்க. போனாத் திரும்ப வர்றது கஷ்டம். கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க' எனக் கெஞ்சினான்.

முத்துராசா எழுந்து, வாயில் அடக்கியிருந்த புகையிலையைத் துப்பிவிட்டு, சற்று தள்ளிச் சென்று, அங்கிருந்த காத்தான், இன்னும் 2,3 பேரோடு ஏதோ
தணிந்த குரலில் பேசினார்.

பின்னர், இவர்களைப் பார்த்துத் திரும்பி, ' நீங்க சொல்றதும் சரிதான். கீளே கலவரம் முத்திருச்சாம். போலீசுல்லாம் வந்து சுடறாங்களாம்.
இப்ப நீங்க இறங்கிப் போறதும் ஆபத்துதான். சரி, வந்தது வந்திட்டீங்க. இங்கியே தங்கறதுக்கு ஏற்பாடு பண்றேன். சோறுல்லாம் கிடைக்காது.
கப்பங்கிழங்குக் கஞ்சி கிடைக்கும். மத்தபடி இங்க கிடைக்கற பளம், காயில்லாம் இருக்கு. பாலு கூட கிடைக்கும். படுக்கறதுக்கு நான் காத்தானண்டை பேசிட்டேன். அவனுக்குப் பக்கத்துக் குடிசைல நீங்க தங்கிக்கலாம். காசுல்லாம் ஒண்ணும் குடுக்க வேண்டாம். நாங்க காசு வாங்கறதில்ல. ஆனா, அவன் செய்யற வேலைக்கு மட்டும் கூடமாட ஒத்தாசையா இருங்க. தனியா எங்கியும் சுத்தக் கூடாது' என்றவர்,

காத்தான் பக்கம் திரும்பி, 'ஏய், சொன்னது கேட்டுச்சில்ல? பத்திரமாப் பாத்துக்க! நீங்க போயிட்டு வாங்க தம்பி! ' என விடை கொடுத்தார்.

கந்தனுக்கு ராபர்ட்டின் திறமையைக் கண்டு ஆச்சரியமாயிருந்தது.

'ரொம்ப நன்றிங்க. இந்த உதவியை நாங்க என்னிக்கும் மறக்க மாட்டோம்' எனச் சொல்லி திரும்பியவர்களை, 'தம்பி, ஒரு விசயம்' என்ற
தலைவரின் குரல் நிறுத்தியது.

'சொல்ல மறந்திட்டேன். இங்கிட்டு இருக்கற பொட்டைப்பிள்ளைங்களோட எந்தப் பேச்சும் வெச்சுக்கிறாதீங்க. அதுல மட்டும் நாங்க ரொம்ப கண்டிப்பா இருப்போம்.
மீறி நடந்திச்சுன்னா....
' எனச் சொல்லியவர்,


சிரித்தபடியே,'உங்களைப் பாத்தா எதுவும் தப்புதண்டா செய்யற ஆளுங்க மாரித் தெரியலை. சரி, எதுனாச்சும் சாப்ட்டீங்களா? காத்தா,
பசியாற கஞ்சி வெச்சுக் குடுறா. நீங்க போயிட்டு வாங்க, தம்பிங்களா!' என விடை கொடுத்தார்.

[தொடரும்]
*****************


அடுத்த அத்தியாயம்

20 பின்னூட்டங்கள்:

வல்லிசிம்ஹன் Wednesday, October 24, 2007 9:45:00 PM  

உள்ளேயிருந்து நாலு கண்கள் பார்த்தன!!!//

உண்மைதான். அகக் கண்கள் அறிவுறுத்திக் கொண்டே இருக்கின்றன.

துளசி கோபால் Wednesday, October 24, 2007 9:59:00 PM  

வரிக்கு வரி படிச்சுட்டேன்:-))))

தகராறு எல்லாம் வராதுதானெ?

அங்கெ மலையில்....

படம் ரொம்பப் பிரமாதமா இருக்கு.

சுட்டதோ?

வடுவூர் குமார் Wednesday, October 24, 2007 10:09:00 PM  

போயிட்டு வாங்க, தம்பிங்களா!'
சரி ஐயா, வரோம்.

இலவசக்கொத்தனார் Wednesday, October 24, 2007 10:30:00 PM  

இப்படிப் போகுதா கதை. நடக்கட்டும்.

VSK Wednesday, October 24, 2007 10:43:00 PM  

marked!
:)
முகப்புக்கு வரச் செய்த பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி!

VSK Wednesday, October 24, 2007 10:44:00 PM  

//அகக் கண்கள் அறிவுறுத்திக் கொண்டே இருக்கின்றன//

எப்படியெல்லாஅம் சிந்திக்கறீங்க வல்லியம்மா!
பிரமிப்பா இருக்கு!

VSK Wednesday, October 24, 2007 10:47:00 PM  

//தகராறு எல்லாம் வராதுதானெ?

அப்படித்தான் நினைக்கிறேன், டீச்சர்!.

//சுட்டதோ?//

பின்னே என்னங்க!
சுட்டதுதான்!

எனக்கு ஒரு ஆசை இருந்தது.

இந்தக் கதைக்க்குப் பொருத்தமான படங்கள் வரையக் கூடிய ஒரு ஓவியர் மட்டும் என் நண்பராகக் கிடைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என!

அப்போ சுடவே அவசியம் இருந்திருக்காது!
:)

VSK Wednesday, October 24, 2007 10:48:00 PM  

//சரி ஐயா, வரோம்.//

கண்டிப்பா கடைசி வரைக்கும் கூடவே வாங்க திரு.குமார்!

VSK Wednesday, October 24, 2007 10:49:00 PM  

//இப்படிப் போகுதா கதை. நடக்கட்டும்.//

ஆமாங்அ! அப்படித்தாங்க போகுதுகதை!
:))
நடத்திக் கொடுங்க!

cheena (சீனா) Wednesday, October 24, 2007 11:24:00 PM  

நோக்கம் நிறைவேற வேண்டுமெனில் எப்படியும் பேசி காரியம் சாதிக்க வேண்டும். ராபர்ட் கை தேர்ந்தவனாக இருக்க வெகுளி கந்தன் சீக்கிரமே கற்றுக்கொண்டு விடுவான். ஒரு வாரம் தங்கட்டும். மலை மீதுள்ள குரு அங்கு வரும் ஒருவனுக்காக, உத்தரவவை நிறைவேற்ற காத்துக் கொண்டிருக்கிறார்.
வாய்ப்பு ராபர்ட்டிற்கா, அல்லது கந்தனுக்கா ? இல்லை இல்லை ராபர்ட் மூலம் கந்தனுக்கே !!

நாளை நடப்பதை யாரறிவார் ?? விஎஸ்கே உட்பட

VSK Wednesday, October 24, 2007 11:53:00 PM  

//நாளை நடப்பதை யாரறிவார் ?? விஎஸ்கே உட்பட//

அப்டி போடுங்க அருவாளை, சீனா!
:))

சொன்னாலும் சொன்னீங்க ரொம்பச் சரியாச் சொன்னீங்க!:)

நாளை நடப்பதை அறிந்துவிட்டால்தான் பிரச்சினையே இருக்காதே!

மங்களூர் சிவா Thursday, October 25, 2007 1:02:00 AM  

//
இங்கிட்டு இருக்கற பொட்டைப்பிள்ளைங்களோட எந்தப் பேச்சும் வெச்சுக்கிறாதீங்க. அதுல மட்டும் நாங்க ரொம்ப கண்டிப்பா இருப்போம்.
மீறி நடந்திச்சுன்னா....
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்


//
VSK said...
//நாளை நடப்பதை யாரறிவார் ?? விஎஸ்கே உட்பட//

அப்டி போடுங்க அருவாளை, சீனா!
:))

சொன்னாலும் சொன்னீங்க ரொம்பச் சரியாச் சொன்னீங்க!:)

நாளை நடப்பதை அறிந்துவிட்டால்தான் பிரச்சினையே இருக்காதே!

//

அப்ப அடுத்த பாகம்
???????????
????????????
?????

நாகை சிவா Thursday, October 25, 2007 1:42:00 AM  

மலைவாழ் மக்கள் பாசக்கார மக்கா என்பதை சரியா சொல்லி இருக்கீங்க... அவங்க கட்டுபாட்டையும் ஒரே வரியில் காட்டி விட்டீர்கள்...

ஒரு வாரம் தானே... காத்து இருப்போம்.

cheena (சீனா) Thursday, October 25, 2007 9:55:00 AM  

மங்களூர் சிவா,

அடுத்த பாகம் நாளன்னிக்கு எழுதுவார்

வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அன்புடன் சீனா

தி. ரா. ச.(T.R.C.) Thursday, October 25, 2007 9:57:00 AM  

'கொல்லிமலைல என்ன இருக்கு? ஏதோ ஒரு சிவலிங்கம் இருக்குது அங்கே. அரப்பளீஸ்வரர்னு பேரு அவருக்கு

கொல்லிமலைக்கு பக்கத்தில் உலிபுரம் என்ற கிராமமதான் நான் பிறந்த ஊர்.மலயடிவரத்தில் கோம்பை என்ற கிராமம் என் (அம்மா) பாட்டிக்கு நிறைய நிலம் இருந்தது.மாமா போஸ்ட் மாஸ்டர் ஆகவே போஸ்ட் கொடுக்க கொல்லிமலைக்கு போகும்போது நானும் கூட போவேன்.
அங்கே சித்தர்கள் நடமாட்டம் உண்டு அப்போதே சொல்லுவார்கள். உங்கள் கதையைபடிக்கும்போது பழைய விஷயங்கள் நினைவுக்கு வருகிறது.
கதையின் போக்கு அனுமானிக்க முடியாமல் திருப்பத்துடன் செல்லுகிறது. நன்றி

VSK Thursday, October 25, 2007 11:17:00 AM  

//அப்ப அடுத்த பாகம்
???????????
????????????
?????//
பாருங்க அதிசயத்தை!

நாளை இப்போ இன்று ஆயிடுச்சு!

இன்று இரவு [ சிலருக்கு அது நாளை காலை!:))] ஒரு பதிவு வரும்!
:))))

VSK Thursday, October 25, 2007 11:18:00 AM  

//மலைவாழ் மக்கள் பாசக்கார மக்கா என்பதை சரியா சொல்லி இருக்கீங்க... அவங்க கட்டுபாட்டையும் ஒரே வரியில் காட்டி விட்டீர்கள்...

ஒரு வாரம் தானே... காத்து இருப்போம்.//

நீங்களும் ரொம்ப அழகா அதை ஒரு வரியில் உணர்ந்து சொல்லிட்டீங்க நாகைப்புலியே!

இன்று இரவு [ சிலருக்கு அது நாளை காலை!:))] ஒரு பதிவு வரும்!
:))))

VSK Thursday, October 25, 2007 11:19:00 AM  

//அடுத்த பாகம் நாளன்னிக்கு எழுதுவார்

வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அன்புடன் சீனா//
லொள்ளு..??

இன்று இரவு [ சிலருக்கு அது நாளை காலை!:))] ஒரு பதிவு வரும்!
:))))

VSK Thursday, October 25, 2007 11:21:00 AM  

// உங்கள் கதையைபடிக்கும்போது பழைய விஷயங்கள் நினைவுக்கு வருகிறது.
கதையின் போக்கு அனுமானிக்க முடியாமல் திருப்பத்துடன் செல்லுகிறது. நன்றி//


உங்களைப் போன்ற் அனுபவமிக்கவர்கள் வந்து கருத்துகளைப் பரிமாறிக்கொள்வது ரொம்பவும் உதவியாக இருக்கிறது, திரு. தி.ரா.ச.!

நன்றி!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP