Friday, April 01, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 13

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 13 12. அனைவரும் வந்தமர்ந்ததும் பனிரெண்டாம் பாடலைப் படித்தேன். செம்மான் மகளைத் திருடுந் திருடன் பெம்மான் முருகன் பிறவா னிறவான் சும்மா யிருசொல் லறவென் றலுமே அம்மா பொருளொன் றுமறிந் திலனே செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான் சும்மா இருசொல் அற என் றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந் திலனே இதுங்கூட போன பாட்டு மாரித்தான். படிக்கறப்ப ஈஸியா புரியுறமாரி இருக்கும். ஆனா, உள்ளார போவப்போவ, இன்னான்னாமோ புரியவரும். இப்ப இந்த மொத வரியை எடுத்துக்க. "செம்மான் மகளைத் திருடும் திருடன்" செம்மான்னா ஆரு? ரெண்டர்த்தம்! நல்ல கொணமான பெருமாளுன்னு சொல்லலாம். செவப்புக் கலர் மானுன்னும் சொல்லலாம். அதென்னா கதைன்னு கேக்குறியா? ஒரு காலத்துல நம்ம பெருமாளு, அதான் மகாவிஸ்னுப்பா,.... அவருக்கு ரெண்டு பொண்ணுங்க. சுந்தரவல்லி, அமிர்தவல்லின்னு. இவங்க ரெண்டு பேருமே முருகனைக் கட்டிக்கணும்னு ரொம்பக்காலமா சரவணத் தடாகத்துல தவம் பண்ணினாங்க. அமிர்தவல்லிதான் தெய்வானையா இந்திரங்கிட்ட வளந்து, சூரனை முருகன் கெலிச்சதும், அவரையே கட்டிக்கினாங்க. சுந்தரவல்லியப் பாத்து, 'நீ பூலோகத்துக்குப் போயி மனுசப் பொறப்பு எடுத்துக்க . நாம வந்து ஒன்னியக் கட்டிக்குவோம்'னு சொல்லிட்டாரு. கொஞ்ச நாளு களிச்சு பெருமாளும் பூலோகத்துக்கு ஒரு முனிவர் மாரி வந்து தபசு பண்ணிக்கினு க்கீறாரு. அப்ப, அவரு எதுத்தாப்புல நல்லா அளகா ஒரு மானு இப்பிடியும் அப்பிடியுமா திரிஞ்சுது. அதும்மேல ஆசைப்பட்டு இந்த முனிவரு அத்தப் பார்க்க, நம்ம சுந்தரவல்லியம்மா அதுக்குள்ல ஒரு கொளந்தையா வண்ட்டாங்க! மானா வந்தது வேற ஆருமில்ல. லஷ்மியம்மாதான்! அதுனால, இவங்க செம்மான் மகளாயிட்டாங்க. பெருமாளோட பொண்ணுன்றது ஒண்ணு; மானோட பொண்ணுன்றது இன்னொண்ணு! அதான் வள்ளியம்மா! அந்த வள்ளியைத் திருடிக் கண்ணாலம் கட்டினவரு இந்த முருகன்! அதான் இந்த 'செம்மான் மகளைத் திருடுந் திருடன் முருகன்~!' இவரைப் பத்தித்தான், இவருக்கு பொறப்பு இறப்புன்றதே கெடையாது; அம்மாம் பெரிய ஆளுன்னு 'பெம்மான், பிறவான், இறவான்'னு பெருமையா சொல்றாரு. செத்துப் போலாம்னு நெனைச்சு, கோபுரத்து உச்சிலேர்ந்து அருணகிரியாரு குதிச்சப்ப வந்து காப்பாத்தினாரு முருகன்னு சொன்னேன்ல,... அப்பவே சாவுலேர்ந்து காப்பாத்திட்டாரு இவரை. அப்ப ஒரு உபதேசம் முருகன் பண்ணக்கொள்ள இவருக்கு இன்னொரு பொறப்பு வந்திருச்சு! ஆகக்கூடி, பொறப்பு இறப்பு இல்லாத கந்தன் அது ரெண்டையுமே ஒரே நேரத்துல இவருக்குக் காட்டிட்டாரு. அப்பிடி இன்னாத்த சொன்னாரு முருகன் இவுருக்கு? ரெண்டு வார்த்தை... 'சொல்லற சும்மாயிரு'ன்னு ரெண்டே ரெண்டு வார்த்தை. சொல்லை அறுக்கறதுன்னா இன்னா? நாலு விதமான சொல்லு,,, வாக்கு... இருக்குன்னு பெரியவங்க சொல்லிருக்காங்க. சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரின்னு. அதெல்லாம் இன்னா இன்னானு சொல்லப்போனேன்னா, ரொம்பப் பெருசாப் பூடும். அப்பால வந்து கேளு சொல்றேன். இப்போதைக்கு இந்தமாரி ஒரு நாலு க்கீதுன்னு மட்டும் புரிஞ்சுக்கோ. ஒண்ணொண்ணுக்கும் ஒரு தனிக் கொணம் க்கீது. இந்த நாலையுமே நிறுத்திட்டு , எதுவுமே சொல்லாம, செய்யாம, நெனைக்காம, மோந்து பாக்காம, சாப்பிடாம, தூங்காம, முளிக்காம, சித்தருங்கமாரி ஒரு மோன நெலையுல இருக்கறதுக்குப் பேருதான் சொல்லை அறுக்கறது! சும்மா மௌனவிரதம்னு, வாயை மட்டும் மூடிக்கினு, மனசுல எதுனாச்சும் சிந்தனை பண்ணிக்கினு, பேப்பர்ல எளுதிக் காட்டுறதுல்லாம் இல்லை! இதுக்கு எம்மாம் கெவனமா பயிற்சி பண்ணனும்னு யோசிச்சுப் பாரு! அடுத்துது 'சும்மா இரு' ! இதுவும் அதேம்மாரித்தான்! இந்த மனசு, ஒடம்பு, சொல்லு இந்த மூணாலியுமே எதுவுமே பண்ணாம, நெனைப்பே இல்லாம இருக்கறதுக்குப் பேருத்தான் 'சும்மா' இருக்கறதே தவுர, சோம்பேறியா கவுந்தடிச்சுப் படுத்துத் தூங்கறது இல்லை. இதை நல்லாப் புரிஞ்சுக்கணும். இப்பிடியாப்பட்ட ஒரு சமாச்சாரத்த முருகன் சொல்ட்டாரில்லியா! அதத்தான், மா பொருள்னு கொண்டாடுறாரு அருணகிரியாரு. அம்மா பொருளொன்றும் அறிந்திலனேன்னு பிரிக்கக் கூடாது! அம் மாபொருள்னு படிக்கனும். சரியா? முருகன் சொன்ன ரெண்டு வார்த்தை இவரை அப்பிடிப் பொரட்டிப் போட்டிருச்சாம்! எப்பிடி இந்த ரெண்டு காரியத்தியும் பண்றதுன்னு இன்னை வரைக்கும் புரியலேன்னு தெகைச்சிப் போயி நிக்கறாருன்னு சிலபேருங்க சொல்லுவாங்க! ஆனாக்காண்டிக்கு, அதில்ல இத்தோட அர்த்தம்! இவுருக்கா புரியாமப் போவும்? கொடுத்தது ஆரு? சாமான்யப்பட்ட ஆளா அந்த முருகன்! அதான் 'பெம்மான், பிறவான் இறவான்' ஆச்சே! கூடவே பெரிய திருடன்னு வேற நக்கலடிக்கறாரு! அம்மாங் காவலையும் தாண்டிப் போயி, வள்ளியைப் பாத்து, அவளைக் கையைப் புடிச்சு இளுத்து, கடத்திக்கினு போயி, கண்ணாலம் கட்டிகிட்ட திருடன் சொன்ன ரெண்டு வார்த்தையோட அர்த்தம், இவருக்கு நல்லாப் புரிஞ்சிட்டதால, இப்ப இவுரையும் திருடிக்கிட்டாறாம் அந்த முருகன்! அதுனால, இவுருக்கு ஊரு ஒலகம்லாமே மறந்து போயி, எதுவுமே தெரியாத நெலைமையுல க்கீறாருன்றத அப்பிடி 'நைஸா' சொல்லி வைக்கறாரு அருணகிரியாரு! ' எனச் சிரித்தான் மயிலை மன்னார். இந்த நாலு வரிக்குள்ளே இத்தனை பொருளா?' என வியந்தேன் நான். நாயர் பேச்சற்று இருந்தான்! அடுத்த பாட்டைப் படி! அதையும் சொல்லிறலாம். அதுவும் இத்தோட சேர்ந்ததுதான்! ' என்றான் மன்னார்! மகிழ்ச்சியுடன் அவனைப் பார்த்தார் சாஸ்திரிகள்! *************** [தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP