Sunday, February 24, 2008

"அ.அ. திருப்புகழ்" 25 -- செகமாயையுற்று"

"அ.அ. திருப்புகழ்" 25 -- "செகமாயையுற்று"



இந்த வாரம் சுவாமிமலைத் திருப்புகழில் இருந்து ஒரு பாடல் போடலாம் என் எண்ணி புரட்டினேன். இந்தப் பாடல் கண்ணில் பட்டது. இதன் பொருள் என்னை ஒரு தனிப்பட்ட முறையில் கவர்ந்தது. நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாத என் தோழி ஒருவருக்கு சென்ற ஆண்டு பாம்பன் சுவாமிகள் அருளிய "வேற்குழவி வேட்கை" எனும் பதிகத்தை தினந்தோறும் ஓதுமாறு ஆலோசனை சொல்லியிருந்தேன். இவர் ஒரு சில உடற்கோளாறுகளால் கருத்தரிக்க இயலாத நிலையில் இருந்தார். செயற்கை விந்துப் பரிமாற்றம் கூட இருமுறை பயனளிக்காமல் போயிற்று. நம்பிக்கையுடன் இதைப் படித்து வந்த இவர் இப்போது எட்டுமாத கர்ப்பிணி. அடுத்த மாதம் சீமந்தம். முருகப்பெருமானே தனக்குக் குழந்தையாக வர வேண்டும் என்ற பொருளில் அமைந்த இப்பாடலை என் தோழிக்குக் காணிக்கையாக்கி நல்ல முறையில் பிரசவம் நடந்தேற வேண்டி இங்கு அளிக்கிறேன். முருகனருள் முன்னிற்கும்!


********** பாடல் ***********

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்


தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி


மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி


மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா

முதுமா மறைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா


தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே


தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே!
************************************************************


********* பொருள் *********
[பின் பார்த்து முன்!!]

"முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா"
["முகமாயம் இட்ட குறமாதினுக்கு
முலைமேல் அணைக்க வருநீதா"]

அழகினுக்கு ஒரு முகமென்றால் அது
கிழவனுக்கும் பழிப்பு காட்டிய முகமொன்றே!
வேடனாய் வந்தவனைப் பார்த்து ஒதுக்கியவள்
விருத்தனாய் வந்தவன் ஆனையை அழைத்திடினும்
வேலனை மனத்தினின்று விடாது நின்றவள்
தினைப்புனத்தைக் காக்கையிலும் திறனாக நின்றவள்
முகவழகு விஞ்சிய வள்ளிக் குறமாதிவள்!
கொண்டவொரு தவத்தினை விடாது கொண்டவள்
வடிவழகில் மயங்கிய வேலனும் மனமகிழ்ந்தான்
குறமாதின் தனங்களிலே தஞ்சம் அடைந்தான்!
யானெனும் செருக்கு அற்ற அடியவர்க்கு
அருளென்னும் நீதி வழங்கு நீதிபதியே!

"முதுமா மறைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா"
[முதுமா மறைக்குள் ஒரு மாபொருட்கு
உள்மொழியே உரைத்த குருநாதா]


முன்னைப் பழைமக்கும் பழைமையான
எல்லாச் சிறப்பும் பொருந்தியதான
வேதமுரைக்கும் பல்வேறு பொருட்களுக்கும்
முந்தையப் பொருளான பிரணவத்தின்
உட்பொருளைத் தந்தைக்கே குருவாகி
எம்பிரான் வாய்புதைத்து கைகட்டி நிற்க
அரும்பொருள் அருளிய குருநாதா!


"தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே"
[தகையாது எனக்கு உன் அடி காண வைத்த
தனி ஏரகத்தின் முருகோனே]


கோபுரத்தின் மீதிருந்து குதித்திட்ட அருணையாரை
தன்கைமீது தாங்கிவந்து உயிர்காத்து அருள்செய்து
'சொல்லற சும்மாயிரு'என உபதேசம் செய்தது அருணையிலே!
அருட்காட்சி தந்ததுவோ மயிலாடும் விராலிமலையில்!
தடையேதுமில்லாமல் நினது அருட்பாதம் தந்து
அன்புடனே உய்வித்ததுவோ ஏரகத்தில்!
தந்தைக்கு உபதேசித்த திருத்தலமாம் சுவாமிமலையில்
தனியாக அமர்ந்திருந்து அருள்சுரக்கும் முருகோனே!

"தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே"
[தரு காவிரிக்கு வடபாரிசத்தில்
சமர் வேல் எடுத்த பெருமாளே]

என்றும் வற்றாது நீர் வழங்கும்
செல்லுமிடமெல்லாம் மரங்களை வளர்த்துவரும்
விரிவான கரையெடுத்து விரைவாக வருவதினால்
கா விரி 'காவிரி' எனும் தனித்தமிழ் பெயர்பெற்ற
ஆற்றின் வடகரையில் விளங்கியிருக்கும்
சுவாமிமலை எனும் திருத்தலத்தில் இருந்து
சூரனுடன் போர் முடிக்க திருவுளம் கொண்டு
சக்திவேல் ஆயுதம் எடுத்த பெருமைக்குரியவனே!


"செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்"
[செகமாயை உற்று என் அகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்பம் உடலூறி]


உலகமாயையெனும் ஆளுகையில் அகப்பட்டு
காமவசப்பட்டு என் இல்லற வாழ்வில்
ஆசை மனைவிக்கு நான் அளித்த
கர்ப்பத்தினால் கருவொன்று அவள் உடலில் நிலைத்து


"தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி"
[தெச மாதம் முற்றி வடிவாய் நிலத்தில்
திரமாய் அளித்த பொருளாகி]


பத்துத் திங்கள் முடியும் போது
முத்துப் பிள்ளையாய் அழகுடனே
நித்திலமாம் இப்பூவுலகில் நன்கு
ஒரு உருவாய் நீ வந்து
அழகுடன் நீ தோன்றி


"மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி"
[மக அவாவின் உச்சி விழி ஆநநத்தில்
மலைநேர் புயத்தில் உறவாடி]


என் மகவு என்கின்ற ஆவல்
என்னுள் உந்திவர ஆசையுடன்
உனை உச்சி மோந்து
அன்புடன் கண்களில் ஒற்றியும்
ஆசை மிகவேறி அப்படியே அள்ளிக்கொண்டு
முகத்தோடு முகம் சேர்த்து மகிழ்ந்தும்
என் திரண்ட புயங்களில் நீ உறவுகொண்டும்


"மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்"
[மடி மீது அடுத்து விளையாடி நித்தம்
மணிவாயின் முத்தி தரவேணும்]


என் மடி மேல் அமர்நது
என்னுடன் மிகவுமே விளையாடி
நாள்தோறும் நின்றன் மணிவாயினால்
எனக்கொரு முத்தம் கொடுத்து அருள்வாய் முருகா!
**************************************************


"சிவகுருவே! திருவேரகத் தேவே! நீ என் மகனாய் வந்து எனக்கொரு முத்தம் தர வேண்டும்!"
****************************************************************************************************

அருஞ்சொற்பொருள்::

தெச மாதம் = பத்து மாதம்
திரமாய் = திரம் ஆய் = நன்றாக
ஆநநம் = முகத்தோடு முகம்
முக மாயம் இட்ட = முக அழகு மிகவும் படைத்த
நீதா = நீதிபதி
முது மா மறை = பழைமையான வேதம்
ஒரு பொருட்கு உள் மொழி = எல்லாப் பொருட்களுக்கும் ஆதாரமான பிரணவம்
தகையாது = தடை எதுவும் இல்லாமல்
ஏரகம் = சுவாமிமலை
பாரிசம் = புறம், பக்கம்
சமர் = போர்
***************************

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
*****************************

Read more...

Tuesday, February 19, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்"-- 18 "அன்புடைமை"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்"-- 18 "அன்புடைமை"


புதன்கிழமை!

மாடவீதியில் நல்ல கூட்டம்!

'அடடா! இன்றைக்குப் போய் வந்தோமே! இன்னிக்கு பூம்பாவைத் திருநாளாச்சே! சாதாரண நாளுலியே மன்னாரைப் பார்க்க முடியாது! இன்னிக்கு நிச்சயமா முடியாது' என எண்ணியபடியே ஒரு ஆட்டோவைப் பிடிக்க விரைந்தேன்!

முதுகில் 'பளார்' என ஒரு அறை விழ, அதிர்ச்சியுடன் திரும்பினேன்!
'இம்மாந்தூரம் வந்திட்டு எங்களைப் பாக்காம போயிருவியோ?' என்றபடி சிரித்துக்கொண்டே மயிலை மன்னார்!

அடித்தது வலித்தாலும், அதற்குப் பின்னால் இருந்த அந்த அன்பை உணர்ந்த நான், 'உன்னைப் பார்க்காமல் போயிடுவேனாக்கும்! கூட்டமா இருக்கே! உன்னைப் பார்க்க முடியுமோன்னு நினைச்சேன்!' எனச் செல்லமாகக் கோபித்துக் கொண்டேன்~!

'அடிச்சது ரொம்ப வலிச்சிருச்சா? இன்னிக்கு திருநாளாச்சே! செத்த பொண்ணை சாம்பல்லேர்ந்து ஒருத்தரு... அவரு பேரு இன்னா... ஆங்... யாரோ சம்பந்தராம்.. அவரு பாட்டுப் பாடி உசிரைக் கொணாந்தாராம்! நீயே கட்டிக்கப்பான்னு அந்தப் பொண்ணோட அப்பா சொல்ல, இவரு, ரொம்ப சமார்த்தியமா, 'இந்தப் பொண்ணுக்கு உசிரு கொடுத்த நான் அவளுக்கு அப்பா மாரி! அதுனால, இவ என் பொண்ணுன்னு சொல்லி ஜகா வாங்கிட்டாராம்! படா கில்லாடிய்யா அந்த ஆளு! ஆனாலும் அவரோட அன்பு இருக்கே, அத்தப் பாராட்டியே ஆவணும்' என மன்னார் என் முதுகை மெதுவாகத் தடவிக் கொடுத்தான்.

கூடவே, 'இந்த அன்பு இருக்கே.... அதாம்ப்பா லவ்வு! அதுக்கு இன்னா வலு தெரியுமா? அத்தப்பத்தி நம்ம ஐயன் இன்னா சொல்லியிருக்காருன்னு சொல்றேன் கேளு! வேணுமின்னா எளுதிக்கோ!' என்று கண்ணைச் சிமிட்டினான்!

கரும்பு தின்னக் கூலியா என ஒரு கணம் நினைத்தவன், முதுகில் விழுந்த அடியின் வலி இன்னமும் உறைக்க, சிரித்துக் கொண்டே பேப்பர் பேனாவை எடுத்தேன்!

இனி வருவது குறளும், மயிலை மன்னாரின் விளக்கமும்!

அதிகாரம்-8 "அன்புடைமை"

"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கண்நீர் பூசல் தரும்." [71]

இந்தக் குறளை மட்டும் நீ சரியாப் புரிஞ்சுகிட்டியானா, மத்த எதையும் நீ படிக்க வேணாம்! அவ்ளோ கரீட்டா அன்புக்கு ஒரு அளுத்தம் கொடுத்து எளுதியிருக்காரு வள்ளுவன் ஐயா! கவனமாக் கேளு!

ஒனக்கு ரொம்பவே பிடிச்ச ஒருத்தரு! அவருக்கு ஒரு துன்பம் வந்திருது! உங்கிட்ட சொல்றாரு அதை! நீ ஒண்னும் பண்ணலை! சும்மா கேட்டுக்கினுதான் இருக்கே! ஆனா, அவரு சொல்லச் சொல்ல ஒன் கண்ணுல நீரு தளும்புது! நீ கவனிக்கலை அத்த! கொஞ்சங்கொஞ்சமா அது உருண்டு ஒங்கண்ணுல்லேர்ந்து வளியுது! ஒன்னை அறியாமலியே நீ பீச்சாங்கையால அதைத் தொடைக்கறே! அவரு சொன்னது ஒனக்கு பொறுக்கல! தானா கண்ணு தண்ணி வுடுது! இருக்கற அடைப்பயும் தாண்டிக்கினு!

சரி! அத்த வுடு! நீ இந்த தண்ணியெல்லாம் தேக்கற இடத்தைப் பாத்துருக்கியா? ஒரு பெரிய மரக்கட்டை,... அதுக்கு தாளுன்னு பேரு... அதைப் போட்டு தடுத்திருப்பாங்க! அதைத் தொறந்துவிட்டா தண்ணி வெளியே போகும்! ஆனா, ஒரு பெரிய மளை வந்து வெள்ளம் பொறண்டு வருது! இப்ப, அந்தத் தாளு... அந்த அடைப்பான்... அது இன்னா பண்ணும்? தடுக்க முடியுமா அதால? அதையும் தாண்டி இப்ப இந்த வெள்ளம் ஓடி வந்திரும்!

அப்படித்தான் இந்த அன்புன்றது!

அணையெல்லாம் போட்டு இதைத் தடுக்க முடியாது! எந்தத் தடையையும் தாண்டி வெளிய வந்திருமாம்!

வேற எதையும் சொல்லாம, இந்த தாழைச் சொல்லி ஐயன் இன்னாமா சொல்லிருக்காரு பாத்தியா?!! இதுக்கு மேல அன்பைப் பத்தி இன்னா சொல்ல முடியும்ண்ற?

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு" [72]

இந்த அன்புன்றது எம்மாம் பெரிய விஷயம்னு இதுல சொல்றாருன்னு கேளு.
இந்த அன்புன்றது இல்லாதவங்க எல்லாம், எந்தப் பொருளைப் பாத்தாலும் தனக்கே தனக்குன்னு அலையுவாங்களாம். ஒண்ணையும் பிறத்தியாருக்குத் தராம தன்கிட்டயே வைச்சுப்பாங்களாம்.
அதே நேரம், ஒடம்புல மட்டுமில்லாம, மனசு பூரா அன்பை வைச்சிருக்கறவங்க, எதைப் பத்தியும் கவலைப்படாம, தன்னோட எலும்பைக்கூட கொடுப்பாங்களாம்.. அதாவது தங்களோட உடலையும் உசிரையும் கூட!
இதுக்கு மேல இன்னா வோணும்?

"அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு." [73]

இப்ப, நீ இருக்கே! உன்னிய நான் பாக்கறேன். எதுனால? இந்த சங்கர்ன்ற ஒடம்புக்குள்ள ஒரு உசிரு சேர்ந்து இருக்கறதால! அது இல்லாட்டி.... நீ ஒரு பொணம்தான்! சங்கர்னு இருந்து இப்ப செத்துப் போன பொணம்! இப்டி நான் சொல்றேனேன்னு தப்பா நினைச்சுக்காத! ஒனக்குப் புரியணுமேன்னுதான் சொல்றேன்!
ஒடம்புக்கு உசிரு எவ்ளோ முக்கியமோ அது மாரி, வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் அன்போட இருக்கறது!
இதான் ஐயன் சொல்றது!

"அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு." [74]


இந்த அன்புங்கற விசயம் எப்பிடீன்னா, நீ இன்னாதான் செஞ்சாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாம எப்பவுமே உங்கிட்ட கொஞ்சங்கூடக் குறையாத அளவுல விருப்பமாவே, இது வைச்சுகிட்டு இருக்கறவங்ககிட்டே இருக்கும்.
இப்ப நான் ஒன் முதுகுல அடிச்சாக் கூட எங்கிட்ட பிரியமா இருக்கேல்ல... அது மாரின்னு வைச்சுக்கோயேன்!
இதனால இன்னா ஆவுது?
இன்னாடா! இந்தாளைப் போட்டு இப்பிடி தட்டிட்டோமேன்னு என்னிய நினைக்க வைக்குது!
இதுனால, நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்கற நட்பு இன்னமும் உறுதியாவுதில்ல?
அதேதான்!:))

"அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு." [75]


இப்ப இங்க இருக்கறப்ப முழுசா அன்பு காட்டி நீ இருந்தேன்னா, அதுவே நீ அடுத்த பிறவியிலியும் அன்பாவே இருக்கற மாரி வைச்சு ஒனக்கு பெரிய பெருமையைக் கொடுக்குமாம்!
[சில பேரு இந்த அடுத்த பிறவியை நம்புறாங்கள்ல... அதுல ஐயனும் ஒருத்தருன்றதை நெனைப்புல வைச்சுக்கோ!]

"அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை" [76]

இதுவரைக்கும் சொல்லாத ஒரு விசயத்தை ரொம்ப அசால்ட்டா சொல்றாரு ஐயன் இந்தக் குறள்ல!
அன்புதான் நல்லவங்க அல்லாரும் செய்யற ஒரு தனி சமாச்சாரம்னுதானே இதுவரைக்கும் நீ நினைச்சுகிட்டு இருந்தே!
அப்டியில்லியாம்!
ஒனக்கு ஒருத்தன் கெடுதி பண்றான்னு வைச்சுக்கோ! திருப்பி அவனை அடிக்கணும்னுதானே தோணும்?
அப்டி பண்ணாம அன்பா இருந்து பாரு!
இந்த அன்பு மூலமாவே அது மாரி கெட்டதுக்கும் இந்த அன்பே துணையா இருக்கும்னு ஐயன் சொல்றாரு.


"என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்." [77]


இவ்ளோ சொல்லியும் இன்னும் நீ இந்த அன்போட மகிமையைப் புரிஞ்சுக்கலியேன்னு இப்ப ஐயன் கொஞ்சம் வேகப்படறாரு! இன்னா சொல்றாருன்னு நீயே கேட்டுக்கோ!

மண்புழு நெளியுறத நீ பாத்திருக்கேதானே! அதுல ஒண்ணை எடுத்து நல்ல சூடு வெய்யில்ல போடு! இப்பப்பாரு அது எப்படி நெளியுதுன்னு! நகரமுடியாம, இருக்கற எடத்துலியே நெளிஞ்சுகிட்டு, அங்கியே செத்துப்போயிரும் அது! கொஞ்ச நேரம் களிச்சுப் பத்தியான, காஞ்சு கருவாடாப் போயிருக்கும்!
அது மாரி ஒன்னியப் போட்டு இந்த அறக்கடவுள் வாட்டுவாராம், அன்புன்ற ஒண்ணு ஒங்கிட்ட இல்லாங்காட்டி!

"அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று." [78]


கோவம் இன்னமும் தீரலை ஐயனுக்கு!

இப்பிடி மனசுல அன்பில்லாத ஆளுங்க இந்த ஒலகத்துல சந்தோசமா இருக்கறதுன்றது எப்பிடி இருக்குன்னா, துளிக்கூட தண்ணியே இருக்காத பாலைவனத்துல, ஒரு மரம் நல்லா துளிரு வுட்டு தளைச்சு வளந்திருக்குன்ற மாரியாம்! இது எப்பிடி முடியாத சமாச்சாரமோ, அது மாரித்தான் இவங்கல்லாம் நல்லா வாளறதும்! நடக்காத காரியம்ண்றாரு!


"புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு." [79]

உள்ளுக்குள்ள அன்பு இல்லாத ஆளுங்களுக்கு வெளியில கையி, காலு, கண்ணுன்னு எல்லா உறுப்புகளும் ஒயுங்கா இருந்தாலும் அதுனால ஒரு பயனும் இல்லியாம்!

"அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு." [80]

இவ்ளோ நேரம் சொன்னேனே, இந்த அன்புன்ற ஒண்ணு இருக்கறவங்க ஒடம்புதான் உசிரோட பொருந்தி நிக்கற ஒடம்பாகும்.
மத்த ஒடம்பெல்லாம் சும்மா உள்ள இருக்கற எலும்பை தோலால போத்தி இருக்கற ஒடம்புதான் அப்பிடீன்னு ஐயன் சொல்றாரு!


இதையெல்லாம் இன்னிக்கு ஏன் சொல்றேன்னு கேக்குறியா? விசயம் இருக்கு! இன்னிக்கு இன்னா நாளு?
பூம்பாவை திருநாளு! சம்பந்தர் மேல அன்பை வைச்சுகிட்டே செத்துப்போன ஆத்மா! இவரு அதுக்கு உசிரைக் கொடுத்து, தன்னோட பொண்ணாவே ஏத்துகிட்ட மகாத்மா! இந்தப் பாட்டையெல்லாம் இன்னிக்குப் படிச்சா ஒனக்கும் இதோட அருமை புரியும்னுதான் சொன்னேன்! நீ கேக்கற ஆளுன்னு நான் நினைக்கறதால! போயி, ஒங்க ஆளுங்ககிட்டயும் சொல்லு! அல்லார்கிட்டயும் அன்பா இருக்கணும்னு! சரி வா! நாயர் கடையாண்ட போயி டீ, மசால்வடை துன்னுட்டு போலாம்!"
என அன்புடன் என் தோளில் கை போட்டு இழுத்தவாறு சென்றான், மயிலை மன்னார்!
மகிழ்வுடன்.... இல்லை இல்லை!.... அன்புடன் அவனுடன் நானும் நடந்தேன்!
**********************************************************************************

Read more...

Thursday, February 14, 2008

"பெண்ணில் இவளே பெருந்தெய்வம்"! [ஐந்தாம் தைவெள்ளிப் பதிவு]

"பெண்ணில் இவளே பெருந்தெய்வம்"! [ஐந்தாம் தைவெள்ளிப் பதிவு]
அன்னையென்னும் அரும்பெயர் பெறவே தன்னை இவளும் தந்திருந்தாள்
துணைவன் கொடுத்த பொறியினை எடுத்தொரு பொந்தினில் வைத்துக் காத்திட்டாள்
அல்லும் பகலும் இதனை உயிர்க்க உதிரம் கொடுத்து உதவிட்டாள்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [1]

பத்துத்திங்கள் தன்னை மறந்து என்னைநினைந்தே வாழ்ந்திருந்தாள்
பத்திரமாய் எனைக் கருவினில் சுமந்து கண்மணி போலே காத்திருந்தாள்
இத்தரையிலுள்ள நல்வரம்யாவும் தனக்கே வந்ததாய் மகிழ்ந்திட்டாள்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [2]

தன்னுடல் நலனும் பேணாதிருந்து எனக்கெனவே அவள் பொறுத்திருந்தாள்
இன்னுயிராய் எனை எண்ணத்தில் நிறைத்து ஆசைக்கனவுகள் வளர்த்திருந்தாள்
மண்ணில் உள்ள இன்பங்கள் யாவினும் என்னையே பெரிதெனக் கருதிட்டாள் பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [3]

உள்ளே செல்லும் உணவுகள் யாவும் வெளியே வரவும் உடல்தளர்ந்தாள்
உள்ளே இருக்கும் என்னைக் காக்க அதையும் அவளும் பொறுத்திட்டாள்
உள்ளே அங்கே கோயிலில் அருளும் தெய்வத்தை விடவும் மேம்பட்டாள்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [4]

முப்பது நாட்கள் முள்ளாய்த் தவித்தாய் இருக்கிறேன் என்றே தானறிய
அடுத்தொரு திங்கள் அகமெலாம் தளர்ந்தாய் உள்ளே நிகழ்ந்த மாற்றத்திலே
மூன்றாம் திங்கள் பூரித்திருந்தாய் என்னை வளர்க்கும் நோக்கத்திலே
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [5]

நாலாம் மாதம் கருவது தெரிய நடையில் சற்று மிடுக்கடைந்தாய்
ஐந்தாம் மாதம் உயிரின் துடிப்பின் ஓசைகேட்டு முகமலர்ந்தாய்
ஆறாம் மதம் அடுத்தவர் காண ஆடையைத் தளர்த்தி அமர்ந்திருந்தாய்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [6]

ஏழாம் திங்கள் வளைகளை அடுக்கி உடலின் சீரைச் சமன்செய்தாய்
எட்டாம் திங்கள் வயிறும் பெருத்து மூலிகை மருந்தினால் சரிசெய்தாய்
ஒன்பதாம் திங்கள் எல்லாம் ஒடுங்கி என்னைக் கொணரும் வழியறிந்தாய்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [7]

பத்தாம் திங்கள் என்னைக் கொணர்ந்து படைத்தவள் என்னும் பெயர் பெற்றாய்
உதிரப்பாலை எனக்குக் கொடுத்து காத்தல் என்னும் தொழில் செய்தாய்
என்னில் இருந்த தீயவை அழிக்க எத்தனை வழியில் நீ முயன்றாய்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [8]

தன்னில் இருந்து என்னை வளர்த்து மண்ணில் இன்று தவழவிட்டாய்
முத்தொழில் செய்து வரமெனக்கருளி என்னை உலகில் வளர்த்துவிட்டாய்
எத்தனை நன்றி சொன்னாலும் அது அன்னை பெருமைக்கு ஈடாமோ
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [9]

வெள்ளியில் அன்னையைப் போற்றிப்பாடுதல் உள்ளவர்கெல்லாம் நலமாகும்
கச்சிப்பதியில் காமாட்சி மாநகர் மதுரையில் மீனாட்சி காசியில் வாழும் விசாலாட்சி
இவரைப் பணியும் வெள்ளித்தையில் எம் அன்னையை இங்கே போற்றிப்பாட
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [10]

இதுவரை யாரும் சொல்லாக் கருத்தினை இங்கே யானும் சொல்லவில்லை
புதிதாய்ப் பிறந்த ஒவ்வொருபேர்க்கும் அன்னையிவளே முதல் தெய்வம்
கருவறை தொடங்கி இதுவரை எம்மைக் காக்கும் அன்னையின் பெருமையினைப்
பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்! [11]
********************************************************************************

தை வெள்ளிப் பதிவுகள் நிறைவுற்றன!!

Read more...

Wednesday, February 13, 2008

"காலமெல்லாம் காதல் வாழ்க!!"

காலமெல்லாம் காதல் வாழ்க!!


இன்று காதலர் தினம்! இதையொட்டி இரு வித்தியாசமான கவிதைகள் எழுதினேன். ஒன்று என் மனைவிக்கு. மற்றொன்று என் முதல் காதலு[லி]க்கு! இரு கவிதைகளுமே "ஏற்பு" எனும் சொல்லில் தொடங்கி "வாழியவே" எனும் சொல்லில் முடிகிறது! எதையும் 'ஏற்றால்' எல்லாரும் 'வாழலாம்'! காலமெல்லாம் காதல் வாழ்க!!

ஏற்பது புகழ்ச்சி!

ஏற்றுக் கொண்டதாலன்றோ இவ்வுலகம் நமையெல்லாம் தாங்கிநிற்குது
நீ என்னை எப்போதும் தாங்குதல் போல!

ஏற்றுக் கொண்டதாலன்றோ ரவி மதியும் பகலிரவில் முறை வருது
அல்லும் பகலும் எனை நீ மகிழ்வித்தல் போல!

ஏற்றுக் கொண்டதாலன்றோ பூமியிதன் சுழற்சியும் ஆதவனைத் தொடருது!
தன்செயலோடு என்னையும் நீ நாடுதல் போல!

ஏற்றுக் கொண்டதாலன்றோ பருவங்கள் மாறிமாறி வருகிறது
நவரசமும் என்னிடமே நீ காட்டல் போல!

ஏற்றுக் கொண்டதாலன்றோ இவையனைத்தும் இயல்பாக நிகழ்கிறது
என் குறைகளுடன் என்னை நீ ஏற்றது போல!

உதிரத்தில் ஓடுகின்ற அணுக்களெல்லாம்
உன்பெயர் சொல்லியே நகர்கின்றன!

விடுக்கின்ற காற்றும் எடுக்கின்ற காற்றும்
உன்நினைவைத் தாங்கியே செல்கின்றன!

உண்ணுகின்ற கவளம் ஒவ்வொன்றிலும்
தெரிவதும் நின் அன்பு முகமே!

செய்கின்ற செயல்யாவும் நிகழ்வதுவும்
நீ காட்டும் சிரிப்பாலே!

காதில் விழும் மொழிகள் யாவையும்
உன்குரலாய் மாற்றிக் களிக்கின்றேன்!

கண்பார்க்கும் காட்சியிலும் நின்னுருவே என்றும்
நீக்கமற நிறைந்திருக்கும்!

வாழுகின்ற காரணத்தை
வண்ணநிலா நீ தந்தாய்
வாழிய வாழியவே!

இது என் மனைவிக்கு "எங்களது திருமணநாள்" பரிசாக![02/11]
**************************************************

ஏற்பது மகிழ்ச்சி!



ஏற்று எனைக் கொள்வாயோ எனச் சொல்லி
நேற்றுவரை காதல்சொன்ன காதலியே!
உன்னையின்று அப்படி நான் அழைக்கலாமோ
வேற்றொருவன் மனைவியாகும் வேளையிலே?

காற்றுவழிப் போகின்ற அத்தனையும் காட்டியெனக்குக்
காதல்மொழி சொன்னவளும் நீதானே!
நீயின்றி நானில்லை எனச்சொல்லி என்நினைவில்
நிச்சயமாய் நின்றவளும் நீதானே!

யாரென்ன சொன்னாலும் நீதான் என்னுடைய
காதல்மணாளன் என்றவளும் நீதானே!
ஊரென்ன உறவென்ன சுற்றமென்ன சொந்தமென்ன
அத்தனையும்நீதான் என்றவளும் நீதானே!

காதலையும் மறந்தின்று பாசத்துக்கு அடிமையாகி
என்னையுமே நீயிங்கு மறந்தாச்சு!
உனையெண்னி என்னுணர்வை உருக்குலைந்து
ஒழித்திட்டேன் இன்றுவேறு கதையாச்சு!

உன்நினைவில் நான்வாட என்னையுமே மறந்திங்கு
பெற்றவனின் சொல்கேட்டுச் செல்கின்றாய்!
சொன்னமொழி அத்தனையும் சிந்தையிலே நிற்குதடி
சின்னவளே ஏன்மறந்தாய் சொல்லடி நீயும்!

கலியாணப் பந்தலிலே கண்மணியே நீயிருக்கும்
கோலத்தைக் கண்டிடவே வருகின்றேன்
ஈதென்ன நீயென்னைப் பார்க்கின்றாய் உன்கண்ணில்
ஒரு கோடி வேண்டுதல்கள்!

உன்பார்வை எனைநோக்கி விழிக்கிறதே இதுவென்ன
எனை நீயும் அறிந்தாயோ
மரணத்தில் நம்காதல் முகிழ்வதுவே சரியென்றால்
அதுவெனக்கு சம்மதமில்லை!

எதுநிகழ்வு என்பதனை எவரிங்கே நிச்சயிப்பார்
நீவாழும் மகிழ்வொன்றே போதுமடி
யான்வந்த காட்சியினைக் கண்டிட்ட நீயும்
மகிழ்வோடு தாலியினை ஏற்கின்றாய்!

அட்சதையைத் தூவிவிட்டு அகல்கின்றேன் யானும்
உனை யென்னின் நினைவிருத்தி
என்வாழ்வு இனியென்ன வெனவாகும் எனக்கிங்கு
தெரியாது என்றாலும் நீ வாழிய வாழியவே!

என் முதல் காதல் நினைவுக்கு! [00/00]
**********************************************************************
காலமெல்லாம் காதல் வாழ்க!!

Read more...

Monday, February 11, 2008

"அ.அ. திருப்புகழ்"[24] -- "அமைவுற்றடைய"

"அ.அ. திருப்புகழ்" [24] -- "அமைவுற்றடைய"


மயிலை மன்னார் ஐயனின் "நிலையாமை" பற்றி சொன்னதும், அதே நினைவுடன் திருப்புகழைப் புரட்டியபோது முதலில் வந்தது திருத்தணி மேவும் தணிகக்குமரனைப் போற்றும் இந்தப் பாடல்!

விரிவாகப் படித்ததும், இதுவும் அதே கருத்தைச் சொல்லியிருப்பதைப் பார்த்ததும், உடனே பதிகிறேன்.

முருகனருள் முன்னிற்கும்!
**************************************


.........."பாடல்".........

"அமைவுற் றடையப் பசியுற் றவருக்
கமுதைப் பகிர்தற் கிசையாதே

அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்
தருள்தப் பிமதத் தயராதே

தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்
சமனெட் டுயிரைக் கொடுபோகுஞ்

சரிரத் தினைநிற் குமெனக் கருதித்
தளர்வுற் றொழியக் கடவேனோ

இமயத் துமயிற் கொருபக் கமளித்
தவருக் கிசையப் புகல்வோனே

இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்
கிரையிட் டிடுவிக் ரமவேலா

சமயச் சிலுகிட் டவரைத் தவறித்
தவமுற் றவருட் புகநாடும்

சடுபத் மமுகக் குகபுக் ககனத்
தணியிற் குமரப் பெருமாளே.
**************************************************


........"பொருள்" [பின் பார்த்து முன்!!].........

"இமயத்து மயிற்கு ஒருபக்கம்
அளித்தவருக்கு இசையப் புகல்வோனே"

பிருகுவென்னும் மாமுனிவர்
சிவனொன்றே திருவென நம்பி
திருவுருவாம் உமையவளை
இறையென்று மதியாமல்
சிவனாரை மட்டுமே
வலம்வந்தார் கயிலையில்!


இடம் நீங்கி உமையவளும்
காஞ்சியெனும் திருநகரில்
நால்வேதப் பொருளான
மாவடியில் தவமிருந்து
மணல்வடிவில் உருவமைத்து
சிவனாரை எண்ணியே
தவமிருக்க மறையோனும்
உமையவளை மணமுடித்து
இடப்பாகம் தந்திட்டான்!

பிரணவத்தின் பொருளறியா
நான்முகனின் தலைகுட்டிச்
சிறையிட்ட முருகோனை
வேண்டிட்ட சிவனார்க்கு
குருவாகி இசைவாகப்
பொருள் சொன்னவரே!


"இரணத்தினில் எற்றுவரைக் கழுகுக்கு
இரையிட்டிடு விக்ரமவேலா"

போர்புரிய வந்திருந்து
எதிர்நின்று தாக்கவரும்
மதியற்ற வீரர்களைக்
கொன்றங்கு கழுகுக்கு
இரையாக அளிக்கின்ற
வீரமுடைய வேலென்னும்
ஆயுதத்தைத் தாங்கிநிற்கும்
வேலாயுதரே!

"சமயச் சிலுகிட்டவரைத் தவறித்
தவமுற்ற அருள் புகநாடும்"

எங்கிருந்து பிறந்தாலும்
எவ்வழியில் சென்றாலும்
நதியெல்லாம் வழியோடி
இறுதியிலே அடையுமிடம்
கடல்மடியே என்பது போல்
எவர்மூலம் தோன்றிடினும்
எவருரையால் வளர்ந்திடினும்
சமயங்கள் ஒவ்வொன்றும்
சென்றடையும் முடிவிடமோ
இறைவனது திருவடிகள்!

இதையுணரா வீணர்சிலர்
சமயத்தை முன்னிறுத்தி
வாதங்கள் செய்வதுவும்
வீண்சண்டை புரிவதுவும்!

பயனில்லாச் செயலென்று
அவ்வழியை விலக்கிவிட்டு,
நினைநாடி யான்செய்யும்
தவமொன்று நிறைவாகி
நின் திருவருளில் இனிதாக
யான் புகவும் விரும்புகின்ற,


"சடு பத்ம முக! குக! புக்க கனத்
தணியில் குமரப் பெருமாளே!"


தாமரைபோல் மலர்ந்திருக்கும்
ஆறுமுகம் திருவுருவாய்க்
கொண்டிருக்கும் ஷண்முகரே!

உள்ளமெனும் குகையினிலே
அருளொளியைப் பரப்புபவரே!


குறவள்ளி தனைமணந்து
வருவோரின் வினை தணிக்கும்
தணியென்னும் மலைசேர்ந்து
பெருமையுடன் வீற்றிருக்கும்
தணிகைக் குமார மூர்த்தியே!

பெருமையுடையவரே!


"அமைவுற்று அடையப் பசியுற்றவருக்கு
அமுதைப் பகிர்தற்கு இசையாதே"

["அடையப் பசியுற்றவருக்கு அமைவுற்று
அமுதைப் பகிர்தற்கு கிசையாதே" ]


பசியால் மிகவாடி வாசல் நின்று
உண்ணுதற்கு ஏதேனும் தருகவென
இரந்து நிற்போரைக் கண்டு மனமிரங்கி
இருப்பதை அவருடன் மனவமைதியுடன்
பகிர்ந்துண்டு வாழும் மனமின்றி,

"அடையப் பொருள் கைக்கு இளமைக்கென வைத்து
அருள்தப்பி மதத்து அயராதே"
["அடையப் பொருள் இளமைக்கென கைவைத்து
அருள்தப்பி மதத்து அயராதே"]

இருக்கின்ற பொருள்யாவும்
இருக்கின்ற இளமையினைத்
தக்கவைத்துக் கொள்ளும்
தகமைக்கே வாய்த்ததென
தனக்குள்ளே நினைத்திருந்து
எவருக்கும் கொடுக்காமல்
நல்லோர் சொன்ன நன்னெறியை
நினைவினிலும் கொள்ளாமல்
அதைவிட்டு அகன்றிருந்து
அகங்காரமென்னும் பெருநோயால்
தளர்ச்சி அடையாமலும்,

"தமர் சுற்றி அழப் பறைகொட்டி இடச்
சமன் நெட்டு உயிரைக் கொடுபோகும்"


உடனிருக்கும் சுற்றத்தாரும்
ஓவெனவே அலறியழவும்
பறைமேள வாத்தியங்கள்
'டமடம'வென முழங்கிடவும்
அரசனிவன் ஆண்டியிவன்
படித்தவன் மூடனிவன்
பணக்காரன் ஏழையிவன்
சற்றுமுன்னரே மணமுடித்த
மாப்பிள்ளையிவன் என்கின்ற
பேதங்கள் ஏதுமின்றி
சமனாக அனைவரையும்
கொண்டு செல்கின்ற தன்மையினால்
"சமன்" என்ற பெயர் படைத்த
கொடுங்கூற்று இயமனும்
இவ்வுயிரைப் பற்றி
நெடுந்தொலைவு கொண்டுபோகின்ற,


"சரிரத்தினை நிற்கும் எனக் கருதித்
தளர்வுற்று ஒழியக் கடவேனோ"

இளமையானவொரு கணவன்
அழகான அவன் மனைவி
அடை செய்து கொண்டுவாவென
அன்பான கணவன் கேட்க
அரிசியினை ஊறவைத்து
அன்புமனைவியும் அடைசெய்து
வட்டிலிலிட்டு பரிமாறிட
ஆவலுடன் அதையுண்டவன்
இடப்பக்கம் வலிப்பதாகச்
சொல்லிச் சற்றுப் படுத்தான்!
படுத்தவன் மீண்டும் எழவேயில்லை!
இதுவே இவ்வுலக வாழ்வு!

"அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேயிறை நொந்ததே என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே" [திருமந்திரம்] [148]
[திருத்தத்துக்கு நன்றி, திரு. திவா!]

இதுவொன்றே உண்மையென
ஒருபோதும் அறியாது
நிலையற்ற இவ்வுடலை
என்றுமே நிலைத்திருக்கும்
எனக்கருதி இதை வளர்த்து
இதற்கெனவே பாடுபட்டுத்
தளர்ந்திங்கு யான் அழிவது
இது முறையாமோ?

[முறையில்லை! நிலையாமையை உணர்ந்து நிலை பெற அருள் முருகா!]
*******************************************************************************

"அருஞ்சொற்பொருள்"


தமர் = தம் மக்கள், சுற்றத்தார்
சமன் = அனைவரையும் சமமாகக் கொண்டு செல்லும் இயமன்
இரணம் = போர்
எற்றுவர் = தாக்கி எதிர்ப்பவர்
சிலுகை = சண்டை
சடு = 'ஷட்' என்னும் வடமொழியைத் தமிழாக்கி ஆறு[6] எனும் பொருள்
************************************************************************


அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!!
முருகனருள் முன்னிற்கும்!!!
******************************************

Read more...

Sunday, February 10, 2008

"குட்டிராணி!" [காதலர் தின ஸ்பெஷல்!]

"குட்டிராணி !" [காதலர் தின ஸ்பெஷல்!]




மாலை நேரம்!
சூரியன் மறைந்து செவ்வானம் படர்கிறது!


ஆற்றங்கரை மணல்மேட்டில் அமர்ந்தபடி கூடுதேடி பறந்துவந்து மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் பறவைகளைப் பார்க்கிறேன்!
ஆசையுடன் தான் கொண்டுவந்த இரைக்காக குஞ்சுகள் ஆவென வாய்திறக்க, ஒரு தாய்மையின் முழுப்பரிவையும் வெளிக்காட்டி அக்கறையாய் ஊட்டுகின்ற தாய்ப்பறவைகளைக் கவனிக்கிறேன்!
அமைதியாக சற்றுத்தள்ளி அமர்ந்துகொண்டு, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் அதுதான் தந்தையாக இருக்க வேண்டும்!

தனக்கென்ன என்பதுபோன்ற ஒரு அலட்சியத்துடன் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறது!

காற்று இப்போது சற்று வேகமாக வீசுகிறது!


மரத்திலிருந்து ஒரு இலை உதிர்ந்து ஆடி ஆடி கீழே விழுகிறது!
உதிர்ந்து விழும் முன் அதற்குத் தெரிந்திருக்குமா, தான் எங்கே சென்று விழப்போகிறோம் என?
ஒட்டியிருந்த நினைவுகளெல்லாம் கலைந்து எங்கேயோ செல்கிறோமே என?
இப்படி ஒரு நினைவு தலைதூக்க சட்டென பார்வையை அகற்றி தலையை உயர்த்திப் பார்க்கிறேன்.

வெண்மேகக் கூட்டங்கள் யாரையோ அவசரமாகப் பார்க்கச்செல்வதுபோல் விரைந்து கொண்டிருக்கின்றன!


யாராக இருக்கக் கூடும்?

அல்லது யாருக்காக இவ்வளவு வேகமாகச் செல்கின்றன?

எவர் அனுப்பிய காதல் நினைவுகளைச் சுமந்துகொண்டு இவைகள் செல்கின்றன?


என் நினைவுகளையும் சுமந்து செல்ல ஒரு மேகம் இருக்கிறதா?
என்னுடைய மேகம் எது?
தெரிந்துகொள்ளும் ஆவலுடன் அவைகளைப் பார்க்கிறேன்!
இருப்பதிலேயே குட்டியாய் இருந்த ஒரு வெண்மேகம் என்னைக் கவனிப்பதைப் போல ஒரு உணர்வு!

ஓ! இதுவா எனக்கான மேகம்!
அதற்கு 'குட்டிராணி' என ஒரு பெயர் சூட்டிச் சிரிக்கிறேன்!
இதென்ன பைத்தியக்காரத்தனம் என ஒரு எண்ணம் வர, அதனை அலட்சியப்படுத்தி ஒதுக்குகிறேன்!
'குட்டிராணி'யைப் பார்த்துச் சொல்கிறேன்!

'இங்கே ஒருவன் இன்பநினைவுகள் இதயத்தில் தாங்கி இன்றுவரை இருக்கிறான்! இனிமேலும் நினைத்திருப்பான்! இனியுன்னைச் சந்திக்கவில்லையெனினும் நினைவுகள் நிறைந்திருக்கும் இவனுள்! நினைவுகள் மட்டுமே சுகம் தரும் இவனுக்கு! அவளை இன்பமாய் எப்போதும் இருக்கச் சொல்!'

'குட்டிராணி' எனக்காக, என் சொல்லைக் கேட்டு, அதை முழுதுமாய் உள்வாங்கிக் கொள்வதுபோல், ஒரு நொடி நிற்கிறது!


நான் ஒன்றும் கனவெதுவும் காணவில்லையே!
கண்களைக் கசக்கிவிட்டுப் பார்க்கிறேன்!
நம்பினால் நம்புங்கள்! நம்பாவிடிலும் நட்டமில்லை!
எங்கிருந்தோ இன்னொரு குட்டி மேகம் இதனோடு சேர்ந்து இப்போது என் 'குட்டிராணி' சற்றுப் பெரிதாகி இருக்கிறது!

என்னுடைய செய்தி அதனுடன் சேர்ந்துவிட்டது என மனத்தில் ஒரு குதூகலம்!

இன்னும் சற்று உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தேன்!
குட்டிராணி இப்போது சற்று விரைந்து செல்லுவது போலத் தோன்றியது!
ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி அது நகர்வதாகப் பட்டது!
குட்டிராணிக்கு முன்னால் ஒரு பெரிய வெண்மேகம்!
அதையே நோக்கி விரைகிறது என் குட்டிராணி!
இதோ! அந்தப் பெரிய மேகத்தைத் தொட்டு..... இதென்ன!

குட்டிராணி அதற்குள் நுழைகிறதே!
பெரிய மேகத்துடன் இப்போது சிறிது சிறிதாகக் கலக்கிறது!
இப்போது அதைக் காணவில்லை!
எனக்குள் லேசாக ஒரு பதற்றம்!


குட்டிராணி தன் இலக்கை நோக்கிச் செல்ல முடிவெடுத்து, சரியான வழியைத் தேர்ந்தெடுத்துவிட்டது என மட்டும் புரிந்தது!
அந்த பெரிய மேகத்தின் வடிவைப் பர்த்துக் கொண்டிருந்தேன்!

ஒரு பெரிய யானை தன் தும்பிக்கையைத் தூக்கிக் கொண்டு ஓடுவதுபோல ஒரு காட்சி!

மேகம் தன் கடமையைச் செய்ய விரைகிறது எனப் புரிந்தது!
'சீக்கிரமாய் வா! உன் பதிலை எதிர்பார்ப்பேன்' என அதைப் பார்த்துக் கத்தினேன்.
ஒரு இனம்புரியா உணர்வுடன் எழுந்தேன்!

ஒட்டியிருந்த மணல்துகளைத் தட்டிவிட்டு ஆற்றில் கால் நனைக்கச் சென்றேன்!

நிலவு வெளிவரத் தொடங்கியிருந்தது!
********************************************


Read more...

Thursday, February 07, 2008

"இன்பமழை பொழிந்திடம்மா!" [நான்காம் தைவெள்ளிப் பதிவு]

"இன்பமழை பொழிந்திடம்மா!" [நான்காம் தைவெள்ளிப் பதிவு]




காசினியில் வாழ்கின்ற கற்றோரும் மற்றவரும் கைதொழுது மெய்தொட்டு
பூசனைகள் செய்கின்ற புனிதநீரில்தான் குளித்து பூமலரால் அருச்சித்து
பாசமுடன் பரிவாக அவர்செய்யும் அபிஷேக ஆராதனை ஏற்கின்ற
காசிநகர் மேவிநிற்கும் விசாலாக்ஷி புகழ்பாட கணபதியே காப்பு.


பார்புகழும் பாரதத்தில் எத்தனையோ க்ஷேத்திரங்கள்
க்ஷேத்திரங்கள் அத்தனையும் தூயவரின் உறைவிடங்கள்
உறைவிடங்கள் ஒவ்வொன்றும் சொல்லும்கதை ஆயிரங்கள்
ஆயிரம்தான் சொன்னாலும் தாயிவளைப் போலாமோ! [1]

காசியெனும் நகரினிலே வீற்றிருக்கும் பேரரசி
பேரரசி வடிவழகில் புரிந்துவரும் இவள்மாட்சி
மாட்சிமையின் மகிமையிலே மாதரசி தேனாட்சி
ஆட்சியிவள் அருமையினை சொல்லுவதும் எளிதாமோ! [2]

இன்பத்தை அள்ளிவிடும் காமாட்சி திருக்கண்கள்
கண்களே மீன்போலத் திறந்தருளும் மீனாட்சி
மீனாட்சி காமாட்சி கண்களையும் விஞ்சுகின்ற
இன்றுபூத்த மலர்போலும் அன்னையிவள் கண்களுமே! [3]



தம்பாவம் கரைத்திடவே காசிக்குச் சென்றிடுவார்
இடும்பாவம் அத்தனையும் வாங்கிடுவாள் கங்கையளும்
கங்கையவள் தாங்குதற்கு தாயிவளே காரணமாம்
காரணமே பூரணமாய் நிறைந்ததிலோர் வியப்புண்டோ! [4]

கண்களிலே அன்புதேக்கிக் கனிவோடு வந்திருந்தாள்
இருந்தவளும் விஸ்வநாதன் அன்பினிலே மயங்கிவிட்டாள்
விட்டகுறை தொட்டகுறை இறையோடு இணைந்தவளை
அவளை மணமுடித்து தன்னோடு இருத்திட்டானே! [5]

ஆதிசிவன் அவதாரம் சங்கரரும் காசி வந்தார்
வந்தவரைப் பின்தொடர்ந்து சீடர்களும் சூழ்ந்திருந்தார்
'இரு! இவரைச் சோதிக்கலாம்! எனவெண்ணிச் சிவனும்
சண்டாளன் வேடமிட்டு முன்னாலே தோன்றி நின்றான்! [6]

சண்டாளன் உருவினிலே சிவனாரும் முன்வரவே
வந்தவனைப் பின்தொடர்ந்தாள் அவனுடைய நாயகியும்
நாயகிபின் நாயொன்று கூடவரும் காட்சிவந்த
வரவதனைப் பார்த்திட்ட சங்கரரும் திகைத்திட்டார்! [7]



'தள்ளிப்போ! சண்டாளா! என்றவனைத் தூற்றிநின்றார்
நின்றவனும் நகைப்போடு சங்கரரைக் கேட்டிட்டார்
"கேள்மகனே! எவனைத்தள்ளச் சொல்லுகின்றாய்?'
சொன்னதனைக் கேட்டவரும் மெய்வழியை உணர்ந்தாரே! [8]

"என்னிலுள்ள ஒன்றுதானே உன்னிலுமே உள்ள அது!"
"அதைவிடுத்து நான்சென்றால் உன்னிலது உயர்பெறுமோ?"
பெரும் பொருளைப் புரிந்தவரும் பணிந்தங்கே பாடிநின்றார்.
நின்றவரும் பாடியதே மனீஷாபஞ்சகம் எனும்துதிகள்! [9]

சண்டாளன் மனமகிழ்ந்து சங்கரனாய் மாறிநின்றான்
நின்றவனின் அருகினிலே விசாலாக்ஷி கூடிநின்றாள்
நின்றவளும் மகிழ்வோடு அங்கேயே குடிகொண்டாள்
கொண்டவொரு கோலத்துடன் காசியிலே அருளுகின்றாள்! [10]

அனைவர்க்கும் அருளிடவே அழகாகக் கோயில் கொண்டாள்
கொண்டதிருக் கோலத்தை அடியேனால் சொல்லப்போமோ
ஓமென்னும் ரூபத்தில் வடிவாக சமைந்திருந்தாள்
இருந்தவளின் கோலத்தை முடிந்தவரை சொல்லுகின்றேன்! [11]



இடக்கரத்தில் கனகத்தால் அமைந்தவொரு பாத்திரமும்
பாத்திரத்தில் நிறைந்திருக்கும் சுவையான பாயசமும்
பாயசத்தை அள்ளவொரு கரண்டியும் வலக்கரத்தில்
வலதிடது கரங்களாலே அள்ளித்தரும் திருவடிவம்! [12]

பட்டாடை புனைந்திருப்பாள் சிற்றாடை உடுத்திடுவாள்
உடுத்துகின்ற தேவதைகளும் உடன்வரவே அருளிடுவாள்
அருளமுதம் தனையிங்கு தந்திடவே சிரிக்கின்றாள்
சிரிப்பெல்லாம் முகத்தினிலே தேக்கியிவள் பொலிகின்றாள் [13]

விரிவான பார்வையினால் வந்தவர்க்கு அருள்கின்றாள்
அருட்பார்வை அதனாலே அகிலமெல்லாம் ஆளுகின்றாள்
ஆளுகின்ற கருணையினால் அருளமுது படைக்கின்றாள்
படைப்பதையே தொழிலாக அன்பரையும் காக்கின்றாள்! [14]

காஞ்சியிலே காமகோடி காமாட்சி அருளுகின்றாள்
அருளொளியை வீசும்மீனாள் தென்பாண்டிநாட்டினிலே
நாட்டிலுள்ளோர் நாடிவரும் விசாலாட்சி காசியிலே
காசிநகர் வீற்றிருக்கும் கங்கையிவள் அன்னபூரணி [15]

கண்விரித்து கங்கைக்கரை மீதிவளும் அருள்கின்றாள்
அருளமுதை வந்தவர்க்கு வாரிவாரி வழங்குகின்றாள்
வழங்குவதில் இவளுக்கோர் ஈடிங்கு என்அன்னை
அன்னையிவள் இருப்பதாலே அகிலமுமே வாழுதம்மா! [16]

பாவங்கள் தீர்ந்துவிடும் பாவையிவள் கண்பட்டால்
பட்டதெல்லாம் பறந்துவிடும் அன்னையிவள் அருள்சுரந்தால்
சுரக்கின்ற அருட்கருணை விழியதிலே பொழிந்திருக்கும்
பொழிகின்ற தாயவளைப் போற்றிடவோ மொழியுமில்லை! [17]

இத்தரையில் இவள்போல எங்குமொரு தெய்வமில்லை
இல்லையென வருவோர்க்கு ஈயாதது ஒன்றுமில்லை
ஒன்றினிலே ஒன்றாக ஒன்றியிவள் நின்றிடுவாள்
இடுகின்ற அமுதத்தால் இன்னல்களைப் போக்கிடுவாள்! [18]

என்னவளை என்தாயை இன்பமுடன் பாடிவந்தேன்
வந்தவரை அரவணைத்து வழிகாட்டி நடத்திடுவாள்
நடமாடும் தெய்வமிவள் நமைக்காக்க நிற்கின்றாள்
நின்றதிருக் கோலமதில் உள்ளமெலாம் பறிகொடுத்தேன்! [19]

மூவுலகும் ஆளுகின்ற ஆதிசிவன் தேவியிவள்
இவளருளால் விளைகின்ற பேரின்பம் பலகோடி
கோடிசுகம் தந்திடுவாள் நாடுகின்ற அன்பருக்கு
அன்பருக்கு இப்போதே இன்பமழை பொழிந்திடம்மா ! [20]

காமாட்சி மீனாட்சி காசிவிசா லாட்சிபோற்றி!
போற்றுபவர்க்குப் படியளக்கும் அன்னபூரணி அடிபோற்றி!
போற்றியிதைப் படிப்பவரின் பாவம்போக்கும் கழல் போற்றி!
போற்றியுனைப் பாடிடுவேன் விசாலாட்சி போற்றி போற்றி!! [21]

விசாலாட்சி என்னும்பெயர் கொண்டவளும் தாயிவளே
இவளன்றோ சிவனுக்கே அமுதளித்த அன்னபூரணி
பூரணமாய்ப் பொலிகின்றாள் இருவுருவில் காசியிலே
காசியிலே நின்றமர்ந்து காக்கின்றாள் காசினியை! [22]




காசிவாழ் விசாலாக்ஷி கழலடிகள் சரணம்!
**************************************************************

Read more...

Tuesday, February 05, 2008

"விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு"

"விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு!!!"



தை அமாவாசை தினம்!

திருக்கடவூர் அன்னை அபிராமி திருக்கோயிலுக்குச் செல்கின்ற வாய்ப்பு கிட்டியது!

ஆனால், கோயிலுக்குள் செல்லமுடியாதபடி வாசலில் ஒரு பெரும் கூட்டம்!

என்னவெனப் பார்க்கிறேன்!

நூறு கயிறுகளால் ஆன ஒரு தொட்டில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது!

தொட்டில் எனச் சொல்லலாமா இதை?

மரணக்கட்டில் எனவல்லவா சொல்ல வேண்டும்!

ஏன்? எதற்காக அப்படிச் சொல்கிறாய்? என நீங்கள் பதறுவது கேட்கிறது!

சற்றே கவனமாகப் பாருங்கள்!

அந்தத் தொட்டிலுக்குள் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார்!

அவர் முகம் மகிழ்ச்சியாக சிரித்தபடி இருக்கிறது!!

என்னவாய் இருக்கும்?

அதென்ன கீழே?

'திகு திகு'வென எரிதழல் நெருப்பு கொழுந்துவிட்டு எரிகிறதே!

இதென்ன? பக்கத்தில் இரு காவலாளிகள் ஒவ்வொரு கயிறாக அறுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்?

தொட்டிலில் அமர்ந்திருப்பவரும் கண்களை மூடியபடியே ஏதோ பாடலாகப் பாடிக்கொண்டிருக்கிறார்.....இந்த நிலையில் எப்படி இவரால் அமைதியாகப் பாடல் பாட முடிகிறது?

கொஞ்சம் இருங்கள்!

இவர் என்ன பாடுகிறார் எனக் கேட்போம்?

இந்தக் கோவிலில் குடிகொண்டிருக்கும் அபிராமியைப் போற்றிப் பாடும் பாடல் எனப் புரிகிறது!
அது மட்டுமல்ல! ஒவ்வொரு பாடலின் முடிவில் வரும் சொல்லை வைத்தே அடுத்த பாடல் தொடங்குகிறது!

ஏன் சுற்றி இருப்பவர் முகத்திலெல்லாம் இப்படி ஓர் பரபரப்பும், எதிர்பார்ப்பும்?

ஒவ்வொரு பாடல் முடிந்த பின்னரும் அனைவரும் தலையை உயர்த்தி வானத்தை வேறு பார்க்கிறார்கள்!

என்னய்யா நடக்குது இங்கே!?

சரி! பக்கத்தில் இருப்பவர் யாரையாவது கேட்போம்!

'ஐயா! ஐயா!'

'அட சும்மா இருமைய்யா! அங்கே ஒரு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது! இந்த நேரத்தில் உமக்கென்ன 'ஐயா' வேண்டிக் கிடக்கிறது?' பக்கத்தில் இருப்பவர் சிடுசிடுக்கிறார்.

'கோபித்துக் கொள்ளாதீர்கள் ஐயா! நான் ஊருக்குப் புதுசு! இங்கே நடப்பது ஒன்றும் புரியவில்லை. அதுதான் என்னவெனத் தெரிந்து கொள்ளலாமென....!' நான் மெதுவாக இழுக்கிறேன்.

'அதுதான் சொன்னேனே! இங்கே ஒரு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என! பொதுவாக இழுத்துக் கொண்டிருக்கும் உயிரைத்தான் அப்படிச் சொல்வார்கள்! இன்றைக்குத்தானைய்யா மெய்யாகவே 'ஊசல் ஆடிக் கொண்டிருக்கும்' ஒரு உயிரைப் பார்க்கிறேன்'!!

'சற்று விளக்கமாகச் சொன்னால் நலமாயிருக்கும்' என்று நான் கேட்க, என் ஆதங்கத்தைப் புரிந்து கொள்ளாமல் அந்த நண்பர் வேகப்படுகிறார்.

'என்னைய்யா இது அக்கிரமம்! அந்த பட்டர்தான் ஒரு விவரம் கெட்டவர், பைத்தியம் என்றால் இந்த மன்னருக்கு புத்தி எங்கே போயிற்று?'

நான் அமைதியாக அவர் முகத்தைப் பார்க்கிறேன்.

'ஓ! உமக்குத்தான் ஒரு விஷயமும் தெரியாதே! சொல்கிறேன் கேளும்! அதோ தொங்கிக் கொண்டிருக்கிறாரே, அவர் பெயர் சுப்பிரமணிய பட்டர். அம்பாளுக்கு பூஜை எல்லாம் செய்து வருபவர். சதா சர்வ காலமும் அவளே கதி என அவளைப் பிடித்துக் கொண்டு தொங்குவார்! இப்ப அதான் அவரே தொங்குகிறார்!' எனச் சொல்லிச் சிரித்தார்.

'புரியவில்லையே! அவளைச் சரணடைந்ததற்கு இவர் ஏன் இப்படித் தொங்க வேண்டும்?' என்றேன் நான்.

'அதில்தான் இவருக்குப் பிடித்தது சனி! இவர் பாட்டுக்கு அவள் உண்டு தான் உண்டு என இருந்திருக்கலாம். எவருக்கும் பிரச்சினை வந்திருக்காது. இவர்தான் எங்களுக்கெல்லாம் நேரம், காலம் திதி எல்லாம் பார்த்துத் தருகின்ற பண்டிதரும் கூட! அம்பாளைப் பற்றியே நினைத்திருந்து, வருபவர், போகிறவர்க்கெல்லாம் என்ன வாயில் வருகிறதோ, அதைச் சொல்லி வந்திருக்கிறார். சிலருக்கு அதில் பொல்லாதது நடக்கப் போய் மன்னரிடம் வத்தி வைத்து விட்டார்கள். அவராவது இதைப் பெருசு பண்ணாமல் இருந்திருக்கலாம். 'ஆஹா! நம்ம ராஜாங்கத்தில் இப்படி ஒரு நிகழ்வா?' எனக் கிளம்பி வந்து விட்டார்!'

'யார் நம்ம சரபோஜி மன்னரா? அவரா இப்படிச் செய்தார்?' என அப்பாவியாகக் கேட்டேன்.

அதற்குள் இன்னொரு கயிறு அறுக்கப்பட்டு தொட்டில் ஏடாகூடமாக ஆட, சுற்றியிருப்பவர்கள் எல்லாம் 'ஆ' என அலறுகிறார்கள்! நம் நண்பரும் கூட அலறிவிட்டுத் தொடர்கிறார்!

'ம்ம்.. என்ன கேட்டீர்? ஆமாம்! சாட்சாத் அவரே தானைய்யா! என்னமோ வேறு வேலையே ராஜாங்கத்தில் இல்லாதது போல மந்திரி பிரதானிகளுடன் இங்கு வந்துவிட்டார் இன்றைக்கு. அட! இந்த பட்டருக்குத்தான் எங்கு போச்சு புத்தி? ராஜா வரப்போகிறார் எனத் தெரியும்தானே! இன்றைக்கு ஒருநாளாவது வீட்டிலேயே இருந்திருக்கலாம் அல்லவா? இன்றைக்கு எனப் பார்த்து தை அமாவாசை! அம்பாளைப் பார்த்து அவளை வணங்கியே ஆகவேண்டுமென வந்து, கோவிலில் இருந்திருக்கிறார். அவரைப் பற்றித்தான் தெரியுமே! ஓ! உமக்குத்தான் ஒன்றுமே தெரியாதே! அபிராமி முன்னால் அமர்ந்துகொண்டு தோத்திரங்களாய்ப் பொழிந்து கொண்டு இருந்திருக்கிறார். மன்னர் வருகிறார். எல்லா ஜனங்களும் அவருக்கு வழி விட்டு ஒதுங்கி நிற்கிறார்கள். இவர் என்னடாவென்றால், எதுவுமே அறியாத பரப்பிரும்மமாய் அபிராமியைப் பார்த்து என்னவோ பாடிக் கொண்டிருக்கிறார்."

'அடடா! அப்புறம்? என்ன ஆச்சு?' ஆவலை அடக்க முடியாமல் நான் கேட்க,

' என்ன ஆச்சு? போறாத காலம்தான்! மன்னர் வந்து இவர் பக்கத்தில் நிற்கிறார். இவரோ அவரைக் கவனிக்காமல் அம்பாளையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

'நீர்தான் சுப்பிரமணிய பட்டரோ?' மன்னர் கேட்கிறார்.

ஏதோ காதில் விழுந்தும் விழாதது போல் இவர் வைத்த கண்ணை அபிராமியை விட்டு எடுக்காமல், 'ம்ம்' என்பது போலத் தலையை ஆட்டுகிறார்.

'இந்த நேரம் திதி எல்லாம் பார்த்துச் சொல்பவர் நீர்தானாமே?' மன்னர்!

'ஆமாம். இப்ப என்ன அதுக்கு?' என்றார் இவர்!

'ஒன்றுமில்லை! இன்றைக்கு என்ன திதி எனக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமோ?' மன்னர் விடாமல் கொக்கி போடுகிறார்.

'அதோ அங்கே பார்த்தீரில்லையா? அந்த ஒளிவீசும் கண்களைப் பாரும்! முகத்தில் ஜொலிக்கிற ஒளியைப் பாரும்! இன்னிக்கு முழுப் பௌர்ணமி!'

சுற்றியிருப்பவர் முகத்திலெல்லாம் ஒரே அதிர்ச்சி! சிலர் முகத்தில் ஒரு மகிழ்ச்சி! 'அதான் நாங்க சொன்னோமில்லையா' என்பது போல ஒரு எக்காளம்!
மன்னர் முகத்திலோ கோபம் கொப்பளிக்கிறது!

'சரியாகத்தான் சொல்கிறீரா? இன்று பௌர்ணமி என்றால் நிலவு எங்கே? என்ன உளறுகிறீர்?' கோபத்துடன் பட்டரை வினவுகிறார்.

ஆமாம்! இன்று பௌர்ணமிதான்! நான் சரியாகத்தான் சொல்கிறேன்' பட்டர் தீர்மானமாகச் சொல்கிறார்.

கூடியிருப்பவர்களில் சிலர் அச்சத்துடன் சுப்பிரமணியரை உலுக்கி அவரை நினைவுலகத்துக்குக் கொண்டு வந்தார்கள். திடுக்கிட்டு விழிக்கிறார் பட்டர்! சுற்று முற்றும் பார்த்தார். எதிரே நாடாளும் மன்னர். கேள்வி கேட்டவரும் அவர்தான் எனத் தெரிந்தது. நிலைமையின் தீவிரமும் புரிந்தது!

'எப்படி இன்று பௌர்ணமி எனச் சொன்னீர்கள்? இன்று அமாவாசை அல்லவா? இப்படித்தான் எல்லாருக்கும் சொல்லி வருகிறீரா?' சரபோஜி உறுமினார்.

'அப்படியெல்லாம் இல்லை அரசே! அவளைப் பற்றியே நினத்துக் கொண்டிருந்ததில் சற்று பிழையாகச் சொல்லிவிட்டேன் போலிருக்கிறது!'

'ஓ! அவளை நினைத்துக் கொண்டிருந்தால் எது வேண்டுமானாலும் செய்வீரோ? யாரங்கே? இவரைப் பிடித்துக் கட்டுங்கள்! நெருப்பை மூட்டி ஒரு தொட்டிலில் இவரை வைத்து அதன் கீழே தொங்க விடுங்கள்! ஒவ்வொன்றாக கயிறுகளை அறுத்து, மரணபயம் இவரை முழுதுமாகப் பிடித்தபின்னர் இவர் அந்த நெருப்பில் வீழ்ந்து மாளட்டும்! தன் கடமையை மறந்து, எல்லாவற்றுக்கும் அபிராமி மேல் பழியைப் போடுபவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும்! இது அரச கட்டளை! உடனே நிறைவேற்றுங்கள்!' சரபோஜி மன்னர் கட்டளையிட்டார்' எனச் சொல்லி நிறுத்தினார் நண்பர்.

'பிறகு? ....பிறகென்ன நடந்தது?' என பதட்டத்துடன் கேட்டேன்.

என்னை ஏளனமாகப் பார்த்தவாறே அவர் கூறினார்! 'அதுதான் பார்த்துக் கொண்டிருக்கிறீரே! இதுதான் நடக்கிறது. ஆனால், ஒன்று சொல்ல வேண்டுமைய்யா! மன்னர் அப்படிச் சொன்னவுடன், பட்டர் முகத்தில் அப்படி ஒரு ஒளி வீசியது! அதை நீர் பார்த்திருக்க வேண்டும்! அம்பாளைப் பார்த்துக் கத்தினார்!


'அடியே! உன்னால்தானே இதெல்லாம்! உன் மேல் கொண்ட பக்தியால் தானே நான் மனம் போனபடி அப்படி சொல்லிவிட்டேன்! அதற்கு எனக்குத் தண்டனையா? அழகுதான் போ! யார் என்ன சொன்னாலும் சரி! இன்று பௌர்ணமிதான்! உன் மேல் கொண்ட அளவில்லாத அன்பினால் நான் சொன்ன வார்த்தையை உண்மையாக்க வேண்டியது இனி உன் பொறுப்புதான்! இதோ! இவர்கள் ஒவ்வொரு கயிறாய் அறுக்க அறுக்க, நான் உன் மேல் ஒரு பாட்டு பாடிக்கொண்டே வருவேன்! என்னைக் காப்பதோ, சாகடிப்பதோ அதை இனி உன்னிடம் விட்டுவிட்டேன் என்னை இப்படி செய்யத் தூண்டிய நீயே இதற்கெல்லாம் பொறுப்பு!' அப்படீன்னு சொல்லிட்டு மனுஷன் பாட்டா பாடிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கயிறாய் அறுந்து கொண்டிருக்கிறது! ஒண்ணும் நடக்கற மாதிரி தெரியலை! அம்பாளாவது, வந்து இவரைக் காப்பாத்தறதாவது! பாரும்! நீரும் இந்த வேடிக்கையைப் பாரும்' எனச் சொல்லியவாறே சற்று நகர்ந்தார் அந்த நண்பர்.

'போறதுக்கு முன் ஒரு கேள்வி. இதுவரைக்கும் எவ்வளவு பாட்டு பாடியிருக்கார்?'


'அறுந்து தொங்கற கயிறை எண்ணிப் பாரும். தெரியும். இதுவரைக்கும் ஒரு 70 தாண்டி இருக்கும்னு நினைக்கிறேன்' என்றார்.

கூடியிருந்த கூட்டத்தோடு நானும் நிகழ்வை ஒரு பரபரப்புடன் கவனிக்கத் துவங்கினேன்.


73, 74, 75, 76........!!!!!!! பாடல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன!
கயிறுகளும் அறுந்து கொண்டிருக்கின்றன!

77, 78....!
மேலும் இரு கயிறுகள்!

79.. "விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன"... பட்டர் பாடத் துவங்குகிறார்!

ஆ! இதென்ன ஆச்சரியம்! அபிராமியின் ஒளிவெள்ளம் அங்கே நிறைகிறது!
தன் வலது காதிலிருந்த தோடகத்தைக் கழற்றி வானில் வீசுகிறாள் அன்னை!
'விர்'ரெனப் பறக்கின்ற அந்த குண்டலம் வானில் ஒரு முழு நிலவாய்ச் சுடர்விட்டு தண்ணொளியை எங்கும் பரப்புகிறதே!

கண்டவர் அனைவர் முகத்திலும் பரவசம்!
அனைவரும் கிடைத்தற்கரிய இக்காட்சியினைக் கண்டு 'ஆஹா! இதென்ன அற்புதம்! அமாவாசையன்று முழுநிலவா!' என ஆனந்தக் கூச்சலிடுகின்றனர்!
நானும் என்னை மறந்து கத்துகிறேன்!

அரசன் முகத்தில் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் கலந்த ஒரு பதட்டம்!

'பட்டரே! என்னை மன்னியுங்கள்! தங்களையும், அன்னையின் பெருமையையும் அறியாமல் தங்களுக்கு பெருத்த அநீதி இழைத்துவிட்டேன்! அன்னை மீது தாங்கள் கொண்ட பக்தியை உணராமல் நான் செய்த இந்தச் செயலை மன்னியுங்கள்!' மன்னர் கதறுகிறார்!

'அரசே! தாங்கள் எந்தத் தவறும் புரியவில்லை! தங்களது அருளால் அன்றோ அன்னை இந்த எளியேனையும் ஒரு பொருட்டாகக் கருதி இப்படியோர் அற்புதத்தை நிகழ்த்தி இருக்கிறாள்! நான் தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்!' என பட்டர் உருகுகிறார்.

'இப்படி இந்த எளியேனுக்கும் அருள் புரிந்த அன்னையைப் போற்றி இன்னும் சில பாடல்கள் பாடுகிறேன். அனைவரும் அமர்ந்து கேளுங்கள்!' என பட்டர் வேண்ட, அனைவரின் முன்னிலையிலும் 100 பாடல்களைப் பாடி அந்தாதியை நிறைவு செய்கிறார்.

'அன்னையின் அருளை முழுதுமாகப் பெற்ற நீங்கள் இன்று முதல் 'அபிராமி பட்டர்' என அழைக்கப்படுவீர்கள்' என அரசன் ஆணையிட நிலவு பொங்கிப் பெருகிய அந்நாள் இனிதே நிறைவுற்றது!

இப்படியோர் காட்சியினை எனக்கும் காணக் கொடுத்த அன்னையைப் போற்றி வணங்கியபடி நானும் அவள் சந்நிதிக்குச் சென்று வழிபடுகிறேன்.

இந்த தை அமாவாசை நன்நாளில் உங்கள் அனைவருடனும் இதனைப் பகிர்கிறேன்.
இதோ அன்னையையே வரச் செய்த அந்த 79-வது பாடல்!

"விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு; வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு; அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே?"


அன்னை அபிராமவல்லி பொற்பாதங்களில் சரணம்!
*********************************************************

இதை விளக்கும் ஒரு பாடலையும் "யூ ட்யூப்"பில் பார்த்து, கேட்டு மகிழுங்கள்!
http://www.youtube.com/watch?v=W3fQ1wlw3-E


Read more...

Sunday, February 03, 2008

"தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்"

"தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்"

தமிழ்ப் பெயரில் தலைப்பு வைத்தாலே வரிவிலக்கு தந்திருக்கும் தமிழக முதல்வரின் கவனத்துக்கு!!

முதன் முதலாய் [இப்படிச் சொல்லலாமோ எனத் தெரியவில்லை! ஏனெனில், நான் கூறவிருக்கும் ஒரு முறைகேடு[ட்ரெண்ட்!!] ]தமிழக திரைப்பட வரலாற்றில் சரித்திரப் படங்களைத் தவிர்த்துப் பார்த்தால், எல்லாத் திரைப்படங்களிலும் ஆங்கிலச் சொற்கள் எப்படியாவது ஒருவகையில் இடம் பெறுவது என்பதே!

இந்தவொரு சூழ்நிலையில், இங்கிருக்கும் நிலைமையினில், இன்னும் வரா "வாழ்த்துகள்" என்கின்ற திரைப்படத்தை பார்த்தேன்!

படம் என்கின்ற முறையில், இது ஒரு சிறந்த கருத்தைச் சொல்லுகின்ற படம்!
அதை விட என்னைக் கவர்ந்த ஒரு அம்சம், இது முழுக்க முழுக்க தமிழில் மட்டுமே சொல்லப்பட்ட ஒரு படம் என்பது!

ஆமாம் ஐயா! நம்புங்கள்! ஒரு சொல் கூட உரையாடலிலோ, பாடலிலோ தமிழல்லாச் சொல்லெதுவும் நானிங்கு காணவில்லை!

இப்படியோர் படத்தினை உங்களுக்கெல்லாம் பரிந்துரைக்கின்றேன்!

தமிழ், தமிழ், எனவும், தமிழ் துரோகி எனவும் காலத்தைச் செலவிடும் நண்பர்களே!!

இப்படத்தைப் பாருங்கள்!
நண்பர்களுக்குச் சொல்லுங்கள்!
இதுவே தமிழை வளர்க்க வைக்கும் உங்கள் பணி!
மற்றவரைப் பழித்துத் தமிழ் வளராது!
தமிழைப் போற்றியே தமிழ் வளரும்!
சீமானைப் போற்றுங்கள்!
இந்தப் படத்தை ஒரு வெற்றிப் படமாக்குங்கள்!
பிறகு வந்து பேசுங்கள்!


தமிழக முதல்வரே!
இதற்கு முழு வரிவிலக்கு கொடுங்கள்!
இதனையே இந்த ஆண்டின் சிறந்த தமிழ்ப் படமாகத் தெரிவு செய்து இப்போதே[இது ஜனவரி என்பதை மிகவே அறிவேன்!!] இந்த ஒரு காரணத்துக்காகவே இப்போதே அறிவியுங்கள்!


செய்வீர்களா?
நம்புகிறேன்!




Read more...

Friday, February 01, 2008

"சுகமெல்லாம் தந்திடம்மா!!" [மூன்றாம் தைவெள்ளிப் பதிவு!]

சுகமெல்லாம் தந்திடம்மா!! [மூன்றாம் தைவெள்ளிப் பதிவு!]



மங்களங்கள் அருள்கின்ற மகிழ்வெல்லாம் அளிக்கின்ற
சங்கடங்கள் தீர்க்கின்ற சகலநலம் புரிகின்ற
பைங்கிளியைக் கையிலேந்தி பச்சைவண்ண மேனியுடன்
பக்தருக்கு அருளமுதை பரிவோடு வழங்கிவரும்
தென்மதுரை நகரிருந்து தென்பாண்டி ஆளுகின்ற
சுந்தரனின் துணைவியான மீனாக்ஷி திருக்கதையை
செந்தமிழில் சொல்லெடுத்து பக்தியுடன் பாடிடவே
மங்களவிநாயகனின் தாளடியை நான் பணிந்தேன். [1]

அருந்தவங்கள் ஆற்றியதில் அகமகிழ்ந்த மலைமகளும்
தானொருநாள் மகளாக வளர்வதாக வாக்களித்து
தேவமகள் வித்யாவ திக்குவரம் அளித்திடவே
பூவலகில் பெண்ணாகப் பிறந்திட்ட தேவமகள்
பாண்டிநாட்டை ஆண்டுவந்த மாமன்னன் மலையத்வஜன்
மனையாக மணம்புரிந்து தென்பாண்டி நாட்டினிலே
காஞ்சனமாலையெனும் பெயரோடு சீராக வாழ்ந்திருந்தாள்
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [2]

பிள்ளையில்லாக் குறையாலே மன்னவனும் வருந்திடவே
மகவொன்று பிறக்கவேண்டி யாகங்கள் செய்திடவே
வளர்ந்தெழுந்த பெருந்தீயின் நடுவினின்று எழுந்ததம்மா
வடிவழகில் மிகச் சிறந்த தோற்றத்தைத் தானடக்கி
பட்டாடைதானணிந்து புன்னகையைத் தவழவிட்டு
புடம்போட்ட பொன்னெனவே பூவுலகம் வாழ்ந்திடவே
முனிவோரும் வாழ்த்திடவே மூன்றுவயதுப் பெண்ணொன்று!
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [3]

பாண்டிநகர்த் துறைமுகத்தில் சீறிவரும் கடலலைகள்
கடலலைகள் நடுவினிலே துள்ளிவிழும் வெள்ளிமீன்கள்
வெள்ளிமீன் வடிவினைப்போல் வண்ணமகள் விழிமிளிர
மீனாக்ஷி என்னுமொரு திருநாமம் கொண்டிட்டாள்
அன்னையிவள் மீனாக்ஷி அன்னைமடி சென்றமர்ந்தாள்
மன்னவனும் பிள்ளையிலாக் குறைநீங்கிக் களித்திட்டான்
கற்றவரும் மற்றவரும் வாழ்த்தொலிகள் எழுப்பிட்டார்
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [4]

முத்துமகள் மீனாளின் மார்பினிலே மும்முலைகள்
மன்னவனும் திகைத்திருக்க அசரீரி அங்கொலிக்க
"மங்கையிவள் மணாளனைக் காணுகின்ற பொழுதினிலே
குறைபாடு நீங்கியிவள் நிறைமுலையாய்த் திகழ்ந்திடுவாள்!"
மன்னவனும் மகிழ்ந்திட்டான் மகளை வாரி அணைத்திட்டான்
வீரமுள்ள திருமகளாய் மீனாளை வளர்த்திட்டான்
திக்விஜயம் செய்திடவே தலைமகளும் புறப்பட்டாள்
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [5]

அன்னையிவள் வெற்றியுலா அடியேனால் சொல்லப்போமோ
ஆற்றலுடன் போர் புரிந்து அடுத்தவரை வென்றிட்டாள்
முடிமன்னர் அடிபணிய வெற்றிகளைக் குவித்திட்டாள்
படைவீரர் எக்களிக்க வீரமுழக்கம் செய்திட்டாள்
செல்வழியில் கற்றவரை வாதுகளில் வென்றிட்டாள்
செருக்குண்ட பலபேரின் கருவத்தை அடக்கிட்டாள்
கைலாயம் சென்றங்கு சிவனாரைச் சமர் அழைத்திட்டாள்
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [6]

சிவனாரும் சமர்புரிய மிடுக்குடனே வெளிவந்தார்
என்னவொரு ஆச்சரியம்! சிவனாரை கண்டவுடன்
மார்பகத்தில் இருந்திட்ட மூன்றாம்முலை மறைந்ததம்மா!
மணவாளன் இவனென்று மகிழ்வாகத் தெரிந்ததம்மா!
நாணமங்கே தலைகவிழ்த்து நயமாக நின்றததம்மா
"தென்மதுரை நீ திரும்பு, எட்டாம் நாள் நான் வருவேன்
சித்திரையில் யாம் மணப்போம் கொற்றவளே" என்றுரைத்தார்
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [7]

நாச்சியாரும் திரும்பிட்டாள்! பெற்றவரிடம் சேதி சொன்னாள்
உற்றவனாம் சோதரனாம் கள்ளழகர்க்கு ஓலையிட்டார்
சித்திரையில் வருகின்ற முழுநிலவின் முதல் நாளில்
சித்திரமாம் மீனாளின் திருக்கரத்தை பற்றிடவே
சுந்தரனாம் சோமசுந்தரன் தென்மதுரை வந்தடைந்தார்
உற்றவரும் சுற்றவரும் மற்றவரும் வாழ்த்தொலிக்க
அன்னையிவள் கைப்பிடித்தார் ஆலவாய் அழகனுமே
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [8]

சோதரியின் திருமணத்தைக் காணவேண்டி கள்ளழகர்
தன்னிருக்கை தனைவிடுத்து வைகைநதிக் கரையடைய
வைகையிலே வந்தவெள்ளம் வழிமறைத்துத் தான் தடுக்க
அக்கரையில் அக்கறையாய் அழகருமே தங்கிவிட்டார்
இக்கரையில் அதற்குள்ளே மணம் முடிந்த சேதிவர
உக்கிரமாய் கள்ளழகர் பெருவெள்ளம் தனிலிறங்கி
தன்னிடத்தைத் தானடைந்தார் தணியாத கோபமுடன்!
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [9]

மங்கலங்கள் புரிகின்ற மாமதுரை மீனாக்ஷி
தன் கதையைப் பாடிடவே மங்கையவள் அருள்செய்தாள்
மங்களங்கள் பெருகிவிடும் மனமகிழ்ச்சி கூடிவிடும்
சுந்தரமாய் நம் வாழ்க்கை சுடர்விட்டு ஒளிவீசும்
தாய்மீனின் கண்பார்வை தம்குஞ்சை உயிர்ப்பதுபோல்
அன்னையிவள் அருட்பார்வை அனைத்திடரை அணைத்துவிடும்
சங்கடங்கள் விலகிவிடும் சுந்தரியாள் கண்திறந்தால்
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [10]

மாமதுரை மீனாக்ஷி, மங்கையரில் அரசியிவள்
பைங்கிளியைக் கரமேந்தும் பச்சைவண்ண மீனாள்
சுந்தரனின் பாதியிவள் தென்பாண்டித் தெய்வமிவள்
மும்மணியில் ஒருமணியாய் முழுவாழ்வு தந்திடுவாள்
மூக்குத்தி ஒளியாலே மூவுலகும் பொலிவு பெறும்
அண்டியவரை ஆதரிக்கும் அங்கயற்கண்ணியிவள்
சொந்தமுடன் பாடிவந்தேன் சுகமெல்லாம் தந்திடம்மா
மாமதுரைவாழ் மீனாக்ஷிக்கு மங்களம் சுப மங்களம். [11]
************************************************************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP