Monday, July 31, 2006

உறவுகள் [தேன்கூடு போட்டிக்கு!]

உறவுகள் [தேன்கூடு போட்டிக்கு!]

என் இனிய உறவுகளே!

உறவுகள் புனிதமானவை!
அவை ஏதோ நம் தேவைக்கும், வசதிக்கும் ஏற்படுவன அல்ல!
நம் விருப்பத்துக்கும் கட்டுப்படாதவை அவை.
நம்புங்கள்!
இது இறைவன் வகுத்த வழி!
இயற்கை நமக்களித்த கொடை!
தாய் - தந்தை, அண்ணன் - தம்பி, அக்கா - தங்கை, கணவன் - மனைவி, நண்பன் - தோழி, மற்றும் எல்லா உறவுகளுமே இப்படித்தான்.
நாம் கேட்டுப் பெறுவன அல்ல -- நம் மேல் சுமத்தப்படுகிற..... இனிய பாரம்!

உணர்வுகள் அப்படியல்ல!
கண நேரச் சலனத்தின் விழுதுகள் அவை!
உணர்வுகளால் தோன்றிய உரங்களே, உறவாய் மலர்வது போல ஒரு மயக்கம் வரலாம்.
சிந்தித்துப் பார்த்தால், அந்த உணர்வுகள் தோன்ற, நம்முள் ஏற்பட்ட உறவே அடிப்படை என்பது புரியும்.

ஒருத்தி ஒருவனை மணக்கும்போது கூடவே வருகின்ற, அமைகின்ற உறவுகள், அவள் வேண்டி வந்ததல்ல!
அவனுக்கும் அப்படித்தான்.
அங்குதான் இறைவன் -- இயற்கை உறவுகளை வகுக்கிறான், விதிக்கிறான்.

உறவால் வரும் உணர்வா, இல்லை உணர்வால் வரும் உறவா என்று பார்த்தால், முன்னதற்கே வலிமை அதிகம்.
உறவால் உணர்வுகளும், உணர்வால் உறவுகளும் அவ்வப்போது காயப்பட்டாலும், முன்னது எளிதில் ஆறுகிறது; ஆற வேண்டும்.
இதை மாற்றி, உணர்வுகளை உச்சாணிக்கொம்பில் ஏற்றி, அதன் பேயாட்டத்திற்கு சலங்கை கட்டும்போது, ஆறா ரணங்களை -- தழும்புகளை அல்ல! -- அவை கட்டாயமாக ஏற்படுத்தி விடுகின்றன.

உறவுகள் உணர்வுகளை அழிப்பதில்லை.
ஆனால், உணர்வுகளின் உந்துதல்களால் உறவுகள் ஒதுக்கப்படுகின்றன; நசுக்கப்படுகின்றன.
உறவை மதித்து, உணர்வை மிதித்தால், மனித நேயம் மலரும்.
உணர்வுகள் உறவால் பலம் பெறுதல் வேண்டும்.
உறவுகள் சாவதில்லை, எந்த நிலையிலும்!
காலம் விதித்த கணக்கு அது!
காலன் வந்தாலும் மறைவதில்லை.
இன்றும் மறைந்த நம் உறவுகள் நம் மனதில் நிறைந்துதான் உள்ளனர்.

உணர்வின் மயக்கம் நிரந்தரமானது அல்ல.அதனை நிலைப்படுத்த பாடுபடவேண்டாமே!
உறவுகளுக்கு உள்ளர்த்தங்கள் கிடையாது; தெரியாது.
உள்ளபடி முகத்துக்கு நேராகவே சொல்லிவிடும்.
உணர்வுகளுக்கு உண்டு.
ஆதாயம் தேடி அலையும் பேய் அது!
பலன் இல்லை என்றால், பல்லை உடைக்கவும், பரிகாசம் பண்ணவும் தயங்காது.
கடைசியில் மிஞ்சுவது, வருத்தமும், வேதனையும்தான்.

அற்ப உணர்வுகளுக்காக, உறவையா அழிப்பது?
உறவையா வெறுப்பது?
கட்டையில் போகும்வரை, கட்டாயம் உறுத்தும்; வருத்தும், நம்மை.

நான் என்பதை மறந்து, நாம் என்பதை வளர்த்தால் நன்மையே விளையும்.
உறவென்ற சூரியனால், உணர்வென்ற பனியை உருகச் செய்யுங்கள்.
உறவை மதித்தால், மனிதரை மதிக்கும் மனோநிலை தானே மலரும்.
மகிழ்ச்சியும் உண்டாகும்.
உணர்வுகளால் எவரையும் பலமாக அடிக்க முடியும், உறவென்ற கவசம் இல்லாதவரை.
உறவைக் கழித்து, உணர்வைக் கூட்டி, பகைமையைப் பெருக்கி, வாழ்வை அழிக்கலாமா?
இறுதியில் மிஞ்சுவது பூஜ்யம்தான்.
இன்று உலகின் பல இடங்களில் நாம் காணுவது உணர்வுகளால் எற்படும் அவலங்களே!


உணர்வைப் பெரிதாய் எண்ணி,உறவுகளை அவமதிக்காதீர்கள்.
உலகம் "மனப்பூர்வமாக" உங்களைப் பெரிதாக எண்ணாது.

"பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்" என்றான் கீதையில் கண்னன்.
"பலனை எதிர்பாராமல், உறவை உயர்த்துவோம்" என்பேன் நான்.

இருப்பது சில காலம்.
பார்ப்பது சில பேரை.
இதில் உறவென வருவது ஒரு சிலரே!
இவர்களை வருத்தி, நாம் மட்டும் உயர்ந்தால், நாளை நம் சந்ததியினர் பெருமையாகப் பேச மாட்டார்கள் நம்மை.
நினைவில் கூட கொள்ள மாட்டார்கள்.
இன்றும் 'அம்மா, அப்பா' என்று நெகிழ்வுடன் நினைவு கூர்வது அன்பினால் மட்டும் அல்ல --உறவை ஒட்டி வளர்த்த பாங்கினால்தான்!

நானூறு கோடி மக்கள் இவ்வுலகில் வாழ்ந்தாலும், ஒரு நானூறு பேரைத்தான் நமக்கு நன்றாகத் தெரியும்.
அதிலும் ஒரு நாற்பது பேரே நம்முடன் அன்றாட வாழ்க்கையில் பங்கு கொள்பவர்கள்!
நமக்குத் தெரிந்த இந்த மக்கள், நன்றாக வாழ நாம் உதவலாமே!
உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, உறவைத் தாறுமாறாய்ப் பேசித்திரியும் சிலரும் அதில் இருக்கக்கூடும்.
இருந்துவிட்டுப் போகட்டும்.
தொடர்ந்து நாம் நன்மையே செய்தால், நிச்சயம் மாறுவார்கள் ஒரு நாள்!
அவர்களைத் திருத்துவதாக எண்ணி, அதே தவறை, வேறு விதத்தில் நாம் செய்யத் தேவையில்லை.

மீண்டும் சொல்கிறேன்.
உறவுகள் புனிதமானவை' .
உணர்வால் காயப்படுத்த வேண்டாம் அதனை.
எல்லோருடனும் அன்பெனும் உறவை வளர்க்கப் பாடுபடுவோம்.

இதனை......
நாளை என ஒத்திப் போட வேண்டாம்.
ஒருவேளை... நாளையச் சூரியன் நமக்கு உதிக்காது போய்விடலாம்.
இன்றே செய்வோம்!
இன்புற்று வாழ்வோம்!
உறவுக்குக் கை கொடுப்போம்.
உணர்வினை உறவோடு பிணைப்போம்.

"உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே! -- அதில்
பிரிவுகள் என்பது இருக்காதே!"
நன்றி டி.ஆர்.]

Read more...

Sunday, July 30, 2006

வாழும் புன்னகையே! வருத்தம் விடு!

வாழும் புன்னகையே! வருத்தம் விடு!




வாழும் நாட்களிலே சோதனைகள் சில வரலாம்!
பாழும் உலகிதென்று வேதனையும் நாம் படலாம்!
மீளும் வழி ஏதென்று முயற்சிகள் செய்திடலாம்!
நாளையது மறந்து போய் நாட்களும் நகர்ந்திடலாம்!

ஆனால்.......,

வாழும் நாட்களே வேதனையாய்ப் போனதிங்கு!
பாழும் உலகினையே பழித்திங்கு வாழ்ந்திட்டாய்!
மீளும் வழி கிடைத்து முன்னேற்றம் அடைந்திட்டாய்!
நாளும் வளர்ந்திடவே நாள்தோறும் உழைத்திட்டாய்!

அடுத்த வீட்டுத் திண்ணையிலே அலங்காரமாய் வீற்றிருந்து
மிடுக்காய்ப் சொல்விடுத்து ஊராரைக் கவர்ந்திட்டு
துடுக்காய் வாழ்ந்தே துணையின்றிப் போய்ச்சேர்ந்த
அடுக்கான கதையென்று ஆயிரம் இங்குண்டு!

தன் நினைவில் திடம் வைத்து
தன் மனதில் அதை வளர்த்து
தன் காலம் முடியுமட்டும்
தன் நோக்குப் போல் வாழ்ந்து
தன்னோடு சிலரையும்
அதுபோலப் பாவித்து
தான் போன பின்னாடி
தன் நட்பைத் துணைக்கழைத்து
சென்றிட்ட அத்தைகள்
ஆயிரம் இங்குண்டு!

ஒவ்வொரு நிகழ்வுமே ஒரு நினைவை கொண்டு வைக்கும்
அவ்வாறு இதுவென்று அளவிட்டு மனம் பதைக்கும்
பாவியவள் கதையின்று என்கதையை ஒத்ததென்று
ஒருவாறு உள்ளமும் உணர்ந்தே துடித்துவிடும்!

ஆனால்.....,

உன்கதையோ அதுவல்ல!
எம் கதையை ஒத்ததல்ல!
தம்மோடு இணைத்திங்கு
விம்மிவிடும் நிகழ்வல்ல!

கட்டிய மனைவியிங்கு
முட்டியிலே அடிபட்டு
கட்டுகள் போட்டே
கட்டிலில் கிடக்கின்றாள்!

அன்றொரு நாள் அது போன்ற
துன்பமான நிகழ்வொன்றை
இன்று நான் ஒப்பிட்டு அவள்
துன்பம் உணர்கின்றேன்!

ஆனால்....,

நீ பட்ட பாடுகளை
நீள்கவிதையில் நீ வடிக்க,
மீளாச் சோகமன்றி
வேறொன்றும் உணரவில்லை!

உன் வலியின் தாக்கமது
என் மனதைத் தொட்டாலும்
நான் உணராக் காரணத்தால்
அனுதாபம் கொள்ளலன்றி
ஒரு வகையும் தெரிந்திலனே!

தெரிந்தவர் வீட்டினிலே சாவொன்று நிகழ்ந்தது
விரைந்தங்கு சென்றிட்டேன் மறைந்தவரின் நட்பெண்ணி
"பிரிந்தவர் உறவுக்கு பேரிழப்பு அது" என்று
புரிந்தாலும் எனை அதுவும் பலமாகத் தாக்கவில்லை
வருத்தத்தைத் தெரிவிப்பது மட்டுமே அல்லாமல்
வேறெதுவும் செய்யாமல் திகைத்தங்கு நின்று விட்டேன்

அவரவர் வலியின் பாரம்
அவரவர் வலியின் கோரம்
அவரவர் வலியின் சோகம்
அவரவரே உணர்ந்திடுவர்!

அடுத்தவர் என்னதான் அகமுடைந்து போனாலும்
தடுக்க இயலவிலையே எனத் துவண்டு போனாலும்
விடுத்தங்கே செய்வதெல்லாம் அனுதாபம் காட்டலன்றி
அடுத்திங்கே செய்வது என்னவென யாரறிவார்!

எனவே........,

தோழி நீ கலங்காதே! துவண்டிங்கு போகாதே!
வாழுகின்ற காலமட்டும் நாமிங்கு கூடி நிற்போம்!
வழித்துணையாய் வந்திடுவோம்! வலியதனைக் குறைத்திடுவோம்!
வீழுகின்ற நாட்களினிப் போனதென்று நீ உணர்வாய்!

எதிர்நீச்சல் போட்டின்று இன்னல்களைத் துரத்தி நின்றாய்!
புதுவாழ்வு கண்டிடவே புத்தொளியாய்ப் பூத்துவிட்டாய்!
இதுவரையில் பட்ட துன்பம் போதுமடி உந்தனுக்கு!
இதமாகச் சொல்கின்றேன்! இன்பமுறச் சிரித்திடுவாய்!

அனுதாபம் கண்டிங்கு அஞ்சி நீ நிற்காதே!
உன் சோகம் தனை உணர்ந்து சொன்னதென்று புரிந்திடுவாய்!
மென்மேலும் வளர்ந்திடவே வாழ்த்துகின்ற ஊக்கமிது!
இனிமேலும் கலங்கி நீ துன்பமதைக் கொள்ளாதே!

"வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வண்கணார் இல்"
எனும்
வள்ளுவன் வாக்கினை மனதில் கொண்டு......
வாழும் புன்னகையே! வருத்தம் விடு!

[வாழும் புன்னகை வித்யாவின் சோகமும் வருத்தமும் உணரப்படுபவை அன்று!
மாறாக, இப்படியா? என அலற வைக்கும் கோரம்!
அவர் மனவருத்தத்துடன் எழுதிய பதிவினைப் பார்த்ததும் என் மனதில் தோன்றியதை வார்த்தைகளில் வடித்திருக்கிறேன்,
ஆக்கபூர்வமான கருத்துகள் மட்டுமே இடவும் என அன்புடன் வேண்டிக் கோள்கிறேன்!
நன்றி!
வணக்கம்!]

Read more...

Thursday, July 27, 2006

"நன்றியும், வாழ்த்துகளும்!"

"நன்றியும், வாழ்த்துகளும்!"

தேன்கூடு போட்டியில், என் படைப்பிற்கு வாக்களித்த முகம் தெரியா அந்த பதினான்கு நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும்,

படைக்கத் தூண்டிய நண்பர் இளவஞ்சிக்கும்,

போட்டியை நடத்திய தேன்கூடு/தமிழோவியத்துக்கும்,

எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கவிதை, கட்டுரைகளை விட, கதைகளே மக்களால் அதிகம் கவனிக்கப்படுகிறது எனப் புரிகிறது.

'லிவிங் ஸ்மைலின்' கவிதை வேறு நிகழ்வு!

நல்ல அனுபவம்.

அனைவருக்கும், குறிப்பாக 14 வலை நண்பர்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றி!

வெற்றி பெற்றவர்களுக்கு என் உளங்கனிந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்!

மீண்டும் வருவேன்!!

Read more...

Saturday, July 22, 2006

அ.அ.திருப்புகழ் -- 5 "தண்டையணி வெண்டையம்"

அருணகிநாதர் அருளிய திருப்புகழ் -- 5

"தண்டையணி வெண்டையம்"


http://www.musicindiaonline.com/p/x/zJbgYyr0Bt.As1NMvHdW

[மீண்டும் ஒரு நீள் பதிவு! விரித்துக் கூறாமல் அப்படியே சொல்லிவிட்டுப் போக மனம் வரவில்லை. அருள் கூர்க!சிறப்பு இணைப்பாக "திருமுருகனின் திருப்பெருவடிவம்" பற்றிய ஒரு விளக்கம் காண்க!]


ராகம்: சிம்மேந்திர மத்யமம்/தன்யாஸி
தாளம்: கண்டசாபு

தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்
தந்ததன தந்தனந் --- தந்ததான

>>>>>>>>பாடல்>>>>>>>>

தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன் --- கொஞ்சவேநின்

தந்தையினை முன் பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொட மணைந்துநின் --- றன்பு போலக்

கண்டுறக டம்புடன், சந்தமகு டங்களும்
கஞ்சமலர் செங்கையுஞ் --- சிந்து வேலும்

கண்களு முகங்களுஞ் சந்திர நி றங்களுங்
கண்குளிர என்றன்முன் --- சந்தியாவோ?

புண்டரிக ரண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் --- கொண்டபோது

பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் --- சிந்தைகூரக்

கொண்டநட னம்பதஞ் செந்திலிலு மென்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் --- கந்தவேளே

கொங்கைகுற மங்கையின் சந்தமண முண்டிடுங்
கும்பமுனி கும்பிடுந் --- தம்பிரானே !

-------------------------------------------------------------------------------------

------பொருள் விளக்கம்-------


"தண்டையணி வெண்டையம் கிண்கிணி சதங்கையும்
தண்கழல் சிலம்புடன் கொஞ்சவே"


மாதவம் செய்ததாலே மாசு மிக்க தாரகனும்
மரணிக்கும் போது காணுகின்ற பேறடைந்த
சீலமிகு இரத்தினத்தால் சீராக நிரப்பப்பட்ட
கோலமிகு காலணியும் தண்டை எனும் ஆபரணமும்,

நடனமிடும் வேளையினில் இனிய ஒலி செய்கின்ற
வெண்டையம் என்கின்ற வீரமிகு ஆபரணமும்,

பதினாலுலகும் எக்களித்த[க.அ.93]
பதித்த மணிகளால் அணி செய்த
திருவரையில் திகழுகின்ற
கிண்கிணி என ஒலி செயும் ஆபரணமும்,

பொன்னாலும் மணியாலும் புனைந்து கட்டிய
நான்கு வேதங்களின் கீதமிசைக்கும்
பொன்னடியிலும், திருவிடையிலும் திகழும்
சதங்கை எனும் நல் ஆபரணமும்,

வீரமிகும் பாதங்களில்
சீராக ஒலி செய்திடும்
நல்லோசை கேட்டிடவே
நாமகளும் அமர்ந்திருக்கும்
தண்கழல் எனும் தனி ஆபரணமும்,

கற்பென்பது பொதுவெனக் காட்டுதல் போலக்
கற்றிடும் அடியவரின் துயர் களைய
அற்புதமாய் ஒலி கிளப்பி அழகுறவே
ஆடிடும் சிலம்பு எனும் ஆபரணமும்,

சேர்ந்தங்கு இனிதாய் ஒலித்திட,

"நின் தந்தையினை முன் பரிந்து இன்ப அரி கொண்டு
நன் சந்தொடம் அணைந்து நின்ற அன்பு போலக் கண்டுற"


நடனத்தின் நாயகனாம் நடராசன் முன் நின்று
பண்புடனே வலம் வந்து பவுரி எனும் கூத்தாடலை
இன்பமுற ஆடியே இனிதே களிப்புற்று
அன்புடனே சேர்ந்து நின்றிட்ட நிலை போல
அடியவனும் கண்டின்று ஆனந்தம் அடைந்திடவே,

"கடம்புடன், சந்த மகுடங்களும், கஞ்சமலர் செம்கையும்
சிந்து வேலும், கண்களும், முகங்களும், சந்திர நிறங்களும்
கண் குளிர என்றன் முன் சந்தியாவோ?"


அழகுறத் தொடுத்த கடப்ப மலர் மாலையும்,
எழிலுற அமைந்த மணி முடி மகுடமும்
கமல மலரொத்த சிவந்த திருக்கரங்களும்,
பகலென ஒளிவீசும் ஞான வேலாயுதமும்,
நிலவின் அருள் பொழியும் விழிமலர் பனிரன்டும்,
மலர்ந்து நகைபுரியும் ஆறு திருமுகமும்,
வளரும் மதி போலும் ஒளிச்சிதறல்களும்,
பலவும் காட்டியே என் விழிகள் குளிர்ந்திடவே
உலவும் இவ்வடியவன் முன் தோன்றி அருள் புரியாவோ?

"புண்டரிகர் அண்டமும், கொண்ட பகிர் அண்டமும்,
பொங்கி எழ, வெம் களம் கொண்ட போது"


தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும்
நான்முகனாம் பிரமனின் உலகமும்,
அதனையும் உள்ளடக்கிய வெளி அண்டங்களும்,
இதனால் நம் துயர் தீர்ந்ததென
மகிழ்வுடன் எழுந்து ஆரவாரம் செய்ய,
தகித்திடும் போர்க்களம் நீ புகுந்த போது,

"பொன்கிரி என அம் சிறந்து எங்கினும் வளர்ந்தும்
உன் புண்டரிகர் தந்தையும் சிந்தை கூர"


பொன்னாலான மலை போல அழகிற் சிறந்து
அளவற்ற தவஞ் செய்த சூரனுக்கு அருளிடவே,
அகிலமனைத்தையும் நின் திருமேனியில் அடக்கியே
மூவுலகையும் ஈரடியால் அளந்திடவே அன்றொரு நாள்
வாமனனாய் வந்த [பிரமனின் தந்தையாம்]
நாரணனும் தன்வடிவம் அதில் கண்டு வியத்தல் போலே,
----------------------------------------------------------------
[முருகனின் திருப்பெருவடிவம். [மாரியம்மன் தாலாட்டு மெட்டில்]]

ஐயன் திருவடிவில் ஆரார் அடங்கி நின்றார்!
உள்ளடியில் அத்துணை மலைகளும் அடங்கின!
திருவடியின் முற்பாதியில் கடல்களும்,
விரல்களிலே இடி, தாரகை, கிரகங்கள் அடங்கின!
வருணனும், குபேரனும், நிருதியும் இராக்கதரும்
மீதமுள்ள கால் பகுதியில் அடங்கி நின்றார்!
கணைக்காலில் முனிவர்களும், தெய்வமணிகளும்,
முழங்காலில் வித்தியாதரர் எனும் அறவோரும்
தொடையினில் இந்திரனும், அவன் மைந்தன் சயந்தனும்,
தொடைமூலத்தில் இயமனும்,
அரையின் முற்பக்கலில் அசுரரும்
விலாப்பகுதியினில் விண்னவரும்,
யாவருமே அடங்கி நின்றார்!
மூலாதாரத்தில் நாகர்களும்,
கோசநுனியினில் அமிர்தமும்,
உந்தியில் உயிர்களும், மார்பினிலே அனைத்துக் கலைகளும்,
முப்புரி நூலில் ஞானமும், நுனிமுடியில் அண்டங்களும்,
உள்ளங்கையினிலே போகப்பொருள்களும்,
தோள்களிலே திருமாலும், பிரமனும் அடங்கினர்!
கைவிரல்களிலே தெய்வப்பெண்டிரும்,
கண்டத்தில் நாதமும் அக்கினியும்,
திருவாயில் வேதங்களும், தமிழ்மறையும்,
பற்களிலே எழுத்துக்களும்,
நாவினிலே ஆகமங்களும்,இதழினில் எழுகோடி மந்திரங்களும்,
நாசியில் வாயுவுமே அடங்கி நின்றார்!
இருகண்களிலே சந்திர சூரியரும்,
செவிகளிலே ஒரு நூறு உருத்திரரும்,
நெற்றியிலே ஓங்காரமும்,
சென்னியிலே சிவபெருமானும் அடங்கி நின்றார்!
ஐயன் உருவினிலெ அனைவருமே அமர்ந்திருந்தார்!
கூடிக் களித்திருந்தார் குவலயத்தோர் மகிழ்ந்திடவே!
------------------------------------------------------------------------
"கொண்ட நடனம் பதம்"

அத்திருப்பெரும் வடிவு கொண்டு
நீ ஆடிய நடனப் பாதங்கள்

"செந்திலிலும் என்றன் முன் கொஞ்சி
நடனம் கொளும் கந்தவேளே!"


தில்லையிலும், கொடுங்குன்றத்திலும் முன்பெனக்குக்
காட்டியருளிய நின் திருமலர்ப் பாதங்களை
இந்தச் செந்தூரிலும் கொஞ்சும்படி ஆடிக்காட்ட
வந்திருக்கும் கந்தன் எனும் அழகனே!

"கொங்கை குற மங்கையின் சந்த மணம் உண்டிடும்"

மலையிற் பிறந்த சந்தனத்தை
கலையாகப் பூசிகொள்ளும்
மலைக் குறத்தியாம் வள்ளியாரின்
வளைக்கரத்தின் வாசம் நுகரும்

"கும்பமுனி கும்பிடும் தம்பிரானே!"

நீ உரைத்த தமிழ் உரைத்த
மாமுனியாம் அகத்தியனார் வணங்கிடும்
தனிப்பெருந் தலைவனே! குமரனே!
-----------------------------------------------------------------------------------

...அருஞ் சொற் பொருள்...

அரி:
பவுரி எனும் கூத்தாட்டு
சந்தொடம்: மகிழ்ச்சி [சந்தோஷம் என்பதன் திரிபு]
புண்டரிகர்: அரியின் நாபித்தாமரை மலர் மேல் இருக்கும் பிரமன்
பகிர் அண்டம்: அண்டத்தையும் உள்ளடக்கிய வெளி அண்டம்
வெங்களம்: சூடான போர்க்களம்
புண்டரிகர் தந்தை: திருமால் [பிரமனின் தந்தை]
கூர: உவகை அடைய
கும்பமுனி: அகத்தியர்
தம்பிரான்: தனிப்பெரும் தலைவன்
------------------------------------------------------------------------------------
அருணகிரி தாள் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!

Read more...

Thursday, July 13, 2006

"அ.அ.திருப்புகழ்" -- 4 "உனைத் தினம் தொழுதிலன் "

"அ.அ.திருப்புகழ்" -- 4 "உனைத் தினம் தொழுதிலன் "

இப்பாடல் சற்று கடினமான பாடல். விரித்துப் பொருள் சொல்ல வேண்டிய பாடல். பதிவு சற்றே நீளமாக இருக்கும். அருள் கூர்ந்து அருணகிரியார் மேலிருக்கும் அன்பினால், விரிவாகப் பொருள் சொல்லத் துணிந்தேன். இதனைப் பதிவெடுத்து, சிறிது சிறிதாகப் படித்து உணர்ந்தால், மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்!
*************************************************************************************

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 4"

"உனைத்தினந் தொழுதிலன்"

ராகம் -- சாவேரி
தாளம் -- ஆதி

தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன -- தனதான

>>>>>>>>>>>பாடல்>>>>>>>>>>>>

உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடு னடியிணை
உறப்ப ணிந்தில னொருதவ மிலனுன -- தருள்மாறா

உளத்து ளன்பின ருறைவிட மறிகிலன்
விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் -- மலைபோலே

கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலித னுழையினர்
கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு -- பொருபோதே

கலக்கு றுஞ்செய லொழிவற அழிவறு
கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
கணத்தி லென்பய மறமயில் முதுகினில் -- வருவாயே

வினைத்த லந்தனி லலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமெ யுகுதசை கழுகுண
விரித்த குஞ்சிய ரெனுமவு ணரையமர் -- புரிவேலா

மிகுத்த பண்பயில் குயில்மொழி யழகிய
கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை -- யுடையோனே

தினத்தி னஞ்சதுர் மறைமுனி முறைகொடு
புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
சினத்தை நிந்தனை செயுமுனி வரர்தொழ -- மகிழ்வோனே

தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண -- பெருமாளே.

****************************************************************************************************
இப்பாடலின் இரண்டாம் பகுதிக்குப் பொருள் சொல்லி, பின்னர் முதற் பாதியை உணரலாம்!

"வினைத்தலம் தனில் அலகைகள் குதிகொள"

சீறுகின்ற வீரர்கள் தீரமுடன் போரிடும் வீரமிகு போர்க்களத்தில்
கோரமிகு பேய்களும் குறைவில்லா மகிழ்வுடனே குதித்துக் கூத்தாடவும்,

"விழுக்கு உடைந்தும், மெய் உகு தசை கழுகு உண"

தோலுக்கு உள்ளிருக்கும் நிணமென்னும் சதை உடைந்து
உடலினின்று சிந்துகின்ற தசையென்னும் மாமிசத்தை
கொடிய வல்லூறு எனும் கழுகுகள் கொத்தித் தின்னவும்,

"விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர் புரிவேலா"

அள்ளி முடியும் வழக்கமிலாக் காரணத்தால்
விரிந்து கிடக்கின்ற தலைமுடியினையுடைய
அவுணர் எனும் இராக்கதக் கூட்டங்களை
அழித்திடவே போர்புரியும் வேலாயுதப் பெருமானே!

"மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலைமுகடு உழு
நறைவிரைத்த சந்தன ம்ருகமத
புயவரை உடையோனே"


இனிய குரலுடன் அழகிய பண் பாடும்
குயிலினை ஒத்த மொழியினைப் பேசிடும்
கொடியினை நிகர்த்த இடையினையுடைய
குறிஞ்சிப்பெண்ணாம் வள்ளிமலைக்காரியின்
பொலிந்த குங்குமம் திளைந்த மார்பில்
வலிந்து பரவி, மணந்த சந்தனமும்
உயர்ந்த மானின் உடலினின்று விளைந்திடும்
கஸ்தூரியென்னும் வாசனைப்பொருளும்
படிந்து நிற்கும் தோளினை உடையோனே!

"தினத்தினம் சதுர் மறைமுனி முறைகொடு"

நல்வேதம் உணர்ந்திட்ட நான்முகனாம் பிரமனும்
வல்விதியில் சொன்னபடி நாள்தோறும் முறைப்படியே

"புனல் சொரிந்து அலர் பொதிய"

நன்நீரைக் கொண்டுவந்து திருமஞ்சன நீராட்டி
வாசமிகு பூக்களால் அருச்சனை செய்யவும்,

" விணவரொடு சினத்தை நிந்தனை செயும் முனிவரர் தொழ மகிழ்வோனே"

வானுறையும் விண்ணவரும், சினம் ஒழிந்த முனிவோரும்
உனைப்பணிந்து அடிதொழவும், உளம்மகிழச் சிரிப்பவனே!

"தெனத்தெனந்தன என வரியளி நறைதெவிட்ட
அன்பொடு பருகு உ யர் பொழில் திகழ்"


'தெனத்தெனந்தன'வென ரீங்காரம் செய்திடும்
வரிகளையுடைய வண்டுகளும் மலர்ந்திருக்கும் பூவின்
தேனினைத் தெவிட்டும் அளவினிலே மகிழ்வுடன் உண்ணும்
விண்ணினை எட்டும் உயர் சோலைகள் திகழும்,

"திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே"

திருப்பரங்குன்றமெனும் திருத்தலத்தில் வீற்றிருக்கும்
சரவணபவ எனும் பெருமைக்கு உடையவரே!

"உனைத் தினம் தொழுதிலன்"

முத்தி அடைந்திட முதல் படியாக
சத்திச் சரவணனை இருகை கூப்பி
பத்தியுடன் எப்போதும் பயனுறவே நானும்
துதித்திடும் செயலினைச் செய்ததுமில்லையே!

"உனது இயல்பினை உரைத்திலன்"

நாவு படைத்ததன் பயனறியாமலே
தாவும் மயிலேறி சங்கடங்கள் தீர்க்க வரு ம்
தேவயானைத் துணைவனைப் போற்றிடும்
மேவுகுணங்களைசொன்னதுமில்லையே!

"பல மலர்கொடு உன் அடி இணை
உறப் பணிந்திலன்"


கலி வந்து வாட்டிடுகையில் என்செய்வோமென
நலிந்தோரெல்லாம் நடுங்கி நிற்கையில்
'மலர்போலும் சிவனது பாத மலருண்டு
மலரிட்டு வணங்கிட நறுமலரும் உண்டு
குளிர்ந்த நீர்க் குளியாட்டலும் உண்டு'என
எளியவர்க்கு அருளிடும் கண்ணபிரான் உரைத்தபடி
விடியுமுன்னர் எழுந்திருந்து தூய நீராடி
கூடையினை நாபிக்குக் மேலேந்தி சோலை அடைந்து
முந்தை வினையழிக்கும் இறைவனது நாமம் சொல்லி
செடியினிலே பூத்திருக்கும் நறுமலரைப் பறித்து
வடிவான மாலைகளும் தனி மலரும் சேர்த்துவந்து
அடியார்க்கு அருளிடும் பரமனது நாமம் செப்பி
திருவடியிற் பொருந்துமாறு நெற்றியினை வைத்து
இருகால், இருதோள், இருகை, நெற்றி, மார்புயெனும்
எட்டங்கமும் படுமாறு நிலத்தில் வீழ்ந்து
உனை வணங்கும் நெறியினையும் புரிந்தேனில்லையே!

"ஒரு தவம் இலன்"

மன்னு பிறவி தந்த உந்தன் கருணையினை எண்ணி எண்ணி
உன்னை நினைந்தே உள்ளும் உடலும் உருகி உருகி
என்பெலாம் கரைந்திடவே கண்ணீர் விட்டு அழுது அழுது
அன்புமயமாகி அசைவற்று ஓரிடத்திலே நினைந்து நினைந்து
இன்பத்தவத்தினையே ஓர் கணமேனும் செய்தேனில்லையே!

"அருள்மாறா உளத்துள் அன்பினர் உறைவிடம் அறிகிலன்"

உள்ளன்பு பூண்டு வெளிவேடம் காட்டாமல்
கள்ளமிலா மனத்துடன் உனைப் பணியும்
வெள்ளமெனப் பெருகிடும் அருளை வழங்கிடும்
நின்னடியார் இருக்கின்ற இடம் நாடி அவர் பாதம்
பணியும் திண்மையும் அறிந்தேனில்லையே!

"விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன்"

கால்கள் பெற்ற பயன் நீ இருக்கும் மலைகளையும்
வேலவனின் கோயிலையும் வலம் வந்து பணிதலே என்னும்
சீலமிகு வழியினையும் செய்தேனில்லையே!

"உவப்பொடு உன் புகழ் துதிசெய விழைகிலன்"

உன்புகழைப் பாடுதலே உவப்பிலா இன்பமெனில்
திருப்புகழைப் பாடிடுதல் எத்துணை பேரின்பம்!
இப்புகழை உணராமல் வாழ்நாளை வீணாக்கி
நின்புகழை விருப்புடன்பாட விரும்பினேனில்லையே!

[இவையனைத்தும் செய்யாமல் இப்பொழுதைக் கழித்ததாலே]

"மலைபோலே கனைத்து எழும் பகடு அது பிடர்மிசை வரு
கறுத்த வெம் சின மறலி தன் உழையினர்
கதித்து அடர்ந்து எறி கயிறடு கதைகொடு பொருபோதே"


மலை போலும் உருவுடன், சினத்துடன் கனைத்து எழும்
எருமையின் மீதேறி அடங்காக் கோபத்துடன்
காலனின் தூதுவர்கள் கையில் பாசக்கயிறேந்தி
கொல்லுகின்ற கதையெனும் ஆயுதமும் தாங்கியே
வெல்லுதற்காக என்னெதிரே வேகமாக வரும்போது,

"கலக்குறும் செயல் ஒழிவற அழிவறு"

'என் செய்வேன்'எனக் கலக்கம் எனை வாட்டிடும் வேளையில்
'யானிருக்க பயமேன்'என என்கவலை அனைத்தினையும்
அழிந்தும் ஒழிந்தும் போகுமாறு செய்திடவும்,

"கருத்து நைந்து அலம் உறுபொழுது
அளவைகொள் கணத்தில் என் பயம் அற"


பயத்திலும், சோகத்திலும் என்வசமிழந்து உளம் நலிந்து
நான் வருத்தம் கொண்டிடும் வேளையினில்
என்னிடம் ஏற்பட்ட இப்பயங்கள் நீங்கிடவும்,

"மயில் முதுகினில் வருவாயே"

குறையிலாத திருமயிலின் முதுகினில் நீ அமர்ந்து
விரைந்து வந்து எனக்கு அருளிட வேண்டும்!
___________________________________________________________________________________________________________

அருஞ்சொற்பொருள்:

பகடு:
எருமைகிடா
மறலி: எமன்
உழையினர்: தூதுவர்
அலம்: மனக்கவலை
<strong>அளவைகொள் கணத்தில்: அளவுபடுகின்ற ஒரு கணப்பொழுதில்
வினைத்தலம்: போர்க்களம்
<strong>அலகை: பேய்
விழுக்கு: சதை
குஞ்சியர்: தலைமுடியை உடையவர்
அவுணர்: இராக்கதர்
கொடிச்சி: கொடி போன்ற இடை உடையவள்
நறை: வாசனை
ம்ருகமத: கஸ்தூரி மான் உடலினின்று வரும் கஸ்தூரி எனும் வாசனைப் பொருள்
சதுர்மறைமுனி: பிரமன்
புனல்: நீர்
அலர்: மலர்
அளி: வண்டு
*************************************************************************************
வேலும் மயிலும் துணை!
முருகன் அருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!
*************************************************************************************

...

Read more...

Sunday, July 09, 2006

"மரணமில்லாப் பெருவாழ்வு!" [தேன்கூடு போட்டி

"மரணமென்பது மாண்டு போவதா?"

"கரணம் பலவும் கரைத்துக் குடித்திடினும்
நாரணன் பெயரை நாவில் உரைக்கீரேல்
மரணம் வருங்காலையில் மற்றென் பயன்"
என்று
சரணராம் சங்கரரும் அன்றே உரைத்திட்டார்.

"காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே" வென
போதகராம் பட்டினத்தாரும் பாங்காகச் சொல்லிவைத்தார்
"பாதகங்கள் பலசெய்தும் பச்சைமயில் வாகனனின்
பாதங்களை மறவேன்"
என அருணகிரியும் அருளிட்டார்.

இப்படி இவர்கள் சொல்லிவைத்த வார்த்தைகளை
எப்படியோ படித்துவிட்டு, 'போகின்ற காலத்தில்
தப்பாமல் சொல்வோம்'என மனதுக்குள் நிச்சயித்து
'அப்பாடா!' என்றிருந்தேன் அப்போது ஓர் நினைவு!

மாண்டுபோவதுதான் மரணமெனில்
ஆண்டாண்டாய் மாண்டதெல்லாம்
மறுபடியும் பிறந்ததெல்லாம்
அடுக்கடுக்காய் நினைவில் வந்து
திடுக்கிட்டு எழுந்து நின்றேன்!

இனிவருவதனைத்தும்
என்வாழ்வில் நிஜமாய் நடந்தவை!
உண்மை!உண்மையன்றி வேறில்லை!

"சத்தியமாய்ச் சொல்லுவதை
சத்தியமாய் நம்பிடப்பா!"

மரணத்தின் வாசனையே
தெரியாத வயதினிலே
நான் வளர்த்த நாய்க்குட்டி
நசுக்குண்டு போனது.....

அப்போது மாண்டு போனேன்!

அடுத்த சில நாட்களிலே
கொடுத்தவாக்கை நினைவில்கொண்டு
அழகான குட்டியொன்றை
அப்பாவும் கொணர்ந்தபோது....

மறுபடியும் மீண்டு வந்தேன்!

படித்திருந்த வேளையினில்
பாவையொருத்தியைப் பார்த்துவிட்டு
ஒருதலையாய்க் காதலித்தேன்
வேறொருவன்பின் அவள் போனாள்!...

அப்போது மாண்டு போனேன்!

என்மேலும் நேசங்கொண்டு
எனையொருத்தி நாடிவந்து
என்னோடு பழகிடவே
இன்பமாக வந்தபோது....

மறுபடியும் மீண்டு வந்தேன்!

என்பேரைச் சொல்லிவைக்க
என்மகனும் வருவான் என
தன்னுதிரம் சிந்தியே
கண்போல வளர்த்திட்ட
என் தந்தை மாண்டுபோனார்
என்படிப்பு முடியும் முன்னே!...

அப்போது மாண்டு போனேன்!

மருத்துவனாய்த் தேர்வுபெற்று
மகிழ்ச்சியுடன் வந்தன்று
மாதாவின் காலடியில்
மண்டியிட்டு நின்றபோது
"மரித்த உன் தந்தை இன்று
மனமகிழ்வாய் இருப்பார்"என
மாதரசி சொன்னபோது......

மறுபடியும் மீண்டு வந்தேன்!

நினைவு தெரிந்த நாள் முதலாய்
நிழல் போலக் கூட வந்து
நெடுங்காலம் பழகிட்ட
நண்பனவன் ஓர் நாளில்
நேசம் மறந்தங்கு
நகர்ந்திட்ட நொடியினிலே......

அப்போது மாண்டு போனேன்!

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பென்று
உணர்த்திடவே வந்தது போல்
மணக்க மணக்க உதவிடவே
நண்பர்குழாம் நின்ற போது...

மறுபடியும் மீண்டு வந்தேன்!

காசுபணம் பெரிதென்று
பாசத்தை மறந்தன்று
ஏசிவிட்டு என் உறவும்
தூசெனவே சென்ற வேளை....

அப்போது மாண்டு போனேன்!

பாசத்தை நினைவில் வைத்து
நேசத்தை நெஞ்சில் வைத்து
நேசித்தவள் இல்லம் சென்று,
யோசித்த அவள் உறவை
பேசிமுடித்த என் தமக்கை!...

மறுபடியும் மீண்டு வந்தேன்!

கடல்தாண்டி வந்திங்கு
கால் பதியும் நேரத்தில்
காலனவன் வந்தங்கு
கண்மணியாம் என் தாயைக்
கூட்டிச்சென்ற நேரத்தில்
கடைசிமுகம் பாராமல் நான்
கதறிட்ட வேளையினில்...

அப்போது மாண்டு போனேன்!

பித்துப் பிடித்தது போல்
தனித்தன்று திரிந்தபோது
செல்வழியில் ஓர் மாது
இன்முகத்துடன் எனை நோக்கி
என்கவலை போக்கிடவே
இன்சொற்கள் சொல்லிச் சென்றாள்!...

மறுபடியும் மீண்டு வந்தேன்!

இப்படியே ஓராயிரம்
நினைவலைகள் மீண்டு வந்து
என் மனதில் மோதியதில்
எனக்கொன்று தெளிவாச்சு!

சாவென்றும் பிறப்பென்றும்
புவியினிலே ஒன்றில்லை!
ஒவ்வொரு நாளிலுமே
புதிதாய்ப் பிறக்கின்றோம்
மறுபடியும் மரிக்கின்றோம்!

இருக்கின்ற வேளையினில்
இசைவாக வாழ்ந்திட்டால்,

இல்லாத சில பேர்க்கு
இயன்றவரை உதவிட்டால்,

இன்றையப் பொழுதினிலெ
இன்சொற்கள் பேசிட்டால்,

இன்று புதிதாய்ப் பிறந்தோமென
இன்பமாய் நினைந்திட்டால்,

என்றுமே எனக்கு மரணமில்லை!

புனரபி ஜனனம்
புனரபி மரணம்

நாரணனை நாடுங்கள்!
நல்லவராய் வாழுங்கள்!

மரணமென்பது மாண்டுபோவதா?
இல்லை, இல்லை, இல்லவே இல்லை!
மனிதத்தை மறப்பதே மரணம்!

தேன்கூடு போட்டியிங்கு
தந்தது ஒரு வாய்ப்பு!
என்மனதில் உள்ளதனை
உண்மையாக உரைத்திட்டேன்!
பரிசினை எதிர்பார்த்து
படிக்கவில்லை இப்பாட்டு!
என் மனது பாரம்
இறங்கியது இன்றெனக்கு!

நன்றி!
வணக்கம்!

அன்புடன்,
எஸ்.கே.

Read more...

Monday, July 03, 2006

"இன்று சிரித்திருப்போம்!"

"இன்று சிரித்திருப்போம்!"


தெரியாத ஒன்றைத் தெளிவு செய்வதாகத்
திரித்துரைக்கும் சில விதிகள்!
புரியாத ஒன்றைப் புரிய வைப்பதாகப்
பிதற்றிடும் சில புளுகர்கள்!
சரியான பாதையில் தயங்காமல் செல்வதற்குச்
சத்தம் போடத் தேவையில்லை!
மரியாதை மட்டும் மனதில் இருந்தால்
மகிழ்விற்கோ என்றும் குறைவில்லை!

தப்பென்றும் சரியென்றும்
சொல்வதிலே அர்த்தமில்லை!
"இப்படித்தான் வாழு" என
வற்புறுத்தல் தேவையில்லை!
மனத்தளவில் மாசின்றி
இருந்தாலே போதாதோ?
கணமேனும் கலக்கங்கள்
கூடிடுமோ நம்மிடையே?

தனியேதான் பிறந்தோம்
தனியேதான் வளர்ந்தோம்
துணையென்று வந்ததெல்லாம்
முன்னேயோ, பின்னேயோதான் !
பிணை இன்றி வாழுவோம்
புறமொன்று சொல்லோம்
தனித்தங்கே செல்லுகையில்
தவிப்பின்றிச் சென்றிடுவோம்!

நம்மில் எவரும் நம்மை விடவும் உயர்ந்தவரில்லை!
நம்மில் எவரும் நம்மை விடவும் தாழ்ந்தவரில்லை
நம்மில் நம்மையும், நம்மில் பிறரையும் கண்டுகொண்டால்
நம்மில் என்றும் குறைவில்லை, நம்மை அழித்திட ஆளுமில்லை!

ஒன்றாய் வாழும் உண்மையதனை
உலகில் அனைவரும் அறிந்துகொண்டால்
நன்றே நடக்கும், நன்மையே பிறக்கும்
என்றே உரைப்பேன்;உணர்ந்திடுவீரே!
சென்றதை மறப்போம்; நல்லதே நினைப்போம்!

அல்லலை அழிப்போம்!

இன்று சிரித்திருப்போம்!

என்றுமே மகிழ்ந்திருப்போம்!

Read more...

Sunday, July 02, 2006

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" -- 2

இறைவன் என்றும் கைவிட மாட்டான்!
நாகை சிவா

*************************************************************************************

நாகை சிவாவிற்கு எனது மனமார்ந்த நன்றி!

முருகனருள் முன்னிற்கும்!!

திருவிளையாடல் திரைப்படத்தில் ஔவையார் ஒரு வசனம் பேசுவார்;
"முருகா! இதன் மூலம் நீ ஒரு விளையாட்டை நடத்த விரும்பினால், அதற்கு யார் என்ன சொல்ல முடியும்!" என.

அதே போல, அறுபது நிமிடங்களுக்குள்ளேயே, இதனைச் சரி செய்த முருகனுக்கும், உறுதுணையாய்ச் செயல்பட்ட நண்பர் நாகை சிவாவிற்கும், ஆறுதல் சொல்லிய, நம்பிக்கை ஊட்டிய அத்துணைப் பேருக்கும் நன்றி சொல்லி, இப்பதிவினை, மறுபதிப்பு செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கம்பர் செய்தது போல, நாகை சிவாவின் பெயரை கூடவே இட்டு நன்றி கூறுகிறேன்!
*************************************************************************************



"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" -- 2



'பக்கரை விசித்ர மணி'

ராகம் :: நாட்டை/மோஹனம்
தாளம் :: ஆதி

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன ---- தனதான

.......பாடல்.......

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர கமுநீபப்

பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்

திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப னிருதோளும்

செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை யிளநீர்வண்

டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழ மிடிப்பல்வகை தனிமூலம்

மிக்க அடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கினச மர்த்தனெனு மருளாழி

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய பெருமாளே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"பொருட்கவிதை"


"பக்கரை விசித்ரமணி, பொன் க[ல்]லணை இட்டநடை
பட்சியெனும் உக்ரதுரகமும்"


"அங்கவடியென்னும் அழகான ஆபரணம் தன்னில்
பங்கமில்லா இரத்தினங்களைப் பாங்காகப் பதித்திட்ட
பொன்னாலான சேணத்தை பொலிவோடு அணிந்துகொண்டு
விண்ணையும் சாடுகின்ற வேகநடை கொண்டங்கு
புரவி போல் பறந்திடும் மயிலென்னும் வாகனத்தையும்,

"நீபப் பக்குவ மலர்த்தொடையும், அக் குவடு பட்டு ஒழிய
பட்டு உருவ விட்டு அருள் கை வடிவேலும்"


கடம்ப மரத்தினிலே பக்குவமாய்ப் பூத்திட்ட
மலர்களால் கோத்திட்ட மணமிகு மாலையையும்,
கிரவுஞ்சமெனும் மாயமலை அழிந்து ஒழியவென
விரைந்தங்கு ஊடுருவிச் செல்லுமாறு விட்டருளிய
திருக்கையில் ஏற்றிருக்கும் கூரான வேலையும்,

"திக்கு அது மதிக்க வரு குக்குடமும், ரட்சைதரு
சிற்று அடியும், முற்றிய ப[ன்]னிருதோளும்"


அட்டதிக்கும் நடுநடுங்க சிறகசைத்துக் காட்டி
மற்றவரும் மதித்துவர கொடியினிலே வீற்றிருக்கும்
குக்குடம் என்கின்ற வீரமிகு சேவலையும்,
அனைத்துலகும் காத்துவரும் அழகான சிற்றடிகளையும்,
தினந்து நிற்கும் பன்னிரு தோள்களையும்,

"செய்ப்பதியும், வைத்து, உயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பென எனக்கு அருள்கை மறவேனே"


இப்பதிக்கு வாவென்று அப்போது அருணையினில்
செப்பமுடன் உரைத்திட்ட செய்ப்பதியாம் வயலூரையும்,
இப்போது நீயிந்த பெருமைமிகு திருப்புகழில்
விருப்பமுடன் பாடிடுக எனச்சொல்லி அருளிட்ட
நின் கருணைத் திறத்தினையே எந்நாளும் மறவேனே !

"இக்கு,அவரை, நற்கனிகள்,சர்க்கரை, பருப்புடன், நெய்
எள்,பொரி, அவல்,துவரை, இளநீர்"


தித்திக்கும் கரும்புடனே,அவரையும் ,நற்பழ வகைகளும்
சருக்கரையும், பருப்பும், நெய்யும் சேர்த்துவைத்து
எள், பொரி, அவல், துவரை, இவற்றையும் கலந்தெடுத்து
தானுண்ட நீரைத் தலையாலே தருகின்ற தென்னையின்
ருசியான இளநீரும் விருப்புடனே சுவைத்திடவும்,

"வண்டெச்சில், பயறு,அப்பவகை, பச்சரிசி, பிட்டு,வெள
ரிப்பழம், இடிப்-பல்வகை"


கன்னித்தன்மையுடன் மலர்ந்து, ரீங்காரம் செய்கின்ற
வண்டின் எச்சில் பட்டதாலே, மகரந்தம் என்கின்ற
தீஞ்சுவைத்தேனும் ,பயறு, கொழுக்கட்டை என்னும் அப்பவகைகளும்,
பச்சரிசி, பிட்டு, பாங்காகப் பிளந்திடும் வெள்ளரிப்பழமும்,
உடைத்திடித்து செய்திட்ட பலவகைச் சிற்றுண்டிகளும்,

"தனிமூலம், மிக்க அடிசில்,கடலை, பட்சணமெனக்கொள் ஒரு
விக்கின சமர்த்தனெனும் அருள் ஆழி"


சத்தான சுவையான, ஒப்பற்ற கிழங்கு வகைகளும்,
மொத்தமாக வடித்திட்ட பச்சரிசி அன்னமும்,
கடலை முதலான சத்துவ ஆகாரங்களை
விருப்பமுட்ன் உண்கின்ற, வினைகளை நீக்குகின்ற
விக்கினசமர்த்தன் எனும் அருட்பெருங்கடலே!

"வெற்ப,குடிலச் சடில, விற்பரமர், அப்பர் அருள்
வித்தக மருப்புடைய பெருமாளே."


கயிலையெனும் மலை வாழும், வளைகின்ற சடைகளையும்,
பினாகம் என்கின்ற மேருகிரியாம் வில்லினைக் கொண்டவரும்,
காண்பரிய பெரும்பொருளாம், உலகினிற்கு அப்பனுமாய்
விளங்குகின்ற சிவனார் ஈந்த வளர்ஞானச்சுடரே!
கொம்பொடித்து பாரதம் எழுதிய பெருமையுள்ள ஒற்றைக்கொம்பனாரே!

*************************************************************************
[பக்கரை=அங்கவடி; பொற்கலணை-- தங்கத்தால் ஆன சேணம்; துரகம்--குதிரை; மலர்த்தொடை-- மலர்மாலை; குவடு--மலை; குக்குடம்= சேவல்கோழி; செய்+பதி= வயல்+ஊர், வயலூர்; இக்கு=கரும்பு; வண்டெச்சில்= தேன்; தனி மூலம்= ஒப்பற்ற கிழங்குகள்; ஆழி=கடல்; வெற்ப= மலையில் வசிப்பவர்; குடிலம்=வளைந்த; சடிலம்= சடைமுடி; மருப்பு=தந்தம்.]
********************************************************************************

பாடலின் பெருமை:
அருணகிரியாருக்கு, அருணையில் முருகன் உபதேசம் செய்கிறான்.
ஓர் அடியும் எடுத்துத் தந்து மறைகிறான்.
அருணகிரியாரும், அந்த அடியில் ஒரு பாட்டெடுத்து, திருப்புகழ் பாடி யோகத்தில் ஆழ்கிறார்.
முருகன் அசரீரியாக 'நம் வயலூருக்கு வா' என்று அருள் புரிய, அருணகிரியார் வயலூர்ப் போய் இறைவனைத் தொழுது, திருப்புகழ் பாடும் முறைமையைக் கேட்கிறார்.
இன்னின்னவைகளை வைத்துப் பாடு எனக் குமரனும் பணிக்க,
வயலூரில் எழுந்தருளியிருக்கும் பொய்யாக் கணபதி சந்நிதியில் நின்று, "கைத்தல நிறைகனி" பாடிய பின் அண்ணனிடம், அவரது தம்பியான குமரக்கடவுள் தமக்கு அருளிய திறத்தை வியந்து பாடிய பாடல் இது!
அருணையில் முருகன் அடியெடுத்துத் தந்த பாடல்..... அடுத்த வாரம்!
____________________________________________________________________________________
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!

Read more...

"நல்லோர் நினைவில்......"

"நல்லோர் நினைவில்......"

அன்பு நண்பர்களே!!

வலைப்பூவைப் பற்றியோ, கணினியைப் பற்றியோ, அதிகம் அறிந்திராமல்,
ஏதோ எழுதத் தோன்றுவதை எழுதிப் பதிவு செய்து வரும்
சாதாரண வலைப்பதிவாளனாகிய நான்,
இன்று சற்று எதிர்பாராத ஒரு நேரத்தில்,
எனது, அண்மைப் பதிவான
"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - 2"
[பக்கரை விசித்ர மணி]
என்னும் படைப்பை நீக்கி [delete] இருக்கிறேன்.......
திருத்துவதாக [edit] நினைத்துக் கொண்டு!

உங்களில் யாரேனும் இந்தப் பதிவினை பதிவிறக்கம் [download] செய்து வைத்திருந்தால்,
அதனை எனக்கு அனுப்பினால்,
மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்!

நன்றி!!

Read more...

Saturday, July 01, 2006

"அ.அ.திருப்புகழ்". -- 3 "முத்தைத்தரு"

""அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 3""


"முத்தைத்தரு"

ராகம்: கௌளை
தாளம்: திஸ்ர த்ருபுடை/மிஸ்ரசாபு

தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ..... தனதான

........பாடல்.......

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை

கொட்புற்றெழ நட்புற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே.


"முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கு இறை "


முத்தினைப் போன்றொதொரு வெண்ணிறத்தின் எழிலுக்கு
ஒத்ததாய் அமைந்தவொரு ஒளிமிகு இளஞ் சிரிப்புடனே
தேவர்க்குத் தலைவனாம் இந்திரன் பெற்றிட்ட
தேவயானை எனும் கரிமகளின் நாயகனே!

"சத்திச் சரவண முத்திக்கு ஒரு வித்துக் குருபர"

அன்னையாம் உமையவள் அன்புடன் ஈன்றிட்ட
சக்திவேல் எனும் ஆயுதத்தை கையினில் ஏந்துகின்ற
சரவணபவ என்கின்ற அறுமுகக் கடவுளே!
முக்தியெனும் வீடுநிலை பெற வித்தாக இருப்பவரே!
தந்தைக்கே ஒரு மந்திரத்தின் பொருள் சொல்லி
தகப்பன் சுவாமி எனப் பெயர் பெற்ற
குருவான சிவனுக்கும் குருவான பெருங்கடவுளே!

"என ஓதும் முக்கட் பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்து இருவரும்
முப்பத்து மு வர்க்கத்து அமரரும் ..... அடிபேணப்"


என்றெல்லாம் உனைத்துதிக்கும் முக்கண்ணன் பரமசிவனுக்கு
முன்மைக்கெல்லாம் மூத்ததான முழுமுதற் பொருளான
சுருதியெனும் வேதத்தின் முற்றுப் பொருளான
"ஓம்" என்னும் தனிமந்திரத்தை மடி மீதமர்ந்து உபதேசித்து
அடிமுடி அறியவெண்ணி அங்குமிங்கும் அலைந்த
பிரமன் திருமால் இருவரும் கூட
முப்பத்து முக்கோடி தேவரும் சேர்ந்து
நின்னடி பணிந்து வாழ்த்தி நின்றிடவும்,

"பத்துத்தலை தத்தக் கணை தொடு"

திக்குக்கொரு தலையெனப் பத்துத்தலை படைத்திட்ட
தென்னிலங்கைத் தேவனாம் இராவணனின் தலைகள் சிதறி வீழ
அன்றங்கு ஓர் அம்பை விட்டு அவுணரை அழித்த,

"ஒற்றைக்கிரி மத்தைப் பொருது"

ஒப்புவமை இலாத மந்திரமெனும் மலையினை
மத்தாகவே கொண்டு பாற்கடலைக் கடைந்திட்ட,

"ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்"

அன்றொருநாள் அண்ணன் தம்பிகளுக்கிடையே
மூண்டதோர் பாரதப் போரின் பதின்மூன்றாம் நாளினிலே
அதமத்தின் வழி நின்று அபிமன்யுவைக் கொன்ற
ஜயத்திரதன் எனும் அரசர் கோமானை,
"மறுநாள் மாலை சூரியன் மறைவதற்குள்
என்மகனின் மறைவுக்குக் காரணமான
ஜயத்திரதனைக் கொல்லானேயாகில்,
அக்கினியில் புகுந்து அன்றே உயிர் துறப்பேன்" என
சூளுரைத்த பத்தனைக் காக்கவென
'போரிலே ஈடுபடேன்' எனும் வாக்கினையும் மறந்து
தன் கையில் தாங்கியுள்ள சக்கரத்தை விட்டெறிந்து
சூரியனைச் சிலகாலம் சயனிக்கச் செய்ததாலே
வெளிவந்த சிந்துராசனாம் ஜயத்திரதனை
விரைவாகக் கொல்லச் செய்தருளி உதவிட்ட,

"பத்தற்கு இரதத்தைக் கடவிய"

இத்துணை வல்லமை இயல்புடனே படைத்திருந்தும்
அத்தனையும் காட்டாமல் அடக்கமாக நண்பனுக்குத்
தேரோட்ட இசைந்து தேர்ப்பாகனாய் வந்திட்ட

"பச்சைப் புயல்"


மரகதம் என்கின்ற பச்சைமணியின் நிறத்தினை ஒத்திட்ட
அன்பருக்கு அருளிடவே புயல் போல வந்தருளும்
மரகத வண்ணன், பச்சைமாமணி வண்ணனும்

"மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ..... ஒருநாளே"

மெச்சுகின்ற பரம் பொருளே! என்னை நீ
பரிவுடனே ரட்சித்து அருள் புரியும் ஒருநாளும்
உண்டோ என நான் இறைஞ்சுகின்றேனே!

[இனி வரும் வரிகள் முருகன் அசுரருடன் செய்த போரினை விரிவாக வர்ணிக்கிறது]

"தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்க நடிக்கக்"


தித்தித்தெய என்கின்ற தாளத்துக்கு இசைவாக
முத்துகள் அமைந்த சிலம்பினை அணிந்த
நர்த்தனம் செய்கின்ற பதங்களை வைத்து
பார்த்தவர் நடுங்கும் பத்திரகாளியும்
எத்திக்கும் சுழன்று தாண்டவம் செய்யவும்,

"கழுகொடு ..... கழுது ஆடத்"

பிணங்களைக் கொத்தவெனக் காத்திருக்கும் கழுகுகளுடன்
பிணந்தின்னும் பேய்களும் சேர்ந்தங்கு கூத்தாடவும்,

"திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப் பவுரிக்குத் த்ரிகடக ..... என ஓதக்"


எட்டுத் திக்கிலிருந்தும் இவ்வுலகைக் காத்திடும்
அட்டப் பயிரவர் என்கின்ற எண்மரும்
ஆட்டத்தில் அழகிய இக்கூத்தினுக்கு ஏற்ப
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக
என்னுமோர் தாள ஓசையினைக் கூறிடவும்,

"கொத்துப்பறை கொட்டக்"

கூடவே தாரை, தமுக்கு, தப்பட்டம் என்கின்ற
பற்பல பறைவாத்தியங்களையும் முன்சொன்ன
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக
என்கின்ற அதே தாளத்தில் அழகுற முழங்கிடவும்,

"களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை
கொட்புற்று எழ"


பலகாலம் வாழ்ந்திருந்து, பல போர்களைப் பார்த்திட்ட
கிழமான முதிர்ந்த கோட்டான்களும் மகிழ்ந்து
குக்குக்குகு குக்குக் குகுகுகு, "குத்திப் புதை", "புக்குப் பிடி" என
கூக்குரலிட்டுக் குழறி, வட்டமெனச் சுழன்று
இட்டமுடன் மேலே எழுந்திடவும்,

"நட்புற்று அவுணரை வெட்டிப் பலி யிட்டுக்"

தனக்கு வரமளித்த சிவனாரின் மகனென்னும்
இணக்கத்தை மறந்து பகைகொண்ட அசுரர்களை
வெட்டிக்கொன்றங்கு குவித்துப் பலிகொண்டு,

"குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல ..... பெருமாளே."

அவுணர் குலத்துக்கு இசைவாய் நின்றிட்ட
கிரௌஞ்சமெனும் மாமலையும் வேலாலே குத்துண்டு
பொடிப்பொடியாய் உடைந்துபட அறவழியில் நின்றன்று
அசுரருடன் போர் செய்த பெருமையிற் சிறந்தவரே!

*************************************************************************************
[அருஞ்சொற்பொருள்: அத்திக்கிறை:: தெய்வயானை அம்மைக்குத் தலைவரே!;
சுருதி:: வேதம்;
ஒற்றைகிரி:: ஒப்பற்ற மந்தரமலை;
திகிரி: சக்கரம்;
பச்சைப்புயல்:: பச்சைமாமலை போல் மேனி கொண்ட திருமால்; பரிபுர:: சிலம்புகள் அணிந்த;
கழுது:: பேய்கள்;
சித்ரப் பவுரி:: அழகிய கூத்து;
கொத்துப்பறை:: கூட்டமாக பல பறை வாத்தியங்கள்; முதுகூகை:: கிழக்கோட்டான்;
கொட்பு:: சுழலுதல்;
அவுணர்:: அரக்கர்;
குலகிரி:: அசுரர்களின் குலத்துக்கு இயைந்த கிரௌஞ்ச மலை; பொரவல:: போர் செய்ய வல்ல;
பெருமாள்:: பெருமை மிகுந்தவர்]
*************************************************************************************

அருணாசலத்தில், அருணகிரிநாதர் முருகனிடமிருந்து, "சொல்லற; சும்மா இரு!" என உபதேசம் பெறுகிறார்.
அதனைக் கேட்டு, சமாதியில் ஆழ்ந்த அருணகிரியார் முன் முருகப்பெருமான் மீண்டும் தோன்றி, "நம் புகழைப் பாடுக!" எனப் பணிக்கிறான்.
"என்ன சொல்லிப் பாடுவேன்? எப்படி உன்னை அழைப்பேன், கல்வியறிவு சிறிதுமில்லா இவ்வேழை" என அருணகிரியார் வேண்டுகிறார்.
"முத்தைத்தரு" எனத் தொடங்கிப் பாடு என செவ்வேட் பரமனும் அருள எழுந்ததே இந்தப் பாடல்.
அதன் பின்னர் திறந்த வெள்ளம்தான் திருப்புகழ்!

*************************************************************************************
'மு' எனும் சொல்லைப் பிரித்தால் வருவது, ம்,உ,அ.
இம்மூன்றும் சேர்ந்ததே பிரணவம் என்னும் ஓம் எனும் மந்திரம்.
பிரணவத்தில் தொடங்கியே திருப்புகழ் அமைந்ததைக் கண்டு மகிழ்வோம்!
*************************************************************************************
வேலும் மயிலும் துணை!
முருகன் அருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!
*************************************************************************************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP