"உந்தீ பற" -- 1
"உந்தீ பற" -- 1

"பகவான் ரமணரின் உபதேச உந்தியார்"
திருவாசகம் படித்துவருகையில், மாணிக்கவாசகப் பெருமான் எழுதிய ஒரு பாசுரம் என்னை மிகவும் கவர்ந்தது.
திருவுந்தியார் எனும் இந்தத் தொகுப்பு மூன்றடிகள் கொண்ட பாக்களால் ஆனது. இரண்டாம், மூன்றாம் அடிகளில் ஈற்றடியாக 'உந்தீ பற' எனும் சொற்றொடர் வரும்.
இதன் பொருள் என்னவெனத் தேடினேன். இது மகளிர் விளையாடும் ஒரு விளையாட்டு என ஒரு பொருள் இருந்தது. அதை வைத்து யோசிக்கையில், முதல் இரண்டு அடிகளைச் சொல்லி அதில் ஒரு கேள்வியையோ அல்லது கருத்தையோ வைத்து ஒரு பெண் மலர்ப்பந்தை அல்லது வேறு ஏதேனும் ஒரு பொருளை அடுத்தவளிடம் வீச, அவள், அதற்கான விடையைச் சொல்லி திருப்பி எறிவது எனக் கற்பனை செய்து பார்த்தால், இதன் அமைப்பு சற்று புரிய வரலாம்.
இதைத் தவிரவும் மேல் விளக்கங்கள் இருக்கலாம். தெரிந்தவர்கள் வந்து சொன்னால், நன்றியுடையவனாக இருப்பேன்.
உதாரணத்திற்கு ஒன்று:
மாணிக்க வாசகர் அருளிய திருவாசகத்தில், எட்டாம் திருமுறையில், 'ஞான வெற்றி' எனும் தலைப்பில் உள்ள 'திருவுந்தியாரில்’ இருந்து ஒரு பாடல்:
ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தம்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீ பற
ஒன்றும் பெருமிகை உந்தீ பற
இதன் முதல் ஈரடிகள் சொல்வதின் பொருள்:
முப்புரம் எரிக்கக் கிளம்புகிற திருவேகம்பரின் திருக்கரத்தில் நாம் இரண்டு அம்புகளைக் கூட காணவில்லையே? ஒரு அம்புதானே இருக்கிறது
எனச் சொல்லி உந்தீ பறக்கவிடுகிறாள் அடுத்தவளிடம்!
அதற்கு பதில் அளிக்கிறாள், அடுத்தவள் மூன்றாவது அடியில்:
[பார்வையாலேயே சுட்டெரிக்கும் வல்லமை பெற்ற எம்பெருமானுக்கு] அந்த ஓரம்பே அதிகமில்லையோ? எனச் சொல்லி உந்தீ திருப்பிப் பறக்க விடுகிறாள்.
இப்படியாகப் போகிறது விளையாட்டு மாறி மாறி!
மாணிக்கவாசகரைத் தொடர்ந்து இந்த பாணியைக் கையாண்டு பலரும் இயற்றி இருக்கிறார்கள். அவையெல்லாமே 'திருவுந்தியார்' எனவே அழைக்கப்படுகின்றன.
அப்படி ஒரு நூல் என் கைகளில் வந்து சேர்ந்தது.
இது கிடைத்தது ஒரு சுவையான நிகழ்வு.
எனது உறவினர் ஒருவர் சொன்னதின் பேரில், எங்களூரில் இருக்கும் ஒரு மிகப் பெரிய மருத்துவமனையில், சிகிச்சை பெற வந்திருந்த ஒருவரைப் பார்க்கப் போயிருந்தேன்.
அவர் பகவான் ரமணரின் குடும்ப வழித் தோன்றல் என்பது சென்ற பின்னரே தெரிய வந்தது. விடை பெற்றுக்கொண்டு கிளம்பும்போது, என் கையில் ஒரு புத்தகம் கொடுத்து ”இதைப் படியுங்கள்” எனச் சொன்னார். பகவான் ரமணரால் இயற்றப்பட்ட பல்வேறு பாசுரங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு நூல் அது.
அன்றுதான் திருவண்னாமலை தீபத் திருநாள்! அண்ணாமலையான் ஆசியாக அதை நினைத்து நன்றிசொல்லி வந்தேன்.
அண்மையில், சென்னை சென்றிருந்தபோது, விமானத்தில் படிக்க இதனை எடுத்துச் சென்றிருந்தேன். அதில் என்னை மிகவும் கவர்ந்த பாசுரம்தான் இந்த ”திருவுந்தியார்”!
'நான்' என்பது யார்? அதனை எப்படி அறிவது? அறிந்தபின் எப்படி விடுவது? தான் அற்றவனாக எப்படி ஆவது? போன்ற பல கேள்விகளுக்கு சுருங்கச் சொல்லி விளங்க வைத்த பாசுரமாக அது எனக்குத் தோன்றியது.
எனக்குத் தெரிந்த அளவில், இந்த மூன்றடிப் பாக்களை எட்டுவரிக் கவிதை வடிவில் விளக்க முயன்றிருக்கிறேன். குற்றம் குறை இருப்பின் மன்னிக்கவும்!
முப்பது பாடல்களில் இதனை பகவான் ரமணர் சொல்லியிருக்கிறார். அவரது சீடரான முருகனார் என்னும் அன்பர் இதற்கு முன்னும் பின்னுமாக பனிரண்டு பாக்களை இதே அமைப்பில் சேர்த்திருக்கிறார். அவற்றுள், முதல் ஏழு பாடல்களை முதலில் சுருக்கமாக அளிக்கிறேன்.
குருவருள் துணை நிற்கட்டும்!
******************************
"உபதேசவுந்தியார்"
பாயிரம்
[வெண்பா]
[இந்தப் பாடல் 'உந்தீ பற' அமைப்பில் அமைந்தது அல்ல!]
கன்மமய றீர்ந்துகதி காண நெறிமுறையின்
மன்மமுல குய்ய வழங்குகெனச் - சொன்முருகற்
கெந்தைரம ணன்றொகுத் தீந்தானுபதேச
வுந்தியார் ஞானவிளக் கோர்.
[பதம் பிரித்து]
கன்மமயம் தீர்ந்து கதிகாண நெறிமுறையின்
மன்மம் உலகுய்ய வழங்குக எனச் - சொன்முருகற்கு
எந்தை ரமணன் தொகுத்து ஈந்தான் உபதேச
வுந்தியார் ஞானவிளக்கோர்.
உபதேச உந்தியார் என்னும் ஒரு ஞானவிளக்கு! கன்ம மலம் தீர்ந்து எவ்வாறு கதி காணுவது என்பதன் மர்மத்தை இந்த உலகம் உய்வதற்கென வழங்கிடுக எனச் சொன்ன முருகருக்கு[சீடர் முருகனார்] எங்கள் தந்தையாகிய 'ரமணன்' இங்கே தொகுத்து அளித்தான்.
***********************************
[தொடரும்]