Friday, August 18, 2006

"கிழுமத்தூராரின் கமல் கவிதை!"

"கிழுமத்தூராரின் கமல் கவிதை!"


"வா! வா! வா! இன்னா? அட்த்த குறளு சொல்லணுமா?" என உற்சாகமாக வரவேற்றான், மயிலை மன்னார் என்னைப் பார்த்ததும்!

"அதில்லை....!" என்று இழுத்தவாறே கையோடு பதிவெடுத்துக் கொண்டு சென்றிருந்த தாளை அவனிடம் நீட்டினேன்.

"இன்னாஇது? குறள் மாரி இல்லியே? எவனோ கிறுக்கின மாரி இருக்கே? இன்னா விசயம் ?" என்று சற்று முறைத்தான் மன்னார்!

"நமக்குத் தெரிந்த நண்பர் ஒருத்தர் அவர் பதிவில் போட்ட கவிதை இது! உலகநாயகன் கமல் எழுதியதாம்! படித்து, முடிந்தால் உங்கள் மன்னாரைப் பொருள் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம் என்று சவால் விட்டிருக்கிறார்" என்று பயந்தவாறே சொன்னேன்!

ஏனெனில், மன்னாரிடம் திருக்குறளைத் தவிர வேறு எதற்கும் இதுவரையில் பொருள் கேட்டதில்லை! சொதப்பி விடுவானோ என்ற அச்சத்தின் காரணமாய்!

"அடேடே! நம்ம ஆள்வார்ப்பேட்ட ஆண்டவரு! அவரு எளுதினதா இது? மனுசனுக்கு மண்டை முச்சூடும் மூளை! அபார அறிவு! படி! படி! ஒரு தபா கேப்போம், இன்னா சொல்லிருக்கார்னு" என்று அவன் உற்சாகமாய்க் குரல் கொடுக்கவே, தெம்புடன் கவிதையைப் படித்துக் காட்டினேன், ஒருமுறைக்கு இருமுறையாக!

http://mahendhiran.blogspot.com/2006/08/kamal-hassan.html

"மொத்தமா பொருல் சொல்ணுமா; இல்ல வரிக்கு வரி வோணுமா?" என்று ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டே கேட்டான்!

"வரிக்கு வரி எழுதினால் கொஞ்சம் நீளமாகப் போய்விடும் எனவே மொத்தமாகவே சொல்!" என்றவுடன், "சரி! எனக்கு இன்னா வர்தோ அத்த ஸொல்றேன்! அப்ப்டியே ஒண்ணு வுடாம எளுதிக்கோ! இத்த ஸொன்னது ஆருன்னு கட்சீல சொல்றேன்!" என்று சொல்லலானான் மயிலை மன்னார்!

பின் வருவது அவன் சொன்னது!

"ஏதோங்காட்டியும் ஒன்ன சேர்ல குந்த வெச்சுட்டொம்ங்றதுக்காவ, நீதான் பெர்ய ஒசத்தி எங்கள வுடன்னு பெர்மைப்படாதே! அந்த கருமாந்தரமெல்லாம் வோணாமேன்னுதான் கம்முனு கீறோம்ன்றத மட்டும் மன்சுல வெச்சுக்க! சர்யா?

எங்காளுதான்,... எங்க மொளி பேசறவந்தான் வர்ணும்ன்ற சின்ன புத்தி எங்களுக்கெல்லாம் இல்லாத்தோண்டி, நீ எங்க கூட்டிக்கினு போவப்போரேன்னு கூடத் தெரியாமத்தேன், நீயே லீடரா இருந்துக்கோன்னு வுட்டு வெச்சிருக்கிறோம் நாங்க! புரிஞ்சுக்க!

இத்தோ! நீ பூட்டி வுட்ருக்கியே ஏதோ குதிரைக்கி போட்ற மாரி, கடிவாலம், சேனம் அல்லாம்!...... அத்தெல்லாம் நம்ம சைசுக்குப் பண்ணது இல்ல மாமோவ்! அது இந்த ஊர்ல செஞ்சதும் இல்ல! அசல் நாட்ல பண்ணது! இன்னோரு சாதிக் குதிரைங்களுக்கோசரம் தயார் பண்ணது!

எப்போ வோணும்னாலும் சும்மா 'அஜீஸ்' கணக்கா தலிய உருவிக்குனு போய்க்கினே இருப்போம்! வாய்ல பூட்டிக்கினு இருக்கோமேன்னு தப்புக்கணக்கு போட்றாத! நீ சோத்துக் கைபக்கால வலிச்சியின்னா, நாங்க பீச்சாங்கை பக்கமா திரும்பி போயிருவோம்! மக்கா!... ஒரு தலய ஒரு சிலுப்பு சிலுப்பினோம்னா, இந்த கண்ணுல போட்ருக்கற பட்டையெல்லாம் எகிறிப்போயிறும்! அப்போ வரும் பாரு புதுபுது ரூட்டல்லாம்! அப்பால அங்க நா யாரு, நீ யாருன்னு ஒர்த்தருக்கும் தெரியமவேப்பூடும்!

இப்பக்கூட, நீ குந்திக்கினு இருக்கியே ஒன் சீட்டு, இப்டியும், அப்டியுமா நெளிஞ்சுக்கினு,... அத்தக் கூட நாங்கதேன் அப்பிடி சேஞ்சோம் சாமி!

ஏன்னு கேக்கிறியா? ஆங்! அப்டிக்கேளு! எங்க நீ சொகமா ஒரு எடத்துல ஒக்காந்து, தூங்கிறக் கூடாதுன்னு ப்ளான் பண்ணி செஞ்சது அது!

ஒன்னைய அதுல ஏத்தறதுக்குக் காட்ன குஜால வுட, ங்கொக்கமக்கா, சாஸ்தியா இருக்கும் பாரு நாங்க ஒன்னிய கீளே கவுக்கும் போது!

பயந்து, பயந்து தனியா, முளிச்சுக்கினே இருக்கியே, அத்த வுடு! எங்களப்போல சோறு துண்ணாமலியும் இருக்க கத்துக்கோ!

நாட்டாமை ஒன்னுதா, எங்குளுதான்ற டவுட்டே ஒனக்கு வோணாம்! ஒங்கொப்புரான அது எங்குளுதுதான்! பீச்சாங்கை பக்கம் வலி! சோத்தாங்கைபக்கம் திரும்புவோம்!
இதென்னா, ஒங்கப்பன் வூட்டு ஆஸ்தின்னு நெனச்சுக்கினியா! இது ஒனக்கும் ஸரி; எங்களுக்கும் ஸரி; ஒண்ணும் பட்டா போட்டதில்ல!

ஏதாவது ஒரு ராங் நடக்கும்; இத்தெல்லாம் மாறிப்பூடும், மவனே! ஆமாம்!"

என்று சாமியாட ஆரம்பித்து விட்டான்.... மருதநாயகம்!மன்னிக்கவும்! மயிலை மன்னார்!


அவனை சமாதானப்படுத்தி ஒரு நிலைக்குக் கொண்டு வருவதற்குள் போதும், போதும் என்றாகி விட்டது!

போகும் போது, "மறக்காம, இத்தக் கொடுத்த அந்த கிளுமத்தூர்க்காரருக்கு நான் டேங்ஸ் சொன்னேன்னு சொல்லிடுப்பா!" என மறக்காமல் கூறினன் மயிலை மன்னார் !!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP