Saturday, October 20, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 21

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 21

முந்தைய பதிவு இங்கே!




19.

"சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

உட்கோட்டம் இன்மை பெறின். "[119]


புதியதொரு உலகத்தில் பிரவேசித்தது போலத் தோன்றியது கந்தனுக்கு.

அவனது கிராமத்தில் கூட இப்படி அவன் உணர்ந்ததில்லை.

பச்சைப்பசேல் என்ற மரங்களும், அடர்ந்த காடும் அவனுக்கு மனதில் சந்தோஷத்தையும், கூடவே ஒரு பயத்தையும் உண்டுபண்ணியது.

கண்ணில் பட்ட வழிப்பாதையைப் பிடித்துக் கொண்டு விறுவிறுவென ராபர்ட் முன்னே நடக்க, பின்னாலே, கந்தன் அவனைப் பின் தொடர்ந்தான்.

அடர்ந்த காட்டுக்குள் இப்போது அவர்கள் இருவர் மட்டுமே!

அப்படித்தான் பட்டது அவர்கள் இருவருக்கும்.

ஆனால், சுற்றிலும் பல கண்கள் கவனிப்பதை அவர்கள் உணரவில்லை.

இருட்ட ஆரம்பித்தது.

பாதுகாப்பான ஒரு இடமாகப் பார்த்து, பையில் இருந்த போர்வையை எடுத்து விரித்து, இருவரும் படுத்தார்கள்.

மேலே ஆகாயத்தில் நட்சத்திரங்கள் மின்னத் தொடங்கின.

'என்ன, பயமா இருக்கா?' என ராபர்ட் கேட்டான்.

கந்தன் ஒன்றும் பேசவில்லை.

காட்டின் அமைதி அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

கண்ணுக்குத் தெரியாத மரங்கள் ஆடுவதை அவனால் உணர முடிந்தது.

எங்கோ பிறந்து, எனக்குத் தெரிந்த ஆடுகளை ,மேய்த்துக் கொண்டு, தானுண்டு, தன் வேலயுண்டு என இருந்தவனை, இப்போது இந்த
காட்டில், என்ன நோக்கம் எனப் பிடிபடாமல், ஊர் பேர் தெரியாத எவனுடனோ, அவன் தேடிக்கொண்டிருக்கும் தங்கத்தின் மேல் தானும் ஆசைப்பட்டு, இங்கே இந்த இரவில் அவனோடு ஒரு மரத்தடியில் படுத்துக் கொண்டிருப்பதை நினைத்தால், ஒரு பக்கம் சிரிப்பாகவும்,ஒரு பக்கம் அவமானமாகவும் இருந்தது.

இந்நேரம், இட்லிக் கடை முடிஞ்சு, சாப்பாட்டு நேரம் ஆரம்பிச்சிருக்கும் ஓட்டல்ல.

அண்ணாச்சி என்ன செய்து கொண்டிருப்பார் என ஒரு கணம் நினைத்தான்.

அடுத்த கணமே, அந்த நினைப்பைத் துடைத்தெறிந்தான்.

'இதெல்லாம் போதும்; இனிமே வேணாம்னுதானே கிளம்பிட்டோம். இப்ப அந்த நினைப்பு எதுக்கு?' எனத் தன்னைக் கடிந்து கொண்டான்.

பஸ் டிரைவர் சொன்னதை மீண்டும் எண்ணிப் பார்த்தான்.

'இதோ இந்தக் கணம்தான் நிஜம்.இங்கே நான் இருக்கறதுதான் எனக்கு நடந்துகிட்டு இருக்கற உண்மை. இதை நான் சந்தோஷமா அனுபவிக்கணும்.
நேத்து நடந்ததோ, நாளைக்கு நடக்கப் போறதோ எதைப்பத்தியும் கவலைப் படக் கூடாது.இந்த நிமிஷம், இப்ப, காத்து சுகமா வீசுது. குளிரலை.
பசிக்கு எதையோ சாப்பிட்டாச்சு. நாளையப் பத்தி நாளைக்குப் பார்த்துக்கலாம்'
என எண்ணிக் கொண்டிருந்தவன்.....

அப்படியே உறங்கிப் போனான்.
*******************

"எத்தனை பேரு இந்தப் பக்கமா வந்து போறாங்க!

எல்லோருக்கும் ஒரு ஆசை.


அதை வெச்சுகிட்டுத்தான் இங்க வராங்க.
யார் வந்தாலும், போனாலும் இந்தக் காடு மட்டும் இன்னமும் அப்படியேதான் இருக்கு.


ஆனா, இன்னிக்கு வர்றவங்கள்ல ஒருத்தனுக்கு என் வித்தையை நான் சொல்லிக் கொடுக்கணும்னு உத்தரவாயிருக்கு.

ஆளு யாருன்னு தெரியாது.

ஆனா கண்டு பிடிச்சிருவேன்.

இதையெல்லாம் வாய் மொழியாத்தான் சொல்லிக் கொடுக்கணும். புஸ்தகத்தை வெச்சோ, படம் போட்டுக் காட்டியோ இதைச் சொல்லித் தர முடியாது.

கூடாது!

அது அப்படித்தான்.

இந்த உலகம் எவ்வளவு புனிதமா படைக்கப்பட்டதோ, அதே மாதிரித்தான் இந்த வித்தையும்.

இதை எழுத்தாலேயோ, படத்தாலேயோ சொல்லிப் புரிய வைக்க முடியாது.

படத்தையும், எழுத்தையும் பார்க்கிற மனுஷன், இந்தப் பிரபஞ்சம் என்ன சொல்லுதுன்னு கவனிக்க மறந்து கோட்டை விட்டுடறான்.

அவனை அதை அனுபவிக்க வைச்சுத்தான் சொல்லித் தரணும்!"
மலை உச்சியில், ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்த, அந்தச் சித்தர் வாய் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார். நிமிர்ந்து பார்த்தார்......

நிலவு பாலாய்ப் பொழிந்து கொண்டிருந்தது.
*******************************


பொழுது விடிந்தது.

சூரியன் வந்தது தெரியவில்லை, காட்டின் அடர்த்தியில்.

ஆனால், வனம் வெளுப்பாக இருந்தது. [எ.பி. இல்லை!:)]

காலைக் கடன்களை முடித்துவிட்டு, இருவரும் பயணத்தைத் தொடர்ந்தனர்.

மலையில் ஏறத் துவங்கினர்.

தூரத்தில் இருந்து பார்க்கையில், பசுமையாகத் தெரிந்த மலை, கிட்டச் சென்றதும் கரடு முரடாய் இருந்தது.

அடிவாரத்தில் முட்புதர்களும், பெரிய பாறாங்கற்களும் கிடந்து, சரியான வழி இல்லாமல் மறைத்தது.

ரொம்பப் பழக்கமானவன் போல ராபர்ட் அவற்றுக்கிடையே புகுந்து புறப்பட்டுச் செல்வதைப் பார்த்த கந்தன், தானும் அவனுக்குச் சளைத்தவன் இல்லை என்பது போல லாவகமாகக் கூடவே சென்றான்.

'வெயில் ஏற்றதுக்குள்ள உச்சிக்குப் போயிறணும். வா. சீக்கிரமா' எனப் பேசிக்கொண்டே, வழியில் இருந்த சுனையில் நீர் குடித்துவிட்டு,
சொன்னபடியே மலையுச்சியை அடைந்தார்கள்.

வழியில் ஒரு ஆள் நடமாட்டமும் இல்லை.

'உச்சியிலிருந்து மறுபடியும் அந்தப்பக்கமாய் கீழே இறங்கணுமோ' என நினைத்தவர்க்குப் பெருத்த ஆச்சரியம்.

அடர்ந்த, பரந்த பச்சைச் சமவெளியாய் ஒரு இடம்.

ஆங்காங்கே சில குடிசைகள்.

'நல்லவேளை; சாப்பாடு கிடைக்கும்னு தோணுது' எனச் சொல்லியபடியே கண்ணில் பட்ட முதல் குடிசையை அடைந்தார்கள்.



[தொடரும்]
*************************************

அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 20

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 20

முந்தைய பதிவு இங்கே!

18.

'எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. '[355]



ராபர்ட் தொடர்ந்தான்.

'இவ்வளவு நேரம் நான் சொன்னது எதையும் நீ சரியாக் கவனிக்கலைன்னு புரியுது. நாம கண்டுபிடிக்க மாட்டோம். நம்மளால முடியாது.
அவரா வருவாரு. ஆனா, ஒரு சில அடையாளம் இருக்குதாம். நான் முன்னே சொன்னேனே, அந்த திரவப் பொருள், திடப்பொருள்னு ரெண்டு.
அது இவங்க கிட்ட இருக்குமாம். அந்தக் கஷாயம் மாரி இருக்கறதை குடிச்சுத்தான் இவங்க எப்பவுமே இளமையா இருக்காங்களாம். பல நோய்களுக்கெல்லாம் கூட அது மருந்தாகுமாம்.


அந்தக் கல்லைத்தான் சித்தர் கல்லுன்னு சொல்றதாம். எல்லார்கிட்டயும் அதைப் பாக்க முடியாது. பெரிய பெரிய சித்தருங்க கிட்டத்தான்
இருக்குமாம். அந்தக் கல்லை வெச்சுத் தேய்ச்சா போதுமாம், செம்புல்லாம் கூட தங்கமாயிடும்.' இதெல்லாம் அந்தப்புஸ்தகத்துல போட்டிருக்கு."



'ஆ' வென்று வாயைப் பிளந்து அவன் சொன்னதை அதிசயத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான் கந்தன்.

'நமக்கும் கூட இது கிடைச்சதுன்னா நல்லாயிருக்குமே' என ஒரு சிந்தனை ஓடிற்று.

'அந்தக் கல்லை எப்படி நாம அடையறது?' என்றான்.

'அது தெரிஞ்சா நான் ஏன் இங்கே இருக்கேன். இந்நேரம் என் ஊருக்குப் பறந்திருப்பேனே!' எனச் சொல்லிச் சிரித்தான் ராபர்ட்.

'எல்லாத்தையும் இந்தப் புஸ்தகங்கள்ல சொல்லியிருக்காங்க. ஆனா, ஒண்ணும் புரியலை. சுலபமா சொல்லியிருந்தா, இத்தனை பாடு
படவேண்டாம்ல'

'இதெல்லாம் எழுதி எத்தனை வருஷம் இருக்கும்? கந்தன்.

'இப்பத்தான் இதெல்லாம் ஒரு புஸ்தகமாவாச்சும் நமக்குக் கிடைக்குது. இதெல்லாம் வாய் வழியா வந்ததாம். எழுதி ரொம்பக் காலம் ஆயிருச்சு'

பேச்சை நிறுத்திவிட்டு, புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினான் கந்தன்.

ராபர்ட் சுற்றிலும் பார்வையை விட்டான்.

ஆங்காங்கே சிறு சிறு கூட்டமாய் பஸ் பயணிகள் பிரிந்து மர நிழல்களில் உட்கார்ந்திருந்தார்கள்.

உதவி வருவதற்கான எந்தவொரு தடயமும் இல்லை.


காவல்துறை வண்டியும் அப்போதே சென்றுவிட்டது!

'இது எந்த இடமுங்க?' பக்கத்தில் இருந்த ஒரு தாடிக்காரரிடம் கேட்டான்.

கையிலிருந்த பீடியைப் புகைத்தபடியே இவனைத் திரும்பிப் பார்த்தார் அவர்.

ஒரு வெள்ளைக்காரன் வந்து தமிழில் பேசுவதைக் கண்டு ஆச்சரியப் பட்டாற்போல் தோன்றவில்லை அவருக்கு.

'வாங்க தம்பி! சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கீங்க! நீங்க இருக்கற தோரணையைப் பார்த்தா, சாமியாருங்க, சித்தருங்களைத் தேடிகிட்டு வந்த மாரி
இருக்கு. அப்பிடிப் பாத்தா, இது ஒரு காட்டுப் பிரதேசம். நாமக்கல் தாண்டி வந்திருக்கீங்க. தோ, அந்த மலைக்கு அந்தப் பக்கம்லாம் ஒரே காடுதான். கொல்லிமலைன்னு ரொம்பப் பிரபலமான இடம் அங்கே... அந்த மலைக்கு அப்பால இருக்குதாம். ஆரும் ஜாஸ்தி அங்கேல்லாம் போறதில்ல. மலைஜாதி ஆளுங்கதான் அங்கேல்லாம். நெறைய சித்தருங்க இருக்கறதா பேசிக்கறாங்க!'

ராபர்ட் பரவசமானான்.

தாடிக்காரரின் கையைப் பிடித்துக் குலுக்கினான்.

'ரொம்ப தேங்ஸுங்க. நல்ல தகவல் சொன்னீங்க! நீங்க அவங்களைப் பார்த்திருக்கீங்களா? என ஆவலுடன் கேட்டான்.'

தாடிக்காரர் உதட்டைப் பிதுக்கினார்.

'அதெல்லாம் ஆரு பாத்தா? எல்லாம் சொல்லக் கேள்விதான். அங்கே இருக்கற மலைஜாதி ஆளுங்களைக் கேட்டா எதுனாச்சும் தகவல் தெரியலாம்'
என்றவருக்கு நன்றி சொல்லிவிட்டு, கந்தனிடம் போனான்.

'நீ சொன்னதும் சரிதான். மனுஷங்களையும், சகுனத்தையும் பார்த்தாக் கூட பாதி விஷயம் தெரிஞ்சிரும் போல~!' என்றபடி
கந்தன் கையிலிருந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டே,

இந்தப் பக்கமாப் போனா, சித்தருங்களைப் பார்க்கலாமாம். அதோ, அந்தத்
தாடிக்காரர் சொன்னாரு. எனக்கு சேலத்துல ஒண்ணும் வேலை இல்லை. அங்க போனா, இதைப் பத்தி தகவல் கிடைக்கும்னு யாரோ
சொன்னாங்கன்னு வந்தேன். இப்ப, அது கிடைச்சாச்சு. இதுவும் ஒரு சகுனந்தான்! நான் கிளம்பறேன்' என ஆயத்தமானான்.

கந்தன் யோசித்தான்.

புதையலைப் பாக்கப் போகணும்தான். ஆனா, இவன் சொல்ற விஷயமும் நல்லாத்தான் இருக்கு. எல்லா ஊரையும் சுத்திப்பாருன்னு வாத்தியார்
வேற சொல்லியிருக்காரு.

'உன் மனசு என்ன சொல்லுதோ, அதன்படி நட'ன்னு அந்த ராசாவும் சொன்னாரு. இப்ப இவன் மட்டும் தனியாத்தான்
போறான். பஸ்ஸு எப்போ கிளம்பும்னு யாருக்கும் தெரியலை. இங்கேயே எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பது? கலவரம்வேற ஜாஸ்தியாவுதுன்னு
இன்ஸ்பெக்டர் சொல்லிட்டுப் போயிட்டாரு. இங்கேயே இருந்து என்ன நடக்குமோன்னு தெரியாம இருக்கறதைவிட, காட்டுக்குள்ள போனா
நம்க்கும் ஒரு பாதுகாப்பா இருக்கும். அதிர்ஷ்டம் இருந்திச்சின்னா, யாராவது சித்தர் பார்வைல கூட மாட்டினாலும் மாட்டலாம்' என்ற
நினைப்புடன்,

'நானும் உன்கூட வரலாமா?'ன்னு கேட்டான்.

ராபர்ட் அவனை வியப்புடன் பார்த்தான்.

'ஒருத்தொருத்தனுக்கும் ஒரு வழி இருக்கு...... அவனவன் விதியைக் கண்டறியன்னு ஒரு பெரியவர் சொன்னாரு என்கிட்ட. உன் வழி வேற;
என் வழி வேறதான். ஆனாக்க, நாம ரெண்டு பேருமே ஒருவிதத்துல, அவங்கவங்க விதியைத் தேடிகிட்டுத்தான் போறோம். இங்க இருக்கற மத்தவங்கள்லாம் அப்படித்தான். ஆளாளுக்கு ஒரு கவலை இருக்கு. இவங்களோட நான் ஒட்ட மாட்டேன். எனக்கு என்னமோ உன்கூட வர்றது நல்லதுன்னு படுது.'

கந்தன் மேலும் பேசவே, மறுப்பேதும் சொல்லாமல்,
'சரி! கிளம்பு!' என்றான் ராபர்ட்.

கண்டக்டரிடம் போய்,' இப்படியே போனா, கொல்லிமலைக்குப் போயிறலாம்னு அந்தத் தாடிக்காரர் சொன்னாரு. எங்க ரெண்டு பேருக்கும் போக வேண்டிய இடமும் அதான். அதனால, நாங்க இப்படியே போயிக்கறோம்' என்றான்.

'கலவரம் அது இதுன்னு பயந்து, இப்படியே கிளம்பறீங்களாக்கும். இதோ இந்த நிமிஷம், நாங்கள்லாம் உசிரோடத்தான் இருக்கோம்.'
என்றபடியே ஒரு ஆப்பிளைக் கடித்தபடி பக்கத்தில் உட்கார்ந்திருந்த டிரைவர் சிரித்தார்.

'இதோ, இந்த ஆப்பிளைக் கடிக்கறப்போ, அதை மட்டும்தான் நான் நினைக்கறேன். பஸ்ஸை ஓட்டறப்ப அது மட்டும்தான் கவனம் இருக்கும்.
ஏன்னா, நான் எப்பவும் நேத்தியை நினைச்சோ, இல்லை நாளைக்கின்னோ வாழறதில்ல. இதோ, இந்த நிமிஷம்தான் நிச்சயம். இந்த நொடியில வாழறப்போ, நீதான் ராஜா! உலகமே உனக்கு சொர்க்கமா இருக்கணும்னா,.... நீ எப்பவும் இதான்,..... இந்த நிமிஷம்தான் சாசுவதம்னு இருக்கணும்.
அதையே நினைச்சுகிட்டு, எங்க போனாலும் நல்லா இருங்கப்பா'
என விடை கொடுத்தார்.

தாடிக்காரரைப் பார்த்து, மீண்டும் ஒருமுறை வழியைச் சரியாகக் கேட்டுக் கொண்டு, அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு,
இருவரும் எதிரே தெரிந்த ஒற்றையடிப் பாதை வழியே நடக்கலானார்கள்.

தாடிக்காரர் இவர்கள் போவதைப் பார்த்தபடியே சிரித்தார்.

தன் மேல் துண்டை ஒரு முறை உதறிப் போர்த்தினார்.

உள்ளிருந்த தங்க வில்வமாலை ஒரு கணம் மின்னியது !!!


[தொடரும்]
*************************************


அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 19

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 19

முந்தைய பதிவு இங்கே!

17.
"உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்." [540]

முன்னே ஒரு போலீஸ் ஜீப்! கைகளை ஆட்டியபடியே பஸ்ஸை நிறுத்த சைகை செய்தார்!

'இதுக்கு மேல போகமுடியாது. யாரோ சில ஆளுங்க ஒரு பஸ்ஸை எரிச்சுட்டாங்க! மூணு பொண்ணுங்க அதுல எரிஞ்சு செத்துட்டாங்க!
பெரிய கலவரமா இருக்கு. போற வர்ற பஸ் மேலயெல்லாம் கல்லெறியுறாங்க. ஏற்கெனவே 10-15 பஸ்ஸுங்களைத் தாக்கிட்டாங்க. எங்க பாத்தாலும் தீ வைச்சுக் கொளுத்தறாங்க. அது வேற பெரிய மதக் கலவரமா மாறிக்கிட்டு இருக்கு. திரும்பியும் போக முடியாது. எல்லா ஊருக்கும் பரவுது இந்தக் கலவரம்.
நல்ல வேளையா நீங்க இந்தக் காட்டுப் பக்கமா இருக்கீங்க. பஸ்ஸை இப்படியே ஓரம் கட்டி, மறைவா நிறுத்துங்க. கொஞ்ச நேரத்துல
எதுனாச்சும் ஏற்பாடு பண்ணி உங்களையெல்லாம் பத்திரமா அனுப்பி வைக்கிறோம்.' என்றார் காவல் அதிகாரி.

பஸ் ஒரு பள்ளத்தில் இறங்கி ஒரு மரத்துக்குப் பின்னால் நிறுத்தப் பட்டது.

கந்தனும், ராபர்ட்டும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தனர்.

'உனக்கு பயமாயிருக்கா?' கந்தன் கேட்டான்.

ராபர்ட் சிரித்தான்.

'பயமிருந்தா இவ்ளோ தூரம் வந்திருப்பேனா? எல்லாத்தையும் ஒரு விதி தீர்மானம் பண்ணுது. என்னுதை என்னன்னு முடிவு பண்ணும் போதே,
அது எங்கே எப்படி நடக்கணும்னும் அது தீர்மானம் பண்ணிடுது. நான் முன்னமேயே சொன்னது மாரி, என் தலையெழுத்தை எழுதினவன் தான்
இந்த உலகத்தோட தலைவிதியையும் எழுதியிருக்கான். அதை நான் நம்பறேன்னா, நான் இங்கே இருக்கறதும் அவன் எழுதினதுதான்.
இதுலேர்ந்து என்ன நடக்கணும்னும் அவன் முடிவு பண்ணிட்டான். இதான் சிததர் சொல்றதும். உலகத்துக்கும் ஒரு ஆத்மா இருக்கு. நீ என்ன
விரும்பறியோ, அதையே அதுவும் நடத்தித் தரும்.... நீ தீர்மானமா அதுல நம்பிக்கை வெச்சியேன்னா!


அதோ பாரு, அந்த ஆளு... நீலசட்டை போட்டிருக்கானே, அவந்தான்... செல்ஃபோனை எடுத்து ஆருக்கோ தகவல் அனுப்பறான்.
இந்த அம்மா தன் புள்ளைங்களை பக்கத்துல வெச்சுகிட்டு, அளுவுது. இப்படியே, இங்க இருக்கற ஒவ்வொருத்தரும், ஒவ்வொரு மனநிலைல
இருக்காங்க. அவங்க அவங்க நினைப்பு போலத்தான், அவங்க விதி நடக்கும்.'

'என்ன சொல்ற நீ? அப்படீன்னா, இங்க இருக்கற எல்லாருக்கும் ஒரே மாதிரி நடக்காதா?'கந்தன் அவன் பேசுவதை மேலும் கேட்கும் ஆவலுடன்,
அவனைத் தூண்டி விடுகிறாற்போல் கேட்டான்.

'கொஞ்ச வருஷத்துக்கு முன்னால, ஒரு சுனாமி வந்துது. ரொம்பப் பேரு செத்துப் போனாங்க. சில பேரு பொளைச்சாங்க. சில பேரு
எங்கியோ போயி அம்மா அப்பாவை இன்னமும் பாக்காம இருக்காங்க. அல்லாருமே சாவக்கூடாதுன்னுதான் நினைச்சிருப்பாங்க. ஆனாக்க,
அவங்க மனசுல அதையும் தாண்டி, அந்த நேரத்துல ஒரு எண்ணம் ஓடியிருக்கும். நாம செத்துருவோம், நம்ம அம்மா அப்பாவைப்
பாக்க மாட்டோமின்னு. அது ஒனக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது. ஆனா, இந்த அடிப்படையில நினைச்சுப் பார்த்தியானா, ஒனக்கு
விளங்கும்.

இப்போ உன் கதையையே எடுத்துக்க. அதான் பஸ்ஸுல சொன்னியே அந்தக் கதைதான்! யாரோ சொன்னாங்கன்னு, இருக்கற ஆடுங்களை
வித்திட்டு, கிளம்பினே! ஆனா, நடுவுல, உன்னை நம்பாம, உன் லட்சியத்துமேல நம்பிக்கை இல்லாம, எவனோ சொன்னதை நம்பி
அவன் பின்னால போயி, பணத்தைப் பறி கொடுத்தே! அப்பால, உன்னைப் பாத்துப் பரிதாபப்பட்ட ஒருத்தருக்காக இன்னென்னவோ செஞ்சே!
முழு மனசோட! அது பலன் கொடுத்துது.
இப்பக்கூட எடுத்துக்கோ! பணத்தை எடுத்துகிட்டு நீ என்ன பண்ணியிருக்கணும்? நேரா மஹாபலிபுரம் போயிருக்கனும்...
ரயில் புடிச்சு. நடுவுல ஒரு ஆசை. இன்னும் கொஞ்சம் ஊரைப் பார்க்கணும்னு! அதைத்தான் நான் சொன்ன அந்த உலக ஆத்மாவும் செய்யுது இப்ப!
இப்ப நீ இந்த நடுக்காட்டுல! பாக்கலாம் என்ன நடக்குதுன்னு!'

'இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?' என்றான் கந்தன்.

'சித்தருங்க எழுதின புக்கெல்லாம் படிச்சுத்தான். அதுல என்னன்னமோ பெரிய விஷயமெல்லாம் சூட்சுமமா சொல்லியிருக்காங்க. ஆன்மீக
விஷயத்தோட கூட அபூர்வமான மூலிகைங்க, இன்னும் சில உலோகங்களைப் பத்தியெல்லாம் கூட சொல்லியிருக்காங்க.
செம்பைத் தங்கமாக்கறது எப்படின்னு ஒரு புக்குல வருது. ஒண்ணுமே புரியலை எனக்கு. அதான் யாராச்சும் சித்தரோட பார்வை என் மேல
விழாதா; அவரோட அருளால இதைக் கத்துக்க மாட்டோமான்னு ஒரு ஆசை. அதான் அலையறேன்.... ஊர் ஊரா! இதோ இதெல்லாம் அது
சம்பந்தமான புஸ்தகங்கதான்' என்றவாறு தன் பையைத் திறந்தான்.

பாதி புரியாமலும், பாதி விருப்பமில்லாமலும், கைக்கு வந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டினான். ஒன்றும் புரியவில்லை!
போகர், இலுப்பைக்குடி ஸ்வர்ணாகர்ஷண வைரவர், எனப் பல பெயர்கள் இருந்தன. ஒரு பக்கத்தில் எழுதப்பட்டிருந்தது அவன் கவனத்தை ஈர்த்தது.

"எந்தவொரு உலோகத்தையும் ஒரு குறிப்பிட்ட அளவில் சூடுபடுத்தினால், சில பச்சிலைகளோடு சேர்த்து பதப்படுத்தினால், தன்னிடமுள்ள
தனிப்பட்ட குணங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, ஒரு இறுதி நிலையை அடைகிறது, இரு பகுதிகளாக. ஒன்று திரவமாகவும்,
மற்றொன்று திடப்பொருளாகவும்!
அப்போது அது இந்த உலக ஆத்மாவுடன் ஒன்றுகிறது.
அதைக் கையில் வைத்திருந்தால், இவ்வுலகில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும்,நடந்தது, நடப்பது, நடக்கப்போவது இவையனைத்தையுமே
அறிந்து கொள்ளமுடியும்."


'இதற்கு இவ்வளவு கஷ்டப்படணுமா? எனக்கு ஒரு பெரியவர் சொன்னமாதிரி, சுத்தி இருக்கறவங்களையும், ஒரு சில சகுனங்களையும் மட்டுமே
பார்த்தா போறாதா?' தனக்குத் தெரிந்ததை வைத்து ராபர்ட்டிடம் பேச்சுக் கொடுத்தான்.

'எல்லாத்தையுமே ஈசியாக் கத்துக்கலாம்னு நினைக்கறே நீ! சித்துவேலைன்றது அவ்வளவு சுலபமில்லை. ரொம்ப கடினமானது.பல நிலைகளைத்
தாண்டிப் போகணும் அதுக்கு. கரணம் தப்பினா மரணம்ன்ற மாதிரி. ஒவ்வொரு படியிலியும் பல கட்டுப்பாடுகள் இருக்காம். கொஞ்சம் கவனப்பிசகா
இருந்தாக் கூட அவ்வளவுதான். சர்ருன்னு கீழே தள்ளி விட்டுருமாம். குரு என்ன சொல்றாரோ, அதை அப்படியே இம்மி பிசகாம ஃபால்லோ
பண்ணனுமாம்.'


'இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியுமின்னுதானே பாக்கறே! 12 வருஷமாச்சு நான் இங்க வந்து! யார் யார் பின்னாலியோ போயி, எங்கெங்கியோ
அடிபட்டு ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கேன். ஆனா, அதுனாலியும் ஒரு பிரயோஜனம் இருக்கு. அசல் யாரு, போலி யாருன்னு இப்ப டக்குன்னு
கண்டுப்பிடிச்சுருவேன்!'

'இப்பிடியே சுத்தினப்பத்தான் எனக்கு ஒண்ணு புரிஞ்சுது. எதுல உன் குறின்னு நீ முடிவு பண்ணலைன்னா, ஆளாளுக்கு அவனவன் வழியில
கூட்டிகிட்டு போவான் உன்னை. உனக்குப் புரிய வைக்கறதுக்கன்னு நினைச்சேன்னா, நீதான் முட்டாள். அவனவன் தன்னோட ஆதாயத்துக்குத்தான் அடுத்தவனை யூஸ் பண்ணிக்கறான்.
அப்போதான் முழிச்சுகிட்டேன். சரி, இதுவரைக்கும் நமக்குக் கிடைச்ச அறிவை வெச்சுகிட்டு, இனிமே நாமளே தனியாத் தேடணும். நம்ம நேரம் சரியா இருந்தா தானே குரு ஒருத்தர் வருவாரு. நமக்கு வழி காட்டுவாரு.' என்றான் ராபர்ட்.

'அவரை எப்படிக் கண்டுபிடிக்கறது?' அப்பாவியாய்க் கேட்ட கந்தனை சற்று இரக்கத்துடன் பார்த்தான் ராபர்ட்.

[தொடரும்]
******************************


அடுத்த அத்தியாயம்

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP