Wednesday, August 23, 2006

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு!" [1]

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு!"

முன்னுரை:


அதான் பெற்றாகிவிட்டதே! எங்களுக்கு எதுக்கு என்று கேட்காதீர்கள்! நான் சொன்னது குழந்தை பெற்றோருக்கு!

கடந்த சில நாட்களாக வலைத்தளத்தில் பல்வேறு பூக்கள் பாலியல் பற்றிய இதழ்களை விரித்திருந்தன! கை காட்டுதலும், அடுத்தவரைக் குறை சொல்லலாமோ என்ற எண்ணங்களும் அதில் மணம் வீசுவதைக் கண்டேன். நண்பர் கோவி. கண்ணனிடம் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு சில இதுபற்றிய என் எண்ணங்களைப் பகிர்ந்து இது குறித்து எழுதலாமோ என்றிருக்கிறேன் எனச் சொல்லியிருந்தேன். ஆர்வ மிகுதியாலும், என் மேலுள்ள அன்பின் காரணத்தாலும் அவர் தன் பதிவில் இது பற்றிய அறிவிப்பை உடனே வெளியிட்டு விட்டார்! இப்போது உங்களுக்கு தப்பிக்க வேறு வழி இல்லை!

"பாலியல்" [Sexology] பற்றி அனைவரும் அறிந்திருந்தாலும், 'பூனைக்கு யார் மணி கட்டுவது?' என்னும் மனப்பான்மையே நம்மில் அதிகம் நிலவுகிறது என்ற உண்மையினை நாம் இங்கு ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இது பற்றிப் பேச, கேட்க, பகிர்ந்து கொள்ள வெட்கமோ, அச்சமோ, அல்லது 'நம்மைத் தவறாக எண்ணி விடுவார்களோ?' என்னும் குற்ற உணர்வோ நம்மில் பலருக்கு ஏற்படுகிறது! அதனால், 'முயற்சித்துத் தவறுதல்' [Trial&Error], அல்லது 'தவறான இடத்தில் அறிவுரை கேட்டல்' [Seeking wrong advice] போன்ற வழிமுறைகளை நாடுகின்ற சோகம் நிகழ்வதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இதைத் தவிர்ப்பதில் பெரும் பங்கு, பெற்றோர், ஆசிரியர், குடும்ப மருத்துவர், நண்பர்களுக்கு உண்டு. ஆனால், இந்த வரிசையில் அது நிகழ்வதில்லை! தலைகீழாகத்தான் நடக்கிறது! விளைவுகளும் தலைகீழாகத்தான் போகிறது!

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில், ஒருமுறை என்னிடம் அவர்கள் 14 வயதுப் பையனை அவசரமாகக் கூட்டி வந்தனர். பிறப்பு உறுப்பில் இருந்து ரத்தப் போக்கு ஏற்படுவதாகத் தெரிவித்தனர். சிகிச்சை அளிக்கும் போது, முன் தோலின் அடிப்பாகம் [Frenum] அறுந்து ரத்தம் வருவதை உணர்ந்து சிகிச்சை அளித்தபின், என்னவென்று அந்தப் பையனிடம் கேட்டேன். தயங்கித் தயங்கி சொன்னான், 'இல்லை டாக்டர்! முன் தோல் [Foreskin] இருந்தால் கல்யாணம் ஆனபின் இன்பம் அனுபவிக்கக் கஷ்டமாயிருக்கும்' என என் நண்பன் ஒருவன் சொன்னான்; அதான்...கொஞ்சம் வேகமா ஆட்டிப் பாத்தேன்!' என்றான். இதை சொல்வதற்குள் அவனை வெட்கமும், அவமானமும் பிடுங்கித் தின்றது!

இதில் கவனிக்க வேண்டிய நிகழ்வு என்னவென்றால், தவறான ஆலோசனை வழங்கப் பட்டிருக்கிறது என்பது மட்டுமல்ல! காதல், கல்யாணம் போன்ற நிகழ்வுகளை அவன் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டிருக்கிறான், அதைப் பற்றி வீட்டிற்கு வெளியே பகிர்ந்து கொண்டிருக்கிறான் என்பதும் கூட!

இந்த எண்ணம் தவறா, சரியா என்பதற்கு பின்னர் வருவோம். அதற்கு முன், பாலியல் கல்வி [Sex Education] பற்றிய தேவையான அறிவு, புரிதல், நமக்கு இன்னும் வரவில்லை என்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

நான் எழுத எண்ணியிருக்கும் இந்தத் தொடர், முக்கியமாகப் பெற்றோர்களைக் குறித்தே! அவர்கள் பங்கே இதில் பெரும்பான்மையானது! இது சிலருக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடும்! 'அது எப்படீங்க? நான் போய் என் மகன்கிட்ட , மகள்கிட்ட இதையெல்லாம் பற்றிப் பேச முடியும்? வாத்தியார் ஸ்கூல்ல சொல்லிக் கொடுக்கணும் இதையெல்லாம்! இல்லைன்னா, அரசப்பொரசலா தெரிஞ்சுக்க வேண்டியது தான்! நாங்கள்லாம் என்ன சொல்லிக்குடுத்தா வளந்தோம்? வந்துட்டாரு என்னமோ பெருசா! எதுக்கும் ஒரு முறை வேண்டாம்?' என்று பலர் சொல்லுவதை நான் கேட்டிருக்கிறேன்.

'இணைய வசதிகளும், தேடல்களும் நிறைந்திருக்கும் இந்நாட்களில், இதற்கென்ன அவசியம்? வேணுமின்னா அங்கன போயித் தேடிக்கலாமே!' என்றும் சிலர் சொல்லக்கூடும்! ஒப்புக்கொள்கிறேன்! ஆனால், இணையத்தைப் போன்ற நண்பனும் இல்லை; அதைப் போன்ற விரோதியும் இல்லை என்பதே என் கருத்து! வளர்கின்ற பருவத்தில், எதைக் கொள்வது? எதனை விடுவது? எனத் தெரியாத மனநிலையில், அதில் நல்ல தகவல்களையும், கெட்ட தகவல்களையும், ஒரு சேரப் பெற்று குழம்பும் சிலருக்காகவே இத்தொடர்!

ஒரு குழந்தை பிறந்தவுடனேயே, பெரும் பொறுப்பு வந்து விடுகிறது! எங்க அப்பா சொல்லுவார், 'மரம் வெச்சவன் தண்ணி வுடுவாண்டா' என்று. முதலில் சரி, சரி என்று கேட்டுவிட்டு, சற்று வளர்ந்த பின், கல்லூரி அப்ளிகேஷன் போடுவது தொடர்பாக பேசிக் கொண்டிருந்த போது, அவர் இதைச் சொன்ன போது கேட்டேன், 'உங்களை சொல்றீங்களாப்பா?' என்று. என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார், 'இப்பவாவது புரிந்து கொண்டாயே' என்பது போல! நான் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு அது! அது போல, குழந்தைகள் வளரும் போது, அவர்கள் கேட்கும் கேள்விகள் ஆயிரமாயிரம்! எந்த வயதில் எதைச் சொல்லலாம், எப்படிச் சொல்லலாம் என்பது பற்றியே இத்தொடர் அமையும். பெற்றவர்கள்தான் பாலியல் பற்றிய முறையான புரிதலைத் தர முடியும், வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்.

இதனைப் படிக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்!

தயவு செய்து உங்கள் கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்ளவும்.... ஆரோக்கியமான முறையில். இதில் சில சமயம் வெளிப்படையான சில உண்மை நிகழ்ச்சிகளையும், கருத்துகளையும் சொல்ல வேண்டி வரும். அதன் நோக்கம் யாரையும் புண்படுத்துவதோ, அல்லது குற்றம் சாட்டுவதோ இல்லை என்னும் டிஸ்கியை இப்பவே போட்டுடறேன்! தொடரின் நோக்கம் திசை திரும்பினாலோ, திருப்பப்பட்டாலோ, உடனே நிறுத்தப்படும்! வாரம் இரு பதிவுகள் வரும்... வரணும்! பார்க்கலாம்... எப்படிப் போகுதுன்னு!

முருகனருள் முன்னிற்கும்!

இன்னிக்கு வெறும் முன்னுரை மட்டும்தான்! அடுத்ததாக.....

"நான் எங்கேருந்தும்மா வந்தேன்?" -- 3 வயதுக் குழந்தையின் கேள்வி!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP