Tuesday, March 03, 2009

"நான் கடவுள்” என் பார்வையில்!!

"நான் கடவுள்” என் பார்வையில்!!
கதை அவரவர் பார்வையில் இப்போது அனைவருக்குமே தெரியும்!
அதைப் பற்றிப் பேசுவது இனி உசிதமல்ல.
பொதுவாக இது போன்ற படங்கள் அனைவரும் பார்க்கும் முன்னரே
எங்கள ஊருக்கு வந்துவிடும்!
எவரது பாதிப்பும் இல்லாமல், நான் ஒரு பதிவு போடுவது வழக்கம்.
இந்தமுறை அப்படியல்ல.
கோவியார் முதல் அனைவரும் அவரவர் பார்வையில் கதையை அலசியாச்சு.
இது என் பார்வை!

ஏழை,பணக்காரன் என இவ்வுலகில் உண்டு.
ஆண்டான்,அடிமை எனவும் உண்டு.
அனைவருக்கெனவும் ஒரு உலகம் அவரவர்க்கு உண்டு.
அதிலேயே வாழ்பவர்க்கு, இதுதான் இன்றைய வாழ்வில் எனக்கென
விதித்திருக்கிறது எனப் புரிந்தவர்க்கு, இதில் ஒரு பிரச்சினையும் இல்லாமல்
வாழ முடிகிறது.
அதை மீறி, எனக்கு ஏன் இதுவென நினைப்பவருக்கு, இருவழிகள் தெரிகின்றன.
எதிர்த்துக் கேட்பது.
இது இல்லாமல் போக வேண்டுவது.

இதில் மூன்று கதைகள்.

தனக்கு இதுவெனத் தெரியாமல், ஒரு வாழ்க்கையில் திணிக்கப்பட்ட ஒருவன்,
அகோரியாகி, பின், அவன் சம்மதத்தைக் கேட்காமலேயே, உலக வாழ்க்கையில் திணிக்கப் படுகிறான்.
நானே கடவுள் என உணர்ந்து, ஒரு கடவுள் என்ன தீர்வு கொடுப்பானோ, அதைத் தர எந்த ஒரு முடிவையும் எடுப்பவன் இவன்!

அவலமாகப் பிறந்த ஒரு நிகழ்வினாலேயே,துவண்டுவிடாமல், இதையே ஒரு மகிழ்வாக ஏற்றுக்கொண்டு, அவலத்தின் நடுவிலும், தமக்கென ஒரு மகிழ்வைப் பார்க்கும் வலுக்காட்டாயப் பிச்சைக்காரர்கள்!

அவலம் இதுதான் எனத் தெரிந்தும், இதுவா என் வாழ்க்கை? இதுதான் என்றால் இதிலிருந்து எனக்கு விடுதலை தா! .... அது என்ன முடிவாக இருந்தாலும் எனக்குச் சம்மதமே என முழுமனத்தோடு அடிபணியும் சிலர்.

இவர்களைச் சுற்றி இக்கதை பயணிக்கிறது.

எவர் தவறு, எவர் சரி என்பது கடவுளுக்குக் கிடையாது.
அவன் படைப்பில் அனைவருமே சரிதான்!

ஆனால், சரி என்கிற நிலையிலிருந்து, ‘ஆணவம்’ தலைக்கேற, அதிகமாக ஆசைப்படும் நிலைக்கு ஒருவன் தன் நிலை பிறழும்போது, அது கடவுளின் கண்ணைத் திறக்கிறது.

‘கடவுள்’ என்பவன் இங்கு நாம் எல்லாருமே!

ஆம்! நாம் ஒவ்வொருவருமே கடவுள் தாம்!
இதை உணர்பவர் சிலர்.
உணராமல், சாமிகளையும், சாமியார்களையும் தேடி அலைபவர் பலர்.

ஆனால், இக்கட்டு என நாம் நினைக்கும் ஒன்று நம்மைத் தாக்கும்போது, கடவுள் என நாம் நினைக்கும் எல்லாருமே செயலற்று, திக்கித்து விழிப்பதுதான் நாம் காணும் உண்மை.

இதுவே சரி, இதுவே போதுமென நினைப்பவருக்கு, வாழ்க்கை எப்படிப் போனாலும், அதுவே சரியாகிப் போகிறது.

அது தமிழகப் பிச்சையாயினும் சரி, மலையாளப் பிச்சையாயினும் சரிதான் இவர்களுக்கு.

இது வேண்டாம்! இதற்காகவா நான் பிறந்தேன்? அப்படிப் பிறந்திருந்தால், இதிலிருந்து விடுதலை கொடு எனக்கு என நினைப்பவர்கள், ஒரு கடவுளைத் தேடுகிறார்கள்.... தானே ஒரு கடவுள் தான் எனப் புரியாமலேயே.

இவர்கள் நினைத்திருந்தால், தெளிவாகச் சிந்தித்திருத்திருந்தால், தானும் கடவுளே என நினைத்திருந்தால், இவர்களே ஒரு முடிவைத் தேர்ந்தெடுத்திருந்தார்ப்பார்கள்.

ஆனால், வாழ்க்கையோ, வாழ்க்கையின் சூழலோ, அல்லது நடக்கும் கொடுமைகளோ, இவர்களைத் தானும் ஒரு கடவுளே என உணரவைக்க மறுக்கிறது; அல்லது அவகாசம் கொடுப்பதில்லை.

அப்போது, ஒரு கடவுள் என நினைத்து வணங்குபவரிடம் சென்று முறையிடுகிறார்கள்.

அப்படி இவர்கள் சென்று முறையிடும் அவன் தன்னை உணர்ந்தவனாய் இருந்தால், அதற்கு ஒரு வழி சொல்லுகிறான்.

அல்லது ஒரு வழியைக் காட்டுகிறான்.

அந்த வழியை நம்பிச் செல்லுபவர் ஒரு சிலரே!

அப்படிச் செல்லுகின்ற அந்த ஒரு சிலருக்கு, கடவுள் ஒரு வழி தந்து இந்த வாழ்க்கையில் இருந்து ஒரு நற்கதி அளித்து, முதலில், அவர்களை இதுவரையில் கொடுமைப் படுத்தியவர்களை அழித்துவிட்டுப் பின்னர், அவர்களைக் கரையேற்றுகிறான்.

இதுதான் “நான் கடவுள்”

தேடல் மிகவும் முக்கியம்.
தேடல் இல்லாமல் வாழ்க்கை இல்லை.
வாழ்க்கையின் முடிவும் இல்லை.

தன் விருப்பம் இல்லாமலேயே காசிக்கு அனுப்பப்பட்டு, ஒரு அகோரியாகத் தன் வாழ்க்கையை நடத்திய ஒருவன், மீண்டும் தன் விருப்பம் இல்லாமலேயே உலக வாழ்க்கைக்குத் திரும்பவும் வருகிறான்.

இதில் ஒட்ட முடியாமல் போய், பிரம்மத்திலேயே ஆழ்ந்து, அப்படி ஆழ்வதற்கு அவனுக்குக் கற்றுத் தரப்பட்ட ஒரு ஆழ்நிலை மயக்கத்திலேயே தன் வாழ்க்கையை அங்கும் தொடர்கிறான்.இதனை எவரையும் விடவும் நன்கு புரிந்த அவன் தாய், அவனுக்குத் தலை முழுகுகிறாள்.

அவனைச் சூழ்ந்த இந்த நிலையில், ஒரு பிச்சைக்காரக் கூட்டம்.
உடல் ஊனமுற்றவர்களை வைத்து ஒரு தொழில் செய்யும் தாண்டவன்.
அவனுக்குத் தேவையான பிச்சைக்காரர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அதன் மூலம் தானும் பிழைக்கும் முருகன் போன்ற சிலர்!


தன்னால் கொண்டுவரப்பட்டவர்களைக் கண்டு தினம் தினம் சாகும் ஒரு ஏதும் செய்யவியலாக் குற்றவாளி இந்த முருகன். இவர்களுடன் தன் வாழ்க்கையை இணைத்துக் கொண்டு, அவர்களுக்குச் சின்னச் சின்ன உதவிகளைச் செய்து, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், கடவுளிடம் பாவமன்னிப்பு கேட்கும் அறிவிலி இந்த முருகன்.

இந்தக் கூட்டத்தில், விதிவசத்தால்,வந்து சேரும் ஒரு குருட்டுப் பிச்சைக்கார இளம்பெண்.

இவர்களை வைத்துஇதுவரையில் ‘நேர்மையாக’ஒரு பிழைப்பை நடத்தும் தாண்டவன் இப்போது பேராசை வசப்பட்டு ஒரு பிழை செய்கிறான்.
பணத்துக்காக, தன்னிடம் இருப்பவர்களில் சிலரை வேறொரு மாநிலத்துக்கு விற்கிறான்.
பேராசை, மேலும் பேராசைப் படவைத்து, குழந்தைகளிடமிருந்து தொடங்கி, அதிகப் பணத்துக்காக, இப்போது, இந்தப் பெண்ணையும் விற்கிறான்.

முருகனுக்கு இதில் சம்மதமில்லை.
இந்தப் பெண்ணைக் காப்பாற்றவும் வக்கில்லை.
‘கடவுளிடம்’ அனுப்பி வைக்கிறான்.

ஆம! இதுவரையில், நடந்ததெல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு, அவரவர் சந்தோஷத்தை அனுபவிப்பதை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த கடவுளிடம் இப்போது இந்த வழக்கு வருகிறது.


‘கடவுள்” அநியாயம் செய்பவரைத் தண்டிக்கிறான். சம்ஹாரம் செய்கிறான்!

இந்தப் பெண் இப்போது இவன் முன்னே!
இதுதான் எனக்கு இந்தப் பிறவியில் நிலை என்றால் என்னைக் கடைத்தேற்று எனக் கதறுகிறாள்.

‘கடவுள்’ அவளை உடனேயே அழிக்கிறான்.

கடவுள் அவளை அழித்திருக்க வேண்டியதில்லை!
அவளே அதைச் செய்திருக்க முடியும்..... அவள் தான் யாரென
உணர்ந்திருந்தால்!
அப்படி அவளே அதைச் செய்யாத நிலையில்.... தன்னை அண்டினவரைக் காப்பதே கடவுளின் குணம்!

ஆம்! இங்கு கடவுள் அவளைக் காத்தான்!
அழித்ததாகச் சிலர் சொல்லலாம்.
ஆனால், இங்கு நிகழ்ந்தது ஒரு காத்தலே!

இந்தப் படத்தின் சிறப்பம்சம்.... ஒரு காட்சி கூடத் தேவையில்லாமல் எடுக்கப்பட்டதல்ல.
சண்டைக்காக, நகைச்சுவைக்காக, ஒரு சில ஊர்களில் ஓடணுமே என்பதற்காக, இத்தனைப் பாடல்கள் வேண்டுமே என்பதற்காக ஒரு காட்சி கூட இந்தப் படத்தில் கிடையவே கிடையாது.

நடித்திருக்கும் ஒவ்வொரு பாத்திரமும் மிகச் சிறப்பாகத் தத்தம் பங்கைச் செய்திருக்கிறார்கள்.

இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, வசனம் எல்லாமே மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.

அப்பழுக்கில்லாத ஒரு உயர்தரப் படம் இது.

இதை ஒரு படம் எனக் கூடச் சொல்ல மாட்டேன்.

உலகத்தரம் வாய்ந்த படம் தமிழில் வரவில்லையே என்பவரின் தாகத்தைத் தீர்க்கவென்றே எடுக்கப்பட்ட அற்புதமான திரைப்படம் இது!

பாலா இதன் மூலம் உலக அரங்கிற்கு ஒரு சவால் விடுத்திருக்கிறார்.
அந்தச் சவாலை, அங்கு கொண்டு செல்ல, நாம் அனைவரும் இதனைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்!

தமிழன் இந்தப் படத்தின் தரத்தை எந்தவொரு காழ்ப்புமில்லாமல் பார்த்து, இதனை உலகுக்கு ஒருமித்தமாகப் பறை சாற்ற வேண்டும்!

செய்வார்களா?
செய்ய வேண்டும்!

பாலா என்னும் இயக்குநருக்கு நாம் செய்யும் மரியாதை இதுவாகத்தான் இருக்க முடியும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP