Tuesday, November 28, 2006

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 9

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 9

இன்னா, அண்ணாத்தை காரியம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?" என்று பரிவோடு வரவேற்றான் மயிலை மன்னார்.

"ம்... எல்லாம் முடிஞ்சு அவரும் போய் சேர்ந்துட்டாரு. நானும் ஊர் வந்து சேர்ந்தாச்சு" என்று சொல்லிய என்னைப் பார்த்து,

"தோ, இப்ப இன்னாத்துக்கு கலங்குறே நீ? அல்லாரும் ஒருநாளைக்கு போய்ச் சேர வோண்டியவங்கதான். ஆனா, அதுக்கு முன்னாடி, நாம யாரு, இன்னான்ற அறிவு நமக்கு வரணும். அப்பால, இதெல்லாம் நம்மை ஒண்ணும் பண்ணாது; இந்த சாவைப் பத்தி நாமளும் கலங்க மாட்டோம். இத்தப் பத்தி நம்ம ஐயன் இன்னா சொல்லியிருக்காருன்றதை சொல்றேன், அத்த எளுதிக்கோ" என்றான் மன்னார்.

இனி வருவது குறளும், அதற்கு மயிலை மன்னாரின் விளக்கமும்.

அதிகாரம் 36: மெய்யுணர்தல்

"பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு." [351]

நாம இந்த ஒலகத்துல பொறக்கறது எது சரி, எது தப்புன்னு சரிவர ஆராய்ஞ்சு பாத்து நடக்கறதுக்காவத்தான்.
ஆனா, நாம இன்னா பண்றோம்?
நெலையில்லாத பொருள் மேல ஆசை வெச்சு ஏமாந்து போறோம்.
இந்தக் காரு, பங்களா, சொத்து, சொகம் இதெல்லாம்தான் சாசுவதம்னு மயங்கறோம்.
இந்த மயக்கம் தீர்ற வரைக்கும் இந்தப் பொறப்புலேர்ந்து நாம தப்ப முடியாது.


"இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு." [352]


இந்த நல்லது கெட்டது இத்தெல்லாம் இன்னான்னு புரிஞ்சுகிட்டு, அத்தோட மயக்கம் நீங்கிப் போச்சுன்னா, நல்லது, கெட்டதுன்னு ஒண்ணும் கிடையாது; நடக்கறதுல்லாம் ஒரு நிகழ்வு; அவ்வளோதான்னு புரிஞ்ச தெளிவு வந்திடுச்சின்னா, அப்பால அல்லா இருட்டும் வெலகிப் போயி, சந்தோசம் மட்டுந்தான் நிக்கும் ஒன்னோட. இன்னா நடக்குதோ, அது அல்லாம் ஒன்னோட நன்மைக்குத்தான்னு நெனைச்சுக்கோ. சரியா?

"ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து." [353]

இந்த ஒலகத்துல இருக்கற எதுவும் ஒனக்கு சொந்தமில்லைன்னு ஒரு நெனைப்பை வளர்த்துக்கோ.
அப்போ இன்னா நடந்தாலும் அது ஒன்னிய பாதிக்காது.
இவன் ஏன் இப்படி செய்ஞ்சான்; அவன் ஏன் அப்பிடி சொன்னான்னு மருகிகிட்டு இருக்க மாட்டே!
அல்லாத்துக்கும் ஒரு காரண காரியம் தேடி அலையாதே!
அப்பிடி இருந்தேன்னா, ஒரு தெளிவு பொறக்கும்.
அப்போ வானமே ஒனக்கு வசப்பட்டுரும்.

"ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லாத வர்க்கு." [354]

நீ இன்னாதான் அரிச்சந்திரன் மாதிரி பொய்யே சொல்லாம, புத்தர் மாதிரி அன்பே சத்தியம்னு, கண்ணகி மாதிரி கற்பே பிரதானம்னு, ஒன்னோட அஞ்சு அறிவையும் அடக்கிட்டேன்னு பீத்திகிட்டாலும், இந்த ஒலக மயக்கத்திலேர்ந்து வுடுபடலேன்னா, ஒரு பிரயோசனமும் இல்லை.
சும்மனாச்சுக்கும், முனிவர் மாதிரி இருக்கேன்னு சொல்லி பாவலா காட்டிகிட்டு, இன்னிக்கு சோறு கிடைக்குமா, அடுத்த பங்களா எப்போ வாங்கலாம், எந்த ஷ்டாக்குல எவ்வளோ பணம் போடலாம்னு யோசிச்சிகிட்டு இருந்தியின்னா, மவனே, நிச்சயமா ஒனக்கு அடுத்த பொறப்பு கட்டாயமா உண்டு!

"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு." [355]

இது ரொம்ப ஈசியான கொறளு.
நீ எத்தைப் பார்த்தாலும், அத்தோட உண்மையான தன்மை இன்னான்னு கொஞ்சம் ஆராய்ஞ்சு பாக்கக் கத்துக்கணும்.
ஒதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன்.
ஒரு காரு வாங்கற இப்ப.
சும்மாவா வருது!
மொதல்ல டௌன் பேமெண்ட் கட்டணும்; இன்சூரன்ஸ் எடுக்கணும், அப்பால மார்ட்கேஜு கட்டணும் மாசாமாசம்! ஆக்ஸிடெண்ட் ஆவாம ஓட்டணும்.
இத்தினி இருக்கு அதுல.
சும்மனாச்சும், காரோட அளகுல மயங்கி, தகுதிக்கு மீறி வாங்கிட்டேன்னா, ஒன் பொளைப்பு அத்தோட அம்பேல்தான்.
இது மாரி இன்னும் பலானது பலானது சொல்லலாம்!
நீயே புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன்.
அப்படி பாக்கறதுதான் உண்மையான மெய்யறிவுன்னு சொல்றாரு.

"கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி." [356]

ஒனக்கு அடுத்த பிறவின்னு ஒண்ணு வேணாம்னா, உண்மையான மெய்ப்பொருள் இன்னாதுன்னு கத்துக்க முயற்சி பண்ணு.
அதுக்கு ஒரு நல்ல குருவைத் தேடிப் போயி கத்துக்கறது நல்லது.
அவர் சொல்றதைக் கேட்டுக்க.
அப்புறமா நீயே ஒனக்குள்ளாற யோசி.
ஒரு அறிவு வரும்.
அத்தைக் கெட்டியாப் பிடிச்சுக்கோ.
அவ்ளோதான்!

"ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு." [357]

மறுபடியும், மறுபடியும் அத்தையேதான் சொல்றாரு ஐயன்.
சரியானபடிக்கா சிந்திச்சு, இந்த மெய்ப்பொருளை உணர்ந்தியானா, ஒனக்கு மறுபிறவின்றதே கிடையாது.

"பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு." [358]

மறுபடியும் ஒனக்கு பிறவி வேணுமின்னா, இந்த மயக்கத்துலியே கிடந்து பொரளு. என் வூடு, என் மக்கா, என்னோட காரு, பேங்க் பாலன்ஸுன்னு நினைச்சு நினச்சு பொலம்பிகினே இரு. திரும்பி வரலாம். இத்தெல்லாம் திருப்பியும் ஒரு தபா அனுபவிச்சு சாவலாம்.
ஆனா, ஒன்னொட நோக்கம் இத்தெல்லாம் விட்டொளிச்சிட்டு, விடுதலை வேணும்னா, உண்மையான அறிவை ஒனக்குள்ளியே தேடு.

"சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்." [359]

உரிச்சுப் பார்த்தா வெங்காயத்துல ஒண்ணுமே இல்லைன்னு சொல்லுவாங்க கேட்டிருக்கேல்லே!
அது போல, அல்லாத்தையும் உள்ளே பூந்து பார்த்தேன்னா, எதுவும் ஒனக்கு சொந்தமில்லேங்கறது புரிஞ்சு போவும்.
அப்போ, எதுவும் ஒனக்கு சொந்தமில்லேன்னா, ஒனக்கு எது மேலியும் ஒரு ஆசை இல்லாம போவும். சரியா.
அப்பிடி நடந்தேன்னா, எந்த ஒரு தும்பமும் ஒன்னிய வந்து சேராது. இதுவா, அதுவான்னு மயங்க மாட்டே நீ.

இந்தக் கொறளை,

"சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின், சார்தரு நோய்
மற்றழித்துச் சார்தரா."
அப்பிடீன்னு படிக்கணும்.

"காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்." [360]

இது வரைக்கும் இந்த மயக்கம், மயக்கம்னு சொல்லிகிட்டு இருந்தேன்ல.
அந்த மயக்கம் எதுனால வருதுன்னு இப்போ சொல்றேன் கவனமா கேட்டுக்கோ!
ஒரு பொருள் மேல வைக்கிற ஆசை மொதலாவது.
ஒருத்தர் மேல வர்ற வெறுப்பு, விரோதம், கோவம் ரெண்டாவது.
இதுவோ, அதுவோன்னு மயங்கற மயக்கம் இருக்கே அது மூணாவது.
இந்த மூணும் ஒன்கிட்ட வராம பார்த்துகிட்டியானா , ஒன்னாண்டை ஒரு விதமான தும்பமும் கிட்டக் கூட நெருங்காது.


இந்த அதிகாரத்துக்கு ஏன் மெய்யுணர்தல்னு பேரு வெச்சாரு தெரியுமா?
மெய்யின்னா ஒடம்புன்னு ஒரு அர்த்தம்; உண்மைன்னு இன்னொரு அர்த்தம்.
ஒடம்பைத் தொட்டு வர்றதுதான் மேலே சொன்ன மூணும்.
இந்த ஒடம்புல இருக்கற அந்த அஞ்சறிவுதான் நம்மை இந்தப் பாடு படுத்துது.
அத்த அடக்கக் கத்துகிட்டா, அது ஒரு விதமான மெய்யுணர்தல்.
ஆனா, அது மட்டும் போதாதாம்.
354ஐ திருப்பி ஒரு தபா படி!
அத்தைப் புரிஞ்சுகிட்டியானா, இதையும் தாண்டி, உண்மை நிலையை அறிஞ்சுக்க முயற்சி பண்றதுதான் உண்மையான மெய்யுணர்தல்னு வெளங்கும்.

நல்லபடியா புரிஞ்சுகிட்டு, நல்லா வாள்ற வளியைப் பாரு.

ஒங்க பதிவாளர்கிட்டேயும் இத்த நான் சொன்னேன்னு சொல்லு.
பைசா பொறாத விஷயத்துக்கேல்லாம் தாம் தூம்னு சண்டை போட வேணாம்னு சொல்லு.
சரி, சரி, டீ, வடை சாப்பிடலாம் வா"
என்று உரிமையுடன் அழைத்துச் சென்றான் மயிலை மன்னார்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP